Monday, August 31, 2020

 

சங்கப் புலவரின் துங்கம்

(செம்பியனிருப்பு, பி. சுப்பிரமணியன்.)

தமிழ்நாடு முற்காலத்தில் சோ சோழ பாண்டியர் என்னும் மூன்று பெரிய அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. ''தமிழ்நாடு'' என்பது வடவேங்கட மென்னுந் திருப்பதி மலைக்குத் தெற்கும், தென்குமரி என்னும் மலைக்கும் ஆற்றுக்கும் வடக்கும், கிழக்கும், மேற்கும் கடலை எல்லையாகக் கொண்டு விளங்கிய ஒரு பெரு நிலப் பரப்பாகும். இதனைப் பனம்பாரனார்,

"வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து'' என்றார்.

 

இப் பெரு நிலத்தை யாண்டு வந்த மூவேந்தரும் தமிழ்க் கல்வி, வளர்ச்சியைக் கருதி, தமிழ்ப் பெருங் கழகமாம் சங்கத்தை நிறுவி, அதன்கண் ஆங்காங்குள்ள புலவர் பெரு மக்களை யமர்த்தி அவர்களை ஆதரித்துப் பற்பல நூற்களை யாக்குவித்தனர்.

இங்ஙனமாக பன்னீராயிரம் ஆண்டுகட்கு முன்னரே முதற் சங்கம் நிறுவப்பட்ட தென்றும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடை பெற்று ஓய்வுறவே, இடை, கடை சங்கங்கள் முறையே தோன்றி இப்போது நமக்குக் கிடைத்துள்ள சங்க நூல்களை யளித்துள வென்பதும் சரித்திர வாயிலாக நன்கறிந்த தொன்றாகும்.

சங்க நூல்களில் எட்டுத் தொகையில் ஒன்றாகிய புறநானூற்றிற் காணப்படும் புலவர்களின் இயல்பினைச் சிறப்பாகவும், வேண்டுழி பிறநூற் புலவர்களைப் பொதுவாகவும், ஆய்ந்து அவர்களின் அறிவு ஆற்றல் உயர்ச்சியினை யுள்வாறு கூறின் நம்மனோர்க்கு மிகுந்த களிப்புண்டாகு மெனக் கருதி ஈண்டு இத் தலைப் பெயர் கொடுத்து இக் கட்டுரையினை எழுதப் புகுந்தோம். பழம் புலவர்கள் பிற்காலத்துப் புலவர்கள் போலன்றி தாம் நேரிற் கண்டவற்றையும், அறிந்தவற்றையுமே கூறுவர். ஒவ்வொரு பொருள்களின் தன்மையினையும் ஆராய்ந்து உள்ளவாறே கூறுவர். அரசர்களிடத்தும் வள்ளல்களிடத்தும் சென்று அவர்கட்கு உண்மையினின்றும் வழா தொழுகுமாறு இடித்துக் கூற நேர்ந்துழி இடித்துக் கூறியும் அவர்கட்கு ஆவன செய்வர். தாங்களும் கற்றவாறே ஒழுகும் பெற்றியினர்.

பாண்டியன் நெடுஞ் செழியன் என்னும் அரசனை, 'குடபுலவியனார்' என்னும் புலவர் பெருமான் நோக்கி, 'நீ ஆளும் நாட்டில் வேளாண்மை நீர் நிலைகளை வேண்டியவளவு பெருக்கிக் கொள்ளல் வேண்டும்' என்று கூற வந்தவர் அவன் மனதில் பதியுமாறு தாம் கூறப்புக்க செய்தியின் இயல்பினை எடுத்துக் கூறும் சதுரப்பாடு நம்மனோர் கண்டு களித்தற் குரியவாகும். அவை: -

வய வேந்தே! நீ மறுமைச் செல்வம் வேண்டினும் , தெவ்வர் தோள் வலி முருக்கி ஒப்பற்ற அரச செல்வம் பெற வேண்டினும், இசை வேண்டினும் யான் கூறுவன கேண் மினி! இவ் வுடம்பு உண்டி முதலதாதலின் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார். ஆதலின் உணவென்பது நீரும் நிலனும் ஆம். ஆக நீரும் நிலனும் இவ்வுலகிற் புணர்த்தவர் உடம்பும் உயிரும் படைத்தவராவார். வானோக்கும் நிலம் பரந்து கிடப்பினும் தலைவன் முயற்சிக்கு அது பொருந்தாது. ஆதலின் விரைவாக நிலங்குழிந்த விடத்து நீர் நிலை பெருகச் செய்தவர், செல்வத்தினையும், வலியினையும், இசையினையும் இவ்வுலகத்து நிலை நிறுத்தியவராவார். அல்லாதோர் மேற் கூறிய செல்வம் முதலியவற்றினை நிலை நிறுத்தியோராகார். இதனை,

"உண்டி முதற்றே யுணவின் பிண்ட (ம்)

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரு(ம்) நிலனும் புணரி யோர் (ஈ)ண்(டு)

உடம்பு(ம்) உயிரும் படைத்திசி னோரே

வித்திவா (ன்) நோக்கும் புன்புலங் கண்ணகன்

வைப்பிற்(று) ஆயினும் நண்ணி யாளு (ம் )

இறைவன் தாட்குத வாதே யதனால் )

அடுபோர்ச் செழிய விகழாது வல்லே

நிலனெளி மருங்கி(ல்) நீர் நிலை பெருகத்

தட்டோ(ர்) அம்ம இவட்டட் டோரே

தள்ளா தோரிவ(ண்) தள்ளா தாரே''

 

என்னும் புறநானூற்றின் (கஅம்) பாடலால் அறியலாம்.

மேலும் கோவூர் கிழார் என்னும் புலவர் உறையூரை முற்றியிருந்த சோழன் நலங்கிள்ளியையும், அடைபட்டிருந்த நெடுங் கிள்ளியையும் நோக்கி, "நீயோ ; பணம் பூமாலை யணிந்த சேரனல்லன், அவனோ வேம்பு மாலை யணிந்த பாண்டிய னல்லன் ; இருவரும் ஆத்தி மாலை யணிந்த சோழர்களே. நும்மில் ஒருவர் தோற்பினும் தோல்வி யறுவது நுங்குடியே. இருவரும் போரில் வெல்லுதல் என்பது உலகியல்பன் ஆதலின் நும்மில் போரொழிக என்று அவர்களுக்கு மிகவும் அஞ்சா நெஞ்சுடன் இடித்துரைத் திருக்கின்றார். இதனை,

''இரும்பனை வெண்டோடு மலைந்தோ(ன்) அல்லன்

கருஞ்சினை வேம்பின் றெரியலோ (ன்) அல்ல(ன்)

நீன்ன கண்ணியு(ம்) ஆர்மிடைந் தன்றே, நின்னொடு

பொருவோன் கண்ணியு மார் மிடைந் தன்றே

யொருவீர் தோற்பினுக் தோற்பதுங் குடியே

யிருவீர் வேற(ல்) இயற்கையு(ம்) அன்றே, அதனாற்

குடிப்பொரு ன்று நுஞ்செய்தி ளகொடித்தேர்

நும்மோ(ர்) அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விக்கல்''

 

என்னும் செய்யுளினா லறியலாம்.

நிற்க. இப்புலவர் பெருமா பரனே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்; மலயமான் மக்களை யானைக்கிடடகாலத்து, அம் மக்கள் மீது இரக்கங்கொண்டு சோழனுக்கு இவர் எடுத்துரைக்குஞ் செய்யுள் மிகவும் போற்றத்தக்கது. அச் செய்யுள்.

நீயே, புறவி(ன்) அல்ல(ல்) அன்றியும் பிறவு(ம்)

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

இவரே, புலனுமு(து) உண்மார் புன்க(ண்) அஞ்சித்

தமது பகுத்(து) உண்ணுந் தண்ணிழல் வாழ்ர்

களிறுகண் டழூஉ மழான் மறந்த

புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்திற் புன்கனோ வுடையர்

கேட்டனை யாயினீ வேட்து செய்ம்மே''

 

என்பதாம். இச் செய்யுளால், அரசனுக்குப் புலவர் பண்டைய அரையர் பெருமிதத்தை எடுத்துக் கூறி அறிவுறுத்துகின்றார். நீயோ ; ஒரு புறாவின் பொருட்டுத் தன் னுயிரையுங் சொடுத்துச் சிறப்புப் பெற்ற முன்னோரது வழிவந்த மரபினள். உன் எதிரில் நிற்கும் இச் சிறார்களோ; அறிவான் உழுதுண்ணுங் கற்றோரது வறுமைக்கு அஞ்சித் தமது பொருளைப் பாத்துக் காடுத் துண்ணும் அருளுடைய வள்ளல் களின் மரபினர்கள். இவர்களை அருள் செய்து காப்பாற்றுவதல்லது, இவர்கள் மீது செற்றங் கொண்டு கொல்வது முறையன்று என்று எவ்வளவு இரக்கமுடன் எடுத்துரைக்கின்றார். என்னே! பண்டைக்காலப் புலவரின் மனநிலை இருந்தவாறு!

      சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சோ லிரும்பொறையென்பான் னுடைய முரசு கட்டிலில் அறியாது ஏறித் துயின்ற மோசிகீரனார் என்னும் புலவர்க்குத் துன்பஞ் செய்யாமல், அவர் துபிலெழுமளவும் இரு கையிலும் கவரி கொண்டு வீசிக் கொண்டிருந்தான். பின்னர் புலவர் துயிலெழுந்து அரையனைப் பார்த்து, குற்றந் தீர்ந்த கொற்றான் பூவை யணிந்த நீல மணி போன்ற உன்னுடைய வீரமுரசும் நீராடி வருவதன் முன்னே எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மென்பூவையுடைய கட்டிலை முரசு கட்டிலென்பதறியாது ஏறிய என்னை முனியாது, அருகில் வந்து கவரி இரட்டிய உந்தன் தன்மையை யான் என்னென்று சொல்வது என்று வியந்து கூறுகின்றார். இதனை,

"மாசற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

யொலி நெடும் பீலி யொண்பொறி மணித்தார்

பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை யுருகெழு முரச

மண்ணி வாரா வளவை யெண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

யறியா தேறிய யென்னைத் தெறுவா

விருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை

ய தூஞ்சாலுநற் றமிழ் முழு தறித(ல்)

அதனொடு (ம் ) அமையா (து) அணுக வந்து நின்

மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென

வீசி யோயே வியலிடங் கமழ

விவணிசை யுடையோர்க் கல்ல தவண

துயர்நிலை யுலகத் துறையு ளின்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குருசினீ யீக்கிது செயலே"

 

என்னும் புறகானூற்றின் (50ம்) செய்யுளால் அறியலாம்.

      ஈண்டு பண்டைய அரையர்கள் புலவரை நன்கு ஆதரித்தது மன்றித் தாமும் தமிழ் கற்றவர்களாய் இருந்தனர் என்பது அதூஉஞ் சாலுநற் றமிழ் முழு தறிதல்'' என்னும் அடியால் நன்கு விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

      வேள் பாரியின் நாட்டைத் தமிழ் மூவேந்தரும் முற்றுகை செய்தனர். அது காலை அவனுடைய நண்பரும் பெரும் புலவருமான கபிலர் மூவேந்தருக்குஞ் சிறிதும் அஞ்சாது அவரிடஞ் சென்று பாரியினுடைய வலிமையைப் பற்றி, 'நீவிர் பாரியினுடைய பறம்பு மிகவும் எளிதென்று எண்ணினீரோ! பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தருஞ் சூழினும் அவன் அஞ்சான். அவனது நாடு உழவரால் உழாமலேயே விளையும் நான்கு விளையு ளுடைத்து. அவற்றுள் - ஒன்று:- சிறிய இலையை யுடைய மூங்கிலரிசி; இரண்டு: - இனிய பலாப்பழம் ; மூன்று:- கொழுவிய கொடியை யுடைய வள்ளிக்கிழங்கு; நான்: - அழகிய ஓரி பாய்தலான் பொழியும் மலைத்தேன் என்பனவாம். மேலும் அகல நீள உயரத்தால் அவனுடைய மலையோ வானளாவி யுள்ளது. வானி லுள்ள உடுக் கூட்டங்களோ அம் மலையில் நீரருவியாக உள்ளது. இத்தகைய இடத்தில் மரந்தோறுங் கட்டிய யானையையுடை யீராயினும், இடைவிடாது பரப்பிய தேரையுடையீராயினும் உங்கள் முயற்சியால் அவன் மலையைக் கொள்ள முடியாது. அன்றியும் நுமது வாள்வலிக்கு அவன் ஒரு சிறிது மஞ்சான். அன்றி, வேறு எவ்வாறு அவனது நாட்டைப் பெறலா மென்னின் ; நரம்புடைய சிறிய யாழைப் பண்ணிவாசித்து, நறு காற்றத்தோடு கூடிய தழைத்த கூந்தலை யுடைய தும் விறலியர் பின்வர, ஆடல் புரிபவராய்ச் சென்றால் ; அவன் நமக்கு நாட்டையும் மலையையுந் தருவன் என்று தமிழ் மூவேந்தர்க்கும் எடுத்துரைத்தார். இதனை,

''அளிதோ தானே பாரியது பறம்பே

ளிகொன் முரசின் மூவர் முற்றின(ம்)

உழவ ருழா தன நான்குபய னுடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே

நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றந் தேன்செர்ரி யும்மே

வான்க ணற்றவன் மலையே வானத்து

மீன்க ணற்றதன் சுனையே யாங்கு

மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்

புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்

தாளிற் கொள் கலிர் வாளிற் சாரலன்

யானறி குவனது கொள்ளு மாறே

சுகிர்புரி ஈரம்பின் சிறியாழ் பண்ணி

விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர

வாடினிர் பாடினிர் செவினே

நாடுங் குன்று மொருங்கீ யும்மே''

 

என்னும் புறப்பாட்டா லறியலாம்.

நிற்க, உறையூரில் அரசாண்ட கோப்பெருஞ் சோழ னென்பவனுக்குப் பிசிராந்தையார் என்னும் புலவர் உயிர் நண்பனா பிருந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இதனைப் பிசிராந்தையார்,

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்

நட்பாங் கிழமை தரும்''

 

என்ற பொய்யாமொழிப்படி, அவனுழை வடக்கிருக்கச் சென்றார். அது காலை, அங்கிருந்த சான்றோர்கள் யாண்டு பல வாகியும் நுமக்கு நரைதிரை மூப்பு வாராமைக்குக் காரணம் யாதென வினாவழி ; அதக்குப் பிசிராந்தையார், என்னுடைய மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர்கள். எனக்கு ஏவல் செய்வாரோ நான் கருதியவற்றையே கருதுபவாகள் . அரையனோ நீதியினின்றுஞ் சிறிதும் வழுவான். மேலும் என்னுடைய நாட்டில் ஐம்பொறிகளையும் அடக்கிய சான்றோர் பலருளர் என்ற விடை யிறுத்துள்ளார் என்பதை,

"யாண்டு பல வாக நரையில் வாகுதல்

யாங்கா கியரென வினவுதி ராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்

யான் கண் டனையரென் னிளையரும் வேந்தனு(ம்)

அல்லவை செய்யான் காக்கு மதன்றலை

யான்றவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழு மூரே''

 

என்னும் புற நானூற்றின் (191)ம் செய்யுளால் அறியலாம்.

நிற்க,

"யாது மூரே யாவருங் கேளிர்

தீது நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலு மவற்றோ ரன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்த(ல்)

இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவி(ன்)

இன்னா தென்றலு மிலமே மின்னொடு

வானந் தண்டுளி தலைஇ யானாது

கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை பிகழ்த லதனினு மிலமே"

இச் செய்யுளால் பண்டைக்காலப் புலவர்கள் பிறவி யுண்டென்றும், யாவரும் நமது சுற்றத்தின் ரென்றும், யாதும் நமது ஊரென்றும், அதனால் சாதல் புதிதன்று தொன்று தொட்டு வருவ தென்றும் அறிந்திருந்தார்களென் பதை நன்கு உணரலாம்.

இது நிற்க. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய ஆயின் ஈகையைப்பற்றிப் பாடிய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ; அவனுடைய கொடைச் சிறப்பைப்பற்றி எடுத்துரைப்பது மிகவும் மெச்சத் தக்கது. அச் செய்யுளாமாறு,

"இம்மைச் செய்தது மறுமைக் காமெனு (ம்)

அறவிலை வணிக (ன்) ஆயலன் பிறருஞ்

சான்றோர் சென்ற நெறியென

வாங்குப் பட்டன் றவன்கை வண்மையே"

 

என்பதாம். இச் செய்யுளில் ஆய் அறத்தை விற்கும் வணிகனல்லன். அவனுடைய கைவண்மையே என்று குறிப்பிடுகின்றார்.

      இவ்வாறு பண்டைப் புலவர்கள் அரசனுக்கு அறிவுறுத்துவதும், இன்னலுற்ற காலை ஏற்பன எடுத்துரைப்பதும், அவனுடைய ஈகையைப்பற்றி வெளிப்படையாகப் புகழ்வது மன்றி, புகழாப் புகழ்ச்சியாகவும் அரையனைப் புகழ்ந்துள்ளார்கள். அவற்றுள் சேரன் பால் அன்புள்ளவனாகிய நாஞ்சில் வள்ளுவனைப்பற்றி ஒளவையார் பாடிய செய்யுள் வியக்கத்தக்கது. நாஞ்சிற் பொருநன் அறிவு மெல்லியன் செவ்விய நாவையுடைய புலவீர், வளையணிந்த கையையுடைய பாங்கியர் சோலையிற் பறித்த இலைக்கு (கீரைக்கு) மேலே தூவுவதற்கு யாங்கள் சில அரிசி வேண்டினோம்; தான் பரிசிலர்க் குதவும் வரிசை யறிந்தவனாதலால் எம் வறுமைதை யையும் தனது மேம் பாட்டையுஞ் சீர் தூக்கிப் பார்த்து, பெரிய மலைபோன்ற யானையையும், அதற்கேற்ற பரிவாரங்களையும் அளித்துள்ளான் என்று புகழ்ந்துள்ளார். அச் செய்யுள்,

தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்

மடவன் மன்ற செந்நாப் புலவீர்

வளைக்கை விரலியர் படப்பைக் கொய்த

வடகின் கண்ணுறை யாக யாஞ்சில

வரிசி வேண்டினே மாகத் தான் பிற

வரிசை மறிதலிற் றன்னுந் தூக்கி

யிருங்கடறு வளை இய குன்றத் தன்ன தோர்

பெருங்களிறு நல்கி யோனே யன்ன தோர்

தேற்றா வீகையு முளது கொல்

போற்றா ரம்ப பெரியோர்தங் கடனே         என்பதாம்.

 

இனி எட்டுத் தொகை நூலுள் பிறிதொன்றாகிய அகநானூற்றிலிருந்து பண்டைப் புலவர்கள் இயற்கையைப்பற்றி வருணித்துச் செல்வதை யறியலாம். கபிலர் என்னும் புலவர் பெருமான் மலைவளத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு மயிலானது மலையை கடனசாலையாகக் கொண்டு நடன மாடுகின்ற தென்று கூறி, அதற்கு வேண்டிய துணைக் கருவிகளும் அதன் கண் உள்ளன என்று கூறுகின்றார். எவ்வாறெனில், ஆடுகின்ற மூங்கிலில் செய்யப்பட்டதனை யொப்ப உள்ள துளைகளில் வீசுகின்ற தென்றற் காற்றால் உண்டாகும் ஓசையானது குழலிசையாகபை, அங்குள்ள அருவி நீரொழுக்கால் உண்டாகும் ஒசை மத்தள முழக்காகவும், ஆண் குரங்கினிடமிருந்து உண்டாகும் ஒலி பெருவங்கிய (வாத்திய விசேடம்)மாகவும், அசைகின்ற பூவிலுள்ள வண்டானது யாழாகவும் இவற்றினுடைய இன்னிசைகளைக் கேட்டுப் பெண் குரங்கு மருண்டு நோக்கவும், மூங்கில் வளர்கின்ற அம்மலையில் உலாவி மயில் ஆடுகின்ற களம்போல் தோன்றும் நல்ல நாட்டையுடையவனே! என்று விதந்து கூறுகின்றார். இதனை,

''ஆடமைக் குயின்ற வவிர் துளை மருங்கிற்

கோடை யவ்வளி குழலிசை யாகப்

பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை

தோடமை முழவின் துதை குரலாகக்

கணக்கலை யிருக்குங் கடுங்குரற் றூம்பொடு

மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக

வின்பல் லிமிழிசை கேட்டுக் கவிசிறந்து

மந்தி நல்லவை மருள்வன நோக்கக்

கழைவள நடுக்கத் தியலி யாடுமயிர்

நனவுப்புகு விறலியிற் றோன்று நாட

 

என்ற அகநானூற்றின் (82)ம் செய்யுளால் அறியலாம்.

      ஆகவே பண்டு நம் முன்னோர்களெல்லாம் உலகத்தில் உள்ளதனை உள்ளவாறு உரைக்கும் பெற்றியையும், புலவர்களிடத்து அரையர்கள் வைத்திருந்த நன்மதிப்பையும், புலவர்கள் அரையனுக்கு அவ்வப்போது இடித்துரைத் திருப்பதையும், அக்காலத்து நாட்டில் புலவர்க்குள்ள பெருமையையும் மேற் கூறிய வற்றிலிருந்து ஒருவாறு அறியலாம்.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment