Monday, August 31, 2020

கொம்பார் சோலைக் குயில்

 

ஐம்பொறிகளால் இயற்கை இன்பத்தை ஆரத்துய்த்த அருந்தமிழ் மக்கள், புலன்வகை அறிந்தவல்லோராய் வாழ்ந்து வந்தார்கள். பூவார் சோலையில் மயில்கள் ஆடும் அழகினைக் கண்டும் குயில்கள் கூவும் ஒலியினைக் கேட்டும், தேனொழுகு தீங்கனிகளை உண்டும், நறுமலர்களின் மணத்தை நுகர்ந்தும், மெல்லிய பூங்காற்றின் இனிமையில் தோய்ந்தும், இயற்கையோ டிசைந்து இனிது வாழ்ந்தார்கள். இளவேனிற் பருவத்தில் மெல்லிய தென்றல் நல்மணம் கமழும் மலைச்சாரலில், பூந்தளிர் நிறைந்த தேன்பழச் சோலையில் மறைந்து நின்று கூவும் குயிலின் குால் எல்லையற்ற இன்பம் பயக்கும் என்பதில் ஐயமில்லை. இதனாலேயே இயற்கை இன்பம் துய்த்த இன்கவிச்செல்வர் இனிய குரலமைந்த குயிலைத் தம் இயற்கவிகளில் அமைத்து இன்புறுகின்றார்கள்.

 

இயற்கை இனிமையில் இறைவனது இனிமையை அறிந்த மணிவாசகட பெருமான், மண்ணுலகில் வாழும் இன்னுயிர்களை இறைவன்பால் உய்க்கும் பெருங்கருணை வள்ளலாய் விளங்குகின்றார். தீங்கனிகள் நிறைந்து அசைந்தாடும் பூஞ்சோலையில் இனிய குரலோடு கூவி இன்புறும் குயிலை நோககி அட்பெருமான் கூறும் இன்னுரை அன்பில் விளைந்த ஆரமுதமாகும்.


"தேன்பழச் சோலைபயிலும் சிறுகுயிலே இத கேள் நீ
வான் பழித்திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல்
ஊன் பழித்துள்ளம் புகுந்து என் உணர்வதுவாய் ஒருத்தன்
மான் பழித்தாண்ட மென்நோக்கி மணாளனை நீ வரக்கூவாய்.''


என்று மணிவாசகர் அருளிய திருவாசகம், தெய்வத தமிழ்மணம் கமழ்வதாகும். தேன்பழச் சோலையில் அமர்ந்து தேனொழுகப் பாடும் தீங்குயிலே இம்மானிலத்தில் வாழும் மன்னுயிர் பால் வைத்த பேரருளால் எம் இறைவன் கால் தரைதோய நின்று கண்ணுக்கும் எளியயனானான். அவ்வள்ளல் என்னுள்ளம் புகுந்து என் உணர்வுக்கு உணர்வாய் ஒளிர்கின்றான். அப்பெருமானது பெருமையை நினைந்து நினைந்து அவனையே கூவி அழைப்பாய்'' என்று சிறு குயிலை நோக்கிக் கூறும் வாயிலாக மணிவாசகர் தம் மனத்தில் அமைந்த அன்பின் பெருக்கை அழகிய மொழிகளால் அருளிப் போந்தார்.

 

இவ்வாறு தன்னைத் தண்ணளியால் ஆட்கொண்ட பெருந்தகை சின்னம் சிறு குயிலையும் அன்பினால் ஆதரித்து அருள் செய்வான் என்று மணிவாசகர் கூறும் மணிமொழிகள் இறைவனது எல்லையற்ற பேரருளை இனிது விளக்குகின்றன.


"இன்பம் தருவன் குயிலே, ஏழுலகும் முழுதாளி
அன்பன் அமுதளித் தூறும், ஆனந்தன் வான்வந்ததேவன்
நன்பொன் மணிச்சுவடொத்த, நற்பரிமேல் வருவானைக்
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழிநாதனைக் கூவாய்''


என்று மணிவாசகர் கூறும் மொழிகளில் செந்தமிழ் மணம் கமழ்கின்றது.
''கொம்பார் சோலையில் கூவும் குயிலே! மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வனாய பெருமானை, அன்பின் கனி என்றும் அமுதின் சுவை என்றும், ஆனந்தவடிவென்றும் அறிவாய்! அன்பே வுருவாய அவ்விறைவன் சின்னம் சிறுகுயிலாய உனக்கும் சிறந்த இன்பம் தருவான். ஆதலால் அருங்குயிலே! உன் இனிய குரலால் அப்பெருமானைக் கூவி அழைப்பாய்'' என்று எழுந்த திருவாசகம் ஆனந்தத்தேன் சொரியும் அழகு வாய்ந்ததாகும். இன்னும், "இன்பமே வடிவாய இறைவன் அன்பினால் வழிபடும் அடியார்க்கு ஆனந்தம் அளிப்பான் என்பதில் ஏதும் ஐயுறவில்லை. கடல் சூழ்ந்த இலங்கைமா நகரில் மங்கையற் கரசியாய் விளங்கிய மண்டோதரிக்கு அப்பெருமான் பேரருளால் இன்பம் அளித்தான். கற்பின் கொழுந்தாய அம்மங்கை ஈசன்பால் வைத்த இடையறாப் பேரன்பின் பயனாக அப்பெருமானது அடியின் கீழ் அமர்ந்து மாறிலா இன்பத்தில் மகிழும் பேறுபெற்றாள். ஆதலால் அருங்குயிலே! அன்பர்க்கு அருள் செய்யும் பெருமான் வருந்தி அழைத்தால் வாராதிரான்" என்று மணிவாசகர் மணிக்கு பிலை நோக்கிக் கூறும் குழைந்த மொழிகள் அவரது இறவாத இன்ப அன்டை எடுத்துரைக்கின்றன,


''எர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவும் தன்னுருவாய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்.'


என்னும் திருவாசகத்தின் தீந்தேன் செந் தமிழ்ச் செவிகளில் நிறைந்து செம்மைசான்ற இன்பம் விளைவிப்பதாகும். "தென்றல் வந்துலாவும் தீம்பழச்சோலையில் வாழும் சிறுகுயிலே! எம்மை ஆளும் இறைவன் கருங்கடல் சூழ்ந்த இலங்கையிற் சென்று அன்பில் சிறந்த மங்கைக்கு அருள் செய்தான்; அவ்வாறு விரிந்து பரந்த கருங்கடல்கடந்து இலங்கையிற்சென்று அருள் செய்த இறைவன் இச்சோலையில் அமைந்த உனக்கு அருள்செய்தல் அரிதாமோ! அன்பினால் அகம் குழைந்து அழைத்த அம் மங்கைக்கு அருள் செய்த இறைவன் உனக்கும் அருள் செய்வதில் யாதும் ஐயமில்லை. ஆதலால் கீதமினிய குயிலே! உனது அழகிய வாயால் அவனை வர அழைப்பாய்!'' என்று மணி
வாசகர் கூறும் பொன்னுரை எண்ணும் தொறும் இன்பம் பயப்பதாகும்.

“இங்ஙனம் நீ வருந்தி அழைக்குங்கால் வரும் இறைவன் உன்னை நயந்து உன் இன்னுயிர் நண்பனாய் அமைவான். மாந்தளிர்ச் சோலையில் உன்னோடு மகிழ்ந்து விளையாடுவான். அச்சோலையில் உன்னோடு இசைந்து கூவுவான். இன்னும் நீ உண்ணுங்கால் உண்டும், உறங்குங்கால் உறங்கியும், உன்னுயிர்த்துணையாய் அமைவான்" என்று மணிவாசகர் அன்பர்க்கு எளிவந்து இன்பம் அளிக்கும் இறைவனது பெருங் கருணையை எடுத்துரைக்கின்றார்.


"உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியுமாவன்
பொன்னை யழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சோலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக்கூவாய்''


என்று மணிவாசகர் அருளும் மணிமொழிகள் மனத்தை மகிழ்விப்பனவாம்.
அருமையாய்க் கூவும் சிறுகுயிலே! நீயோ கருநீலக்கனி போல் திகழ்கின்றாய். என்னையாளும் இறைவன் பொன்னினும் அழகிய கன்மேனியோடு இலங்குகின்றான். அவன் அழகிய மேனியைக் கண்டால் நீ இன்னும் மதுரமாய் மகிழ்ந்து பாடுவாய். அத்தகைய பெருமானை ஆர்வமுற அழைப்பாய்' என்று மணிவாசகர் ஈசனது அழகொழுகுந் திருமேனியின் ஒளியைக் குயிலுக்கு உணர்த்தி மகிழ்ந்தார். இறைவனது ணையற்ற பேரழகினைக்கண்ட பெரியார், அவ்வழகிய ஒளி உருவத்தைத் தம் உள்ளத்தில் ஓர் உயிர் ஓவியமாக எழுதி மகிழ்வது இயல்பாகும். இந்திர நீலம்போல் இருண்ட சடையும், குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், பவளமேனியும், பால்வெண்ணீறும், பங்கய பாதமும் காணப்பெற்றார், அப்பேரழகினை நினைந்து, நினைந்து நெஞ்சம் தழைத்தல் இயல்பேயன்றோ? இத்தகைய அழகொழுகும் காட்சியைக் கண்ட ஆன்றோர்.


''குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன் மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே.''


என்று ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார்கள். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பமே என்றும், பிறவாமையே பேரின்பமென்றும், உணர்ந்து பிறவா நெறியை விழைந்துறவோரும் பேரழகு வாய்ந்த இறைவனைக் கண்ணெதிரே காட்டிய பிறவியை விருப்புடன் வாழ்த்தும் பான்மை அறிந்து மகிழ்தற் குரியதாகும். இவ்வாறே பொன்னார் மேனிப் புனிதனது பொங்கு பேரழகினைக்கண்ட மணிவாசகப் பெருமான் அம்மேனியின் ஒளியை நினைந்து நினைந்து உருகும் தன்மை திருவாசகத்தில் இனிது விளங்கக் காணலாம்.

 

இன்னும் காருலாஞ் சோலையிற் களித்து வாழும் கருங்குயிலை நோக்கி எழிலார்ந்த இறைவனது அழகினை மணிவாசகர் எடுத்துரைக்கும் மாண்புமிக்க திகழ்வதாகும்.



"காருடைப் பொன் திகழ் மேனிக் கடிபொழில் வாழுங்குயிலே
சீருடைக் செங்கமலத்தில் திகழுருவாகிய செல்வன்
பாரிடைப் பாதகங்கள் காட்டிப் பாசமறுத் தெனையாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக்கூவாய்."


என்று அடிகள் அருளிய திருவாசகம் இறைவனது அருளின் திறத்தை இனிதாக எடுத்துரைக்கக் காணலாம். மன்னுயிர்பால் வைத்த மாசற்ற அன்பினால் ஈசன் இம்மானிலத்தில் தோன்றி, மன்னுயிரைப்பற்றியபாசம் அறுத்துப் பேரின்பம் அளிக்கும் பெருமையை மணிவாசகர் நிறைந்த மொழிகளால் எடுத்துரைத்தார். இவ்வாறு பாசம் அறுத்து இறவாத இன்பம் அளிக்கும் இறைவனை “அமுதம்" என்னும் அழகிய சொல்லால் அடிகள் அமைத்தருளினார். மணம் கமழும் பொழில்களில் வாழ்ந்து, நிழல் செறிந்த சோலைகளில் உறைந்து, தென்றலில் துவளும் தேமாந்தளிர் அருந்தி, இயற்கை இன்பம் நுகரும் நீலநிறக் குயிலை நோக்கி, "இன்பக்குயிலே! செந்தளிர் நிறைந்த இச்சோலை முற்றி முதிர்ந்து பின் உதிர்ந்து விடும். தீஞ்சுவை பயக்கும் இத்தேன் பழச்சோலையும் பழுத்து வீழ்ந்து விடும், அன்றியும் தேமாவின் தீங்கனி பசியைச் சிறிது ஆற்றுமே அன்றி மாற்றமாட்டாது. எம் இறைவனோ பசிநோயை மாற்றுவான்; பிறவிப் பெருநோயை அகற்றுவான்; என்றும் அழியாத இன்பம் அளிப்பான்; பிறப்பென்னும் பேதைமையை நீக்கி இறப்பென்னும் பிணி அகற்றி இலபம் அளிப்பான். பேரின்பவடிவாய இறைவனுட நீ மகிழ வேண்டுமாயின் அமுதம் போல் இனிக்கும் அவ்விறைவனை உன் அழகிய வாயால் கூவி அழைப்பாய்'' என்று பேரின்ப வாழ்விற்குப் பெருநெறிகாட்டும் மணிவாசகரது அன்பு எல்லையற்றதாய் இலங்கக் காணலாம்.

 

இவ்வாறு சிற்றறிவு வாய்ந்த சின்னம் சிறு குயில்களையும் இரைறைவன்பால் உய்க்கும் மணிவாசகரது மனப்பான்மையை ஆராயும் பொழுது ஆறறிவு பெற்ற மக்கள் உய்தற்குரிய உயரிய நெறியைச் சொல்லாமற் சொல்லி அருளிய அப்பெரியாரது செம்மை இனிது விளங்குவதாகும். இருள் செறிந்த சோலைகளில் இசைபாடும் சிறுகுயில் இறைவனது புகழைப்பாடி இன்புறுமாயின் மக்களாய்ப் பிறந்தோர்க்கு ஈசனை நினைக்க நெஞ்சுண்டு, பாடப் பண்ணார்ந்த தமிழுண்டு; இத்தகைய அருந்தமிழ் மலர்களை எடுத்து, அன்பெனும் நாரில் தொடுத்து இறைவனுக்கு ஆரமாய் அணிதல் எளிதன்றோ? அன்பெனும் நாரில் அருந்தமிழ் மாலை புனைந்தேத்தும் ஆன்றோர் பைந்தமிழின் பயனாய் விளங்கும் இறைவனுடன் இரண்டறக் கலந்து இன்புறுதல் எளிதாகுமென்று மணிவாசகர் திருவாசகம் மாண்புற உணர்த்துகின்றது.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment