Monday, August 31, 2020

 

சம்பாவதி

('கார்த்திகேயன்')

1

நமது பரதகண்டத்தில் வீரத்திலும், தீரத்திலும், அழகிலும், ஆண்மையிலும் சிறந்து விளங்கியவர்கள் இரஜபுத்திர வகுப்பினர்களே என்பது தேச சரித்திரங் கண்ட உண்மை. அவர்களில் ஆண்மக்களும், பெண் மக்களும் காட்டும் வீர உணர்ச்சியின் வேகத்தையும், சுதந்திர தாகத்தின் ஆழத்தையும் நம்மவர் யாருங் கண்டு திகைப்புறுவர் என்பதிற்
சிறிதும் ஐயமில்லை. அஞ்சா நெஞ்சர்களாய், அசகாய சூரர்களாய், உயிரினும் மானமே பெரிதென மதித்தவர்களாய் வாழ்ந்த அவர்களைக் கண்டு அக்பர் போன்ற மொகலாய முடிமன்னர்களும் அவர்களது கூட்டுறவைப் பெரிதும் விழைந்தார்கள் என்றால், அவர்களது மனோவன்மையை என்னென்று கூறுவது?

அக்பர் சக்கரவர்த்திக்கும், இரஜபுத்திர மன்னனாகிய ராணா பிரதாபருக்கும் பற்பல விடங்களில் போர் மூண்டது. முடிவில் ரானா தன் நாட்டை விட்டுவிட்டு, அரவல்லி மலைகளிற் சென்று அதன் சாரல்களில் வசிக்க நேர்ந்தது. அப்போது அவனுடைய மனைவி குணவதி, 11 வயது புத்திரி சம்பாவதி, 4 வயது புத்திரன் சுந்தர் சிங் முதலியவர்களும் அவனுடன் வனவாழ்க்கையில் பிரவேசித்தனர்.

ஆங்கு அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கிற் காடுகளிடையே, தழைகளாலும், கொடிகளாலும் சமைக்கப்பட்டதொரு குடிசையிலே அவர்கள் யாவரும் வசித்து வந்தனர். பல்வேறு இயற்கை வளங்களின் மத்தியிலே, பசுக் தழைகளினூடே ஊடுருவிப் பாயும் கதிரவனது கிரணங்களின் காந்தி, அக்குடிசைக்குப் புதுமையான பச்சை நிறவொளியைப் பரப்பியது. இத்தகைய இயற்கைக் காட்சி நிறைந்த குடிசைக்குச் சற்று அப்பால் சம்பாவதியும் சுந்தர் சிங்கும் வாடி வதங்கியுலர்ந்த கொடிகளென நின்றிருந்தனர். அரசபோகத்தை யெல்லாந் துறந்து நிர்மானுஷ்யமான ஒரு வனத்தின் மத்தியில் வசிப்பது என்ன இலேசான காரியமா? வனவாழ்க்கையால் அரசபுத்திரர்களான அவர்களது வதனங்களில் இயற்கையா யிருக்கவேண்டிய செந்நிறக் காந்தி மங்கிப் போய்விட்டது. அவர்களது கன்னங்களாகிய ரோஜா மலர்கள் வாடிக் கருகிப் போயின.

2

ஒருநாள் காலை நேரத்தில் சம்பாவதி ஒரு பூமேடையில் அமர்ந்து கொண்டு தனது தம்பி சுந்தர் சிங்கை மகிழ்விக்க எண்ணி அவனுக்காக ஒரு மலர் மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் சுந்தர்சிங் அண்மையிலோடிக் கொண்டிருந்த நீரோடையொன்றில் கற்களை வீசி அதனால் நீரோட்டத்தின்மீ துண்டாகும் வட்டமான அலைகளைக் கண்டு களித்து குதித்தவண்ண மிருந்தான். சில நிமிடங்கள் சென்ற பின்பு பசி வருத்தவே, தன் தமக்கையை போக்கி, ''சம்பி எனக்குப் பசிக்கிறதே" எனக்கூறி அழத் தொடங்கினான். அதுகண்ட சம்பாவதி அவனைத் தன்னருகே யனைத்து முத்தமிட்டு அவன் பசியை மறக்கும் பொருட்டு ஒரு கதை சொல்லலானாள்.

"முன்னொரு காலத்தில் ஒரு சக்கரவர்த்தி துரதிர்ஷ்டவசமாகத் தன்
ராஜ்யத்தை இழக்க நேரிட்டது. அதனால் அவர் காடுகளில் வசிக்க நேர்ந்தது. ஒரு தினம் மிக்கப் பசியாயிருந்ததால் தன்னிடமிருந்த ஒரு சிறு ரொட்டித் துண்டை எடுத்துத் தின்னப் போனார். அப்போது ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு கழுகு அதைப் பற்றிக்கொண்டு போய் விட்டது.........'

"அப்போது அந்த மன்னர் தம் ரொட்டி போய்விட்டதே என்று அழுதாரா?" என்று சிறுவன் கேட்டான்.

“இல்லை. உன்னைப்போல இந்தச் சின்ன காரியத்திற்கெல்லாம் அவர் அழமாட்டார்.'' என்று சம்பாவதி கூறியபோது சந்தர் சிங்கின் முகம் நாணத்தால் சிவந்தது. தனக்காகவே அவள் அக்கதையைக் கூறினாள் என்பதை யுணர்ந்தான்.

ஆனாலும் சுந்தர்சிங் சிறுவன் தானே! மீண்டும் பசி அவனை வருத்திய
போது, ''அக்கா! என்னால் பொறுக்க முடியவில்லையே! நான் அழாமல் என்ன பண்ணுவேன்? இல்லாவிட்டால் தின்ன ஏதேனும் கொடு" என வுரைத்து மறுபடியும் அழத் தொடங்கினான்.

அவ்வாறு அவன் வருந்தியது சம்பாவதியின் இளமை உள்ளத்தைக் குழைத்தது. உடனே அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தான் தொடுத்த மாலையை அவன் கழுத்தைச் சுற்றி அணிவித்தான். அப்படியே அவனைத் தன் கைகளில் ஏந்தியபடி தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கி நடந்தாள்.

3

குடிசையினுள் ராணாவும் ராணியும் சோகம் நிறைந்த முகத்தினர்களா யமர்ந்திருந்தனர். அப்போது பாணா ஒரு நீண்ட பெருமூச்சோடு, “ராணி! நமக்கு நேர்ந்த இன்னல்களை யெல்லாம் பார்த்தனையா? ஆகா! இந்தக் கொடிய வறுமைப்பிடியில் சாம் சிக்கிக்கொண்டதா லல்லவா நம் குடிசை தேடிவந்த அந்தச் சந்நியாசியை நாம் வெறுங்கையுடன் அனுப்ப சேர்ந்தது! சித்தூர் மன்னர்களின் பெருமை என்ன? அவர்களது கொடைத் திறம் என்ன? அவைகளையெல்லாம் இழந்து ஒரு பரதேசிக்குக்கூட என்னால் உணவளிக்க முடியவில்லை என்றால், ஆ! என் வாழ்க்கை எவ்வளவு கேவலமாய்ப்
போய்விட்டது இனி நான் இவ்வுலகில் உயிருடனிருப்பதால் என்ன பயன்? ..." எனப் பகர்ந்தவாறே நிலத்திற் சாய்ந்தான். உடனே ராணி அவனைத் தூக்கியெடுத்துத் தன் மடிமீது படுக்க வைத்துக்கொண்டு தன் புடவை முன்றானையால் விசிறினாள்.

அவள் செய்த உபசாரங்களால் ராணா விரைவில் தன் கண்களைத் திறர்தான். பிரஞ்ஞையும் வந்தது. அப்போது ராணி, ''நாதா! இவ்வாறு நீங்கள் விசனப்படுதல் சரியல்ல. உள்ளத்தெழும் துன்பங்களையெல்லாம் இவ்வாறு வாய்விட்டுக் கூறிப் பெருக்கிக்கொண்டு சலக்குதல் தங்களைப் போன்றமன்னர்களுக்கு அழகன்று. கடந்து போனவைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதால் உள்ளம் உடைந்துபோகும். ஆதலால் இவற்றையெல்லாம் விட்டுக் கடவுளிடத்தில் பூர்ணமான நம்பிக்கை கொண்டு நம்முடைய துன்பங்களெல்லாம் ஒழிய அவரைப் பிரார்த்தியுங்கள். அவரே நம்மெல்லோரையும் ஆதரிக்க வல்லவர்! அவரைத் தியானிப்பதைவிட்டு ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் உன்னியுன்னி மனதைப் புண்படுத்திக் கொள்வது தங்களுக்கு ஏற்றதல்ல" என்றாள்.

“இல்லை யில்லை. நீ தவறாக எண்ணிக்கொண்டு விட்டாய். எனக்கு அல்லது என் குடும்பத்தாருக்கு நேரிட்டுள்ள துன்பத்துக்காக நான் ஒரு சிறிதும் வருந்தவில்லை. எத்தனையோ தினங்கள் நாம் உணவின்றி யிருக்க வில்லையா? நமது குமாரர்களான அக்ஷயனும், சுவர்ணாம்பாளும் உணவில்லாது தானே உயிர் துறந்தனர்! அதற்கெல்லாம் நான் கலக்கமுற்றேனா? இது உனக்குத் தெரியாதா? இன்னும் பார்! கடந்த சில நாட்களாக ஆகாரமில்லாது தானே அயர்வுறுகிறாய். இதற்காகவும் நான் கவலைப்படவில்லையே!
இவற்றையெல்லாம் பொறுமையுடன் நான் சகித்துக் கொள்வேன். ஆனால்
என்னைத் தேடி வந்த அத்துறவி என்னிடம் ஒன்றும் பெறாமற் சென்றது என்னாற் பொறுக்கக்கூடியதா யில்லையே! என் செய்வேன்!" எனக் கூறிக் கண்ணீர் உகுத்தாள் ராணா. இச் சமயத்தில் தான் சம்பாவதி சுந்தர்சிங்குடன் அங்கு தோன்றினாள்

குணவதி: - சம்பா! என்ன விசேஷம்? ஏன் இங்கு வந்தாய்?

சம்பாவதி: - அம்மா! நமது இல்லத்தை நாடிவந்த பிச்சைக்காரன்
ஒருவன் ஏமாற்றத்தோடு செல்வது எனக்குத் துயரத்தைத் தருகிறது.

தன் கருத்துக்கேற்ப பேசிய தனது குமாரத்தியை போக்கி ராணா "சம்பா! உன்னால் அவனுக்கு உணவு அளிக்கக்கூடுமா?" என ஆவலோடு கேட்டான்.

"ஆம். அப்பா!'' என மொழிந்து குடிசையைவிட்டு வெளியே சென்
நாள்.

சிறிது நேரத்தில் சம்பாவதி இரண்டு ரொட்டித் துண்டுகளுடன் திரும்பினாள். ரொட்டிகளைக் கண்டதே ராணாவின் முகத்தில் வியப்பும், களிப்பும் தோன்றின. ''சம்பா! இவைகள் உனக்கேது?" என்றான். அதற்கு அவள், ''நேற்றிரவு எனக்குப் பசியில்லையாதலால் இவற்றை அப்படியே வைத்திருந்தேன்” என்று விடையளிக்கவே ராணா மலமலவென்று கண்ணீருகுத்தான். தன் மகளை அப்படியே ஆலிங்கனம் செய்துகொண்டு, “கண்ணே! உன்னைக் கடவுள் காப்பாராக" என ஆசீர்வதித்தான்.

ஆனால் அவள் கூறியது உண்மையில் ஒரு முழுப் பொய்யாகும். முந்திய இரவில் தன் பெற்றோர்கள் உணவின்றி வாடுகையில் தான் மட்டும் புசிப்பது தகுதியன்று எனக் கருதியே அந்த ரொட்டித் துண்டுகளை வைத்திருந்தாள்.

கொஞ்ச நேரஞ் சென்ற பிறகு அந்தப் பிச்சைக்காரன் மீண்டும் வந்தான். அதற்குள்ளாக நமது சிறுமி குடிசையின் ஒரு புறத்தைத் திருத்திச் சத்தி செய்து ஓலைகளால் முடையப்பட்ட பாய் ஒன்றை விரித்து அதில் அவரை அமரும்படி வேண்டினாள். அப்போது அவ்வாண்டி, ''குழந்தாய்! நீயார்?" என வினவறும் அவள், "நான் மகாராணாவின் புதல்வி. தங்களைப் போன்ற துறவிகளுக்குத் தொண்டு செய்பவள்'' என விடையளித்தாள். அதுகேட்ட அம்மறையவனது பார்வையில் பரிவும், வியப்பும் கலந்து தோன்றின. அவன் அவளாலளிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளை உண்ணும் போது சம்பாவதி, 'இவ்வுணவு தங்கள் உடம்புக்கு ஏற்குமோ என்னவோ! கால வித்தியாசத்தாலேற்பட்ட எங்களது எளிய வாழ்வில் தங்களுக்கு இத்தகைய உணவைக் கொடுக்க நேர்ந்தது குறித்து வருந்துகிறேன். தாங்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்" எனப் பணிவுடன் இயம்பினாள்.

அதற்கு அத்துறவி, "பரவாயில்லை. குழந்தாய்! துறவிகளாகிய நாங்கள் வனவுணவுகளில் நன்கு பழகியுள்ளோம். என் போன்றவர்களுக்கு இதைக் காட்டிலும் மதுரமான ஆகாரம் வேறு என்ன வேண்டும்? எல்லாவற்றையும் துறந்தது உண்மையானால் ஒரு மனிதன் காய் கனிகளையும், கந்த மூலாதிகளையுமே உண்டு வாழ வேண்டும். என்போன்ற துறவிகளெல்லாம் இச் சட்டத்தை யனுசரிக்க வேண்டுவது மிக அவசியமாகும். ஆதலால் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. உன்னைக் கடவுள் காப்பாற்று வாராக" என்றான்.

அவன் ஆகாரமுண்டு எழுந்து விடைபெற்றுக் கொண்டபோது நமது சம்பாவதியின் முகத்தில் களிப்பும், திருப்தியும் தாண்டவமாடின. ஆனால் அந்தோ பாபம்! அந்த ரொட்டித் துண்டுகள் இல்லாததால் இன்னுஞ் சில நிமிஷங்களில் தன் ஆவி பிரியப்போவ்தை அவள் உணர்ந்தாளில்லை.

சந்நியாசி மறைந்த பின்பு தன் பெற்றோர்களிடம் ஓடி அவரை உண்பித்து அனுப்பிய செய்தியைச் சொன்னாள். ஆனால் அடுத்த கணத்தில் மூர்ச்சித்துக் கீழே சாய்ந்தாள்; அதன்பின் அவள் எழவே யில்லை.

4

எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. காற்றும் பலமாய் வீசியபடி யிருந்தது. சம்பாவதி படுத்தபடியே மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கருகே ராணாவும், பாணியும் அவளது அந்திய காலத்தை அந்தப் பயங்கர தருணத்தை மிகவும் துக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ராணா தன் மனைவியை நோக்கி மிக மெதுவான தொனியில், ''என்ன பதில்தான் நாம் அக்பருக்குச் சொல்லி யனுப்புவது? நாம் படும் அவதிளையும் நம் குழந்தைகள் பசியால் ஆவி துறப்பதையும் கேட்டுச் சகியாது நம்முடன் சமாதானம் செய்துகொள்ள விரும்புகிறாராம். வார்த்தை யளவிலாவது நாம் ராஜ விசுவாசத்துடன் நடந்துகொள்ளுவதாகக் கூறிவிட்டால் போதுமாம். அப்படி நான் கூறிய மறுகணத்திலேயே நமது ராஜ்யத்தை நாம் முழுச் சுதந்தரத்துடன் ஆள அனுமதிப்பதாக
உறுதி கூறுகிறார்.......... என்று நவிலும் போது குடிசையின் வெளிப்புறத்தில் மனிதன் காலடி ஓசை கேட்கவே, அரசன் எழுந்தான்; "யார்?" என்று காத்து வினவினான். பதில் இல்லை.

"அது ஒருவேளை காற்றினால் அசைவுறும் செடி கொடிகளின் ஓசையாயிருக்கலாம்" என ராணி மொழிந்தாள். அது கேட்ட ராணா, “எனக்கு அப்படித் தோன்றவில்லை. அக்பரிடமிருந்து வந்த தூதரா யிருக்கலாமென் றெண்ணுகிறேன்" என்றான்.

இவ் வார்த்தைகளைக் கேட்டதே சம்பாவதி மாணாவஸ்தையால் ஏற்பட்ட நடுங்கிய குரலில், "அப்பா! உங்களுடைய வம்சத்தாரின் பெருமைகளையெல்லாம் மறந்து போய்விடாதீர்கள். இன்று அந்த அக்பரின் அன்புப் பேச்சு உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. நாளை அக்பரது மந்திரி பிரதானிகள் உங்களைச் சிறை செய்ய சூழ்ச்சி செய்வார்கள். அதற்கடுத்த நாள் அவர்களது சிறைச்சாலையில் நீங்கள் ஒரு அடிமைக் கைதியாக விருக்க நேரிடும். நம் முன்னோர்கள் இரத்தம் சிந்தி வளர்த்த சுதந்தர மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்த உங்களுக்கு விருப்பமா? சமீபத்தில் நடந்த சண்டையைக் கொண்டே ராணாவின் குழந்தைகள் திறமை யற்றவர்கள் என்று அக்பர் எண்ணி விட முடியாது. அப்பா! அக்பரிடம் ஆண்மைத் தனத்துடன். நடந்துகொள்ளுங்கள். அவருடைய வஞ்சகமான சினேக பாவத்துக்கு இடங் கொடுக்காதீர்கள் ....'' எனச் சொல்லிக்கொண்டே
வந்தவள் மூர்ச்சித்தாள்.

ராணாவின் உள்ளம் பூரித்தெழுந்தது. தன் மகளது விரிவுரையைக் கேட்டு மகிழ்ந்து, ''குழந்தாய்! சம்பா! உனது மரணப் படுக்கையில் இவ்வுறுதி செய்கிறேன். எனது உடம்பில் ஆத்மா உள்ளவரையில் என் இராஜ்யத்துக்காக நான் யுத்தம் செய்வேன். ஏதோ உங்கள் (குழந்தைகள்) பாலுள்ள வாஞ்சையால் புத்தி தடுமாறி என்னென்னவோ கூறிவிட்டேன். இனி உனது விருப்பப்படியே நடப்பேன். இது சத்தியம்" என்றான்.

"ஆம். அப்படியே ஆகட்டும்" என்று வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ராணாவும், ராணியும் குடிசையின் வாயிலை நோக்கினார். பார்ப்பனத் துறவி உள்ளே வந்தார். “ராணா நான் தான் அக்பர். உங்கள் தீரம், துன்பத்திறும் சகிப்புத் தன்மை, இவை யனைத்தையும்விட உனது வீரமகளின் தீரப்பேச்சு முதலான எல்லாம் என்னைப் பிரமிக்கச் செய்துவிட்டன.
உங்களாலும், உங்கள் வம்சத்தாராலுமே நம் இந்தியாவிற்கு ஒரு மகத்தான பெருமை ஏற்பட்டது. உங்கள் வீரத்தையும். சுதந்தர தாகத்தையும், தேச சேவையையும் மெச்சுகிறேன். இன்று முதல் நடந்து போனவற்றை யெல்லாம் மறந்துவிடுங்கள். கடவுளின் சாட்சியாகக் கூறுகிறேன். இனி தங்கள் நண்பன் நான்" என்றார்.

அக்பரும், ராணாபிரதாபரும் கண்களில் நீர் துளிப்ப ஒருவரை யொருவர் ஆலிங்கனம் செய்துகொண்டனர். அதன் பிறகு அக்பர் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார். அதே சமயம் ஒரு பலத்த காற்று வீச குடிசையினுள் எரிந்துகொண்டிருந்த விளக்கு அவிந்தது. அத்துடன், நமது வீரப் பெண்மணி சம்பாவதியின் ஆத்மாவும் மறைந்தது. ஆனால், அவளுடைய ஆத்மாவின் அருளால் வெகுகாலம் வரை மொகலாய இராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப்பின் கூட இரஜபுத்திர ராஜ்யம் மீவார் நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள விடங்களிலும் சிறப்புற்றோங்கி யிருந்தது.

[ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.]

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 



 

No comments:

Post a Comment