Sunday, August 30, 2020

 

கள்ளுண்ணாமை

 

வானஞ் சூழ்ந்த இம்மண்ணுலகில் படைத்தல், காத்தல், அழித்தல், எனும் முத்தொழிலையும் முறையே நடாத்திச் சித்தம் மகிழத் திருவிளையாடல்கள் பல புரியுங் கடவுளால் புண்ணிய பூமியா மிப்பாரத நாட்டில்,


 "அண்டசஞ் சுவேதசங்க ளுற்பீசஞ் சராயுசத்தோ
 டெண்டரு நாலெண்பத்து நான்கு நூ றாயிரத்தா
 யுண்டு பல் யோனியெல்லா மொழித்து மானுடத் துதித்தல்
 கண்டிடிற் கடலைக்கையா னீந்தினன் காரியங்காண்''

 

என்னும் பெரியார் மொழிப்படி, எறும்பு முதல் யானையீறாகவுள்ள எண்பத்து நான் குலக்ஷ ஜீவபேதங்களுள் மானிடஜன்மம் பெறுதல் அரிதாம். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது' என்பது ஈங்கு நினைக்கத்தக்கதே.

 

இம் மானிடரில் சிலர், நாகரீகமும், கல்வியும், நலனுறுபயனும் அமைந்து வரும் இக்காலத்திலும் பெரியோர்களாலே புறக்கணிக்கப்பெற்ற காதல். கவறாடல், கள்ளுண்டல், பொய்ம்மொழிதல், ஈதல் மறுத்தல் எனும் பஞ்சமா பாதகத்துளொன்றாகிய "கள்ளுண்ணல்' எனும் இக்கொடிய பாவச் செய்கையை நனிபெருகக் கையாண்டு வருகின்றனர். நண்பர்காள்! இது வியக்கத் தக்கது.

 

இக்கொடிய "கள்ளுண்ணல்'' என்னும் பழக்கமானது பண்டைக்காலத்தில், பகுத்தறிவென்பது சிறிதுமில்லாத பாமரமானிடரிடத்துப் பதுங்கியிருந்தது. இக்காலத்திலோ அரசநீதியால் அமைவுறக் கல்விகற்றுச் சிந்தை பொலிவுறும் பூமான்களிடத்தும் பொருந்தியிருப்பது அந்தோ பரிதாபம்! பரிதாபம்!! மிகப்பரிதாபம்!!!

 

நற்குடிப்பிறந்து நலனுறு கல்வி சிக்கறக்கற்றுச் சிறந்து விளங்கிய திருவாளர்களே! இக்கட்குடி உங்களை யெவ்விதங் கவர்ந்து கொண்டது? வேற்று மக்களைச் சார்ந்த சேர்க்கைப்பழக்கத்தால் இதுநேர்ந்ததா? அன்றித் தற்காலத்துத் தங்கிய நாகரீகம் இதிற்புகுத்தியதா? அன்றிக் கலிகாலத்தின் கொடுமையதிகரிப்ப உங்கள் சிந்தை யியற்கையாகவே இதன்பால் சென்றதோ? எவ்வகையாலோ நீங்கள் கட்குடியென்னுங் கடியவிடமதை யுட்கொளலானீர்கள். கள்ளருந்துஞ் செல்வர்காள்! 'இக்காரணத்தால் எம்மை யணுகியது இக்கொடிய கட்குடி' யென்று எடுத்துக்காட்ட நீங்கள் நாணுவீர்கள்; அதனால் நாமே இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு தீர்மானஞ் செய்வோம்: - இதைப் பற்றிச் சிந்திக்குமிடத்து இது செயற்கையாலேற்பட்டதே யன்றி யியற்கையாலானதல்ல வென்பது நன்கு விளங்குகின்றது. கெட்ட சேர்க்கையால் கெட்ட குணங்கள் உண்டாவது இயற்கை. இதனாலேயே,


 "தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
 தீயார் சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
 குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
 டிணங்கி யிருப்பதுவுந் தீது''

 

என்று ஒளவையாரும் கூறியுள்ளார். இன்னும் தீயாரைச் சேர்ந்த நல்லோருந் தீயகாரியங்களை அஞ்சாது செய்வாரென்பதை இராமாயணம் இலங்கை யெரியூட்டு படலத்தில், அரக்கர் மாளிகையைப்பற்றிய தீ, ஆங்குள்ள கள்ளையும், சுள்ளையும் அஞ்சாது உட்கொண்டது என்று கூறியதனால், செம்மொழி பகர்ந்த கம்பரும் விளக்கியுள்ளார். இதை யனுசரித்து " பன்றியோடு சேர்ந்த கன்றும் மலந் தின்னும்" என்ற பழமொழியும் வழங்கி வருகின்றது. இவ்வாறு செயற்கையினாலேற்படும் குடியினாலுண்டாகு மிழிவு மிகவும் அருவருக்கத் தக்கது.

 

கள்ளுண்ணுமொருவன், தான் கள்ளுண்ணாக்காலத்தில், கள்ளுண்டு களித்து அதனாலே தன் பெருமை குறைந்து துன்புடைமுகத்தனாய்த் துஞ்சினவன் போல மயங்கி, மானமிழந்து, மதியிழந்து, எல்லோரு மிகழத்திரியு மொருவனைக்காணின் அதன் இழிவு, தானே புலப்படும். அவன் தன் மனதில் அதை நினைத்தேனும், குடியை அடியோடு விட்டு விடாமல் அந்தோ! பின்னர்த் தானுங் குடித்துத் தன் மனைவிக்கும் வாங்கிக்கொண்டு போகின்றான்; அவளும் குடிக்கின்றாள். பின் அவனும் அவன் மனையாளும் தலைவிரித்தாடுகிறார்கள். இதை என்னென்று சொல்லுவது! இதனிழிவை பொய்யாமொழிப் புலவரும்,


 "கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
 லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு "


 "துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
 நஞ்சுண்பார் கள்ளுண் பவர்''


 ''கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
 மெய்யறி யாமை கொளல்''


என்னும் செய்யுட்களால் விளக்கியிருக்கிறார். வைத்திய நூல்களிலும் கள்ளுண்டலின் கெடுதி கூறப்படுகின்றது.


 ''பாதமதி லே திமிரும் பாண்டொடு சோ கைபருக்கள்
 வாதபித் தம்கிராணி வன்கரப்பன் - பேதியிவை
 பொங்கி யதிகரிக்கும் புத்திகெடு மேகமுண்டாம்
 தங்குமது விற்கெனவே சாற்று "


என்னும் வைத்தியச் செய்யுளால், மது வருந்துதலின் கெடுதிகளை நன்குணரலாம். இவ்வாறு மதுவினால் வேறுபல கெடுதிகளை அடைவதோடு இப்பிணிகளின் வாயகப்பட்டு, மனிதர் வருந்தினால், அவர்கள் எடுத்த மானிடப்பிறவியின் பயனை எவ்விதமடையக்கூடும்? இன்னும் குடியினால் எவ்வளவோ மானக்கேடும் நேர்கின்றது. அந்தோ! கள்ளுண்டு மயங்கி, வரையறுத்த காலந்தாழ்த்த சுக்கிரீவன் கருணையங்கடலாம் ஸ்ரீராமபிரானைக்கண்டு தொழ நாணிநின்ற நிலை எவரே யறியாதார்? பலவாந்துன்பம் மிகவுள் கட்குடிக்கென்பது இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாலும் குடியினால் துன்பமுண்டாகுமென்பதை யுணரலாம்.

 

பஞ்சமாபாதகங்களாகிய காதல், கவறாடல், கள்ளுண்டல், பொய்ம்மொழிதல், ஈதல் மறுத்தல் என்பவற்றுள் நடுவில் விளங்கும் கள்ளுண்ணல் ஏனைய நான்கையும் உண்டாக்குமென்பது பெரியோரால் கூறப்படுகின்றது. அதன்படி கள்ளுண்டவொருவன் காதல், கவறாடல், பொய்ம்மொழிதல், ஈதல் மறுத்தல் என்னும் ஏனைய நான்கு குற்றங்களையும் செய்தே தீருவான்.

 

மாபாதகங்களையும், கட்குடித்த வொருவன் அடைகிறானென்ற கருத்தைக் கொண்டே, எந்நூலினுஞ் சிறந்து விளங்கும் நன்னூலின்கண் அந்நூலாசிரியராகிய பவணந்தி முனிவர், மாணாக்கரது இயல்புகூறுமிடத்து,


"களி மடி மானி.................................................................................. ...................... பகரார் நூலே " என்ற சூத்திரத்தில் 'களி' என்னும் கட் குடிப்பவன் பெயரை முதன்மையாக வெடுத்தார். இன்னும் உலகில், அன்பே சிறந்ததென்றும், " அன்பே சிவம் ", " அன்பின் மயமே கடவுள் " என்றும் அவ்வன்பின்மயமாகிய அவனடி சாருதலே மானிடப்பிறவியின் பயனென்றும் ஆங்காங்குப் பல பல விடங்களிலும் பெரியார் வரைந்துள்ளார்கள். அப்படியிருந்தும் கள்ளுண்ட வொருவன் களிப்பால் அன்பினை யொழித்து அந்தோ! மனைவி மக்களையும், மற்றுஞ் சிலரையும் நினைவு தடுமாறி நின்றுகத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை புரிகின்றனன். இவற்றை யுற்று நோக்குங்கால் மதுவுண்பான் மனிதவகுப்பைச் சார்ந்தவனல்லவென்பது விளங்கும். இன்னும் குடிப்பழக்கம் செய்யும் கொடுமைகளோ எண்ணில்;


 '' அறிவை யழிக்குஞ் செயலழிக்கு மழியா மானந் தனையழிக்குஞ்
 செறியு மறிஞர் மதியாத செருக்கை விளைக்கு மீன்றாளு
 முறியும் வெறுப்பு மிகவிளைக்கு முனிவு விளைக்கும் பகையஞ்சாக்
 குறிகள் விளைக்கு நகைவிளைக்குங் கொள்ளேல் கள்ளுண் டலைமைந்தா''


என்ற செய்யுளிற் கூறியவற்றையெல்லாம் அது உண்டாக்கும்.

 

செந்தமிழ்ச் செல்வர்காள்! பொருளைக் கொடுத்து மதுவருந்திச் சுகமிழந்து, பொறுமை நீங்கி, போர்தொடுத்து, அவயவங்களில் சில இழந்து, அன்னை, பிதா பகரு மொழியையும் இகழ்ந்தவராய், கொதிக்குஞ் சிந்தையுடையவராய், கைக்கொள்ளும் மானம் முதல் பொருள்கள் இழந்தவராய்த் திரிவோர் அறிஞரால் புறக்கணிக்கப்படுவர். ஆதலின், நண்பர்காள்! அரவின் வாயிலகப்பட்ட தேரைபோலவும், ஆலைவாயகப்பட்ட கரும்பு போலவும், கடன் துன்பத்திற் சிக்கியவர் போலவும், " கள் " வாய்ப்பட்டுக் கலங்கி வாடாது, சிந்தை தெளிந்து, அறத்தின் வழி நடந்து, அன்புடையீராய் நல்வழியில் பொருள் பலவீட்டி, புவியில் சிறந்து விளங்கி வாழ்வீராக. எடுத்ததேகம் துணையாக அதன்கண் தங்கிய " ஜீவாத்மா " வென்னும் தனிப்பொருளைச் சேர்க்குமிடமறிந்து சேர்ப்பிக்க வேண்டுமானால் கட் குடியைக் கனவிலும் நினையாதீர்கள். அன்புடையீர்! "கள்ளுண்ணாமை" என்னும் கடியரணுள் நின்று கவலையற்று வாழவே நான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன். என் நண்பர் பலரும் குற்றம் நீக்கிக் குணங்கொண்டு உவகையடையுமாறு வேண்டுகிறேன்.

 

R. இராமசுவாமி, மாணவன்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment