Monday, August 31, 2020

 

சமூக விடுதலை

 

நமது பாரதநாட்டைப் புண்ணியபூமி, போகபூமி என்று நம்மனோர் வருணித்தல் வழக்கமாயிருந்து வருகிறது. ஆனால்மிஸ். மேயோ போன்ற அந்நியர் இந்தியாவைப் போல் கீழ்மையான விபரீததேசம் தற்கால உலகில் வேறொன்றில்லை என முடிவுகட்டி விட்டனர். போற்றுதல் தூற்று தலான இவ்விரண்டு தன்மைகளுக்கும் காரணங்களில்லாமலில்லை. பல நூற்றாண்டுகட்கு முன்னர், இந்நாடு, நாகரிகத்திற் சிறந்து செழிப்புற்று விளங்கினமைக்குச் சரித்திர ஆதாரங்களும் சாஸ்திர ஆதாரங்களும் சான்று கூறுகின்றன. தத்துவங்கட்குத் தாயகம் என்று உலகம் புகழ்கின்றது. போக்குவரவு சாதனங்கள் மோசமாயிருந்த நெடுநாட்களுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருந்த ஐரோப்பியர் மனங்களையும் நமது நாட்டுச் செழுமை கவர்ந்து நின்ற தென்றால் பழம் பெருமையைப் பற்றி நாம் விரித்துரைக்க வேண்டுவது மிகையாகும். தற்கால இந்தியா உண்டிக்கும் உடைக்கும் பிறர் உதவியை நாடி நிற்கின்றது. ஒருகாலத்தில் உலகத்துக்கே உண்டியும் உடையும் அறிவும் அளித்த நம் நாட்டு மக்கள் இக்காலத்தில் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கானவர் அந்நிய நாடுகளுக்குச் சென்று அடிமைகளாகி அல்லற்படுகின்றனர். காரணம் அந்நியர் ஆதிக்கமும் மூடப்பழக்க வழக்கங்களுமே என்பது வெளிப்படையானதாகும். பொதுநல நோக்கங் கொண்ட அறிஞர் பலர் அரசியல் முன்னேற்றம் சமூக முன்னேற்றங் கருதி உழைத்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்களுடைய முயற்சிகள் நகரங்களோடு நிற்பனவே யொழிய கிராமாந்தரங்கட்கு எட்டுவதில்லை. அநேகமாய்ச் சில தலைவர்களைப் போட்டா போட்டியும், அபிப்பிராய பேதமும் சுயநலமுங் குறுக்கிட்டுக் கெடுத்துவிடுகின்றன. அரசியல் பிரசாரம் வீறுகொண்டு நிற்பது போல் நமது நாட்டில் சமூக சீர்திருத்தப் பிரசாரம் இல்லை என்றே சொல்லலாம், பெரும்பான்மையான மக்கள் கல்வி யறிவின்றி விலங்குகட்கு நிகராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைச் சம்பிரதாய மாத்திரமாயுள்ள பொருளற்ற ஒழுக்க வழக்கங்கள் இறுகப் பிணித்து நிற்கின்றன. அரசியல்வாதிகள், எல்லாம் சுயராஜ்யம் வந்தால் சரியாய்ப் போய்விடுமென்கிறார்கள். முன்னர் வேண்டுவது சுயராஜ்யமா? சமூக சீர்த்திருத்தமா? என்பது வியவகாரத்துக்குரிய விஷயம். இதுபற்றி ஈண்டுவாதித்தல் மற்றொன்று விரித்தலாகும். அரசியல் நிலைமை சமூகநிலைமையின் பிரதிபிம்பம் என்பது ஒரு பேரறிஞரின் துணிபு.

 

தக்க கல்வியறிவின்றி எந்நாடும் முன்னேற முடியாது. மேனாடுகளும், கீழ்த்திசை ஜப்பானும் பல திறக் கலைப்பெருக்கம் ஓங்கி நிற்றலினாலேயே தலைசிறந்து விளங்குகின்றன. பழைய நமதுநாட்டுக் கலைகள் இருந்தவிடம் தெரியாமல் மறைந்தன. ஆங்கிலக் கல்வி நாட்டில் ஒருவித விழிப்பை உண்டாக்கிற் றென்றாலும் அடிமை வாழ்வாகிய உத்தியோகங்களுக்கே உரியதாகி வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டு பண்ணும் தோரணையிலமைந் திருக்கிறது. விவசாயம், தொழில், வியாபாரம் முதலிய துறைகளுக்குரிய கல்வி எளிதில் சித்திக்கும் படி செய்யத் தலைவர்கள் விசேஷ சிரத்தை காட்டவேண்டும்.
 

 

வடநாட்டில் ஹிந்து - முஸ்லிம் போராட்டம் இருப்பது போல் தென்னாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சண்டைவலுத்து நிற்கிறது. தாழ்த்தப் பட்டோர் நிலைமையும் பெண்கள் நிலைமையும் நாட்டின் ஈனத்தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு சிலர் சாஸ்திர சம்மதங்களிருப்பதாகக் காட்டி ஊறு செய்து வருகின்றனர். சாதி சமயப் பேரால் இந்நாட்டில் உயர்வு தாழ்வு உணர்ச்சி தடிப்பேறி நிற்கிறது. பண்டைய உண்மை நூல்களை ஊன்றி நோக்குவார் இத்தகைய மனப்பான்மைக்குச் சிறிதும் ஆதாரமில்லை என்பதை நன்கு தெரிந்து கொள்ளுவர். இதைப் பல அறிஞர் ஆராய்ந்து விளக்கி யிருக்கின்றனர். சமயப் பிறப்பிடம் நமது நாடு. எல்லா மதமும் மன்னுயிரைத் தன்னுயிராகப் போற்ற வேண்டு மென்றே போதிக்கின்றன. அஹிம்சைதான் நமது நாட்டுத் தருமத்தில் முக்கியாம்சம் பெறவிருக்கிறது. தற்காலம் மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் நிருமாணிக்கப் பெற்றிருக்கும் ஒழுக்க வழக்க ஐதிகங்கள், மதங்களின் உண்மை நோக்கமாகிய அஹிம்சா தருமத்தையே அலட்சியம் செய்வனவாயிருக்கின்றன. இக்காலத்தில் இவ்வொழுக்க வழக்கங்கள் மக்களிடை பரஸ்பரம் பகைமை கொள்ளும் படியாகச் செய்து விட்டமையால் நாடு சிதறுண்டு நிற்கிறது. இந்தியர் கட்டுப்பாடுடைய ஒரு சாதியார் என்னும் காலம் எப்போது வருமோ தெரியவில்லை.

 

சகோதரத்துவம், சமத்துவம், சுதந்தரம் ஆகிய இம்மூன்றும்தற்கால பிரபஞ்ச பொதுத் தருமமாக மதிக்கப்படுகின்றன. இவையில்லாத நாடு நாடாகவே மதிக்கப்படாது. இந்த மூன்று தருமங்களையும் பூரணமாகப் பெற்றிருக்கின்றமையால் தான் ஒருசிறு தொகை கொண்ட ஆங்கிலேயர் ஒற்றுமையிற் சிறந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கிப்பாலுள்ள முப்பத்து முக்கோடி மக்கள் நிரம்பிய இந்தியா மாத்திரமல்லாமல் உலகத்தில் பிற சில நாடுகளையும் கட்டி ஆளுகின்றனர். நேயர்களே! நம் மக்கள் எந்நிலையில் இருக்கின்றனர் என்று சற்றே நோக்குமின்! சமூக விஷயத்திலும் ராஜீய விஷயத்திலும் பூரண அடிமைகளாகிப் புழுங்குகின்றனர் அன்றோ? ஆதலால் பயனற்ற பந்தங்களை யொழிக்கத் தீவிரமுயற்சி யெடுக்க வேண்டும். ஒருவரை யொருவர் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் அடக்கியாளும் மனப்பான்மையை அறுத்தெறிய வேண்டும். உலகம் பொதுவானது. இதில் தனி மனிதனோ தனிச்சமூகமோ சிறப்புரிமை பாராட்ட நியாயமில்லை. ஒருநாடு இன்புற்று வாழவேண்டுமென்றால் அந்நாட்டு மக்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும். ஒரு தாய் வயிற்றிற் பிறந்த உடன்பிறப்பாளர் போல் ஒருவரை யொருவர் நேசிக்க வேண்டும். சகோதரர்களுக்குள் ஒற்றுமையின்றேல் குடும்பம் கெடும். அஃதே போல் நாட்டு மக்களுக்குள் ஐக்கியம் இல்லாவிட்டால் நாடு கெடும். சுயநலம் மிகுந்தால் குழப்பமும் கிளர்ச்சியும் வளர்ந்தே தீரும். வல்லமையினாலோ சூழ்ச்சியினாலோ அறிவுவிளக்க முறாத மக்களைக் கொஞ்சக்காலம் அடக்கி வைக்கலாம். எப்போதாவது உண்மை வெளிப்படுதல் இயற்கையே யாகும்.

 

பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் அடாது. தமிழகத்தில் முற்காலத்தில் இக்கொள்கை இருந்ததில்லை என்பது ''பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்... " என்னும் பொய்யா மொழியால் நன்குதுணியப்படும். குணத்தாலும் தொழிலாலும் உயர்வு தாழ்வு ஏற்படல் சகஜம். நமது தேயத்தில் பிறப்பினால் எல்லாரும் ஒருதன்மையர் என்னும் சமத்துவ உணர்வு கிளர்ந்து விளங்கவேண்டும். சகோதரத்துவ உணர்ச்சி சமத்துவத்தை நிலவச் செய்யும். நல்வாழ்வுக்காதாரமான இவ்விரு குணங்களும் மக்களிடம் வளர்ந்தால் ஐக்கியமும் ஆற்றலும் வருதல் உறுதியாகும். ஒன்று பட்ட வாழ்க்கையால் சமூகம் விடு தலை பெற்றுச் சுதந்தர வின்பம் திளைக்கும் என்பதிற் சந்தேகமில்லை. சுதந்தரமில்லாத வாழ்வு நரகத்தோ டொக்கும்.

 

பிறருக்கு ஊறு நிகழாவண்ணம் அவரவரிஷ்டப்படி நடக்கயாருக்கும் உரிமை உண்டு. ஆனால் சகோதரத்துவம் சமத்துவமாகிய குணங்கட்கு எவ்விதத்திலும் கேடு நிகழாமற் காக்க வேண்டும். சுயநலம் தான் எல்லாக் கேடுகட்கும் மூலகாரணம், இம்மை மறுமை இன்பங்கட்கு மதம் வழிகாட்ட வேண்டும். தத்துவங்களால் பிரசித்தி பெற்ற நமது நாடு மதங்களின் பேரால் கீழ்மை யடைந்து வருகிறது. ஒரே நாட்டில் பிறந்த மதங்களே முரண்பட்டுப் போர் நிகழ்த்துவதால் இந்தியர்கட்குப் பொதுவான மதம் இல்லை என வாதிக்கப்படுகிறது. சில மூட வழக்கங்களே மதம் எனப் பாமரமக்கள் நினைப்பதனால் மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற கிளர்ச்சி தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. அறியாமையால் குறுகிய திருஷ்டியுள்ள மதவாதிகள் போராடினாலும் எல்லா மதங்களும் ஒப்பத்தக்க பொதுவான உண்மைத் தத்துவங்கள் பழைய அரிய நூல்களில் செறிந்திருக்கின்றன. இவை இந்து தருமம் என்ற புதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன. எல்லாமத தத்துவங்களையும் உள்ளடக்கி ஸ்ரீ விவேகாநந்தர் முதலிய பெரியார் இப்பெயராலேயே பாராட்டி யிருக்கின்றனர். ஆகையால் நமது நாட்டு உலகம் போற்றும் உயரிய சமதருமதத்துவங்களை விட்டு விட முடியாது. போலித்தன்மைகளை ஒழித்து உண்மைத் தருமத்தை ஒழுங்குபடுத்திப் பிரசாரம் செய்தலே முறையும் நலனும் ஆகும்.

 

சீர்திருத்த விஷயத்தில் அமிதவாதிகளாக உள்ளவர்கள் சில முறைகளைக் கவனிக்க வேண்டும். சமூக முன்னேற்றத்திற்குத் தடைகளாக உள்ளவற்றை யெல்லாம் ஒழித்தேயாக வேண்டும் என்பது எமது உண்மை நோக்கமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏறி ஊறிப் போன முரண்பட்ட ஒக்க வழக்கங்களைத் திடும்பிரவேசமாக ஒழிக்கப் புகுவதில் சில விபரீதங்கள் விளையலாம். பொடிப்போடுதல், சுருட்டுப் பிடித்தல் முதலியன தீமை பயக்கும் என உணர்ந்தும் சிலர்க்கு எளிதில் விட முடிவதில்லை என்றால் இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிபயப்பன எனக்கருதும் ஒழுக்கங்களை சாதாரண மக்கள் எப்படி அதிவிரைவில் விடக்கூடும்? உணர்ச்சியில் மாறுதலேற்பட வேண்டும். அதற்குத் தக்க கல்வியும் போதனையும் உரமாகத் தரவேண்டும். பலதிறப்பட்ட அறிஞர்கள் முதலில் ஒன்று கூடி மக்கள் கைக்கொள்ளத்தக்க நல்லொழுக்கங்களை நிருமாணித்து உறுதிசெய்ய வேண்டும். பின்னர் சரியான திட்டத்தையும் பிரசார முறையையும் அமைக்கவேண்டும். சாந்த முறையைப் பேச்சிலும் எழுத்திலும் கையாள வேண்டும். எல்லாமவல்ல பரம்பொருளின் திருவருளை வழுத்திச் செவ்விய நோக்கத்தோடு முயன்றால் ஆகாத காரியம் அவனியில் என்ன உளது?

 

ஓம் தத் ஸத்.

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment