Monday, August 31, 2020

 கீதையும் வருணபேதமும்

 

      பண்டைக்காலத்தில், தமிழ் நாட்டில், ஜாதிப் பிரிவினைகள் தற்காலம் இருப்பது போல் இருந்ததாகத் தெரியவில்லை. ‘ஜாதி’ என்னும் பதமும் அதே பொருளில் வழங்கிவருகிற ‘வர்ணம்’ என்னும் பதமும் தமிழ் மொழிகளாக இல்லாமையும் இதற்கோர் சான்றாகும். ஆனால், அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் பகுப்புக்களின் பெயர்கள் பண்டைய நூல்களில் காணப்படுகின்றன. எனினும், இவை தொழில் பேதம் பற்றி யுண்டான பிரிவினைகள் என்பது ஆன்றோர் அபிப்பிராயமாகும். தற்போது வழங்குகின்ற பிராம்மண க்ஷத்திரிய வைசிய சூத்திரப் பிரிவினைகள் ஆரியரால் உண்டு பண்ணப்பட்டவை என்ப. ‘புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அழித்தது’ என்னும் பழமொழியின்படி, ஆரியப் பிரிவினைகள் தோன்றிய பின் பழைய பாகுபாடுகள் மறைந்தன. இப்புதியது எப்போது வந்தது எப்படி வந்தது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தற்கால நிலையை நோக்குமிடத்து பயன்ற்றவை. எப்பொழுதோ எப்படியோ வந்து பின்னிப் பிணைந்து கொண்டுவிட்டன. இருப்பினும் குறையில்லை. அப்பாகுபாடுகளும் தொழில் பற்றி எழுந்தனவே யென்பது ஆராய்ச்சியால் புலனாகின்றது. பிராஹ்மணர் க்ஷத்திரியர் வைசியர் – இவை மூன்றும் அந்தணர் அரசர் வணிகர் என்பவற்றோ டொப்பானவை. சூத்திரர் என்பதற்கு மனுதர்ம சாத்திரம் முதலியவற்றில் இழிவான பொருள் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லுகின்றனர். அது எவ்வளவு உண்மை யென்பதை யாமறியோம். நிற்க.

     

      இப்பாகுபாடுகள் மனித சமூகத்தில் இயல்பாகவே உண்டாவனவாம். இது எந்நாட்டிலும் உள்ளதே யன்றி நம் நாட்டில் மாத்திர முள்ளதன்று. தொழில் என்று என்று எப்பொழுது ஏற்பட்டதோ அப்பொழுதே இப்பிரிவினையும் ஏற்படவே செய்யும். ஏற்படாமலிருக்க முடியாது. மட்பாண்டம் செய்வோரை மண்வினைஞ ரென்றும், தச்சுவேலை செய்வோரைத் தச்சரென்றும், கணக்கு எழுதுவோரைக் கணக்கரென்றும், ஆடை வெளுப்போரை வண்ணாரென்றும், மயிர்த் தொழில் செய்வோரை மயிர் வினைஞரென்றும், வாணிபம் செய்வோரை வணிகரென்றும் அழைக்கப்படாமலிருக்க முடியுமோ? மேற்காட்டிய பெயர்களெல்லாம் தொழில் பற்றி யுண்டானவையோ அன்றோ பாருங்கள்.

 

      ஆகவே, தொழில் பேதத்தினால் வகுப்புப் போதங்களுண்டாயினவே யன்றிப் பிறவியினாலே உண்டாயின வென்பது அறிவுடையோ ரெவர்க்கும் அங்கீரமான விஷய மன்று. பிறப்பால் யாவரும் சமமானவர்களே.

     

     

“பிறப்பெக்கும் எல்லா வுயிர்க்கும், சிறப்பொவ்வா

      செய்தொழில் வேற்றுமை யால்.”

 

என்று பொதுமறை போதிப்பதும் இதுபற்றியே யாம்.

     

      இந்தத் தொழில்களும் அவரவர்களுடைய குணத்திற் கேற்பவே அமையும். ஒருவனுடைய குணம் இயல்பாகவே சாந்தமுடையதா யிருக்கும். மற்றெருவனுடைய குணம் சண்டையில் விருப்புடையதாயிருக்கும். மற்றொருவனுடைய குணம் பெரியோர்களிடத்தில் பக்தியும் விசுவாசமு முடையதாயிருக்கும். வேறொருவனுடைய குணம் கைத்தொழிலை விரும்பும். எல்லோருடைய குணமும் ஒரே தன்மையா யிருப்பதில்லை. ஆகவே, அவரவர்கள் தத்தம் குணத்திற் கேற்றவாறே தொழில்களை கைக்கொள்ளுதல் இயல்பேயன்றோ? இதுவே, வகுப்புப் பிரிவினைகளுக்குக் காரணமா யிருக்கிறது.

 

      (1) சாந்தம், பக்தி, நன்னடக்கை, இரக்கம், கருணை, பற்றின்மை முதலிய குணங்களை யுடையோர் ஒரு சாரார்.

      (2) அஞ்சாமை, க்ஷாத்திரியம், தேசத்தைப் பாதுகாக்க வேண்டியவகையில், முயற்சி, ஆண்மை முதலிய குணங்களை யுடையோர் மற்றோரு சாரார்.

      (3) பசுக்காத்தல், ஊரார்க்குத் தேவையான பண்டங்களை அவை கிடைக்குமிடங்களிலிருந்து கைப்பணத்தை யனுப்பி வரவழைத்து சொற்ப லாபத்திற்குக் கொடுத்தல், தானியம் விளைவித்தல் முதலியவற்றில் விருப்புடைய குணத்தினர் வேறொரு வகுப்பினர்.

      (4) சாதுக்களுக்குத் தொண்டு பூண்டு அவர் சொல்வழி நடந்து நன்மையை யடைய வேண்டும் என்னும் எண்ணத்துட னொழுகுவோர் பிறிதொரு வகுப்பினர்.

 

      இந்த நான்கு பகுப்புக்களே பிராம்மண க்ஷத்ரிய வைசிய சூத்திர பகுப்புக்கள். இதுவே பகவத்கீதையின் கருத்து.

 

1. பிராஹ்மணத்வம்.

 

      ஸமம் (ஐம்பொறி யடக்கம்), தமம் (மனோநிக்ரகம்), தபஸ் (துன்பத்தையடக்குதல்), ஸெளசம், (தேக சுத்தி), சாந்தி (பொறுமை), ஆர்ஜவம் (நேர்மை), ஞானம் (ஆன்ம வித்தை), விஞ்ஞானம் (பிரகிருதியும் அதன் காரியங்களும் எவ்வாறு ஆன்மாவோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன வென்ற ஞானம்), ஆஸ்திக்யம் என்ற பிராஹ்ம கர்மம் (ஆஸ்திகபுத்தி என்ற பிரஹ்மத்தை யடைவதற்காகப் பகவானால் அருளப்பட்ட குணங்கள்.)

 

2. க்ஷத்ரியத்வம்.

 

      செளரியம்; தேஜஸ், தைரியம், சாமர்த்யம், போரில் அஞ்சாமை, ஈகை, ஈஸ்வரபாவம் என்ற க்ஷாத்ரகர்மம்.

 

3. வைஸ்யத்வம்.

 

      கிருஷி, கோரக்ஷணை, வாணிபம், என்ற வைஸ்ய கர்மம்.

 

4. சூத்ரத்வம்.

 

      பரிசர்யாத்மக கர்மம் (ஏவல் செய்ய விரும்புவோன்.)

 

      இப்படி குணங்களுக்குத் தக்கபடி கர்மங்கள் அமைகின்றன. கர்மங்களுக்குத் தக்கபடி பகுப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த குணங்களாலும் கர்மங்களாலும் உண்டானவைகளே வருணபேதங்கள். நியதி பெற்ற சுயகுணங்களாகிய நற்குணங்களைப் பெற்றவர் மேலான நிலையை யடைந்த ஜாதிகளாதலால் போற்றத்தக்கவர்களாவர் என்ற பொருளில் வர்ணத்தார் என்று அழைக்கப்படுவர். (வரண்=போற்றுதல்.)

 

      வர்ணம் என்பதற்கு நிறம் எனப் பொருள் கொள்ளினும் அமையும்; எவ்வாறெனின்: குணங்களுக்க்யு நிறங்கள் கற்பிக்கப்பட்டிருத்தலின்.

 

      இந்த குணங்கள் பிரகிருதியினுடையவை; பிரகிருதியினின்றுந் தோன்றியவை. பிர-கிரு-தி என்பது சத்துவம் ரஜசு தமசு என்னும் மூன்று குணங்களுடன் கூடியது எனப் பொருள்படும் என்பர் பெரியோர். இந்த பிரகிருதியில் பரமேசுவரனது சித்சத்தி சென்று, பிரகிருதியின் மிஸ்ர குணத்தை மூன்றுகுணங்களாகப் பிரித்து சிருஷ்டிக்கிரமத்தைத் தொடங்கிற்று. பிறவியை யடையும் ஜீவாத்மா தன் பூர்வ கர்மத்திற் கேற்றவாறு இம் மூவகைக் குணங்களு ளேதேனுமொன்றைக் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே பெற்றுப் பிறக்கின்றது. ஆகையால் இக்குணங்கள் சுபாவ ஜன்யங்கள் எனப்படுகின்றன.

 

      இக்கருத்தையே பகவான் கீதையில், “குணவிபாகத்தாலும் கர்ம்விபாகத்தாலும் சதுர்வர்ணம் என்னால் சிருஷ்டிக்கப்பட்டன” (4-13), என்றும்,

 

      பிராஹ்மண க்ஷத்ரிய வைஸ்ய சூத்திரர்களின் கர்மங்கள் சுபாவ ஜன்ய குணங்களினால் வகுக்கப்பட்டன. (18-41) என்றும் கூறியருளினார்.

 

      எனவே, கர்மங்கள் ஜடமாகலின், பகவான் அவற்றை ஜீவர்களின் கர்மங்களுக்கேற்றவாறு முக்குணங்களின் வாயிலாகக் கர்மானுபவத்தை யடையும் பொருட்டு நான்கு வகுப்பினராக (வருணத்தினராக) சிருஷ்டித்தார். அதாவது, பகவானால் படைக்கப்பட்ட சீவர்கள் தத்தம் கர்மத்திற்கேற்றவாறு முக்குண வயத்தராய் நான்கு வருணத்தினராய்ப் பிறக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

     

      முக்குணங்களால் நான்கு வருணங்க ளெப்படி யுண்டாகின்றன வெனின்: -

     

      சத்துவ குணமும் பிராஹ்ம தருமமும் சேர்ந்தது ஒரு வருணம். (நல்லொழுக்கம், ஆத்மானாத்த விசாரம், குருவினிடத்தும் சுருதியினிடத்தும் தெய்வத்தினிடத்தும் விசுவாசம் முதலியவை பிராஹ்ம தருமங்களாம். இவை பிராஹ்மணத்துவம்.

 

      ரஜஸின் சத்துவ குணமும் க்ஷாத்ர தருமமும் சேர்ந்தது ஒரு வருணம். இது க்ஷத்திரியத்துவம்.

 

      ரஜஸின் தமோ குணமும் பாலன தருமமும் சேர்ந்தது ஒரு வருணம். இது வைஸ்யத்தும்.

 

      தமோகுணத்தின் ரஜாம்சமும் புண்ணிய புருஷ சேவை என்ற தருமமும் சேர்ந்தது ஒரு வருணம். இது சூத்திரத்துவம்.

 

      இவ்வாறு முக்குணங்களினின்றும் நான்கு வருணங்களுண்டாயின.

 

      ஜீவர்கள் தத்தம் கர்மாநுசாரமாக இயற்கையாகவே – பிறவியிலேயே – பெற்ற குணத்திற்குத்தக்க கர்மங்களில் நிலையாக நின்று ஒழுகி வந்தால், நாளா வட்டத்தில் குணங்களையும் அவற்றால் உண்டாம் சுகதுக்கங்களையும் அறிந்து, கிரமங்கைரமமாக அவித்தையை யகற்றி உய்வார்கள். இதற்காகவே பகவான் குணங்களுக்கேற்றவாறு கர்மங்களையும் சிருஷ்டித்தார்.

     

      இக்கர்மங்கள் பிரவிருத்தி மார்க்கங்களாம். பிரவிருத்தி மார்க்கத்தில் சுகபுத்தியில்லாதவர்களாய் நிவிருத்தி மார்க்கத்தைக் கொண்டவர்களும் பலரிருக்கின்றனர். அவர்கள் ஆர்த்தாக்கள், ஜிஞ்ஞாசுக்கள், அர்த்தார்த்திகள், ஞானிகள் என்னப்படுவர் என்று பகவத்கீதை பகர்கின்றது.

 

      இதுகாறும் செய்த சிறு ஆராய்ச்சியால் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாவன: - மாந்தர் தத்தம் பூர்வ கர்மங்களுக் கேற்றவாறு, பகவானால் சிருஷ்டிக்கப்பட்ட முக்குணங்களு ளேதேனு மொன்றைப் பிரதானமாகக் கொண்டு பிறக்கின்றனர்; அக்குணங்களுக் கேற்ற கர்மங்களைக் கைப்பற்றித் தரும வழியி லொழுகிக் கடைத்தேறுவதற்காகப் பகவான் கர்மங்களைச் சிருஷ்டித்தார்; சுய கர்மங்களை அறநெறி வழாது அனுஷ்டித்தல் மேன்மையடைதற்குக் காரணமா யிருத்தலின் அவை போற்றத்தக்கனவாம். அதாவது வர்ணமாம். அந்த நிலையிலுள்ளவர்கள் வர்ணத்தார் எனப்படுவார். ஆகவே வருணம் என்பது குணத்தைப்பற்றி யுண்டாயிற்று. இதுவே பகவத் சிருஷ்டியின் உண்மைப் பொருள் என்பனவும் பிறவுமாம். இனி, இந்த நான்கு வருணத்துள் பிராஹ்மணத்துவம் சத்துவ குணத்தா லாயினமையின் சிறந்தது என்பதும், ரஜோ குணத்தின் சத்துவாமிசமாகிய க்ஷத்ரியத்துவம் அதனினும் தாழ்ந்த தென்றும், ரஜோ குணத்தின் தமாம்ஸ மாகலின் வைஸ்யத்துவம் அதனினும் தாழ்ந்ததென்றும், தமோ குணத்தின் ரஜாம்சமாகலின் சூத்திரத்துவம் அதனினும் தாழ்ந்ததென்றும் விளங்குகின்றது.

 

      இந்த நான்கு வருணங்களைத் தவிர ஐந்தாவது வருணம் இல்லை. ஆகவே, பஞ்சமர் என்னப்படுவோராக ஓர் வருணத்தார் இருக்கின்றன ரென்பதற்கு நூல்களில் ஆதாரமே யில்லை.

 

      பகவான் அருளிய இவ்வருணங்களென்னும் பிறவிக்குணங்கள் சூட்சும சரீரத்தின் ஒரு பாகமாகிய அந்தக்கரணத்திற்குரியனவாகும். ஜீவாத்மாவுக்கே யுரியது. ஸ்தூல தேகத்திற்கும் இதற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுள் தலைவன் ஒரு குணத்தை யுடையவனா யிருப்பான். அதாவது பிராஹ்ம குணத்தை யுடையவனா யிருப்பான். அவன் தம்பி க்ஷாத்ரகுண முடையவனாயிருப்பான். அவன் மகன் சூத்ரகுண முடையவனாயிருப்பான்; ஆகவே, பிராஹ்ம குணத்தை யுடையவனுடைய சூத்ர குணத்தையுடைய மகனும் க்ஷாத்ர குணத்தையுடைய தம்பியும் பிராஹமணராகார். ஆவதற்கும் நியாயமில்லை. சாஸ்திரமும் இதற்குச் சம்மதப்படாது. அப்படியே சூத்திரகுணத்தை யுடையவனுடைய பிள்ளை பிராஹ்ம குணத்தை யுடையவனாயிருந்தால் அவன் பிராஹ்மண வருணத்தானென்று சொல்லப்பட வேண்டுமென்பதே நூல்களின் துணிபு.

 

      ஆனால், தந்தையை நோக்கித் தநயன் சந்ததியானென்று சொல்லப்படலாம். இவன் பிராஹ்மணனுடைய சந்ததியான், வம்சத்தான்; இவன் சூத்திரனுடைய சந்ததியான், வம்சத்தான் என்று சொல்வது நியாயமே யன்றி, பிராஹ்மண வருணத்தான் பிள்ளையாகிய சூத்திர வருணத்தானை பிராஹ்மண வருணத்தான் என்று கூறுதல் பொருந்தாது. இப்படி சூட்சும தேக தர்மங்களை ஸ்தூல தேக தர்மமாக கருதி, ஸ்தூல தேகத்தின் மேலேற்றி, ஸ்தூல் தேக வர்ணங்கள் என்று கூறுவது அஞ்ஞானமாம்; வேதாகமங்களில் சூட்சும மார்த்தத்தை அறியாத (மூடத்) தன்மையாம். ஆகவே,

 

      “குணத்தாலும் தொழிலாலும் இவன் பிராஹ்மணன், இவன் க்ஷத்ரியன், இவன் வைஸ்யன், இவன் சூத்ரன் என்பது மெய். ஸ்தூல தேகங்களைப்பற்றிச் சதுர்வர்ணம் உண்டென்பது பொய்.” இதுவே பகவத்கீதையின் கருத்தாம். இனி,

 

      “உண்மைப் பிராஹ்ணன் யார்?” என்னும் விஷயத்தை அடுத்த இதழில் ஆராய்வோம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

 

     

     

No comments:

Post a Comment