Monday, August 31, 2020

 

சத்தியாக்கிரகம்

 

'சத்தியாக்கிரகம்' என்பது, 'சத்தியம் ஆக்கிரகம்' எனும் இரு சொற்களால் ஆகியது. அஃது 'உண்மை கடைப்பிடித்தல் எனும் பொருள் படும். அறநெறியில் நின்று அச்சம் சிறுதளவு வின்றி அதர்மத்தைக் கண்டவிடத்தில் அதனுடன் சாத்வீகப் போர் புரிந்து நிற்பவனே 'சத்தியாக்கிரகி' எனப்படுவான். அத்தகைய சத்தியாக்கிரகியின் உள்ளத்திலே, பழிக்குப் பழிவாங்கும் நோக்கமாதல் அச்சமாதல் முனைப்பாதல் தர்பெருமையாதல் சிறிதளவம் தோன்றுதல் கூடாது அன்னோர், தமது பகைவரிடத்திலும் அன்பே பாராட்டுவர்; அன்புளங்கொண்டே பிறாது பிழைகளைக்களைய முயல்வர்; அன்புப் பொறுமை கொண்டு நடத்தலால், உயிர் துறக்க சேரினும் உவகையோடு உயிர் துறப்பர். கேவலம் உடல் வன்மையினும் உள்ள வன்மையே சாலச்சிறந்தது. உண்மைச் சத்தியாக்கிரகிகள் அறத்துக்கும் ஆண்டவனுக்குமன்றி, வேறு எதற்கும் சிறிதும் அஞ்சார்; “இன்பத்துள் இன்பம் விழையாதான் -- துன்பத்துள் - துன்பம் உறுதல் இலன்"- எனும் நாயனார் நன் மொழிக்கு ஏற்ப, டாம்பிகக் களியாட்டுகளி லாவது பிறர் தன்னைப் புகழ வேண்டுமென்னும் நோக்கிலாவது அன்னார் தமது கருத்தைச சிறிதும் செலுத்தாமல் பயன் கருதாப் பணிசெய்து வருவதால், துன்பம் வந்தஇடத்தில் மனம் துளங்கார்; துன்பங்களெல்லாம் தம்மைத் தூய்மைப்படுத்த இறைவனால் தோற்றவிக்கப்படும் சோதனைகளே யென்று அவற்றை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வர். அஹிம்சா நெறியினின்றும் சிறிதும் வழுவாமல் எத்தகைய துன்பங்களுக்கும் சிறிதும் அஞ்சாமல் உட்பட்டு, பிறர் இழைக்கும் கொடுமைகளைப் பொறுமையோடு சகித்து நடத்தலால் பிறரைத் திருத்த முயல்வதே சத்தியாக்கிரகமாகும். ஆன்ம சக்தியைப் பெருக்கக்கூடிய அரிய தியாகத்தை மேற்கொண்டோரே சத்தியாக்கிரகிகளாவர். தியாக உணர்ச்சியும் பொறுமையும் அஹிம்சா நெறியும் இடுக்கண் அழியாமையும் மெய்யன்பும் ஒருங்கு சேர்ந்த ஒன்றே, 'சத்தியாக்கிரகம்' எனப்படும்.

 

இற்றைக்கு இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே இத்தமிழ் நாட்டில் எழுந்த பின்வரும் சத்தியாக்கிரகப் பொன் மொழிகள் ஈண்டு குறிப்பிடத்தக்கன: -


“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"


“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்துஊர்வ(து) அஃது ஒப்பது இல்"

 

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்''.

 

தன்னைத் துன்புறுத்தியவர்களுக்குத் தானும் துன்பிழைக்க முயல்வதால் வன்மமே வளர்ந்து பெருகுமேயன்றி அமைதி ஏற்படாது. அதனால் இருவருள் ஒருவரும் நலம் பெறார். துன்புறுத்தப்பட்டவன் அன்புளங் கொண்டு பிறனிழைத்த தவறுகளைப் பொறுத்து அஞ்சாதிருப்பனேல், அவனைத் துன்புறுத்தியவனது மனம் இளகத் தொடங்குகிறது; தனது பிழையை அவன் உணர்கிறான்; தனது செயலுக்காகப் பெரிதும் வருந்துகிறான்;
வெற்றி பெற்றவன் துன்புறுத்தப் பட்டவனேயன்றி துன்புறுத்தியவ என்று. அன்புளங்கொண்டு பொறுத்திருந்த அச்சீரியோன் தனது பகைவனைத் திருத்தியதோடு, தன்னையும் சத்தியாக்கிரகத்திற்குத் தகுதி உடையனாகச் செய்து கொள்வன். ஆனால், துன்புறுத்தப்பட்டவன் பதிலுக்குப் பதில் செய்யப் போதிய ஆற்றலின்மையாலோ அச்சத்தினாலோ பொறுமையும் அன்பு வில்லாமலோ துன்பத்தை ஏற்றுக்கொள்வானாயின், அவன் உண்மைச் சத்தியாக்கிரகியாக ஆகமாட்டான்; அத்தகையவன் ஒரு கோழையே ஆவன். மற்றும், பிறரைச் சீர்திருத்தவோ பிறருக்குப் புத்தி கற்பிக்கவோ முன்வரும் ஒருவன், முதலில் தன்னைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். தன்னிடமுள்ள குற்றங் குறைகளைக் களைய முயலாத ஒருவன், பிறரைக் குறை கூறவோ பிறரைச் சீர்திருத்தவோ ஒரு சிறிதும் தகுதி உடையவ னல்லன். பேதைகள் உண்மை அறிவின்மையினாலேயே பிறரைத் துன்புறுத்துகின்றன ரென்று கொண்டு, அவர்களது பாவச்செயல்களுக்காகத் தாம் பெரிதும் இறங்கி ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்கும் சீரியோரே சத்தியாக்கிரக வீரராவர். துராக்கிரகத்தைத் தொலைக்க முயல்வதில் முனைந்து நிற்கும் உத்தம சாத்தியாக்கிரகி, எத்தகைய சோதனைகளுக்கும் சித்த உறுதி சிறிதும் குன்றான்; மற்றவர்களுக்குக் கேடுசூழும் எண்ணம், அவன் மனத்தில் கனவிலும் தோன்
றாது.

 

இற்றைக்குச் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இயேசுநாதவின் பின்வரும் பொன்மொழிகள், ஈண்டு நன்கு சிந்தித்து உணரத்தக்கன: -

 

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய். தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உனது மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. உங்களது சத்துருக்களைச் சினேகியுங்கள்; உங்களைப் பகைக்கின்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இப்படிச் செய்வதனால், நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு உகந்த புதல்வர்களாயிருப்பீர்.

 

பண்டைய சத்தியாக்கிரகிகள்.

 

தமது பாரத மணித்திருநாடு, மிகப் பழைய காலந்தொட்டே சத்தியாக்ரோகிகள் பலரைக்கண்ட திருநாடு. ஆண்டவன் ஒருவன் உளன்' – எனும் உண்மையை மறுத்து, தன்னையே ஆண்டவனாகப் போற்றுமாறு பிறரை ஆணவ மேலீட்டால் வலியுறுத்திய இரணியனது மிருக சக்தியும் கொடுஞ் செயல்களும், 'அணையிலான் றனைத் துணையென உடையவனாகிய பிரகலாதனது ஆன்மசக்தியின் முன்பு - அன்புப் பொறுமையின் முன்பு - சத்தியாக்கிரகத்தின் முன்பு என்னாயின? இறுதியில் வெற்றி பெற்றவன் இரணியனா? பிரகலாதனா! அன்பர்களே! சிந்தியுங்கள். துராக்கிரகததைக் கடைப்பிடித்தோர் தாயாயினும் தந்தையாயினும் ஆசிரியராயினும் வேறு யாராயினும், சத்தியாக்கிரகிகள் அவர்களது துராக்கிரகத்தைத் தொலைக்க முயலாமல் வாளா கிடக்க மனம் இசையார். தந்தையாயிற்றே யென்று பின்னடைந்து இரணியனது மிருக சக்திக்கு அஞ்சி அடங்கி ஒடுங்கி நடந்திருப்பனேல், பிரகலாதனை இன்று இவ்வுலகம் போற்றுமா? தாயாயிற்றேயென்று கைகேசயின் சூழ்வினைக்கிணங்கி நடந்திருப்பனேல், பரதனை இன்று இப்புவனம் புகழுமா? ஆசிரியராயிற்றே யென்று பரசுராமரின் கருத்துக்கு இணங்க தனது தூய்மை மிகுந்த பிரமசரிய விரதத்தைக் குலைத்துக் கொண்டிருந்தால், பீஷ்மரை இன்று இப்பிரபஞ்சம் மதிக்குமா? துராக்கிரகிகள் யாவராயினும் அவாகளைத் திருத்த முயல்வதே சத்தியாக்கிரகிகளின் கடனாகும்.

 

துராக்கிரகிகள் எத்தகைய மிருகசக்தி மிகுந்தோராயினும், உத்தம சத்தியாக்கிரகிகள் அத்துராக்கிரகிகளின் மூர்க்க சக்திக்குச் சிறிதளவும் அஞ்சார். என்றும் - எந்நிலையிலும் - உத்தம சத்தியாக்கிரகிகளை 'அச்சம்' என்னும் பேய் நெருங்கத் துணியாது விலகிச் சென்றுவிடும். சமண முனிவர்களின் சூழ்வினைகளுக்கு எளியவனாகிய அரசனது அமைச்சர்கள், சிவம் என்னும் சீரிய செம்பொருளைச் செவ்விதில் உணர்ந்த திருநாவுக்கரசரை அழைத்தபோது, அடிகளார் யாது கூறினார்? “'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம் - ஏமாப்போம் பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும்- துன்பம் இல்லை!"- என்றன்றோ அடிகளார் வீரமுழக்கம் செய்து நின்றார்! அடிகளார் அவ்வளவோடு நின்றாரா? கல்லோடு பிணைத்துக் கருங்கடலில் தள்ளிய போதும், அடிகளார் தமது மன உறுதியி னின்றும் சிறிதேனும் பிறழ்ந்தாரோ? "கற்அணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் - நற்றுணை ஆவது நமச்சிவாயவே" - என்றன்றோ அவர் மனந்தேறி யிருந்தார்! சத்தியாக்கிரகிகளுக்குச் 'சத்'எனும் செம்பொருளாகிய இறைவன் துணை இருக்கும்போது, மூர்க்க சக்தி உடையோரின் முனைப்பு அவர்களை என்ன செய்யும்? நெருப்பில் சுடச்சுட தங்கத்தின் மாற்று உயர்வது போல, துன்பங்களை நுகர நுகர சத்தியாக்கிரகிகளின் மனவலிமையும் பெரிதும் சிறந்து விளங்குகிறது.

 

திருவாசகம் என்னும் தேனைத் தமிழகத்திற்கு அளித்த மணிவாசகப்பெருந்தகையாரும், தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களைக்கண்டு பரிகசித்து யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்; யாமார்க்கும் குடியல் லோம் யாதும் அஞ்சோம்”- என் கொண்டு நின்றன்றோ வேந்தனது மூர்க்க சக்தியை வென்றார்!

 

நமது தமிழ்நாட்டில் மட்டுமன்றி, பிறநாடுகளிலும் சத்தியாக்கிரகிகள் தோன்றி இருக்கின் றனர். அறிவிலாக் கயவர்கள் தம்மைச் சிலுவையில் அறைந்த போதும், அவர்களிடம் சிறிதளவும் சினம் கொள்ளாமல் இரக்கமே மிகுந்து அவர்களை மன்னித்தருளுமாறு ஆண்டவனை வேண்டி நின்ற இயேசு நாதரும்; செருக்கு மிகுதியினால் இறுமாந்து கிடப்பது அஞ்ஞானமென்று அறிவுறுத்தியதன் பயனாக மரண தண்டனை விதிக்கப்பெற்று நஞ்சை அருந்தி உயிர் துறந்த ஸாக்ரட்டீஸும் சத்தியாக்கிரக நெறிக்குச் சிறந்த இலக்கிய புருஷர்களாவர். புத்தர் பெருமானின் வாழ்க்கை முழுவதும் சாத்தியாக்கிரக மணமே கமழ்வதை விரித்துரைக்க வேண்டுவதில்லை.


சத்தியாக்கிரகம் வேறு; சாத்வீக எதிர்ப்பு வேறு.

 

சத்தியாக்கிரகத்திற்கும் சாத்வீக எதிர்ப்புக்கும் மிக்க வேற்றுமை உண்டு. சாத்வீக எதிர்ப்பு பல மற்றவர்களுடைய ஆயுதம்; அதன்படி ஒருவன் தனது லட்சியத்தை அடைய, அவசியமானால் பலாத்காரத்தை உபயோகிக்கலாம். ஆனால், சத்தியாக்கிரகம் பலவானிலும் பலவானுடைய ஆயுதம்; அதன் படி ஒருவன் என்றும் எவ்வித பலாத்காரத்தையும் உபயோகிக்கக் கூடாது. "எதிரியின்மீதி பலாத்காரத்தை உபயோகித்தல் என்பது 'சத்தியத்தை நாடுதல்' என்பதில் அடங்காது என்றும், பொறுமையினாலும் அநுதாபத்தினாலுமே எதிரியை அவனுடைய பிழையினின்றும் விலக்க வேண்டுமென்றும் அறிக்தேன். ஆகவே, எதிரிக்குத் துன்பம் செய்வதன் மூலமாக வல்லாமல், தனக்கே துன்பத்தை விளைவித்துக் கொள்வதன் மூலமாய் சத்தியத்தை நிலை நாட்டுதல் என்பதே சத்தியாக்கிரகத்தின் பொருளாகும்”- என்பன இந்நாளில் நமது பாரத பூமியில் ஒப்புயர்வற்ற சீரிய சத்தியாக்கிரக வீரராக விளங்கி வரும் மகாத்மாகாந்தி யடிகளின் மணிமொழிகள். 'சாக வீக எதிர்ப்பு' எனும் சொல் குறுகிய பொருளைத் தருவது; சத்தியாக்கிரகம்' எனும் சொல்லோ மிக்க உந்நதமான சீரிய பொருளைத் தருவது.

 

ஆண்டவன் சத்திய சொரூப (உண்மை வடிவினனாக விளங்குகிறான். ஆகவே, சத்தியத்தின் சக்தி, மற்றெல்லாவற்றினும் மிக மிகச் சிறந்ததாகும். வாழ்க்கையில் வாய்மையை உறுதியாகக் கடைப்பிடித்து வாழ்வோரே மக்களாவார்; அல்லாதார் எல்லாரும் மாக்களே யாவர். சாந்தமா முனிவராம காந்தியடிகளார், சத்தியாக்கிரகத்தின் இயல்பை விளக்க வந்தவிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்: -

 

"சத்தியாக்கிரகம், நாற்புறத்திலும் கூர்மையுடையதொருகும். அதை எவ்விதத்திலும் உபயோகிக்கலாம். அது உபயோகிப்பவனையும் எதிரியையும் ஏககாலத்தில் ஆசீர்வதிக்கும்; அது இருதிறத்தார்க்கும் நற்பயன் விளைவிக்கும்; ஒரு துளி இரத்தக்கூட சிர்தாமல் கணக்கிலடங்காத நன்மையைத் தரும்; அது என்றும் துருப் பிடிப்பதுமில்லை; அதை திருடவும் முடியாது. இத்தகைய ஆயுசத்தைப் பலஹீனர்களுடைய ஆயுதமென்று கூறுதல் நகைப்பிற் கிடமானதே."

 

ஆங்காங்கு தோன்றும் துராக்கிரகங்களுக்குத் தகுந்தவாறு, சத்தியாக்கிரகமும் 'பிறருடைய பாவங்களுக்குத் தான் கழுவாய் தேடுதல்' 'உயிர் அந்ததல்' 'உதவி மறுத்தல்' 'உண்ணாவிரதம்' 'சட்ட மறுப்பு' முதலிய பலதிறப்பட்ட வழிகளில் தோன்றும். எம்முறை பற்றி 'சத்தியாக்கிரகம்' மேற்கொள்ளப்படினும், பொறாமையாதல் துன்பம் கண்டு அஞ்சுதலால் சினமாதல் சத்தியாக்கிரகிகளின் மனத்தில் சிறிதும் தோன்றக் கூடா தென்பதே ஈண்டு வலியுறுத்தற்பாலது.

 

'குறைவிலா நிறைவுடையவன் இறைவன் ஒருவனே' ஆதலின், மனித உடல் தாங்கிய எவரும் சிற்சில சமயங்களில் தவறு இழைத்து விடுதல் இயல்பே. 'சத்தியாக்கிரகம்' மேற்கொண்ட சான்றோர், தம்மையும் அறியாமல் எப்பிழையேனும் இழைத்துவிடுவரேல், “தினைத துணையாம் குற்றம் வரினும் - பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”- என்ற நாயனாரின் அருள்மொழிக் கிணங்க, தாம் இழைத்த பிழையை உன்னி உன்னி உள்ளம் உருகி அழுது உண்ணா விரதமிருந்து ஆண்டவனை நோக்கி மன்னிட்பு வேண்டிப் பிரார்த்தித்து தமது தவறுக்குக் கழுவாய் தேடிக்கொள்வர். தமது பிழைகளைச் சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தை நைந்து நிற்போர், மீண்டும் பிழைகளுக்கு ஆளாவதரிது. ''யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய் - ஆனால், வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே" – என்றார் மணிவாசகனார். தமது பிழைகளைக் குறித்து நெஞ்சு உருகி நின்று இறை னை நோக்கி முறையிடக் கூடிய சீரிய சத்தியாக்கிரகிகள், தற்காலத் தமிழ் காட்டில் எத்துணைபேர் உளர்? தமது பிழைகளைத் தாமே உணர்ந்து தம்மைத் தாமே திருத்திக்கொள்ள முயலாமல் பிறருக்கு உபதேசிக்கவரும ‘தலை வர்கள்' பெருகிவரும் இக்காலத்திலே, இப்பாரத பூமியிலே சத்தியாக்கிரக நெறிக்கே ஒரு பெரும் இலக்கிய புருஷராக மகாத்மா காந்தி யடிகள் வாழ்ந்து வருவது, நம்மவர் செய்த பெருந்தவப் பயனேயாம்.

 

இந்தியரே யன்றி ஏனைய நாட்டினரும் பெரிதும் புகழ்ந்து போற்றிவரும் சாந்த உருவினராகிய காந்தியடிகளது வாழ்வில், இளைமை தொட்டே சத்தியாக்கிரகம் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. நமது அடிகள் தமது இளைமையில் அன்னையிடம் பொய் கூற அஞ்சி தீச்சார்பால் மேற்கொண்டிருந்த புலாலுண்ணலை ஒழித்தார்; இங்கிலாந்திலிருந்த காலத்திலும், தமது அன்னைக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நண்பர்களின் சினத்திற்கும் அஞ்சாமல் மாமிச உணவு வைக்கப்பட்டிருந்தவிருந்தை விட்டு எழுந்து சரேலென வெளியேறிச் சென்றார். தென்னாப் பிரிக்காவில், தன்னை நையப்புடைத்த கயவனையும் அன்புளங் கொண்டு மன்னித்து விட்டார். இன்னும் பற்பல சம்பவங்களும் நிகழ்ந்தன. காந்தியடிக்ளது வாழ்வு, 'உண்மையோ டியைந்த வாழ்வு' ஆகும்; 'சத்திய சோதனைகள் நிரம்பியனவாகும். அவ்வப்போது நேர்ந்த சோதனைகளுக்கு அடிகள் எளியராகி யிருப்பரேல், இன்று இவ்வுலகம் முழுவதும் அடிகளாரைச் 'சத்தியாக்கிரக வீரராகக் கொண்டு போற்றுமோ?

 

சத்தியாக்கிரகத் திலகங்களான சாவித்திரி - கண்ணகி- திரௌபதி முதலிய பதிவிரதைகளின் வழித்தோன்றிய பாரதநாட்டு வீரத்தாய்மார்களே! தீமையை எதிர்த்துப் போராடிய பிரகலாதன் - நமனோடு சமராடிய மார்க்கண்டேயர்- முதலிய இளவீரர்களின் வழிவந்த செந்தமிழ்நாட்டு வாலிப சிங்கங்களே! மிருகசக்தியைப் புறங்கண்ட அப்பர் வழிவர்த-பகைவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனார் வழித்தோன்றிய வீரத்தமிழர்களே! எழுமின்! விழிமின்!! 'சத்தியாக்கிரக நெறி' ஒன்றே நமக்கு விடுதலை அளிக்கக்கூடியது என்பதை நன்கு உணர்மின்! அறநெறி நின்று, உண்மையையும் அஞ்சாமையையும் ஒண் பேராயுதங்களாகக் கொண்டு சாத்வீகப் போர்புரிய முன் வாருங்கள்! பாரதத்தாய் உங்களுக்குத் திருவருள் பொழிவாளாக. வந்தே மாதரம்!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment