Sunday, August 30, 2020

 

கார்த்திகை தீபம்

 

முன் ஒருகாலத்தில் கைலாசபதியினுடைய சமுகத்தில் நெய் விளக்கொன்று மங்கி எரிந்தது. அச்சமயத்தில் ஒரு எலி அந்தத் தீபம் பிரகாசிக்கும்படி தூண்டிற்று. அதைக்கண்ட கைலாசபதி மனமுவந்து அந்த எலிக்குத் தானவதேகமும், திரண்டபாக்கியமும் அநுக்கிரகித்து, அதனை மாபலிச் சக்கிரவர்த்தியாய்ப் பூலோகத்தில் பிறக்க வரமருளினர்.

 

இவ்விதம் மாறுதேகங்கொண்ட சக்கிரவர்த்தி ஒருநாள் சிவதரிசனம் செய்யப் போனார். ஆங்கு ஆலய பிரதட்சணம் வருகையில் அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கின் ஒரு திவலை அவர்மீது படவும், தேகாதி யந்தம் கொடிய ரணமாயிற்று. இதனால் மாபலி மிகுந்த கஷ்டமனுபவித்துப் பரமனைத் துதி செய்து வந்தார். ஒருநாள் பரமேஸ்வரர் சக்கிரவர்த்திமேல் மனமிரங்கி " நீ இன்று முதல் நூறு பாரம் நெய் இட்டுச் சிவாலயங்களுக்குத் தீபம் ஏற்றுவையாகில் இரணம் மாறி ஸ்வஸ்தம் பெறுவது மல்லாமல் சாம்ராஜ்யமும் எய்துவாய் " என்று அச ரீரி வசனம் மொழிந்தருளினர். இது செவியுற்ற மாபலி பிரம்மானந்தங் கொண்டு, ஈஸ்வர ஆக்ஞைப்பிரகாரம் நெய்த்தீபமேற்றி வருகையில், பரமேஸ் வரர் கார்த்திகை பூர்வபக்ஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அகண்ட பரி பூரண திவ்ய தேஜோமய சின்மயானந்தராய் சக்கரவர்த்திக்குத் தரிசனந் தந்து சாயுஜ்ய பதவியளித்தனர்.
 

அப்பொழுது ஆலயத்திற்கு ஈஸ்வரரைத் தெரிசிக்க வந்திருந்த தேவரெல்லாம் பரமேஸ்வரரது ஜோதிப் பிரபையைக்கண்டு பயந்து, துதிபுரிந்து, பொரி, அவல் நிவேதனம் செய்தார்கள். இதற் கறிகுறியாக கார்த்திகை பூர்வபக்ஷம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் மனிதர் தீபம் வைக்கவும், சுட்கப்பனை கட்டவும் (சொக்கப்பானை) ஆகமங்களில் விதி சொல்லப்பட்டிருக்கிறது. மலையைச் சார்ந்த ஸ்தலங்களில் நக்ஷத்திரம் முக்கியமாகவும், சமுத்திரஞ் சேர்ந்த ஸ்தலங்களில் பவுர்ணமி பிரதானமாகவும் தீபம் வைப்பது ஆகமத் துணிபு.
 

இவ்வருஷம் கார்த்திகை (19 - 11 - 1926) வெள்ளிக்கிழமை அண்ணா மலையார் தீபம், அனுஷாகார்த்திகை வருகிறது.


 ச. விஸ்வநாதன், திருவானைக்கா.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - நவம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment