Monday, August 31, 2020

 

சகோதரத்வ பாவனை

 

      இந்திய மக்கள் எவரும் ஒருமித்த
      சிந்தைய ராகிச் சிநேகித்துச் - சந்ததமும்
      சோதரத்வம் பாராட்டின் துன்பமின்றி வாழ்வரென
      ஆதரத்தோ டோதுமறை யாய்ந்து.

 

சகோதரத்வ பாவனை என்பது, ஆற்றிவிற் குரிய மக்களனை வரும், வித்தியாச நோக்கமின்றி, எவ்விஷயத்திலும், ஒன்றிய மனமுடையவ ராய்க் கூடி வாழுந்தன்மையை வெளிப்படுத்த வல்லதோ ரறிகுறியாம். இப்பாவனை ஒவ்வொரு குடும்பத்திலும் அவரவர்க்கு இளமையிலிருந்தே பெரும்பான்மையும் பயிற்றுவிக்கப் பெற்று வருவதொன்று. அன்பு, அருள், ஈவு, இரக்கம் முதலிய சுகுணங்களின் அபிவிருத்திக்கு இந்தப் பாவனை மூலதனமாகின்றது. பகுத்தறிவை எச்சரிக்க வல்லது. ஐக்கியப் பாட்டைப் பசுமரத்தாணிபோ லாக்கத்தக்கது. இராஜாங்க விசுவாசத்தையும், தெய்வ விசுவாசத்தையும் பலப்படுத்தும் பீடமாவதற்கு யோக் கியம் வாய்ந்தது. தேசாபிமானத்தை வளர்க்குங் கருவி இதுவே. அன்னிய நாட்டாரையும் ஆதரிக்குஞ் சக்தியிதனிடம் குடிகொண்டுளது. பெரியார் சிறியார் இவர்களிடம் தழுவவேண்டிய முறைமையை ஊட்ட அருகமானதும் இச்சகோதரபாவனையே. நல்வழியின் பாற்பட்ட எத்தகைய காரியங்களையும் இதன் வாயிலாக இலேசில் பெற்றுக் கொள்ள லாம். நீதி நூலார்,


 "ஆ தரை மிசைநர ராய யாவரும்
 சோதரர் எனமிகத் துன்னல் நன்றென
 வேதமே யோதுமேல் விளங்குஞ் சோதரர்
 மீதமை நட்பினை விளம்பல் வேண்டுமோ''


என்று இதனைப் புகழ்ந்திருக்கின்றனர்.

 

இந்தப் பாவனை கெட்ட வழியிலுங்கூடக் கூடும். ஆற்றிவினர்க்கு அஃதழகன்றாம். அப்பாவனையும் உண்மைப் பாவனையாகாது. அது பற்றி நாம் சிந்திக்க வேண்டியதனாவசியமாயினும்,


      "ஊணுடை யெச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
      நாணுடைமை மாந்தர் சிறப்பு "

 

என்று நாயனார் அருளியதைக் கவனிக்க வேண்டும். கவனியாது கைவிடின் அன்னவரை உலகமும் கைவிடும்.'' இவனென்ன வெட்கங் கெட்டவன்; மானமில்லாதவன்; மானியன்றோ மனிதன்? இவனிடம் நமக்கென்ன பேச்சு. நாய்குலைத்தா நத்தம் பாழாகப்போகிறது. சீ!

 

 ''தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையின் இழிந்தக் கடை''


எனத் தெய்வப் புலவர் தெரிவிக்கின்றார் என்று சாதாரணமாயுலகம் ஆசார ஈனரைக் கடிந்துரைக்கும் கட்டுரைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். ஆதலின் தீயவழியில் இப்பாவனையை நாடாமல் எப்போதும் நல்லவழியில் நாடுவதே நன்று. சற்சங்கத்தாலல்லவா நன்மை சித்திப்பது. சற்சங்கத்திற்கு இச்சகோதரபாவனையே பெருஞ் சாதனம்.

 

நமக்கு உறுதியாய சற்சங்கத்தைக் கைகூட்டவல்ல இப்பாவனா நோக்கமொன்றே, நாம் எடுத்த உடம்பையழகுப்படுத்தத்தக்கது. இப்படி உயர்நிலையடைவதற்கு முக்கிய உதவிக் கருவியாயுள்ள உடம்பை, உள்ளவரையில் அழகுபடுத்த வேண்டுவது நமது கடமையன்றோ? இன்றேல் "உடன் பிறப்பில்லா உடம்பு பாழ்' என்பதற்குத் தடையென்ன?

 

இத்துணைச் சிறப்பினதாய சகோதரத்துவ பாவனையை விரும்புவோரிடம், 1. ஆற்றுதல், 2. போற்றுதல், 3. பண்பு, 4. அன்பு, 5. அறிவு, 6. செறிவு, 7. நிறை, 8. முறை, 9. பொறை என்னும் இரத்தினங்கள் ஒன்பதும் கையிருப்பாய் இருத்தல் வேண்டும். இந்நவமணிகளின் அருமையை ஆசிரியர் நல்லந்துவனார் தமது கலித்தொகை, நெய்தற் கலியில் விசேடித்துப் பேசியுள்ளார். அக்குண விசேஷங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவை –

 

1. ''ஆற்றுதல் என்பதொன்றலர்ந்தவர்க் குதவுதல் " அதாவது இல்லறத்தை யொழுங்கு பெற நடத்துதலென்று மொழிவது, தரித்திரர்க்கு ஏதாவதொன்றை யுதவுதல்.

 

2. "போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை': - ஒன்றைப் பாதுகாத்தலாவது நேசித்தவரை விட்டு நீங்காதிருத்தல்.

 

3. ''பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்'': - நற்குண நற்செயல் என்று கூறப்படுவது உலக நடையை யுணர்ந்தொழுகுதல். ''உல கத்தோடொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்'' என்பர் செந்நாப் போதார்.

 

4. ''அன்பெனப்படுவது, தன் கிளை செறாமை”: - அன்பாவது தன் உறவின் முறையாரை வருத்தாதிருத்தல்.

 

5. "அறிவெனப்படுவது பேதையார் சொல் நோற்றல்'' : - அறிவா வது அறியாதார் தன்னை நோக்கிக் கூறும் மொழிகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.

 

6. ''செறிவெனப்படுவது கூறியது மறாமை ": - செறிவாவது சொன்ன தொன்றைப் போற்றுதல்.

 

7. "நிறையெனப்படுவது மறை பிறரறியாமை: " - நிறையாவது மறைந்ததொரு காரியத்தை அயலறியாவா றொழுகுதல்.

8. "முறை யெனப்படுவது கண்ணோடா துயிர் வௌவல்'' - முறை யாவது நம்மவரென்று தாக்ஷண்ணியம் பாராது அவர் செய்துள்ள குறைக் குத் தக்கபடி அவரது உயிரை வாங்குதல்.

 

9. ''பொறை யெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்: - பொறையாவது பகைவரைக் காலம் நோக்கிப் பொறுத்திருத்தல்.

 

இத்தன்மையான குணங்களில்லார் மாட்டுச் சகோதரத்துவ பாவனை பயன்பெறாது. முக்குண வயத்தரான மக்கள் என்றும் பிழைக் குரித்தானவரே. அதுபற்றி அவரை நாம் அறவே வெறுப்பது கூடாது. சிறு பிழைகள் பொறுக்கத் தக்கனவே யன்றோ? அன்றியும் மழையினிடத்தில் இடியும், மலரினிடத்தில் முள்ளும், சந்திரனிடத்தில் களங்கமும், கனியினிடத்தில் தோலுங் கொட்டையும் இருத்தல் இயல்பாதலின், எவ்வாறு நாம் இக்குறைகளை நோக்காது இவற்றை ஆதரிக்கின்றோமோ அவ்வாறு மக்களையும் ஆதரித்து நல்வழிப்படுத்துவது சகோதரத்துவ பாவனைக்கின்றியமையாத கடனாம். இங்கு இரண்டு உதாரணங் காட்டுவாம்.

 

தொண்டை நாட்டில், முதிரமலை என்னும் பதியை அரசு புரிந்து வந்த குமணராஜனைப் பற்றி நாம் பன்முறை படித்தும் கேட்டும் வருகிறோம். புகழொடு தோன்றிய இச்சிற்றரசனை உலகம் மறப்பதுண்டோ? மேற்சொன்ன நற்குணங்கள் யாவும் இவனிடம் பொருந்தியிருந்தன. தமிழறிந்தவன். பரோபகாரம் புரிந்து வருவதே பிறவிப்பயன் என்னும் உத்கிருஷ்ட நோக்கங்கொண்டவன். கற்றாரைக் காதலிப்பவன். இன்ன புவிராஜனைக் கவிராஜரான பெருந்தலைச் சாத்தனார் காணவேண்டிச் சென்றார். சென்றவர், சிம்மாதனத்தில் குமணனுக்குப் பதிலாக அவன் தம்பி இளங்குமணன் வீற்றிருக்கக்கண்டார். விசாரணையில், குமணனுடைய உதாரகுணத்தைச் சகியாத இளங்குமணன் கவலையுற்றிருந்ததைக் கண்ணுற்றுக் குமணன் இராஜ்ஜியத்தைத் தன் பின்னவன் வசமே விட்டுவிட்டுத் தானெங்கோ மறைந்திருப்பதாகவும், இராஜ்ஜியம் தன் வசமானவுடனே இளங்குமணன், " இதுதான் தக்க சமயம். காற்றுள்ள போதன்றா தூற்றிக்கொள்ளவேண்டும். அண்ணனுள்ள வரையில் தனக்காபத்தே " என்று எண்ணி, " எனது அண்ணன் சிரத்தைக் கொண்டு வருபவர்க்குப் பொன் கோடி அளிக்கப்படும் " என்று விளம்பரப்படுத்தியிருப்பதாகவும், இவ்வநீதத்தை ஜனங்கள் வெறுத்திருப்பதாகவுங் கேள்வியுற்றார். மனம் வருந்தினார். தமர்க்கிடர் கண்டபோது கறவையும் கன்றும் போலாதலன்றோ கற்றோர் நியதி. உடனே அங்கு நின்றும் வெளியேறினார்.

 

வெளியேறிய பெருந்தலைச் சாத்தனார், மாந்தையம்பதியில் வாழும் மகுடத்தியாகியை நேசித்து, ''சகோதரரே! உம்மாலாகத்தக்க தொன்றுளது. அதுவோ பரோபகாரத்தின்பாற்பட்டது. குமணராஜனை நீரறிந்தவர்தானே. அவ்வேந்தர் பிரானுடைய சிரமானது புதிதாக வெட்டுண்டதுபோற் றோன்றுங்காக்ஷியில் ஒன்று அமைத்தளிக்க வேண்டும்'' என்று கேட்டு அவனையும் புகழ, அவன் அவ்வண்ணம் அமைத்துக் கொடுத்த தலையைக் கொண்டு வந்து இளங்குமணனுக்குக் காட்டினார். அதனைக்கண்ட இளங்குமணனது மனம் முன்னைய நிலையினின்றும் மாறிப் பெருங்கவலைக்குள்ளாயது. அவன் சாத்தனாரைப் பார்த்து, "ஐயா! புலவர் பெருமானே! இனி நான் என்னுடன் பிறந்த அண்ணனாரை உயி ரோடு காணப்போகிற தொழிந்ததோ? என் அறியாமையின் பயனாய், மகிழ்வைத் தருமென்றெண்ணிய வென் எண்ணம் இப்போது பழியோடு கூடிச் சதா என்னை வருத்தக் கூடிய துன்ப வடிவாக மாறிவிட்டதே என்று வாய்விட்டுப் புலம்பலானான்.


அப்போது வித்வகோலாகலர் அவனை நோக்கி அண்ணலே!


 ''எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
 எண்ணுவ மென்ப திழுக்கு''


என்னும் இதோபதேசத்தை மறந்து, நீரே தேடிக்கொண்ட இதற்கு வருந்துவது பேதைமைத்தனமல்லவா? ஆயினும் எங்கட்கு உயிர்ப்பிக்கும் வல்லமையுமுண்டு. நீர் மனப்பூர்வமாக விரும்பின், உமது அண்ணனாரைப் பழையபடி எழுப்பித் தருவோம்'' என்றனர்.

 

இவ்வமுதமொழி இளங்குமணனுக்குப் பேரானந்தத்தை யளித்தது. உடனே அவன் "கவீச்சுரரே! புவீச்சுரனான என்னைக் கனப்படுத்த எனது அரும்பெற லண்ணனாரை எழுப்பி யருளக்கடவீர்; முன் விளம்பரப்படுத்திய பரிசுக் கதிகமான பரிசு உமக்களிப்பேன்'' என்று போற்றினான். கவீந்திரரும் குமணராஜனைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர். அச்சமயம் உடன் பிறந்தாராய அவ்விருவர்க்கும் இரத்த பாசத்தாலுண்டான அன்பின் செய்கை கண்டோர் மனதைக் கவர்ந்து, "ஆ! சகோதரத்துவ பாவனையின் மகத்துவம் இருந்தவாவென்னே என்று உரத்துச் சொல்லும் படி அவர்களை ஆனந்தாதிசயக்கடலில் அமிழ்த்திவிட்டது. குமணராஜன் சபையோரைப் பார்த்து, "சகோதர சகோதரிகாள்!


 ''வெம்புங் காலம் வெதும்பி விழுஞ்சிரம்
 செம்பொன் கோடி விலையெனச் செப்பினான்
 உம்பர் நாடும் உலகெங்குந் தேடினும்
 எம்பி போலெனக் கியாவர் இனியரே''


என்றான். இவ்வாறல்லவா சகோதரத்துவபாவனை இருக்க வேண்டும். இது நிற்க, இராம ராஜ்ஜியத்தில், இச்சகோதரத்துவ பாவனையை, ஸ்ரீராமபிரான் நடத்திக்காட்டிய அற்புதத்தையும் சிறிது பேசி, அச்சகோதரத்துவ பாவனையில் நாம் உள்ளபடி ஈடுபடுவோமாக.

 

நாம் சுகவாழ்வைப் பெற்று, புகழுடன் விளங்கி, நித்தியானந்தப் பேற்றுக்கு யோக்கியராவதற்கு, சகோதரத்வபாவனையே வழிகாட்டி என்று சென்ற மாதப்பத்திரிகையில் விளக்கினோம். இப்போது அச்சகோதரத்வ பாவனையை ஸ்ரீராமபிரான் எவ்வாறு நடத்திக் காட்டின ரென்பதைப்பற்றிச் சிறிது பேசுவாம்.

 

ஸ்ரீராமபிரான் இளம்பிராயத்திலேயே இன்பத்திலும் துன்பத்திலும் சமமான நோக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த நோக்கம் சகோதரத்வ பாவனைக்கு இன்றியமையாதது. தமது பிரஜைகளில் எவரையேனும் சந்திக்க நேர்ந்தால் அவரை அன்புடன் நோக்கி இனியமொழிகளால் க்ஷமாதிசயங்களை விசாரிப்பார். சக்ரவர்த்தி, தாசரதியைப் பார்த்து 'இனி இந்த இராஜ்யபாரத்தை என்னால் தாங்கமுடியாது எப்போது தக்க புத் திரர்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டார்களோ அப்போதே நான் இப்பாரத்தை அவர்களிடம் ஒப்பித்து விட்டு, என் ஆத்மா கடைத்தேறும் படியான மார்க்கத்தில் பிரவேசிக்க வேண்டும். ஆகையால் உத்தம குணங்கள் பொருந்திய நீயே இதனை யேற்றுக்கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்" என்றார். இரகுநாயகன் அதற்கு உடன்பட்டார். உடனே கைகேயி இதனை உணர்ந்து, கூனியின் துர்போதனைக்குட்பட்டுத் தான் முன்னதாகவே பெற்றிருந்த இரண்டு வரங்களை இப்போது பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொண்டு, ஒரு வரத்தால் இரகுநந்தனை வனத்துக்கனுப்பவும், மற்றொன்றால் தன் மகன் பரதனை அரசாளச் செய்யவும் நினைத்து, முடி சூட்டிக்கொள்ள ஆயத்தமாயிருந்த ஸ்ரீராமபிரானை அழைத்து 'இராமா! பரதன் அரசாளப் போகிறான். ஆதலால் நீ பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்து வரவேண்டும். இது சக்ரவர்த்தியின் கட்டளை " என்றனள். இம்மொழி கேட்டதும் சீதாபதி பெருங்களிப்படைந்து "அம்மா! மகா பாக்கியம். இராஜ்யத்தை நான் ஆண்டாலென்ன, என் தம்பியாண்டா லென்ன? இரண்டுமொன்றே. என் பின்னவனாகிய பரதன் பெற்ற செல் வம் நான் பெற்ற தென்பதற்குத் தடையாது?'' என்றனர். இவ்வாறு ஸ்ரீராமபிரான் பேசும் போது அவருடைய முகம், எவ்விதமான வாட்டத்துக்கும் இடந்தராது, சித்திரத்தில் தீட்டப்பெற்ற மலர்ந்த செந்தாமரைப் புஷ்பத்தைப் போலும் விளங்கியது. இதனால் அவர் சுகதுக்கங்களில் சமநோக்குடையவரென் றேற்பட்டது.

 

ஸ்ரீராமபிரானுக்கு இலட்சுமணன், பரதன், சத்துருக்கினன் என்கிற தம்பிமார் மூவருண்டு. இவர் வனத்திற்குப் புறப்பட்டபோது முதல் முதல் குகன் என்னும் வேடர் தலைவனைச் சந்தித்தார். குகன் இவரிடத்தில் கரை கடந்த அன்பு கொண்டு இவரை விட்டுப் பிரிய மனமில்லாதவனா யிருந்தான். இவர்க்கு வேண்டும் பணி விடைகளைக் குறிப்பறிந்து வெறுப்பின்றிச் செய்து வந்தான். இவரும் அவன் திறத்தில் பேரன்புடையவரானார். பிரிய நேர்ந்தபோது குகனை ஓர் ஏழை வேடனென்றெண்ணாமல் ஸ்ரீராமபிரான் அவனைப்பார்த்து "சகோதர! நின் நட்பைப்பெற நான் செய்த புண்ணியமே புண்ணியம். நீயே எனக்கு ஆருயிர்த் தோழன். இந்த இலட்சுமணனாகிய என் தம்பி உனக்குந் தம்பியே. என் மனையா ளான இச்சீதை உனது கொழுந்தி. இது உபசாரமொழி யன்று; உண்மை மொழியே' என்று கூறி அவனை மார்பிறுகத் தழுவி உச்சி மோந்தனர். நிற்க,

 

ஸ்ரீராமபிரானைத் தேடிவந்த பரதனும் இவ்விஷயத்தை யுணர்ந்து குகனிடம் சகோதரத்வம் பாராட்டினான். அப்போது '' இவன் யார்? " என்று வினவிய கோசலா தேவியைப் பார்த்துப் பரதன் ''அம்மா! இப் பெருந்தகை எங்களண்ணனாரால் ஆதரிக்கப் பெற்றவர். அண்ணாவுக்கு இளைய சகோதரராவர். எனக்கும் மற்றை யோர்க்கும் மூத்தவராக வேண்டும்'' என்று மொழிந்தனன். அது கேட்டுக் கௌசல்யை ''அப்படியா? மெத்தவும் சந்தோஷம். அப்பா பரதா! நீங்கள் 'ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்திரென்றாள்.''

 

இது விஷயமாய்த் திருமங்கை மன்னரும், அன்பாயினா ரெவரிடத்தும் எவ்வித வித்தியாசமுமின்றிப் பகவான் காட்டுங் காருண்யத்தை வியந்து,

 

 

"ஏழை * யேதலன் கீழ்மகன் என்னாது

இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து

மாழை மான் மடநோக்கி யுன் தோழி

உம்பி எம்பி யென்று ஒழிந்திலை உகந்து

தோழன் நீ எனக் கிங்கொழி என்ற

சொற்கள் வந்து அடியேன் மனத்திருந்திட

ஆழிவண்ண! நின் அடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத் தம்மானே''

 

என்று பாடியுள்ளது கவனித்தற் குரியது.

 

* ஏதலன் - அயலான்;

அவற்கு - குகனுக்கு;

மாழை - அழகு; மடநோக்கி - நிர்த்தோஷமான பார்வையையுடைய சீதாபிராட்டி.

 

மற்றொரு சமயம் ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனென்னும் வானர பூபதியின் நட்பை யங்கீகரித்த போது, அப்பெருமான் அவனை நோக்கி, ''சகோதர! இனி நானுனக்குச் சொல்லவேண்டிய தென்னவிருக்கின்றது. தேவ லோகத்திலாகிலும் சரி, இப்பூலோகத்திலாகிலுஞ் சரி, உனக்கு விரோதஞ் செய்தவர் எனக்கு விரோதஞ் செய்தவராவர். நற்குண நற்செய் கையில்லாதவராயினும் உன்னை நேசித்தவர் என்னை நேசித்தவராவர். உன் சுற்றத்தார் என் சுற்றத்தாரே. நீ நிர்ப்பயமாகவும் சுகமாகவும் இருக்கலாம்'' என்றார். இது சகோதரத்வக் கட்டுப்பாட்டை நன்கு விளக்குகின்றது.

 

''சீதா பிராட்டியைத் தேடிப் பிடிக்க எனது சேனைகளை நாலாபக்கங்களிலும் அனுப்புவதற்குக் கார்காலம் கழிந்ததும் உம்மிடம் வருவேன்" என்று ஸ்ரீராமபிரானுக்கு வாக்களித்துச்சென்ற சுக்கிரீவன், அக்கார்காலங் கழிந்தும் வாக்களித்தபடி வரவில்லை. அப்போது ஸ்ரீராமபிரான், இலக்ஷமணரை யழைத்து "தம்பி! சுக்கிரீவன் நமக்குதவி புரிய வருவதாகச் சொன்ன கெடு முடிந்தும் அவன் வராதிருக்கும் காரணம் தெரியவில்லை. நீ உடனேபோ யறிந்து வா'' என்று சொல்லி அனுப்பினார். இலக்ஷமணரும் கோபாவேசராய் ''இதோ அறிந்து வருகிறேன்'' என்று புறப்பட்டார். இப்புறப்பாட்டைக் கண்ட ஸ்ரீராமபிரான் ''இவன் நோக்கத்தைப் பார்த்தால் கிஷ்கிந்தையையே முற்றும் அழித்துவிடுவான் போ லிருக்கிறதே'' என்று நினைத்து, அவரை மறுபடியும் கூப்பிட்டு, "தம்பி! பிழை ஜீவரிடத்தில் குடிபுகுவது இயற்கை. அதுபற்றி அவர்களைக் கருணையின்றி வருத்துதல் கூடாது. நயபயத்தாலேயே கண்டிக்க வேண்டும். சுக்ரீவன் பெரும்பிழை யொன்றுஞ் செய்து விடவில்லை. பின்னரதை நீ நன்குணர்வாய்.'' சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே' என்னும் நீதியை மறவாதே. ஆயினும்,


 "ரஞ்ச மன்னவரைநலிந் தானது
 கஞ்சமன்று மனுவழக் காதலால்
 அஞ்சி எம்பதி லொன் றறியாதவன்
 நெஞ்சில் நின்று நிலாவ நிரத்து வாய்''

அடா! தம்பி! விஷத்துக்குச் சமானமானவரை வருத்துவது தப்பாகாது. அது மனு நீதியே


 "துற்சனரும் பொன்னும் துடியும் துரகதமும்
 அச்சமற முன்னிற்கும் ஆயிழையும் - நச்சரவும்
 கண்டித்த எள்ளும் கரும்பும் இளநீரும்
 தண்டித்தார்க் கன்றோ சயம்''


என்று தருமநூல் கூறுகின்றது. சுக்கிரீவனோ அஞ்சிலம்பதி லொன்றறி யாதவன்' அதாவது நிரக்ஷரக்குக்ஷி. (அஞ்சு + அம்பது - ஒன்று = 56 எழுத்து - இதில் ஒன்று மறியாதவன்) மந்திரியான மாருதியால் நடத்தப்படுபவன் (ஐம்பது','அஞ்சு - போலி). எழுத்து வாசனை அவனுக்கிருந்தால் 56 - வது வருஷத்தின் பெயரையாவது அவன் மறப்பானா? அது துந்துபி அல்லவா? துந்துபி என்னும் அரக்கனது பெருத்த உடலைத் தூக்கி யெறியச் செய்து நமது பராக்கிரமத்தைச் சோதித்தறிந்தவனாயிற்சே. ஒருவேளை அவன்'' நாம் மலைப் பிரதேசத்தில் வசிப்பதால் நம்மை இங்கு வந்து எவரும் ஒன்றுஞ் செய்யமுடியாது " என்று நினைத்திருக்கலாம். 'அஞ்சிலம்பதில்' அதாவது உலகிலுள்ள அழகிய மலைகளில் அவன் இக்கிஷ்கிந்தையைத் தவிர வேறெதையறிந்திருப்பான். அறிந்திருந்தால் சொன்ன வாக்கினின்றுந் தவறுவானா நல்லது அஸ்திர வித்தையிலாவது சேர்ந்தவனார் 'அஞ்சிலம்பதில்' அழகிய சில அஸ்திரங்களுள் - ஒன்றும் பிரயோகிக்கத் தெரியாதவன். கடைசியில் அவன் அஞ்சிலறியாதான் ஐம் பதிலுந்தானறியான' என்கிற பழமொழிக் கொப்பானவனே. அவனை நாம் காப்பதாக வாக்களித்திருக்கிறோம். ஆகையால் நீ அவனைக் கடினமான தொந்தரைக்குட்படுத்தாமல் அவன் மனதிற் பதியும்படி வேண்டிய புத்திமதிகளைச் சொல்லி அழைத்துவா" என்றனர்.

 

சகோதரத்வம் பூண்டவர்க்குள் தவறு நேரின் அதைச் சாந்தமாகவே இக்கிக்கொள்ள வேண்டுவது அன்னோர் கடமை என்பதை மேற் சொன்ன பாடல் தெரிவிக்கின்றது.

 

அண்ணனால் அநாதரிக்கப்பட்ட விபீஷணர் ''உடன் பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும்" என்று ஸ்ரீராமபிரானிடம் சரணாகதியானார். பண்டித சிரோமணியான ஆஞ்சநேயரைத் தவிர ஏனையோர் யாவரும் இவன் நமது பகையாளியின் தம்பி. உளவறிந்து போக இங்கு வந்திருக்கிறான். இவனை நமது கூட்டத்திற் சேர்த்துக்கொண்டால் அது நமக்கே கெடுதியை யுண்டாக்கும். ஆதலால் இவனை உடனே அகற்றி விடவேண்டும்" என்று மொழிந்தனர். மாருதி மாத்திரம் "நான் பார்த்த வரையில் இவ் விபீஷணர் மிக்க தூய்மையும், தக்க வாய்மையும், மற்று முள்ள சுகுணங்களும் கொண்டவரென்றே தெரிந்து கொண்டேன். அடைக்கலம் புகுந்தோரை ஆதரிப்பது தான் நமக்கழகு" என்றனர்.

 

ஸ்ரீராமபிரான், "ஆம். சரணடைந்தோரைத் தள்ளலாகாது. விரோதியாயினும் சரணம் என்று வந்தால் அவனை ஆதரிப்பதுதான் ஆண்மகனுக் கழகு. அவ்வாறு ஆதரிப்பதால் ஆதரித்தவனுக்குத் துன்பம் நேரிடினும் அது புகழாகவே முடியும்.

 

 'உடைந்தவர்க் குதவானாயின் உள்ள தொன் றீயானாயின்
 அடைந்தவர்க் கருளானாயின் அறம் என்னாம் ஆண்மை என்னாம் "

 

என்றன்றோ நூல்கள் முறையிடுகின்றன. ஆதலால் இவ்விபீஷணனை ஆதரிப்பதே நமக்குரிய கடன்'' என்று சொல்லி, விபீஷணரை முகமலர்ச்சியோடு நோக்கி, "சகோதரா! உனது தந்தையாரான சக்ரவர்த்தி நெடுங்காலம் புத்திரரின்றி மனக்கவலை கொண்டிருந்தார். மகரிஷிகளின் உதவியால் முடிவில் நான்கு புத்திரர்களைப் பெற்றெடுத்தார். அந்நால்வரில் நானும் இலக்ஷமணனும் அவருடைய கட்டளையால் கானகம் வர நேர்ந்தது. இங்கு எங்களுக்குச் சகோதரப் பெருக்கம் விர்த்தியாய் அவருக்குப் புத்திரபாக்கியத்தை அதிகரிக்கச் செய்தது. எப்படி யென்றால்,


 குகனொடும் ஐவரா? னாம் முன்பு பின்
* குன்று சூழ்வான்
 மகனொடும் அறுவரானோம் எம்
முழை யன்பிற் போந்த
 
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம்
 புகலருங் கானந் தந்து புதல்வரிற்
பொலிந்தான் § உந்தை"

என்றார்.

 

* குன்று சூழ்வான் மகன் - சூரிய புத்திரரான சுக்ரீவன்.

உழை - இடம்.

அகனமர் காதல் - மனப்பூர்வமான அன்பு.

பொலிந்தான் - சிறந்தான்.

§ உந்தை - உனது தகப்பன்

 

குகனிடம் ஸ்ரீராமபிரான் வெளியிட்ட கருணாவி சேஷத்தை நினைத்துப் பிராட்டியும், பெருமூச்செறிந்து, "இவனே புருஷோத்தமன்" என்று கண்களினின்றும் நீரானது ஆறாய்ப் பெருக,

''ஆழநீர்க் கங்கை * யம்பி கடாவிய
ஏழை வேடனுக் கெம்பியுன் றம்பி நீ

தோழன் நங்கை கொழுந்தி யெனச் சொன்ன
ஆழி நண்பினை யுன்னி
யழுங்குவாள்"

 

என்பதும் கருதற்பாலதே.

 

* படகு,

செலுத்திய;

வருந்துவாள்.

 

இங்கு கர்ண பரம்பரையாக வழங்கும் மற்றோரதிசயமும் நோக்கத் தக்கதே. அதாவது இராவண சம்மாரமானபின், ஸ்ரீராமபிரான் அயோத்திக்கெழுந்தருளி இராஜ கோலத்துடன் பரதலக்ஷ்மண சீதா சமேதராய் மந்திரி முதலிய மேதாவியர் சூழக் கொலுவீற்றிருக்கும் நாள்களில் ஒரு நாள், ஸ்ரீராமபிரானைக் குழந்தைப் பருவத்தில், வீதியில் விளையாடி வந்த போது, கண்டு களித்து வந்த ஓரனாதை ஏழை மனிதன், அவர் காட்டுக் குப்போனதுகேட்டு அதுமுதல் அழுதகண்ணுஞ் சிந்தியமூக்குமா யிருந்தவன், அவர் திரும்பி வந்து அரசுபுரிகிறார் என்பதறிந்து, அன்பால் மூடப் பட்டவனாய், இன்னதுதான் செய்கிறோமென்கிற நினைவு மின்றி, ஒரே ஒட்டமாக ஓடி வந்து "அடா! இராமா! என்கண்ணே! எப்போதடா திரும்பி வந்தாய் " என்று சொல்லி, ஓவென்று புலம்பியவண்ணம் அவரைத் தழுவிக் கொண்டான்.

 

ஸ்ரீராமபிரானும், அவனுடைய அசுத்தமான உடை முதலியவற்றையுங் கவனியாது, சிம்மாதனத்தினின்றும் இறங்கி, அவனை இறுகத் தழுவிக்கொண்டு தாமும் அழத் தொடங்கினார். இது அங்குள்ளார் எல்லோர்க்கும் பெருவியப்பைத் தரா நின்றது. கடைசியில் அந்த மனிதன் தன் அழுகையை நிறுத்தித் தன் அழுக்கு வஸ்திரத்தால் ஸ்ரீராமபிரானுடைய கண்களைத் துடைத்து, "அப்பா! அழாதே" என்று தேற்றும் வரையில் அவர் அழுதபடியே யிருந்தார். அழுது ஓய்ந்ததும் சபையைப் பார்த்து ஸ்ரீராமபிரான் "காலஞ்சென்ற எனது தந்தையை இன்று கண்டேன்' என்றார். எப்படி யெனில் அடா' என்று தம்மை யழைப்பவர் தமது தந்தையைத் தவிர வேறெவருமிலர் என்பதை விளக்கிக்காட்டினார். பிறகு அந்த ஏழை மனிதனை அன்புடன் உபசரித்தார். இவ்வாறன்றோ நாம் சகோதரத்வம் பாராட்ட வேண்டும். "காலத்துக் கேற்ற கோலம் என்கிறபடி நமது நாயகன் குகன் விஷயத்தில் பேரன்புகாட்டி நடந்தார். இராஜ கோலத்துடன் இருக்கும் போது குகன் போன்ற ஏழைகளை இப்படி ஆதரிப்பாரா? என்று சந்தேகங் கொண்டிருந்த பிராட்டியும் குகனிலும் இழிவான ஒருவன் திறத்தில் அவர் நடந்து கொண்ட தன்மையைக் கண்டு வெட்கி, ஆண்மகனாய்ப் பிறந்தவனுக்குப் பகவானுக்கிருக்குங் குணங்கள் போல * சுவாமித்வம், சௌலப்பியம், சௌஹீல்யம், வாத்ஸல்லியம் என்கிற நான்கு குணங்களும் இருந்தாற்றான் அவன் பூரண மனிதனாய் உலகைத்தைச் சகோதர பாவனையில் நடத்த முடியும் என்று திருப்தியடைந்தாள்.

 

* அரிய காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல்.

எல்லோரிடத்திலும் வித்தியாசமின்றிக் கலத்தல்,

சீலம் பாராட்டாமை.

பசுவும் கன்றும்போ லிருத்தல்,

 

ஸ்ரீராமபிரான் தாம் சிநேகிக்க நேர்ந்தவர்களிடம் சகோதரத்வம் பாராட்டினார். அப்போது அவர்களிடம் தம்மை வேறுபடுத்திக் கொள்ளாது அவர்களைத் தமது இரத்தக்கலப்பினர் போலவே பாவித்து உள்ளன் போடு மெய்ம்மை விளங்க வார்த்தையாடினார். துன்பம் நேர்ந்தபோது அவர்களுக்கு அந்த உரிமையோடு உதவுவதைச் செயலிலுங்காட்டினார். இது போலவே நாமும் நடக்க முயல்வோமாயின் நாம் பாராட்டும் சகோதரத்வமும் உண்மைச் சகோதரத்வமாகும். அது எவ்வித மனஸ்தாபத்திற்கும் இடந்தராமல் மனோற்சாகத்தை அபிவிர்த்தி செய்யும். இப்படி மனக்களிப்பிற்கு ஆதாரமான சகோதரத்வ பாவனையை நாம் கைப்பற்ற நமக்கு நல்ல ஞானத்தையும் மனோதிடத்தையும் கொடுத்தருளும்படி பகவானைப் பிரார்த்திப்போமாக. சுபம். சுபம்.

 

ம. இராஜகோபால பிள்ளை,

 கோமளேசுவரன் பேட்டை.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஜனவரி, பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment