Monday, August 31, 2020

 

சங்கிராந்தி – பொங்கலோ பொங்கல்

 

 சங்கிராந்தியின் விருத்தாந்தம் நம்மவர் பலரும் அறிந்த தொன்றே. சிலர்க்கு அவ்விஷயம் தெரியாதிருக்கலாம். இந்தத் தைமாதத்தில் அப்பண்டிகை வருதலால் அதைப்பற்றிச் சிறிது இங்குப் பேச நேர்ந்தது. சங்கிராந்தி யென்பது பனிரண்டு இராசிகளில் ஒன்றான தனுராசியில் சூரியன் சஞ்சரிக்குங் காலமாம். இக்காலமே தேவர்களுக்கு விடியற்காலம் என்று நூல்களறிவிக்கின்றன. மகா சங்கிராமே சக்தி என்னும் சக்தி, தக்ஷிணாயனமான ஆறுமாதகாலத்தில், மனிதரை மூதேவி வடிவு கொண்டும், பசுக்களைப் புலி வடிவு கொண்டும் வருத்தி வருவதாக ஆன்றோர் கூறுகின்றனர். அவ்வாறு வருத்தும் துன்பம் ஈசுவரானுக்கிரகத்தால் நீங்கினமைபற்றித் தைமாத முதல் தேதியன்று ஜனங்கள் அக்காலத்தில் விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அந்தச் சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ் செய்திருந் தபடியால், அப்பசுக்களைக் கொண்டு புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டிய நாளே அந்நாளாம். இதை மாட்டுப் பொங்கல் என்று வழங்குவர். இவ்வாறு சிவாகமம் கூறுகின்றது.

 

இங்ஙனமேயன்றி இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால் அவன் செய்த நன்மையின் பொருட்டுத் தைமாத முதலில் அறுத்த முதற் பயிரைப் பொங்கலிட்டு மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர். கிருஷ்ணாவதாரத்தில் பகவான், ஜனங்கள் இந்திரனுக்குச் செய்து வந்த அந்த ஆராதனையை, மழை வளத்திற்கு ஆதாரமான மலைக்குச் செய்துவரக் கட்டளையிட்டனர். ஜனங்கள் அக்கட்டளைப்படியே கோவர்த் தனகிரியை ஆராதித்து வந்தனர்.

 

இச் செய்கையைக் கண்ணுற்ற இந்திரன் ஜனங்கள் மீது கோபங் கொண்டு அவர்களை அடியோடு அழிக்க வேண்டிப் பெருமழை பெய்வித்தனன். அதனால் குடிகள் நிலைகுலைந்து, மாடு கன்றுகள் சிதறக் கஷ்டமடைந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி குடிகளை அஞ்சாதிருக்க வைத்து, கோவர்த்தனகிரியை மேலெடுத்துத் தாங்கி, அவர்களையும், மாடு கன்றுகள் முதலிய பொருள்களையும் பாதுகாத்தனர். ஏழுநாள் பரியந்தம் இக்காட்சியைக் கண்டு நாணமடைந்த இந்திரன் தன் பிழையைப் பொறுத் தருளுமாறு கிருஷ்ணமூர்த்தியைப் பிரார்த்திக்க அவர், சங்கிராந்திக்கு முன்னாள் குடிகளைக் கொண்டு அவ்விந்திரன் பெயரால் பண்டிகையொன்று செய்வித்தனர். அது போகிபண்டிகை யாயிற்றென்றும் (போகி - இந்தி ரன்), மறுநாள் பெரும்பொங்கல் என்னும் சங்கிராந்தி பண்டிகை யாயிற் றென்றும், அதற்கடுத்தநாள், ஜனங்கள், மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை யவிழ்த்து விட்டுக் களித்தமையால், அது மாட்டுப் பொங்கலாயிற்றென்றும், அதற்கடுத்தநாள் ஒருவரையொருவர் சென்று மழையால் நேர்ந்த சுகாசுகங்களை விசாரித்ததால் அது காண் பொங்கல் ஆயிற்றென்றும் சொல்லுவர். அப்போது மழையால் இடிந்த வீடுகளைப் பழுது பார்த்துச் சுத்தப்படுத்தினராதலால், அவ்வழக்கப்படி இப்போதும் வீடுவாசல்களைச் சுத்தப்படுத்துகிறார்கள். அந்தக்காலத்தில் சிலர் வீடுகளை மலை மண்ணால் மெழுகிச் சுத்தஞ் செய்தனர். அதுபோலவே இப்போது செம்மண்ணிடுகின்றனர். அம்மலையடிவாரத்தில் குடிபுகுந்தோர் சிலர் சமைக்க அடுப்புத் தோண்டி, வறட்டிமூட்டி பனையோலையிலும் தீ மூட்டினாராதலால் இப்போதும் அவ்வகை செய்து வருகின்றனர். இவ்வண்ணம் வேறு நூல்கள் கூறுகின்றன.

 

பொதுவாக இதன் கருத்தாவது- ஒரு வருஷத்தில் உத்தராயண மென்றும், தக்ஷணாயனமென்றும் இரண்டு அயனமுண்டல்லவா? அவற்றுள் உத்தராயணமாவது சூரியன் வடபாதிக் கோளத்தைச் சார்ந்த மகரமுதல் மிதுன மீறாகிய ஆறுராசிகளில் சஞ்சரிக்குங்காலம்; தக்ஷணாயனமாவது தென்பாதிக் கோளத்தைச் சார்ந்த கர்க்கடக முதல் தனுசுஈறாகிய ஆறு ராசிகளில் சஞ்சரிக்குங்காலம். அயனம் = சஞ்சாரம். உத்தரம் = வடக்கு தக்ஷணம் = தெற்கு. நம்முடைய ஒருவருஷம் தேவதைகளுக்கு ஒருநாள்: ஆகையால், உத்தராயணம் பகலும், தக்ஷிணாயனம் இரவுமாகும். இராக்காலத்தின் கடைசி முகூர்த்தம் பகற்காலத்துக்கு விடியற்காலமானது போல், சூரியன் தனுசில் சஞ்சரிக்குங்காலமாகிய மார்கழி மாதம் உத்தராயணமாகிய பகலுக்கு விடியற்காலமாகின்றது: ஆனதனால், இந்தமாத முழுதும் விடியற்காலத்தில் நீராடிக் கடவுளைப் பூசித்துத் தோத்திரஞ் செய்வது விசேஷமென்று சாஸ்திரம் சொல்லியபடி, இத்தேசத்தில் தேவாலயங்களிலும், கிருகங்களிலும், பூசைகளும், உற்சவங்களும் நடந்து வரும். இந்தமாத முழுதும் விரதமிருந்தவர்களுக்கு இஷ்டம் நிறைவேறி யிருப்பதாகப் புராணங்களிற் சொல்லப் பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட விசேஷ மாதத்தின் கடைசியாய், இஷ்டசித்தி பெற்ற நாளாயிருப்பதனால், இந்தநாளுக்குப் போகி என்று பெயர் உண்டாயிற்று. போகத்திற்கு இடமான காலம் போகி. போக மென்பது சுகத்தை அனுபவித்தல். அன்றைக்கு விடியற்காலத்தில் பெருந்தீக் கொளுத்திக் குளிர்காய்வதும், தப்பட்டைகளைக் கொட்டுவதும் இழிந்தவர்களுடைய வழக்கம். இது ஆதார மற்றது. இந்த நாளில் ஆலயங்களில் சிறப்பான திருவிழா நடக்கும். மாளிகைகளிலும் பற்பல பணியார பலகார வகைகளோடு இஷ்டரும் தாமும் விருந்து கொண்டாடுவார்கள்.

 

பொங்கற் பண்டிகை என்பது உத்தராயணத்தின் முதனாள். அன்றைக் குத்தான் சூரியன் வடபுறம் திரும்புகிறான். இத்தேசத்தில் இதற்கு முந்திய காலமெல்லாம் விளைவுகாலமா யிருந்தது; இக்காலமே தானியங்களை அறுத்துச் சேர்க்கிற காலமாயிருப்பதனால் சூரியன் முகாந்தரமாய் விளைவுக்கு வேண்டிய மழை முதலானவற்றைப் பெய்வித்து க்ஷேமத்தை உண்டாக்கின கடவுளுக்கு உபசாரமாய் முதலில் அறுத்த தானியத்தின் அரிசியைப் பாலும் வெல்லமும் சேர்த்துச் சமைத்துப் பழமுதலிய சிறப்போடு சூரியனுக்கு அல்லது சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருக்கிற கடவுளுக்குப் படைத்துப் பந்துக்கள் முதலானாரோடு பெருநாள் கொண்டாடுவார்கள். ஞானிகளோ, இந்நாளை நினைத்து பரமாத்துமாவைத் தியானிப்பார்கள். இதற்கு முன்பே வீடுகளைப் பழுது பார்த்துச் செப்பஞ் செய்து வைப்பார்கள். தைமாதம் இரண்டாந்தேதியாகிய இப்பொங்கலின் மறுநாள் உழவு முதலான சகலத்துக்கும் இந்நாட்டாருக்கு மாடுகளே விசேஷ உதவியானதைப்பற்றி, அந்த மாடுகள் விருத்தியடைய வேண்டுமென்னுங் கோரிக்கையினால் பகலின் மேல் பொங்கலிட்டுக் கடவுளுக்குப் படைத்துத் துதித்து மாடுகளை அலங்கரித்துக் கீதவாத்தியங்களோடு ஊர்கோலமாக வருவார்கள். பொங்கல் இடுவதினால் இந்நாட்களுக்குப் பொங்கல் என்று பெயர் வந்தது. பயிர் வளப்பத்தின் நன்றிக்காகப் பொங்கலிடு முதனாளைப் பெரும் பொங்கலென்றும், மாடுகளின் வளத்துக்காகப் பொங்கலிடு மறுநாளை மாட்டுப் பொங்கலென்றும் சொல்வார்கள். செல்வமுள்ளவர்கள் மருமகன் முதலானார்க்கும் சிநேகிதர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் கோடி வஸ்திரங்கள் கொடுப்பார்கள். இந்த இரண்டாநாளிரவிலும் அடுத்த நாட்களிலும் ஒருவரை யொருவர் கண்டு, "பால் பொங்கிற்றா'' என்று க்ஷேமம் விசாரித்து, தாம்பூலமுதலிய உபசாரங்களைப் பெறுவார்கள். இவ்வழக்கம் பெரும்பாலும் பிராமணர்களல்லாதாரிடத்திலேயே உண்டு, இது ஒரு முக்கிய நாள். (ஸ்ரீ லோகரஞ்சனி)

 

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment