Monday, August 31, 2020

 

சிலப்பதிகாரமும் சிலம்பும்

(வித்வான் -S. P. கெம்பீர நைனார்)

 

ஆசிரியர் இளங்கோ வடிகள் குன்றக் குறவர் வாயிலாகவும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் வாயிலாகவும் தாம் கேட்டனவும் அவையன்றி அறிந்தனவும் கோவலன் கண்ணகிகளின் வரலாற்றைக் கூறும் நூல் சிலப்பதிகாரம் என்னும் பெயரைத் தாங்கிற்று. அது அப்பெயரைத் தாங்குதற்குக் காரணம் கூட ஆசிரியரால் விளக்கப் பட்டுள்ளது.

 

''சூழ்வினைச் சிலம்பு காரணமாக''


(1) “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூஉம்.
(2) உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்.
(3) ஊழ்வினை உருத்து வந்தூட்டு மென்பதூ உம்"   ஆய


மூன்று காரியங்கள் நடைபெற்றன. இம் மூன்று காரியங்களும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக (நடைபெற்றமையின் காரண காரிய முறைப்படி அதாவது காரணத்தை ஒட்டி) 'சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்"
என்கிறார். அதாவது இது காரணமாக இக்காரியங்கள் மூன்றையும் கூறுகின்றேன் என்பது.

 

ஆகவே, சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் பாண்டியன் வரலாற்றைக் கூற வந்தது அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாதலை விளக்குதற்கு மட்டுமேயாம். பாண்டியனது ஊழ்வினையை நோக்குதற்கு அன்று. கண்ணகியின் கதையைக் கூறியதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர்! ஏத்தல் ஒன்றையே காட்டுதற்காகும். அடுத்தபடி கோவலனையோவெனின் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதற்கே யாகும். இவர் மூவரும் தான் சிலப்பதிகாரத்திற்கு முக்கிய பாத்திரங்கள் ஆவர். ஏனையோ ரெல்லாம் இடைப் பிறவரல்களேயாம். ஆகவே, அவர்களைப்பற்றிய ஊழ்வினை அல்லது மற்றைய இரண்டு இவற்றைக் கூறவேண்டிய அவசியமில்லை.

 

இனி “மாதவி மடந்தைக் கானற் பாணி கனக விஐயர் முடித்தலை நெறித்தது” ஆயினும், அவள் வரலாற்றில் அவள் தன் ஊத் வினையைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை என்க. வேண்டுமெனின், “சூழ்வினைச் சிலம்பு காரணமாக” என்பதில் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் எல்லாருடைய ஊழ்வினையையும் சூழ்வதற்கு (ஆராய்வதற்குக் காரணமாய் சிலம்பு என்று பொருள் கூறி எல்லாருக்கும் ஆராய்ந்து பார்த்தால் அவர்தம் ஊழ்வினைப் புலப்படும். ஆயின், அதை ஆராய்தல் தாய்க்குத் தாய்க்குத் தாய்க்குத் தாய்க்குத் தாய்ப் பெயரென்ன என்பதை ஆராய்தல் ஒக்கும். ஆகவே, அவர் தம் ஊழ்வினையைக் கூறாது விடுகின்றோம் என்னும் இளங்கோவின் வாக்கு இனிது விளங்கும்.

அப்படி இருந்தும் அவசியம் நேர்ந்தபோது நேர்ந்தார்க்கு மட்டும் ஊழ்வினையும் மற்றைய இரண்டும் விதிமுகத்தானும் மறைமுகத்தானும் கூறப்பட்டுள்ளது என அறியலாம்.

 

அடுத்தபடி மீதுரைமா நகர் எரியால் உண்ணப்பட்டது, "ஒள்ளெரி யுண்ண உரையு முண்டு' என்ற ஜோதிட வார்த்தையுமன்று, அரசன் வார்த்திகனைச் சிறைப் படுத்தியும் கோவலனைக் கொன்றும் முறை பிறழ்ந்ததற்கும் அன்று. அப்படியாயின். வினை ஒருவன் செய்ய அதன் பயனை வேறொருவன் அடைந்த தன்மையாகும். அதனால், மதுரையின்கண் தீத்திறத்தார் பல்லார் இருந்தனர். அவர்களையே தீச் சேர்ந்தது. பசு, பத்தினிப் பெண்டிர் முதலிய நகரத்து நல்லாரும் நகரமும் நலம்பெறவே திகழ்ந்தனர் என்பது "தீத்திறத்தார் பக்கமே தீச்சேர்க" என்ற அடியால் விளங்கும்.

 

இது இப்படி இருக்க, பனை என்பது மரந்தான், ஆனால் மரமெல்லாம் பனையாக மாட்டா என்ற தத்துவத்தை நன்குணர்ந்த என் ஆழ்ந்த பெருமதிப்புக்குரியாரும் என் தலை நண்பரும் ஆகிய வித்வான் வே. சு. சுப்பிரமணிய ஆசாரியார் P. O. L. அவர்கள் ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பது சிலப்பதிகாரம் தான், ஆனால் சிலப்பதிகாரமெல்லாம் ஊழ்வினை ஆகாது என்பதை அறியாதது ஏனோ? அறியேன். அது பாம்பைக் கயிறென்று கொண்டது போலாகும்.

 

தவிர, மனித உருவத்தை தலை, உடல், கால் என மூன்றாகப் பிரித்து, அவற்றினுள் தலையை ஆராயப்புகும் ஒருவன் மனிதனது காலாகிய ஒரு உறுப்பை தலையாகிய அவன் மற்றொரு உறுப்பில் தேடிவிட்டு அது அங்கு கிடைக்கப் பெறாமையால் மனித உடலைப் படைத்தவன் பேரில் குற்றம் காட்டுவானா? அப்படியே திரு ஆசாரியார் அவர்களும் அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாதலைக் காட்டும் பாண்டியனாகிய ஓர் உறுப்பில் கோவலன் உறுப்பாகிய ஊழ்வினையில் தேடப் புகுந்தது ஏனோ? வேண்டுமாயின் சூழ்வினைச் சிலம்பு காரணமாக ஆராய்க என முன்னமே கூறப்பட்டது. இப்படிப் பொருத்திப் பார்ப்பதால் சிலம்பு அதிகரித்து வருகின்ற சிலப்பதிகாரத்திற்கு சிலம்புதான் காரணம் என்பது புலப்படும். ஆகவே, “சிலப்பதிகாரமும் சிலம்பும்" என்று கொண்டு ஆராயப்புகின் அவ்வாராய்ச்சிக்கு ஆபத்து ஒன்றுமிராது. அதை விடுத்துச் சிலப்பதிகாரத்திற்கு ஊழ்வினையை சம்பந்தப் படுத்தி, 'சிலப்பதிகாரமும் ஊழ்வினையும்'' என்று பார்த்ததே இவ்வளவு இடர்ப்பாட்டிற்கும் காரணம் என்பதை மிக்கத் தாழ்மையுடன் --
என் நண்பர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

 

மேற்கூறிய இக்காரணங்களால் இளங்கோவடிகள் எவ்விதத்திலும் இடரினாரல்லர் என்று உட்கொண்டு யாவரும் அவர் கருத்தை நன்குணர்ந்து வாசித்து மகிழ்வாராக என ஆதிபகவனின் அடியினை இறைஞ்சு கின்றேன்.


 ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment