Monday, August 31, 2020

 

சமாதானமே சுகவாழ்வு

 

 உலகத்தில் மானிடராய்த் தோன்றிய ஒவ்வொருவரும் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தங்கள் நான்கையும் பெறுதற்கு முக்கிய ஏதுவாயிருப்பது துன்பற்ற இல்வாழ்க்கையே யாம்; அதுவே சுகவாழ்வெனப் படும். அதனை எய்துதற்கே எவரும் முயற்சி செய்யவேண்டும். அவ்வாழ்வைத் தருதற்குப் பல ஏதுக்களிருப்பினும் அவற்றுள் ஒன்றே முதன்மை பெற்றதாகும். அஃதொன்று மாத்திரம் அமையுமானால், மற்றவை அவசியமில்லாமலே, அது மிக்க சுகவாழ்வைக் கொடுத்துவிடும். அஃதியாதெனில் சமாதானமேயாம். அதாவது, மனிதர், ஒருவர்க்கொருவர் மாறுபடாமல், எக்காரி யத்திலும் மனமொருமித்துப் பிரவேசித்தலாம். இந்த மனவொற்றுமையான சமாதான மென்னும் சிறந்த பொருளானது மனிதரிடத்துப் பொருந்துமேயானால் அவர்களுடைய வாழ்க்கையானது எப்பொழுதும் இன்பமயமாகவே நடைபெறும்; அரும் பெருங் காரியங்களிலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள்; அழியாப்புகழையும் செல்வத்தையும் அடைவார்கள்; ஆனந்தசாகரத்தில் மூழ்குவார்கள்; கவலையென்பதைக் கனவிலும் காணமாட் டார்கள்; மறுமையிலும் மாறா இன்பத்தை எய்துவார்கள். இச்சமாதானமானது எவ்வாறு சுகவாழ்வைத் தருகின்றதென்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்: -

 

இரண்டு சகோதரர்கள் மனவொற்றுமையுடனிருந்தால், தங்கள் பூர்வீக சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ளாமல் ஒரே குடும்பமாயிருந்து வாழ்வார்கள். அதனால் அவர்களுடைய செல்வமானது சிதைவுறாமல் நாடோறும் விருத்தியடைந்து வரும்; குடும்ப கௌரவமும் குறையாது; (இது பரம்பரையாக ஒற்றுமையும் கௌரவமும் உள்ள குடும்பம்) எனப்பலராலும் அக்குடும்பம் நன்கு மதிக்கப்பெறும். அக்குடும்பத்தில் சுற்றச் சேர்க்கை மிகுதிப்பட்டே மகிழ்ச்சியும், புகழ்ச்சியும் அதிகரித்துவரும்; சுபகாரியங்களெல்லாம் இனிது நடைபெற்று வரும்; அக்குடும்பத்திலிருந்து பலரும் பல உதவிகளைப் பெற்றின்புற்று வருவார்கள்; அக்குடும்பத்தார்க்கு எப்பொழுதும் விரோதிகள் ஏற்படமாட்டார்கள். இத்தனை நலங்களும், பிரிவினை யில்லாததன்மையால் உண்டாகின்றன. இனி, அச்சகோதரர்கள் பாகப்பிரிவினை செய்து கொள்ள விரும்பினும், மனவிகற்பமின்றிச் சொத்துக்களில் ஒருவர்க்கு அதிக மிருந்தாலும் குறைந்திருந்தாலும் சமாதானத்துடன் பங்கிட்டுக் கொள்வார்களேயானால், தங்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை விருத்தி செய்து, பிரிவினை யில்லாத போதுண்டான அவ்வளவு கௌரவத்தையும் சுகத்தையும் அடையாவிடினும், அவற்றில் பாதியேனும் அடைந்து திருப்தியுறலாம். இவர்களைப் போலவே கூட்டாக வியாபாரம் முதலிய தொழில்களைச் செய்வோரும், நிலபாத்தியா பாத்தியக்காரர்களும், கிராம வருமானங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் கிராமத் தொழிலாளிக ளும், பொதுவில் கிடைத்த ஊதியத்தைப் பிரித்துக் கொள்வோரும், உலகத்தில் தோன்றும் வெவ்வேறு வகைப் பாகப்பிரிவினை செய்து கொள்வோரும், பொருள்களைப் பிரிக்காமல் பொதுவில் வைத்துப் பயனை அனுபவிக்கவாவது, பிரித்துக்கொள்ள வேண்டினால் அதிகம் குறைவு என்பது பற்றி விரோதப்பட்டுக் கொள்ளாமல் சமாதானத்துடன் பிரித்துக் கொள்ளவாவது இசைவார்களானால், பொருள் நஷ்டமுறாமலும், மனக்கவலை யடையாமலும், வறுமைக்குள்ளாகாமலும் நிறைந்த செல்வமுடையவர்களாய்ச் சிறந்த புகழுடன் மகிழ்ச்சி பெற்றுச் சுகவாழ் வடைவார்களென்பதில் எட்டுணையும் ஐயமின்று. இவர்களன்றி, ஒவ்வொரு குடும்பத்திலும் தோன்றும் தகப்பன்மார்களும், பிள்ளைகளும், சகோதரர்களும், சுற்றத்தார்களும், மாமிமார்களும், மருமக்கள் மார்களும், அக்காள் தங்கையரும், ஓரகத்தியரும், நாத்திகளும், மாற்றாந்தாய்களும், மற்றையரும், ஒவ்வொரு காரியத்திலும் மனமாற்றமின்றி ஒன்றுபட்டிருப்பார்களாயின் அவர்கள் வாழ்க்கையில் உண்டாகும் இன்பத்திற்கு எல்லையுண்டோ? எப்பொழுதும் அவர்களின் வாழ்வு சுகமாகவே நடைபெறுமென்பதில் என்ன தடையிருக்கின்றது? குடும்பங்களிலின்றிப் பொதுவாக உலகத்திலுள்ள பொதுஜனங்களும், தாங்கள் பற்பல காரியங்களைச் செய்யுமாறு கூடுமிடங்களிலும், ரெயில்வே பயணம், கப்பல் பிரயாணம் முதலியவற்றைச் செய்யும் போதும், மேலும் பல்வேறு வகைப்பட்ட காரியங்களைச் செய்யத் தொடங்கும் போதும் சமாதானத்துடன் எண்ணிய கருமங்களை இயற்றுவார்களாயின் அவை இனிது பூர்த்தி பெறுவதோடு ஒவ்வொரு வகையிலும் அன்னார்க்கு நன்மையே அதிகரிக்கு மென்பதைச் சகலருமுணர்வர். இன்னும், ஆட்சி முறையார் இச்சமாதானத்தைக் கைக்கொள்வார்களாயின் அவர்களுக்குண்டாகும் அனுகூலங்கள் அளவிறந்தன வென்பது நாம் உரைக்காமலே எவர்க்கும் விளங்கும்.

 

இனி, இச்சமாதான மின்மையாலுண்டாம் தீமைகளைப் பற்றியும் ஆராய்வாம்: - ஒற்றுமை யில்லாவிடின் ஒரு சிறுகாரியத்திலும், வெற்றிபெறல் முடியாது. கோபமும், பொறாமையும், வீண்பிடிவாதமும், பொய்யும், கொலையும், களவும், சூதும், வம்பும், வழக்கும், போரும், பொருளழிவும், பிற தீக்குணங்களும் ஒற்றுமையின்மையிலிருந்து உற்பத்தியாகிவிடும். அவற்றால் மனமகிழ்ச்சி அடியோடு தொலைந்துவிடும்; வறுமைவந்து குடிபுகும்; சுகவாழ்க்கை சொல்லாம லோடிவிடும்; மனக்கலக்கமும், தேகத் தளர்ச்சியும் தினேதினே விருத்தியடையும். முடிவாகச் சொல்லுமிடத்து ஒற்றுமையற்றவர் உயிரற்றவரேயாவர். அவர்கள் உலகிலிருப்பதால் அடையும் பயன் ஒன்றுமின்றாம். அவர்களுடைய வாழ்க்கையானது துன்பத்துடன் கூடிய வாழ்க்கையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும். எங்ஙனமெனில்:

 

ஓர் ஊரில் இரண்டு சகோதரர்களோ, வேறு வகையான பாகஸ்தர்களோ ஒற்றுமை யற்றவர்களா யிருந்தால், தங்களுடைய குடும்ப சொத்துக்களையோ, ஊதியப் பொருள்களையோ, வருமானங்களையோ, வேறுவகை பூஸ்திதிகளையோ விரைவில் பிரித்துக்கொள்ள முற்படுகின்றனர். இந்த எண்ணமானது, அவ் விருவருள் ஒருவர் அதிகப்பயனை அடைகின்றார், மற்றொருவர் குறைந்தபயனை எய்துகின்றார் என்ற அபிப்பிராயத்தினாலேயே ஏற்படுகின்றது. அதனால் அந்தப்பாகப் பிரிவினை நேருங்காலத்தில், இருவருமே அதிகப்பங்கடைய வேண்டுமன்றும், ஒருவரையொருவர் வஞ்சிக்க வேண்டுமென்றும் கருதிச் சில சூழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். அதனால், இவர்களுடைய பாகப்பிரிவினை ஒழுங்கான முடிவிற்கு வருவதில்லை. தொடக்கத்திலேயே வாக்குவாதங்களும், சண்டைசச்சரவுகளும், அடிதடிகளும், பெருங்கலகங்களும் நேர்ந்துவிடுகின்றன. அவர்கள் ஒருவாறு ஆரம்பத்தில் அடங்கியிருந்தாலும் ஊரில் வம்பிழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் தம்பிமார்கள் சும்மாவிருப்பதில்லை. அங்குமிங்கும் தட்டிக்கொடுத்து, அவர்களைக் குடிமிபிடித்து இழுத்துக்கொள்ளச் செய்து கோர்ட்டுக்குக் கிளப்பிவிட்டு விடுவார்கள். ஸிவில் வியாஜ்ஜியம் வேறு, கிரிமினல் கேஸ் வேறு அவர்களால் தொடங்கப்பட்டு விடும். சமாதானத்துடனிருப்பவர்களை, மித்திரபேதத்தால் கோர்ட்டுக்கிழுத்துவிட்டு, நாட்டுப்புறத்தூர்களை விட்டு நியாயஸ்தலமிருக்கும் நகரங்களிற் புகுந்து, கட்ஷிகாரர் பொருளைக் கவர்ந்து காப்பி ஹோட்டல் விருந்தினராகவும், போஜனசாலைப் பூமான்களாகவும் திரியும் தரகுக்கார தாஷ்டிகவான்கள் இரண்டு பக்கத்திலும் மிக்க அன்புடையவர்களைப் போல உதவி செய்யக் கிளம்பி விடுவார்கள். அந்தோ! இவர்கள் புகுந்ததும், அந்தக் கக்ஷிக்காரர்களுடைய பொருளுக்கு நாசகாலம் கிட்டிவிடும். இவர்களுடைய துர்போதனை வயப்பட்ட அவர்கள், நியாய வாதிகளுக்குக் கொடுப்பதிலும், கோர்ட்டு சம்பந்தமான வேறு பல செலவுகளுக்களிப்பதிலும், சாக்ஷிகளுக்கும் தரகுகாரர்களுக்கும் சாப்பாட்டுச் செலவு, வண்டிச்செலவு முதலியவைகளைச் செய்வதிலும், பின்னும் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு நாடகம் பயாஸ்கோப் முதலியவைகளுக்குக் காணிக்கை செலுத்துவதிலும் அளவிறந்த பணச்செலவு செய்வார்கள்.

 

அச்செலவு ஒருமுறையோ டொழிவதில்லை. வருஷக்கணக்காகக் கோர்ட்டு வாயிதாக்கள் பல ஏற்படுவதால் பன்முறை ஏராளமான பொருள்கள் செலவாகிவிடுகின்றன. இதற்குள், கக்ஷிக்காரர்களின் கைப்பொருள்களெல்லாம் செலவாகிவிடுகின்றன. அதனால், அவர்கள், மேலும் செலவிடுதற்கு மயங்குகிறார்கள். அத்தருணத்தில் தரகுகாரர்கள், "இவ்வளவு தூரம் வந்துவிட்டு இனிச் சிறிது பணச்செலவிற்காகப் பின் வாங்கக்கூடாது; விற்காததை விற்றாவது ஒருகை பார்த்து விடவேண்டும்'' என்று அவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார்கள். அதைக்கேட்டு அவர்கள், தங்களிடமுள்ள பூஸ்திதிகளை விற்றோ, அடகுவைத்தோ, கடன் வாங்கியோ செலவு செய்கிறார்கள். முடிவில் இருவருள் ஒரு வருக்கு அனுகூலமாகவும், மற்றொருவருக்குப் பிரதிகூலமாகவும் தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பைப் பெறும் போது கக்ஷிக்காரர் இருவரும் உள்ள பொருள்களெல்லாம் போய் மிகுந்த கடனுக்குட்பட்டிருக்கிறார்கள். அனுகூலமடைந்தவன் கூட சிறிது பொருள் இலாபம் பெற்றிருப்பினும் தான் அடைந்த கடனுக்கு அஃது இம்மியளவும் பற்றாததாகி விடுகிறது. ஆகவே, இருவரும் கைப்பொருள் இழந்து கடன்காரரான நிலையில் ஒரு தன்மையராய் விடுகின்றனர். சிலர் இந்நிலையோடு நின்று விடுவர். வேறு சிலர் இதனோடும் விட்டு விடாமல் மேல் கோர்ட்டுகளுக்கும் அப்பீல் செய்து, இரண்டு மூன்று கோர்ட்டுகள் வரையிலும் போய் மேலும் கடன் தொல்லைகள் அதிகரித்து, வழக்குகளெல்லாம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, அதுவரை நடந்துவந்த நடவடிக்கைகளின் ரிக்கார்டுகளுக்கு நகல் வாங்கி ஒரு கட்டாகக் கட்டிப் பெரிய காகிதக்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து, 'வழக்குக்குப் போனதில் வந்த இலாபம் இந்தக்கடுதாசி மூட்டைதான்' என்று பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு மறுநாளே ஜீவனத்திற்கு என்ன வழி செய்யலாம் என்று வெளித்திண்ணையில் உட்கார்ந்து யோசிக்கத் தொடங்குகிறார்கள். ஆயுட்கால முழுவதும் துக்கத்திலேயே மூழ்கிக் கஷ்டப்படுகின்றார்கள். அந்தோ! இவர்கள், தங்கள் கூட்டாளியின் பாகத்தில் கொஞ்சம் அதிகமாகச் சேர்கிறதற்கு மனம் பொறாது இங்ஙனம் வம்பு வழக்குச் செய்து உள்ளதையும் இழந்து வறிஞராய்க் கஷ்டப்படுவதில் பயனென்ன? இப்படி எல்லாச் சொத்துக்களும் நாசமாவதைக் காட்டினும் உடன் பங்காளிகளுக்குச் சிறிது பாகம் அதிகப்படுவதால் ஒன்றும் தோஷமில்லையே. இவ்விஷயத்தில் சமாதானத்தைக் கைக்கொள்ளாத தாலன்றோ இத்தகைய துன்பங்கள் நேர்கின்றன. சிலர், '' வழக்குக்குப் போவதால் எல்லோருமா இவ்வகைக் கஷ்டத்திற்குள் ளாகின்றனர்? " என்று கேட்கக்கூடும். அவர்கள் அபிப்பிராயப்படி சிலர் மாத்திரந்தான் மிகப் பரிதாபநிலையை அடைவார்களென்பது உண்மையே. எனினும் பொதுவாக நோக்குமிடத்து அவ்வாறு சிலர் தரித்திர திசையை அடைந்து பெரும்பான்மையோர் தங்கள் பூஸ்திதியும் கௌரவமும் கொஞ்சம் குறையாதிருப்பினும், அவர்களுக்கும் கடன் தொல்லை அதிகமாக ஏற்படுவதால் முடிவில் அவர்களும் நிச்சயமாகக் கஷ்டத்திற்குள்ளாகியே தீருவர். ஆகவே சமாதானமின்றி வழக்குத் தொடுப்பவர்களில் சுகப்படுவோர் இல்லை யென்றே உறுதியாகச் சொல்லலாம்.
 

இன்னும் இந்தப் பாகப் பிரிவினை விஷயமாக நடக்கும் விநோதங்கள் பலவுள்: சிலர், இதுபற்றிக் கோர்ட்டுக்குப் போகாவிடினும் வீட்டிலேயே ஒருவர்மீதொருவர்க் குண்டாகும் விரோதத்தால், பங்கு ஒருவர்க்கு ஜாஸ்தியாகவும், மற்றொருவர்க்குக் குறைவாகவும் இருக்கக்கூடாதென்று பயனற்ற பிரிவினைகளைச் செய்து கொள்கிறார்கள். ஒரு சமயம் இருவர் பாகம் பிரித்துக் கொள்ளும்போது பொதுவிலிருந்த ஒரு பெரிய மிடாப்பானையை ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க இசையாமையால் இரண்டாக உடைத்துப் பங்கிட்டுக் கொண்டார்களாம். ஐயோ! இவர்கள் இந்த ஒடுகளைப் பாகஞ்செய்து கொண்டதால் அடைந்த பயனென்னையோ! இன்னும் சிலர் அகலக்குறைவான வீட்டை ஒருவர் பக்கத்தில் விட்டுவிட இஷ்டப்படாமல் முரட்டுப் பிடிவாதத்தால் இரண்டு கஜ அகலத்தில் பாகம் பிரித்துக்கொண்டு அதை உபயோகிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். பின்னும் சிலர் உயர்ந்த துணிகளைக் கூட இரண்டாகக்கிழித்து ஒருவருக்கும் உதவாமல் பங்கு போட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இவையெல்லாம் மூடத்தனமான பிடிவாதத்தாலும் சமாதான குணமின்மையாலும் ஏற்படுவனவேயாம். இவற்றால் இவர்களுக்குண்டாவது கஷ்டமேயன்றிச் சிறிதேனும் சுகமென்பதில்லை.

 

ஒரு குடும்பத்திலுள்ள தகப்பன், பிள்ளை, மனைவி, புருஷன், சகோதரர், மாமி, மருமகள், நாத்தி, ஓரகத்தி, சுற்றத்தார் முதலியவர்களும் சமாதானத்துடன் இராவிடின், தினந்தோறும் கலகங்கள் ஏற்பட்டு, குடும்பகாரியங்கள் கெட்டுச் சுபகாரியங்களும், குடும்பவிருத்திகளும் இனிது நடைபெறாமல் எப்பொழுதும் வம்புவழக்குகள் அதிகப்பட்டுக்கொண் டிருக்கும். அக்குடும்ப வாழ்க்கை சுகமாக நடைபெறாது.

 

வியாபாரம் முதலிய தொழில்களைச் செய்வோரும் பங்கு பிரித்துக் கொள்ளும் விஷயத்தில் சமாதானத்தைக் கைக்கொள்ளாவிடின், அவர்கள் அடையும் ஊதிய பாகத்தின் பயன் கெடுவதோடு, அவர்களால் நடத்திவரப்பட்ட தொழில்களுக்கும் கெடுதி சம்பவிக்கும். அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுப் பிரிந்து, ஒருவர் செய்த தொழிலை மற்றொருவர் செய்து பொதுவில் எல்லாருடைய தொழில்களையும் கெடுத்துக்கொள்வார்கள். இவற்றாலெல்லாம் கிடைக்கும் பயன் துன்பமே.

 

 கிராமத்தொழிலாளிகள் முதலியவர்கள், தங்கள் பாகப்பிரிவினை விஷயத்தில் மாறுபட்டுக் கொள்வார்களேயானால், அவர்களின் ஜீவனத்திற்கே கெடுதியாய் முடியும். அவர்களுக்குள் வழக்கு நேர்ந்ததைக் கண்டால் அவர்களுக்குச் சுதந்தரம் முதலிய கூலிகளைக் கொடுப்போரும் சரிவரக் கொடுக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் வறுமைக்குள்ளாகித் துன்புறுவார்கள்.

 

பொது ஜனங்களும் ஏதோ ஒரு பயன் குறித்துக் கூடிச் செய்யும் காரியங்களில் ஒற்றுமையை யிழந்து மனவிகற்பத்தை அடைவார்களாயின் அவை ஒருபோதும் நிறைவேறமாட்டா. அவர்கள் அவற்றால் அடையலாமென்று எதிர்பார்த்த நற்பயன்களும் கைகூடா. அவர்கள் அடையத்தக்க பெரிய வெற்றிகளை யெல்லாம் இழந்துவிடுவார்கள்.
 

ரெயிலிலோ, கப்பலிலோ பிரயாணஞ் செய்பவர்களும், திருவிழா முதலிய சிறப்புக்களில் கூடுவோர்களும் ஒருவர்க்கொருவர் சிநேகபாவமாய் இடங்கொடுத்துக் கொள்ளாமலும், சௌகரியத்தை உண்டாக்கிக் கொள்ளாமலும், கீறியும் பாம்பும் போலவும், எலியும் பூனையும் போலவும் சீறிக்கொள்வார்களேயானால் ஆங்காங்கே ஏற்படக்கூடிய சௌக்கியத்தையும் சந்தோஷத்தையும் இழந்துவிடுவார்கள்; மனக்களிப்பான வார்த்தைகளும் பேசுதற்கேதுவின்றி முகத்தைச் சுளித்துக்கொண்டு ஊமர்கள் போல் ஒருவரோடும் வார்த்தையாடாமல் செல்வார்கள்.

 

ஒரு ஆட்சிமுறையாளரும்கூடச் சமாதானத்தைக் கைக்கொள்ளாவிடின் பலவகைக் கஷ்டங்களுக்குள்ளாவர். அவர்க்குள் யுத்தங்கள் தலை யெடுத்தோங்கும்; எத்தனையோ உயிர்ச் சேதங்கள் நேரும். ஐசுவரியம் குறையும்; சந்தோஷத்திற் கிடமிராது. சமாதானத்தை உயர் பொருளாகக் கொள்ளாத முடிமன்னர் பலர் முற்காலத்திலும் பிற்காலத்திலும் இடர்க்குள்ளாகி இன்பமிழந்ததை நாம் கேள்விப்பட்டும் பார்த்து மிருக்கிறோம். இன்னும் இவ்வாறே உலகத்திலுள்ள பல வகுப்பாருள்ளும் ஒற்றுமையின்மையால் நேரும் துன்பங்களை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம். இவற்றை யெல்லாம் ஒவ்வொன்றாக நன்காராயுமிடத்துச் சமாதானமின்மையால் அவஸ்தையே அதிகரிக்குமென்பது ஐயமற விளங்கும். இந்த ஒற்றுமையற்ற தன்மையானது இங்ஙனம் பல்வகையிலும் துன்பத்தையே தருவதாயிருந்தாலும், நம் நாட்டவருள் பெரும்பான்மையோர் இதன் தீமையை உணர்ந்திருந்தாலும் இதனை நீக்கி ஒற்றுமையைக் கொள்ளாதவர்களாயிருந்து வருகின்றனர். இதனால் நம் நாட்டிற்கு நேரும் தீமைகளோ பலவுள. முக்கியமாக இது தேசக்ஷேமத்திற்கே குருத்துப்பூச்சி போன்றதாகும். முடிவாகக் கூறுமிடத்து இந்த ஒற்றுமைக் குறைவினாலேயே நம் நாட்டிற்கு க்ஷண தசையுண்டாகி வருகிறதென்று சொல்லலாம்.

 

ஆதலின், நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையின் உயர்வையும், சமாதானமின்மையின் தாழ்மையையும் நன்றாக ஆராய்ந்து ஆரம்பத்தில் கூறிய சுகவாழ்வை அடைதற்கான மனவோர்மையைக் கொள்வோமாக. மாறாத சுகவாழ்வைப் பெறுவோமாக. ஜன சமூகத்துள் சமாதானக் கூட்டுறவொன்று மாத்திரம் ஏற்பட்டு விடுமாயின் அதனால் எவ்வகையிலும் ஆனந்தமான வாழ்க்கையே நடைபெறும். அவ்வாழ்க்கையினால் இருமைப் பயன்களையும் எய்தலாம். இப்பெரும்பயனை படைதற்கு எல்லாருடைய இதயத்துள்ளும் நின்று இன்ப அமுதூட்டும் இறைவன் நமக்குள் கூட் டுறவை யுண்டாக்குமாறு அவன் பதமலர்களைப் பணிவோமாக.

 

ஓம் தத்ஸத்.

ஆனந்த போதினி – 1925 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment