Monday, August 31, 2020

சடையன் புகழ்மாலை 

 

சடையன் புகழ்மாலை

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி.ஏ., பி. எல்.)

 

டுநாட்டிலமைந்த திருவெண்ணெய் என்னும் நன்னகரில் வறுமையின் பகைஞராய ஒரு வள்ளல் வாழ்ந்து வந்தார். அப்பெருந்தகையார் வேளாண்மைப் பணியாற்றி விழுமிய செல்வம் பெற்று விளங்கினார். அறத்தாற்றில் வந்த அரும்பொருளை அறிஞர்க்கும் வறிஞர்க்கும் அகனமர்ந்து வழங்கினார்.

 

அருந்தமிழ்க் கவிஞராய கம்பரை இவ்வள்ளல் ஆதரித்துப் போற்றிய பெருமையை அறியாதார் இந்நாட்டில் எவருமில்லை. தாளுண்ட நீரைத்தலையாலே தரும் தெங்கின் தகைமை வாய்ந்த கம்பர், தம்மை ஆதரித்த அண்ணலது பெருமையை என்றும் அழியாத வண்ணம் இவ்வுலகில் நிலை நிறுத்திப் போந்தார். நன்றி மறவாத நல்லியற் கவிஞர், வரையாது வழங்கிய வள்ளலின் பெருமையை வளமார்ந்த கவிகளில் அமைத்து வழுத்தும் முறை, அவரது செம்மைசான்ற சீலத்தை இனிதுணர்த்துகின்றது.



வறுமைக்கடலில் வீழ்ந்து வருந்திய மக்களை வெண்ணெயில் வாழ்ந்த வள்ளலார் ஆதரித்துக்காத்த அருமை உலகம் உள்ளளவும் அழியாததாகும். பொருளென்னும் புணையின்றி, வாழ்க்கைக்கடலில் வீழ்ந்து தயங்கிய வறிஞர்க்கு இவ்வள்ளல் ஓர் பெருங்கலமாய் அமைந்தார்.


"மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு
எஞ்சுறக் கடிதெடுத் தெறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில்
தஞ்சமென் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்."

 

என்று வள்ளலின் பெருமையைக் கம்பர் வாயாரப் பகழ்ந்தார். தென் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே நின்ற நெடுங்கடலில் அணையமைக்கப் போந்த வானரவீரர், பெரியமலைகளைப் பெயர்த்துக் கடலுள் வீசி யெறிந்தார் இங்ஙனம் திசைகளினின்றும் வானரங்கள் யெறிந்த மலைகளை, நளன் என்னும் வானரத்தச்சன் வரிசையாக அடுக்கி அணையில் அமைத்தான். மாண்புற நிமிர்ந்து நின்ற மலைகள் உவர்க்கடலில் வீழ்ந்து உலையாவண்ணம், கலையின் வன்மையால் ஆதரித்து அணையில் அமைத்துக்கள். காத்த நளனது தன்மை, தஞ்சமென் றடைந்தோரைத் தாங்கும் தகைமை வாய்ந்த வெண்ணெயூர்ச் சடையனது வண்மையை நிகர்த்ததென்று கவிகூறும் அழகு சால இனியதாகும். நிலத்தில் அமைந்த மலைகளைப் பெயர்த்தசைத்துக் கருங்கடலில் வீசிய வானரம், மக்களாய்ப் பிறந்தோரை அலைத்துக் குலைத்து, துயர்க்கடலில் வீழ்த்தும் வறுமையை நிகர்த்தது. வானரத்தின் கொடுமையால் நிலைகுலைந்து நீரில் வீழ்ந்தழிய வந்த மலைகள், அங்கு நளன் என்னும் நல்லானைக்கண்டு அவனைச் சரண் அடைந்த தன்மை, வறுமையின் கொடுமையால் துயர்க்கடலில் வீழ்ந்து அழியவந்த வறிஞர், வெண்ணெய் நல்லூர் வள்ளலாரைத் தஞ்ச மடைந்த தன்மையை ஒத்திருந்தது. அஞ்சிவந்த மலைகளுக்கு அபயம் அளித்து ஆதரித்து அணையில் அமைத்த நளன், வருந்தி வந்து தஞ்சமடைந்த வறிஞரை ஆதரித்துத் தாங்கிய வள்ளலை ஒத்தான் என்று கவிஞர் கூறும் முறை கற்போர் கருத்தைக் கவர்வதாகும்.

 

இத்தகைய வள்ளலைக்கண்ட வறுமைநோய், கதிரவனைக்கண்ட காரிருள் போல் கடுகி ஓடிற்று. வறுமையால் நலிந்த வடமொழிவாணரும், தென் தமிழ் அறிஞரும், பாசம் கலந்த பசிநோயினின்றும் விடுபட்டுப் பண்புற்ற பான்மையைக் கம்பர் இனிய மொழிகளால் எழுதிப் போந்தார்.


"வாசங்கலந்த மறைநாள நூலின் வகையென்பதென்னை மழையென்று
ஆசங்கைகொண்ட கொடைமீளி யண்ணல் சாராமன் வெண்ணெய்அணுகும்
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர்
பாசங்கலந்த பசிபோ லகன்ற பாதகன் துரந்த உரகம்.''


என்று கம்பர் அருளிய கவியின் நயம் கருதத் தக்கதாகும். இலங்கையில் நிகழ்ந்த பெரும் போரில் மேகநாதன் என்னும் வீரன், வானரசேனையை நாகபாசத்தாற் பிணித்தான்; வீரன் விடுத்த பாசத்தின் வெம்மைக்கு ஆற்றாது வானரசேனை வருந்தித் தளர்ந்தது. இவ்வாறு இறுகப் பிணித்த நாகபாசம் கலுழனைக் கண்டபோது வலியிழந்து இற்று ஒழிந்த தன்மையைக் கம்பர் ஓர் உவமையின் வாயிலாக உணர்த்திப் போந்தார் . நூலறி புலவரைப்பற்றிய பசி நோய், வெண்ணெயூர் வள்ளலாரைக் கண்டபோது அற்றொழிந்தாற் போன்று, வானர சேனையைப் பிணித்த நாகபாசம், கலுழனைக் கண்டபோது இற்றொழிந்ததென்று கம்பர் கூறும் உவமை கனிந்த இன்பம் பயப்பதாகும்.
ஆகவே இருமொழிப் புலவரையும் நல்விருந்தா யேற்று ஆதரித்த வள்ளலின் பெருமை இக்கவியில் இனிது விளங்கக் காணலாம்.

 

வறுமையின் பகைஞராய் விளங்கிய இவ்வள்ளலது புகழ், எத்திசையும் தவழ்ந்து பரவிற்று.


“வண்ணமாலை கைபரப்பி உலகை வளைந்த இருளெல்லாம்
உண்ண எண்ணித் தண்மதியத்து உதயத்தெழுந்த நிலாக்கற்றை
விண்ணும் மண்ணும் திசையனைத்தும் விழுங்கிக்கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன்புகழ்போ லெங்கும் பரந்துளவால்.”

என்று பாரெங்கும் பாந்துநின்ற வள்ளலின் புகழைக் கவிஞர் பண்புற எழுதிப் போந்தார்.
 

செம்மைசான்ற கரங்களோடு இம்மண்ணுலகில் தோன்றிய வள்ளல் போல், தண்கதிர்த் திங்கள் கால் வீசி எழுந்தது. உலகில் நின்ற வறுமையை நீக்கி எங்கும் புகழ்விரித்த வள்ளலேபோல், உலகில் நின்ற இருளை விழுங்கித் திங்கள் எங்கும் ஒளிபரப்பியது. வறுமை வாய்ப்பட்டு வருந்திய உலகம் வள்ளலது இன்முகங்கண்டு மலர்ந்தாற் போன்று, இருளில் இடருற்ற மக்கள் மதியின் முகங்கண்டு மகிழ்ந்தார்கள். வள்ளலது புகழ் வா வா விரிந்து வையமெலாம் பரவிய பான்மைபோல், மதியின் ஒளி வர வர வளர்ந்து உலகெங்கும் பரவிற்று. சாதியென்றும் குலமென்றும் கருதாது வறியவர்க்
கெல்லாம் வரையாது பொருள் வழங்கிய வள்ளல் போல், நாடென்றும் காடென்றும் நோக்காது கடலென்றும் திடலென்றும் கருதாது, திங்கள் எங்கும் ஒளி வீசியது என்று கம்பர் கூறும் முறை சால அழகியதாகும்.

 

இவ்வாறு ஓங்கு புகழால் உலகளந்த வள்ளல், சான்றாண்மை என்னும் சீலத்தில் தலைசிறந்து விளங்கினார். சான்றோர் தன்மை கூறப்போந்த தமிழ்மறை ஆசிரியர்,


''ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப் படுவார்.''


என்று அமைந்த மொழிகளால் அருளிப் போந்தார். ஊழி பெயரினும் பெயராத உறுதிமொழி வேளாண் மாந்தர்க்குரிய தென்று பழந் தமிழ்ப் புலவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள். இத்தகைய சொல்லுறுதி வாய்ந்த சடையப் பரது சீலத்தை,


“விண்ணவர் போயபின்றை விரிந்த பூ மழையினாலே
தண்ணெனும் கானநீங்கித் தாங்கருந் தவத்தின்மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன சடையன் வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லேயன்ன படைக்கல மருளினானே.”


என்னும் அருங் கவியின் வாயிலாகக் கம்பர் அறிவித்துப் போந்தார். வெண்ணெய் நல்லூர் வள்ளலது வாய்ச் சொல், சிறிதும் வழுவாது கருதிய பயனைத் தருதல் போன்று, குறி விலகாது கொற்றம் தரும் படைக்கலங்களை முனிவர் இராமனுக்கு அளித்தா ரென்று கம்பர் கூறும் உவமை வள்ளலது சான்றாண்மையை இனிது விளக்குகின்றது. முனிவர் அளித்த படைக்கலம், உலகில் தீமையை ஒழித்து நன்மையை நிறுத்திய தன்மைபோல், வள்ளலின் வாயுரை, துன்பத்தை யகற்றி இன்பத்தை நிலைபெறச் செய்ததென்னும் பொருள் குறிப்பாகக் கிடைப்பதாகும்.

 

இவ்வாறு சடையனது பெருமையைப் போற்றிப் புகழ்ந்த கம்பர் தலையாய உதவி செய்த அத்தக்காரைத் தமது நூலில் வைத்தற்குரிய இடந்தெரிந்து வைத்துள்ளார், என்று கூறுதல் மிகையாகாது. இராம காதையின் சென்னியாய்த் திகழும், முடிசூட்டு விழாவில் மதித்தற்கரிய மாணிக்கமாய வள்ளலது பெருமை மலையிலமைந்த ஒளிபோல் மாண்புற விளங்குகின்றது.

ஆதி மன்னனது வாய்மை காத்து, அன்னையின் ஆணையை மேற்கொண்டு பதினாலாண்டு படர் கானகத் தலைந்து, அறநெறி துறந்த அரக்கரை வென்று, மீண்டும் அயோத்திமா கோடைந்த அஞ்சனவண்ணனாய இராமனுக்குத் திருமுடிசூட்டிய திருந்திய விழாவில்,


"அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாளேந்தப்
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரிவீச
விரைசெறி குழலியோங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி."


என்று கவிஞர் கூறும் முறை கருதி மகிழத் தக்கதாகும். இருமையும் தரும் பெருமானாய இராமன் திருமுடி தரிக்கும் இனிய காட்சியைக் கண்டு களிக்கும் வண்ணம் விண்ணவரும் மண்ணவரும் மாளிகையில் விரைந்து நிறைந்தார்கள். மாநிலங் காக்கும் மன்னரும், அறநெறிபோற்றும் ஆன்றோரும், முற்றத் துறந்த முனிவரும், அறிவிற் சிறந்த அமைச்சரும் இமையாது காத்திருந்த அப்பெருஞ் சபையில் அரியாசனத்தில் இனிதமர்ந்த இராமனது சென்னியில் அமைதற்குரிய செம்மை சான்ற திருமுடியை அங்கையாலெடுத்து அருந்தவ முனிவன் கையில் கொடுக்கும் பெருமை வெண்ணெய்நல்லூர் வள்ளலார்க்கு வாய்த்தது.

 

அரியாசனத்தை அநுமன் தாங்கி நிற்க, அங்கதன் உடை வாளேந்தி அருகே நிற்க, பரதன் வெண்குடை கவிக்க, இருதம்பியரும் இருமருங்கும் கவரி வீச, அருந்தவரும், அந்தணரும், அரசரும், அரிக்குல வீரரும் அணியணியாய் அமர்ந்திருக்க, வெண்ணெய்நல்லூர் வள்ளலது மரபில் உதித்த பெருந்தகையார் மணிமுடியை எடுத்து மாதவன் கையில் கொடுக்க, மாதவன் அம்முடியை மன்னனது சென்னியில் அணிந்தான். இதுவே கம்பர் நம் கண்ணெதிரே எழுதிக்காட்டும் உயிர் ஓவியமாகும். இவ் வோவியத்தின் அமைதியை ஆராய்வாம். அரக்கரொடு நிகழ்ந்த அரும் போரில் வீரர் இருவரையும் தாங்கிக் காற்றினும் கடிய வேகத்தோடு அமர்புரிந்த அநுமன் இராமனது திருவடியைத் தாங்கி நிற்கும் பெருமை பெற்றான். வானா நாட்டை அரசு புரிந்த வாலியின் கண்ணடையும்போது, கை வாளளித்துக் கையடையாக ஏற்ற அங்கதன் உடைவாளை ஏந்தி நிற்கும் உரிமை பெற்றான். மன்னன் காடுறைந்த பதினாலாண்டும் அவன் பாதுகையால் உலகாண்ட நீதியின் நிலைய மாய பரதன், வெண்குடை கவிக்கும் விழுப்பம் பெற்றான். ஐயன் பணியே தமக்கு அமைந்த பணியாகக் கொண்ட இலக்குவனும் இளையவனும் இரு
மருங்கும் கவரி வீசும் பேறு பெற்றார். கோசலநாட்டு மன்னர்க் கெல்லாம் குலகுருவாய் அமைந்த முனிவர், இரவிகுலப் பெருமையைத் தன் பெருமையாக்கிய இராமனுக்கு திருமுடி தரிக்கும் தகைமை பெற்றார். வேந்தன், செழித்தோங்குதற்குரிய வேளாண்மைத் தொழிலியற்றும் விழுமிய குடிகளின் சார்பாக, குணக்குன்றாய் விளங்கிய வெண்ணெய் நல்லூர் வள்ளலார், அம்மணிமுடியை எடுத்து தவும் மாட்சி பெற்றார். மேழி பிடிக்கும் கையே ஆழிவேந்தரை ஆக்கும் கை என்பது அரசியலின் அடிப்படையான உண்மை யன்றோ?

ஆனந்த போதினி – 1932 ௵- நவம்பர் ௴

 

No comments:

Post a Comment