Sunday, August 30, 2020

 காளமேகப் புலவர்

இப் புலவர் திலகம் இற்றைக்குப் பன்னூறாண்டுகட்கு முன் நந் தமிழகம் தழைக்கத் திருக்குடந்தையிலே தோன்றினார். இவர் ஜாதியில் பிராமணர். இளமையிலே இவர் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோயிலில் சுயம் பாகியாயிருந்தார். திருவானைக் காவிலுள்ள சம்புகேசுவரர் கோயில் தாசி மோகனாங்கி எனும் பெண்ணிடம் மயல்கொண்டு அவளைத் தன் காதலியாக வைத்திருந்து, பின் அவளுடைய விருப்பத்திற்கிணங்க சைவரானார்.
பின்னர் சரஸ்வதி தேவியினருளால் காளமேகமானது அமோகமாய் மழை பொழிவது போலத் தமிழில் ஆசு முதலிய பால்வகைக் கவிகளையும் கடல் மடை திறந்தாற் போல அசுவதாட்டியாய்ப் பாடும் சக்தி இவருக்கு உண்டாயிற்று.

 

ஒரு சமயம் இவர் தில்லைக்குச் சென்று அங்கு பரமசிவனுடைய பிட்சாடன் உற்சவம் தரிசிக்கையில், அவ் வுற்சவத்தில் முழங்கும் காளமுதலிய வாத்திய வோசையைக் கேட்டு, 'விஷசர்ப்பத்தை ஆபரணமாகப் சிவனே! தாங்கள் இரந் துண்ணப் புறப்பட்டும் தங்களுக்குக் காளம், மேளம், யானை யாதிய ஆடம்பரங்கள் என்?' என்று பொருள் படும்படி,


“நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்

பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்

காளமேன் குஞ்சாமேன் கார்க்கடல்போ லேமுழக்கும்

மேளமேன் ராசாங்க மேன்?''


என்ற பாடலைப் பாடினர். பின், 'ஐயனே! தாங்கள் இவ்வாறு தரித்திரமாயிருந்தால் கொண்ட மனைவியும் தலையின்மே லேறுவாளன்றே! பூட்டி யிருந்த செருப்பா லொருவன் புடைக்கானா? வாய்க்கு வந்தபடி ஒருவன் தையாகப் பேசானா?' என்ற கருத்தமைத்து,


''தாண்டி யொருத்தி தலையின்மே லேறாளோ

பூண்டசெருப்பா லொருவன் போடானோ – மீண்டொருவன்

வையானோ வின் முறிய மாட்டானோ தென்புலியூர்

ஐயாரி யேழையா னால்''

 

என்ற ஓர் வெண்பாப் பாடினார்.

 

பின்னர் ஒரு பொழுது தியாகராஜர் வீதியில் எழுந்தருளி திருநடனஞ் செய்யக் கண்டு, இந்த தியாகேசர் கையில் பணம் நிறைய விருப்பதாலன்றோ புனுகு, சவ்வாது முதலிய வாசனைத் திரவியங்களால் தன் மெய்யை நிரப்பி அடியார்க ளெல்லாம் பார்த்திருக்க இத் திருவாரூர் வீதியிலே நின்று கூத்தாடுகின்றார்' என உணர்த்த,


"ஆடாரோ பின்னையவ ரன்பரெலாம் பார்த்திருக்க

நீடாரூர் வீதியிலே நின்று தாம் – தோடாரும்

மெய்க்கே பரிமளங்கள் வீசுந் தியாகேசர்

கைக்கே பணமிருந்தக் கால்''


என்று பாடினார்.

 

ஒரு சமயம் இவர் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்த பொழுது, அங்கு சம்பந்த ஆண்டானைக் கண்டார். ஆண்டான் சிறிது கற்றவனாயினும் கல்விச் செருக்கு மிக்கு பிறரை மதியாதான். காளமேகப் புலவர் அங்கு சென்றிருந்த பொழுது அவன் மயிர்வினைஞனிடத்து சௌளம் பண்ணிக் கொண்டிருந்தான். புலவரைக் கண்டதும் அவன் என் மீது 'மனனு' வென ஆரம்பித்து 'மலுக்கு' என முடித்து ஓர் வெண்பாப் பாடவேண்டும்'' எனலும் அவர்,


''மன்னு திருவண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்

னுதலைச் சௌளம் பண்ணுவதேன்-மின்னின்

இளைத்த விடைமாத ரிவன் குடுமி பற்றி

வளைத் திழுத்துக் குட்டாம லுக்கு''


என்று பாடி அவனுடைய கர்வத்தை ஒடுக்கினார்.

 

திருச்செங்காட்டில் உத்தராப தீசரைத் தரிசித்து, 'எப்பொழுதும் ஒழுக்கத்துடனே நாட்டின் நடுவில் வாழும் நாதரே! நீரிப்பொழுது இந்தச் செங்காட்டில் வந்து ஒளித்துக் கொண்டிருந்தால், முன் யமளையும், மன்மதனையும், சிறுத்தொண்டரின் மகனையுங் கொன்ற பழிபோமோ?' என்னும் கருத்தமைத்து,


''காலனையுங் காமளையுங் காட்டு சிறுத்தொண்டர் தரும்

பாலனையுங் கொன்றபழி போமோ – சீலமுடன்

காட்டிலே வாழ்ந்திருக்கு நாதரேநீர் திருச்செங்

காட்டிலே வந்திருந்தக் கால்"

என்று பாடினார்.

 

இன்னும் இவர் பாடிய பாடல்கள் பலவுள.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment