Monday, August 31, 2020

 

சந்நியாச லக்ஷணம்

கர்மமானது மோக்ஷத்திற்குப் பரம்பரைச் சாதனமேயன்றி நேர் (சாக்ஷாத்) சாதனமாகாது. ஞானமே சாக்ஷாத் சாதனமாம். ஆகையால் சகலகர்மங்களையும் அறவே விட்டு ஞானத்தையே அடைய முயலவேண்டும். அப்படிச் சகல கர்மங்களையும் விடுவதே சந்நியாசமாம். சந்நியாசம் என்பதற்குச் சகல கர்மங்களையும் நன்றாக விடுதலைச் செய்வது என்பது பொருளாம். எங்ஙனமெனின், சந்நியாசம் என்னும் பதம் உபராமம் என்னும் சப்தத்தால் வழங்கப்படுகின்றது. உபராமம் என்பது விடுதலையாம். ஆகவே, (சம் = நன்றாக; நியாசம் = பரித்யாகம் அல்லது விடுதலை) சகல கர்மங்களையும் நன்றாகத் தியாகம் செய்தல் சந்நியாசமாம்.

 

கர்மங்களை ஏன் விடவேண்டு மெனின்: - கர்மத்தாலுண்டாம் பலனானது நித்தியமானதன்று; அநித்தியமாகும். முத்தியோ நித்தியமானது. ஆகையால் நித்தியமான வீடுபேற்றை (மோக்ஷத்தை) அடைய விரும்புவோர்க்குக் கர்மத்தினால் ஒரு பயனுமில்லை. (கர்மத்தால் முத்திசித்திக்காதோ? எனின்: கூறுகிறார்.) கர்மத்தாலுண்டாகும் பயனானது உற்பத்தி செய்யத்தக்கதும் அடையத்தக்கதும் செவ்வைப் படுத்தத் தக்கதும் விகாரம் (வேறுபாடு) அடையத்தக்க துமென நான்கு வகையாயுள்ளது. இவற்றைத்தவிர வேறொன்றில்லை. பிரம்மம் தனக்குத்தானே சித்தமாயிருப்பதாகலின் உற்பத்தி செய்யத்தக்கதல்ல; எப்பொழுதும் அடையப் பட்டே யிருக்கின்றதாகலின் அடையத்தக்கதுமல்ல; நிர்க்குணமாயும் நிர்மலமாயுமிருப்பதாகலின் செவ்வையாக்கத் தக்கதுமல்ல; கிரியையற்றதாகலின் விகாரமடையத் தகுந்ததுமல்ல (இவற்றை விவரிக்கிறார் ஆசிரியர்.)

 

பிரம்மம் உற்பத்தியில்லாதது: - 'பிரம்மத்தின் உற்பத்திக்குக் காரணமாயுள்ளவ னொருவனுமில்லை'' என்னும் வேதவாக்கியத்தின்படி பிரம்மமேமற்றெல்லாவற்றின் உற்பத்திக்குக் காரணமாயிருப்பதன்றி அது மற்றொருவனால் உற்பத்தி செய்யத்தக்கதன்று,
 

பிரம்மம் அடையப்படுவதன்று: - அடைபவன் அடையப்படும் பொருள் என்னும் இவ்விரண்டிற்கும் பேதமிருந்தால் (அவையிரண்டும் தனித்தனிவெவ்வேறு பொருள்களாயிருந்தால்) அடைபவனால் அடையப்படும் வஸ்துவானது அடையப்படும். பிரம்மமோ அடைபவனுடைய சொரூபமாகவேயிருத்தலின் அடையத்தகுந்த பொருளன்று.

பிரம்மம் செவ்வை செய்யப்படத் தக்கதன்று: - அழுக்கடைந்ததான கண்ணாடி முதலியவைகளுக்கே * சம்ஸ்காரம் (செவ்வை செய்தல்) அங்கீகரிக்கப்படுகின்றது. ஆகாயத்தைப் போல நிர்மலமாயுள்ள பிரம்மத்திற்குச் சம்ஸ்காரம் சம்பவியாது. உலகத்தில் அழுக்கடைந்த பதார்த்தத்தினிடத்துள்ள அழுக்கைப் போக்கச் சம்ஸ்காரம் செய்யப்படுகின்றது. பிரம்மம்மலினவஸ்துவன்றே. நிர்மலமான தன்றோ! ஆகலின் அதற்குச் சம்ஸ்காரம் வேண்டப்படுவதின்று. தவிர, ஓர் வஸ்துவிற்கு மற்றொரு வஸ்துவால் தோஷம் நேரிடின் அத்தோஷம் சம்ஸ்காரத்தால் போக்கப்படும். இம்முறைமையின் படி பிரம்மத்திற்குத் தோஷத்தையுண்டாக்கும் பொருள் ஒன்றிருக்குமாயின் அது பிரம்மத்திற்கு அன்னியமாய் வேறானதாயிருக்க வேண்டும். பிரம்மம் அத்து விதமானது (இரண்டாவதற்றது); அதற்கு வேறாக மற்றொரு பொருளில்லை. மேலும் பிரம்மம் கிரியையற்றதாகலின் வேறொரு வஸ்துவுடன் சம்பந்தப்படத்தக்கது மன்று, ஆகலின் பிரம்மம் தோஷமுடையது மல்ல. சம்ஸ்காரம் வேண்டப்படுவதுமின்று.

 

* சம்ஸ்காரம் = மலத்தின் நிவிர்த்தி, குணத்தின் உற்பத்தி என இருவகை.
இங்கு மலநிவர்த்தி.

 

அன்னிய வஸ்துவின் சம்பந்தத்தால் உண்டாகும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பிரமத்தினிடத்து சம்ஸ்காரம் வேண்டாவிடினும் தைலத்திற்குச் சுகந்தம்
உண்டாக்குவது போல குணாதான (குணத்தின்) உற்பத்தி வடிவமான சம்ஸ்காரமாயினும் சம்பவியாதோ? எனின், ஒருகாலும் சம்பவியாது. ஏனெனின், ஓர் வஸ்துவிற்குக் குணத்தையுண்டாக்குதல் வேண்டுமாயின் அவ்வஸ்து குணத்தோடு கூடியதாயிருத்தல் வேண்டும். குணத்தோடு கூடியவஸ்துவிற்கே மற்றொரு குணத்தைச் சம்பந்தப்படுத்தலாம், பிரம்மம் நிர்க்குணமானதென்று வேதம் கூறுகின்றது. ஆகலின் நிர்க்குணமான பிரம்மத்திற்கு, தைலத்திற்குச் சுவாசனை யூட்டுதல் போல வேறொரு குணத்தையுண்டாக்குதல் வடிவ சம்ஸ்காரம் சம்பவியாது.


பிரம்மம் †
(விகாரப் படுவதன்று: - ஒரு வஸ்து விகாரமடையத் தக்கதாயின் அது அவயவங்களோடு கூடியதாயும் பரிணாமம் (வேறு வடிவம்) அடைவதாயுமிருக்க வேண்டும். அதை விகாரப்படுத்துவதற்கு வேறொரு வஸ்து வேண்டும். பால் முதலான வஸ்துக்கள் மோர் முதலானவைகளால் தயிர் முதலான வடிவங்களாகப் பரிணமித்தல் போல. ஆனால் பிரம்மமோ நிரவயவமானதாயும் கிரியையில்லாததாயும் இரண்டாவதற்றதாயுமிருத்தலின் விகாரமடையதக்கதல்ல. ரூபமற்றது, கிரியையற்றது, அசைவற்றது, அசங்கமானது என்று பிரம்மத்தின் உண்மை வடிவம் சுருதியுக்திகளால் நிர்ணயிக்கப்பட்டிருத்தலின் பிரம்மம் எவ்விதத்தினும் கர்மத்தால் அடையக்கூடிய தன்றாம். ஏனெனின் கர்மத்தாலுண்டாம் பயன் அநித்தியமானதாயும் பிரம்மம் நித்தியமான தாயுமிருத்தலின் என்க.

 

விகாரம் = முன் ரூபத்தை விட்டு வேறு ரூபத்தை அடைதல். இது பரிணாமம் எனவும் படும்.

 

புண்ணிய பாவங்களிரண்டும் கலந்ததாகிய மிசிர கர்மத்தினால் உண்டாகிய தேகம் முதலாகிய இவ்வுலகப் பொருள்கள் எங்ஙனம் அழிந்து போகின்றனவோ அங்ஙனமே புண்ணிய கர்மத்தாலுண்டாகும் சொர்க்கமும் நாசமடைகின்றது. 'எது கர்மத்தாலுண்டாகின்றதோ அது அநித்தியமான' தென்று சுருதி கூறுகின்றது. சொர்க்கமும் கர்மத்தாலுண்டாவதாகலின் அநித்தியமேயா மென்பது இதனால் விளங்குகின்றது.

 

ஜெகத்திற்குக் காரணவஸ்து எதுவோ அது நித்தியமான தென்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. ஜெகத் காரணமாயிருப்பது பிரம்மமேயென்று சுருதியானது அறுதியிட்டுக் கூறுதலின் அப்பிரம்மம் நித்தியமானதேயாகும். சுவர்க்கமும் அப்பரப் பிரம்மத்தினாலுண்டானதே. 'பிரம்மமொன்றே முக்காலத்துமுள்ளது' என்பது சுருதி வாக்கியம். இதனால் பிரம்மத்திற்கே நித்தியத்துவம் சித்திக்கின்றது.

 

(தொடரும்)


 பூ. ஸ்ரீனிவாசன், சித்தூர்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment