Sunday, August 30, 2020

 

காலம் தவறாமை

 

     எந்தெந்தக் காரியத்தை எந்தெந்தக்காலத்தில் செய்ய வேண்டுமோ, அதனைத் தவறாமற் செய்வது காலந்தவறாமையாகும். காலந்தவறாமை என்பது இரண்டு வகைப்படும். குறித்த காரியத்தைக் குறித்த வேளையில் செய்வதொன்று; மற்றொன்று எந்தக் காலத்தில் எந்தக் காரியம் எதன் பின் செய்ய வேண்டுமென்னும் ஒழுங்கு தவறாமற் செய்வது.

 

குறித்த வேளையில், குறித்த காரியம் செய்வது 'வேளை தவறாமை'' எனப்படும்; அஃதாவது, ஒரு காரியத்தைச் சரியான நாளில், சரியான நேரத்தில், சரியான நிமிஷத்தில், அதனை எப்பொழுது செய்ய வேண் டுமோ, அப்பொழுது செய்வது அது ஆங்கிலத்தில் Punctuality என்று சொல்லப்படுகிறது.

 

எந்தக் காரியத்திற்குப்பிறகு எந்தக்காரியம் செய்யவேண்டுமோ, அதனைச் செய்வது, " ஒழுங்கு தவறாமை " எனப்படும்; அஃதாவது காலா காலத்தில் தவறாமல் இடையில் தடையேனும், தங்கலேனும் இல்லாமல், எதன் பின் எது என்னும் விதியை அனுசரித்து, ஒரே ஒழுங்காக வேலை செய்வது.

 

வேளை தவறாமையும், ஒழுங்கு தவறாமையும் சேர்ந்து "காலந் தவறாமை" யாகும்.

 

காலம் என்பதை நேரம், சமயம், வேளை என்றும் அறிவுடையோர் கூறுவர். உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், குடியானவர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் காலத்தைக் கவனித்து அதன்படியே நடக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். உத்தியோகஸ்தன் எந்தக்காலத்தில் எவ்விதமாக நடந்தால் தன்னுடைய எஜமானர்கள் சந்தோஷமடைந்து தனக்கு நன்மை செய்வார்கள் ளென்பதையும், வியாபாரி காலாகாலத்தில் சரக்குகளைத் தருவித்து, காலத்திற்கேற்ற சாமான்களையே விற்று லாபமடைய வேண்டு மென்பதையும் உணரவேண்டியவர்களாகிறார்கள். விவசாயி எந்தக்காலத்தில் எந்தப் பயிரைப்பயிரிட வேண்டு மென்பதை அறிய வேண்டும். இது பற்றியே ''பருவத்தே பயிர் செய்" என்பது கூறப்பட்டிருக்கிறது.

 

முக்கியமாய் மனிதர் "காலந்தவறாமை" யென்னும் சிறந்த குணத்தை வீணில் கழித்துவிடாமல் கசடறக்கற்று சான்றோர்களாக வேண்டும். இதையறிந்தே நமது மூதோர் "இளமையிற் கல்'" என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

வேளை தவறாத வழக்கத்தையும், ஒழுங்கு தவறாத வழக்கத்தையும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே கற்காவிட்டால், அவர்கள், வயது வந்த பிறகு உலகில் இல்லறத்தில் ஒழுகும் பொழுது, யோக்கியதை இல்லாதவர்களென்று பலரால் நினைக்கப்படுவார்கள். காலத்தினருமையை உணர்ந்து அவ்வச்சமயங்களில் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் வீணே காலத்தைக் கழிப்பவர்களே சோம்பேறிகள் என்று அறிஞரால் கூறப்படுவார்கள்.

 

அப்படிப்பட்டவர்களுக்குத் தொழிலாளிகளும், உத்தியோகஸ்தர்களும், மற்ற எவரும் வேலை கொடுக்கமாட்டார்கள். சோம்பேறிகளான வேலைக்கா ரர்கள் தங்கள் இஷ்டப்படி நேரங்கழித்து வந்து வேலை செய்கிற வரையில் யஜமானன் வேலை செய்யாமல் யந்திரங்களை நிறுத்தி வைத்திருக்கலாமா? ஐயர் வருகிற வரையில் அமாவாசை காத்திருக்குமா? காலமும், வேளையும் மனிதனுடைய அனுகூலத்தை அனுசரித்துக் காத்திரா!

 

காலந்தவறாமை என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், ஆகாயத்தின் கண் உள்ள சந்திர சூரியர்களையும், பூமியின் கண் உள்ள மரங்களையும் பார்த்து வருவோமானால் கற்றுக்கொள்ளலாம். எப்படியெனில் சந்திர சூரியர்கள் உதிக்க வேண்டிய காலத்தில் உதித்து, அஸ்தமிக்க வேண்டியகாலத்தில் அஸ்தமிக்கிறார்கள். தவிர, மரங்கள், தங்களுடைய இலைகளை உதிர்த்துக்கொள்கிற காலத்தில் உதிர்த்துத் தளிர்க்கவேண்டிய காலத்தில் தளிர்க்கின்றன.

 

ஆகையால் நாமும் "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'' என்னும் பழமொழியை மனதில் வைத்து, எந்தெந்தக்காரியத்தை எந்தெந்தக் காலத்தில் செய்து கொள்ள வேண்டுமோ, அந்தந்தக் காலத்தில் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் பின்னால் கஷ்டப்படுவோம். எப்படி யெனில் காற்று அடிக்குஞ் சமயத்தில் தானியத்திலுள்ள, குப்பை, கூளங்களை நீக்காவிட்டால், பிறகு அவைகளை நீக்கு வதென்றால் கஷ்டமாகுமல்லவா? அதுபோல் நாமும் வேளையைத் தவறவிட்டால், கஷ்டப்படுவோம் என்பதாம். காலம் செய்வது ஞாலம் செய்யா.

 

K.இரங்கையன்,
      காரமடை

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴

 

 



   

 

No comments:

Post a Comment