Monday, August 31, 2020

 

கைத்தொழிலின் கெளரவம்

 

கைத்தொழிலின் கௌவம் கணக்கிட முடியாது. அது தெரிந்த ஒருவன் தன்னைச் சுதந்தரமாகக் காத்துக்கொள்ளும் வழி தெரிந்தவனாவான். அனாவசியமாகப் பிறர் தயவை எதிர்பாரான். அதுபோலொருவனுக்குச் சுதந்தர மளிக்கவல்லது வேறெது? தேசமுன்னேற்றத்திற்கும் அதுவே முதன்மையாகு மென்றால் அதன் பெருமையை நாம் அளவு படுத்தக் கூடுமோ? நமது பாரத நாடு,'' புகழுடன் தோன்றியதொன்று; லௌகிக வைதிக விஷயங்களில் மக்களை உயர்த்தக்கூடிய ஐசுவரியங்கள் இயல்பாகவே அமையப்பெற்றது; பிற நாடுகளையும் தாங்கவல்லது; அதுவே புண்ணிய பூமி'' என்றிவைபோன்ற வசனங்களால் அன்னியராலுங் கொண்டாடப்பெற்று வருவதற்கு அடிப்படை, நம் முன்னோர்கள் கையாண்டு வந்த கைத்தொழிலே யல்லவா? அவர்கள் சுதந்தர ஜீவியத்தை விரும்பியபடியால் கைத்தொழிலைப் பெரிதும் ஆதரித்து வந்தார்கள்.

 

கைத்தொழிலை மனதார விரும்பிக் கற்றால், அது கற்றவனுக்கு உற்சாகத்தையும், தேகாரோக்கியத்தையும், நல்லொழுக்கத்தையும், தன்னைப் போல் பிறரையெண்ணிச் சமயா சமயங்களில் உதவி புரியுந் தீரத்துவத்தையும், தெய்வ விசுவாசத்தையும், மற்றுமிவை போன்ற உயர்தரக் குணங்களையும் கொடுத்து, இவற்றின் அபிவிர்த்தியிலேயே அவன் மனது மேலுமேலும் நாடத்தக்க ஊக்கத்தில் அவனை நிலைபெறச் செய்யும் என்பதில் ஐயப்பாடுமுண்டோ? இல்லை, இல்லை, முக்காலுமில்லை. இதற்கு நம் முன்னோர்களே சாக்ஷி.
 

நமது முன்னோர்கள் ஒருமித்து அன்பு, ஒற்றமை, ஒத்தாசை, பொதுநலவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கையாண்டு வந்தபோதிலும், உலகம் செவ்வனே நடைபெற வேண்டிய தொழில் முறைமையை உத்தேசித்து, தம்மை நாற்பெரும் பிரிவினராய் வகுத்துக்கொண்டு ஓதல், ஓதுவித்தல், வேட்டல் (ஓமஞ் செய்தல்), வேட்பித்தல் (ஓமஞ் செய்வித்தல்), ஈதல், ஏற்றல், உல கோம்பல், படை பயிற்றல், போர் புரிதல், பொருளீட்டல், பசுக் காத்தல், ஏருழல், குயிலுவத்தொழில் செய்தல் (அதாவது தோற் கருவிகளைக் கொட்டல், துளைக்கருவிகளை யூதல்), காருகவினைக ளாக்கல் (அதாவது பட்டு நூலையும் பருத்தி நூலையுங் கொண்டு ஆடையாக்கல்) முதலிய தொழில்களைச் செய்துவந்தனர். நாமும் அவர்களைப் பெரும்பான்மையும் பின்பற்றியே நிற்கிறோம்.

 

"கைத்தொழில் தெரிந்தவன் பிழைக்க வழி தெரிந்தவனாவான் என்பது உண்மையே. ஆயினும் சிற்சில சமயங்களில் அதுவும் பயனளிக்காமற் போகிறதில்லையா? உழவுத் தொழிலில் பத்து ஏர் வைத்துக்கொண்டு பயிரிட்டு வந்த ஒருவன், ஒருகாலத்தில் நஷ்டமடைந்து, சர்க்காருக்கு கிஸ்திகட்ட வழியின்றி ஒற்றைக் கோவணத்துடன் ஊரைவிட்டு ஓடிப்போனதாகவும், வழியில் எதிர்ப்பட்ட ஒரு சர்க்கார் மனுஷனுக்குப் பயந்து, அருகிலிருந்த ஒரு சமணக் கோயிலுக்குட் புகுந்து பதுங்கிக் கொண்டதாகவும், அப்போது அங்கே யிருந்த சமண விக்கிரகத்தை அவன் உற்றுப் பார்த்து, அது நிர்வாணமாயிருப்பதற்கு மனந் தாளாதவனாய் அதையுடனே கட்டிக்கொண்டு ''என் அப்பனே! நானோ பத்து ஏர் வைத்து உழுது ஒற்றைக் கோவணத்துடன் வெளிப்பட்டேன்; நீ எத்தனை ஏர் வைத்து உழுது அந்தக் கோவணமும் இல்லாமல் இக்கதியானாய்'' என்று அழுததாகவும் சொல்லுகிறார்களே'' என்று சிலர் கேட்கலாம். அது ஏகதேசம்.'' ஆனைக்கும் அடி சறுக்கும்'அல்லவா? உழவு செய்பவர்,


 "ஏரும் இரண்டுளவாய் இல்லத்தே வித்துள தாய்
 நீரருகே சேர்ந்த நிலமுள தாய் - ஊரருகே
 சென்று வர எளிதாய்ச் செய்வாரும் சொல்கேட்பின்
 என்றும் உழவே யினிது''


என்று கூறுவது வழக்கம். ஆயினும் அதற்கு மிஞ்சிய சுதந்தரத் தொழில் எதுவுங் கிடையாது. பயிரிடுபவரெல்லாம் பயன் பெறாமலா போகிறார்கள்.'' மேழிச் செல்வம் கோழை படாது'' அதாவது கலப்பையைப் பிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகிற செல்வம் ஒருபோதும் குறைவையடையாது என்றும் " சீரை (சௌக்கியத்தைத்) தேடின் ஏரைத்தேடு'' என்றும் இன்னும் பலவாகவுமன்றோ இதன் சிறப்பைப்பற்றிப் பெரியோர்கள்
 கூறியிருக்கின்றனர்.


 "தெய்வத்தா னாகா தெனினு முயற்சி தன்
 மெய்வருந்தக் கூலி தரும்''


என்கிறபடி எத்தொழிலிலும் பாடுபட்டால் சுகம் உண்டு. நிற்க,

 

கைத்தொழில் வல்லவன் மேற்சொன்ன சுகுணங்களை யெல் லாம் பெற்றுச் சுகஜீவியாய்த் தீர்க்காயுளுடன் வாழக்கூடுமானா லும் அத்துடன் என்றும் நிலைக்கத்தக்க பெரும் புகழ் தந்து அவனை வாழ்விக்கக்கூடியது மற்றொன்றிருக்கிறது, அதுவும் அவனைச் சேருமானால் பொன்னாற் செய்த மலரானது மணத்தையும் பெற்று விட்டால் எத்தகைய பிரக்யாதி அடையக்கூடுமோ அத்தகைய பிரக்யாதியை அவன் அடையக்கூடும். ஆதலால் அவன் அதையுங் கற்கப் பிரயாசைப்படவேண்டும். அது எது? கல்வியே யன்றிப் பிறிதொன்றன்று.
 

கைத்தொழிலென்பது, தக்கவயதடைந்த ஒருவன் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் ஆதரிக்கப் போதுமான வருமானத்தைச் சம்பாதிப்பதற்குத் தேடிக்கொள்ளும் ஆதாரமாம். உலகத்தில் மண், கல், மரம், இரும்பு, ஈயம், பித்தளை, துத்தநாகம், அலுமீனியம், வெள்ளி, பொன் முதலிய அனேக பொருள்களிருக்கின்றன. இவற்றிலேதாவதொன்றையோ பலவற்றையோ கொண்டு, கல்வியறிவையும் உபயோகித்து நாட்டுக்குப் பயன்படத்தக்கவும், நாட்டார் அதிசயிக்கத்தக்கவுமான சாமான்களாக உருவாக்கினால் அவை நல்லலாபத்தையுங் கீர்த்தியுங் கொடுக்கும். இவையேயன்றி விளைபொருள்களை விளைவித்துப் பக்குவப்படுத்தினால் அவைகளும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கால்நடைகளைப் பரிபாலித்து வருவதாலும் விசேஷ பயனிருக்கின்றது. இவை போன்ற சுதந்தரத் தொழில்கள் எவ்வளவோ வுண்டு.

 

தொழில் சம்பந்தமான கலாசாலைகளும் நமது நாட்டில் ஆங்காங்கே பரவத் தொடங்குகின்றன. நம்முடைய மக்களை அக்கலாசாலைகளுக்கு அனுப்பி, சில பல தொழில்களிற் தேர்ச்சியடைய வைத்தால் அப்பிள்ளைகளால் நமது நாட்டுக்கு அனுகூலமுண்டாகும். சேவகத் தொழிலொன்றையே பெரிதாக எண்ணி அதற்குரிய வித்தையை மாத்திரம் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது அவ்வளவு இலாபகரமானதாகத் தோற்றவில்லை.
 

கைத்தொழிலால் வருங் கௌரவமே சிறந்ததாதலால் நம்மவர் இதைப் பெரிதுங் கவனித்துப் பிள்ளைகளை இவ்வழியிற் பழக வைப்பார்களாக. எல்லாம் வல்ல இறைவன் இது விஷயத்தில் அருள் புரிவானாக.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment