Sunday, August 30, 2020

காலைப் பொழுதினிலே

 

 அன்றொருாள் காலைப் பொழுதினிலே, பால ஸுர்யனின் பொன்னிறக் கிரணங்களினால் நீலவானம் ஒப்புயர்வற்ற அற்புத அழகு பெற்று விளங்கியது. பூவுலகிலுள்ள பொருள்களெல்லாம் பொன்முலாம் பூசப்பெற்றனவே போல், புத்தழகு பெற்றுச் சிறந்து விளங்கின. நீலக்சுடலரசன், தனது அலைகளாகிய குழந்தைகளின் விசித்திர விளையாட்டுகளைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து கொண்டிருந்தான். கடற்கரையில் ஓங்கி வளர்ந்திருந்ததொரு உயர்ந்த தென்னை மரத்தின் கிளையிலே, ஒரு பருந்து தனது

கூட்டிலிருக்கும் செல்வக் குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தது.
நீலக் கடலின் குளிரலைகளைத் தழுவிக் கரையை நோக்கித் தவழ்ந்துவந்த மெல்லிய கள்ளத் தென்றற் காற்று, தென்னை மரக்கிளையில் தனது குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்த பருந்தைக் கட்டியணைத்து சென்று மறைந்தது. இன்னொரு தென்னை மரக் கிளையில் வீற்றிருந்த ஒரு கருங்காகம், என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதுபோல் தோன்றியது. அது, தனது சிந்தைக்கினிய செல்வக் காதலியைப் பிரிந்து பெரிதும் ஏங்கியிருந்தது போலும்! நீலவானில் தோன்றிய கருமேகம், காதலியைப் பிரிந்து மதி மயங்கியிருந்த அக்காக்கையின் கண்களுக்கு அதன் காதலியின் கருநிறத்தை நினைவூட்டவே, அது மரக்கிளையி லிருந்தவண்ணமே அக்கருமுகிலை முத்தமிடுவதாயிற்று. தனது காதலியென்று எண்ணிக் கருமுகிலை முத்தமிட முயன்று தான் ஏமாந்ததை உணர்ந்த அந்த கருங்காக்கை, மிகுந்த சினமடைந்து தான் அமர்ந்திருந்த தென்னையின் பசுங் கீற்றுகளைப் பலவாறு கொத்திக் கொத்தி அலகு வலியெடுத்தவுடன், காலை இளங் கதிரவனின் பொன்னொளியால் பளபளவென்று ஜொலிக்கும் கடலலைகளை மிகுந்த ஆத்திரத்துடன் விழித்து நோக்கலாயிற்று.

 

அவ்வேளையிலே, தென்றிசையிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்த தனது இனத்தினரைக் கண்ட அக்காக்கை, அவ்வினத்தினரைக் கும்பிட்டுவிட்டு, மற்றொரு கிளையில் அமர்ந்து உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்த சின்னஞ் சிறு குருவி யொன்றை நோக்கிக் கலகலவென்று சிரித்தது. இருந்தாற்போலிருந்து திடீரென்று சிரித்த அக்காக்கைக்குப் பித்து பிடித்துவிட்டதோ என்று எண்ணிய அந்த சின்னஞ்சிறு சிங்காரக் குருவி, அக்காக்கையைப் பரிகசித்துச் சிரித்த வண்ணமே அதனருகில் வந்து அதன் தலைக்குமே கிளையில் அமர்ந்து கொண்டு, ''கிக்கிக்கீ! காகண்ணா! இருந்தாற் போலிருந்து நீ வானத்தில் எதைப் பார்த்துவிட்டு திடீரென்று சிரித்தாய்! அதோ, தூரத்தில் சிறகடித்துப் பறந்து சென்று கொண்டிருக்கும் அந்தக் கருப்பர்கள் யார்?”- என்று அந்த காக்கையை வினவியது. அதைக் கேட்ட காக்கை, "எனது அன்பார்ந்த சகோதரியே! அவர்கள் தான், எனது இனத்தினர். எனது காதலியைப் பிரிந்து தனித்துத் தவித்து நிற்கும் எனக்கு, நீலவான வீதியிலே தத்தம் காதலிககளுடன் உல்லாஸமாகப் பறந்து செல்லும் எனது இனத்தினரைக் கண்டவுடனே, என்னவோ ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றியது. அதனாலேயே, திடீரென்று வாய் வீட்டுச் சிரித்து விட்டேன். வல்வினைப் பயனால் நான் ஒருவன் மட்டும் இங்கிருந்து வருந்திக் கொண்டிருக்கும் போது - தத்தம் காதலிகளுடன் வான வீதயில் குதூகலமாகப் பறந்து சென்றுகொண்டிருக்கும் எனது இனத்தினரை நோக்கும் போது, அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்தை நினைத்து எனது மனத்தில் பொறாமை தோன்றவில்லை; அதற்குப் பதிலாக, அவர்களுக்கேனும் அத்தகைய பாக்கியம் வாய்த்ததே யென்று எனது மனத்தில் மகிழ்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அம் மகிழ்ச்சிப் பெருக்கினாலேயே, நான் என்னையுமறியாமல் திடீரென்று சிரித்துவிட்டேன்'' - என்று பதிலிறுத்தது.

 

பின்னர், மரகதம் போன்ற பச்சை மேனியையும் பவளம் போன்ற செவ்வாயையும் பெற்றதொரு மோகனப் பசுங்கிளி அங்கு வந்து சேர்ந்து, குருவிவின் அருகில் அமர்ந்து கொண்டு அதை நோக்கிப் பின்வருமாறு வினவியது: -

 

“குருவியக்கா! அதோ அந்த செங்கதிரோன், தனது தங்கக் கிரணங்களை எங்கும் பரப்பி நமது சிந்தைக்கனிய பசுமரங்கள் எல்லாவற்றின் மேலும் தங்க முலாம் பூசுகிறான் பார்த்தாயா? நமது கண்ணுக்கெட்டிய தூரம், எங்கும் பொன் மயமாக விளங்குவதைப் பார்க்கப் பார்க்க நமது மனம எவ்வளவு குதூகலமடைகிறது பார்த்தாயா! எத்தகைய பிரதி பலனையும் எதிர்பாராமல் நம்மையெல்லாம் பெரிதும் மகிழ்வூட்டும் அத் தேவனுக்கு, நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அற்பப் பறவைகளாகிய நம்மால் அவனுக்கு எத்தகைய கைம்மாறும் செய்ய முடியாவிடினும், அவனது அருட்பெரும் புகழையேனும் நமது வாயார வாழ்த்திப் பாடி மகிழலாமல்லவா? குருவியக்கா! "பாட்டில் மிக மிகக் கெட்டிக்காரியல்லவா! உனது கர்ணாமிர்தமான குரலிலே, கதிரவனைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடேன் கேட்போம்! என்ன அது? எங்கேயோ அவ்வளவு கவனமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே! அம்மவோ! அவ்வளவு பெரிய அந்த காகக் கூட்டம், எங்கு பறந்து போய்க் கொண்டிருக்கிறது? காகச் சகோதரர்களுக்குள் ஏதேனும் போர் மூண்டுவிட்டதா என்ன? எதற்காக அந்த படையெழுச்சி?''

 

''நன்றாய்க் கேட்டாய், நீ! காகச் சகோதரர்கள் தான் சமூக ஒற்றுமையில் மிக மிகச் சிறந்தவர்களாயிற்றே! அவர்களுக்குள் எதற்காகப் போர் நேரப் போகிறது? விஷயம் என்னவென்பது, எனக்குங் கூட இன்னும் விளங்கவில்லை. அதைத் தெரிந்து கொள்வதற்காகவே, தானும் காகண்ணாவிடம் வந்திருக்கிறேன்"--என்று கிளிக்குப் பதிலிறுத்த அக்குருவி, காக்கையை நோக்கி -'' காகண்ணு நீ பெரிய வேதாந்தியல்லவா? நடந்த விஷயம் என்ன வென்பதை, தயை செய்து எங்களுக்கு விவரமாகச் சொல்ல மாட்டாயா?"- என்று கெஞ்சுங் குரலில் வினவியது.


அதைக் கேட்ட காக்கை, அவற்றை நோக்கிப் பின்வருமாறு கூறியது: -

 

"எனது அருமை மிகுந்த தோழர்களே! சொல்லுகிறேன், கேளுங்கள்; சிற்சில நாட்களாக, காக சமூகத்தினருள் ஏற்பட்டிருக்கும் விந்தைப் புதுமைகளை இன்னும் நீங்கள் கேள்விப்படவில்லையா என்ன? அதோ அந்த சாலைக் கருகிலே, சென்ற வாரத்திலே, எங்களினத்தினரில் பற்பலர் கூட்டங் கூடிப் பேசியதை நீங்கள் கேள்விப் படவில்லையா என்ன? அந்த கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசியவனை, நீங்கள் சாசாரணமாக எண்ணிக்கொண்டு விடாதீர்கள்! அவன் அறிவிலும் திறமையிலும் உலகானுபவத்திலும் பெரிதும் சிறந்தவனாவன், "கற்றறிந்த ஞானி. கடவுளையே நேராவான்'' - - என் பெரியோர் சொல்ல நீங்கள் கேட்ட தில்லையா? அறிவிலும் அனுபவத்திலும் பெரிதும் சிறந்த ஒருவன், மற்றவர்களோடு சர்வ சாதாரணமாகக் கலந்து பழகிக் கொண்டிருந்தாலும் அவன் தெய்வத்தைப் போல் கருதப்பட்டு மற்றவர்களால் பெரிதும் போற்றப்பட வேண்டியவனல்லவா?

அத்தகைய சீரிய செல்வன் காக சமூகத்தினரின் தலைவனாக முடி சூட்டப்பட்டு ஒருவாரமே ஆயிற்று. அவன், தனது அதிகார வலியினாலோ வஞ்சகச் செயல்களினாலோ வேறு எத்தகைய சுய முயற்சிகளினாலோ அந்த முடியைச் சம்பாதித்துக் கொண்டு விடவில்லை. அவன், இரவும் பகலும் இடையறாமல் காக சமூகத்தினருக்குச் செய்துவந்த சுயநலப் பற்றற்ற ஒப்பற்ற சீரிய பேரூழியத்தினாலேயே - பிராது பலனை எதிர்பாராமல் செய்து கொண்டிருந்த தொண்டின் சிறப்பினாலேயே - சிறிதும் தளராத உழைப்பின் பயனாகவே, மற்ற காகப் பெரியோர்களால் இப்பொழுது மன்னனாக்கப்பட்டிருக்கிறான்
எனினும், அப்பதவி அவனுக்குக் கிடைத்தது குறித்து, அவனது மனதில் எத்தகைய செருக்கும் சிறிதளவும் இல்லை; மற்ற எவரையும் தன்னிலும் தாழ்ந்தவராக அவன் தனது மனத்தால்
நினைப்பதுமில்லை. அரச பதவியை அடைந்த பின்னரும், அவன் தனது சுக-சௌகரியங்களுக்காக மற்ற எவருடைய உழைப்பையும் எதிர்பார்ப்பதில்லை; அவனுக்கு உதவி புரியவோ ஊழியம் செய்யவோ மற்றவர்கள் தாமாகவே வலிந்து வந்தாலும், அவன் அவற்றை ஏற்றுக் கொள்வதுமில்லை. அரச பதவியினால் அவன் தற்சமயம் பெற்றிருக்கும் சுகானுபவப், முன் செய்து கொண்டிருந்ததைக் காட்டிலும் மும்மடங்கு அதிகப்பட்ட தொண்டேயாம். மற்ற காகம் ஒன்று ஒரு வீதியிலுள்ள குப்பை கூளங்களை அகற்றி சுத்தப்படுத்தினால், அரச பதவியிலுள்ள அவன் மூன்று வீதிகளில் கிடக்கும் குப்பை கூளங்களை அகற்றி சுத்தப்படுத்தவேண்டும். பதவியின் கௌரவத்திற்கு ஏற்ப, அவனது உழைப்பும் மேன்மேலும் பெருகுகிறது. மற்றவர்களைத் தனது விருப்பம் போல் அடக்கியாளக்கூடிய அதிகாரம் தனக்கு இருக்க வேண்டு மென்றேனும், மற்றவர்களைத் தன்னிலும் தாழ்ந்தவர்களாக மதித்து வேலை வாங்க வேண்டு மென்றேனும் அவன் சிறிதும் விரும்புவதில்லை.

 

அவன் எமது சமூகத்தினரின் தனிப்பெரும் தலைவனாக முடி சூட்டப்பெற்று ஒருவாரம் முடிவதற்கு முன்பே, அவன் செய்தருக்கும் அபாரச் செயல்கள் பெருவியப்பை விளைவிப்பனவாக விளங்குகின்றன. எவ்வளவோ காலமாக எமது சமூகத்தினர் அனுபவித்து வந்து கொண்டிருந்த பலவகைப் பட்ட துன்பங்களையும், அவன் மிகமிக எளிதில் போக்கிவிட்டான். இவ்வளவு காலமாக எங்களுக்குள் தலைவன் ஒருவன் இல்லா திருந்த காரணத்தினாலே, எங்களித் சிற்சிலரும் வேலையில்லாத் திண்டாட்டத்தற்கு உள்ளாக நேர்ந்தது. எத்தகைய வேலையும் செய்யாமல் உண்பதிலும் உறக்குவதிலுமே காலத்தை வீணிற் கழித்துக் கொண்டிருந்த சிலர் எத்தகைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் மனம் போனவாரெல்லாம் பலவாறு திரிந்து அலைந்து கொண்டிருக்தனர். அத்தகையோரைக்கூட, சமூகக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒழுங்காக நடந்து கொள்ளும்படி எங்களது புது மன்னன் செய்து விட்டிருக்கிறான்,

''காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்!" என்று எங்களைக் குறித்து தவப்பெருஞ் செல்வனாராகிய தாயுமானவர்கூட புகழ்ந்து பாடியிருப்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கக்கூடும். எங்களது சமூகத்தினருள் எவ்வளவு குறைகள் இருந்தபோதிலும், எங்களுக்குள் இருந்து வரும் சமூக ஒற்றுமையும் எங்கு விருந்து கிடைத்தாலும் தோழர்க ளெல்லோரையும் ஒருங்கே கட்டி அவர்களுடன் கூடியிருந்து குளிர்ந்த சிந்தையுடன் விருந்துண்டு களிக்கும் இயல்பும் எங்களது சமூகத்தினருக்கே தனிப்பெருமை அளிக்கக்கூடியனவல்லவா? எங்களுள் சில கொடியவர்கள், தங்களுடைய வரம்பு
மீறிய - ஒழுக்கங் கெட்ட - இழி செயல்களினால், அத் தனிப்பெரும் பெருமைக்கும் இழுக்குதேட முயன்றனர். அவர்களது சில்லரை விஷமச் செயல்களையெல்லாம் எமது புதிய மன்னன் மிக எளிதில் அடக்கிச் சீர் திருத்தி விட்டான். இ
ப்பொழுது, எங்களுக்கு ''சோற்றுக்குப் பஞ்சமில்லை; போர் இல்லை; துன்பமும் இல்லை.'' ஒரு தலைவனது ஒழுங்கான சட்ட திட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடங்கி ஒழுங்காக நடந்து கொள்ளும் வரையில், அவனது பாதுகாப்பிலிருக்கும் குடிகளுக்குக் குறைகள் உண்டாவதும் உண்டோ? ஒரு வருஷகாலத்தில் செய்யும் படியான சமூக சேவையை ஒரே வாரத்திற்குள் செய்திருக்கும் அந்த புது மன்னன், எங்களது சமூகத்தினர் அனைவாலும் மனப்பூர்வமான உண்மைப் பேரன்புடன் பெரிதும் போற்றப் படக்கூடிய தகுதி உடையவனே யென்பதில் ஐயமும் உண்டோ? அத்தகைய உத்தமத்தலைவனை உண்மையன்புடன் பின்பற்றி எங்களினத்தினரில் பற் பலர் உற்சாகத்துடன் கூட்டமாகப் பறந்து செல்வது இயல்பேயன்றோ?''

 

இவ்வாறு அக்காக்கை சொல்லி முடித்தவுடன், பால் போல் சென்னை வெளேலென்ற வண்ணமுடையதும் குறு முறுவல் தவழும் குளிர் முகமுடையதுமான அன்னப் பறவை யொன்ற, தென்றிசையிலிருந்து பறந்து வந்து சேர்ந்தது அவ்வழகிய அன்னம், மற்றவற்றை நோக்கிப் பின்வருமாறு பேசலுற்றது: -

 

"சகோதரரே! சகோதரிகளே!! "காலை இளவெயிலில் காண்பதெலாம் இன்பமன்றோ?'' நீங்கள் மூவரும் இங்கு கூடிப் பேசிக் கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து கண்ட நான், பெரிதும் மகிழ்வடைந்தேன். உங்களது ஆலோசனையில் நானும் பங்கெடுத்துக் கொள்ள விரும்பி, இங்கவந்து சேர்க்தேன். நீங்கள் மூவரும் எதைக்குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறீர்கவென்பதை எனக்குத் தயை செய்து தெரிவிக்க மாட்டீர்களா?''

 

அன்னம் வேண்டிய வண்ணமே, மீண்டும் அந்த செய்திகளை யெல்லாம் காக்கை அதற்கு எடுத்துச் சொல்லியது. அதைக்கேட்ட அன்னம், பெரிதும் மகிழ்ந்து பின்வருமாறு கூறத் தொடங்கியது: -

 

“ஆமாம்! “மன்னர் அறம் புரிந்தால், வையமெல்லாம் மாண்பு பெறும்" - என்பது உறுதி. நாட்டில் அறநெறிக்கு நேரும் இடையூறுகளை அகற்றி நல்ல நெறியை நிலை நிறுத்துவதற்காகவே அனைத்துயிர்களையும் காத்தருளும் அருளாளப் பெருமானாகிய திருமாலின் அம்சம்பெற்று மணிமுடி புணந்து அரியணை அமர்ந்து செங்கையில் செங்கோல் தாங்கி அரசு செலுத்த வேண்டியவர் என வேந்தர்கள், நாடு தழுாதிலும் நல்லற நெறிசளை ஒழுங்காக வளர்த்து வந்தால் பலவகை நலங்களும் பெருகிச் செழித்தோங்கு மென்பதை விரித்துரைக்கவும் வேண்டுமோ? வேறு எதனாலும் விளைவிக்க முடியாத அரும்பெரும் நன்மைகளை, சமூக ஒற்றுமை ஒன்றே விரைவில் விளைவித்து விடக்கூடும். அவ் வொற்றுமையினால் பெறக்கூடிய புகழும், தனிப்பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு சமூகத்தினருள் ஒற்றுமை குறைந்திருந்து, மற்றெவை நிறைந்திருப்பினும் பயனில்லை. ஒரு சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கும் உயரிய புகழுக்கும் உயிர்போன்றது, ஒற்றுமை ஒன்றே. அத்தகைய ஒற்றமை காக சமூகத்தனருள் பெரிதும் சிறந்து விளங்குவது குறித்து, நான் பெரிதும் மகிழ்கிறேன். நாடகமேடையே போன்ற இம்மாய உலகிலே, எக்காரணத்தை முன்னிட்டேனும் ஒருவரை யொருவர் பகைத்து ஒருவருக்கொருவர் துன் பிழைக்க முயல்வது, அனைத்துபிர்களுக்குந் தனிப்பெருந் தந்தையாகிய ஆண்டவனால் மன்னிக்கப்பட முடியாத மகத்தான கொடும்பிழை ஆகும். அவ்வுண்மையை மட்டும் உணர்ந்து நடந்து கொண்டால், இவ்வுலக வாழ்வைக் குறைகூற இடமுண்டோ?"

 

இவ்வாறு கூறிய அன்னம் பறந்து சென்று விடவே, மற்ற பறவைகள் மூன்றும் தனித்தனியே பிரித்து சென்றன. அப் பறவைகளின் சம்பாஷணையைத் தமது அற்புதக் கற்பனா சகதியினால் அழகுபெற அமைத்து, உயர்ந்த அரும்பொருள்களை எளிய முறையில் விளங்கவைத்து, ''காலைப்பொழுதினிலே”- என்று தொடங்கும் அழகிய இனிய கவிதையை இயற்றிய கவிஞர் பெருமான் யார்? அவரே செந்தமிழ்த் தாய்க்குப் புதுப்புது அணிகள் பூட்டி மகிழ்ந்த அருட்பெருங் கவிஞராகிய திரு. சி. சுப்பிரமணிய பாரதியாரவர்கள்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - டிசம்பர் ௴

 

 



 

No comments:

Post a Comment