Monday, August 31, 2020

கைவல்ய நவநீத வசனம்

 

 

 

 

 

ஶ்ரீமான்

ஆரணிகுப்புசாமி முதலியாரவர்கள்

இயற்றியது.

 

 

 

 

 

 

சென்னை

“ஆனந்தபோதினி” பத்திராதிபர்

நா. முனிசாமி முதலியாரவர்களால்

வெளியிடப்பெற்றது

பாயிரம்

ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகளால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட இந்நூல் வேத முடிவைக் கூறும் முக்கியமான ஞான நூலென்பதும், இப் பிறவிப் பெரும் பௌவத்தைக் கடந்து துக்க நிவர்த்தியும் தடையற்ற அழியா ஆனந்தமுமாகிய முத்தியாங்கரை சேர வேண்டினர்க்கு இது இணையிலாத் தெப்பம் போன்ற தென்பதும் நம்மவரனைவரும் அறிந்த விஷயமே.

ஆன்றோர்கள் மத விரோதத்திற்குக் காரணங் காணாராதலின் எல்லா மதங்களும் அவர்கட்குச் சம்மதமேயாம். ஏனெனில் எல்லா மதங்களின் முக்கியக் கருத்தும் ஒன்றே    யென்றும், அவற்றில் பகிர் முகத்தில் தோன்றும் முக்கிய மல்லாத அம்சங்களைப் பற்றிய சில வித்தியாசங்களும் கால தேச வேறுபாட்டால் ஏற்பட்டனவே யன்றி வேறில்லை    யென்றும், எல்லா மதங்களுக்கும் கடவுள் ஒருவரே யாத      லின் கடவுளுக்கும் எல்லா மதங்களுக்கும் சம்மதமே யென்றும் அவர்கள் அறிவார்கள்.

 அவ்வாறிருக்க அனாதியாகிய ஒரு வேதத்தையே ஆதாரமாகக்கொண்ட பல கொள்கைகளையுடைய நம்மவரிற் சிலர், தமது கொள்கையே சரியானதென்றும் பிறன்    கொள்கை தவறென்றும் துவேஷங்கொண்டு அதைக் குற்றங் கூறுகிறார்கள். இத்தகையோர் பெரும்பாலும் தமது    கொள்கையைத் துவேஷ புத்தியின்றி ஆராய்ந்து அனுபவத்தில் இரண்டிலும் ஏதேனும் வித்தியாச முளதாவென்று சிந்திக்காமலே, தங்கள் கொள்கையைப் பரோக்ஷமா யுணரு முன்பே பிறர் கொள்கைமேல் துவேஷம் கொள்வதையும், அதன்மேல் குற்றங் கற்பிப்பதையுமே முதற் பாடமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

 சிலர் “வேதாந்தம் ஏகான்ம வாதம், அதாவது நானே பிரமம் என்று போதிக்கிறது என்று கூறுகிறார்கள். கல்விமான் என்று பலரால் மதிக்கப்பட்ட ஒருவர் ஓரிடத்தில் (பெரிய புராணம்) பிரசங்கம் செய்யும் போது கைவல்யம் என்ற ஏகான்மவாத நூல் ஒன்றிருக்கிறது. அதில் கனவு பொய்யென்றும் அதைப்போல் உலகம் பொய்யென்றும் கூறியிருக்கிறது. கனவு பொய்யென்று எப்படிக் கூறலாம்'' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், பாசுபதம் பெற்றதாக அர்ச்சுனன் கண்ட கனவுகளை, கனவு பொய்யல்ல என்பதற்கு அத்தாட்சிகளாகக் கூறிய பின், கைவல்லிய நூலை யும் ஸ்ரீமத் சங்கராச்சாரிய சுவாமிகளையும் சேர்த்து தூஷித்தார். ஆனால் சில நாட்களுக்குள் அவரே இன்னொரு பிரசங்கத்தில் (கந்த புராணம்) "கனவு பொய், சாதாரணமாய் ஒரு சங்கதி பொய்த்துப் போனால் அது கனவாய் முடிந்தது என்று கூறுகிறார்களல்லவா, கனவில் ஒருவன் ஒரு புதையல் கண்டெடுத்ததாகக் காண்கிறான். விழித்துப் பார்த்தால் புதையல் இருக்கிறதா?'' என்று கனவு பொய்யெனத் தாமே நிரூபித்தார்.

     அந்தோ! இத்தகையோர் கல்வியும் மதநூல் ஆராய்ச்சியும் யாது பயனளிக்கும்? இத்தகையோரே ஓர் நிலையான உண்மையைக் கைப்பெறாது துவேஷ புத்தியால் எதிலும்
 குற்றங் கூறுகிறவர்கள். தவறாய் அர்த்தம் செய்துகொள்வோர் எதிலும் உண்டு. அவர்கள் அறியாமையால் அப்படிக் கூறுவதைக்கொண்டே ஒரு கொள் கையைத் தூஷிப்யது அறிவாளிகளின் தன்மையாகாது. வேதாந்தத்தில் மகா வாக்கியங்களாகிய, அகம் பிரம்மாஸ்மி, அயம் ஆத்மா பிரம்மம், முதலியவை விவரிக்கப்படுகின்றன. முன்னாடி கைவரவேண்டிய சாதனங்களை யடையாமலே ஆரம்பத்திலேயே முடிவான விஷயத்தைக் கூறும் இத்தகைய நூலை (சரியான ஆசானிடமின்றித்) தாமே கற்க முயல்வோர் நானே கடவுள் என்பது முதலிய தவறான அபிப்பிராயங்களைக் கொள்ளலாகும். அதை உணராது வேதாந்தத்தின் கொள்கையே ஏகான்ம வாதம் என்று கூறுவதும், வேதாந்திகளனைவரும் அதே கொள்கையை உடையவர்கள் என்று கருதுவதும் பெருந் தவறேயாகும். ஐக்கியத்தை அடைவதில் அய்யந் தோன்றாதிருப்பதற்காக "ஆன்மாவும் பரமான்மாவும் ஒரே யினமன்றிச் சற்றும் பேதமில்லை.'' குட சலம் கடலில் கலந்தால், தான் அதில் மறைந்து கடலாகவே தோன்றுவதுபோல், நீயும் தானென்பதற்று பிரம்மத்தில் ஐக்கியமடைந்து பிரம்ம மயமாவாய் என்று கூறப்பட்டிருக்கிறதே யன்றி வேறில்லை.

சித்தாந்த சாத்திரங்களிலும் ''சிவோகம்" முதலிய வாக்கியங்களுள் மாணிக்கவாசகர் நாம் சிவமானவாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ'' என்றும் "சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம். திருப்பெருந்துறை சிவனே" என்றும், தாயுமானவர் "என்னைத் தானாக்கிக்கொண்ட சமர்த்தைப் பார் தோழி'' என்றும் அருளியிருக்கிறார்கள். ''நீ அதுவா யிருக்கிறாய்" என்று பொருள்படும் 'தத்வமசி' என்ற வேதவாக்கியத்திலேயே அது என்ற பதிப்பொருள் வேறென்றும் நீ யென்ற சீவன் வேறென்றும், நன்கு விளா ளங்குகிறது. பிறகு மாணிக்கவாசகர் "நாம் சிவமானவாபாடி" என்பது போலவும், தாயுமானவர் "அது வானால் அதுவாவர் அதுவே சொல்லும்" என்பதுபோலவும் நீ பிரம்மமாகிறாய் என்று கூறப்பட்     டிருக்கிறது. வேதாந்தத்தில் நீ கோயிலுக்குப் போகாதே, அங்குள்ள கடவுளை வணங்காதே யென்று கூறியிருக்கவில்லை. அஞ்ஞான தசையில் பதிக்கு வேறாயிருக்கும் சிவனாகிய ஆன்மா ஞான நிலையில் பதியோடு இரண்டற்ற நிலையை யடைகிறது. அப்படிக்கின்றி என்றுமே சிவம் வேறு சீவன் வேறாகவே யிருக்குமென்று கருதல் தவறே யாகும். என்றும் வேறாயின் இரண்டாகிய நிலையில் முத்தி எவ்வாறு கூடும்? பிறவி எவ்வாறொழியும்? என்று மில்லை. கைவல்லியம் ஞானத்தைப் போதிக்க வந்த நூலாதலின் சரியை கிரியையாதிகள் அதில் கூறப்படவில்லை. தாயுமானரும், "எனக்கினிச் சரியையாதிகள் போதும், யாதொன்று பாவிக்க நான் அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கினத்துவித மார்க்க முறலாம்" என்று கூறியருளினார். இது சிவோகம் பாவனையையே குறிக்கிறது. தானற்றபின் இருப்பது ஒன்றே யாதலால் "தானான தன்மயமே யல்லாலொன்றைத் தலையெடுக்க வொட்டாது...'' என்றும், “தாக்கு நால்லானந்த சோதி, அணு - தன்னிற் சிறியவெனைத் தன்னருளாற், போக்கு வரவற்றிருக்கும் - சுத்த, பூரணமாக்கினான் புதுமைகாண் மின்னே" என்றும் அருளினார்.

இரண்டு கொள்கைகளின் கருத்தும் அனுபவமும் ஒன்றேயன்றி எள்ளளவும் பேதமில்லை யென்றே மகான்களாகிய அனுபவஞானிகள் அருளியிருக்க, அதை யுணராமலே துவேஷ புத்திகொண்டு குற்றங் கூறுவது நூலுணர்வை மட்டும் கிரகித்துக்கொண்டு உண்மையை யறிய ஆராய்ச்சி செய்யாதார் தன்மையேயாகும்.

இத்தகையோர்களது தவறான மொழிகளைக் கேட்கும் சிலர் வேதாந்தமே அப்படித்தான் கூறுகிறதாக்கும் என்ற தப்பு அபிப்பிராயங்கொண்டு கைவல்லிய நூலின் மேல் விருப்பங்கொள்ளத் தடுமாற்ற முறுகிறார்கள். இக்காரணத்தால்தான் நாம் முகவுரையாய் இவ்விஷயத்தைக் கூற வேண்டியதாயிற்று.

இந் நூல் எல்லா சாதனங்களும் கைவந்தபின் தன்னை யறிந்து தலைவனில் இரண்டறக் கலக்க வேண்டியதைப் பற்றி மட்டுமே போதிப்பதால் இது எம் மதத்தினரும் எவ்வருணத்தாரும் வாசித்துணர்ந்து பயனடையத்தக்க பொது   நூலாயிருக்கிறது. இத்தகைய அருமைவாய்ந்த நூல் பாக்களாய் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு இதுகாறும் நான்கைந்து உரைகள் எழுதப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. ஆயினும் கடைசியாக பூலோக கயிலாய மென்னும் சிதம்பர க்ஷேத்திரத்தி லெழுந்தருளியிருந்த மகானாகிய கோவிலூர் ஸ்ரீலஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் எழுதியருளிய தத்துவார்த்த தீபம் என்னும் உரையே மிகச் சிறந்த   தென்று யாவராலும் மதிக்கப்படுகிறது. இத்தகைய உரைகளிருந்தும், இந் நூல் இலக்கண விலக்கிய வாராய்ச்சி கொஞ்சமேனும் உடையோர் மட்டுமே வாசித்துணரத்தக்கதா யிருக்கிறது. ஆதலின் யாவரும் சுலபமாய் வாசித்துணரும் வண்ணம் இது வசன நடையில் எழுதப்பட வேண்டியது அவசியமே. அவ்வாறே இரண்டொரு வசனங்களும் எழுதப்பட்டிருப்பதாய்க் கேள்வி. ஆயினும் சுருக்கமாகவும், முக்கியமான விஷயங்களை விளக்கிக் காட்டியும், ஆண் பெண் இரு பாலாரும் சுலபமாய் வாசித் தறிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் வசன ரூபமாக வெளியிட வேண்டுமென பலர் விரும்பியபடியால் இதை யெழுத சேர்ந்தது.

பரம தயாநிதியாகிய பரசிவமே அடியேன் சிற்றறிவிற்குத் துணைநின்று உண்மைக்கு மாறுபடாவண்ணம் வழிகாட்டியா யிருந்து, இது இனிது முடியுமாறு அருள் புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இதை எழுதத் தொடங்குகிறோம். பிழைகளுளவேல் ஆன்றோர் பொறுக்கப் பிரார்த்திக்கிறோம்.

 




கைவல்ய நவநீத வசனம்

நூல்

கடவுள் வணக்கம்

பொன்னில் மாத ராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளம்

தன்னிலந் தரத்திற் சீவ சாட்சிமாத் திரமாய் நிற்கும்

எந்லேங் களினு மிக்க வெழுநில மவற்றின் மேலாம்

ஈன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.

 

(இதன் பொருள்.) பொன், பூமி, மாதர் இவற்றின் மேல் ஆசையுடையோர் (அஞ்ஞானிகள்) உள்ளத்திலும், இவற்றில் ஆசையில்லாதார் (ஞானிகள்) உள்ளத்திலும் (பேதமின்றி) ஆகாயத்தைப்போல் எதிலும் தாக்கற்று சீவ சாட்சி மாத்திரமாய் விளங்கி யிராநின்ற, எல்லாப் பூமிகளுக்கும் மேலான, எழு ஞான பூமிகளிற் சிறந்த துரிய பூமியிற் பொருந்தி யொளிரும், சச்சிதானந்த சொரூபியாகிய பரம் பொருளின் அடிகளை வணங்குவாம்.

     (இந் நூலின் மூலத்தில் குரு வணக்கம் முதலிய இன்னும், சில வணக்கங்களிருக்கின்றன. அவற்றில் குரு வணக்கத்தின் கவியை மட்டும். இங்கு குறித்துவிட்டு விஷயத்தை யாரம்பிக்கிறோம்.)

குரு வணக்கம்

என்னுடை மனது புத்தி விந்திய சரீர மெல்லாம்

என்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமே யாக்கி

என்னுடை நீயு நானு மேகமென் றைக்கியஞ் செய்ய

என்னுடை குருவாய்த் தோன்று மீசனை விறைஞ்சி னேனே.

 

      [குருசிஷ்ய சம்வாத ரூபமாக அருளப்பட்டிருக்கும் இந் நூல் 1 - வது தத்துவ விளக்கப் படலமென்றும், 2 - வது சந்தேகந் தெளிதற் படல மென்றும் இரண்டு படலங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது.]



 

 

 

தத்துவ விளக்கப் படலம்

      தத்துவ விளக்கப் படலமெனின் தத்துவங்களை விவரித்துக் கூறும் பாகம் என்பதாம். நித்திரை செய்ய விரும்புவோன், முன்னாடியே அதற்கு வேண்டிய மிருதுவான படுக்கை, மேல்விரிப்பு தலையணை முதலியவற்றை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியமன்றோ. அது போலவே ஒரு பொருளை யடைய விரும்புவோன், அப்பொருளின் தன்மையை யுணர்ந்து அதனால் கிடைக்கும் பயனை யனுபவிப்பதற்குத் தகுதியான நிலைமையை முன்னடி அடைய வேண்டும். அவ்வாறே ஒரு நூலை வாசித்து அதிற் கூறப்பட்ட பயனை அனுபவமாய் அடைய விரும்புவோன் முன்னாடியதற்கு வேண்டிய சாதனங்களை அடைய வேண்டும். இங்கு அடைய வேண்டியது ஆன்மார்த்த மாதலால், அதை யடைவதற்குத் தக்க மனோ நிலைமையை முன்னாடி பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகையால் இந் நூலாசிரியரும், இந்த ஞான நூலை வாசித்து இதன் பயனை யடைய விரும்புவோர் முன்னாடி அடைய வேண்டிய சாதனங்கள் இன்னவை யென்று ஆரம்பத்திலேயே கூறுகிறார். அச் சாதனங்கள் நான்கு பிரிவாய்க் கூறப்பட்டிருப்பதால் அவற்றிற்குச் சாதன சதுஷ்டயம் என்று பெயர்.

சாதன சதுஷ்டயம்

இந் நூலுக் கதிகாரியானோன் அடைய வேண்டிய சாதனங்கள் நான்கு. அவை பின்வருமாறு: -

1. நித்தியா நித்திய வஸ்து விவேகம்,

2. இகபர விராகம்,

3. சமாதி சட்சம்பத்தி,

4. முமூட்சத்துவம், என்பவைகளே.

1- வது. நித்தியா நித்திய வஸ்து விவேகம்: - இப் பிரபஞ்சத்தில் எது என்று மழியாமல் நித்தியமாயுள்ள வஸ்து, எது அப்படிக்கின்றி அநித்தியமாய் அழிந்து போகத்தக்க வஸ்து என்ற உண்மையை யறிந்து கொள்ளுதல். இதற்குத் திருக்குத்திரிசிய விவேகம் என்றும் பெயர். திருக்கு என்றால் நாமரூபமின்றி என்று மழியாதுள்ள நித்திய வஸ்து; திரிசியம் என்றால் நாமரூபமாகத் தோன்றும் அழியத்தக்க அநித்திய வஸ்துக்கள். திருக்குத்திரிசிய விவேகம் (அல்லது திருக்குத் திரிசிய விளக்கம்) என்ற ஒரு நூலே யிருக்கிறது. அதில் இது நித்தியம் இது அநித்தியம் என்று விவரமாய் விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது.

சச்சிதானந்த இலக்ஷணமுடைய பரம்பொருளும், ஆன்மாவும் மட்டுமே என்று மழியா நித்தியப் பொருள்களென்பதும், மற்றபடி நாமரூபமாய்த் தோன்றும் எல்லாப் பொருள்களும் அழியும் அநித்தியப் பொருள்களே யென்பதுமே இதன் உண்மை.

2 - வது. இகபர விராகம்: - இவ்வுலகத்திலுள்ள போக பாக்கியங்களிலும், பரலோக மென்ற தேவலோகத்திலுள்ள போக பாக்கியங்களிலும் வெறுப்படைதலாம்.

ஏனெனில், இப் போக பாக்கியங்கள் அநித்தியமும், ஜடமும், துக்கமுமானவை. இப் போக பாக்கியங்களை அடைவதற்கு அவசியமான பொருள் தேடுவதில் மிக்க கஷ்டமும் தொல்லையும் உண்டு. அடைந்த பின்பும் அதைக் காப்பாற்றுவதில் கள்ளர் விரோதிகளாதியர் பயமும் பல கஷ்டங்களும் உண்டு. அதோடு அவை யழியாமலிருக்கத் தக்கவையுமல்ல. அவைகள் நமக்குச் சொந்த மென்றும் நாம் அவற்றை அனுபவிப்போ மென்றும் நாம் நம்பி யிருக்க, எதிர்பாராத காலத்தில் தென்புலத்தான் வந்து உயிரைக் கவர்ந்து செல்ல, அந்தோ சொல்லொனா வேதனையோடு யாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டிநேர்கிறது.

இந்த உலக போகங்களில் தான் இவ்விதக் கஷ்டங்களுண்டு. தெய்வலோக போகங்களில் கூடவா துன்பங்களுண்டு என்றால், கட்டாயம் உண்டுதான். அங்கும் காமக் குரோதாதி குணங்கள் உண்டாதலால் துன்பங்களுண்டு. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனே இராக்கதரால் படாதபாடுபட்டிருக்கிறான். இந்திரன் முதல் அநேக தேவர்கள் ரிஷிகளின் கோபத்திற்காளாகிச் சாபங்களை யேற்றுக் கொண்டிருக்கின்றனர். தக்கன் செய்த யாகத்திற்குச்
 சென்று அதனால் கொடிய துன்பங்களை யடைந்திருக்கிறார்கள். வியாதிகளால் வருந்துகிறார்கள். இவ்வுலக வாழ்க்கை இரும்பு விலங்கெனின் தேவலோக வாழ்க்கை பொன் விலங்காகும். இரண்டும் விலங்கே. நாமரூபமுடைய ஜன்மம் எத்தகைய தெனினும் அதில் துன்பமிருந்தே தீரும்.

ஆகையால் நித்தியமாகிய பேரின்ப வீட்டை யடைய விரும்புவோர் மேற்கண்டவற்றை நன்குணர்ந்து, இவ் விரு உலகபோக பாக்கியங்களையும் இச்சிக்காமல் வெறுக்க வேண்டும். நாம் பல ஜன்மங்களில் இவற்றை அனுபவித்திருக்கிறோ மாதலின், ஒரு காலத்தில் நாமே மிக்க பிரியத்தோடு உண்ட ஆகாரத்தை வாந்தி யெடுத்தால் பிறகு அதை
 விரும்பாது எப்படிக் கண்ணால் பார்க்கவும் வெறுப்படைகிறோமோ, அவ்வாறே இந்த இகபர போகங்களை வெறுக்க வேண்டும்.

3 - வது. சமாதி சட்சம்பத்தி: -சமம் முதலிய ஆறு குணங்கள் என்று பொருள். அவை, (1) சமம் (2) தமம் (3) விடல் (4) சகித்தல் (5) சமாதானம் (6) சிரத்தை என்ற ஆறு குணங்களாம். இவற்றில்: -

(1) சமம்: - என்பது அகக்கரண தண்டம்.

[அகக்கரணம் என்றால் உள்ளே யிருக்கும் கரணம். அதாவது அந்தக்கரணம். மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம் என ஐந்து குணங்கள் அடங்கிய மனமே       அந்தக்கரணமாகும். மனம் இச்சா சொரூபம். அந்த இச்சை காரணமாக அது தன் பிரியப்படி சதா அலைந்து கொண்டும் ஒரு சிந்தனையிலிருந்து மற்றொரு சிந்தனைக்குப் பாய்ந்து கொண்டுமே யிருக்கும். இதுவே பிறப் பிறப்பாகிய பெருந் துன்பத்திற்குக் காரணமானது. இம்மனதை அதன் பிரியப்படிச் செல்லவொட்டாது தடுத்து அடக்குதலே அகக்கரண தண்டமாகும்.]

(2) தமம்: - புறக்கரண தண்டம்.

மேற் கூறியபடி அடக்கப்பட்ட மனதை இந்திரியங்களின் வழியே சென்று சத்த, ஸ்பரிச, ரூப, இரச, கந்தம் என்ற விஷய சுகங்களை யடைய வொட்டாது தடுக்கலாம்.

(3.) விடல்: - விடல் என்றாலும் உபரதி என்றாலும் ஒன்றே. ஸ்திரீ, தனம், ஜாதியபிமானம் முதலியவை பொருந்திய சகல கருமங்களையும் துக்கத்திற்கு ஏதுவே      யென்றுணர்ந்து அவற்றிற் பிரவேசியாது வெறுத்துவிடலே உபரதியாகும்.

இத்தகைய [ ] வட்டங்களுக்குள் எழுதப்பட்டவை, விஷயங்கள் கூடியவரையில் நன்றாய் விளங்குவதற்கும், குறிப்புப் பொருளாகவும் மறைபொருளாகவும் உள்ளவை வெளிப்படையாய்த் தெளிவதற்கும் எழுதப்பட்ட குறிப்புகள்'என உணர வேண்டுமே யன்றி நூலிலேயே உள்ளவை யெனக் கருதிவிடலாகாது.

      (4.) சகித்தல்: - சகித்தல் எனினும் திதீட்சை யெனினும் ஒன்றே.

      காமக் குரோதாதி குணங்களை யடக்குதலும், சுகதுக்காதிகள் நேர்ந்தால் இவை பிராரப்த வினைப்படி வந்தவை யெனப் பொறுத்துக் கொள்வதும் சகித்தலாகும்.

(5.) சமாதானம்: - சித்தத்தை விடயங்களில் செல்ல வொட்டாது தடுத்து, நாம் கேட்டறிந்த ஞான விஷயங்களிலும் ஈசுவர சிந்தனையிலுமே சதா நிலைத்திருக்கும்படிச் செய்தலே சமாதானம் எனப்படும்.

(6.) சிரத்தை: - பரமாசாரியரிடத்திலும், ஞான நூல்களிலும் பக்தியும் அன்பும் வைத்தல்.

ஈசுவரனிடம் பூரண பக்தி வைக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கியிருக்கிறது. ஞானாசாரியர் பகவானே என்பது கொள்கை.

4. முத்தியை விரும்பு மிச்சை: - இதே முமூட்சத்துவம் என்பது. அதாவது நாம் மோக்ஷத்தை யடைய வேண்டும் என்ற விருப்பம்.

[இது தீவிரதரமானதாயிருத்தல் வேண்டும். சாதாரணமாய் மோக்ஷம் வேண்டும் என்ற எண்ணம் யாவர்க்குமே யுண்டு. இது மந்த வைராக்கியமே யாகும். மேற்கண்ட சாதனங்களை யடைந்த ஒருவன், யாவும் துக்க மென்று உணர்ந்தவனாம். பாலை வனத்தில் தாகவிடாய் கொண்டவன் எத்தகைய ஆவலோடு ஜலத்தைத் தேடுவானோ, தலையில் தீப் பற்றியவன் எப்படி பதை பதைப்போடு அதே ஆவலாய் ஜலத்தைத் தேடுவானோ, அவ்வாறே மோக்ஷ மார்க்கத்திற்கு ஆவல் கொள்வான். இதுவே தீவிரதர வைராக்கிய மாகும்.]

[மேற் கூறியவற்றோடு ஞான நூல் ஆராய்ச்சி செய்யும் அதிகாரிக்கு சூக்கும அறிவு இருத்தல் வேண்டும்; அதாவது அவன் புத்தி நுட்பமுடையவனா யிருத்தல் வேண்டும். புத்தியில் (1) மிருத்து புத்தி, (2) தாரு புத்தி, (2) தாரு புத்தி, (3) சிலா புத்தி, (4) வேணு புத்தி, (5) தைல புத்தி என ஐந்து வகைகளுண்டு. இவற்றுள்: --

1. மிருத்து புத்தி: - மிருத்து என்றால் மண்; மண்சுவரில் ஆணியடிப்பதும் மறுபடி பிடுங்கி விடுவதும் மிக்க சுலபமா யிருப்பதைப் போல, குருவிடம் கேட்டவற்றை உடனே அறிந்து கொண்டு சற்று நேரத்திற்குள் அடியோடு மறந்து விடுவதாகும்.

2. தாரு புத்தி: - தாரு என்றால் தரம். அவற்றுள் பச்சை மரத்தில் ஆணி யடிப்பது சுலபம். ஆனால் பிறகு கஷ்டத்தோடு அதைப் பிடுங்குவதும் சாத்தியமல்ல அதைப்போல் குருவிடம் கேட்டவற்றைச் சுலபமாக மனதில் பதித்துக்கொண்டு அதை மறவாமலும் அதிகந் தெரியாமலும் இருப்பதாம்.

பட்ட மரத்தில் ஆணி யடிப்பதும் வருத்தம். அப்படி யடித்தாலும் கொஞ்ச காலத்தில் நழுவி விழுந்துவிடும் அது போல் கேட்ட விஷயங்கள் புத்தியிற்பதிவது கஷ்டம். அப்படிப் பதிந்தாலும் கொஞ்ச காலத்தில் மறந்துபோம்.

3. சிலாபுத்தி: - கருங்கல்லில் நாலு துளைகள் செய்து ஒரு துளையில் உளி வைத்தடித்தால் (மற்ற துளைகள் வழியாகவும் பிளந்து) கல் இரண்டாய்ப் பிளந்து விடுவதுபோல், சந்தியான இடங்களில் குறிப்பான ஒரு பொருளைக் கூறினால் அதைக் கொண்டு மற்றவற்றையும் தெரிந்து கொள்வது.

4. வேணு புத்தி: - வேணு என்றால் மூங்கில், மூங்கிலில் கணுவில் ஒரு பக்கம் உளி வைத்தடித்தால் இரு பக்கங்களும் பிளந்து கொள்வதுபோல், ஒரு விஷயத்தைக் கேட்டது கொண்டே. முன்பின் தொடர்களையும் தெரிந்து கொள்வது.

5. தைல புத்தி: - தைலம் என்றால் எண்ணெய். கிணற்று ஜலத்தில் ஒரு துளி எண்ணெயை விட்டால் அது ஜல முழுதும் பரவிவிடல் போல், குரு சுருக்கமாய்க் கூறியதைக் கொண்டே பூரண விஷயங்களையும் தெரிந்து கொள்வதாம்.

இவற்றில் சிலை, வேணு, தைலங்களைப் போன்ற புத்தியுடையவனே இத்தகைய ஞான நூலைக் கற்க அதிகாரி யாவான்.

[இங்கு இன்னொரு விஷயம் கூறவேண்டியது அவசியமா யிருக்கிறது. அதாவது: - மேற்கண்ட சாதனங்க ளெல்லாம் கைவந்த பின்புதானே நாம் இந்தூலை ஆராயப் புகவேண்டும் என்று கருதிவிடலாகாது. அப்படிக் கருதுவது கடலில் அலை நின்றதே குளிக்கலாம் என்று கருதுவது போலாகும். இச் சாதனங்கள் கை வந்தவன் தன்னைத்தா னறியவேண்டிய வேலை யொன்றே பாக்கியன்றி மற்றபடி அவன் ஞானிக்குச் சமதையானவனே. தன்னை யறிந்தபின்பே மேற்கண்டவை சுபாவமாய்த் தோன்றும்.   ஆகையால் முதலில் பக்தி கட்டாயம் வேண்டும். அது எவ்வளவு திடமாயிருக்கிறதோ அவ்வளவு அவ்வளவு சுலபமாய் யாவும் கைகூடும். ஈஸ்வரன் மேல் வைத்த பூரண அன்பை    வழிகாட்டியாய் முன்னிட்டே மேற்கண்ட மனதை யடக்குதல் முதலியவற்றை அப்பியாசித்துக்கொண்டே ஆராய்ச்சியில் தொடங்கவேண்டும். "இதுவே கட்டாயத் தொழில். மற்ற உலக விஷயங்கள் வெறுப்போடு தாட்சணியத்திற்காகச் செய்யும் அன்னியர் வீட்டு. வேலை;" என்றே உறுதியாய் உள்ளத்தில் கருதி யிருக்க வேண்டும்.]

ஒருவன் ஒரு தொழிலைச் செய்யவேண்டின் அதற்கு வேண்டிய சாதனங்களனைத்தும் இருந்தால் தான் தொழிலைச் செய்து முடிக்கவாகும். (வெளியூரிலுள்ள ஒருவனுக்கு நாம் கடிதம் எழுத வேண்டுமாயின் அதற்குக் கடிதம், மசி, இறகு முதலியவை வேண்டுவதுபோல்.) ஆகையால் மோட்சத்தை யடைய விரும்புவோன் மேற் கூறப்பட்ட நான்கு சாதனங்களையும் அடைய வேண்டியது அவசியம். ஆயினும் இந்நூல் எல்லார் புத்தியிலும் நுழையாது. முன் சென்ற பல ஜன்மங்களில் நிஷ்காம கர்மங்களை யநுஷ்டித்துச் சித்தசுத்தி யடைந்த தீவிரதரபக்குவியின் புத்தியில் மட்டுமே நுழையும். இத்தகையவனே இந் நூலுக் கதிகாரியாம். இதை யன்றி இன்ன ஜாதியான், இன்ன ஆசிரமத்தான் என்ற நியமமில்லை.

அத்தகைய சாதனங்களையடைந்த தீவிரதர பக்குவியொருவன் தாபத்திரயங்களாகிற அக்கினியைச் சகிக்கமாட்டாது, கொடிய வெய்யிலில் அகப்பட்டு வாடித் தவிக்கும் புழுவைப் போல் பதைத்து, சம்சாரதாபத்தை ஒழிக்கவல்ல ஞானத்தை யடைய வேண்டுமென்று மிக்க ஆவல் கொண்டான்.

[தாபத்திரயங்கள் மூன்று. (1) ஆதியாத்மிகம், (2) ஆதிதெய்விகம், (3) ஆதிபௌதிகம்.

1. ஆதியாத்மிகம் என்பது: - பசி, தாகம், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்கு நேரிடும் இடையூறுகள், தேகத்திலுண்டாகும் பல வியாதிகள் இவற்றா லுண்டாகும் துக்கமாகும்.

2. ஆதிதெய்விகம் என்பது: - அரக்கர், பேய்கள். கிரகாதிகள், மழை யிடி முதலியவைகளால் வரும் துக்கமாகும்.

3. ஆதிபெளதிகம் என்பது: - கள்ளர் முதலிய இதர மனிதர்கள், மிருகங்கள், சர்ப்பாதிகள் முதலிய இதர பிராணிகள், இவற்றால் நேரும் துக்கமாகும்.]

இத்தகைய பக்குவமுடைய இவன், மனைவி மக்கள், பொருள் என்னும் மூவேடணை (மூவாசை) யாகிய விலங்கினின்று விடுபட ஆவல் கொண்டு, அடவியில் வேடனது வலையிற் சிக்கிய மான் அதிலிருந்து தப்பித்துக்கொண்டால், எப்படி மறுபடி வேடன் கையிற் சிக்காமல், அத்திக்கையே திரும்பிப் பாராமல் ஓடுமோ அதுபோல், சம்சார பந்தத்தை விட்டு ஓடினான். அப்படி யோடியவன் வீணே போய் விடாமல் இப் பிறவிப் பிணியை யொழிக்கும் மெஞ்ஞானத்தைப் போதிக்கவல்ல ஞானாசிரியர் எங்குளரோ வென்று மிக்க பதைபதைப்போடு தேடிச்சென்று முறைப்படி அவரைத் தரிசித்து அவர் பாதபத்மங்களில் வணங்கினான்.

[குருக்களில் இரண்டு வகையுண்டு. (1) காரிய 2) காரண குரு. தன் ஜீவனார்த்தத்தி னிமித்தம் தீட்சை, சரியை, கிரியை யோகங்களைப்பற்றிய போதனைகள், கர்மகாண்ட விதிப்படி ஏற்பட்டுள்ள சடங்குகள். ஆகிய இவற்றைச் செய்பவரே காரிய குரு.

ஒரு கைம்மாறும் வேண்டாது கருணையால் நமது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானோபதேசம் செய்து நமது பிறவிப்பெரும் பிணியை யொழிப்பவரே காரண குரு; இவரே ஞானாசிரியர். இவரையே சற்சீடன் சாட்சாத் பரம்பொருளாகவே மதித்து இவருக்கே தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்ய வேண்டியவன்.]

அவ்வாறு ஆசாரியர் பாதங்களில் சேவித்துக்கொண்ட சீடன் அவர் சந்நிதானத்தின் முன் நின்று அஞ்சலியஸ்தனாய் கண்ணீர் பெருக்கி, "என்னையனே! நிலையற்ற சம்சார சமய வாழ்வின் தீராத் துயரால் அடிமை மிக்க துன்பப்பட்டு வாட்டமடைந்துள்ளேன். கருணையே திருவுருவாக எழுந்தருளியிருக்கும் எம்மாரியரே! அடியேன் உள்ளம் துக்க நிவர்த்தியடைந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் வண்ணம், ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பின்னிக்கொண்டிருக்கும் பஞ்ச கோசங்களாகிய பந்தத்தையழித்து நாயேனை இரக்ஷித்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

[பஞ்ச கோசம் எனின் ஐந்து கோசங்கள் என்று பொருள். கோசம் என்றால் இங்கு உறை அல்லது ஒன்றின் மேலுள்ள போர்வை என்று பொருள். அந்தக்கரணம், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள், இவை ஐந்து வகையாய்ப் பிரிந்து ஆன்மாவின் உண்மைச் சொரூபத்தை உறைகள்போல் மறைத்துக்கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றிற்கு கோசங்கள் என்று பெயர் வந்தன. வந்தன. இவற்றைப் பற்றிய விவரம் பின்னால் வருவதால் இங்கு இவ்வளவோடு நிறுத்துகிறோம்.]

அவ்வாறு விண்ணப்பித்துக்கொண்ட சீடனைக் குருவானவர், ஆமைபோல் (அவன் அஞ்ஞானம் ஒழிந்து தன் நிஜ சொரூபத்தை யுணரவேண்டும் என்று) தம் திரு உள்ளத்தில் பாவித்து, மீனைப்போல் (அவனது வினைகள் அழியும்படி ஞானப் பார்வையாகிய) கருணா
 நோக்கத்தினால் பார்த்து, பட்சியைப்போல், (இவனுக்கு ஆன்ம தரிசனம் கிடைக்க வேண்டுமென்று அஸ்தமஸ்தக சையோகஞ் செய்து (அதாவது அவன் சிரசின் உச்சியில் தமது திருக்கரத்தை வைத்து), அவனைத் தமது சந்நிதானத்தில் இருக்கச் செய்து,

"குழந்தாய்! உனது பிறப்பிறப்பாகிய பெருந்துன்பத்தை ஒழிக்கும் உபாயம் ஒன்றுளது. அதை உனக்கு தமது உபதேசிப்பேன். நீ அந்த உபதேசத்தைத் தவறாமல் அநுஷ்டிப்பாயானால் உன்னைத் தொடர்ந்துள்ள இப்பிறவிப் பிணி ஒழிந்துபோம்" என்றருளினார்.

[இங்கு கூறப்பட்ட ஆமை, மீன், பறவைகளின் திருட்டாந்தம் என்னவெனில்: - ஆமை கரையில் முட்டையிட்டு விட்டுப் பிறகு தான் எங்கிருந்தாலும் அதன் நினைவு வரும் போது அம் முட்டையை மனதில் பாவித்தால் அம் முட்டை குஞ்சாய் விடுகிறது என்பதும், மீன் தன் சினையை யுற்று நோக்கினால் அது குஞ்சாய் விடுகிற தென்பதும், பறவை தன் சிறகினால் தன் முட்டையைத் தடவி யனைத்துக் கொள்வதால் அம் முட்டை குஞ்சாய் விடுகிற தென்பதும் ஆகியவை திருட்டாந்தங்களாக நூல்களில் கூறப்பட்டிருக்கின்றன.]

குருவானவர் உன் பிறவிப்பிணி யொழியு மென்றருளியதைக் கேட்ட சீடன், வெயிலால் தகிக்கப்பட்டவன் குளிர்ந்த ஜலத்தில் முழுகினாற்போல உளங் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர்விட்டு மறுபடி அவர் பாதங்களில் வணங்கிப் பின் வருமாறு விண்ணப்பம் செய்துகொண்டான்: -

"சுவாமிகளே! தங்கள் உபதேசப்படி நடந்துகொள்ள அடிமை சக்தியற்றவனாய் இருப்பினும் தேவரீரது கிருபா கடாட்சத்தால் அடியேனை யாண்டுகொள்ளலாகுமே! என்    பிறவியை யொழிக்கக் கூடிய உபாய மொன்றுண்டென்று அருளினீர்களே. அதை அடியேனுக் குபதேசித்துப் பிறவிப் பெருந் துன்பத்தினின்றும் அடியேனை யீடேற்றி யருள வேண்டும்." என்றான்.

இவ்வாறு விண்ணப்பித்துக்கொள்ளும் சீடன் அகங்காராதி மனோ விர்த்திகள் ஒடுங்கியவன் என்றறிந்து கொண்ட குரு, அவன் தன் ஆன்மாவின் நிஜ சொரூபத்தை அடைய வேண்டி உபதேசம் செய்யத் தொடங்கினார்: -

"கேளாயப்பா புத்திரனே! ஆன்ம சொரூபமாகிய தன் நிஜ வடிவை மறந்து மாயையிற் சிக்கி, தான் சீவனென்றும், கர்மங்களைச் செய்து அதற்குத் தக்க பாப புண்ணியங்களை அனுபவிக்கிறவ னென்றும் நம்புவதாகிய மயக்கத்திற் சிக்கியிருப்பவன், தன் நிஜ வடிவைக் காணுமட்டும் பிறப்பிறப்பாகிய கால சக்கிரத்தில் ஓயாது சுழன்று துக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பான்.

ஆகையால் ஒருவன் தன் நிஜ வடிவை யறிவானேல் தான் சீவனல்ல வென்றும் சீவசாக்ஷியாகிய கூடஸ்தன் அல்லது ஆன்மாவே தானென்றும் உணர்ந்து, அது முதல் தன்னை ஆன்மாவாகவே யறிந்து, பிறகு தன் ஆதாரத் தலைவனான பரமான்ம சொரூபத்தையு முணர்ந்து, அச்சொரூபமே தானாகும் பிரம்மான்ம ஐக்கிய முற்று இப்பிறப் பிறப்பாகிய பெருந் துன்பத்தினின்று விடுபட்டு நித்தியானந்தப் பதவியை யடைவான். ஆகவே நீ யாரென்ற உண்மையை நீ யறிந்து கொண்டால் உனக்கொரு கெடுதியுமில்லை. நீ என்னை வேண்டிக் கொண்டமையால் இந்த இரகசியப் பொருளை யுனக் குபதேசித்தேன்'' என்று திருமாய் மலர்ந்தருளினர்.

ஆசான் கூறிய மொழிகளின் உண்மைப் பொருளை உணராமல், அதற்குச் சாதாரணமாய்ப் பொருள் கொண்ட சீடன் அவரை நோக்கி,

"சுவாமிகளே! தாங்கள் என்னைச் சுத்த மூடனாகக் கருதி இவ்வாறு அருளினீர்கள் போலும், தன்னை இன்னவனென்று அறியாத மனிதன்கூட உலகில் உண்டோ (நான், கந்தன் மகன் இராமன் என்று தூலத்தைக் குறித்து யாவரும் அறிவதுபோல்). அப்படி யிருக்க அவர்களெல்லாம் பிறப்பதும் இறப்பதுமாகிய துன்ப சாகரத்தில் உழன்று கொண்டிருப்பானேன்? தங்களையே மாதா, பிதா, குரு தெய்வமாக நம்பிச் சரணடைந்த அடியேனுக்கு அவ்வுண்மையை உள்ளவாறு விளக்கியருள வேண்டும்'' என்று   பிரார்த்தித்தான்.

குரு: - "நமது கண்களுக்குப் புலப்பட்டு நமக்கு அன்னியமாய் நம்மால் அறியப்படும் சடப்பொருளாகிய இத் தூல தேகம் இன்னதென்றும், இதற்குள் இருந்து இதை யாட்டிவைக்கும் சித்துப் பொருளாகிய தேகி இன்னவ னென்றும், வேறுபிரித்து அறியக் கூடியவன் எவனோ, அவனே தன்னைத் தானறிந்தவனாவான்" என்றார்.

சீடன் இம் மொழிகளைக் கேட்டதே வியப்புற்று, "ஸ்வாமி! இத் தூல தேகத்தை யன்றி தேகி யென்று வேறொருவன் இருக்கிறானா அவன் யார்? காணவில்லையே. இருந்தால் தோன்றமாட்டானா?" என்றான்.

குரு: - "குழந்தாய்! இத் தேகத்தை யன்றி வேறே தேகி யென்றொருவன் ஏது? இருந்தால் தோன்றமாட்டான என்று கூறினையல்லவா? நல்லது.

நீ கனவு காணும்போது, இந்தத் தேகம் நீ யென்ற நினைப்பிருக்கிறதா? தேகத்திற்கு யாரேனும் தீங்கு செய்ய அதன் அருகில் வந்தால், நீ அதை யுணர்கிறாயா? இல்லை. அப்படி யிருக்க அக் கனவில் இருந்துகொண்டு விஷயங்களை யறிபவன் யார்? கனவு நீங்கி ஒன்றுமே தோன்றாது சர்வ சூனியமா யிருக்கும் காடாகாரமான சுழித்தியில் இருந்து கொண்டு அச் சுகத்தை யனுபவிப்பவன் யாவன்? இவ்வாறு சொப்பன சுழித்திகளில் சேட்டை யற்றுத் தனக்கு யாராவது தீங்கிழைக்கவரின் அதையும் உணரும் சக்தியின்றிக் கிடந்த தேகத்திற்குள் இருந்து கொண்டு, (ஒரு மாவுருவத்திற்குள் மனிதன் புகுந்து கொண்டு அதை இயக்கி வைப்பதுபோல்) சாக்கிரத்தில் இத் தேகத்தை ஆட்டி வைத்துச் சத்தாதி விடயங்கள் முதலியவற்றையும், முன் சொப்பனத்தில் நடந்தவற்றையும், சுழித்தி அனுபவத்தையும், யாவற்றையும் உணரும் அறிவுச் சொரூபமானதுதான் எது? கூறு பார்ப்போம்!" என்றார்.

[கனவிலும், நித்திரையிலும் தேக சம்பந்தம் தோன்றாமலே நான் என்ற ஒன்று இருக்கிறது. அது சாக்கிரத்தில் தேக சம்பந்தத்தோடு இருக்கையில் மேல்கண்ட கனவு சுழித்தி நிலைகளை யுணர்கிறது. எவ்வாறெனில், “இராத்திரி நான் இன்னின்ன விதமாய்க் கனவு கண்டேன்" என்றும் "ஒன்றுமே தெரியாமல் நிம்மதியாய்ச் சுகமாய் நித்திரை செய்தேன்” என்றும் கூறுவதோடு, சொப்பன சுழித்தி நிலைமைகளில் கட்டைபோல் கிடந்த தேகத்தைத் தன் பிரியப்படி ஆட்டி வைப்பதன்றி, தேகத்திலுள்ள ஞானேந்திரியங்கள் மூலமாய் சகல விஷ யங்களையும் அறிந்துகொள்கிறது. இதனால் தேகம் மட்டுமல்லாமல் அதற்கு அந்நியமான வேறேயொரு வஸ்துவும் இருக்கிறதென்றும், தேகம் தானே ஒன்றும் செய்ய முடியாதென்றும், அந்த அன்னிய வஸ்துவான நான் என்பதே அதை யாட்டிவைக்கிறதென்றும், ஆழ்ந்து சிந்தித்தால் அறியலாகும். இதன்றி சாக்கிரத்திலேயே இந்த நான் என்பது சகல இந்திரியங்கள் அந்தக்க ரணங்களோடும் கூடி விருந்தும் ஒவ்வொரு சமயம் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கும் போது, நான் என்பது தேகத்தையே அடியோடு மறந்து விடுவதை அனுபவமாய்க் காணலாம். அச்சமயம் கண்விழித்தபடி விருந்தும் எதிரில் சென்றோரை இந்த நான் காண்பதில்லை. சமீபத்தில் ஒருவர் தன் பெயரைக் கூப்பிட்டழைத்தாலும் கேட்பதில்லை. ஏனெனில் அச்சமயம் நான் என்பது தேகத்தையே மறந்திருந்ததால் இந்திரியங்களின் வழியே சென்று விஷயங்களை யுணரவில்லை. இதனாலும் நான் என்பதனால் மறக்கப்பட்ட தேகம் அன்னியமே யன்றி "நான்" என்பதல்லவென்று தெரிகிறது.  இதோடு தேகத்தை மறந்தபோதும் தேகம் தோற்றாத கனவு சுழித்தியிலும் நான் என்பதிருக்கிறது; ஆனால் "நான்" என்பதை மறந்து தேகம் என்ற ஒன்று எப்போதுமில்லை. இதனால் நான் என்பதுதான் யாவற்றையும் உணரும் சித்துப் பொருள் என்றும், சாக்கிரம் சொப்பனம் சுழித்தியாகிய மூன்று காலங்களிலும் உள்ள பொருள் என்றும், தேகம் ஒன்றையும் அறியாத அசத்தென்றும், ஒரு காலத்தில் இருந்தும் ஒரு காலத்தில் இல்லாமலும் போவதென்றும் நன்கு விளங்குகின்றது.]

குரு அருளிய இவ் விஷயங்களைக் கேட்ட சீடன், "சுவாமி! சாக்கிரத்தில் எல்லா விஷயங்களையும் காண்பதும், பிறகு சாக்கிரத்தில் கண்ட நினைவு முழுதும் நீங்கிச் சொப்பனத்தில் விஷயங்களை யறிவதும், பின்பு அச் சொப்பனம் போய் நித்திரையில் ஒன்றும் தோன்றாத சூனியத்திலிருப்பதும் தினம் அனுபவிக்கிறேன். சொப்பன சுழித்திகளில் இருப்பது தேகத்திற் கன்னியமான வேறே எதோ ஒன்றுபோல் தான் தெரிகிறது. ஆயினும் மனதில் சற்று படுகிறது, சற்று நேரத்திற்குள் (ஜலத்தைப் பாசி மறைப்பதுபோல்) மறைந்து விடுகிறது. தயை புரிந்து அனுபவமாய் விளங்கும் வண்ணம் உபதேசிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

சீடன் கூறியவற்றைச் செவியேற்ற ஆசிரியர், அவனுடைய நிஜ சொரூபத்தை அவனுக்குக் காட்டத் தொடங்கினார். ஆனால் அச் சொரூபம் அதி சூக்குமமானது. இந்த ஊனக்கண்களால் காணக்கூடிய தூலப் பொருளல்ல. அதனால் அதை நேரே சுட்டிக் காட்டல் சாத்தியமல்ல. இப்போது அதி நுட்பமாய் வானத்தில் தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திரனைக் கண்டுகொண்ட ஒருவன் அதை இன்னொருவனுக்குக் காட்டவேண்டின் முன்னே மரம், கட்டிடம் முதலிய தூல வுருவம் ஒன்றைக் காட்டி (அதோ அந்த அரசமரத்தில், அதோ போகிறதே அந்தக் கிளையில் ஒரு காக மிருக்கிறது பார். அதற்கு நேராய் வானத்தில் பார்! என்று அதன் மூலமாய் அம் மூன்றாம் பிறையைக் காட்டுவது போலவும், மிக நுட்பமாய்த் தோன்றும் அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவோர் அதற் கருகிலிருக்கும் பெரிய நட்சத்திரங்களை முன்னே காட்டி (அதோ சதுரமாய் நான்கு நட்சத்திரங்கள் தெரிகின்றனவா? அதில் ஒன்றின் கீழ் வால் போல் வரிசையாய் மூன்று நட்சத்திரங்கள் தெரிகின்றனவா? அக் கடைசி நட்சத்திரத்துக்குக் கிழக்கே ஒரு சாண் தூரத்தில் ஒரு நட்சத்திரம் மிகச் சிறிதாய் மினுக்மினுக் கென்று ஜொலிக்கிறது பார்! அதுதான் அருந்ததி என்று) அவற்றின் மூலமாய் அந்த அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவது போலவும், குருவானவர் தூல ரூபமாய்ப் புலப்படும் தேகம், உலகம் முதலியவற்றின் உண்மைச் சொருபத்தை முன்னே விளக்கிக் காட்டி, அதன் பின் யாவற்றிற்கும் மூலகாரணமான அதி சூக்குமமான பொருளைப் பின்பு காட்டத் தொடங்கினார்.

(இதற்குமேல் குருவானவர் பிறப்பிறப்பாகிய பந்தத்திற்கும், அவற்றின் நிவர்த்தியாகிய மோக்ஷத்திற்கும். காரணம் கூறத் தொடங்குகிறார்.)

"புத்திரா! பந்த மோக்ஷங்கள் இரண்டிற்கும் ஆரோபம் அபவாதம் என்பவைகளே காரணமாகும். அதாவது, ஆரோபம் அல்லது, அத்தியாரோபம் என்பது பந்தத்திற்கும், அபவாதம் மோக்ஷத்திற்கும் காரணமாம். இவை இரண்டும் யுக்திகள் - என்று கூறப்பட்டிருக்கின்றது.
 இவற்றில் பந்தத்திற்குக் காரணமாகிய ஆரோபத்தை முந்திக் கூறுதும் கேட்பாயாக.

(பந்த லக்ஷணத்தை முன்பு முன்பு அறிந்துகொண்டால் மோக்ஷ லட்சணம் பிறகு விளங்கும் என்று வாசிட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.)

ஆரோப லக்ஷணம்

ஆரோபம், அத்தியாசம், கற்பனை, பிராந்தி என்பன ஒரே பொருளையுடைய சொற்களே. உண்மையாய் இருக்கிற ஒரு பொருளை இல்லாத வேறொரு பொருளாகக் (மயக்கத்தால்) காண்பதற்கே அத்தியாரோபம் அல்லது ஆரோபம் என்று பெயர். அதாவது தோன்றிக்கொண்டிருக்கும் உண்மையான ஒரு பொருளே இல்லாத வேறொரு பொருள்
 போல் தோன்றுதல். எதுபோலெனின்: -

      வெய்யிலில் நாம் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கிளிஞ்சில் வீதியில் கிடந்தால், சூரிய கிரணத்தால் அது ஜொலிக்கிறதைக் காணும் நாம் அது வெள்ளி என்று கருதி விடுகிறோம்; கொஞ்சம் இருட்டாயிருக்கும் ஓரிடத்தில் ஒரு கயிறு விழுந்து கிடந்தால் திடீலென்று அதைக் கண்டதும் அது பாம்பு என்று கருதிப் பயந்துவிடுகிறோம்; நல்ல கோடை காலத்தில் வெட்ட வெளியான ஊஷா பூமியை நோக்கினால், அது ஜலம் நிறைந்த இடம்போல் தோன்றுகிறது. இவை யனைத்தும் ஆரோபமேயாம்.

இந்த விஷயத்தில் பெரிய வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. ஆனால் அவை பெரும்பாலும் கொள்கை பேதத்தால் உண்டாகும் துவேஷம் காரணமாக நேர்வதேயன்றி வேறில்லை. இப்போது நாம் அறியவேண்டிய விஷயம் மனோவாக்குக் கெட்டாதபடி மிக்க சூக்குமமானது. அதை விளக்கிக் காட்ட உலகிலுள்ள ஜடபதார்த்தங்களையே திருட்டாந்தமாகக் காட்டவேண்டி யிருக்கிறது. ஆகையால் தாஷ்டாந்தத்தை உணர்வதற்கு திருட்டாந்தத்தில் எவ்வளவு பாகம் அவசியமாய் வேண்டியதோ அவ்வளவு வரையிலேயே தாட்டாந்தத்தோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, திருட்டாந்த முழுமையும் தாட்டாந்தத்தோடு ஒவ்வொரு அம்சத்திலும் பொருந்தி வரவேண்டு மென்பது அனாவசியமான வீண் வாதமேயாகும்.

எவ்வாறெனின்: - "கந்தன் தன் நண்பனுக்கு ஆபத்தென்று கேள்விப்பட்டதே நன்றாய்ப் பறந்து சென்றான்'' என்றால், காற்று யாவற்றினும் அதிவேகமாய்ச் செல்லும் சக்தியுடையதாகையால், கந்தன் அதிவேகமாய்ச் சென்றான் என்று பொருள் கொள்கிறோம். இங்குக் காற்றின் வேகம் என்கிற குணம் ஒன்று மட்டுமே திருட்டாந்தத்திற்கு எடுத்துக் கொள்ளத்தக்கது. அதை விட்டு,

1. காற்று ஆகாயத்தினிடமாய் உண்டாயிற்று. கந்தன் ஆகாயத்திலிருந்தா உற்பத்தியானான்?

2. காற்று அதிவேகமாய் அடித்தால் பெரிய விருட்சங்களை யெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்துவிடுகிறது; கந்தன் வேகமாய்ச் சென்றால் அப்படி மரங்கள் பிடுங்கப்படுமா?

3. காற்று ஈரத்தை உலர்த்திவிடும். கந்தன் உலர்த்துவானா?

என்று இத்தகைய கேள்விகளை எங்கேனும் கேட்க லாமோ? இப்படிக் கேட்பது வீண் வாதமேயாகும். ஆத லால் ஆரோபத்தில்'' உண்மையாய் இருக்கும் ஒரு வஸ்து வேறொரு வஸ்துபோல் தோன்றுதல்'என்ற பாகம் மட் டுமே திருட்டாந்தத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உண்மை உணரக் கிடக்கிறது. அதாவது: -

பூரண இருளில் ஆவரணம் சம்பவிப்பதில்லை. ஏனெனில் அப்போது வஸ்துக்கள் புலப்படுவதில்லை. சொல்ப இருளில் நேரிடும் நேத்திர தோஷத்தால் ஆவரணம் தோன்றுகிறது. ஆவரணம் என்ற மாயைக்கு வஸ்துவை அடியோடு மறைக்கும் சக்தியில்லை. அதன் விவரத்தை மட்டும் (விசேஷ பாகத்தை) மறைக்கிறது; அதாவது ஏதோ ஓர் வஸ்து இருக்கிறது என்ற (சாமானிய பாகமாகிய) தோற்றத்தை மறைப்பதில்லை. ஆனால் அந்த வஸ்துவின் விவரமான உருவத்தை மறைத்து வேறொரு உருவமாய்த் தோன்றச் செய்கிறது.

தாஷ்டாந்தத்தில் சச்சிதானந்த இலட்சணத்தை யுடைய பரமான்ம சொரூபத்தை, அவற்றிற்கு நேர்மாறான அசத்து, சடம், துக்கம் என்ற இலட்சணங்களையுடைய பிரபஞ்ச ரூபமாய்த் தோன்றும்படி மாயை செய்கிறது. அதாவது ஆன்மாவின் ஞான சொரூபத்தை அடியோடுமறைக்க அஞ்ஞானம் அல்லது ஆவரணம் என்ற மாயைக்குச் சக்தியில்லை. அதாவது ஆன்மாவின் சாமான்ய பாகத்தில் அஞ்ஞான மில்லை. விசேஷ பாகத்தில் மட்டுமே யுண்டு. இதனால் ஞானமில்லாதவன் ஒருவனுமே யில்லை. அனுபவத்தில் நான் என்பதொன்றுண்டு என்பதும் கடவுள் ஒருவர் உளர் என்பதும் யாவர்க்கும் தெரியும். ஆனால் அந்த நான் என்பதன் உண்மையான சொரூபம் இன்னதென்றும் கடவுள் சொரூபம் இன்னதென்றும் மட்டும் தெரியாது. அப்பாகத்தில் தான் ஆவரணம் அல்லது மாயை யென்ற திரை ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கிறது.

[இந்த ஆவரணத்திற்கு கயிற்றில் அரவம் தோன்றல், கிளிஞ்சிலில் வெள்ளி தோன்றல், ஊஷர பூமியில் ஜலம் தோன்றல், என்கிற திருட்டாந்தங்க ளன்னியில், கட்டையில் மனிதன் போல் தோன்றல், ஒரு வடிவமும் நிறமுமற்ற வானத்தில் கொப்பரை கவிழ்த்தது போன்ற ஒருவித வடிவமும் நீல நிறமும் தோன்றுதல் முதலிய திருட்டாந்தங்களும்      கூறப்படுகின்றன.]

ஆவரணத்தைப் பற்றி மேலே கூறிய திருட்டாந்தங்களைப் போலவே, எவ்வித ரூபமாவது நாமமாவது இல்லாமல், எங்கும் சமமாய், இரண்டின்றி ஏகமாய், ஞான சொரூபமாய், பூரணமாய் நிறைந்து நிற்கும் பிரம்ம சொரூபத்தில் தோன்றும் பஞ்சபூத விகாரங்களனைத்தும் இனி கூறப்படுகிற கற்பனையால் உண்டாயினவென்று     அறிந்துகொள்ளக் கடவாய். அது எவ்வாறெனில் கூறுகிறோம் கேள்: -

ஆன்மா சாதாரண சுழித்தியி லிருப்பதுபோல், சிருட்டிக்கு முன் எல்லா ஆன்மாக்களும் (பூர்வம் செய்த கர்ம வாசனைகளோடு) அவித்தை யென்ற மாயையின் கண்ணே (மெழுக் குருண்டையில் தங்கப் பொடிகள் மறைந்து கிடப்பனபோல்) மறைந்திருக்கும். (இவ் வான்மாக்கள் இனி ஜனித்துத் தம் கர்மங்களை அனுபவித் தொழிக்கவேண்டிய பரிபாக காலம் வந்தபோது, ஈசுவரனுடைய கருணாநோக்கத்தால் மேற்கண்ட மாயை, தான் முன்னிருந்த (மறைவான) நிலைமையைவிட்டு மூன்றுவித குணங்களாய் வெளிப்படும்.

[ஆவரணம் என்றால் மூடுதல் அல்லது மறைத்தல் செய்வது என்று பொருள். ஆன்மாவின் நிஜசொரூபம் தெரிய வொட்டாது மறைப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.  இதுவே கர்மங்களை ஆன்மாவோடு பொருத்தி வைக்கும் பசைபோன்றது. இது வெளிப்படத் தோன்றா திருத்தலால் அவ்வியத்தம் என்று கூறப்பட்டது. (வியத்தம் = வெளிப்படத் தோன்றல், அவ்வியத்தம் வெளிப்படாது மறைந்திருத்தல்,) இந்த ஆவரணம் வித்தை என்கிற ஞானத்தினால் அழிவதால் இதற்கே அவித்தை யென்றும் பேயர். இது பிரபஞ்ச உற்பத்திக்கு ஓர் காரணமா யிருத்தலால் இதற்கு பிரகிருதி யென்றும் பெயர். இந்த ஆவரணம் பரமான்மாவையும், தன்னைத்தானறிந்த பிரம்ம ஞானியையும் தவிர மற்ற சீவர்களுக்கு ஆன்ம பரமாத்மாக்களின் சொரூபம் சற்றும் தெரியவொட்டாது திரைபோலும், மழை காலத்து மூடுபனி போலும் மறைக்கும். தாயுமானவர், "மாயை யெனும் திரையை நீக்கி நின்னை யாரறிய வல்லார்....” என்று கூறியது இந்த ஆவரணமாகிய திரையையே.]

முக்குணங்களின் விவரம்

(1) சத்துவம். (2) இரஜசு. (3) தமசு.

      1. சத்துவகுணம்: - இதுவே உத்தமமான குணம். இது வெண்மை நிறத்தையும், தெளிந்த சுத்த ஜலத்தையும் போன்றது.

      2. இராசதகுணம்: - மத்திமமான குணம். சிவப்பு நிறத்தையும் கலங்கிய நீரையும் ஒத்தது.

3. தாமதகுணம்: - இது அதமமான குணம். சுத்தக் கறுப்பு நிறுத்தையும், அசுத்தமான சாக்கடைச் சேற்று ஜலத்தையும் ஒத்தது.

சத்துவகுணம் சுத்த சாந்தம் ஜீவகாருண்யம் ஈசுர பக்தி, மோக்ஷ இச்சை, தெய்வ சிந்தனை முதலியவற்றை யுடையது. இரஜோகுணம் இலௌகீக விஷயங்களிலும், உலக போகத்திலும் பிரியமுடையது. துவேஷம், உரோஷம், சாதாரண கோபம், இச்சை, இவை யாவும் இராசத குணங்களே. தமோகுணம் தன்னை மறந்த கோபம், அதிக ஊண் புசித்தல், அதிக நித்திரை மயக்கம் முதலிய இழிவான குணங்களை யுடையது.

இம் மூன்று குணங்களும் எப்போதும் ஒன்றோ டொன்று கலந்தே யிருப்பினும் ஒருபோதும் மூன்றும் சமமா யிராது.

எப்போதும் எதாவதொன்று மட்டும் மேலோங்கியும் மற்ற இரண்டும் தாழ்த்துமே யிருக்கும்.

இனிப் பிரபஞ்ச சிருட்டியைக் கிரமமாய்க் கூறத் தொடங்குவாம்.

[சிருட்டியில் கிரம சிருட்டி யென்றும் உகபத் சிருட்டி யென்றும் இருவகை யுண்டு. இவற்றில் கிரம சிருஷ்டி என்பது, "ஆவரண சத்தியிலிருந்து ஆகாயம் உண்டாயிற்று, ஆகாயத்திலிருந்து வாயு உண்டாயிற்று, வாயுவினின்று அக்கினி யுண்டாயிற்று, அக்கினியிலிருந்து அப்பு உண்டாயிற்று, அப்புவினின்றும் பிருதிவி யுண்டாயிற்று" என்று வரிசைக் கிரமமாய்க் கூறுவது.

உகபத் சிருட்டி என்பது, "வாயுவின் சேட்டையால் கடலில் எப்படி அலை, திவலை, குமிழி, நுரையாதிகள் ஏக காலத்தி லுண்டாயிற்றோ, அவ்வாறே அகண்ட பரிபூரண    சொரூபத்தில் தது, புவன போகங்களாகிய, யாவும் அப் பரம்பொருளின் கிருபா நோக்கத் தாலேயே மாயா சம்பந்தத்தால் ஏககாலத்தில் தோன்றின" என்பதாம். உகபத் சிருட்டியே வேத சம்மதமாம் என்றும் யாவும் எங்கிருந்து உற்பத்தியாயினவோ அவ்வாறே அந்த விடத்திலேயே ஒடுங்கி மறைகின்றன வென்ற உண்மையை நன்குணர்வதற்காகவே மேல்கண்ட கிரம சிருஷ்டி முறையாய்க் கூறப்பட்டிருக்கிற தென்றும் அருளப்பட்டிருக்கிறது.]

அகண்ட பரிபூரண சச்சிதானந்த சொரூபமாகிய. பரப் பிரம்மத்தினிடத்தில், கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல் மூலப்பிரகிருதி யென்ற ஒரு சக்தி தோன்றியது. இப்படித் தோன்றுவதையே அத்தியாரோபம் என்றும் ஆரோபம் என்றும் கூறுவது.

[இச்சந்தர்ப்பத்திலும் பலவித வாதங்களுக்கு வழியுண்டு. ஆனால் அதன் முடிவான தீர்மானத்தை யறிந்து மேல் ஆராய்ச்சி செய்யலாம் என்றெண்ணுவது, கடலில் அலை நின்றதே ஸ்நானம் செய்யலாம் என்று கருதுவது போலவேயாகும். "பரிசுத்தமான பிரம்மத்தினிடத்தில் இம்மாயை எப்படி யுண்டாயிற்று? ஆன்மா கன்மம் செய்ததால் ஜனிக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி யிருக்க முதல் முதல் ஜன்மம் எடுத்தபோது அதற்கு முன் தேகமின்றிக் கன்மத்தை யெப்படிச் செய்தது? ஜன்மம் முன்பா கன்மம் முன்பா?'' என்கிற கேள்விக ளெல்லாம் ஒரு பொருளையே குறிக்கும். ஆன்மாக்கள் மாயையின் வயப்பட்டிருக்கிறவரையில் அம்மாயையின் உளவை யறிய    முடியாது. மாயையை நீக்கிக்கொள்ள வழி கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறே முயன்று நீக்கிக்கொண்டால் எல்லா உளவும் அருளால் விளங்கிவிடும். அப்படிக் கண்டு திருப்தி யடைந்தே நம் முன்னோரெல்லாம் இவ்வுலகத்திலிருந்து கொண்டே பேரானந்தத்தை யனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மார்க்கம் மரணத்திற்குப் பிறகு மோக்ஷம் என்கிற ஒன்று வரும் என்று நம்பிக்கொண் டிருப்பதல்ல. இத் தேகத்திலிருக்கும் போதே அங்கை நெல்லிக்கனிபோல் அப்பேரின்ப நிலையை யனுபவிப்பது. இச் சன்மத்தில் அல்லது சமீப ஜன்மத்தில் மெய்ஞ்ஞானத் தையடையத் தடையாக விருக்கும் மிக்க தீவினையையுடை யோர், இச்சமானத்தில் திருப்தியடையாமல் பிறப்பிறப் பாகிய பவக்கடலில் சுழன்று அவதிப்பட்டுக்கொண்டே யிருப்பார்கள். பரியாக பக்குவ முடையோர் இத்தகைய சந்தேகங்களுக்கு மயங்காது ஆன்றோர் வாக்கில் நம்பிக்கை வைத்து மாயையை யொழிக்க முயல்வார்கள்.

இன்னும் பிரம்மத்தையும் ஆத்மாவையும் போல் இம் மரயையும் அனாதி நித்தியமா, அநித்தியமா என்ற ஒரு கேள்வியிலும் வாதங்கள் நிகழ்கின்றன. இதில் சுலபத்தில் சமாதானமடையக் காரணமிருந்தும், குபேதத்தாலுண் டாகும் துவேஷ புத்தியால், அனுபவமாய் உண்மையை யறிய முயல்வதை விட்டுச் சிலர் வீண் தர்க்கவாதத்திலிறங்கி விரோதங்களையும் விபரீதங்களையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள்.

மாயை நித்தியமென்று கூறுவதும் மகான்கள் எழுதிய நூல்களே. அவர்களும் ஆண்டவன் அருள்பெற்று முத்தி யடைந்தவர்களென்பதே சர்வஜன சம்மதம். அம்மாதிரியே மாயை அநித்தியமென்பது வேதம் முதலிய பிரபல நூல்களில் கூறப்பட்டிருப்பதே. அக்கொள்கையின்படி முத்தியடைந்த ஆன்றோர் எண்ணிறந்தோர். அப்படியிருக்க, ஒரு கட்சி கூறுவது மட்டும் எப்படிப் பொய்யாயிருக்கும் என்று இதைப்பற்றித் தர்க்கமிடுவோர் ஏன் சிந்திக்கலாகாது? சற்று சிந்தித்தால் சாதாரண அறிவுடையோர்க்கும் இரண்டு அபிப்பிராயங்களிலும் உண்மை யிருக்கவே வேண்டுமென்று புலப்படும். ஆனால் ‘நித்தியம்’ 'அநித்தியம்' என்ற நேர் விரோதமான இரண்டு இலக்ஷணங்களும் ஒன்றினிடத்திலேயே யெப்படி யிருக்கும் என்கிற ஒரு ஆக்ஷேபனை தோன்றுகிறது.

ஆனால் இந்தச் சாத்திர ஆராய்ச்சியில் இத்தகைய சந்தர்ப்பங்கள் பல காணலாம். அவற்றில் திருட்டாந்தமாய் இரண்டொன்று மட்டும் கூறுகிறோம். பரமாத்மாவாகிய    பரப்பிரம்மத்தின் இலக்ஷணங்களைப்பற்றிக் கூறும் வேதமே   பிரம்மம் அணுவுக்கு அணு (சிறியவற்றிற்கெல்லாம் சிறிது அதிலும் சிறியது கிடையாது) என்றும், மஹத்திற்கு மஹத்து (பெரிய வஸ்துக்களுக்கெல்லாம் பெரிய வஸ்து    அதினும் பெரிய வஸ்து கிடையாது) என்றும் பிரம்மம் மனம் வாக்குகளுக்கு எட்டுமென்றும், அவைகளுக் கெட்டாதென்றும் - பிரம்மம் சமீபத்திற்குச் சமீபமென்றும் தூரத்திற்குத் தூரமென்றும் கூறுகிறது. இப்படி விரோதமாய்த் தோன்றும் இரண்டு இலட்சணங்களும் காரணத்தோடு திரூபிக்கப்படுகின்றன. இவ்வாறு பலவுள. அவற்றை யாங்காங்கு வருமிடத்துக் காணலாம்.

மாயை நித்திய மென்பதும் அநித்திய மென்பதும் அவ்வாறே, இரண்டிலும் உண்மையுண்டு. இது சமஷ்டி வியஷ்டி பேதத்தால் நேர்ந்தது. ‘சமஷ்டி' எனல் பல கூடிய கூட்டம்; தோட்டம் என்பதுபோல். ‘வியஷ்டி' என்பது    தனி மரம் என்பது போல்.

மாயை யொழிந்தாலன்றி மனிதன் மோக்ஷம் அடைவதில்லை யென்பது யாவரும் அறிந்ததே. ஒருவன் சாதனங்களை யடைந்து மன நாசம் செய்து எப்போது தன்னை யறிகிறானோ அப்போதே தன் வரையில் மாயையை யொழித்துக்கொண்டவனாகிறான். அனுபவத்தில் மனமே மாயை யன்றி வேறு மாயையில்லை.

"மனமனம் எங்குண்டு மாயையும் அங்குண்டு

மனமனம் எங்கில்லை மாயையு மங்கில்லை

மனமாயை யன்றி மற்றொன்று மில்லை

பினையாயவேண்டா பிதற்றவும் வேண்டா

தனையாய்ந் திருப்பது தத்துவந்தானே"                   (பாடுதுறை)

 

என்று ஆன்றோர் அருளியவாற்றா லுணரலாகும்.

      இதனால் மாயை அநித்திய மென்று நன்கு விளங்குகிறது. "மாயை அநாதியா யிருப்பதாயிற்றே அது எப்படி யழியும்?'' என்று தனஞ்சயன் கேட்டதற்குப் பகவான் "ஒரு மலைக்குகையில் இருள் அம்மலை உற்பத்தியான கால முதலே யிருந்தாலும், தீப வொளியைக் கண்ட தட்சணம் அழிவது போல் மாயை அநாதியாயினும் ஞானோதயத்தால் அழியும்'' என்று அருளினான்.

      இனி முத்தியடைவோர் அவர்கள் வரையில் மாயையை யொழித்துக்கொண்டாலும், பிரபஞ்ச சிருட்டி முதலியவற்றிற்குக் காரணமாகிய ஜகமாயை யடியோடு அழிவதில்லை. அதனால் மோக்ஷமடைவோர் அடைந்துகொண்டே யிருப்பினும், பிரபஞ்சத்தில் நடக்கும் ஆண்டவனது பஞ்ச கிருத்தியம் தடையின்றி நடந்துகொண்டே யிருக்கிறது. இவ்வாற்றால் மாயை நித்தியமென்பதும் உண்மையே.

      ஆயினும் அஞ்ஞான நிலையிலுள்ள நாம் மாயையை யொழிக்கவேண்டியவர்க ளாதலால் மாயை அநித்தியம் என்கிற கொள்கையையே கடைப்பிடித்து முயன்றால் தான் அவ்வாறே யதை யொழிக்கத்தக்க உற்சாகமும் நம்பிக்கையும் நம்மில் ஜனிக்கும். இம்மாயையின் விஷயத்தைப்பற்றிப் பின்னால் சந்தேகந் தெளிதற் படலத்தில் விவரமாய்க் கூறப் படுகிறபடியால் ஈண்டு இம்மட்டில் நிறுத்துகிறோம்.

[இனி கிரமப்படி சிருஷ்டியைக் கூறுவாம்]

       முன் கூறியபடி பரப்பிரம்மத்தினிடமாக அனாதியா யுதித்த அம்மாயைக்கு மூலப் பிரகிருதி என்று பெயர். இம் மூலப் பிரகிருதியினிடம் சித்துவம், இரஜசு, தமசு என்று மூன்று குணங்களுண்டு. இம்மூன்று குணங்களும் பிரிக்கப்படாதவை. ஆதலின் அவற்றிற்கு அவிகிர்த (பிரிக்கக்கூடாத) சத்துவ இரஜோதமோ குணங்கள் என்று பெயர்.

1.     இம்மூன்று குணங்களில் முதன்மையாகிய சத்துவ குணம் பரிசுத்தமானது. நிர்மல ஜலம் போன்றது. இதற்குச் சுத்த மாயை யென்றும், வித்தை (வித்தை = ஞானம்) யென்றும், ஈசுர காரண சரீரம் என்றும் பெயர். இது ஆபாச யோக்கியமானது. அதாவது கண்ணாடியைப் போலும் சுத்த ஜலத்தைப் போலும் பிரதி பலித யோக்கியமானது. அதில் பரப்பிரம்மத்தின் பிரதி பிம்பம் சிற்சாயை போல் தோன்றும்.

இதுவே பிரபஞ்ச சிருஷ்டியாதிகளைச் செய்யும் ஜகத் காரணராகிய ஈசுவரன். மூலப் பிரகிருதியின் சத்துவகுணமாகிய சுத்த மாயையிலும், சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் இரஜசு, சத்துவத்தில் தமசு என்ற முக்குணங்களும் அந்தர்ப்பாவமா யிருக்கும். ஆதலால் அச்சத்துவ குண மாயையில் உற்பத்தியான ஈசுவரனுக்கு மேற்படி முக்குணங்களு முண்டு.

இந்த மூன்று குணங்களும் ஒருபோதும் சமமாயிரா தென்றும், ஒன்று பிரதானமாகும்போது மற்றை இரண்டும் தாழ்ந்திருக்கு மென்றும் முன்னமே கூறியிருக்கிகிறாம். இந்த முக்குணங்களால் அந்த ஈசுவரன் மூன்று தொழில்களைச் செய்கிறார். அதனால் அவருக்கு மூன்று பெயர்கள் உண்டாயின. எவ்வாறெனின்: -

(1)    அந்த ஈசுவரனுக்கு சத்துவகுணம் பிரதானமாகும் போது அவர் ஜகத்தை இருக்கும் தொழிலைச் செய்வதால் அவருக்கு விஷ்ணு வென்று பெயர் வந்தது.

(2)    அந்த ஈசுவரனுக்கே இரஜோகுணம் பிரதானமாகும் போது அவர் ஜகத்தைச் சிருஷ்டிக்கும் தொழிலைச் செய்வதால் அவருக்கே பிரம்மா என்ற பெயர் வந்தது.

(3)    அதே ஈசுவரனுக்குத் தமோ குணம் பிரதானமாகும்போது அவர் ஜகத்தைச் சங்காரம் செய்யும் தொழிலைச் செய்வதால் அவருக்கே உருத்திரர் என்ற பெயர் வந்தது.

[இவ்வாற்றால் ஈசுவரன் ஒருவரே ஆயிருப்பினும், அவருக்குண்டான மூன்று குணங்களால் அவர் மூன்று தொழிலைச் செய்வதால், அந்த ஒரே ஈசுவரருக்கே இந்த மூன்று பெயர்களும் உண்டாயின வென்பது கவனிக்கத்தக்கது. மற்ற பல நாமரூபாதிகளும் அங்கங்கள் முதலியனவும் மந்த மதியினர் கடைத்தேறும் வண்ணம் உபாசனைக்காக ஏற்பட்டவை யென்று உணரத் தக்கது. எப்போதும் நாமரூபத்தையே பற்றிக்கொண்டு சதா ஊஞ்சலைப் போல சலித்துக்கொண்டே யிருக்கும் மனத்தை ஒரே விடத்தில் அசைவற்று நிற்கச் செய்ய வேண்டுவதற்காக இந்தச் சகுணோபாசனை அவசியமென்று கருதப்பட்டது.]

இனி சீவர்களின் சிருட்டி கூறப்படுகிறது

2. மூலப்பிரகிருதியின் இரண்டாவது குணமாகிய இரஜோ குணத்திற்கு அசுத்தமாயை யென்றும் அவித்தை யென்றும் பெயர் (அவித்தை - அஞ்ஞானம்). இதுவே சீவர்களுக்குக் காரண சரீரம். இது மலின ஜலம் போன்றது (அழுக்கடைந்த ஜலம்).

இதில் பிரதிபலிக்கும் பிரம்மச் சாயையே சீவன். இந்த அவித்தைகள் அனந்தமா யிருப்பதால் சீவன்களும் எண்ணிலவாயின. முன் சத்துவ குணத்திற்குக் கூறியது போல் இந்த இரஜோகுணத்திற்கும் இரஜசில் சத்துவம், இரஜசில் இரஜசு, இரஜசில் தமசு என்று முக்குணங்கள் உண்டு.

இதில் சத்துவகுணம் பிரதானமான சீவர்கள் ஞான நிஷ்டாபரர்களா யிருப்பார்கள். இரஜோ குணம் பிரதானமான சீவர்கள் உலக விவகாரமாகிய கர்ம நிஷ்டாபரர்களா யிருப்பார்கள். தமோ குணம் பிரதானமான சீவர்கள் சோம்பல், நித்திரை, மயக்கமுடைய மந்தர்களா யிருப்பார்கள்,

3.     இனித் தாமத குணம் எஞ்சி யிருக்கின்றது. இது மிக்க அசுத்தமான சேறும் ஜலமும் கலந்தது போன்றது. இத் தமோ குணம் இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும். அவற்றிற்கு ஆவரணசத்தி யென்றும் விக்ஷேப சத்தி யென்றும் பெயர்.

1.     ஆவரணசத்தி: - ஆவரணம் என்றால் மறைப்பு என்று பொருள். இது மாரிகால அமாவாசி யிரவில் உண்டாகும் மூடுபனிபோல் ஆன்மா தன் நிஜசொரூபத்தையும் பரமான்ம சொரூபத் தையும் உணராவண்ணம் அதன் ஞானமாகிய கண்ணை மறைப்பது. இதற்கே அஞ்ஞான மென்று பெயர். அனுபவத்தில் இதுவே மனத் தின் இரஜோதமோ குணங்களாய்த் தொழில் புரிவது. இதை யொழிப்பதே ஞானத்தை யடையமார்க்கம். ஈண்டிது விரிக்கிற் பெருகும். என்றஞ்சி இத்துடன் நிறுத்துகிறோம்.

2.     விக்ஷேப சத்தி: - விக்ஷேபம் எனில் தோற்றம் என்று பொருள். ஆண்டவன் இந்த விக்ஷேப சத்தியினிடமாகவே ஆன்மாக்கள் மோக்ஷம வேண்டியதற்கு அவசியமான தநு (தேகம்), கரணம் (அந்தக்கரணம்), புவனம் (பூலோகம் முதலிய பல அண்டங்கள்), போகம் (சீவனுடைய போகத்திற்கு வேண்டிய மற்ற வஸ்துக்கள்) முதலியவற்றைப் படைத்தார்.

 

எவ்வாறெனின்: -

      இந்த விக்ஷேப சத்தியினிடமாக ஈசுவரனுடைய சர்வ வல்லமையாகிய சத்தியால் ஆகாயம் தோன்றிற்று. ஆகாயத்தில் வாயு தோன்றியது, வாயுவில் தேயு (அக்னி) தோன்றியது, தேயுவில் அப்பு (ஜலம்) தோன்றியது, அப்புவில் பிருதிவி (மண்) தோன்றியது.

      இவ்வாறு தோன்றிய இந்த ஐந்திற்கும் சூக்கும பஞ்ச பூதங்களென்றும் தன்மாத்திரை பூதங்கனென்றும் பெயர். இவை மேற்கண்டவாறு ஒன்றிலிருந்தொன்று கிரமமாய் உதித்தன. அதாவது ஒரு பெரிய அடுக்குத் தவலைக்குள் நான்கைந்து தவலைகள் ஒன்றிற்குள் ஒன்று அடங்கி யிருப்பது போல் உற்பத்தியாயின.

      இவ்வாறு உற்பத்தி வியாபக வியாப்பிய சம்பந்தமானது- அது ஒன்றுக்குள் ஒன்று அடங்கி யிருக்கும் சம்பந்தம் - பொடி டப்பிக்குள் பொடி இருப்பதுபோல். இதில் ஒன்றைத் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் வஸ்துவிற்கு வியாபகம் என்றும், ஒன்றிற்குள் அடங்கி
 யிருக்கும் வஸ்துவிற்கு வியாய்பியம் என்றும் பெயர். திருட்டாந்தத்தில் டப்பி வியாபகம் அதற்குள்ளிருக்கும் பொடி வியாப்பியம்.

      மேற்கண்ட சூக்கும பஞ்ச பூதங்கள் அவ்வாறு ஒன்றிலிருந்தொன்று உண்டானபடியால், உற்பத்தியான பூதத்திற்குத் தன் இயற்கைக் குணத்தோடு தனக்குக் காரணமாயிருந்த வியாபக பூதத்தின் குணமும் இருக்கும். எவ்வாறெனின்: -

      1.     ஆகாயத்தின் குணம் யாவற்றிற்கும் இடங் கொடுத்திருப்பதே யாகும்.

2.     வாயு: - இதற்கு ஆகாயத்தின் குணமாகிய இடங் கொள்ளுதலோடு தன் சொந்த குணமாகிய சலன குணமும் சேர்ந்து இரண்டு குணங்களுண்டு.

3.     தேயு: - அக்கினிக்கு மேற்கண்ட இடங் கொள்ளுதல், சலனம், இந்த இரண்டு குணங்களோடு அக்கினியின் சுயகுணமாகிய ரூபகுணமும் (கட் புலனுக்கு ஒளியாய்த் தோற்றல்) கூடி மூன்று குணங்களுண்டு.

4.     அப்பு: - ஜலத்திற்கு மேலே அக்கினிக் குள்ளன வாய்க் கூறிய மூன்று குணங்களோடு தன் சுய குணமாகிய இரசகுணமும் - (உருசி) சேர்ந்து நான்கு குணங்களுண்டு.

5.     பிருதிவி: - மண்ணிற்கு அப்பு இடமாயுள்ள நான்கு குணங்களோடு தன் சுயகுணமான கந்தம் (மணம்) என்ற குணமும் கூடி ஐந்து குணங்களுண்டு.

இம்மட்டில் சூக்கும பூதங்களின் உற்பத்தி மூடிந்தது. மூலப் பிரகிருதியின் சத்துவ குணத்திலும், இரஜோ குணத்திலும், சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் இரஜசு, சத்துவத்தில் தமசு என்றும் மும்மூன்று குணங்கள் அந்தர்ப்பாவமாய் இருந்தது போல், மூலப் பிரகிருதியின் தமோ குணத்திலும் சத்துவ இரஜோ தமோ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அக் குணங்கள் இந்தத் தன்மாத்திரை பூதங்கள் முழுமையும் சம்பந்தித்து நிற்கும். அதாவது இப் பூங்தகளுக்கு அம் முக்குணங்கள் உண்டு என்றுணர வேண்டும்.

இத் தன்மாத்திரை பூதங்களின் சத்துவ குணத்தின் சமஷ்டியில் (அதாவது ஐந்து பூதங்களும் சேர்ந்த மொத்தத்தில்) அந்தக்கரணமும், வியஷ்டியில் (அதாவது ஐந்து பூதங்களும் தனித்தனி பிரிந்து நின்றதிலிருந்து) ஞானேந்திரியங்களும் உற்பத்தியாயின. சமஷ்டி என்பது கூட்டம் - தோப்பு போல்; வியஷ்டி என்பது தனித்தனி. விருட்சம் என்பது போல்.

மேற்படி தன்மாத்திரை பூதங்கள் ஒன்று சேர்ந்து அந்தக்கரணம் உண்டானதால் அது ஒன்றாகவே தோன்றின போதிலும், ஐந்து பூதங்களால் உண்டானது பற்றி அந்தக்கரணத்தில் ஐந்து தொழில்களும், அதனால் ஐந்து பெயர்களும் அடங்கியிருக்கின்றன. எந்தெந்த பூதத்திலிருந்து எதெது உற்பத்தியாயிற்றோ அத்தற்கு அந்தந்தப் பூதத்தின் குணமிருக்கும். அதற்குத் தக்க தொழிலுமிருக்கும்.

அந்தக்கரண விவரம்

அந்தக்கரணங்கள் உள்ளம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என ஐந்தாம்.

அவற்றுள், ஆகாயத்தின் சத்துவ அமிசத்தில் உற்பத்தியானது உள்ளம். ஆகாயத்தின் தொழில் அவகாச மளிப்பது; அப்படியே உள்ளமும் மனம் புத்தி முதலிய மற்றவற்றிற்கும் இடங் கொடுத்து ஆகாயத்தைப்போல் எதிலும் தாக்கற்று சலனமின்றிக் கலங்காது நிற்கும்.

மனம் -           வாயுவின் சத்துவ குணத்திலுண்டானது. வாயுவின் தொழில் சதா சலித்துக்கொண்டே யிருப்பதாகும். அதைப்போலவே மனமும் சதா அலைந்து கொண்டே யிருக்கும்.

புத்தி -              தேயுவின் சத்துவகுணத்தினா லுண்டானது. தேயுவின் குணம் தன் பிரகாசத்தால் எல்லா வஸ்துக்களையும் இன்னதின்ன தென விளக்கிக் காட்டுதல். புத்தி அவ்வாறே விஷயங்களை இது நல்லது இது கெட்டது என விளக்கிக் காட்டும்.

சித்தம் -          அப்புவின் சத்துவகுணத்தி லுண்டானது அப்பு (ஐலம்) வின் குணம் ஒன்றிலிருந் தொன்றைப் பற்றிச் செல்வது. அதுபோலவே சித்தமும் ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்தைத் தொடர்ந்து பற்றிச் செல்லும். இதற்குச் சிந்தா தெற்குச் சிந்தா விருத்தி யென்றும் பெயர்.

அகங்காரம் -       பிருதிவியின் சத்துவ குணத்தில் உற்பத்தி யானது. பிருதிவியின் குணம் கடினமாய். எதையும் எதிர்த்து நிற்பதாகும். அவ்வாறே அகங்காரமும் நான் என்கிற அபிமானத்தால் எனக்கு நிகர் யாருமில்லை யென்று அகம்பாவங் கொண்டிருக்கும்.

ஞானேந்திரியங்களின் விவரம்

சூக்கும பூதங்களின் சத்துவகுண வியட்டியில் உண்டான ஞானேந்திரியங்கள் சுரோத்திரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்கிராணம், என ஐந்தாம். இவை மேற்படி பூதங்கள் தனித் தனியாய் ஒவ்வோர்டத்தில் அமைந்திருக்கும். இவற்றுள்: -

சுரோத்திரம் -      ஆகாயத்தின் சத்துவகுணத்தி லுற்பத்தி யானது. ஆகாயத்தின் குணம் சாத்த விஷயத்தை அறிதலாதலால் சுரோத்திரேந்திரியமும் செவியில் நின்று சத்தத்தை உணரும்.

துவக்கு -          வாயுவின் சத்துவகுணத்தி னுற்பத்தியானது. வாயு ஸ்பரிச விஷயத்தை அறியும் குணமுடையதாதலால் துவக்கிந்திரியமும் சர்வாங்கமு மிருந்து ஸ்பரிசத்தை உணரும்.

சட்சு -              அக்கினியின் சத்துவ குணத்தி லுற்பத்தியானது. அக்கினி ரூபத்தை அறியும் குணத்தையுடையதாதலால் சட்சு (நேத்திர) இந்திரியமும் கண்களில் இருந்து ரூபங்களை அறியும்.

சிங்குவை -       அப்புவின் சத்துவகுணத்தில் உற்பத்தியானது. அப்பு இரச (உருசி) குணமுடையது. சிங்குவேந்திரியமும் நாவினிடமாயிருந்து நாம் புசிக்கும் சகல வஸ்துக்களின் உருசியையும் அறியும்.

ஆக்கிராணம் -     பிருதிவியின் சத்துவகுணத்தில் உற்பத்தி யானது. பிருதிவியின் குணம் கந்தமாதலால். கிராணேந்திரியமும் நாசியினிடமாக இருந்து கந்த உணர்ச்சியை அறியும்.

அந்தக் கரணங்களும் ஞானேந்திரியங்களும் தன்மாத்திரை பூதங்களின் சத்துவ குணத்தில் உற்பத்தியானமையால் ஞான சாதனமாயின்.

     சூக்கும் பூதங்களின் இராஜோகுணத்தில் சமஷ்டியில் பிராணாதி பஞ்ச வாயுக்களும், வியஷ்டியில் கன்மேந்திரியங்களும் உண்டாயின.

     சமஷ்டியில் உற்பத்தியான பிராணவாயு ஒன்றேயாயினும் இட பேதத்தாலும் ஐவகைத் தொழில் பேதத்தாலும் வியானன், பிராணன், அபானன், சமானன், உதானன் என ஐந்து வகை வாயுக்களாயிற்று. இவற்றில்: -

வியானன் - ஆகாயத்தின் இரஜோ குணத்தி லுற்பத்தியானதால் ஆகாயத்தைப் போலவே சர்வாங்கமும் வியாபித்து எங்கும் இரத்தத்தைப் பரவச்செய்து தேகத்தைத் தாங்கி நிற்கும்.

பிராணன் -  வாயுவின் இரஜோ குணத்தில் உற்பத்தியானதால் வாயுவைப் போலவே இருதயத்திலிருந்து சதா சலித்துக்கொண்டே பசிதாகக் கிரியைகளைச் செய்யும்.

அபானன் -  தேயுவின் இரஜோ குணத்தி லுற்பத்தியானதால் குதஸ்தானத்திலிருந்து மல ஜலாதிகளை வெளியிற்றள்ளும் தொழிலைச் செய்யும்.

சமானன் -  அப்புவின் இரஜோ குணத்தி லுற்பத்தியானதால், நாபியினிடமாயிருந்து, உண்ட அன்ன பானாதிகளைப் பாக யோக்கியமாகச் சமானம் செய்யும்.

உதானன் -  பிருதிவியின் இரஜோ குணத்தி லுற்பத்தியானதாதலால் கண்ட ஸ்தானத் திலிருந்து உஸ்வாச நிஸ்வாசம் செய்யும்.

இந்த ஐந்து வாயுக்களன்றி பிராணவாயுவிற் றோன்றிய வேறு ஐந்து உபவாயுக்கள் உண்டென்றும் கூறப்படுகிறது.

அவை நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என ஐந்து வாயுக்களாம். இவற்றில்,

நாகன் -            தேகத்தை முறுக்கிக் கொட்டாவி விடச் செய்வது.

கூர்மன் -         விக்கலையும் ஏப்பத்தையும் உண்டாக்குவது.

கிரிகரன் -         தும்மலை யுண்டாக்குவது.

தேவதத்தன்-        சிரித்தல், சோகம் முதலியவற்றை யுண்டாக்குவது.

தனஞ்செயன்-      பிராணன் நீங்கியபின் தேகத்தில் ஐந்து நாள் தங்கியிருந்து அதை வீங்கி வெடிக்கச் செய்வதாம்.

ஆயினும் இவ்வைந்து தொழில்களும் பிராணவாயுவின் தொழிலே ஆதலால் வாயுக்கள் ஐந்தென்றே கூறுவது முண்டு.

கன்மேந்திரிய விவரம்

வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்தம் அல்லது ஆண் குறி எனக் கருமேந்திரியங்கள் ஐந்தாம். இவை சூக்கும பூதங்கள் தனித்தனி நிற்கும் நிலைமையில் உற்பத்தியானதால் தேகத்தில் தனித்தனியே வெவ்வேறு பாகங்களில் நின்று தொழில் செய்கின்றன.

வாக்கு -     ஆகாயத்தின் இரஜோ குணத்தில் உற்பத்தியாயிற்று. ஆகாயம் சத்தத்திற்குரிய தாதலால் வாக்கு ஆகாயத்தினிடமாக வசனிக்கும்.

பாணி -     வாயுவின் இரஜோ குணத்தி லுற்பத்தியானது. ஆதலால் வாயுவினிடமாக இடுதனும் ஏற்றலும் செய்யும்.

பாதம் -     அக்கினியின் இரஜோ குணத்திலுண்டான தாதலால் நடப்பதாகிய தொழிலைச் செய்யும்.

பாயுரு -     அப்புவின் இரஜோ குணத்தி லுற்பத்தியானதாதலால் மல ஜலங்களைக் கழிக்கும் தொழிலைச் செய்யும்.

உபத்தம் அல்லது ஆண் குறி -  பிருதிவியின் இரஜோகுணத்தி லுற்பத்தியானதால் ஆனந்தத்தை யுண்டாக்கும்.

        

மேற்கூறிய பிராணாதி பஞ்சவாயுக்களும் கன்மேந்திரியங்களும் தொழில் செய்வதால் கிரியாசாதன மாயின. இவ்வாறு சூக்கும பூதங்களின் சத்துவ இரஜோ குணங் களிலுற்பத்தியான அந்தக் கரணங்கள், ஞானேந்திரியங்கள், பிராணாதி பஞ்ச வாயுக்கள், கன்மேந்திரியங்கள் ஆகிய இருபதும் சூக்கும தேக தத்துவங்கள் என்று அழைக்கப்படும்.

இதுவரையில் சூக்கும பூதங்களின் சத்துவ இரஜோ குண உற்பத்திகள் முடிந்தன; இனி இவற்றின் தாமத குணம் எஞ்சி நிற்கிறது. எல்லாம் வல்ல பரமேசுவரன் இச் சூக்கும பூதங்களின் தமோ குணத்தில் அவற்றைப் பஞ்சீகரித்துத் தூல பூதங்களாக்கினான். அப்படி யாக்கப் பட்டவைகளுக்குப் பஞ்சீகரண பூதங்களென்றும், தூல பஞ்ச பூதங்களென்றும் பெயர். அவையே நம் கட்புலனுக்குத் தோற்றமாகின்றவை. இக் காரணம் பற்றித் தன்மாத்திரை பூதங்களுக்கு அபஞ்சீகிருத பூதங்களென்றும் பெயர் வந்தது.

பஞ்சீகரண விவரம்

மேற்படி சூக்கும பூதங்கள் பஞ்சீகரிக்கப்படும் முறைமையைப் பற்றி கைவல்ய நூலின் மூலபாடத்தில் கூறியுள்ள கவி பின் வருமாறு: -

                ஐந்துபூ தமும்பத் தாக்கி யவைபாதி நந்நான் காக்கி

      நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்குங் கூட்ட

      வந்தன தூல பூத மகாபூத மிவற்றி னின்றுந்

      தந்தன நான்காந் தூல தநுவண்ட புவன போகம்.

 

(இதன் பொருள்)

ஐந்து பூதமும் பத்தாக்கி =       இந்தச் சூக்கும பூதங்கள் ஐந்தையும் (ஒவ்வொன்றையும் இரண்டு இரண்டு சம பாகங்களாய்ச் செய்வதால்) பத்தாகச் செய்து,

அவைபாதி நந்நான்காக்கி =     அந்த ஐந்து பூதங்களின் ஒரு பாதியை (யெடுத்து அவற்றிலுள்ள ஒவ்வொரு அரைப் பாகத்தையும்) நான்கு நான்காகச் செய்து,

நந்து தம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட = ஒவ்வொரு பூதத்தின் நான்கு பங்குகளையும் எடுத்து, (முன் இருக்கும் ஐந்து அரைப்பாகங்களில்) தன் இனமாகிய        அரைப் பாகத்தை விட்டு மீதியுள்ள மற்ற நான்கு அரைப் பாகங்களிலும் ஒவ்வொன்று சேர்க்கவே,

தூல பூதம் வந்தன =     பஞ்சீகரித்த ஸ்தூல பூதங்களுண்டாயின.

மகாபூதம் இவற்றினின்றும் = மகா பூதங்களாகிய இத் தூல பூதங்களினின்றும்,

நான்காம் துல தநு அண்டம் புவனம் போகம் தந்தன =     ஸ்தூலதேகம், பிரம்மாண்டம், பல புவனங்கள், போக யோக்கியமான பொருள்கள் ஆகிய நான்கும் உண்டாயின.

  இப்பஞ்சீகரண முறையைப்பற்றி பிரம்ம கீதையில்: -

“தன்மாத் திரைக ளைந்தினையு மோரொன் றிரண்டாய்ப் பகுத்தொன்றை

நந்தா லாக்கித் தன்பாதி யொழிந்த நாலி னுடன்கூட்டி

யின்னே யல்லா தவை நான்கி னியல்பிற் கூட்ட வானாதி

பின்னே தூலபூதமெனப் பிறக்குமெனவே பெயர்த் துரைத்தான்"

என்று கூறப்பட்டிருக்கின்றது.

இதை யொருவாறு தெளிவாகக் கூறுவாம்: -

“ஐந்து பூதமும் பத்தாக்கி'' என்றபடி ஐந்தையும், ஒவ்வொன்றை இரண்டிரண்டாக்கு வதினால், பத்தாக்கின் - அப் பூதங்கள் கீழ் பகுக்கப்பட்டபடி நிற்கும்.

ஆகாயம் ½

வாயு ½

தேயு ½

அப்பு ½

பிருதிவி ½

ஆகாயம் ½

வாயு ½

தேயு ½

அப்பு ½

பிருதிவி ½


 
     "பின்பு அவை பாதி நந்நான் காக்கி" என்றபடி அவற்றில் ஒரு தொகுதியிலுள்ள அரைப் பாகங்களை நான்கு நான்காகச் செய்தால், அதாவது ஒவ்வொரு பூதத்தின் ஒவ்வொரு அரைப் பாகத்தையும் நான்கு நான்கு பாகங்களாக்கினால், ஒவ்வொரு பூதத்தின் ஒரு அரைப்பாகம் தனி அரைப்பாகமாகவும், மற்றொரு அரைப்பாகம் 4- அரைக்கால் பாகங்களாகவும் பிரிந்து நிற்கும். அப்போது பூதங்கள் கீழ்க்கண்ட நிலைப்படி பகுக்கப்பட்டிருக்கும்.

ஆகாயம் ½

வாயு ½

தேயு ½

அப்பு ½

பிருதிவி ½

ஆகாயம் 1/8

வாயு 1/8

தேயு 1/8

அப்பு 1/8

பிருதிவி 1/8

ஆகாயம் 1/8

வாயு 1/8

தேயு 1/8

அப்பு 1/8

பிருதிவி 1/8

ஆகாயம் 1/8

வாயு 1/8

தேயு 1/8

அப்பு 1/8

பிருதிவி 1/8

ஆகாயம் 1/8

வாயு 1/8

தேயு 1/8

அப்பு 1/8

பிருதிவி 1/8

 

பிறகு "நந்து தன் பாதிவிட்டு நான்கொடு நான்குங் கூட்ட'' என்றபடி ஒவ்வொரு பூதத்தின் நான்கு பாகங்களையும் எடுத்து, தன் இனமாகிய அரைப்பாகத்தை விட்டு விட்டு, மற்ற 4 பூதங்களின் அரைப்பாகங்களில் ஒன்றுக் கொன்றாகச் சேர்த்துவிட வேண்டும். எவ்வாறெனின், மேல் காட்டிய பூதங்களின் நிலைமைப்படி ஐந்து பூதங்களின் 5 அரைப் பாகங்கள் தனித்தனி வெவ்வேறா யிருக்கின்றன. இவை யன்றி ஒவ்வொரு பூதத்தின் 4    அரைக்கால் பாகங்கள் வேறு இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக ஆகாயத்தின் 4 அரைக்கால் பாகங்களையும் எடுத்து மேற்கண்டபடி ½ ப்பாகங்களில் பங்கிடுவோம். இப்போது ½ ப் பாகங்கள் 5 இருக்க, 1/8 பாகங்களோ நான்கே யிருக்கின்றன. நாம் எடுத்துக்கொண்டது ஆகாயத்தின் 4 அரைக்கால் பாகங்கள். இந்த நான்கையும், ஆகாயத்தின் ½ ப் பாகமாகிய தன் அம்சத்திற்கு பங்கு சேர்க்காமல் விட்டு விட்டு, மீதியிருக்கும் வாயு - தேயு - அப்பு பிருதிவி இவற்றின் ½ பாகங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு 1/8 பங்காக நான்கு அரைக்கால் பங்குகளுக்கும் பங்கட்டுவிட வேண்டும்... ஆகாயத்தின் 4 அரைக்கால் பாகங்களை மட்டும் அவ்வாறு பங்கிட்டபோது பாகம் கீழ்க்கண்ட விதமாய்ச் சேரும்.

ஆகாயம் ½

வாயு ½

ஆகாயம் 1/8

தேயு ½

ஆகாயம் 1/8

அப்பு ½

ஆகாயம் 1/8

பிருதிவி ½

ஆகாயம் 1/8


 
     இவ்வாறே வாயுவின் நான்கு அரைக்கால் பாகங்களையும் பங்கிடும்போது, அதன் அம்சமாகிய அரைப் பாகத்திற்கு பங்கு சேர்க்காமல், ஆகாயம் ½, தேயு ½, அப்பு ½, பிருதிவி ½ இவைகளோடு மட்டும் ஒவ்வொரு அரைக்கால் பாகத்தைச் சேர்க்கவேண்டும். இவ்வாறே தேயு, அப்பு: பருதிவி இவற்றின் அரைக்கால் பாகங்களையும் அதனதன் அம்சமாகிய அரைப் பாகத்தை விட்டு மற்ற நான்கு அரைப் பாகங்களோடும் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்த்த பின் பார்த்தால் ஒவ்வொரு முழுப் பூதத்திலும் அதன் பாகம் அரையாகவும் மற்ற நான்கும் அரைக்கால் பாகங்களாகவும் இருக்கும். அவ்வாறு பஞ்சீகரிக்கப்பட்ட ஸ்தூல பூகங்களின் நிலை கீழ்க்கண்டவாறிருக்கும்: -

ஆகாயம் ½

வாயு ½

தேயு ½

அப்பு ½

பிருதிவி ½

வாயு 1/8

ஆகாயம் 1/8

ஆகாயம் 1/8

ஆகாயம் 1/8

ஆகாயம்1/8

தேயு 1/8

தேயு 1/8

வாயு 1/8

வாயு 1/8

வாயு 1/8

அப்பு 1/8

அப்பு 1/8

அப்பு 1/8

தேயு 1/8

தேயு 1/8

பிருதிவி 1/8

பிருதிவி 1/8

பிருதிவி 1/8

பிருதிவி 1/8

பிருதிவி 1/8

ஆகாயம் 1

வாயு 1

தேயு 1

அப்பு 1

பிருதிவி 1

 

இவ்வாறு ஸ்தூல பூதங்கள் ஒவ்வொன்றிலும் மற்ற நான்கு பூதங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவற்றின்    அன்னியோன்னிய சம்பந்தத்தால் ஒவ்வொரு பூதத்திலிருந்தும் ஐந்து ஐந்து தத்துவங்களாக இந்த ஐந்து பூதங்களிலுமிருந்து 25 தத்துவங்கள் உண்டாயின. இவற்றினின்றே ஸ்தூல தேகம்; அண்டம், புவனங்கள், சீவன்களுடைய    போகத்திற்கு வேண்டிய பொருள்கள் முதலிய யாவும் உற்பத்தியாயின.

இவற்றினின்றே சீவன்களுக்கு வேண்டிய நால்வகை யோனி எழுவகைத் தோற்றமாயுள்ள எல்லாத் தூல உருவங்களும் உண்டாயின. இவற்றில் நால்வகை யோனி யென்பது சீவன்களுக்குரிய தேகங்கள் உற்பத்தியாகும் 4 வகை ஸ்தலங்களாம்.

அவை- (1) சராயுஜம். (2) அண்டஜம். (3) ஸ்வேதஜம். (4) உத்பிஜம் என நான்காம்.

(1) சராயுஜம்: - பைக்குள் கட்டப்பட்டு ஜனிப்பதாம் - மனிதர்கள் மிருகங்கள் போல்.

(2) அண்டஜம்: - முட்டையிலிருந்து உற்பத்தியாவது. பட்சிகள், பெரும்பாலான மச்சங்கள் இவை போன்றவை.

(3) ஸ்வேதஜம்: - வியர்வையி னின்றும் உற்பத்தியாவது. பேன் முதலிய போன்றன.

(4) உத்பிஜம்: - வித்தினின்றும் உண்டாதல். மரம், செடி முதலியன போன்றவை.

எழுவகைத் தோற்றம் என்பது பிறவியிலுள்ள எழு வகைகளாம். அவை: -

(1) தேவர், (2) மனிதர், (3) விலங்குகள், (4) பறவை (5) ஊர்ந்து நகர்ந்து) செல்லும் ஜெந்துக்கள். அவை புழு, அரவம், நத்தை முதலியவை. (6) நீர் வாழ்வன - (ஜலத்தில் வசிக்கும் தவளை, மீன் முதலிய ஜெந்துக்கள்.) (7) தாவரங்கள் (மரம், செடி முதலிய இடம் விட்டுப் பெயராதவைகள்.)

இவைகளே 1. உத்தமஜாதி, 2. மத்திமஜாதி, 3. அதம ஜாதி என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள்: -

1. உத்தமஜாதி: - இகலோக புத்தி, பரலோக புத்தி இரண்டையுமுடைய பகுத்தறிவுள்ள மானிட ஜன்மங்களே.

2. மத்திம ஜாதி: - பரலோக புத்தியை மறந்து இகலோக புத்தி மட்டுமுடைய பகுத்தறிவில்லா ஜன்மங்களாகிய மிருகங்கள் பட்சிகள் முதலியவைகள்.

3. அதமஜாதி: - இருவகைப் புத்தியுமின்றி உள்ள மரம், செடி, கொடி முதலிய சரீரங்களாம்.

மேல் பங்கிட்டுக் காட்டியபடி உண்டான இந்தத் தூலபூதம் ஒவ்வொன்றிலும் தன் அம்சம் அரை பாகமும், மற்ற நான்கு பூதங்களின் நான்கு அரைக்கால் பாகங்களும் சேர்ந்திருப்பதால் அதிலிருந்து ஐந்து தத்துவங்கள் உண்டாயினவென்றும், இவ்வாறு 5 பூதங்களினின்றும் 25 தத்துவங்கள் உற்பத்தியாயினவென்று உரைத்தோமல்லவா!

அவற்றின் விவரம்

ஆகாயத்தின் அம்சத்தில் இருந்து உண்டானவை: -

1. ஆகாயத்தினிடத்தில் ஆகாயம் (அதாவது ஆகாயத்தின் தன்னம்சமாகிய அரைப் பாகத்திலிருந்துண்டா னது) = மோகம்.

2. ஆகாயத்தில் வாயு (ஆ ½ பாகத்தோடு வாயுவின் 1/8 பாகம் கூடியதால் உண்டானது) = வெட்கம்.

3. ஆகாயத்தில் அக்னி (மேற்கண்டவாறே ஆ ½ பாகத் தோடு தேயு 1/8 கூடியது) = பயம்.

4. ஆகாயத்தில் அப்பு (மேற்கண்டவாறே அறிக) = துவேஷம்.

5. ஆகாயத்தில் பிருதிவி - ஆசை.                                  ஆக 5.

(மற்ற பூதங்களின் உற்பத்தி விவரத்தையும் இவ்வாறே உணர்க.)

வாயுவிலிருந்து உண்டானவை.

1. வாயுவில் ஆகாயம் = தத்தல்.

2. வாயுவில் வாயு = ஓடல்.

3. வாயுவில் அக்கினி = இருத்தல்.

4. வாயுவில் அப்பு = நடத்தல்.

5. வாயுவில் பிருதிவி = கிடத்தல்.                             ஆக 5.

தேயுவின் அம்ஸத்திலுதித்தவை: -

      1. தேயுவில் ஆகாயம் = சங்கமம்.

2. தேயுவில் வாயு = ஆலசியம்.

3. தேயுவில் தேயு = நித்திரை.

4. தேயுவில் அப்பு = தாகம்.

5. தேயுவில் பிரிதிவி = பசி.                                   ஆக 5.

அப்புவின் அம்சத்திலுதித்தவை: -

1. அப்புவில் ஆகாயம் = சுக்கிலம்.

2. அப்புவில் வாயு = இரத்தம்.

3. அப்புவில் தேயு = வியர்வை.

4. அப்புவில் அப்பு = சிறுநீர்.

5. அப்புவில் பிருதிவி = வாய்நீர்.                              ஆக 5.

பிருதிவியின் அம்ஸத்தில் உற்பத்தியானவை: -

1. பிருதிவியில் ஆகாயம் = உரோமம்.

2. பிருதிவியில் வாயு = நரம்பு.

3. பிருதிவியில் தேயு = சர்மம்.

4. பிருதிவியில் அப்பு - மாமிசம்.

5. பிருதிவியில் பிருதிவி = அஸ்தி.                            ஆக 5.

                                                             மொத்தம் 25

இந்த 25 தத்துவங்களும் சேர்ந்தே தூலதேக முண்டாயிற்று.

     சர்மம், உதிரம், மாமிசம், நரம்பு, என்பு, மூளை, சுக்கிலம் என்னும் சத்த (ஏழு) தாதுக்களாலாகிய இம்மானுட தேகத்தில் மூன்று தேகங்களும், ஐந்து அவஸ்தைகளும், ஐந்து கோசங்களும் அடங்கியிருக்கின்றன.

      3 தேகங்கள் என்பன: - (4) ஸ்தூலதேகம் (2) சூக்கும் தேகம் (3) காரணதேகம்.

இவற்றுள்: -

(1) ஸ்தூல தேகம்: - மேற்கண்ட 25 - தத்துவங்களும் கூடிய இச் சரீரம்.

(2) சூக்கும தேகம்: - ஞானேந்திரியங்கள் - 5 கன்மேந்திரியங்கள் - 5 பிராணாதி வாயுக்கள் -10 அந்தக்கரணங்கள் - 5 இவை 25 - ம் கூடியது சூக்கும சரீரம்.

(3) காரண சரீரம்: - அவித்தையே காரண சரீரம். இதுதான் அஞ்ஞானம் என்பது. ஆவரணம் என்பதும் அனுபவத்தில் இதுவே. இதுதான் ஆன்மா மரண காலத்தில் ஸ்தூல தேகத்தை பட்டு நீங்கும் போது சூக்கும தேகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு, ஆன்மா அச்சன்மத்தில் செய்த கன்மங்களை மறு ஜன்மத்தில் அனுபவிப்பதற்காக அதோடு ஒட்டிக்கொண்டு செல்லும் ஒரு பசைபோ லிருப்பது. இவ்வாறு மறுபடி ஸ்தூல சூக்கும தேகங்கள் உண்டாவதற்கு இது காரணமா யிருப்பதால் இதற்குக் காரண சரீரம் எனப் பெயர் வந்தது. இதை ஒழித்தாலே முத்தியடையலாம். இதை அனுபவமா யறிந்தாலன்றி எப்படி ஒழிப்பது? அஞ்ஞான மென்பதும், அவித்தை யென்பதும், ஆவரணம் என்பதும் இதுவே. மனச் சேட்டையை அடக்கிய பின் அதற்குமேல் அங்கென்ன விருக்கின்றதென்று அறிவால் எதிரிட்டுப் பார்க்கும்போது, ஒன்றுமில்லாத சூனியமாகிய இருளே தோன்றுமென்றும், அதுவே காரண சரீரம் என்றும், தன்னாலறியப்பட்ட அதுதானல்ல வாதலால் அதை விட்டு அதை அறியும் தன் சொரூபத்தைத் தரிசிப்பதே தன்னை அறிதலென்றும், அதுவே ஞானம் என்றும் ஆன்றோர் கூறியுளர். இந்த ஞானத்தை அடைந்தாலே அஞ்ஞானம் அல்லது ஆவரணம் என்ற இக்காரண சரீரம் ஒழியும்.

இக்காரண சரீரம் ஒழிந்தால் ஆன்மா பிரியும்போ சூக்கும சரீரம், தன்னைக்கூட அழைத்துச் செல்லும் ஆசாமி யில்லாததால், உலையிரும்புண்ட நீர்போல் அழியும். இவ்வாறு மூன்று தேகங்களும் அழிந்தபின்பே ஆன்மா பிறப் பிறப்பாகிய விலங்கினின்று விடுபடும்.

இப்போது நாம் கூறிய ஸ்தூல, சூக்கும, காரணமாகிய மூன்று சரீரங்களில், சாக்கிரம், சொப்பனம், சுழித்தி என்னும் மூன்றவத்தைகளும் பஞ்ச கோசங்களும் அடங்கியிருக்கின்றன.

எவ்வாறெனின்: -   தூல தேகத்தில் சாக்கிராவத்தையும், சூக்கும தேகத்தில் சொப்பனாவத்தையும், காரண தேகத்தில் சுழித்தியவத்தையும் அடங்கி யிருக்கின்றன.

 

 

அவத்தைகள் மூன்று

1. சாக்கிராவத்தை: - சாக்கிராவத்தையில் உள்ள தத்துவங்கள் 35. அவை: -

ஞானேந்திரியங்கள் ................   .....................  ....................             5

கன்மேந்திரியங்கள் ................   .....................  ....................             5

சத்தம், பரிசம். ரூபம், இரசம், கந்தம் ஆகிய

(ஞானேந்திரியங்களால் அறியக்கூடிய) விடயங்கள்   ....................       5

 

வசனம், கமனம், தானம், விசர்ச்சனம், ஆனந்தம் ஆகிய

(கன்மேந்திரியங்களால் செய்யத்தக்க) தொழில்கள்   ....................           5

 

பிராணாதி வாயுக்கள் ................   .....................  ....................            10

அந்தக்கரணங்கள்   ................   .....................  ....................              5
                                                               ஆக 35

இதில், பிராணாதி வாயுக்களை ஐந்தென்றே கொண்டு சாக்கிரரவத்தையில் தத்துவங்கள் 30 என்றே கூறுவது முண்டு. சாக்கிராவத்தையில் இந்த 35 தத்துவங்களோடும் ஆன்மா கூடிக்கொண்டு புருவ மையத்தானத்தில் நின்று (ஒரு அரசன் தன் மந்திரிப் பிரதானிகள் உத்தியோகஸ்தர்கள் புடைசூழச் சிம்மா தனத்தி லமர்ந்து இராஜாங்க காரியங்களை நடத்துவது போல்) உலக விவகாரங்கள் யாவும் செய்கிறது.

இந்த அவத்தைகளி லெல்லாம் ஆன்மாவென்றால் தனியான சுத்த ஆன்மா வல்ல, அவித்தை அல்லது அஞ் ஞானத்தோடு பொருந்திய ஆன்மா வென்றே உணர வேண்டும்.

2. சொப்பனாவத்தை: - சொப்பனாவத்தையிலுள்ள தத்துவங்கள்         25

 அவை: -   சத்தாதி விஷயங்கள்     ................   .....................            5

            வசனாதி தொழில்கள்     ................   .....................            5

           பிராணாதி வாயுக்கள்     ................   .....................            10

           அந்தக்கரணங்கள்        ................   .....................             5

                                                               ஆக 25

சொப்பனாவத்தையில் ஆன்மா கண்டஸ்தானத்தி லிருந்து இந்த இருபத்தைந்து தத்துவங்களோடுங் கூடி சாக்கிர வாசனையாகிய சொப்பனத்தில் அனுபவத்திலிருக்கிறது. சொப்பனத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக்க உண்டு. சொப்பனத்தில், சாக்கிரத்தில் கண்ட அனுபவங்களையே காண்கிறோமென்ற நியமமில்லை. எப்போதும் காணாததும் கேட்காததுமானவற்றைக் கூடக் காண்பதும் கேட்பதுமுண்டு. சொப்பனமும் அச்சமயம் பிரத்தியக்ஷமாய்க் காணும் சாக்கிரம் போலவே தோன்றுகிறதன்றி'சாக்கிரம் வேறு. இப்போது நாம் காண்பது சொப்பனம்'என்ற உணர்ச்சி யில்லை. ஒருவன் சொப்பனத்தில் தன்னைப் புலி துரத்திவருவதாய்க் கண்டு கடுநடுங்கி ஓடுகிறான். அப்போது அவன் பிராணாவஸ் தையே அனுபவிக்கிறான் என்று கூறலாம். அப்போது அவனுக்கு "நாம் இப்போது காண்பது கனவு'' என்ற உணர்ச்சி மட்டும் உண்டாகும் பக்ஷத்தில், ஏக காலத்தில் நாம் காணும் புலி முதலிய யாவும் பொய்த் தோற்றமே என்று தோன்றி உடனே விழிப்புண்டாய்விடும். சிலர்
 நித்திரையில் தான் சொப்பனம் உண்டாவதாகக் கருதுகிறார்கள். உண்மை அப்படி யில்லை. சாக்கிரத்தைக் கைவிடும் ஆன்மா மனோராச்சியத்தில் பிரவேசிக்கிறது. அதாவது
 நித்திரை செய்யக் கருதி படுக்கையை ஆயத்தம் செய்து சயனித்துக்கொண்டதே சாதாரணமாய் யாவருமே மனோராச் சியமாகிய யாதாமொரு சிந்தனையிலேயே பிரவேசிக் கிறார்கள். இப் பழக்கமே பெரும்பாலும் கனவு உண்டாவதற்கு ஒரு காரணம் எனலாம். இவ்வாறு மனோராச்சி யத்தி லிருக்கும் ஆன்மா, அந் நினைப்பு அடியோடு தன் மனதை விட்டு நழுவ, உடனே அந்தகாரமான சுழித்தியை அடையும். அப்படிக் கின்றி அந்த மனோராச்சியமாகிய நினைவே திடீலென்று சொப்பனமாய் மாறினும் மாறிவிடும். அப்போது, மனோராச்சியத்தி லிருப்போனுக்கு மெதுவாய்த் தேகம் நழுவ, அதோடு உலக நினைப்பும் நழுவி, சாக்கிரம் அடியோடு மறைந்து சொப்பனம் தோன்றும்.

இச் சொப்பனத்தைப் பற்றி விரிவாய் விவரிக்க வேண்டின் இதில் இடம் போதாது. ஆகையால் இங்கு வேண்டிய மட்டும் சுருக்கமாகக் கூறி முடிக்கிறோம். முடிவாய்க் கூறும் பட்சத்தில் சொப்பனம் அடியோடு மித்தை அதாவது பொய்த் தோற்றம். அது நிகழ்கிற கால அளவும் பொய்யே. அதாவது, நாம் கனவில் காலை 3 மணிக்கு ஊரை விட்டுப் புறப்பட்டுப் பல விவகாரங்களை முடித்துக் கொண்டு கடைசியில் மாலை 3 - மணி சுமாருக்கு ஒரு குளத்தில் இறங்கி தாகத்திற்கு ஜலமருந்தும் சமயம் தவறி ஜலத்தில் விழுந்து விட்டது போல் காண்கிறோம். உடனே சில்லென்று ஒரு உணர்ச்சி உண்டாகி விழித்துக்கொள்கிறோம். விழித்துக் கொண்டு பார்த்தால், நாம் படுக்கை பருகில் வைத்திருந்த ஜல பாத்திரம் நமது கைபட்டோ, வேறெவ்விதமாகவோ உருண்டுவிட, படுக்கை முழுதும் நனைந்துவிட்டு தேகத்தில் ஈரம்படக் காண்கிறோம். இப்போது நாம் கண்ட கனவு சுமார் ஏழு மணி நேரம் நடந்ததுபோல் தெரிகிறது. ஆனால் உண்மை அப்படி யில்லை. அந்த ஜலத்தின் ஈரம் தேகத்தில் தாக்கி, அவ்வுணர்ச்சி நரம்புகளின் வழியாய் மூளைக்கு ஏற
 எவ்வளவு நேரம் சென்றதோ, அந்தக் காலமே அக் கனவு சம்பவித்த காலம். இதைப் பற்றி உண்மையாய் நடந்த திருட்டாந்தத்தை ஈண்டுக் கூறுகிறோம்: -

ஒரு ஐரோப்பிய உத்தியோகஸ்தர் ஒரு நாள் இரவு போசனம் செய்தபின் தம் வீட்டின் மாடிமேலுள்ள ஒரு அறையில், சாளரத்தினருகல் ஒரு பெரிய நாற்காலியில்
 சாய்ந்து சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தவர், கையில் சுருட்டை வைத்துக்கொண்டே உறங்கிவிட்டார். பிறகு பின் கூறப்பட்டபடி கனவு கண்டு திடுக்கிட்டு விழித்துக்
 கொண்டார்: -

அவருக்குத் தாம் யௌவன வயதிலிருப்பதாகத் தோன்றியது. அவர் ஒரு புது நகரில் ஒரு அழகிய கன்னி கையைக் கண்டு காதல் கொண்டு அவர்கள் தேசாசாரப்படி
 அவளைச் சில நாட்களில் சிநேகம் செய்துகொண்டார். பல நாட்கள் மாலை வேளைகளில் தனியாய் அவளோடுகூட தோட்டத்தில் உலவச் சென்றார். அச் சமயங்களில் மெதுவாய் அவளிடம் தன் கருத்தை வெளியிட்டார். அவளும் அவர்மேல் உள்ளத்தில் காதல் கொண்டிருந்ததால் அவரை மணம் புரியச் சம்மதிப்பதாய்க் கூறினாள். இச்சமயத்தில் இன்னொருவன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் அப் பெண்ணின் தூர சுற்றத்தைச் சேர்ந்தவன். அவனும் அப் பெண்ணின் மேல் காதல் கொண்டிருந்தவனே. ஆனால்   அவன் அதைப்பற்றி அவளிடம் பேசப் போதுமான காலம்    வருவதற்குள் ஒரு அவசிய காரியமாய் அன்னிய நாட்டிற்குச் சென்றிருந்து, மூன்று நான்கு மாதங்கள் கழிந்து    திரும்பி வந்தான். வந்ததே தான் காதல் கொண்டிருந்த கன்னிகையின் மேல் வேறொருவன் அன்னியன் காதல் கொண்டிருப்பதைக் கண்டு பொறாமை கொண்டான். பிறகு இரண்டொரு நாட்களில் அக்கன்னிகையும் அவன் மேல் காதல் கொண்டிருக்கிறாளென்றும், இருவரும் மணம் புரிந்து கொள்ள ஏற்பாடாயிருக்கிறதென்றும் அறிந்ததும் அவன் மேல் வஞ்சம் கொண்டான். இத்தகைய விஷயங்களில் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் நேர்ந்தால், இருவரும் துப்பாக்கிகளால் சண்டை விடுவது அத் தேசாசார வழக்கம். இருவரும் சுமார் இருபது கஜ தூரத்தில் நின்று ஒருவரை யொருவர் குறி பார்த்து பொது ஆள் ஒருவன் சமிக்கை செய்யும்போது ஏக காலத்தில் இருவரும் சுடுவார்கள். எவன் காயமடைகிறானோ, அல்லது மடிகிறானோ, அவன் குற்றவாளி என்ற ஒருவித மூட நம்பிக்கை அவர்கள் அக் காலத்தில் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறே இவர்களிருவரும் சுட ஆயத்தமாய் நின்ற போது இவருடைய எதிரி முன்னாடி சுட்டுவிட்டான். இவர் பயந்து துள்ளினார். உடனே விழித்துக்கொண்டார். அவர் பிடித்துக்கொண்டிருந்த சுருட்டு அவர் கரத்திலேயே யிருந்தது. அதிலிருந்த நெருப்பு அணையவில்லை. இதனால் கனவு கண்டபோது கனவில் காலம் பல நாட்கள் கழிந்ததாகத் தோன்றினும், உண்மையில் இரண்டொரு நிமிடங்களுக்குள்ளாகவே இக் கனவைக் கண்டார் என்று நன்கு விளங்குகிறது.

உண்மையில் அவர் கனவு கண்டதற்கும் விழித்துக் கொண்டதற்கும் காரணம் வேறு. அதென்னவெனில் அச்சமயம் அவருடைய மைத்துனன் ஒருவன் அங்கு வந்திருந்தான். போஜனம் முடிந்த பின் அவன் தோட்டத்தில் சுருட்டு பிடித்துக்கொண்டே உலாவிக் கொண்டிருக்கையில், இவர் உட்கார்ந்திருந்த அறையின் சாளரத்திற்குச் சமீபத்திலிருந்த ஒரு விருட்சத்தின் மேல் ஒரு கோட்டான் குந்திக்கொண்டு பயங்கரமாகச் சத்தமிட்டது. இவர் மைத்துனன் உடனே கைத் துப்பாக்கி கொண்டுவந்து அதைச் சுட்டான். திடீலென்று உண்டான அந்த வெடிச்சத்தமே அவரை யெழுப்பிவிட்டது. ஆனால் அச் சத்தம் செவிப் புலன் வழி நுழைந்து நாடிகளின் வழியாய் மூளைக்கேறுவதற்குள் இக் கனவை யுண்டாக்கிவிட்டது. முடிவில் கனவு பொய் என்பதே சித்தாந்தம். அதைப்போல் உலகமும் பொய்த் தோற்றமென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சிலர் கனவைப்போல் உலகு பொய் யென்பது தவறென்றும், அர்ச்சுனன் பாசுபதம் பெற்றதாய்க் கனவு கண்டு பிறகு மெய்யாகவே அந்த அஸ்திரம் கையில் இருக்கக் கண்டான் என்பதையும், அத்தகைய வேறு இரண்டொரு தெய்வீக சம்பவங்களையும் திருட்டாந்தங்களாகக் கூறி, கனவு பொய்யல்ல வென்றும் வாதாடுகிறார்கள். ஆனால் இது வீண் வாதக்காரர்கள் செய்கையே யன்றி, வேறில்லை. ஏனெனில் நாம் காண்கிற கனவுகளெல்லாம் கிருஷ்ண பகவானது தெய்வ வல்லமையால் உண்டாக்கப்பட்ட சம்பவங்களல்ல. "அண்டலட்சணம் பிண்டத்தில்'' என்பதற் கொப்ப, அந்தக் கனவைப்போல் நாம் கண்டு கொண்டிருக்கும் உலக நாடகமும் ஒரு கனவே என்று நாம் உணரவேண்டும். கனவு காண்பவனுக்கு விழிப்பு வரு மட்டும் அக் கனவு பிரத்தியட்ச மெய்யனுபவமாகவே
தோன்றுகிறது. விழித்த பிறகே கண்ட கனவு பொய் யென்று தெரிகிறது. அதைப்போலவே நாம் அஞ்ஞான அந்தகாரமாகிய நித்திரையிலிருக்கு மட்டும் உலகக் கனவு மெய்யனுபவமாகத்தான் தோன்றிக்கொண்டிருக்கும். ஞான மாகிய விழிப்புண்டாயின் இது பொய்யெனத் தோன்றும். அவ்வித அனுபவத்தை யறிந்த பின்பே மகான்கள் அதை வெளியிட்டிருக்கிறார்கள்.

தாயுமானவர் "நினைவொன்று" (ஞானிகளிடம் பொரு ளேவல்) என்ற பாகத்தில் ''உள்ளபடி யென்னவு நீ....” பாவின் கடைசி யடியில் ''கொள்ளை கொண்ட கண்ணீரும் கம்பலையுமாக்கி கும்பிட்டு ஜகம் பொய்யெனத் தம்பட்டமடியே" என்றும்,

ஆனந்தக் களிப்பில்,

"விதிக்கும் பிரபஞ்சமெல்லாம், சுத்த வெயில் மஞ்ச    ளென்னவே வேதாகமங்கள் - மதிக்கு மதனை மதியார். அவர் மார்க்கந் துன்யார்க்கஞ் சன்மார்க்கமோ மானே" என்றும் கூறியருளினார்.

பட்டினத்தடிகள் தாம் பாடியருளிய பாசுரங்களி லொன்றில் "உன் திருவருளால் ஞானம் கிடைத்தபின் இவ்வுலகத் தோற்ற மனைத்தும் பொய்யாய்ப் பழங்கதை யாய்க் கனவாய் மெள்ளப் போயினவே" என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

மற்றோர் பாவின் இறுதியில் உலகத் தோற்றத்தைப் பற்றி கூறுகையில் "ஓவியப் புலவன் சாயல்பெற வெழுதிய சித்திர விகற்ப பனைத்தும், ஒன்றிற்றவிராது தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே'' என்றருளியுளார். இவற்றால் கனவு பொய் யென்றும், அதைப் போலவே உலகு பொய்யென்றும், ஞானத்தை யடைந்தால் அவ்வுண்மை பிரத்தியட்சமாய்ப் புலப்படு மென்றும் நாம் உணரவேண்டும்.

3. சுழித்தி: - சுழுத்தியவத்தையிலுள்ள தத்துவங்கள் பிராணன், சித்தம் ஆக 2.

சுழித்தியில் ஆன்மா இதயத்தானத்தில் இருந்து மேற்படி இரண்டு தத்துவங்களோடு, தொழிலற்றுச் சுகமாய் நித்திரை செய்கிறது. ஆனால் ஆன்மா அப்போது சலனமின்றித் தன்னை மறந்த சுகத்திலிருந்தாலும் அஞ் ஞானமாகிய அந்தகாரத்தால் மூடப்பட்டிருக்கிறது. இந்த நிலைக்குக் கேவல நிலை யென்றும் பெயர்.

இந்த நித்திரைக்கும் ஞான நிட்டைக்கும் உள்ள வித்தியாசம் மிக்க கொஞ்சமே; நிட்டையில் ஆன்மா தன் முயற்சியால் தூலதேகம் முதல் இந்திரியங்கள், கரணங்கள், பிராணவாயு வீறாக யாவும் தனக்கன்னியமென்று நீக்கி, அதற்கு மேலுள்ள அஞ்ஞான அந்த காரமாகிய ஆவரணத்தையும் நீக்கித் தன்னையறிந்து தன்னில் தானா யமர்கிறது.

நித்திரையிலோ, அஞ்ஞானமே ஆன்மாவை இழுத்துச் செல்ல, மேல்கண்ட தூலதேகம் முதல் பிராணவாயு வரையில் உள்ள ஒவ்வொன்றும் மனதிலிருந்து நழுவிவிட, கடைசியில் மனமும் ஒடுங்க, ஆன்மா அந்தகாரமாகிய அஞ் ஞான விருளில் மூழ்கிவிடுகிறது. அதாவது ஆவரணதில் அமிழ்ந்துவிடுகிறது. இரண்டிலும் ஆன்மா தனியாய்த் தொழிலற்றிருப்பினும், நிட்டையில் அஞ்ஞான மில்லை; நித்திரையில் அஞ்ஞானமே ஆன்மாவை முழுதும் மூடிக் கொண்டிருக்கிறது.

இதுகாறும் கூறப்பட்ட சாக்கிரம், சொப்பனம், சுழித்தி என்ற மூன்றவத்தைகளையும் சாதாரணமாய்ப் பிரதி தினமும் அனுபவிக்கிறோம். இவையன்றி துரிதம் துரியாதீதம் என்ற வேறு இரண்டவஸ்தைகளையும் சேர்த்து அவள் தைகள் ஐந்தெனக் கூறப்பட்டிருக்கிறது. இவற்றில்,

4. துரியம்: - இந்த அவஸ்தை ஆன்மா, சித்தம், பிராணன் இந்த இரண்டு கருவிகளோடும் நாபித்தானத்தில் தங்கியிருக்கும்.

இந்த அவத்தைகளெல்லாம் அஞ்ஞான நிலையில் அனுபவிக்கும் அவத்தைகளே. ஞானநிலையில் அனுபவிக்கப்படும் அவத்தைகளைப் பற்றிப் பின்னால் கூறுவாம். முதல் மூன்று அவத்தைகள் போல் துரியம் துரியாதீதம் என்ற இரண்டு அவஸ்தைகளும் தினம் அனுபவிக்கப்படுபவை யல்ல; அடிக்கடி யனுபவிக்கப்படுபவைகளு மல்ல. எப்போதேனும் ஒரு சமயம் ஒருவர் அபாயகரமான காயம் படுதல், வியாதி யடைதல் முதலிய சில காரணங்களால் மூர்ச்சையடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஸ்மரணையில்லை. நித்திரையிலுள்ளவனைக் கூப்பிட்டாலும் தட்டினாலும் உடனே விழித்துக்கொள்கிறான். மூர்ச்சையிலுள்ளோனுக்கு அவ்வுணர்ச்சி யில்லையாதலால் அவனைக் கஷ்டத்தின் மேல் தான் விழிப்புக்குக் கொண்டுவரலாகும். இந்த நிலைமையே ஆன்மா துரியாவத்தை யிலிருக்கும் நிலைமையாம்.

5. துரியாதீதம்: - இந்த அவத்தையில் ஆன்மா தனியாய் மூலாதாரத்தில் பொருந்தி யிருக்கும்; (மூலாதாரம் - குதத்திற்கும் குய்யத்திற்கும் மத்தியிலுள்ள இடம்.) துரியாதீதம் என்றால் துரியத்திற்கும் அப்பாலுள்ள, அல்லது எட்டாத தூரத்திலுள்ள நிலையென்பதே பொருள். அந்த நிலைக்குச் சென்ற ஆன்மா மறுபடி திரும்பி சாக்கிரத்திற்கு வருவது சாத்தியம். இனி கோசங்களைப் பற்றிக் கூறுவாம்.

பஞ்ச கோசங்கள்

     கோசம் என்பதற்கு உறை அல்லது போர்வை என்று பொருள். இக்கோசங்கள் ஆன்மா தன் நிஜசொரூபத்தை யறியா வண்ணம் அதை மூடிக்கொண்டிருக்கின்றன. கோசங்கள் அன்னமய கோசம், பிராணமய கோசம் மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய
 கோசம் என 5 ஆகும். இவற்றுள்.

      1-வது அன்னமய கோசம்: - சுக்கில சுரோணிதங்களாலாகிய சத்த தாதுக்களால் ஆக்கப்பட்டு அன்னத்தால் விருத்தியடைந்து கடைசியில் பூமியி லழிவதாகிய இத்தூல
 சரீரமே அன்னமய கோசம்.

      2-வது பிராணமய கோசம்: - பிராணனும் கன்மேந்திரியங்களும் கூடியது: அல்லது, கன்மேந்திரியங்களோடு கூடிய பிராணனே பிராணமய கோசம்.

      3-வது மனோமய கோசம்: - ஞானேந்திரியங்களோடு கூடின மனம் மனோமய கோசம்.

4-வது விஞ்ஞானமய கோசம்: - ஞானேந்திரியங்களோடு கூடின புத்தியே விஞ்ஞானமய கோசம்.

5-வது ஆனந்தமய கோசம்: - காரண தேகமே (அஞ் ஞானம்) ஆனந்தமய கோசம்.

இவற்றில், - அன்னமய கோசம் தூல தேகத்திலும், பிராணமய கோசம் மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் இம்மூன்றும் சூக்கும தேகத்திலும், ஆனந்தமய கோசம் காரண தேகத்திலும் அடங்கி இருக்கின்றன. ஆன்மா இந்த ஐந்து கோசங்களையும் விட்டு வெளிப்பட்டால், அதாவது இவ்வைந்து கோசங்களில் ஒன்றிலேனும் சம்பந்தப்படாத நிலையை டைந்தால் தன் நிஜசொரூபத்தை யறியும். இவ்விஷயத்தைப் பற்றி நூலில் பின்னால் கூறப்படுவதால் ஈண்டு இவ்வளவோடு நிறுத்தி விடுகிறோம்.

[இதுகாறும் கூறப்பட்ட தத்துவங்களின் உற்பத்தி, நிலைமை, அவஸ்தைகள் முதலிய முதலிய விஷயங்கள் விஷயங்கள் யாவும் ஞானத்தை அடைய விரும்புவோர் நன்றாயுணர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டியவைகளாகும். ஏனெனில்,

ஞானத்தை அடைதல் என்பது ஆன்மா தன் நிஜவடிவைக் காண்டல் என்பதே யாகும். ஆன்மா ஒரு ரூப முடையதல்ல. அது இம்மாதிரி இருக்கும், இன்ன நிறமா யிருக்கும், இன்ன வடிவம், இன்ன அளவு விவரிக்கத் தக்கதல்ல. இதுதான் ஆன்மாவென்று அதை யொருவரும் சுட்டிக்காட்ட முடியாது. நூல்களும் அதை யறியும் மார்க்கங்களைப் போதிக்கின்றனவேயன்றி ஆன்மா இம் மாதிரி இருக்கிறதென்று எந்த நூலும் கூறுவதில்லை. குருவும் அவ்வாறே. இந்த விஷயத்தில் ஆன்மா பரமான்மரவை யொத்ததே. கடவுள் இவ்விதமாய் இருக்கிறார் என்று கூற யாரால் முடியும்? வேதமே அவரைக் கூறாமற் கூறுகிறது. அதாவது ஜாடையாய் அதற்கு வழி காட்டுகிறதேயன்றி வேறில்லை. பரமான்மா எவ்வித சொரூப முடையதோ அவ்வித சொரூபமே ஆன்மாவும் உடைத்தாயிருக்கிறது. இரண்டிற்கு முள்ள வித்தியாசம் சிறிது பெரிது என்பது வித்தியாசமேயன்றி சொரூபத்தில் இரண்டு மொன்றே. பரமான்மா ஒரு பெரிய தீவட்டி, அல்லது ஒரு பெருந்தீ யென்றால், ஆன்மா ஒரு சிறு தீபம் போன்றது. இரண்டும் அக்கினியே. பரமான்மா கடல் நீரென்றால் ஆன்மா அதிலுள்ள ஒரு ஒரு துளி நீர் போன்றது. இரண்டும் நீரே.

இத்தகைய ஆன்மாவை எப்படி நேராய் இதுதான் என்று சுட்டி யறிவது? அது கூடாத காரியம்; ஆனால் இந்த ஆன்மா வேறு சில பொருள்களோடு கலந்து கொண்டிருப்பதால் அப் பொருள்களின் மூலமாய் இதை யறியும் மார்க்கம் கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறெனின்,

ஒரு அறைக்குள் பல வஸ்துக்களிருக்கின்றன. அவற்றில் ஒரு வஸ்து உனக்கு வேண்டியதா யிருக்கிறது. அதை யெடுத்து வரும்படி நீ ஒரு ஆளை யனுப்புகிறாய்; அந்த வஸ்துவின் பெயர் மட்டும் ‘கேடையம்' என்று உனக்குக் கேள்வி யுண்டு. ஆனால் அது இம்மாதிரியா யிருக்கிறதென்று ஒரு அடையாளமாவது கூற உனக்குத் தெரியாது. நீ யனுப்பும் ஆளும் அவ்வாறே. ஆனால் அந்த அறையில், கேடையத்தோடு கூட வேறு சில சாமான்களு மிருக்கின்றன. அவற்றின் பெயர் அங்க அடையாளம் யாவும் உனக்குத் தெரியும். அப்படிப்பட்ட சமயத்தில் என்ன செய்தால் உனக்கு வேண்டிய வஸ்துவை அந்த ஆள் கொண்டு வரும்படி செய்யலாம்? கேடையம் தவிர மற்ற வஸ்துக்கள் ஒவ்வொன்றின் பெயரையும் அடையாளங்களையும் அவனிடம் கூறி "இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் நான் கூறிய அடையாளங்களின்படி கண்டறிந்து எடுத்து ஒரு பக்கத்தில் வைத்துவிடு; கடைசியில் ஒரு வஸ்துவே மிச்சமா யிருக்கும்; அதுவே கேடையம்; அதை யெடுத்துவா” என்றால் தான் அவன் எடுத்து வருவான்.

இதைப்போலவே ஆன்மாவும் தேகமாகிய அறையில் மேல்கண்ட தத்துவங்களோடு கூடிக்கொண்டிருக்கிறது. அத் தத்துவங்களின் பெயர், இலட்சணங்கள், குணங்கள் யாவும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய்க் கூறி "இது ஆன்மாவல்ல, இது ஆன்மாவல்ல, இவை யாவும் கழிக்கப்பட்டபின் மிச்சமாய் எது இருக்கிறதோ, எதை நீக்க உன்னால் முடியவில்லையோ அதுதான் ஆன்மா. அதுதான் நீ" என்று வேதம் கூறுகிறது. ஆதலால் தத்துவங்களின் சொரூபங்களை ஆராய்ச்சி செய்து நன்குணர்ந்தால் தான் அவற்றை ஒவ்வொன்றாய்க் கண்டு கழித்து முடிவில் ஆன்மாவின் நிஜசொரூபத்தைக் காணலாகும்.    அவஸ்தைகள், கோசங்கள் முதலியவை ஆன்மா தத்துவங்    களில் சிலவற்றோடு கூடித் தொழில் செய்யும் நிலைமைகளைக் குறிக்கின்றன. அவற்றின் ஆராய்ச்சியும் தத்துவங்களை வேறு பிரித்து விட்டு ஆன்மாவை அறியச் சக்தி யளிப்பாதாகும்.

ஏககாலத்தில் மனதின் இரஜோ தமோ குணங்களை அழித்துவிட்டு சத்துவகுணத்தைக்கொண்டு (அதாவது மனோலயம் செய்து) ஆன்ம சொரூபத்தை அறிவது யாவராலும் ஆகக்கூடிய காரியமல்ல. மனமே உலகமாகையால் உலக இச்சையுள்ள மட்டும் மனம் ஒடுங்காது. உலகம் பற்று ஒழிவதெனின், அது இலேசில் ஆகிற காரியமல்ல அகப்பற்று புறப்பற்று இரண்டும் ஒழியவேண்டும். புறப்பற்றை விட்டால்தான் அகப்பற்று சுலபமாய் ஒழிந்துபோம் என்பதைக் கருதியே, சன்னியாசம் பெற்றால் தான் எளிதில் ஞானத்தை அடையலாம் என்று பல நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஞானத்திற்கு அவசியம் வேண்டுவது அகத்துறவே. அது ஒழிந்துபோனவன் இல்லறத்திலிருப்பினும் தாமரை இலை மேலுள்ள நீர்த்துளிபோலும், புளியம்பழமும் ஓடும் போலும் மனதிற் பற்றின்றியிருப்பான். அகப்பற்றொழிந்து புறப்பற்றோடு (இல்லறத்தில்) இருப்பவன் நிலைமை, வேரோடு பிடுங்கி வேரைக் கழித்தபின் மண்ணில் சொருகி வைக்கப்பட்ட ஒரு செடி போன்றது. அச்செடி பார்ப்போருக்கு உயிருள்ள செடி போலவே பசுமையாய் அச் சமயம் தோன்றினும், இரண்டொரு தினங்களில் வாடியுலர்ந்து பட்டுப்போன மரமென்று தெரிந்துவிடும் நிலையை யடையும். அதுபோல் அகப்பற்றொழிந்தால் புறப்பற்றுசுலபமாய்த் தானே ஒழிந்துபோம்.

அகப்பற்று நீங்காமல் புறப்பற்றை மட்டும் விட்டொழிந்தவன் (சந்நியாசி) நிலைமை எவ்வாறெனின், சுற்றிலுமுள்ள கொடிய செடி முள் யாவற்றையும் களைக் தெறிந்தபின் கிளைகளும் கழிக்கப்பட்ட மரம் போன்றது. அம்மரத்தின் வேரைச் சீக்கிரம் அழிக்காவிட்டால் கொஞ்ச நாட்களில் அம்மரம் துளிர்த்து இலை முதலியன உண்டாகிப் பழைய நிலைமைக்கு வந்துவிடும். ஒரு மரத்தைச் சூழ்ந்திருக்கும் செடி கொடி முதலியவற்றைக் களைந்து கிளைகளையும் கழித்துவிட்டால் பிறகு மரத்தின் வேரைச் சுலபமாய்க் களைந்துவிடலாம். அதுபோல் புறத்துற வடைந்தாலே அகத்துறவடைய அநுகூலமா யிருக்கு மென்பது ஒரு கொள்கை.

இதுவரையில் நாம் கூறியவற்றால் அகத்துறவடைவதே சிரேஷ்டம் என்று தோன்றும். வாசா ஞானமாய்க் கூறுவோர் எல்லாம் மனதால் இருக்கிறது. மனதைச் சரியாய் வைத்துக் கொண்டால் எங்கிருந்தா லென்ன? நமது மனம் சரியாயிருந்தால் நாம் வேசி வீட்டில் குடி யிருந்தால்தானென்ன? சன்னியாசி யென்று வேடம் தரித்துக்கொண்டால்தான் ஞானம் வருமோ - அதெல்லாம் கபடவேடம். சன்னியாசி என்று காஷாயம் தரித்து வெளி வருகிறவர்களெல்லாம் சுத்த கள்ளப் பயல்கள்'' என்று மிகச் சுலபமாய்க் கூறி மந்தபுத்தி யுடையோர் பலரைக் கெடுத்து விடுகிறார்கள். இப்படிக் கூறுகிறவர்கள் இரண்டினும் பயனடையாது அழிகிறவர்களே. இல்லறத்தில் எந்நேரமும் மனத்தை நிலையற்ற உலக விஷயங்களில் இழுக்கத்தக்க புறப்பற்றுகளைச் சுற்றிலும் வைத்துக்கொண்டு ஞானத்தை அடைவதெனில் அது சொல்லொணாக் கஷ்டத்தின் மேல் தான் சாத்தியமாகத்தக்க விஷயம். அப்படி பூர்வ புண்ணியத்தால் ஞானத்தை யடைந்தாலும் அவன் குடும்பத்திலுள்ள மட்டும் மிக்க துக்கத்தை யலுபவிக்கவே வேண்டும். அதற்கு முயற்சி செய்யாத நமக்கு அதிலுள்ள கஷ்டம் சற்றும் தெரியாததால் எல்லா வழியும் தெரிந்தவர்கள் போல் வாயால் அப்படிக் கூறி விடுகிறோம். அடிக்கடி மனதை உலக விஷயங்களில் இழுக்கத் தக்க புறப்பற்றை
 யொழித்து ஞான அப்பியாசம் செய்வோர்கள் அப்போதைக் கப்போது மனதி லெழும் அந்நினைப்பைச் சுலபமாய் ஒழித்துவிட முடியும். ஏனெனில் அவர்கள் சாத்திர ஆராய்ச்சியாலும் கேள்வியாலும் உலக போகங்களிலுள்ள துக்கங்களையும், அவற்றால் நேரிடும் கெடுதிகளையும் உணர்ந்து. அடிக்கடி சிந்தித்து அவற்றில் வெறுப்படையும் மார்க்கத்தில் பழகுகிறார்களே யன்றி, அவர்கள் மனதைக் கவர்ந்து உலக விஷயங்களில் இழுக்கக்கூடிய புறப்பற்றொன்றும் அவர்களிடமில்லை. ஆனால் ஞான இச்சையுடைய ஒவ்வொருவரும் முதலிலேயே இல்லறத்தை விட்டு வெளிப்பட்டு விடுவதெனின் அதுவும் சுலபமாய் நடக்கிற காரியமல்ல.

ஆகையால் ஞானத்தை விரும்புவோன் முன்னே'இதை விடவேண்டும், அதை விடவேண்டும்' என்று சிந்தித்துக்கொண்டு எதையும் விடமுடியாமல் விழித்துக்கொண்டு வீண்காலம் போக்குவதில் ஒரு பயலுமில்லை. புறப்பற்றை வெறுத்து விட்டுவிட முடியாவிட்டால் முதலில் எதை விடவும் சிந்திக்க வேண்டாம். "எல்லாம் இருந்தாலும் ஒரு பக்கம் இருக்கட்டும், நாம் நம்மை யறிய முயல வேண்டும்" என்ற வைராக்கியத்தைக் கைக் கொண்டு அதற்கு விடா முயற்சி யெடுத்துக்கொள்ள வேண்டும். சாத்திர ஆராய்ச்சியும் அப்பியாசமும் ஏற ஏறப் பற்றுக்கள் தாமே விட்டொழியும். இதற்கு ஈசுர பக்தி முக்கியமும் முதன்மையுமான தென்பதை மறக்கலாகாது. அத்துடன் அப்பியாசம் செய்து ஆத்மஞானம் பெற தத்துவ ஆராய்ச்சி பேருதவி யாதலின், மேல் கூறப்பட்ட தத்துவ விஷயங்களைக் கதைபோல் வாசிப்பதோடு விட்டு விடாமல், அவற்றை ஆராய்ச்சி செய்து அனுபவமா யுணர முயன்றாலே ஆன்மாவை யறியலாகும்.

இதுகாறும் அத்தியாரோபம் என்ற கற்பனையால் தனு கரண புவன போகங்களாகிய யாவும் உற்பத்தியான வழியைக் கூறினோம். இனி கனவு காணும் போது அது உண்மை யாகவே தோன்றிலும், விழித்தவுடனே அக்கனவு பொய் யென்று விளங்கி விடுவதைப்போல், கற்பனையால் அதாவது அத்தியாரோபத்தால் உண்டான யாவும் அநித்தியமாகிய பொய்யே யென்று உணரும் மார்க்கத்தைக் கூறுவாம். இம் மார்க்கத்திற்கு அபவாத மார்க்கம் என்று பெயர். ஆகையால் இப் பிரபஞ்சம் முதலிய யாவும் கனவுபோற் பொய்யே யென்று ஆராய்ச்சியால் நிச்சயித்துத் துணிந்தவனே ஞானவானாவான்.

இச் சந்தர்ப்பத்தில் உலகு கனவுபோல் பொய் என்று கூறியதைப்பற்றி, "கனவில் விசேஷமாய் நாம் சாக்கிரத்தில் கண்ட பொருள்களையும் அனுபவங்களையும் பற்றியே காண்கிறோமாதலால், இப் பிரபஞ்சத்தைப்போல் மெய்யான ஒரு பிரபஞ்சத்தை நாம் கண்டிருந்தால் தானே இப்போது அதைப்பற்றிக் கனவு காணலாகும்? ஆகையால் மெய்யான பிரபஞ்சம் ஒன்று இருக்கவேண்டுமே" என்பது முதலான வாதங்களில் பிரவேசிக்கலாகாது. இத் திருட்டாந்தத்தில்,'விழித்தவுடன் கனவு பொய்யாய் விடுவது போல் ஞானமாகிய விழிப்பு வந்த வுடனே இப் பிரபஞ்சமும் பொய்யாய் போய்விடும்' என்ற மட்டிலேயே நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறே அத்தியாரோபத்தில் ‘கயிற்றில் பாம்பு’ தோன்றுவது போல் சச்சிதானந்த சொரூபமே நமது பிராந்தியால் பிரபஞ்சமாய்த் தோன்றுகிறது என்ற திருட்டாந்தத்தில், "நாம் முன்னமே பாம்பு என்ற ஒன்றை மெய்யாகவே கண்டிருப்பதால் கயிற்றில் பாம்பு தோன்றுகிறது. மேலும் கயிற்றில் பாம்பின் சாமானிய உருவமாகிய நீட்சி திரட்சி (நீளமாயும் உருண்டையாயும் இருத்தல்) என்றவை இருக்கின்றன. ஆகையால் கயிற்றில் பாம்பே தோன்றுகிறது. வேறு தவளை, நாய், புலி முதலியன தோன்றுவதில்லை. ஆகையால் பிரபஞ்சம் என்ற ஒன்றை முன்பு கண்டிருந்தால் தானே அத்தியாரோபத்தால் பிரபஞ்சம் தோன்ற வேண்டும்? அதோடு பாம்பின் சாமானிய இலட்சணம் கயிற்றி லிருப்பதுபோல் பரப்பிரம்மத்தில் பிரபஞ்சத்தின் இலட்சணம் இருக்கவேண்டும்!'' என்பன வாதிய வாதங்களும் வீண் வாதங்களேயாகும். [இதில் ''உண்மையான ஒரு பொருள் வேறு ஒரு பொருள் போல் தோன்றுகிறது" என்ற வரையிலுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.]

அபவாதம்

    கனவுபோல், ஆரோபத்தால் உண்டான பிரபஞ்சம் பொய்யென்று அறியுமார்க்கமே அபவாதம் என்று கூறினோ மல்லவா. அது எதுபோலெனில், முன் ஆரோபத்தால் கயிற்றைக் கண்டு அரவென்று மருண்ட ஒருவன் பிறகு தீபவொளியைக் கொண்டு உற்று நோக்கியபின், "சே! இது பாம்பல்ல, கயிறு'' என்று தெளிந்து பயம் ஒழிவதுபோல், ஞானாசாரியருடைய உபதேசத்தாலும் சாத்திர ஆராய்ச்சி யாகிய ஒளியாலும், "நம்முன் தோன்றும் நானாவிதமான இப் பிரபஞ்சம் உண்மையல்ல. பொய்த் தோற்றமே, உண்மையாயுள்ளது ஞானமயமாகிய சச்சிதானந்த பரப் பிரம்மமே" என்று ஐயமறத் தெளிவதே அபவாதமாகும்.

      இன்னும் காரியகாரண சம்பந்தத்தை நோக்க, காரணமின்றிக் காரியமில்லை யாதலால், ஆரோபத்தால் உற்பத்தியான ஒவ்வொன்றையும் முறையே ஒடுக்கிப் பார்த்து முடிவில் சச்சிதானந்த பரப்பிரம்மமே நித்தியமாய் யாவுமாய் நிலைத்திருப்பது என்று காண்பதும் அபவாதமேயாம். அவ்வாறு ஒன்றிலொன்று உதித்த முறையை ஒடுக்கிப் பார்ப்பது எவ்வாறெனின்: -

      சூக்கும பஞ்சபூதங்களின் தமோகுணத்தி லுண்டான ஸ்தூல பஞ்ச பூதங்களிலுதித்த தனுகரண புவன போகங்கள், எதெது எந்தெந்த பூதத்திலுதித்ததோ அதது அந்தந்த பூதத்தி லொடுங்கிவிட, அத்தூல பூதங்களும் மேற்கூறிய சூக்கும பூதங்களின் தமோகுணத்தில் ஒடுங்கிவிடும். இவ்வாறே சூக்கும பூதங்களின் சத்துவ குணத்தின் சமட்டியில் அந்தக் கரணங்களும் வியஷ்டியில் ஞானேந்திரியங்களும் உதித்தனவாதலால், அவற்றில் எவை எவை எந்தெந்த பூதத்தில் உற்பத்தியாயினவோ அவை யவை அந்தந்த பூதத்தின் சத்துவகுணத்தில் ஒடுங்கும். இவ்வாறே, இரஜோ குணத்தின் சமட்டியில் உண்டான பிராணாதி வாயுக்களும் வியட்டியில் உண்டான கன்மேந்திரியங்களும் அவை யவை யுண்டான பூதங்களில் ஒடுங்கிவிட முக்குணங்களையுடைய தன் மாத்திரை பூதங்களே நிற்கும். பிறகு அப்பூதங்களும் வந்த முறையே யொடுங்கும். அதாவது பிருதிவி அப்புவின் கரைந்தொடுங்கும், அப்பு தேயுவில் சுவறியொடுங்கும், தேயு வாயுவில் அணைந்தொடுங்கும், வாயு ஆகாயத்தில் சலனமின்றி யொடுங்கும், ஆகாயம் விக்ஷேபசத்தியி லொடுங்கும், விக்ஷேப சத்தியும் வரண சத்தியும் தாம். உற்பத்தியான மூலப்பிரகிருதியின் தமோகுணத்தி லொடுங்கும். மூலப் பிரகிருதியின் சத்துவ ரஜோகுணங்களில் உற்பத்தி யானவைகளும் அந்தந்த குணத்தில் ஒடுங்கிய பின் முக்குணங்களுடைய மூலப்பிரகிருதியே எஞ்சி நிற்கும். அதுவும் தான் தோன்றிய சச்சிதானந்த பரப்பிரம்மத்தில் ஒடுங்கி விடும். முடிவில் சச்சிதானந்த மயமாகிய அப் பரப் பிரம்மம் ஒன்றுமே முக்காலத்தும் உள்ளதாய் விளங்கிக் கொண்டிருக்கும்.

      காரிய காரண ரீதியாய்ப் பார்க்கும்போது காரணமே முக்காலத்துமுள்ள சத்தியப் பொருளாகவும், காரியம் முன்னுமின்றிப் பின்னுமின்றி இடையில் மட்டும் நாம ரூபங்களையே ஆதாரமாய்க் கொண்டு தோன்றும் அநித்தியப் பொருளாகவும் முடியும்.

      திருட்டாந்தமாய்க் குடத்தை எடுத்துக்கொண்டால், காரணமாகிய மண்ணே குடமாய்த் தோன்றுகிறது. அந்த உருவம் ஏற்படுமுன் அதற்குக் குடமென்று பெயரில்லை. குடமுடைந்து உருவம் அழிந்த பின்னும் அதற்கு அப்பெயர் இல்லை. இடையில் மட்டுமே அப் பெயர் உண்டு. ஆனால் காரணமான மண்ணோ குடம் உண்டாகும் முன்பும் இருந்தது, குடம் அழிந்தாலும் இருக்கும்; குடம் உருவோடிருக்கையிலும் இருக்கிறது. அப்போது நாமரூப நாட்டத்தை விட்டு அது என்ன வஸ்துவென்று நோக்கினால் மண்ணேயாகும்; மண்ணை நீக்கிப் பார்த்தால் குடமே யில்லை. முக்காலத்து முள்ளது மண்ணேயன்றி குடமல்ல, பொன்னும் நகையும், பஞ்சும் ஆடையும் என்ற திருட்டாந்தங்களிலும் இவ்வாறே காரணமாகிய பொன்னும் பஞ்சுமே முக்காலத்துமுள்ள நித்திய வஸ்துக்கள் என்றுணரலாம்.

      அவ்வாறே நாமரூபமாய்த் தோன்றும் பிரபஞ்சமனைத்தும் உண்மையில் சச்சிதானந்த சொரூபமாகிய பரப்பிரம்மமே. குடத்தின் நாமரூபத்தை நீக்கிப் பார்த்தால் மண்ணே தோன்றுவது போலும், ஆபரணத்தின் பெயரையும் உருவத்தையும் நீக்கி நோக்கிடின் பொன்னே புலப்படுவது போலும், கடலிலுள்ள அலை நுரை இவற்றின் பெயர் உருவங்களைக் கவனியாது அவை என்னவென்று நோக்கிடின் ஜலமே தோன்றுவது போலும், பிரபஞ்சத்திலுள்ள நாமரூபங்களில் நாட்டத்தைச் செலுத்தாது நோக்கின்
 யாவும் சச்சிதானந்த மயமே யென்றும், அதை யன்றி அன்னியமான வேறு ஒன்றுமே யில்லையென்றும் திடமாய்த் தோன்றும். இவை இரண்டில் ஒன்றில் நாட்டம் வைத்தால்
 மற்றொன்று தோன்றாது மலை றைந்திருக்கும். நாமரூபத்தில் நாட்டம் வைத்திருக்கு மட்டும் சச்சிதானந்த மயம் தோன்றாது. மரத்தால் செய்யப்பட்ட ஒரு யானையைக் காணும் ஒருவன் அதன் பெயரிலும் உருவத்திலு மட்டுமே திருஷ்டியைச் செலுத்தி "ஆகா! நேர்த்தியான யானை; இது எவ்வளவு கோபப் பார்வையாய்ப் பார்க்கிறது பார்; இதன் தும்பிக்கோல் மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமா யிருக்க வேண்டும்; காட்டில் இந்த யானைகள் என்ன வேகமாய் ஓடுகின்றன தெரியுமா'' என்கிறான். இவன் இது உண்மையில் மரம் என்பதைக் கவனிக்கவில்லை. ஆகையால் மரத்தின் இலட்சணம் இவனுக்குப் புலப்படவே யில்லை. இதனால் யானை யென்ற பெயரும் அந்த உருவமும் மரத்தின் இலட்சணத்தை மறைத்துவிட்டன வென்று அறியலாகும்.

      இன்னொருவன் அந்த யானையையே கண்டு அதன் அருகிற் சென்று அதைத் தடவி, தட்டி, முகர்ந்து பார்த்து ''பேஷ்! இது நல்ல வயிரமேறிய கருங்காலி மரம். எங்கும் போரலாவது கணுவாவது கிடையாது; இருப்பினும் உறுதியுடையது. இதில் சிறு உருவங்களும் இன்னும் பலவிதச் சாமான்களும் செய்யலாம்," என்றான். இவன் யானையின் நாமரூபங்களைக் கவனியாது நோக்கியவனாதலால் மரத்தை மட்டுமே கண்டு அதன் இலக்ஷணங்களை உணர்ந்து அதைப் புகழ்ந்துகொண்டான். அவன் திருஷ்டிக்கு மரமே தோன்றியதால் யானையின் உருவம் முதலியன யாவும் மரத்தில் மறைந்துவிட்டன.

                                "மரத்தை மறைத்தது மாமதயானை

            மரத்தில் மறைந்தது மாமதயானை''

 

என்று திருமூலநாயனார் திருமந்திரத்தில் அருளியது ஈண்டு சிந்திக்கத்தக்கது.

ஆவரண சத்தியின் தன்மை

சீடன்: -      "எனது ஆசாரியரே! மூலப் பிரகிருதியின் தமோ குணத்தில் ஆவரணம், விக்ஷேபம் என்ற இரண்டு சத்திகள் உதித்தனவென்று அருள் செய்தீர்கள். ஆனால் அவற்றில் விக்ஷேப சத்தியால் உண்டாக பஞ்ச உற்பத்தியைப் பற்றி மட்டும் கூறினீர்களே யன்றி, ஆவரண சத்தியைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே; ஆகையால் ஆவரண சத்தியின் தன்மை இன்னதென்பதையும் தயவுடன் அருள்புரிய வேண்டுகிறேன்" என்று வினவினான்.

குரு: -       ஈசுவரன், தம்மைத் தாம் அறிந்த ஞானிகள், இவர்களைத் தவிர மற்ற சீவர்களின் ஞானக் கண்ணானது குருடாகும்படி, (மூடுபனியானது பூமியிலுள்ள பொருள்கள் இன்னவை யின்னவை யென்று புலப்படா வண்ணம் ஊனக்கண்களை மறைப்பதுபோல்) மறைப்பதே ஆவரண சத்தியின் சுபாவமாகும். அதாவது, பரப்பிரம்மத்திற்கும் வெளியில் தோன்றும் நாம ரூபமான பிரபஞ்சத்திற்கும், உள்ளே யுள்ள ஆன்மாவிற்கும் மனமாதி தத்துவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இன்னதென்று அறிவிற்குச் சற்றும் விளங்கா வண்ணம் மறைத்துவிடும். ஆகையால் ஜனன மரணமாகிய பெரிய வியாதியை உண்டாக்குவது இதுவே யாகும்.

இதில் இன்னொரு விசேடமுண்டு; அதாவது "கயிறு என்ற ஒன்றைக் கண்டே பாம்பு என்ற மிரட்சி (ஆரோபம்) உண்டாகிறது. ஆதாரமாகிய அக் கயிறு தோன்றாது அடியோடு மறைந்து இருந்தால், ஆரோபமாகிய பாம்பு எப்படித் தோன்றும்? தோன்றாதல்லவா? அப்படிக் கின்றி கயிறு என்ற ஆதாரம் மறையாமல் நன்றாய்க் கயிறு என்று தெரிந்தால் அப்போது ஆரோபமாகிய அரவம் தோன்றக் காரணமில்லையே" என்ற ஆக்ஷேபனை உண்டாகலாம். அதற்குச் சமாதானம் கூறுகிறோம்.

ஆதாரம் சமம் அல்லது சாமான்யம் என்றும், விசேடம் என்றும் இருவகைப்படும். அவற்றில் அதிக தேசங்களில் உள்ளது எதுவோ அதுவே சாமான்ய பாகம். (கண்டு தேசம் எனின் இடமென்பது பொருள்.) அற்ப காலம் அற்ப தேசங்களில் உள்ளது விசேட பாகம். அதாவது ஒரு வஸ்துவை நாம் முதலில் காணும்போது. மேல் தோற்ற மாத்திரமாய்த் தெரிவதே அதன் சாமான்ய பாகம். பிறகு பூரண விவரத்தோடு இன்ன வஸ்து என்று தெளிவாய்த் தெரிவதே அதன் விசேட பாகம். அதாவது எந்தப் பாகம் மறைந்திருந்தால் அவ் வஸ்துவே அடியோடு புலப்படாதோ அப் பாகமே சாமான்ய பாகம். கயிற்றில் முதலில் ஏதோ ஒன்று நீளமாகவும் திரட்சியாகவும் தோன்றுகிறது; அதுவே அதன் சாமான்ய பாகம். பிறகு அது நாரினாலோ நூலாலோ திரிக்கப்பட்டதென்று காணப்படுவதே அதன் விசேட பாகம். தூரத்தில் ஏதோ ஒன்று நான்கைந் தடி. உயரமாகவும் ஒரு கம்பம் போல் பருமனாகவு மட்டும் தோன்றுகிறது. அதுவே சாமான்ய பாகம். பிறகு அது எவ்வித உருவமுமின்றி திரணையாய் இருக்கும் மரக்கட்டை என்று காண்பதே அதன் விசேஷ பாகம். ஒரு வஸ்துவின் விசேஷபாகம் புலப்படாமல் அதன் சாமான்ய பாக மட்டும் தோன்றும் போதுதான் அது "கயிறோ பாம்போ,'' "கட்டையோ மனிதனோ" என்ற ஐயம் உண்டாகிறது. விசேட பாகம் நன்றாகப் புலப்பட்டு விட்டால் சற்றும் ஐயமின்றி இது இன்ன வஸ்து தான் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது.

இதனால் ஒரு வஸ்துவின் விசேட பாகத்தில் தான் ஆரோபமுண்டாவதே யன்றி சாமான்ய பாகத்தி லுண்டாவதில்லை யென்று நன்குணரலாகும். சாமான்ய பாகம்    தோன்றாதிருந்தால் வஸ்துவே அடியோடு தோன்றாது. அப்போது ஆரோபம் உண்டாகக் காரணமே யில்லை தான் சாமான்ய பாக மட்டும் தோன்றி விசேட பாகம் மறைந்திருப் பதாலேயே அப் பாகத்தில் ஆரோபம் தோன்றுகிறது.

தாஷ்டாந்தத்தில் ‘நான் இருக்கிறேன்' என்ற உணர்வே சாமான்யபாகம். அதை அஞ்ஞானம் என்னும் ஆவரணம் மறைக்க முடியாது. ஆனால் அந்த நான் என் உண்மையில் பரப்பிரம்மத்தின் அம்சம் என்பதும் அதைப்போலவே சச்சிதானந்த சொரூபமுடையது என்பதுமாகிய விசேட பாகத்தையே அறியவொட்டாது ஆவரணம் மறைத்து விடுகிறது.

சீடன்: -     “கிடைத்தற்கரிய பரமாசாரியரே! ஆன்மாவிற்கும் பரமான்மாவிற்கு முள்ள சம்பந்தத்தை யுணர வொட்டாது மறைத்துக் கெடுத்து, பஞ்சகோசங்களாகவும், பஞ்சபூதங்களாலாகிய தேகமுதல் புவன போகங்களாகவும் தோன்றியது விட்சேபசத்தியாக      இருக்க, தாங்கள் ஆவரண சத்தியே உயிர்களின் ஞானக்கண் குருடாகும் வண்ணம் மறைத்துப் பாழாக்கியதென்றும், பிறப்பிறப்பாகிய இப்பெருந் துன்பத்தை யுண்டாக்கிய உபாதியென்றும் அருளிய தென்னவோ? அதை அடியேற்கு விளக்கியருளப்      பிரார்த்திக்கின்றேன்'' என்றனன்.

ஆசான் பின்வருமாறு அதற்குச் சமாதானம் கூறுகின்றார்: -

மைந்தனே! நான் கூறுவதைக் கவனமாய்க் கேட்டறிதி. அவிவேகத்தால் அஞ்ஞானத்தினின்று தம்மை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யாது "நான் - எனது" என்ற    அபிமான முடையராய் பாப புண்ணிய கருமங்களைச் செய்வோர்க்குப் பிறப்பிறப்பை யுண்டாக்குவதில் விக்ஷேப சத்தியும் காரணமா யிருக்கிற துண்மையே. ஆயினும் முயற்சி
 வெடுத்துக்கொண்டு மோட்ச மடையப் பிரயத்தனப் படு வோர்க்கு இந்த விக்ஷேப சக்தியே உதவியாயிருக்கிற தென்பதைக் கவனித்துப் பார்.

[எங்கனமெனின் விக்ஷேபசத்தியினிடமாக உண்டான சூக்கும பஞ்சபூதங்களின் சத்துவகுண சமஷ்டியில் அந்தக்கரணமும், வியஷ்டியில் ஞானேந்திரியங்களும் உற்பத்தியாயின. இந்த ஞானேந்திரியங்கள் ஈசுவரனுடைய சொரூபத்தைக் கண்டு தரிசிக்கவும் அவனைத் தோத்திரம் செய்யவும், அவன் புகழ்களைக் கேட்கவும், இன்னும் பல வித சத் விஷயங்களுக்கும் உபயோகமாகின்றன. அந்தக் கரணமாகிய மனம் மாயையே யாயினும், அம்மனத்தின் சத்துவகுணமே ஞானத்தை யடையக் கடைசி வரையில் உதவியாயிருந்து முடிவில் அந்த ஞானத்தீயால் தானும் அழிந்து போய் விடுகிறது.]

இதுவுமன்றி நித்தியப் பிரளயமாகிய சுழித்தியிலும், மகாப் பிரளயத்திலும் விக்ஷேப சத்தியின் காரியங்களாகிய சகங்களனைத்தும் நசித்தும், (ஆன்மாக்களனைத்தும், தங்க ரேணுக்கள் மெழுகுருண்டையில் சிக்கி மறைந்து கிடப்பது போல், மாயாந்தகாரத்தில் சிக்கியிருந்து, பிறகு சிருட்டியில் தம் தம் பூர்வ வாசனைப்படி சனிக்கின்றனவே யன்றி) ஒருவரேனும் மோக்ஷமடைந்த துண்டோ? விக்ஷேபம் மோக்ஷத்திற்கு விரோதியாயின், அது நசித்த மாத்திரத்தால் ஆன்மா மோக்ஷமடைய வேண்டுமன்றோ? அவ்வாறில்
 லையே. அதற்கு மாறாக ஆவரண சக்தியே ஆன்மா மோக்ஷமடைய வொட்டாமல் கெடுக்கும் விரோதியாதலின், ஆவரணத்தை நீக்கிக்கொண்ட ஆன்மா மோக்ஷமடைகிறது. [ஆன்றோர்கள் மானிட தேகமே முத்தியடைவதற்கு அது கூலமானதென்றும், இதை யடைதலே அரிதாகையால் இப்போதே மோக்ஷமடைய முயலவேண்டு மென்றும், இது    போய்விட்டால் எச்சன்மம் வாய்க்குமோ வென்றும் பிரலாபித்திருப்பதே இதற்குப் போதிய    சான்றாகும். மனோவாக்குகளுக் ககோசரமாய், அண்ட ரண்ட சராசரங்கள் எங்கணும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த மயமாகிய பரம்    பொருளை, ஊக்கத்தோடு உற்று உணர்வதற்கு இத்தேகம்    இடமாயிருத்தலின், இதுவும் குருவுக்குச் சமதையானதே யென்று கூறப்பட்டிருக்கிறது.

"வாக்கி னைக்கடந் தோங்கிமற் றெங்கணும்

      நீக்க மின்றி நிறைந்த அறிவினை

யூக்க முற்றுணர் தற்கிட னாதலி

னாக்கை யுங்குரு வாய தரசனே"

 

என்று பாகவத்தில் சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்து மகாராஜனுக்கு அருளியிருக்கிறார்.]

 

சீடன்: -     "ஞானாசிரியரே! இச்சந்தர்ப்பத்தில் சிறியேன் மனதில் ஒரு ஐயம் தோன்றியுளது. தங்களது ஞானப் பிரகாசம் அதை யொழித்தருள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கின்றேன். அந்த ஐயமாவது: - "இந்த விக்ஷேப சாத்தி மூலப் பிரகிருதியின் தமோ குணத்தில் உற்பத்தியானது. மூலப் பிரகிருதி கிளிஞ்சிலில் வெள்ளி தோன்றுவதுபோலும், கயிற்றில் அரவு தோன்றுவது போலவும் ஆரோபத்தில் தோன்றியது. இவ்வாறு தோன்றிய சாத்தி பொய்யே யாதலால், இத்தகைய விட்சேப சத்தியிலுண்டான (குருவின் உபதேசம், சாத்திர விசாரணை, சத்துவகுண மனம் முதலிய சாதனங்களால் கிடைக்கும்) மோக்ஷமும் பொய்யாகவே யிருக்குமோ வென்பதே" என்றனன்.

ஆசாரியர் "மைந்தனே! நீ கூறியது சாதாரமாய் உதிக்கத்தக்க ஐயமே. ஆயினும் அனுபவமான திருட்டாந்தங்களால் அதை நிவர்த்தி செய்துகொள்ளலாகும். எவ்வாறெனின் கூறுதும். ஒருவன் நித்திரையில் கனவு காண்கிறான் அவன் அக் கனவில் ஓர் தோட்டத்தின் வழியே சென்று கொண்டிருக்கையில் திடீலென்று சமீபத்திலுள்ள புதலிருந்து ஒரு சிங்கம் தன்மேல் பாய்ந்து வருவதைக் கண்டதே கோவென்றலறி உடனே விழித்துக்கொள்கிறான். அவன் கண்ட கனவென்னமோ பொய் என்பது தெரிந்த    விஷயம்; அக்கனவில் தோன்றிய சிங்கமும் பொய்யே. ஆயி னும் அப் பொய்யாகிய சிங்கத்தால் அம் மனிதனுக்குண்டான அலறலும், நித்திரையினின்று விழிப்பும் நிச்சயமல்லவோ. அதுபோல - விக்ஷேப சக்தி ஆரோபிதமாகிய மித்தையாயினும், அதனாலுண்டாகும் மோக்ஷம் சத்திய மேயாகும்.

இதற்கு இன்னொரு திருட்டாந்தம் கூறுகிறோம். உலகில் விஷத்தை அதற்கு விரோதியாகிய வேறொரு விஷத்தால் அழித்து விடுகிறார்கள். இரும்பை எஃகாகிய இரும்பினால் அழிக்கிறார்கள். அம்பினை வேறொரு அம்பினால் வென்று விடுகிறார்கள். ஆடையிலிருக்கும் அழுக்கினை உவர் மண்ணாகிய அழுக்கினால் போக்குகிறார்கள் அதுபோலவே நிலையில்லாத அவித்தையாகிய மாயையை, (சத்துவ குண) மாயையாலேயே அழித்து விடுகிறார்கள். பிறகு சவத்தைச் சுடும் தடியானது தீயைக் கிளறிக்கிளறி சவத்தைச் சுடும் போது தானும் கொஞ்ச கொஞ்சமாய் எரிந்துகொண்டே போய், சுட்டு முடிந்ததே மிச்சமாய் நிற்கும் சிறு துண்டுத் தடியும் அந்த அக்கினியிலேயே யெறியப்பட்டு சாம்பலா யழிவதுபோல், அசுத்த மாயையை யழித்த சத்துவமாயையும் முடிவில் (முன் கூறப்பட்டபடி) ஞானாக்கினியினால் அழிந்துபோம். இதையே,

"கருதி மலத்தான் மலமறுக்குங் காருவென்ன மாயைதனைப்

பெருமா யையினாற் செறல் வேண்டும்."

என்று வாசிட்டம் கூறுகிறது.

      [இதை வாசிப்போர் ஒரு விஷயத்தைக் கவனத்தில் வைத்தால் அனேக சந்தேகங்கள் உண்டாவதை யதுதடுத்து விடும். அதாவது நமது அனாதி வேதத்தில் கூறப்பட்டிருக்கும் மோக்ஷம் இறந்த பின் என்றைக்கோ ஒரு நாளைக்கு வருமென்றும் கண்மூடித் தனமாய் நம்பிக்கொண்டு மடியச் சொல்வதல்ல. அதற்கு மாறாக ஆன்மா இத்தேகத்திலிருக்கும் போதே அங்கை நெல்லி போல் பிரத்தியட்சமாய் அடைந்து அனுபவிக்கத் தக்கது. நமது முன்னோர்களாகிய மகான்கள் அனைவரும் அவ்வாறு ஒரு ஐயமுமின்றிப் பிரத்தியட்சமாக இவ்வுலகில் இருக்கையிலேயே அதை அடைந்து உறுதியாய்க் கைப்பற்றிக்கொண்டார்கள்.

“விண்ணவரிந் திரன் முதலோர் நார தாதி

விளங்குசப்த ரிஷிகள்கன வீணை வல்லோர்

எண்ணரிய சித்தர்மநு வாதி வேந்தர்

இருக்காதி மறைமுனிவ ரெல்லா மிந்தக்

கண்ணகன்ஞா லம்மதிக்கத் தானே யுள்ளங்

கையினெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்

திண்ணியநல் லறிவாவிச் சமயத் தன்சோ

செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தாரென்றும்."            (தாயுமானவர்.)

ஜீவ ஸப்தாவஸ்தைகள்

 

இந்த விக்ஷே சத்தியால் ஜீவர்களுக்கு ஏழுவித அவஸ்தைகளுண்டு. இவற்றிற்கே ஜீவ ஸப்தாவஸ்தைகள் என்று பெயர் (ஸப்தம் = ஏழு). அந்த ஏழவஸ்தைகளும் எவை யெனின்:  -

(1) அஞ்ஞானம், (2) ஆவரணம். (3) விக்ஷேபம், (4) பரோக்ஷம், (5) அபரோக்ஷம், (6) துக்க நிவர்த்தி, (7) தடையற்ற ஆனந்தம், என்பவைகளே. இவற்றுள்: -

(1) அஞ்ஞானம்: - ஆன்மா தான் நித்தியமாய் சச்சிதானந்த சொரூபமாய் பரப்பிரம்மத்திற்கு அனன்னியமா   யிருப்பவன் என்கிற கன் நிஜசொரூபத்தை மறந்திருப்பதே அஞ்ஞானம்.

(2) ஆவரணம்: - நமக்குள் பரமாத்மா வென்று ஒன்று காணப்படவில்லையே. இருந்தால் தோன்றாதா என்பதே ஆவரணம் என்னும் மறைப்பாகும்.

(3) விக்ஷேபம்: - தன் நிஜசொரூபத்தை மறந்த ஆன்மா தன்னைத் தேகேந்திரியங்களோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு, அவற்றின் தொழில்களை யெல்லாம் தன் தொழிலாகக்கொண்டு, அத்தொழில்களால் உண்டாகும் டாகும் பாப புண்ணியங்களை யனுபவிக்கப் பிறப்பிறப்பை யடையும் சீவனே தானென்று நினைத்தலே விக்ஷேபமாம்.

(4) பரோக்ஷ ஞானம்: - காரிய குருவாலும் நூல்களிற் கூறி யிருப்பதைப் பார்ப்பதாலும், சாக்ஷி மாத்திரம் இருக்கவேண்டிய பிரத்தியகாத்மாவே தானென்று (வாசா ஞானமாய்) உணரல் பரோக்ஷ ஞானமாம்.

(5) அபரோக்ஷ ஞானம் - ஞான நூல்களை யாராய்ச்சி செய்து, காரண குரு (ஞானாசிரியர்) வின் உபதேசம் பெற்றுச், சகல சந்தேகங்களும் நீங்கித் தன் நிஜசொரூபத்தை யறிந்து, பரமான்மாவோடு இரண்டறக் கலந்து தானற்று நிற்கும் அத்துவித நிலையை அனுபவமா யடைதல் அபரோக்ஷ ஞானமாம்.

(6) துக்க நிவர்த்தி: - தான் ஜீவனென்றும், * கர்த்தா வென்றும் போக்தா வென்றும் கருதுதலையும், தனக்கும் பாப புண்ணியங்களும் அதனால் பிறப்பிறப்பும் உண்டென் பதையும், இதனாலடையும் துக்கத்தையும் அடியோடு நீக்கி விடவே துக்க நிவர்த்தியாம்.

1. * கர்த்தா = காரியத்தைச் செய்பவன். 2. போக்தா = போகத்தை (சுகதுக்கத்தை) யனுபவிப்பவன்.

(7) தடையற்ற ஆனந்தம் (அல்லது) ஆனந்தப் பிராப்தி): - சகல துக்கங்களிலு மிருந்து விடுபட்டு, தொழிலற்றுச் சச்சிதானந்த சொரூபமாகிய பிரம்மானந்தக் கடலில் மூழ்கி ஆனந்தமயனாய் ஒன்றும் வேண்டாத பூரண திருப்தியடைந்திருப்பதே தடையற்ற ஆனந்தமாம்.

 

 

ஜீவஸத்தாவத்தைகளுக்குத் திருட்டாந்தம் கூறல்

இவ்வாறு ஜீவனுக்கு ஏழவஸ்தைகளுண்டு என்பது உன் மனதிற்கு நன்றாய் விளங்கும் பொருட்டுத் திருட்டாந்தமாக ஒரு அதிசயமான கதை கூறுகின்றோம். அதைக்   கவனமாய்க் கேட்பாயாக.

ஒரு சமயம் பத்து புருடர்கள் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல நேரிட்டது. அவர்கள் பதின்மரும் அவ்வாறே ஆற்றைக் கடந்து கரையேறி னார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி மடியாமல் யாவரும் க்ஷேமமாய் இக்கரை வந்து சேர்ந்தோமா என்பதை யறியவெண்ணி, ஒன்று, இரண்டு, மூன்று என்று தன் னெதிரிலிருந்த ஒன்பதுபேரையும் எண்ணி "அட இதென்ன ஒருவனைக்காணோமே" என்று திடுக்கிட்டேங்கி, சே! சரியாக எண்ணிப் பார்ப்போ மென்று மறுபடி யெண்ணினான். அப்போதும் தான் பத்தாவது மனிதன் என்பது நினைவிற்கு வராததால், எதிரிலிருந்த மற்ற ஒன்பதின்மரை மட்டுமே யெண்ணிவிட்டு "அய்யோ! ஒருவன் ஆற்று வெள்ளத்தில் மடிந்துபோனானே" என்று தேம்பித் தேம்பி அழவாரம்பித்தான்.

அச்சமயம் வழிப்போக்கன் ஒருவன் இவன் அழுவதைக்கண்டு சங்கதியை விசாரித் தறிந்துகொண்டு "அய்யோ பத்தாவது மனிதன் மடிந்து போகவில்லை உயிரோடி ருக்கின்றான்'' என்றான். இதைக் கேட்டதே அம் மனிதன் இது உண்மையாய்த்தான் இருக்குமென்றெண்ணிப் பயம் நீங்கி மிக்க ஆவலோடு "ஏதோ, அவன் எங்கே யிருக்கின்றான்?" என்று கேட்டான். பிரயாணி "இதோ ஒன்பது பேரை எண்ணின நீ தான் பத்தாவது மனிதன்" என்றான். அவன் தானே பத்தாவதென்று பிரத்தியட்சமா யறிந்ததே, அப்பா! என்று சோகமும் துயரமும் நீங்கி வியப்பாலும் சந்தோஷத்தாலும் மௌனமாய் நின்றான்.

இத்திருட்டாந்தத்தில்,

(1) அம்மனிதன் ஒன்பது பேரை யெண்ணியவன் தான் பத்தாவது மனிதன் என்பதை மறந்ததே அஞ்ஞானம்.

(2) ஒன்பது பேராயிருப்பதால் மற்ற ஒரு ஆள் இல்லையென்று தீர்மானித்துக் கொண்டதே ஆவரணம்.

(3) அய்யோ (பத்தாமவனாகிய) ஒருவன் ஆற்றில் மடிந்தானே என்று துக்கித்தல் விக்ஷேபம்.

(4) அச்சமயம் வழிப்போக்கன் ஒருவன் அவனைக் கண்டு "பத்தாமவன் மரிக்கவில்லை. இருக்கிறான்'' என்ப தைக் கேட்டு இது நிச்சயமாகவே யிருக்குமென்றெண்ணியது பரோக்ஷ ஞானம்.

(5) வழிப்போக்கன் கூறிய பின் தான் தான் பத்தாமவனென்று தன்னைப் பிரத்தியக்ஷமாய்க் கண்டதே அபரோக்ஷ ஞானம்.

(6) பத்தாமவன் மடிந்தானென்ற பீதியா லுண்டாயிருந்த துக்கம் நீங்கியதே துக்க நிவர்த்தி.

(7) தானே பத்தாமவனென்று கண்டபின் எல்லாச் சந்தேக விபரீதங்களும் நீங்கித் துக்கமொழிந்ததால் உண்டான பூரண மனோ நிம்மதியாகிய சந்தோஷமே தடையற்ற ஆனந்தம்.

[பத்தாமவன் தானென்று ஐயமற அறிந்ததே, இது காறும் உண்டான அனர்த்தங்க ளியாவும் தன் மூடத்தனமாகிய மறதியினால் உண்டானவை யென்ற உணர்ச்சி யுண்டாகி, இதுகாறும் நடந்தவை நேரிடாது போலும் தோன்ற, புதையலை மறந்துவிட்டு அலைந்து திரிந்து துக்கப்படும் ஒருவன் திடீலென்று புதைத்து வைத்த இடம் நினைவிற்கு வந்து அங்கு ஆவலோடு ஓடிப் புதையல் பழுதின்றி யிருக்கக்கண்டால் எத்தகைய ஆனந்த மடைவானோ, அத்தகைய ஆனந்தத்தையே (பத்தாமவனாகிய) இவனும் அடைவான். இத்திருட்டாந்தத்தில் இவன் ஆனந்தத்திற்குக் காரணம் இவனுக்குப் புதிதாய் ஒருபொருள் கிடைத்ததல்ல. இவன் வைத்து மறந்ததை மறுபடி யடைந்ததே காரணமாகும்.]

இவ்வாறே ஞானத்தை யடைந்தோனும், புதிதாக வொன்றையும் பெறுவதில்லை. வேறெங்கோ கட்டிவைத்திருக்கும் ஒரு புதிய விடத்திற்குச் செல்வதுமில்லை. அதாவது ஆன்மாவின் நிலைமையில் உண்டாகும் பேதமே மோக்ஷ நிலையன்றி புதிதாய் அடையப்படுவது ஒன்று மில்லை. அஞ்ஞானவிருள் நீங்கியதே அவனும் "அடா! நமது பிராந்தியாலல்லவோ இந்த மாயா மயக்கமாகிய அநித்திய உலகத் தொல்லைகளை மெய்யென்று நம்பி படாதபாடு பட்டுக்கொண்டிருந்தோம். ஆகா! மிகவும் ஆச்சரியம். இன்னும் அநேகர் நாம் இதுகாறும் இருந்தது போல் அம்மயக்கத்தில் சிக்கிக்கொண்டே அக் கனவை மெய்யெனக் கருதி மிக்க அக்கரையோடு உழன்று கொண்டிருக்கிறார்களே! இது பெரிய வேடிக்கையே" என்று நினைத்து நினைத்து ககையா நிற்பன். எதைப்போல வெனின், ஒருவன் கனவில் பயங்கர விஷயங்களைக் கண்டு அச்சமயம் கனவு மெய்யாகத் தோன்றுவ தால் மிக்க பீதியும் நடுக்கமுமடைந்து அலறிக் கூவி விழித்துக்கொண்டதே “சே! என்ன முட்டாள் தனம் கனவை நிச்சயமென்று நினைத்து அப்படிப் பயந்து போனோமே யென்று நினைத்து நினைத்து நகைப்பானோ, அதைப்போலவே யாகும். அவன் எப்படி அக்கனவைப் பொய்க் காட்சியென்று அது நினைவிற்குவரினும் அதை மறந்து விடுவானோ, அவ்வாறே ஞானியும் உலகைப் பொய்த் தோற்றமென்றும் அதைப்பற்றி சிந்தியா தொழிவன். இங்கு ஒரு சந்தேகம் உண்டாகலாம். அதாவது விழித்துக்கொண்டு கண்டது கனவு ஆதலின் பொய்த் தோற்றம் என்று உணர்ந்தபின் கனவில் கண்ட காட்சிகள் புலப்படுவதில்லை. உலகமோ கனவைப்போல் பொய்த் தோற்றம் என்று திடமாயறிந்த பின்னும் கட்புலனுக்குக் தோன்றிக்கொண்டே யிருக்கின்றதே என்ற கேள்வியுண்டாகலாம். கானலை நீரென்று மயங்கிய ஒருவன் அது பொய்த் தோற்றமென்று பிரத்தியட்சமாய்க் கண்ட பின்னும் அக்கானல் நீர் தோன்றிக்கொண்டேதானிருக் ஆயினும் அவன் மட்டும் மறுபடி அது மெய்யான நீரென்று மயங்கமாட்டான். அவ்வாறே உலகம் கனவுபோல் பொய்த்தோற்றமென் றுணர்ந்த பின்னும் தோன்றிக்கொண்டே யிருந்தாலும் ஞானமடைந்தவன் அதை மறுபடி சத்தியமானதென்று நம்பி ஏமாற மாட்டான். ஞானமடைந்தவன் தன் வரையில் மாயையே தீக்கிக்கொண்ட போதிலும் மாயையின் காரியம் இருந்து கொண்டே யிருக்குமாதலின் உலகம் தோன்றிக் கொண்டேதானிருக்கும்.]

இவ்வாறு கூறப்பட்ட திருட்டாந்தத்திற்குத் தசபுமான் திருட்டாந்த மென்று பெயர். இதைக் கேட்ட சீடன் குருவை நோக்கி,

"என் அஞ்ஞானத்தை யொழிக்க வல்ல ஆசாரியரே! பத்தாவது மனித தேனான அவன் தன்னையே தான் பத்தாமவ னென்று பிரத்தியக்ஷமாய்க் கண்டது போல எனது நிஜ வடிவை யான் காணும்படித் திருவருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

(ஆசான் மகாவாக்கியப்படி அவனது ஆன்மா சொரூபத்தை அவன் அறியும்படிக் காட்டத் தொடங்கினார்.)

மகா வாக்கிய விசாரம்

[நான்கு வேதங்களிலும் இருதி வாக்கியங்களுள்ளன. இவற்றிற்கே மகாவாக்கியங்கள் என்று பெயர்.

அவை, (1) பிரக்யானம் பிரம்மம், (2) அகம் பிரம் மாஸ்மி, (3) அயம் ஆத்மா பிரம்மம், 4) தத்வமசி என்ற நான்கு வாக்கியங்களே யாகும். இவற்றில் சாமவேதத்திலுள்ள சாந்தோக்கிய உபநிஷத் மஹா வாக்கியமே தத்துவமசி என்ற வாக்கியமாகும். இதுவே உபதேச வாக்கியம். ஈண்டு மகா வாக்கியமென்றது இதையே குறிக்கிறது.]

குரு: -       சீடனே? சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடத்தில் "தத்துவ மசி" என்று அரிய மகா வாக்கியமொன்றுள்ளது. அது தத் + துவம் + அசி என்ற மூன்று பதங்களா லாயதோர் வாக்கியம்.

தத் என்பதற்கு அது (ஈஸ்வான்) என்று பொருள்; துவம் என்பதற்கு நீ (சீவன்) என்று பொருள். இவற்றிற்கு வாச்சியார்த்தம் என்று பெயர். அப் பதங்கட்கு முறையே பிரம்மம், கூடஸ்தன் என்பன இலட்சியார்த்தங்களாககும். பரிசுத்தமான இந்த லட்சியார்த்தப்பொருள் களாகிய கூடஸ்தப் பிரம்மங்கட்கு அசி (ஆகின்றாய்) என்ற பதம் ஐக்கியத்தைப் போதிக்கின்றது. அதன் உண்மையை யுனக்கு விளங்கும்படி கூறுகிறோம் கேட்பாயாக.

[ஒரு வார்த்தையின் பொருள் விளங்குவதில் இரண்டு வழிகளிருக்கின்றன. வார்த்தையின் சத்தத்தால் மட்டுமே அர்த்தம் விளங்குவது ஒரு மார்க்கம். அவ்வாறு விளங்கும். அர்த்தத்திற்கே வாச்சியார்த்தம் என்று பெயர். அவ்வாறின்றி வார்த்தையின் இலட்சணையால் அறியப்படும் அர்த்தத்திற்கு இலட்சியார்த்தம் என்று பெயர். இலக்ஷணை அல்லது இலக்கணை என்பது ஒரு வார்த்தைக்கு அதன் சத்த மாத்திரத்தால் ஏற்படும் பொருளை விட்டுவிட்டு, அப் பொருளின் சம்பந்தத்தையுடைய வேறு பொருளை அதற்கு அர்த்தமாகக் கொள்வது. இந்த இலக்கணை மூன்று வகைப்படும். இவற்றின் விவரம் பின்னால் கூறப்படுகிறது. ஆண்டுக் கண்டுகொள்க.]

[சீவ, ஈஸ்வர, கூடஸ்த பிரம்மங்கள்]

உலகில் எங்கும் நிறைந்துள்ள ஒரு ஆகாசமே எப்படி உபாதி பேதத்தால் மஹாகாசம் என்றும், மேகா காசம் என்றும், கடாகாசம் என்றும், ஐலாகாச மென்றும் நான்கு விதங்களாய்க் கூறப்படுகின்றதோ, அப்படியே ஏகமயமாய் எங்கணும் இடையற நிறைந்து நிற்கும் பரப்பிரம்மம் ஒன்றே. பிரமம், ஈசுவரன், கூடஸ்தன், சீவன் என நான்கு சைதன்னியங்களாகத் தோன்றும்.

திருட்டாந்தத்தில்: -

1. மஹாகாசம் என்பது பிரம்மாண்டத்தின் உட்புறமெங்கும் ஏகாசமாய் நிறைந்து நிற்கும் ஆகாசமாகும்.

2. மேகாகாசம் என்பது மேகத்திற்கு இடங்கொடுத் திருப்பதும் மேகஜலத்தில் பிரதிபலித்திருப்பது மாகிய ஆகாசமா மாகும்.

3. கடாகாசம் - ஜலம் நிறைந்த ஒரு கடத்திற்கு எவ்வளவு ஆகாசம் இடங் கொடுத்திருக்கின்றதோ அவ்வளவு ஆகாசத்திற்கே கடாகாச மென்று பெயர்.

4. ஜலாகாசம் - கட ஜலத்தில் பிரதிபிம்பித்திருக்கும் ஆகாசமும், கடாகாசமும் சேர்ந்து ஜலாகாச மெனப்படும் (வேறிடங்களிலுள்ள ஜலத்தில் பிரதிபலிக்கும் ஆகாசத்திற்கும் இவ்வாறே யுணர்க.)

தாஷ்டாந்தத்தில்: -

1. பிரம்மம் - பிரம்மாண்டத்தி னுள்ளும் புறம்பும் வியாபித்திருக்கும் மகாகாசம் போல், எங்கணும் வியாபித்திருக்கும் சைதன்னியமே பிரம்மம். அதாவது சர்வ வியாபகமா யிருப்பது.

2. ஈசுவரன் - சுத்த மாயையில் பிரதிபலித்த அப்பிரம்மச் சாயையே அதாவது மாயையில் பிரதி பலித்த பிரம்மமும் மாயைக்கு அதிஷ்டானமாகிய பிரம்மமும் சேர்ந்தது. மேகத்திற்கு இடங் கொடுத்திருந்த ஆகாயத்தையும் மேக ஜலத்தில் பிரதி பலித்திருக்கும் ஆகாயத்தையும் சேர்த்து மேகாகாசம் என்பதுபோல் ஈஸ்வரன்.

[இதுவே சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் ஈசுவரன். இதுவும் வியாபக மெனினும் பிரம்மத்தை வியாபக முடையதல்ல. அதாவது பிரம்மம் எங்கும் வியாபகமா யிருப்பதுபோல் ஈசுவரனிலும் வியாபகமாகவே இருக்கிறது. ஈசுவரனோ பிரம்மத்தில் வியாபகமா யில்லை. அதினும் குறைந்த வியாபகமே ஈஸ்வரனுக்குடையது.]

3. கூடஸ்தன் - கூடஸ்தன் எனினும் சீவ சாட்சி எனினும் ஒன்றே. அந்தக் கரணம் சொச்ச பதார்த்தமான படியால், அதிலும் பிரம்மச்சாயை அதாவது பிரம்மத்தின் பிரதி பலிதம் உண்டு. அந்தக்கரணம் ஒன்றே சீவனையும் சீவ சாக்ஷியையும் தோன்றச் செய்வது. அதுவே இவற்றை அகண்டப் பிரம்மத்தினின்று வேறு பிரித்துக் காட்டுவது. அப்படி வேறு பிரித்துக் காட்டுவதிலும் வித்தியாச முண்டு. எவ்வாறெனின் அந்தக் கரணம் கூடஸ்தனுடைய சொரூபத்தில் பிரவேசிக்காமலே கூடஸ்தனைச் சேதனத்தினின்றும் (பிரம்மத்தினின்றும்) வேறு பிரித்துக் காட்டுகிறது. இதுவே கடத்திற்குள்ளிருக்கும் ஆகாயம் போன்றது. கடம் அந்த ஆகாயத்தின் சொரூபத்தில் பிரவேசிக்காமலே எங்கும் வியாபித்துள்ள ஆகாயத்தினின்றும் அதைப் பிரித்துக்காட்டுகிறது. அவ்வாறு சேதனத்தினின்று அந்தக்கரணத்தால் பிரிக்கப்பட்டது சீவசாக்ஷி. அவ்வாறு ஒன்றன் சொரூபத்தில் பிரவேசியாமல் வேறு பிரித்துக் காட்டப்பட்டதற்கு உபகிதம் என்று பெயர். ஆகவே அந்தக்கரண உபகித சேதனம் சாக்ஷி அல்லது கூடஸ்தன் என்று கூறப்படும். (இதில் அந்தக்கரணத்திற்கு உபாதி என்றும், உபாதியால் பிரிக்கப் பட்டதற்கு உபகிதம் என்றும் பெயர்.)

4. சீவன் - முன் கூறியபடி அந்தக்கரணம் அதன் சொரூபத்தில் பிரவேசித்துச் சீவனைச் சேதனத்தினின்றும் வேறாகப் பிரித்துக் காட்டுகிறது. எதைப்போலெனில், நீலக் கடிதம் என்பதைப் போல். நீலத் தன்மை கடிதத்தின் சொரூபத்தில் பிரவேசித்து, வெள்ளைக் கடிதம், கறுப்புக் கடிதம், சிவப்புக் கடிதம் முதலியவற்றினின்றும் அந்த நீலக் கடிதத்தை வேறு பிரித்துக் காட்டுகிறது. இவ்வாறு ஒன்றின் சொரூபத்தில் பிரவேசித்து வேறு பிரித்துக் காட்டப்பட்டதற்கு விசிட்டம் என்று பெயர். ஆகவே அந்தக் கரண விசிட்ட சேதனமே சீவன் எனப்படும். (இதின் நீலத்தன்மைக்கு விசேடனம் என்றும் விசேடனத்தால் பிரிக்கப்பட்டதற்கு விசிட்டம் என்றும் பெயர்.)

இவ்வாறு நான்கும் வெவ்வேறாய்த் தோன்றினும் நான்கும் சேதனமாகிய பிரம்ம சொரூபமே என்று விளங்கவது காண்க.

[இப்போது சீவன், சீவசாக்ஷி என்ற இரண்டின் வித்தியாசத்திற்கும் அந்தக்கரணமே காரணமா யிருக்கிறதென்று அறியலாகும். அந்தக்கரண மெனினும் மனமெனினும் மாயை யெனினு மொக்கும். ஆகையால் மனமொழிந்தால் சீவன், சீவ சாட்சி என்ற பேதம் ஒழியும். அதாவது சீவத்தன்மை அல்லது சீவன் என்ற நிலைமை யொழிந்து போய், சீவசாட்சி மாத்திரமே ((கூடஸ்தனே) நிலையாய் நித்தியமானதாய் நின்று விளங்கும்.]

வாச்சியார்த்த இலட்சியார்த்தங்கள்.

'தத்துவமசி' மகாவாக்கியத்தில் உள்ள தத் + துவம் + அசி என்ற மூன்று பதங்களுக்கும் வாச்சியார்த்தம் இலட்சியார்த்தம் கீழ்க்காணுமாறு: -

பதங்கள்

வாச்சி யார்த்தம்

இலட்சி யார்த்தம்

தத் (அது)

துவம் (நீ)

அசி (இருக்கின்றாய்)

ஈசுவரன்

சீவன்

இருக்கிறான்

பிரம்மம்

கூடஸ்தன்

இருக்கிறது

 

நீ அதுவாயிருக்கிறாய். அதாவது (“கூடஸ்தன் அல்லது சீவசாக்ஷியாகிய) நீ (அதுவாகிய) பிரம்மமா யிருக்கிறாய்" என்பதே இதன் பொருளாகும்.

இவற்றில் சீவனும் ஈசுவரனும் மாயா சம்பந்தம் உடையவை - ஈசுவரன் சத்துவகுண மாயை, அதாவது சுத்த மாயா சம்பந்தமுடையவன். சீவன் இரஜோகுண மாயை, அதாவது அசுத்தமாயை அல்லது அவித்தை சம்பந்த முடையவன். ஈஸ்வரன் மாயையைத் தன் வயப்படுத்தியுள்ளவன். சீவன் மாயையின் வயப்பட்டிருப்பவன். (ஆயினும் இருவரும் மாயாசம்பந்த முடையவர்களே.) கூடஸ்தனும் பிரம்மமும் மரயை யற்றவை. காய்ச்சப்பட்ட பாலில் நெய் எப்படி கலந்து ஒன்றாய்த் தோன்றுகிறதோ. அவ்வாறே சீவனும் சீவசாட்சியும் (ஆகிய வாச்சிய இலட்சியார்த்தங்கள் அவிவேகத்தால்) ஒன்றாகவே தோன்றுகின்றன. மத்தினால் கடைந்து நெய்யை வேறு பிரித்து எடுப்பதுபோல் விவேகத்தால் இலட்சியார்த்தமாகிய சீவசாட்சியே நீ யென்றறிந்து அச்சாட்சி மாத்திரமாய்ப் பிரிந்துகொள்.

இதையே அப்பர் சுவாமிகள்,

                                "விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போன்

            மறைய நின்றுளன் மாமணிச் சோதியா

      னுறவு கோனட் டுணர்வுக் கயிற்றினான்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே"

என்றருளினார்.

நாம் மாயையாகிய மனதோடு கூடி அதன் வழிப்பட்டு அஞ்ஞான நிலையிலிருப்பதால் சீவனாயிருக்கிறோம். அந்த நிலை நமது உண்மையான நிலையல்ல சாட்சி மாத்திரமாய் இருப்பதே நமது உண்மை நிலை. ஆகையால் மனோ நிக்கிரகம் செய்து அதை விட்டுப் பிரிந்து மனதின் சேட்டைகளை எதிரிட்டு நோக்கும் சாட்சியாய் நின்று விடுவோமாயின் மலரகிதமான கூடஸ்தனாகிறோம். அப்போது நமது நிஜ சொரூபத்தை யறிகிறோம். அதை யறிந்தால் நமக்குள் மறைந்து நின்ற பரமாத்ம சொரூபம் தோன்றும். தலைவனாகிய பரமாத்மாவையு மறியலாம். இதுவே மேற் கண்ட தேவாரத்தின் கருத்தாகும்.

[இம் மகா வாக்கியத்தின் பொருளைக் குற்றமற உணர்வது மிக்க அவசியமாகும். இதைத் தவறாக உணர்வதே வீண் வாதங்களுக் கிடமுண்டாவதாகும். ''நீ பிரம்மம்" என்பதால் உலகிற்கு நீயே கடவுள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாகாது மற்றென்னையெனில், "நீ அப் பிரம்மத்தின் ஓர் அம்சமே. பிரம்மத்தைப் போல் நீயும் சச்சிதானந்த இலட்சண முடையவனே. அதாவது ஒரு இனமே. ஆகையால் நாம் பிரமமே (அகம் பிரம்மம்) என்ற திடசித்தத்தோடு, அப் பதிப்பொருளில் கலந்து நான் என்ற தற்போதத்தை யடியோ டிழந்து விடுவையேல், அவ்வகண்ட சொரூபம் உன்னையுண்டு தானாக ஏகமயமாய்ப் பிரகாசிக்கும். அதாவது உன்னைத் தானாக்கிக் கொள்ளும்.  அப்போது நீ பிரமமாவை'' என்பதையே இவ் வுபதேசப் பொருளாகக் கொள்ளல் வேண்டும்.

மேற் கூறியவாறு திட சித்தங் கொள்ளாதவரையில் முடிவான முத்தி கிடைக்கா தென்றுணர வேண்டும்.

தேகமுத லபிமான மணுவு மின்றித்

            திடமாகப் பரப்பிரம நானே யென்னு

மேகமதாந் துணிவுற்றுப் பரமா னந்த

மெப்போது மிசைந்திடுவோன் சீவன் முத்தன்

சோகமுறு மகங்கார மிறையு மின்றிச்

சுத்தபர சின்மாத்ர சொரூப மாக

மோகமற நின்று மகா நந்தம் பெற்று

மோனமடைந் திடுவோனே சீவன் முத்தன்.

சின்மயமாஞ் சிவத்தினிடை சித்தம் வைத்துச்

சிவமதுவே நாசிமன்றிங் கறியா தோர்க்குச்

சின்மயமாம் பரப்பிரமர் தானே யாகிச்

சலியாம லிருப்பதுவாம் விதேக முத்தத்

தன்மையொரு காலத்துஞ் சித்தி யாது

தத்துவமாய் நவில்கின்றே னிதாக வென்றே

நின்மலமாய் ரிபுமுனிவன் விதேக முத்த

னிலைபெற்ற விலக்கணமே நிகழ்த்தி னானால்.

 (ரிபு கீதை)

தானே சிவன் சிவனை நானென்று நாடிவெறுக்

தானாகி நின்றநிலை தானன்றோ -- வானாப்

பவசலதி நீந்திவரும் பண்புடைய மாணா

சிவலோக மென்றே தெளி.

 (உபதேசமாலை -- சிவயோகம்)

சிவத்தோ மசியுண்ணி னைந்து சிவ யோகநிட்டை

சவுக்கியதா னத்தேறித் தான்.

(சித்தாந்த தரிசனம் - சிவயோக வியல்)

(சிவத்தோமசி = சிவம் + தோம் + அசி = நீ சிவமா யிருக்கிறாய்.)

சீவனே பாசம் நீங்கிய பின் சிவ மாகின்றது. பாச பந்தத்தால் சீவிப்பது கொண்டே அதற்குச் சிவனெனப் பெயர் வந்தது.

சீவனத்தால் சீவனெனல் சீலமிறந் தாலிந்தச்

சீவனே யந்தச் சிவம்

அந்த சிவநம்மை யன்றியிலை யென்றோர்த

லுந்துஞ் சிவயோக மோர்.

                                          (சித்தாந்த தரிசனம்- பாபவிமோசன வியல்)


                சிவன் வேறு சீவன்வே றென்றிரண்டாய்ச் செப்பு

மவன் சிவனை யென்றுமறி யாதான் - றவமில்லா

வுள்ளத்தார்க் கெய்துமோ வூர்க்குருவி யாகாச

மெள்ளப் பறந் தறியுமே.

                                       (சிந்தனை வெண்பா - தக்ஷணாமூர்த்தி துதி)

வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு என்னும் பேத புத்திகொண்டு தருக்க மிடுவோர் இந்த ஆராய்ச்சிக்கு அருகர்களாகார்கள்.

அதுவேநீ யாமென் றருமறைகள் சொல்லு

மெதிர்சிவனே நீயானா வென்னு - முதுசைவம்

வேறோவே றன்றோசொல் வேதியனே விண்விசும்பும்

வேறோவே றன்றோ விளம்பு.                           (சிந்தனை வெண்பா.)


வேதாந்த சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்

நாதாந்த மோன நலமே பராபரமே.                       (தாயுமானவர்)


     "இவ்வாறு கரணாதிகளோடு சம்பந்தப்பட்டு அவித்தையா சகிதமான சீவன் என்ற (வாச்சியார்த்தம்) இன்னதென்றும், அவித்தையோடு கலவாத பரிசுத்தமான ஆன்மா (இலக்கியார்த்தம்) என்பது இன்னதென்றும் தெரியாத வண்ணம் கலந்துகொண்டு இருக்கும் இக் குழப்பத்திலிருந்து நான் என்ற ஆன்மாவை, அதாவது என்னை, நான் எவ்வாறு வேறுபிரித் தறிவேன்? என்று கேட்கும் சீடனை நோக்கி ஆசான் கூறுகிறார்: -

      சற் சீடனே! உன்னை எவ்வாறு நான் பிரித்துக் காண்பது என்ற மார்க்கத்தைச் சுருக்கமா யிங்குக் கூறுகிறோம்; மனதைப் புறம் போக வெரட்டாது கவனத்தோடு கேட்டறிதி.

      இப்போது தேகமே நீ என்று கருதுகிறாய். நீயோ அழியாதவன். இத் தேகமோ ஒரு நாளைக்குப் பிணமாய் வீழ்ந்தழிந்து போவது. ஆகையால் 'இத் தேகமே நரம்' என்ற புத்தியை அடியோடு விட்டொழிதி. இத்தேகம் நீ யல்லை. இது அன்னமயகோசம். இது ஸ்தூல பஞ்ச பூதங்களின் கூட்டுறவால் உண்டானது.

      ஒரு துருத்தி தன் மூக்கால் காற்றை வெளிவிடுவது போல் உன் நாசியால் வெளிவிடப்படுகிற பிராணமய கோசமும் நீ யல்ல. இந்தப் பிராணன் சூக்கும பஞ்ச பூதங்களின் இரஜோ குண கற்பனையால் (சமஷ்டியில்) உண்டானது.

      இனி அந்தக்கரணங்களில் மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் என்ற இரண்டு கோசங்களுள. இவை மனமாதி அந்தக்கரணங்களை யன்றி வேறில்லை. இவை சூக்கும பூதங்களின் சத்துவ குணத்தில் (சமஷ்டியில்) உண்டானவை. ஆகையால் இவைகளும் நீ யல்லை.

      மீதி யிருக்கும் ஆனந்தமய கோசம் என்பது அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய தமோகுணமே யாகும். இதுவும் நீ யல்லை.

      சச்சிதானந்த மயமாய், தாரதம்மிய மின்றி சமமாய், ஸ்திரமாய் (சாக்கிராதி எந்த நிலைமையிலும் உள்ளதாய்), யாவற்றிற்கும் சாக்ஷி மாத்திரமாய், ஏகமாய், நித்திய தத்வ முடையதாய், வியாபகமாய் இருக்கின்ற ஆன்மாவே நீ யென்றறிந்து, அநித்தியமும் சடமும் துக்கமும் பொருந்திய விபரீத சுபாவங்களையுடைய பஞ்ச கோசங்களாகிய குகையை விட்டு விலகி நிற்பாய்.

      [தேகம் முதல் அவித்தை ஈறாக உள்ள தத்துவக் கூட்டங்களனைத்தும் நீ யல்ல; இவற்றிற்கு அன்னியமா யிருந்து இவற்றை யெல்லாம் எதிரிட் டறியும் சாக்ஷியே ஆன்மா வாகிய நீ என்றபடி.]

      இத் தூலதேகம் பஞ்சீகிருத பஞ்ச மகா பூதங்களினின்றும் உண்டானது. இது அழிந்து போகத் தக்கது; ஆனபடியால் அநித்தியம்; மேலும் சடம்; தன்னை யறியாதது; ஆன்மாவா லறியப்படுவது, துக்கத்திற் கிடமானது. ஆகையால் இது அநுர்த சட துக்கமானது. ஆன்மா நித்தியமானது, சித்தப் பிரகாச முடையது. துக்க மற்றது, இந்த ஸ்தூல தேகமழிந்தாலும் நாம் என்கிற ஆன்மா அழிவதில்லை. ஒருவன் இறந்தான் என்றால், தேகத்தை விட்டு நீங்கினான் என்பதையே பொருளாகக் கொள் கிறோம். இறந்தவனுடைய தேகத்தைப் பார்த் தழுவோரும் "அப்பா எங்களை விட்டுப் போய்விட்டாயே " என்று அழுவது அனுபவம். இத்தேகம் அழிந்தாலும் நாம் அழிவதில்லை. எவ்வாறெனின் சென்ற ஜன்மத்தில் தேகத்தோடிருந்து செய்த கர்மங்களின் காரணத்தாலேயே அத்தேகத்தை விட்டு மரித்த பின் இச்சன்ம மெடுத்தோம்; இனி இதையும் விட்டுப் போய் இப்போது செய்யும் கன்மங்களை யனுபவிக்க இன்னொரு ஜன்ம மெடுப்போம். இவ்வாறு எண்ணிலவாய் நாம் விட்டுப் போகும் தேகங்கள் ஒவ்வொன்றும் அழிந்துகொண்டே போக நாம் இருந்துகொண்டே யிருக்கிறோம். மேலும் என் தேகம் என்று நாம் கூறுவதாலேயே, தேகம் வேறு நாம் வேறென்றும், என் வீடு என்பதில் வீடு நமக்குச் சொந்தமான ஒரு பொருளாக விருப்பதுபோல் தேகமும் நாம் சொந்தமாகக் கருதும் ஒரு பொருளென்று தெரிகிறது. உண்மையில் நாம் அதைவிட்டுப் போய்விட்ட பிறகு தீயோ, நாயோ, கழுகோ தங்களுக்குச் சொந்த மாக்கிக் கொள்கின்றன. கடத்தைக் காண்பவன் கடமாகாது கடத்திற்கு அன்னியமான ஒரு வஸ்துவாவது போல், தேகத்தைக் காணும் நாம் தேகமல்ல. நாம் ஆன்மா. இதைப் பற்றிய ஞானமான உணர்ச்சி ஏறக்குறைய யாவர்க்குமே யுண்டெனலாம். ஆனால் அனுபவமாய்த் தேகத்தை தீங்கி நிற்கும் நிலையை யடையச் சூக்கும் அறிவு வேண்டும். பஞ்ச கோசங்களில் இத் தூல தேகம் அன்னமய கோசமானதால் இது நாமல்ல வென்றறிந்து இதை விட்டு நீங்கி நின்றால் அன்னமய கோசம் ஒழிந்ததாகும்.

      மற்றைய நான்கு கோசங்களில், பிராணமய கோசம் மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், இந்த மூன்றும் ஆன்மா அவ்வப்போது அந்தக் கரணங்கள், பிராண வாயு, இவற்றில் சிலவற்றோடு கூடி நிற்கும் நிலைமைகளாகும்.

      இவற்றில் மனமாதி அந்தக் கரணங்கள் தன்மாத்திரை பூதங்களின் சத்துவாம்ச சமஷ்டியில் உற்பத்தியானவை. இவைகளும் ஒரு அவத்தையிலிருந்தும் ஒரு அவத்தையில் இல்லாமலும் போவதால் அநித்தியமே. இவை தம்மைத் தாமறியா; இவற்றில் ஒவ்வொன்றும் தன் தொழிலை மட்டுமே செய்யு மன்றிப் பிறிதொன்றின் தொழிலைச் செய்யாது. ஒன்றை யொன்று மறியா. அறிவின் பிரகாச மின்றித் தாமே விளங்கா. இவற்றால் இவை சடமே. சதா பலவித துக்கத்தை யளித்துக்கொண்டிருப் பவைகளே. இவை ஆன்மாவா லறியப்படுகின்றன. அடக்கவும் படுகின்றன. ஆன்மாவா லறியப்படும் எதுவும் ஆன்மாவாகாது. ஆகையால் நம்மால் காணப்பட்டவை அறியப்பட்டவை யெல்லாம் நாம் அல்ல வென்றே தள்ளத் தக்கவையாகும்.

"கண்டன வல்ல வென்றே கழித்திடு மிறுதிக் கண்ணே

கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி யத்தால் * * “

 
      “உள்ளது மில்லது மாகி - முன்

னுணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாம்

தள்ளெனச் சொல்லியெ னையன் என்னைத்

தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர.

பாராதி பூதம் நீயல்ல - உன்னிப்

பாரிந் திரியம் கரணநீ யல்லை

யாரா யறிவுநீ யென்றா - னையன்

அன்பா யுரைத்தசொல் லானந்தந் தோழி - சங்கர... ")

                               (தாயுமானவர்.)

               

இந்த அந்தக்கரணம் நம்மால் நீக்கப்பட வேண்டிய வற்றி லொன்றாகும்.

 

      "அந்தக் கரண மறிந்து துறப்பார்க்குப்

      பந்த மிறந்ததென் றுந்தீபற

      பாழ்வெளி யுள்ளதென் றுந்தீபற"                         (திருவுந்தியார்)

 

மேலும் இவை என் மனம், என் புத்தி, என் சிந்தம் என்று ஆன்மாவால் அன்னியமாக விவகரிக்கப்படுவதாலேயே இவை ஆன்மாவாகா வென நன்கறியலாகும்.

இந்த அந்தக்கரணங்களில் அடங்கி யுள்ள பிராணமய மனோமய விஞ்ஞானமய கோசங்கள் போக ஆனந்தமய கோசம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. ஆனந்தமய கோசம் என்பது காரண சரீரமே யாகும். அனுபவத்தில் அது நித்திரையாகும். நித்திரையில் கருவி கரணங்களெல்லாம் செயலற்று ஒடுங்கிவிட ஆன்மா அவித்தையாகிய அந்தகாரத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. இந்த அவித்தை மூலப் பிரகிருதியின் இரஜோ குண கற்பனையாலுண்டானது. இது நாமல்ல. ஸ்தூல சூக்கும தேகங்களோடு ஆன்மா சம்பந்தப்பட்டு சாக்கிர சொப்பன அவஸ்தைகளை யனுபவிப்பது போல், இக்காரண தேகத்தோடும் சம்பந்தப்பட்டு சுழுத்தி யவஸ்தையை யனுபவிக்கிறது.

ஆகையால் ஸ்தூல சூக்கும் தேகங்களைப்போல் காரண தேகமும் நாமல்ல. அதுவும் ஆன்மாவினால் அறியப்படுவதே. ஆன்மா அதையும் எதிரிட்டறிந்து நீங்கித் தன்னை யறியும் சக்தியுடையது. அறியாமையாகிய அஞ்ஞானமே அவித்தை. அது ஆன்மாவாகாது.

“வந்தெனுடல் பொருளா......

ஐந்து புலனைம்பூதங் கரணமாதி

யடுத்தகுண மத்தனையு மல்லை யல்லை

இந்தவுட லறிவறியாமையு நீயல்லை

                                                             (தாயுமானவர்.)

                 *             "மூலவுட னீயல்ல வென்று போனால்

                 முரண்மேவு மறிவறியா மைகடா னேது

மூலவுட னீயல்ல வென்று போனால்

முரண்பிரிய மோதபிர மோத மேது

மூலவுட னீயல்ல வென்று போனால்

முரண்மூட சடசூனி யந்தா மேது

மூலவுட னீயல்ல வென்று போனால்

முரணாதிக் குயர்சாக்ஷி நீயாங் காணே"

                               (பரமானந்த தீபம்)

[* மூலவுடல் என்பது காரண சரீரம்.]

இன்னும் பிராணவாயுவும் நரமல்ல வென்றே யுணர வேண்டும். யோகம் மூர்ச்சை முதலிய சமயங்களில் பிராண வாயு இயங்காதிருந்தும் நாம் இருந்துகொண்டே யிருக்கிறோம். ஓர் வித ஆமை மாதக் கணக்காக மண்ணில் உசுவாச நிசுவாசமின்றிப் புதையுண்டு கிடக்கிறது. மேலும் இப் பிராணவாயு ஜடம். தன்னையுமறியாது. வேறொன்றையு மறியாது. நாம் வலது நாசியில் ஓடுகிறோமா இடது நாசியி லோடுகிறோமா என்பதை யுணராது. நித்திரையில் தனக் கருகிலிருக்கும் மூக்கணியை யொருவர் கவர்ந்து சென்றாலும் இது அறியாது. 'என் பிராணன்' என்று ஆன்மா இதை வேறு பிரித்தறிகிறது. இதை யியக்கி வைக்கவும் அடக்கி வைக்கவும் ஆன்மாவிற்குச் சக்தியுண்டு இப் பிராணன் சூக்கும் பூதங்களின் இரஜோகுண சமஷ்டியில் உற்பத்தியானது. இவ்வாற்றால் இந்தப் பிராணனும் நாமல்லவென்று நன்கு விளங்குகிறது.

மேற்கூறிய காரணங்களால் தேகம் கரணங்கள் பிராணன் அவத்தை முதலிய இந்தத் தத்துவக் கூட்டங்கள் அனைத்து மடங்கிய பஞ்ச கோசங்கள் ஆன்மாவாகிய நாமல்ல வென்றும் இப் பஞ்ச கோசங்களை வேறு பிரித்தறியும் ஆன்மாவாகிய சீவசாக்ஷியே நாமென்றும் அறிய வேண்டும்.

      “கோசமைந்து மொவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்க்

            குறித்தறியி லன்னியமா யிருக்கை யாலே

கோசமைந்து மொவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்க்

குறித்தறியில் விக்ஷேப மீன்ற தாகுங்

கோசமைந்து மொவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்க்

குறித்தறியில் நீயறிவா யதுநீ யல்ல

கோசமைந்து மொவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்க்

குறித்தறியு முயர்சாக்ஷி நீயாங் காணே.''

                                 (பரமானந்த தீபம்)


      "பஞ்சகோ சத்தைப் பகுத்தறிந் தோருக்கு

      நெஞ்ச மிறந்ததென் றுந்தீபற

      நிட்டைய தாகுமென் றுந்தீபற"                     (திருவுந்தியார்)

 

குரு அருளியபடிக்கே பஞ்ச கோசங்களையும் தானல்லவென்று நீக்கி அதற்கு மேற் காட்சியைக் கண்ட சீடன் ஆசானை நோக்கி,

"கபடமறியாக் குருநாதரே! தாங்களருளியபடியே ஐந்து கோசங்களையும் ஒவ்வொன்றாகக் கண்டு நீக்கி, அதற்குமேல் பார்த்தபோது, ஒன்றுமில்லாச் சூனியமாகிய வெறும் பாழே மீதியாக நிற்கின்றதன்றி வேறொன்றும் தோன்றவில்லை. மைபோன்ற அந்தகாரத்தையோ நான் ஆன்மாவென்று அனுபவிப்பேன்?" என்று வினவினான்.

குரு: -   "என் அன்பார்ந்த மகனே! சூனியத்தைக் காணும் நீ எப்படி அச் சூனியமாவாய்? உன்னாற் காணப்பட்ட ஒரு பொருள் நீ எப்படியாவாய்? முன்பு கூறப்பட்ட தசபுமான் திருட்டாந்தத்தில் பத்தாமவன் ஒன்பதுபேரை யெண்ணி யெண்ணிப் பார்த்துப் பத்தாவது ஆளைக் காணோ மென்று மருண்டபோது அவன் தன் முன் கண்ட பெருஞ் சூனியம் அவனாவானோ? ஆகான். சூனியத்தை கண்ட அவனே பத்தாமவன். அதுபோல், பஞ்ச கோசங்களையும் கண்டு நீக்கிய பின்புள்ள சூனியமாகிய பாழைக் கண்டவனே நீ. உன்னாற் காணப்பட்டவைகளில் எதுவும் நீ யாகாது. யாவற்றையும் காணும் சித்துப் பொருளாகிய ஆன்மாவே நீ.

[பஞ்ச கோசங்களையும் நீக்கிய பின் உள்ள நிலையே மனம் ஒடுங்கிய பின்புள்ளதும். மனம் ஒடுங்கிய பின் மனதை யன்னியமாகக் கண்டு ஒடுக்கிய தன்னையே நோக்காது, அணுத்வமாகிய அந்நிலையினின்று எதிரிட்டு முன்னிலைச் சுட்டாய் நோக்கும்போது தோன்றுவதே இப் பாழாகும்.

இங்கு மிக்க நுண்ணிய அறிவால் சாக்ஷிமாத்திரமாக நிற்கும் தன்னை யறிய வேண்டும். இந்த இடத்தில் கொஞ்சம் தன்னை மறந்து முன்னிலையை நோக்கின், சகலமேனும் கேவல மேனுந் தோன்றும். இப்பாழையே அவித்தை யென்றும் காரண தேகமென்றும் அறிய வேண்டும். இதைக் கடந்தாலே எமனை வெல்லலாகும், இந்த அந்தகாரமே எமன். இது கரிய நீல நிறம் போன்றதென்று ஆன்றோர் வெளியிட்டுள்ளனர். ஆதலால் தான் எமனுக்குக் கரிய நீல நிறம் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தைக் கடப்பதற்கே ஈசுவர அருள் வேண்டும். இதற்காகவே பக்தி வேண்டுமென்றது. "மாயை யெனுந் திரையை நீக்கி" என்பதும் இதையே.

                                விரிவகங் கார மாதி விகாரமற் றதனபாவ

மிருமையா மிவற்றை யெல்லா மிங்கியா துணரு மியாதை

யொருபொரு ளுணரா தந்த வுணர்வுரு வான சாட்சிப்

பொருளினை மிகவு நுண்மைப் புந்தியா லுணர்தி மைந்தா"


என்று விவேக சூடாமணியில் கூறப்பட்டிருக்கிறது.    ஆகவே "எது யாவற்றையு மறிகிறதோ, எதை வேறெந்தப் பொருளும் அறியாதோ, அதுவே சாக்ஷி மாத்திரமாயுள்ள ஆன்மா. அதுவே நான்" என்று அறியக் கிடக்கிறது.]

சித்துப் பொருளாகிய ஆன்மாவே நீ என்று கூறிய ஆசான் பின்னும் சீடனை நோக்கி, "ஞான விருப்பமுள்ள மைந்தனே! ஸ்தூலம், சூக்குமம், காரணம் என்று கூறப்பட்ட மூன்று தேகங்களும், அத் தேகங்களைப் பற்றித் தோன்றா நிற்கும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற அவஸ்தைகளும், பூத, பவிஷ்ய, வர்த்தமானம் என்ற முக்காலங்களும், ஜனனமாகிய கடலினிடத் துண்டாகும் அலைகள் போலத் தோன்றித் தோன்றி அழிந்தவைகளுக்கோர் அளவே யில்லை. மைந்தனே! கல்லால விருக்ஷத்தினடியில் எழுந்தருளி ஜனகாதியர்களுக்கு அங்கை நெல்லிபோல் ஞான நிலையைப் போதித்த பரமாசாரியராகிய தக்ஷிணா மூர்த்தியின்மேல் சத்தியமாகக் கூறுகிறேன். இவையனைத்தும் காணும்படியான சாக்ஷி நீயேயாகும்'' என்றார்.

[மேற் கூறப்பட்ட சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றவத்தைகளோடு துரியம் துரியாதீதம் என்ற இரண்டு அவத்தைகளும் கூடி மொத்தம் ஐந்தவத்தைகளாகும். ஆயினும் கடைசியில் கூறப்பட்ட துரியம் துரியா தீதம் என்ற இரண்டவத்தைகளும் யோக அப்பியாசத்தால் அடையத் தக்கவை ஆதலின், முதன் மூன்றைப் பற்றியே இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

இவற்றில் ஸ்பரிச அறிவு ஒன்றை மட்டுமே யுடைய மரம் செடியாதி தாவர உயிர்கட்கு வேறொன்றும் புலப் படுவதில்லை யாதலின் அவைகட்குச் சுழுத்தி அவத்தை   மட்டுமே யுண்டு. பரிசம் இரசம் இரண்டறிவுகள் மட்டுமே யுடைய நத்தை முதலிய உயிர்கட்கும், பரிசம், இரசம், கந்தம். ஆகிய மூன்றறிவுகளையுமுடைய எறும்பு, செல் முதலியவைகளுக்கும், பரிசம், இரசம், கந்தம், உருவம் என்ற நான்கறிவுகளையுடைய வண்டு முதலிய உயிர்கட்கும், பரிசம், இரசம், கந்தம், உருவம், சத்தம் ஆகிய ஐந்தறிவுகளையு முடைய பக்ஷிகள் மிருகங்கள் முதலியவைகட்கும் நம் போன்ற நினைவின்றி கனவு போன்ற நினைவே உளதால் சொப்பனம் சுழுத்தி இரண்டவஸ்தைகளே யுண்டு. தேவர் கட்குத் தோன்றிய நினைவு மறத்தலின்மையின் எப்போதும் சாக்கிர மொன்றே யன்றி சொப்பனமும் சுழுத்தியுமில்லை மானிடராகிய நமக்கோ நினைப்பு மறப்பு இரண்டு மிருத்தலின் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தியாகிய மூன்றவத்தைகளும் உண்டு.

தேவர்க்கு நினைப்பு மட்டுமே யன்றி மறப்பில்லை. மானிடர் தவிர ஏனையவற்றிற்கு மறப்பு மட்டுமுண்டே யொழிய நினைப்பில்லை. மானிடர்க்கு மட்டுமே நினைப்பு மறப்பு இரண்டு முண்டு. இவை இரண்டும் நீங்கிய இடமே முத்தியடையு மிடமாதலாலும், ஆண்டவன் மானிடர்க்கு மட்டுமே இவை இரண்டையு மளித்து, இரண்டையு மொழிக்கச் சந்தர்ப்பமுண்டாக்கி யிருப்பதாலும், இச்சனனமே சிறந்ததென்றும் இச் சன்மத்தில் தான் முத்தியடைய வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

சாக்கிரத்தில் விவகாரம் செய்யும்போதும், சொப்பனத்தில் விவகாரம் செய்யும் போதும் நாம் இருக்கிறோம் என்பது யாவரும் அனுபவமா யறியத்தக்க விஷயமே. அவ்வாறே சுழுத்தியிலும் நாம் உள்ளோம். "சுழுத்தியில் நாம் இல்லையே, மற்ற இரண்டிலும் தெரிந்தது போல் நித்திரையில் ஒன்றும் தெரியவில்லையே'' எனின், ஒன்றும் தெரியவில்லை யென்பதை எப்படி உணர்ந்தாய்? இந்த நித்திரை சுகமா யிருந்தது என்று கூறுகிறாயே, நீ அப்போதிருந்து அவற்றை உணர்ந்தாலன்றி அப்படிக் கூற வழி யில்லை. மேலும் சுழுத்தியின் கண் ஆன்மா இலையெனின் விழித்த பின் எங்கிருந்து வரும்? இவ்வாற்றால் சுழுத்தியிலும் அறிவு சொரூபமான நீ யிருக்கிறாய். ஆனால் அச்சமயம் ஏன் அறியவில்லை யெனின்,

கிணற்றில் விழுந்த பாத்திரத்தை எடுக்கச் சலத்தில் மூழுகியவன் அதில் பாத்திரம் உண்டு இல்லை என்பதைச் சலத்தினின்று மேலே கிளம்பி வந்த பிறகே தான் கூறக் கூடும். ஏனெனில் சலத்துக்குள்ளிருக்கும் வரையில் அவனுக்கு உசுவாசம் நிசுவாசமாகிய உதவியும் வாய் திறந்த சத்தத்தை உண்டாக்கும் சக்தியு மில்லை. அவ்வாறே சுழுத்தியில் கரணங்களின் உதவியில்லை. ஆதலால் விழித்த பின் அவற்றின் உதவி பெற்றுத்தான் சுழுத்தி அனுபவத்தைக் கூறவேண்டும். ஆகையால் மூன்றவத்தைகளிலும் சாக்ஷியாகிய ஆன்மா இருக்கிறது. நித்தியப் பிரளயமாகிய இவை எத்தனையோ முறை வந்து வந்து போவதால் இவைக்கெல்லாம் சாக்ஷியாகிய ஆன்மாவே நீ என்றறிய வேண்டும்.]

அவஸ்தைகள் முதலிய யாவற்றையும் காணும் “சாக்ஷியாகிய ஆன்மாவே நீ என்று அறி" என்று ஆசான் கூறியதைக் கேட்ட சீடன்,

"ஏழையேன் அஞ்ஞான ரனத்தை ஒழிக்கும் பரமாசாரியரே! நான் யாவற்றையும் அறிகிறேன் என்பதை உணர்ந்தேன். எதைக்கொண்டு என்னை அறிவேன்? இதை அறிவிக்கப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

குரு: -       "மைந்தனே! எல்லாவற்றையும் அறியும் நம்மை எந்த உதவிகொண்டறியலாகும் என்று நீ சிந்திக்க லாகாது. ஏனெனில் சுயப் பிரகாசமுடைய அறிவாகிய உன்னை நீ காண வேறுமொரு பிரகாசம் ஏன் வேண்டும்? வேண்டுவதில்லை. முன்பு கூறிய தசமன் திருட்டாந்தத்தில் பத்தாமவனாகத் தன்னைக் கண்ட அம்மனிதன் தன்னைக் கொண்டே தன்னைப் பத்தாமவனாகக் கண்டானே யன்றி வேறொன்றினாலா கண்டான்? வேறே பதினொன்றாவது ஆள் அவனிட மிருந்தானா? (இல்லையே என்றபடி.)

ஞான சொரூபியான உன்னைக் காண வேறொரு ஞானம் வேண்டுமென்று கூறுவது மூடத்தனமாகும். ஏனெனில் அப்படி வேண்டுமெனின் அந்த ஞானத்தைக் காண வேறு இன்னமொரு ஞானம் வெண்டும். இப்படியே இது முடிவு பெறாமற் போய்க்கொண்டே யிருக்கும். நீ வேறென்றால் அறியப்படுகிற பொருளல்ல; அறியப்படாத பொருளுமல்ல. பின்னை நீ எத்தன்மையன் எனின் வேறொரு பிரகாசத்தை உதவியாகக் கோராமல் யாவற்றையும் அறிய வல்ல சுயம்பிரகாசமுடைய வஸ்துவே நீ. ஆதலால் உன்னை நீயே உணர்ந்து உன் சுய சொரூபத்தை அனுபவித் தறியவேண்டும்.

வெல்லக்கட்டியை மாவில் சேர்த்து சுட்ட பலகாரங்க ளனைத்தையும் அவ் வெல்லக்கட்டி இனிக்கச் செய்கிறது. அப்படி யாவற்றையும் இனிக்கச் செய்த அந்த வெல்லக் கட்டிக்கு இனிப்பே சுபாவமல்லவா? ஆகையால் அதை இனிக்கச் செய்ய வேறெதன் சேர்க்கை வேண்டுவது? வேண்டுவதே யில்லை. அதுபோல் அறிவாகிய ஆன்மா தன் சுயப் பிரகாசத்தால் யாவையும். அறிகிறது. தன்னையே அறிய அதற்கு வேறு, பிரகாசம் வேண்டுவதில்லை. இத்தகைய ஆன்மாவாகிய நீயே துவம் அல்லது அகம் என்ற பதத்தின் இலட்சியார்த்தமாகும்.

[தத்வமசி மகா வாக்கியத்திலுள்ள மூன்று பதங்களில் தத் என்பதன் இலட்சியார்த்தம் பிரம்மம் என்றும் துவம் என்பதன் இலட்சியார்த்தம் கூடஸ்தன் அல்லது ஆன்மா என்றும் முன்னமே கூறப்பட்டிருக்கிறது. இவற்றில் துவம் பத இலட்சியார்த்தமான ஆன்மாவை யனுபவமா யறிய வேண்டுவது அவசிய மாதலின் சீடன் தன்னைத் தானறியும் வண்ணம் நீயாகிய ஆன்மா இதுவென்று ஆசான் அனுபவமாகக் காட்டினார்.

உலகிலுள்ள நாமரூபமுடைய ஜடப் பொருள்களை இந்திரியங்களின் உதவிகொண் டறிவது சாமானிய அறிவுடைய யாவர்க்குமே கூடும். ஸ்தூல சரீரம் கண் முன் தோன்றுவதாயினும் அதைத் தனக்கு அன்னியமாக உணரவே கொஞ்சம் சூக்கும் அறிவு வேண்டும். அதற்குமேல் கண்ணால் காணக்கூடாத சூக்கும வஸ்துக்களாகிய கரண மாதிகளை இன்னின்னவை யென்று வேறு பிரித்துத் தனக்கு அன்னியமாய்க் காண்பதெனின் அது நல்ல சூக்கும அறிவுடையோரால் மட்டுமே ஆகத்தக்க காரியம். அத்தகைய அறிவாளி பஞ்ச கோசங்களையும் தானல்ல வென்று நீக்கி நின்றபோது, அதாவது மனதை யொடுக்கி விட்டபோது, அவித்தை, காரண சரீரம், ஆவரணம் என்ற சூனியமாகிய பாழைத் தரிசிக்கிறான்.

அதற்குமேல் தன்னால் காணப்படும் அப் பாழ் தானல்ல வாதலால் அதுவும் நாமல்லவென்று தள்ளத்தக்கதே. அதைத் தள்ளியபின் தானே தன் நிஜ வடிவினை யுணர வேண்டும் என்றே ஆசான் கூறியது. இங்கு ஒன்றை முன்னிலைப்படுத்தி எதிரிட்டுக்காணும் வரையில் தன்னைக் கரண்பதில்லை.

“முன்னிலைச்சுட் டொழிதியெனப் பலகாலு நெஞ்சே நான்

மொழிந்தேனே நின்

றன்னிலையைக் காட்டாதே யென்னை யொன்றாய்ச் சூட்டாதே சரணான் போந்த

அந் நிலையே நிலை .... ..... ...... ..... “

என்று தாயுமானவர் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. ஆன்மா அறிபடு பொருளல்ல வென்றது, மற்ற கடப்படாதிகளைப் போல் தனக்கன்னியமாய், முன்னிலைப் பொருளாகக் காணப்படுவதல்ல என்று என்று விளக்கியதாகும். அவ்வாறு காணப்படும் எல்லாப் பொருள்களையும் காண்பதே ஆன்மா. ஆகையால் முன்னிலைச் சுட்டாய் எது தோன்றினும் அது தானல்லவென்றுணரவேண்டும். 'ஒரு யானை தன் துதிக் கையால் தன் நாசியைத் தொடுவது' என்பதில் எப்படி தொடுவதும் தொடப்படுவதும் என்ற பேதமின்றி உணர்ச்சி மாத்திரமா யிருக்கிறதோ, அவ்வாறே ஆன்மாவை அறிவதிலும் அறியப்படுவதொன்றும் அறிவதொன்றுமாக இரண்டில்லை. தன் நிஜசொரூபத்தைச் சாக்ஷாத்கரித் தறிய வேண்டும். அதாவது தன் சொரூபமாத்திரமாய் நின்று, அதை மட்டும் மறவாமலும், முன்னிலைச் சுட்டில்லாமலும் இருக்கும் அனுபவமே தான் ஆகும். இதை உணர மிக்க சூக்கும அறிவு வேண்டும். இந்த நீ என்பதே தொம்பதத்தின் இலட்சியார்த்தம் ஆகும்.]

மேலே கூறியபடி தொம்பதத்தின் இலட்சியார்த்தமான நீ என்பது சாக்ஷியாகிய கூடஸ்தன் என்று சீடனுக்கு விளங்கும்படிக் கூறிய ஆசான் அதன் பிறகு தொம்பதம்
தத்பதம் இரண்டும் ஐக்கியமாக வேண்டியதைப் பற்றிக் கூறுகிறார்.)

குரு: -       சற்சீடனே! நாம் மேலே கூறியபடி ஸ்தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று தேகங்களுக்கும் அன்னியனாகவும், சாக்கிர சொப்பன சுழுத்தியாகிய மூன்றவத்தைகளுக்கும் சாக்ஷி மாத்திரமாகவும் பஞ்ச கோசங்களிலிருந்தும் விடுபட்டவனாகவும் உள்ள கூடஸ்தனாகிய நீயே துவம் பதத்தின் இலட்சியார்த்தம். எப்போதும் பந்தம் என்பதே யில்லாத பிரம்மமே தத்பதத்தின் இலட்சியார்த்தம். சீவன், ஈசுவரன் இவர்களே முறையே துவம்பத தத் பதங்களின் வாச்சியார்த்தம் வாச்சியார்த்தமாகிய சீவன் ஈசுவரன் இவர்கள் ஒருவருக்கொருவர் பேதப்பட்டிருப்பவர்களாதலால். இவர்களுக்குள் அபேதமாகிய ஐக்கியம் ஒருபோதும் சித்திக்காது. இலட்சியார்த்தமாகிய கூடஸ்தன், பிரம்மம் என்ற இவர்கள் பேதமின்றி ஒரே இனமானவர்களாதலால் இவர்களுக்குள்ளேயே ஐக்கியம் கூடும்.

சீடன்: -     சுவாமிகளே! சீவ ஈசுவரர்களுக்குள் பேதம் உண்டென்பது எவ்விதமோ தயை கூர்ந்து விளக்கி யருளல் வேண்டும்.

குரு: -       குழந்தாய்! இவர்களுக்குள் பேதம் எவ்வா றுண்டெனில் கூறுதும், கேட்டி. சீவன் ஈசுவரன் என்று இவர்கள் பெயரில் பேதம் உண்டு. சீவன் பிண்டத்திலும், ஈசுவரன் அண்டத்திலுமுளதால் இடத்திலும் பேதமுண்டு. சீவன் காரிய உபாதி, ஈசுவரன் காரண உபாதி. ஆதலின் உபாதி பேதமுண்டு. உபாதி என்றால் ஒன்றின் சுயரூபத்தைக் காணவொட்டாது அதைப் பலவிதமாகத் தோற்றுவிப்பது. சீவன் வியட்டி தேகமுடையவன், ஈசுவரன் சமட்டி தேகமுடையவன். ஆதலின் உடல் பேதமுண்டு. சீவன் கிஞ்சிஞ்ஞன் அதாவது அற்ப ஞானம் உடையவன், ஈசுவரன் சர்வஞ்ஞன் அதாவது அகண்ட ஞானமுடையவன் ஆதலின் அறிவு பேதம் உண்டு. இவ்வாறு இவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் பேதமுண்டு. பாதாளமும் வானுலகும் போல் இவர்கள் மிக்க தூரம் அகன்று நிற்பவர்கள் ஆதலால் இந்தச் சீவ ஈசுவரர்களுக்குள் ஒரு போதும் ஐக்கியம் உண்டாகாது.

மகா வாக்கியம்

மகா வாக்கியம் என்பதற்கு சித்தார்த்த போதக வாக்கியம் என்றும் மொழிவர். அதாவது பிரம்மான்ம ஐக்கியப் பொருளை மட்டும் போதிக்கும் வாக்கியமாம். இந்த வாக்கியம் நான்கு வகைப்படும். 1. பிரக்ஞானம் பிரம்மம், 2. அகம் பிரம்மாஸ்மி, 3. தத்துவமஸி, 4. அய மான்மா பிரம்மம் என்ற இந்த நான்கு வாக்கியங்களும் நான்கு வேதங்   களிலுமிருந் துண்டாயின. எங்ஙனம் எனின்: -

(1) இருக்கு வேதத்தைச் சார்ந்த ஐத்ரேயம் என்ற உபநிடதத்திலுள்ளது. ''பிரக்ஞானம் பிரம்மம்'' என்ற மகாவாக்கியம். ''ஞான வடிவமாக விருப்பதே பிரம்மம்" என்பது இதன் பொருளாம்.

(2) யஜுர் வேதத்தைச் சேர்ந்த ப்ரகதாரண்ய உபநிடதத்திலுள்ளது "அகம் பிரம்மாஸ்மி” என்ற மகாவாக்கியம் ''உள்ளமே பிரம்மமாக விருக்கிறது'' என்பது இதன் பொருளாம்.

(3) சாம வேதத்தைச் சேர்ந்த சாந்தோக்கிய உபநிடதத்திலுள்ளது "தத்துவமஸி'' என்ற மகா வாக்கியம். “அது நீயாயிருக்கிறாய்" என்பது இதன் பொருள்.

(4) அதர்வண வேதத்தைச் சேர்ந்த மாண்டூக்ய உபநிடதத்திலுள்ளது "அயம் ஆன்மா பிரம்மம்" என்ற மகாவாக்கியம். "இந்த ஆன்மா பிரம்மம்'' என்பது இதன் பொருள்.

            "முந்தியவே தோற்பத்தி பிரக்ஞானம்

பிரம்மமென மொழியும் வாக்கியஞ்

சிந்தை செய்யு மிரண்டிலகம்

பிரஹ்மாஸ்மி யெனும் வாக்கியம் செப்புமூன்றில்

தத்தொமசி யெனும் வாக்கிய

நாலாவ தயமான்மா பிரஹ்மமென்ன

வந்தவிந்த வாக்கியந்தா னதர்வணத்தி

லுற்பத்தி வகுத்த வாறே"

                                                       (மகாவாக்கிய உபதேசம்)

      இந்த நான்கு மகா வாக்கியங்களில் "பிரக்ஞானம் பிரம்மம்'' என்ற முதல் மகா வாக்கியம் மனனத்தியான அப்பியாச வாக்கியம் என்றும், இரண்டாவதான 'அகம்   பிரம்மாஸ்மி" என்ற வாக்கியம் அநுபூதி, அதாவது ஸமாதியனுபவ வாக்கியம் என்றும், மூன்றாவதான "தத்துவமஸி" என்ற வாக்கியம் உபதேச வாக்கிய மென்றும், நான்காவதான "அயமாத்மா பிரம்மம்'' என்ற வாக்கியம் நிதித்தியாசன வாக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

"சுயமதுவாந் தத்வமசி யென்னும் வாக்கியம்

சொல்லுமுப தேசமகா வாக்ய மாகு

            மியலுமகம் பிரம்மாஸ்மி யென்னும் வாக்ய

                  மிலகுமநு பூதிமகா வாக்ய மாகு

            மயன்மருவாப் பிரஞ்ஞானம் பிரம வாக்யம்

                  மனனத்தி னப்பியாச வாக்ய மாகும்

            அயமான்மாப் பிரமமென வறையும் வாக்ய

                  மதற்கெல்லாஞ் சம்மதமாம் வாக்கியந் தானே"

(ரிபுகீதை)

இந்த நான்கு வாக்கியங்களில் "தத்துவமஸி" மகாவாக்கியத்திற்குள்ள ஆன்ம பரமான்ம ஐக்கியமாகிய அபேதார்த்தமே மற்ற மூன்று வாக்கியங்களிலு முள்ளதாதலாலும், இது குரு உபதேசிக்கும் வாக்கிய மாதலாலும், இந்த வாக்கியமே சிறந்த தாகும். ஆதலின் இதுவே ஈண்டு விவரிக்கப்படுகிறது.

சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதத்தில் உத்தாலகமுனிவர் தம் புதல்வனான சுவேத கேதுவுக்கு இச் சகத்தைச் சிருஷ்டிக்கின்ற ஈசுவரனைச் சுட்டிக் காட்டி, "தத்துவமஸி'' என்றார். தத் என்றால் ஈசுவரன்; துவம், என்றால் நீ; அஸி என்றால் ஆகிறாய்- "நீ அதுவாகிறாய்" என்பது அதன் வாச்சி யார்த்தம். மேற் கண்டபடி சீவனுக்கும் ஈசுவரனுக்கும் பெயர், இடம், உபாதி, உடல், அறிவு, ஆகிய இவற்றில் பேதமிருப்பதால். இவை யிரண்டிற்கும் ஐக்கியம் எங்ஙனம் கூடும்? என்று சங்கை யுண்டாகிறது.

இவ்வாறு வாச்சியார்த்தத்தில் அர்த்தம் பொருந்தாமல் விரோதம் உண்டானால், வடநூல் பண்டிதர்கள் அது விரோதமின்றி அர்த்தமாகும் வண்ணம் இலக்ஷணா வாக்கியத்தால் பொருள் கொள்வார்கள். இலக்ஷணை அல்லது இலக்ஷணா விர்த்தி என்பது, ஒரு வார்த்தையின் உச்சரிப்பால் தோன்றும் அர்த்தத்தோடு சம்பந்தப் பட்ட வேறொரு அர்த்தத்தை அறியச் செய்யும் சக்தியாகும். இச் சக்தியால், அதாவது இலக்ஷணா விருந்தியால் தோன்றும் அர்த்தம் இலக்ஷியார்த்தம் எனப்படும். அந்த இலக்ஷணை, (1) ஜஹல் லக்ஷணை, (2) அஜஹல் லக்ஷணை, (3) ஜஹதஜஹ லக்ஷணை என்று மூன்றாம். இவற்றிற்கு முறையே விட்ட இலக்ஷணை, விடாத இலக்ஷணை, விட்டு விடாத இலக்ஷணை என்று கூறுவர். இவற்றுள்,

1 - வது: - ஜஹல்லட்சனை அல்லது விட்ட இலட்சணை - வாச்சியார்த்தப் பொருளை யடியோடு விட்டு விட்டு, வாச்சியார்த்தத்தின் சம்பந்தமாகிய வேறு பொருளை உணர்த்துவது ஜஹல்லக்ஷணையாம். ஒன்றோடு சம்பந்தப்பட் டிருக்கும் வஸ்துவிற்குச் சம்பந்தி என்று பெயர்.

உதாரணம்: - "கங்காயாம் கோஷப் பிரதி வசதி" அல்லது "கங்கையிற் கோஷம்" என்றால் “கங்கையில் கிராமம் இருக்கிறது" என்று பொருள்.

இங்கு கங்கை என்ற பதத்திற்கு வாச்சியார்த்தம் பிரவாகம். பிரவாகத்தில் கிராமத்தின் இருப்பு கூடாது. ஓடும் ஆற்று ஜலத்தில் கிராமம் எவ்வாறிருக்கும்? ஆகையால் அந்தப் பிரவாகம் என்ற வாச்சியார்த்தத்தை யடியோடு விட்டு, வெள்ளத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் கரையைப் பொருளாகக் கொள்கிறோம். இவ்வாறு பொருள் கொள்வதே விட்ட இலட்சணையாம்.

2 - வது: - அஜஹல்லக்ஷணை, அல்லது விடாத இலட்சணை - வாச்சியார்த்தத்தை விடாமலே அதன் சம்பந்தி யாகிய வேறு வேறு அர்த்தத்தை கிரகிப்பது விடாத இலட்சணையாம்.

உதாரணம்: - "சோணஸ் திட்டதி, சுவேதோ கச்சதி!" அதாவது சிவப்பு நிற்கின்றது, வெள்ளை யோடுகிறது. அல்லது, "குந்தாப் பிரவசந்தி'' அதாவது ஈட்டிகள் செல்கின் றன. இவற்றில்,

முதல் உதாரணத்தில் சிவப்பு, வெள்ளை என்ற பதங்களின் வாச்சியார்த்தம் செந்திறம், வெண்ணிறங்களாம். நிறங்கள் நிற்கும் ஓடும் என்பது பொருந்தாத விஷயம். ஆகையால் அந்த வாச்சியார்த்தங்களை விடாமலே அந்த நிறங்களை யுடைய பசுக்கள் அல்லது குதிரைகள் என்று பொருள் கொள்வதே விடாத இலட்க்ஷணையாம். இங்கு    வாச்சியார்த்தை விடாதிருந்தால்தான் "சிவப்புப் பசு நிற்கிறது; வெள்ளைப் பசு ஓடுகிறது'' என்று பொருள் விளங்கும். ஆகையால் வாச்சியார்த்தத்தை விடாமலே பொருள் கொள்ள வேண்டிய தாயிற்று.

இரண்டாவது உதாரணத்தில் ஈட்டிகள் என்பதன் வாச்சியார்த்தம் ஈட்டிகள் என்ற குத்தாயுதங்கள். உயிரற்ற அவை செல்வது கூடாது. ஆதலால் வாச்சியார்த்தத்தை விடாமலே ஈட்டிகளைப் பிடித்திருக்கும். மனிதர்கள் அதாவது ஈட்டிவீரர் என்று பொருள் கொள்கிறோம். இவ்வாறு கொள்வதே விடாத இலக்கணையாம்.

3 - வது: - ஜஹதஜஹலட்சணை அல்லது விட்டு விடாத இலட்சணை. வாச்சியார்த்தத்தில் அர்த்தம் செய்து கொள்வதற்கு விரோதமாகத் தோன்றுகிற பாகத்தை விட்டு விட்டு, விரோதமல்லாத மற்ற பாகத்தைப் பொருளாகக் கொள்வது விட்டு விடாத இலக்கணையாம்.

உதாரணம்: - "ஸோயம் தேவதத்த" அதாவது "அந்த இந்த தேவத்தன்" "அந்த தேவதத்தனே இந்த தேவதத்தன்'' என்பது இதன் பொருள்.

1895-வது வருடம் காசியில் வண்டியோட்டிக் கொண்டு இருந்த தேவதத்தன் என்பவனைக் கோவிந்தன் கண்டான். பிறகு 1914 - வது வருடம் தஞ்சையில் அதே தேவதத்தனை அரசனாக இருக்கக் கண்டான். அப்போது கோவிந்தன் (சோ + அயம் - சோ = அவன் அயம் = இவன் "அந்த தேவதத்தன்தான் இந்தத் தேவதத்தன்" என்றான்.

இதில் அந்த என்பது 1895 - ம் வருடத்தையும், காசியையும், வண்டி ஓட்டும் தொழிலையும் குறிக்கிறது. இந்த என்பது 1914 வருடத்தையும், தஞ்சையையும், அரசத் தொழிலையும் குறிக்கிறது. இப்போது முன் குறித்த காலம், இடம், தொழில், முதலியவையும், இப்போது குறிக்கும் காலம், இடம் முதலியவையும் ஒன்றற்கொன்று விரோதமாக விருப்பதால் இந்த வாச்சியார்த்தங்களை விட்டு விட்டு, அவைகளை அநுசரித்திருக்கின்ற லட்சியார்த்தமான தேவதத்தனை மட்டும் விடாமல் "அந்தத் தேவதத்தனே இவன்" என்று பொருள் கொள்கிறோம். இதுவே விட்டுவிடாத இலட்சணையாம், இதற்கே பாகத்தியாக இலட்சனை என்றும் பெயர்.

 

குரு, இனி தாஷ்டாந்தத்தில் விட்டுவிடாத இலட்சணையால் பொருள் கொள்வதைப் பற்றி அறிவிக்கிறார்.

      தத்பதத்தின் வாச்சியார்த்தம் எல்லா ஸ்தூல தேசங்களையும் தனக்குத் தூலதேகமாகவும், எல்லாச் சூக்கும தேகங்களையும் தன் சூக்கும தேகமாகவும், அவ்வாறே சர்வஞ்ஞத்வாதி குணங்களையும் உடைய ஈசுவரனாகும்.

      இது போன்ற ஸ்தூல சூக்குமாதி தேகங்களையும், சாக்கிராதி அவஸ்தைகளையும் அற்பஞ்ஞத்வாதி குணங்களையுமுடைய சீவனே தொம்பதத்தின் வாச்சியார்த்தமாகும்.

      இந்த இரண்டின் வாச்சியார்த்தங்கள் பேதமுடைய வைகளாதலின் இவற்றை விட்டுவிட்டு, சீவசாக்ஷியாகிய கூடஸ்தன், சர்வசாக்ஷியாகிய பிரமம் என்ற இலட்சியார்த் தங்களை விடாமல் கூடஸ்தனாகிய நீயே ஐக்கியத்தை உணர்வதே விட்டுவிடாத இலட்சணையால் பொருள் கொள்வதாகும். இந்த இலட்கியார்த்தத்தால் சீவன் ஈசுவரன் இரண்டும் மாயையாற் கற்பிக்கப்பட்டனவென்றும், இக் கற்பனைகளில் பேதமிருப்பதால் இந்த இரண்டிற்கும் ஐக்கியம் கூடாதென்றும், இக் கற்பனைகள் யாவையும் ஒழித்த இடத்து இரண்டிலும் சாக்ஷி மாத்திரமாக விருக்கும் சுயமான சித்தில் பேதமின்மையால் ‘இதுவே அது' என்று கருத்திற் கொள்ளவேண்டும்.

(ஆன்ம பரமான்மாக்களின் அபேதத்திற்குத் திருட்டாந்தம்)

      கடஜலத்தில் தோன்றும் பிரதிபிம்ப ஆகாயமும், மேக ஜலத்தில் பிரதிபிம்பித்துத் தோன்றும் ஆகாயமும் இரண்டும் கற்பிதங்களாதலின் பொய்யேயாகும். ஆனால் கடாகாசமும் மகாகாசமும் இரண்டும் எப்போதும் பேதமின்றி ஏகமேயாகும். அகண்ட ஆகாயத்திலிருந்து கடத்தால் பிரிக்கப்பட்ட ஆகாயமும், கடத்திற்கு இடங்கொடுத்திருக்கும் ஆகாயமும் சேர்ந்து கடாகாயம். வெளியாகாயம் அகண்ட ஆகாயம். இங்கு அகண்ட ஆகாயம் ஒன்றே என்றும் உள்ளது. கடஆகாயம் அகண்டாகாயத்தின் ஓர் பாகமாக எப்போதுமே யிருந்து கொண்டிருக்கிறது. இடையில் கடம் பிரவேசித்து அகண்டாகாயத் தினின்றும் அதை வேறு பிரித்துக் (கடாகாயம் என்று) காட்டுகிறதே யன்றி, அது உண்மையில் மகாகாயத்தோடு ஏகமாய் எப்போது மிருப்பதே என்பதை யூகித் துணரவேண்டும்.

      சீடனே! அதுபோல் சர்வ வியாபகமான பிரம்மமும் சீவசாக்ஷியும் எப்போதும் ஏகமேயாகும். அவற்றில் பேதமே யில்லை. இந்த ஐக்கியம் திடமாகச் சித்தித்தற் பொருட்டு “சிவோகம்" பாவனை செய். அதாவது "சிவமே நான் - நானே சிவம்" என்று சர்வகாலமும் சிந்தனை செய். இதுவே பிரம்மா நுபூதியில் இருப்பதாகும்.

"அகண்டவறி வானபர சிவமே நானென்

றனவரத மிடையறவே செய்யுந் தியானம்

            புகன்ற உபா சனையாகு மதனா லுண்மை

                  பொருந்தியநற் புந்தியினாற் பரசி வத்தை

            நிகழ்ந்திடவே யறிந் திடலா மற்றொன் றாலு

                  நிருமலமா யறியவொணா தாத லாலோ

            பகர்ந்தகுரு வசனத்தாற் பரசி வத்தைப்

                  பக்தியுட னென்றுமுபா சிக்க வேண்டும்.

            சின்மயமாம் சிவத்தினிடை சித்தம் வைத்துச்

                  சிவமதுவே நாமென்றிங் கறியா தோர்க்குச்

            சன்மயமாம் பரப்பிரமந் தானே யாகிச்

                  கலியாம லிருப்பதுவாம் விதேக முத்தத்

            தன்மையொரு காலத்துஞ் சித்தியாது

                  தத்துவமாய் நவில்கின்றே னிதாக வென்றே

            சின்மலமாய் ரிபுமுனிவன் விதேக முத்த

                  னிலைபெற்ற விலக்கணமே நிகழ்த்தினானால்"      (ரிபுகீதை)

 

சீடன் அனுபவம்

ஆசான் அருளிய வண்ணம் சீடன் தத்துவ நெறி வழாது பஞ்சகோசங்களையும் தானல்லவென்று கழித்து, அதற்கு மேலுள்ள சூனியமான பாழையுங் கடந்து, அங்கு அணு ரூபமாகவுள்ள சாக்ஷியாகிய கூடஸ்தனே தான் என்னும் நிலைமையையும் விட்டு, அதற்குமேல் அக் கூடஸ்தனே பிரம்மம் என்னும் அகண்டாகார விருத்தி அனுபவத்தையும்    நழுவவிட்டுப் பரிபூரணமான பிரம்மானுபவ நிலையை யடைந்தான்.

["ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டு பன்னும் ஞானமாகும்'' என்று நமது மெய்ஞ்ஞான வள்ளலாகிய தாயுமானவர் அருளிய வண்ணம் துவித நிலையிலிருந்தே அனுபவம் தொடங்குகிறது. தேகமுதல் அந்தக்கரணங்கள் வரையிலுள்ள ஒவ்வொரு தத்துவங்களையும் சாக்கிர சொப்பன சுழுத்தியாதி அவஸ்தா ரூபமாகவோ, அன்னமயாதி பஞ்சகோச ரூபமாகவோ ஒவ்வொன்றாகக் கண்டு நமக்கு முன்னிலையாகத் தோன்றுவனவும், நம்மாலறியப்படுவனவும், ஓர் காலத்திலிருந்து. ஓர் காலத்திலில்லாமற் போகும். அநித்தியப் பொருள்களாயுள்ளனவுமாகிய இவை யாவும் நாமல்ல - வென்று கழித்து, இவ்வாறே இறுதியிலுள்ள சூனியத்தையும் கழிக்கு மட்டும் துவித பாவ மிருக்கிறது. இதற்குத் துவித விருத்தி என்று பெயர்.

இதற்குமேல் உள்ளது சாக்ஷி ரூபமாகிய கூடஸ்தன். அது அணுரூப முடையதென்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது அதிசூக்கும். ரூபமுடையது. இக்கூடஸ்தனாகிய சாக்ஷியை நாமென் றனுபவிக்கும் நிலைக்குச் சாக்ஷி விருத்தி யென்று பெயர். இந்த இரண்டு விருத்திகளும் தள்ளத் தக்கவைகளேயாம். "துவைத விருத்திதான் அஞ்ஞான நிலை; பாசத்தில் பந்தப்படுத்துவது. சாக்ஷி மாத்திரமா யிருத்தல் உண்மையானதும் அஞ்ஞான மற்றதுமான நிலைதானே, அதனை யேன் ஒழிக்கவேண்டும்?'என்று கேள்வி யுண்டாகலாகும். சாக்ஷியைத் தானெனல் பந்தமல்லவெனினும் அங்கும் "நான்" என்பதுண்டு. ஆதலின் அது அத்வைத ஞான சாதனமாகாது. ஆதலின் அதையும் விடவேண்டியதே.

இக் காட்சியைப் பார்த்தே “தத்துவமஸி” மகாவாக்கியம் கூறப்பட்டதாதலால், இங்குதான் 'சிவோகம்’   பாவனை அல்லது 'அகம் பிரம்மாஸ்மி' அனுபவம் தொடங்குகிறது. இதுவே தானற்ற - அத்துவித அகண்டாகார ஞானத்திற்குச் சாதனமானது. ஆதலின் இதற்கு அகண்டாகார விருத்தி என்று பெயர். இதையே நிலையாக அப்பியசித்துத் தானற்ற அத்துவித சாக்ஷாத்காரமான பிரம்மானுபவ நிலையை யடையவேண்டும். இந்த அனுபவ முதிர்ச்சியிலும் நாம் பிரம்ம சொரூபமாக விருக்கிறோம்'என்ற கிஞ்சித் நினைவு உண்டு. அதற்குத் தற்போதம் (தான் என்ற உணர்ச்சி) என்று பெயர். இக் கிஞ்சித் இனைப்பும்                                       நித்திரையி லிருப்பவன் கைப்பொருள் நழுவுவது போல் நழுவி விட வேண்டும். இது ஒழியுமட்டும் உள்ளது உண்மை நிலையாகாது. இது ஒழிந்த பின்புள்ளதே சாக்ஷாத்கார நிலையாகும். இதுவே தானற்ற அத்துவித அகண்ட சாக்ஷாத்கார அனுபவம் என்பது. தற்போதம் ஒழிந்த பின்பே, பேரின்பம் ஜனிப்பதால் தான் அது ‘அதீத நிலை' என்றும் கண்டவர் விண்டதில்லை' என்றும், 'காணாமற் காணும் காட்சி' என்றும், 'தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே' என்றும், கூறப்பட்டிருக்கிறது.

   மேற்சொன்ன படி துவித விருத்தி, சாக்ஷி விர்த்தி   இரண்டையும் நீக்கி அகண்டாகார விருத்தியையே நிலையாயப்பியசிக்க வேண்டுமென்பதற்கு: -


                                தேகமுத னானென்ன றுவித விர்த்தி

                  திகழ் சாட்சி நானென்னல் சாக்ஷிவிர்த்தி

            யேக்பர நானென்ன லகண்ட விர்த்தி

                  யிம்மூன்று விருத்திகளி லிரண்டைத் தள்ளி

            யாகுமகண் டாகார விருத்தி தன்னை

                  யனவரத மாதரவா யப்பியா சித்துச்

            சோகமுறுஞ் சித்தவிகற் பங்க டீர்த்துச்

       சொன்னவகண் டேகரச சொரூப மாவாய்''

                                                                   (ரிபுகீதை)
‘நான்' என்பது அற்ற இடமே. அந்நிலை என்பதற்கு


            "நினைத்துணை யன்றியே யில்லைநா னற்றபின்

       பினைத்துணை காணேனென் றுந்தீபற

            பெரிய மௌனமீ துந்தீபற"                        (சொரூப உந்தியார்)

 

"நான்" என்ற நினைவே தற்போதம். நானென்பதும் அது என்பதும் ஞானமயம் என்பதுமாகிய திரிபுடிகளும், நாம் அதுவா யிருக்கிறோம் என்ற உணர்வும், ஆகிய யாவு மிறந்த விடமாதலின் அது இன்னபடி யென்று கூறொணாத கிலை என்பதற்கு,

“நானோ வதுவோ வதுநானோ நானதுவோ

ஞானோ தயமோநா தாந்தமோ – மோனமோ

சுத்தமோ சூனியமோ தோற்றுஞ் சுபாவநிலை

வித்தனையு மல்ல வாமே.”                       (சொரூப சாரம்)

 

ஆன்ம சொரூப மாத்திரமாகிப் பின் அதையுந் தள்ளி அடைய வேண்டிய முடிவான நிலை வாக்கு மனாதிதமானது என்பதற்கு,

"அன்னதையுந் தன்ளியபின் பிரமமாத்ர

மாயிடுவாய் மற்றதையுந் தள்ளியிங்கு

சொன்னவெலா மிழந்துவெளி தாகநிற்பாய்

சொன்னதையுந் தள்ளிமிக வெளிதாய் நிற்பாய்

பின்னுளமே முதலியவோ ருபாதியின்றிப்

பேசவொணாச் சூனியமா நிலையினிற்பா

பின்னவித சூனியமு மிழந்தபின்ன

ரெவ்வடிவோ வவ்வடிவே யாகிநிற்பாய்.

 

நிற்பதெனுந் தன்மையுமே விழந்தபின்னர்

நீநீயா யிருக்கின்ற சுபாவந்தன்னைச்

சொற்பமுமே வாக்காலு மனதினாலுஞ்

சொல்லவொணா தெண்ணவொணா தாதலாலே

தற்பரமாஞ் சகசநிலை சார்ந்த பின்னர்

தான்றானே தானாகத் தனித்திருப்பா

யற்பமுமே விகற்பமிலா வவ்விருப்பை

யறைந்திடவு நினைந்திடவு மார்தான் வல்லோர்''    (ரிபுகீதை)


       * “வாய்ந்த வுபசாந்த வாதனை யுள்ளப்போ

  யேய்ந்த சிவமாத லின் சிவா னந்தத்துத்

  தோய்ந்தறன் மோனச் சுவானு பவத்தோடே

  யாய்ந்ததிற் றீர்க்கை யானதீ ரைந்துமே"                      (திருமூலர்)

 

*      வாதனை யுள்ளப்போய் வாதனையடங்கச் சென்று.  (வாதனை = முன் நினைப்பு)

சிவானந்தத்தில் தோய்த்து = சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி அறல் = தற்போதம் ஒழிதல், அதாவது தானென்பது இல்லாமற் போதல்.

     தீர்க்கையானது ஈரைந்தும் (ஏ- அசை) = ஈரைந்தும் அதாவது பத்தும் ஒழிக்கத் தக்கன.

ஈரைந்தும் = (1) ஆணவ மொழிதல். (2) தன்னை யுணர்தல். (3) அதனையு மொழிதல். 4) சாக்கராதீதம். (5) வியாப்தம். (6) உபசாந்தம். (7) சிவமாதல். (8) சிவானந்தத்திற் கலந்து தானற்று நிற்றல். (9) மோன சுகானுபவம். (10) அதனையும் விட்டொழிதல் ஆகிய இவை பத்தும்.

 

ஞா துரு, ஞான, ஞேயங்களற்ற இடம் என்பதற்கு,


       "தானான தன்மயமே யல்லா லொன்றைத்

            *     *     *     *     *

       ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற

            ஞா துருவு நழுவாம னழுவி நிற்கும்

     ஆனாலு மிதன்பெருமை யெவர்க்கார் சொல்வா

            ரதுவானா லதுவாவ ரதுவே சொல்லும்"            (தாயுமானவர்)

 

    மேலே கூறியபடி காண்பான் காட்சியாதி திரிபுடி இரகிதமான பிரம்மானுபவ நிலையை யடைந்த சீடன் அநுபூதி ரூபமான பிரம்மானந்த வெள்ளத்திற் படிந்து, தேகம் இந்திரியம் முதலிய அனைத்தும் ஒழிந்து சித்து ரூபமாகி, மனம் பரிபூரண நிலை யடைந்து சற்குருவும் பார்த்தருள நனவிற் சுழுத்தியாகிய சமாதி நிலையை யடைந்தான்.

[நனவிற் சுழுத்தி என்பதே "தூங்காமற் தூங்கல்” என்பதாம். சாதாரண சுழுத்தி அல்லது நித்திரையில் இந்திரியங்கள் அனைத்தும் தமது காரணமாகிய அஞ்ஞானத்தில் ஒடுங்கிவிடுகின்றன. அவ்வாறே மனமும் காரண சரீரமாகிய அஞ்ஞான இருளில் மூழ்கிவிடுகிறது. இக் கருவிகள் யாவும் ஒடுங்கிவிடவே ஆன்மா தொழிலின்றி நித்திரையின் சுகத்தை அனுபவிக்கிறது. இந்த அஞ்ஞானத் தூக்கம் ஆன்மா தன்னை மறந்தவிடத் துண்டாகின்றது.

ஆன்மா தன்னை மறவாமல் மனதின் சத்துவ சொரூப உதவிகொண்டு மேல் கண்ட கருவி கரணங்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் கண்டு தானல்லவென்று கழித்து மனோலய மடைந்து, அறிவு மயமான தன் நிஜசொரூபத்தை உணர்ந்து, அருளை முன்னிட்டுத் தான் அதுவாகி நான் என்ற தற்போதமாகிய அகங்காரம் அற்றவிடத்தில் தொழிலற்றுச் சிந்தனையற்றுப் பேரின்பமாகிய ஆனந்த நித்திரை அடைகின்றது. இதையே பட்டினத்தடிகள் "ஆனந்த நித்திரை தங்குகின்ற வனந்தனிலே யென்றிருப்பேன். அத்தனே கயிலாயத்தனே" என்றருளினார். தாயுமான சுவாமிகள்,

      "ஆங்கார மற்றுன் னறிவான வன்பருக்கே

தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே"             என்றருளினார்கள்.]

 

சீடன் நெடுநேரம் அவ்வாறு சமாதி அனுபவத்தில் இருந்து பகிர்முகத்திற்கு வந்தபின் மெய்ஞ்ஞான சொரூபியாகிய தேசிகனைக் கண்டு, பக்தி மேலிட்டுக் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொழிய, அவரது பாதார விந்தங்களிற் பணிந்து நின்று அஞ்சலியஸ்தனாகிப் பின்வருமாறு கூறினான்.

     "அடியேனைப் பல ஜன்மங்களாகத் தொடர்ந்திருந்த அஞ்ஞானத்தை ஒழித்து ஞான உபதேசம் செய்தருள அருளே திருமேனியாக அவதரித்த என் மெய்ஞ்ஞான                                               தேசிகோத்தமரே! தங்களைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன். அடியேன் கடைத்தேறும் வண்ணம் எனக்கு நித்தியா னந்தப் பேறாகிய மோட்ச வீட்டை அளித்த இந்த இணை யற்ற பேருபகாரத்திற்குச் சிறியேனாகிய நாயேன் செய் யத்தக்க கைம்மாறு யாதோ அறிகிலேனே'' என்றான்.

சீடன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஆசான் சந்தோஷமடைந்து, அவனை அருகில் வாவென்று அன்போ டழைத்துச் சமீபத்தில் இருத்திக்கொண்டு,

"மகனே! ஞான அனுபவத்திற்கு இடையூறு செய்யும் பிரதிபந்தங்கள் மூன்றும் உன்னைத் தொடர வொட்டாமற் செய்து மெய்ஞ்ஞான அனுபவத்தில் நிலைத்திருப்பாயாயின் அதுவே நீ நமக்குச் செய்யும் பிரதி யுபகாரமாகும்" என்றருளினர்.

இதைக் கேட்ட சீடன் வியப்பும் அச்சமு மடைந்து ஆசாரியரை நோக்கி, ''என் அருட் குருவே! கூடல் தன் பிரம்மம் என்ற துவித கற்பனை ஒழிந்து, அத்துவிதமாய், ஏகமாய், எங்கும் பரிபூரணமாய் அறிந்து தெளிந்த ஞான அனுபவம்கூடப் பிறகு நீங்கிவிடுமோ?'' என்று வினவினான்.

ஞானகுரு: - "மைந்தனே! எல்லாம் தன் மயமாகவே பிரம்மானுபவம் சாத்திர விசாரணையாலும் குருவின் உபதேசத்தாலும் உதிக்கும். ஆயினும் பிரதிபந்தங்களுண்டாயின் அந்த அனுபவம் நிலையாகத் திடப்பாடது" என்றனர்.

சீடன்: -     "சுவாமிகளே! அப் பிரதிபந்தங்கள் எவை யென்றும், அவைகளை ஒழிக்கும் மார்க்கம் எது வென்றும் கடாட்சித்து அடியேனை ஈடேற்றி யருளப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

ஆசிரியர்: -  குழந்தாய்! என்ன தடைகளிருக்கின்றன வெனில், அஞ்ஞானம் சந்தேகம், விபரீதம் என்று மூன்று தடைகளிருக்கின்றன. ஞானம் கைக்கு வந்தும் இவை ஏன் உண்டாகவேண்டுமெனில், எண்ணிக்கை யில்லாத பல ஜன்மங்களாக இருந்துவந்த பழக்கத்தாலே இம் மூன்று பிரதிபந்தங்களும் அடிக்கடி வரும். அப்படி வந்தால் பிரம்மான்ம ஐக்கிய ஞானத்தால் அடைவேண்டிய பலன் கை கூடாமற் போம். இனி இவற்றை ஒழிக்கவேண்டிய மார்க்கம் எதுவெனின், வைராக்கியத்தோடு நின்று கேட்டல், சிந்தித்தல், தெளிதல் அதாவது சிரவணம், நிதித்தியாசனம் என்பவற்றால் அவற்றை ஒழிக்கவேண்டும்.

அக்கினி எதையும் தகிக்கும் சுபாவமுடைய தெனினும் மணி மந்திர ஒளஷதங்களால் அடக்கப்படுமாயின் எதையும் எரிக்கச் சக்தியற்றதாகும். அதுபோல் அஞ்ஞான சந்தேக விபரீதங்களால் தடை செய்யப்பட்ட ஞானாக்கியானது அனாதி காலந் தொடுத்து உளதாகிய பந்தத்தை அழிக்காது. ஆதலின் வைராக்கியத்தோடு சிரவணமனன நிதித்தியாசனங்களால் அத் தடைகளை ஒழித்தல் வேண்டும்.

இவற்றில் சிரவணத்தால் அஞ்ஞானமும், மனனத்தால் சந்தேகமும், நிதித்தியாசனத்தால் விபரீதமும் நீங்கும்.

பிரதிபந்தங்களின் சொரூபம்.


  இம்மூன்று பிரதிபந்தங்களில்,

 

1.     அஞ்ஞானம் என்பது "சாட்சியாகிய கூடஸ்தனே நாம். ஈாம் பிரம்ம சொரூபத்தின் அம்சம். ஆகையால் நாம் பிரம்மமே” என்பதை விட்டு நாம் பிரமமல்ல என்று கருதச் செய்வது.

 

2.     சந்தேகம் என்பது ஆசாரியர் “தத்துவமஸீ" மகாவாக்கிய உபதேசத்தால் “நீ பிம்மமாக இருக்கின்றாய்” என்று அருளியிருந்தும் அதில் திட நம்பிக்கை வையாமல் நாம் பிரம்மமோ அல்லவோ, என்று சந்தேகங்கொண்டு மயங்குதல்.

 

3.     விபரீதம் என்பது "ஜகம் பொய், பிரம்மம் ஒன்றுமே சத்தியம், நாம் அப் பிரம்மமே'' என்று திடன் கொள்வதைவிட்டு ''ஜகம் மெய், நாம் பிறப் பிறப்புடைய சீவன்'' என்று உள்ளத்தில் மயக்கங் கொள்ளுதல்.

 

சிரவணாதிகளின் தன்மை.

 

1.     சிரவணம் என்பது பிரம்மான்ம ஐக்கியத்தைக் கூறும் வேதவாக்கியத்தின் தாற்பரியத்தைக் குருமுகமாக விசாரித்தறிதல்.

 

2.     மனனம் என்பது சிரவணத்தால் விசாரித்து, உணர்ந்த பொருளைப் புத்தியால் சிந்தித்தல்.

 

3.     நிதித்தியாசனம் என்பது இவ்விரண்டினாலும் துணிந்த பிரம்மானுபவத்தில் சித்தம் அசைவற நிலைத்து நிற்கச் செய்தல்.

 

இச்சிரவணாதி மூன்றையும் வைராக்யத்தோடு விடாது அநுஷ்டித்து வருவாயாயின் பிரதி பந்த ரகிதமான நித்திய முத்திப் பேற்றையடைவாய்.

 

["பிரமமல நானென்கை யஞ்ஞான நானப்

பிரமமோ வலனோ வென்றிடலையஞ் சுருதி

      வருமினிய யுத்திகளா னான் பரமா யினுமுன்

வளர்ஜீவ பாவமுண்டென் குதல் விபரீ தந்தான்

றருமுறையி லஞ்ஞானா திகட்குமுர ணாகுஞ்

சவணமொடு மன்னநிதித் தியாசனங்க ளன்றே.'']     (வேதாந்த சூடாமணி)

 

ஒருவன் சாத்திர விசாரணை செய்து பரோக்ஷஞானம் பெற்றுப் பிறகு குருவுபதேசத்தால் ஐச்கிய நிலையுணர்ந்து அப்பியாசித்துத் தன்னையறிந்த பிறகே ஞானம் பெறுகிறான். அப்படிப் பெற்ற பின்னும் இத்தடைகள் என் வரும் எனின்: -

 

எண்ணிறந்த காலங்களாக இந்த ஆன்மா " நாம் சீவன், நாம் பாவபுண்ணியங்களாகிய கர்மங்களைச் செய்கிறோம், அதற்குத் தக்க பலனையனுபவிக்க எழுவகைத் தோற்றங்களாகிய சிருஷ்டியில் மாறி மாறிப் பிறந்திறந்துழன்று கொண்டிருக்கிறோம்'' என்று எண்ணியிருக்கிறது. நாம் கடவுளின் அம்சம் என்பதையேயடியோடு மறந்து கடவுளைத் தனக்கு அன்னியமாக வேறொரு இரண்டாவது பொருளாக எண்ணியிருக்கிறது. இப்பிரிவினை மயக்கத்தில் இது எவ்வளவு தூரம் ஆழ்ந்துவிட் டிருக்கிறதெனில்,'நம்மை விடக் கடவுள் என்று வேறொன்று கூட இருக்கிறதா?'' என்று ஐயப்படக் கூடியதும! “சே கடவுள் என்பது ஒன்று இல்லவேயில்லை'' என்று தீர்மானித்துக் கொள்ளக்கூடியதுமான இவ்வளவு தூரம் ஆழ்ந்து விட்டிருக்கிறது.

 

ஆகையால் இப்போது ஏககாலத்தில் "நாம் சீவனல்ல. சீவசாக்ஷி. நாம் பிரம்ம சொரூபம். பிரமத்தை யன்றி வேறாக நான் என்ற ஒரு நிலையிருப்பதாகத் தோற்றுவதும் பொய். நான் என்பதில்லை. எங்கும் நிறைந்த பிரம்ம சொரூபம் ஒன்றே சத்தியமாக என்று முள்ளது. நாம் அதுவாகி அந்த நிலையில் இருப்பதே முத்தி" என்று சுலபத்தில் நம்பிவிடாது. ஏனெனில் இடையிடையே அப்பழைய வாசனை வரும். அதுவே மேல்கண்ட
'அஞ்ஞான சந்தேக விபரீதங்கள்' என்பன.

 அப்பழைய வாசனையே மறுபடி பலப்பட்டு நிலைத்து விடாமலிருப்பதற்காக ஜாக்கிரதை யெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜாக்கிரதையே ‘சிரவண மனன நிதித்தியாசனங்கள்' என்பவை. இவற்றில் சிரத்தையை நாட்டியிருக்க யிருக்க அப்பழைய வாசனையடியோடு போம். இதுகாறும் நாம் பிரம்ம மென்பதை மறந்து சீவனென்று எண்ணி யிருந்தது போல், இப்போது நாம் சீவனென்ற நினைப்பேயடியோடு மறந்துபோய் நாம் பிரம்மம்" என்ற நினைப்பே நிலைத்துவிடும்.

 

அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் என்பவைகளுக்கு முறையே சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பவை விரோதிகளாகும்.

 

ஜன்மாந்தர வாசனையால் தேகம் தோன்றிக் கொண்டிருப்பதால், தான் பிரம்மம் அதாவது சித்து என்பதை மறக்க நேரிடுகிறது. இதுவே அஞ்ஞானம். சாத்திர விசாரணை செய்வதாலும் ஒருவர் கூறக் கேட்டதாலும் தான் சீவனல்ல சித்தேயென்று உணர்கிறோம். இதுவே சிரவணம்.

 

சிரவணம் செய்துகொண்டிருக்கும் போதும் தேகாதி சடங்கள் அடிக்கடி தோன்றுவதால், நாம் சித்தோ அல்லவோ என்ற கலவர முண்டாகிறது. இதுவே ஐயம். ஒரு முறை கண்டறிந்த அச்சித்தே நாம் (‘சிவோகம்' அல்லது ‘அகம்பிரம்மாஸ்மி') என்று அடிக்கடி சிந்திப்பதால் அந்த ஐயம் நீங்கும். இதுவே மனனம்.

 

மனனம் செய்தபடி சித்தே தானாயினும், பிரபஞ்சாதிகள் தோன்றிக் கொண்டிருக்கக் காண்டலால் "நாம் ஏகமாகிய பிரம்ம மாயின் இவையாவும் என் தோன்றுகின்றன' என்ற கலக்க முண்டாவதே விபரீதம். ''நாம் சித்தாகிய பிரம்மமே, இங்கு நானாவிதங்களாகத் தோன்றும் யாவும் நாமே; நம்மையன்றி யவையில்லை'' என்று யாவும் தானாக விளங்குவதை யனுபவமாகக் கண்டு தெளிதலே நிதித்தியாசனமாம். சாத்திர ஆராய்ச்சியாலும் விசாரணையாலும் உதித்த ஞானம் தீபம் போன்றது. தீபம் பிரகாசம் பொருந்தியதாயினும் காற்றினால் அலைப்புண்டால் அது பொருள்களைச் சரியாக விளங்கச்செய்யாது. அதுபோல நான் பிரம்மமோ அல்லவோ, முடிவான அனுபவம் ஏகமோ துவைதமோ" என்பது முதலான சந்தேகக்காற்று வீசினால் ஞானமாகிய தீபம் தானளிக்க வேண்டிய பயனைச் சரியாக அளிக்காது. ஆகையால் மேற்கண்டபடி மனனம் செய்வதாகிய திரையால் அத்தீபம் அலையாதபடி காக்கப்படவேண்டும். தீபம் பூரணசோதி வீசிப்பிரகாசிக்கச் செய்யத் தூண்டுகோல் வேண்டு மல்லவா; அது போன்றதே இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தில் நிலைத்து நிற்பதாகிய நிதித்தியாசனமாகும்.]

 

சாத்திர விசாரணை செய்து குரு உபதேசம் பெற்று ஞானமடைந்த பின்னும் சிரவண மனனாதிகளைச் செய்து கொண் டிருக்க வேண்டு மென்றால், எப்போதுமே இச்சந்தேகங்கள் வந்து கொண் டிருக்குமோ? நாம் எப்போதுமே சிரவணாதிகளைச் செய்து கொண்டிருக்க வேண்டுமோ?'' என்று ஒரு சந்தேகம் உதிப்பது சுபாவம். ஆகையால், சீடன்' சுவாமி! இவ்வாறு சிசுவண மனனாதிகளை யெப்போதும் செய்துகொண்டே யிருந்தால் முடிவான நிலையை யெப்போதுதா னடைவதோ? தயை புரிந்து. இக்கலக்கத்தை நீக்கி யருளல் வேண்டும்'' என்றான்.

 

ஆசாரியர்: - அன்புள்ள மகனே! அத்தகைய கலக்கம் உனக்கு வேண் டாம். எப்போதுமே சிரவணாதிகளைச் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமின்று எதுவரையில் அந்தக் கரணமும், அதன் விருத்தி ரூபமான ஞானமும் உன்னிடம் இருக்குமோ, அது வரையிற்றான் சிரவணாதிகள் வேண்டும். அதற்கப்பால் ஒரு தொழிலும் வேண்டுவதில்லை. எப்போதும் களங்கமற்ற ஆகாயம் போல் ஞேய வஸ்துவாகிய பிரம்ம சொரூப மாத்திரமாகிய நிலையையடைந்த ஜீவன் முத்தர்கள், பிறகு (பிராரப்த போகம் புசிந்தொழிந்தபின்) விதேகமுத்தி (தேகமில்லா மோக்ஷம்) பெற்று என்று மழிவின்றி அப்பிரம்ம சொரூபமாகவே யிருப்பார்கள்

                  .

ஞாதுரு, ஞான, ஞேயம் எனினும், காண்பான், காக்ஷி, காக்ஷிப்பொருள் எனினும் ஒன்றே இவற்றிற்குத் திரிபுடி என்று பெயர். ஆன்மாவே காண்பான், பிரம்மமே காக்ஷிப்பொருள், (நாம் பிரம்மமா யிருக்கிறோம் என்று) இவையிரண்டிற்கு முள்ள சம்பந்தமே காக்ஷி. இக் காட்சியையே மேல் ஞானம் என்று கூறியது. இந்த நூலாசிரியரே பின்னாலுள்ள தத்துவ விளக்கப்படலத்தில் ('உன் முகம்போற் கண்ணாடிக் குள்ளொரு முகம் கண்டாற்போல்' என்று தொடங்கும் கலியில்) ஞானம் இன்னதென்று விரித்துக் கூறுகிறார். ஆண்டு அறிக.

 

மேற்கண்ட விவகாரத்தில் நான் என்ற நினைப்பே ஞா துருவும், நான் பிரம்மமாக விருக்கிறேன் என்ற நினைப்பே ஞானமுமாகும். நான் என்ற தற்போதமும், நான் பிரமமாக விருக்கிறேன் என்ற வாசனையும் அடியோடொழிந்து, நினைப்பு மறைப்பற்று ஏகப்பிரம்ம சொரூபமாக நின்றுவிடுவதே ஞேய மாத்திரமாய் நிற்பதாகும். இதுவே முடிவான நிலையாகும். இதுவே சிந்தனையற்று, நினைந்ததுமற்று, நினையாமையு மற்று, நானென்பதற்று, யாவுமற்றுத் தன்னந்தனியே நிற்குமிடம். இதுவே பிறப்பற்றவிடம். சிரவண மனனாதிகள் தொழிலேயாகும். இதனாற்றான் தாயுமானவர்,

 

“கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்

வாட்டமறா வுற்பவநோய் மாறுபோ - நாட்டமுற்று
      மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான்
      பொய்யாம் பிறப்பிறப்புப் போம்"       என்றருளினர்.

 

நான் என்ற தற்போதமும், நாம் சிவமாயிருக்கிறோம் என்ற வாசனை
 யும் நீங்கினதே முடிந்த விடமாகும்.

 

"தன்னை யிழந்திடத்தே தானே சுகவடிவா

யின்னபடி யென்றுணரா வெங்கோனுட் - பின்னமற
      நின்ற நிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்

கன்றே பிறப்பறுக்கலாம்.                               (சிவபோகசாரம்.)
 

"உன்னிழப்பில் (நீ யற்ற விடத்தில்) ஆனந்த முதிக்கும்'' என்றார் மற்றொரு மகான்.
      "எல்லாம் சிவமேயென் றெண்ணினு நின்போத
      மல்லாலஃ துண்மையன் றுந்தீபற

ஆங்கது நீங்கிடென்றுந்தீ பற                            (அவரோத உந்தியார்.)

மேற்கண்டவாறு, நான் என்ற ஆன்மாவை யறிந்து, பிறகு அதுவே பிரம்மமென உணர்ந்து, அப்பிரம்ம மாத்திரமாய் (ஞேயமாத்திரமாய்) நின்று விடுவதே. முடிந்த நிலையாகும். நாம் அப் பிரமத்தின் அம்சமே யென்று ஐயமறத் தெளிவதற்கே "அகம்பிரம்மாஸ்மி'' முதலிய வாக்கியங்கள் அருளப்பட்டன. அப்படிக்கின்றி வாசாஞானமாக "நான் பிரமம்" “நானே கடவுள்'' என்பது அகங்காரமேயாகும்.

 

“நானெனும் பொருள்கா ணாதோர் ஞானவா காயங் காணார்
      நானெனும் பொருளைக் கண்டோர் ஞானவா காய மாவர்
      நானெனு மகங்கா ரக்கார் ஞானவிண் மதியை மூடி
      னானெனாப் பரம வாம்ப னன்மலர் விரியா தன்றே”       - (வாசிட்டம்)
 

வேதாந்த ஆராய்ச்சி செய்து இவ்வுண்மையை யறியாதார் வேதாந்தம் ''நீயே கடவுள் என்று கூறுகிறது'' என்று நிந்தை கூறி இடர்ப்படுவா.

 

மேலே கூறியபடி அஞ்ஞான சந்தேக விபரீதங்களாகிய தடைகளை யொழித்த ஜீவன் முத்தர்கள் யாவரும் ஒரேவிதமாகத் தோன்றார்கள். அவர்களில் நான்குவித பேதமுண்டு. அப் பேதங்களின்படி அவர்களுக்கு நான்கு நாமங்கள் உண்டு. அவை யெவை யெனின்: -


     1. பிரம்மவித்து, 2. பிரம்மவரன், 3. பிரம்மவரியான், 4. பிரம்மவரிட்டன், ஆக நான்கு.

 

ஞானிகளின் பொதுவான குணங்கள்.

 

இவர்களுக்குள் ஞானத்தில் பேதமில்லை. நால்வர் அடைந்திருப்பதும் ஒருவித ஞானமே. அவர்களது விசிராந்தி (மன அமைதி) யிலும், அவர்கள் அனுபவிக்கும் ஞானசுகத்திலும் மட்டுமே தாரதம்மியமுண்டு.

 

ஞானத்தையடைய ஆவல் கொண்டு சாத்திர விசாரணை செய்து, தன்னையறிந்து ஞானிகளாகத் தெளிந்தவர்கள், பிறகு இலௌகீக விஷய முத லியவை யாவற்றையும் நழுவவிட்டு யாவற்றையுந் துறந்து, விதிநிஷேதங் கடந்த ஞானானந்த அனுபவத்தி லிருப்பார்கள். அப்பால் அவர்களுக்கு நேரும் விஷயங்கள்யாவும் பிராரப்த அனுபவமேயாகும். அதையவர்கள் மன நாட்டமின்றியே அனுபவித்துக் கழிப்பார்கள்.

 

அத்தகைய ஞானத்தையடைந்து சகல புறப்பற்றுக்களையும் பகிரங்கமாகக் கைவிடும் வரையில், தத்தமது வருணாசிரம தருமத்திற் குரிய காரியங்களை வழுவாது செய்து வருவார்கள். தாங்கள் சரியை கிரியையாதிகள் இனி வேண்டாமென்றுணர்ந்து ஞானத்தை யடையவே அப்பியாசம் செய்வதாயினும் உலகோரின் நன்மைக்காக பகிரங்கமாய்ச் சரியையாதிகளை யிகழ்ந்து கூறாமல், ஞான நிலையி லிருந்தபடி சகலக் கிரியைகளையும் செய்வார்கள்.

 

ஏனெனில் ஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய சாதனமானதாயினும் சரியையாதிகள் ஞானத்தையடையும் படிகளாக விருக்கின்றன. ஞானத்தை யடைந்த பிறகே அவை அவசியமில்லாதவையாகும். ஆதலின் ஞான அப்பியாசியும் அன்னியரின் நன்மையைக் கருதி சரியையாதிகளை யலட்சியமாகக் கூறாது வர்ணாசிரம தருமப்படி யொழுகுவான்.

 

இல்லறத்திலுள்ள ஞானி சாக்ஷியாக யாவற்றையும் நோக்கிக்கொண்டும், வேடதாரிபோல் உலகத்தாரைப் போலவே நடித்துக் கொண்டு மிருப்பதால் ஒவ்வோர் போது இச்சை, கோபம், துயரம் முதலியவை அவன் மனதின்கண் எழலாகும். பெரும்பாலும் அவை தோன்றா வென்றே கூறலாகும். ஒருகால் தோன்றினும் மறுகணமே அவை நசித்துப்போமன்றி மற்றையர் போல் அவன் மனத்தில் அவை பற்றியிரா.

 

அவன் அகப்பற்றை யொழித்தவனாதலின் குடும்பத்தோடு கூடியிருப்பவன் போல் பிறர்க்குத் தோற்றினும், அவன் வரையில் தாமரையிலையின் மேலுள்ள நீர்த்துளி போலும், ஓட்டிற்குள்ளிருந்தாலும் அந்த ஓட்டோடு பற்றுதலின்றியுள்ள புளியம் பழம் போலும் உள்ளத்தில் பற்றின்றியிருப்பான்.

 

அவன் எவ்வளவு கல்விமானாயினும் சற்றும் தான் பண்டிதனெனக் காட்டிக் கொள்ளவே மாட்டான். சாதாரணப் பாமரனாகிய ஒரு மூடன் போல் இருப்பான். இன்னும் மௌனமாகவும் இருப்பான். உலகப்புகழ்ச்சியைத் துரும்பினும் அலட்சியமாக மதிப்பான். ஒருவன் குபேரன் போல் செல்வவந்தனாயினும், அரசன் போல் அதிகாரமுடைய உயர்பதவியிலிருப்பவனாயினும், அல்லது சாதாரணமான கல்விக்கடலைக் கடந்தவனாயினும், ஈசுரபக்தியும் ஞானவாசனையும் இல்லானேல் அவனையொரு துரும்பாகவேமதிப்பான். எள்ளளவு சுய நலங்கருதியேனும் அத்தகையோனை வணங்குதல், துதித்தல் செய்யான். கடவுளையும், அவருக்குச் சமதையான ஞானாசிரியனையும், ஞானவான்களையுமன்றி வேறொருவரையும் போற்றான், துதியான். அதோடு தான் என்ற மமதையாவது, தான் பெரியோனென்ற எண்ணமாவது எள்ளளவுங் கொள்ளான்.

 

ஞானத்தையடைந்தோனும் பூர்வம் இயற்றிய கர்மத்தின் பலனான பிராரப்த போகத்தைப் புசித்தே தீரவேண்டும். ஞானி அஞ்ஞானத்தாலாவது இராகத் துவேஷாதி குணங்களாலாவது தூண்டப் பட்டு ஒரு காரியத்தையும் செய்வதில்லை. அவனுடைய காரியங்களெல்லாம் பிராரப்தத்தாலேயே நடைபெறுவன. ஆதலின் ஞானிகளின் விவகாரங்கள் பிராரப்த அளவின் படி பலவிதமாக விருக்கும். ஒருவன் தவம் செவ்து கொண்டிருப்பான், ஒருவன் அரசாள்வான், ஒருவன் வர்த்தகம் செய்வான், ஒருவன் ஊழியம் செய்வான், ஒருவன் பசிவந்தபோது அங்கை யேந்திப் பிச்சை வாங்கி யுண்பான், ஒருவன் காட்டிலுள்ள இலைகாய் முதலியவற்றையே உண்டு காலத்தைக் கழிப்பான். திருட்டாந்தமாக யாக்ஞவல்கியர் சபைகளில் பிரசங்கம் செய்து ஜீவித்தார் என்றும், ஜனகன் அரசாண்டதாகவும், சுகர் வாமதேவர் முதலியோர் தவம் செய்ததாகவும், தாயுமானவர், மாணிக்கவாசகர் இவர்கள் மந்திரித் தொழில் செய்ததாகவும், பட்டினத்தடிகள் வர்த்தகம் செய்ததாகவும், இப்பட்டினத்தடிகளும் பத்திரகிரியாரும் இன்னும் பல ஞானிகளும் அங்கையேற்றுண்டதாகவும் அறிகிறோம்.

 

ஞானி இறந்தகால விஷயங்களைக் கருதமாட்டான். அவ்வாறே நாளை வரப்போகும் விஷயத்தையும் சிந்தியான். நிகழ்காலத்தில் பிராரப்தத்தால் நேரிடும் பலனைப் புசிப்பான். சூரியன் நிலவாய் மாறிவிட்டாலும், இறந்தோர் எழுந்து நடந்து வரினும், உலகத்தார் அபூர்வமெனக்கருதும் வேறு எத்தகைய விஷயம் சம்பவிக்கினும், அதை யொரு அதிசயமாகக்கருதிப்பாரான். என்ன விஷயங்கள் நேரினும் இது நல்லது இது கெட்டது என்று ஒன்றுங் கூறான். சூரியனைப்போல் யாவற்றிற்கும் சாக்ஷி மாத்திரமாக இருப்பான்.

 

சாக்ஷி மாத்திரமாக என்பது மனது சற்றும் விஷயங்களில் பற்றுதலாவது, சலித்தலாவது இன்றி திருஷ்டியால் காண்டல் மட்டோடிருத்தல். இந்தநிலையி லிருப்போர்க்கு வினையேறுவ தின்றாம். இவர் தம்மனதில் எந்த விஷயமும் நில்லாது.

 

மேலே கூறிய குணங்களோடு பொருந்தி தாமரை யிலைநீர் போல் உலகரோடுங் கூடி இல்லறத்திலிருக்கும் ஞானியே பிரம்மவித்து எனப்படுவோன். மற்ற மூவரும் இல்லற நீத்துத் துறவிகளா யிருப்போர். இம் மூவரில், தேகசஞ்சார நிமித்தம், பிராரத்த வசத்தால் சமாதி நிலையினின்று பகிர்முகப்பட்டு, அவசியமாக வேண்டிய உணவாதிகளை அன்னியரிடம் கேட்டு வாங்கியுண்போன் பிரம்மவரன் எனப்படுவன்.

 

அன்னியர் வலியக் கொடுத்தால் மட்டும் வாங்கி உண்போன் பிரம்மவரியான் எனப்படுவன்.

 

தானும் கேட்காது அன்னியர் கொடுத்தாலும் வாங்கிப் புசியாது பகிர்முகப்படாமலே சதா சமாதி நிலையிலிருப்பவனே பிரம்மவரிட்டன் என்பவனாம்.

 

சமாதி என்பது உலக நாட்டமேயின்றி இரண்டற்ற அயிக்கிய நிலையிலேயே நிலைத்து நிற்பதாகும். பின்னைய மூவரும் சமாதி நிலையிலிருப்போரே யெனினும், வரன், பசியாதி வரும் போது ஆகாரம் முதலியவை களைக் கேட்கப் பகிர்முகப்படுவான். வரியன் ஆகாரம் முதலியவை கொள்ள அன்னியர் தூண்டினாலே பகிர்முகத்தில் நோக்குவான் வரிட்டன் தாகவும் பகிர் முகத்திற்கு வராமல் அன்னியர் தூண்டினும் வராமல் தேகம் சவம் போல் அல்லது கட்டைபோற் கிடக்கத் தான் சதா அந்த அதீத நிலையிலேயே யிருப்பான். அவன் நிலையே முடிவான முத்தி நிலையாகும். அவன் அன்னியர் திருஷ்டிக்கு அநித்தியமும் அசுத்தமும் வெறுக்கத்தக்க மலபாண்டமுமாகிய இத்தேகத்தி லிருப்பவனாகக் காணப்படினும், தன் வரையில் தனக்குத் தேகமிருக்கிற தென்ற நினைப்பாவது உணர்ச்சியாவதின்றி நித்தியானந்தக் கடலாகிய பேரின்ப நிலையில் இருப்பவன்.

 

மற்ற இருவர்க்கும் தேகம் தம்முடைய தென்ற உணர்ச்சி யில்லையேனும், அதை அவர்கள் அன்னிய வஸ்துவாக சாக்ஷி மாத்திரமாய் ஒவ்வொரு வேளை காண்பார்கள். சமஷ்டியனுபவத்தில் அது தோன்றியும் தோன்றாதாகும்.

 

பிரமவித்தும் தேகத்தை யன்னியமாகவே சாக்ஷி மாத்திமாய்க் காண்பன் ஆயினும் அந்நாட்டம் அடிக்கடி நழுவ, தேகத் தோற்றா வில்லாத அனுபவமே மிஞ்சிக்கொண் டிருக்கும்.

 

இவர்கள் இவ்வாறு பகிர் முகத்திற்கு வருவதால் அப்போதனுபவிக்கும் ஞானசுகம் குறைவாகிறதே யன்றி, மற்றபடி அவர்களது ஞான நிலைமையை யது பாதிக்காது. இவர்களுக்குள்ள இந்த வித்தியாசமும் அவரவர்கள் பிராரப்த பலனில் உள்ள அளவின் தாரதம்மியத்தால் ஏற்பட்டதே யாகும். ஆகாரம் புசிக்க வேண்டிய அவ்வளவு பிராரப்தம் கூட இன்றி, காண்போர் இவன் தேகத்தோடு கூடிய மனிதனே யென்று கருதச் செய்வது மட்டுமாகிய மிகஅற்ப பிராரப்த முடையோரே வரிட்ட பதத்திலிருப்போர். மற்ற மூவர் நிலைகளையும் இவ்வாறே பிராரப்த அளவின்படி யூகித்துக்கொள்ளவேண்டுமே யன்றி, நால்வரும் ஞானிகளே யாவர். இவர்களே ஜீவன் முத்தர்கள் என்பதும்.

 

முத்தி என்றால் மோட்சம். முத்தியை யடைந்தேரர் அல்லது முத்திநிலையிலிருப்போர் முத்தர். இம்முத்தி இருவகைப்படும். 1-ஜீவன் முத்தி, 2-விதேக முத்தி.

 

ஜீவன் முக்தி: - ஜீவித்திருக்கும் போதே தன் ஆன்மாவைப் பிரம்ம சொரூபமாக அனுபவமா யறிந்து அந்த நிலையில் இருப்பது. அதாவது இத்தேகத்திலுள்ள போதே மோக்ஷ நிலையை யடைந்திருப்பது.

 

விதேக முத்தி: - ஜீவன் முத்தி யடைந்தோர் தேகம் நீங்கியபின் மறுபடி சரீரம் பெறாமல் சச்சிதானந்தப் பரப்பிரம்ம சொரூபமாகிய நிலையில் நிலைத்திருப்பதாம்.

 

இதனால், இத்தேகத்திலிருக்கும் போதே முத்தி நிலையை அங்கை நெல்லி போல் பிரத்தியக்ஷமாகக் காட்டக் கூடியது இம்மார்க்க மென்றும், ஜீவன் முத்தி யடைந்தாலன்றி இறந்தபின் தான் மோக்ஷமடைவ தென்பதில்லை யென்றும் அறியக் கிடக்கின்றது. மேற்கண்ட ஜீவன் முத்தி நிலையிலிருப்போரே ஜீவன் முத்தர் எனப்படுவர்.

 

ஜீவன் முத்தர்களுக்குப் பத்துக்குறிகளுண்டென்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளி யிருக்கின்றனர். அவை: -

 

1.குரோத மின்மை, 2. உலோப மின்மை, 3. அகங்கார மின்மை, 4. பஞ்ச இந்திரியங்களையும் அடக்குதல், 5. சமை, 6. தமை, 7. சனப்பிரியத்துவம், 8. கொடை, 9. அபயம், 10. வைராக்கியம் என்ற பத்துமாம்.

 

"குறிகளோர் பத்துளவா ஞானமயர்க் கவைதாங்

      குரோதமின்மை வைராக மைம்பொறிக ளடக்க

லறமுதவு சமைதமையே சனப்பிரியத் துவமே

யலோபமொடு கொடைய பய நிருமதமென் றறிக்

நெறி மருவு சீடரொடு பத்தருதா சீனர்

நிலையில் பா விகளென்னு நால்வகையோ ரிடத்து

முறையினனுக் கிரகம்வந் துறுமருள்கொள் சீவன்

முத்தனா லென்பரவை முறையினெடுத் துரைப்பாம்.''

                          (வேதாந்த சூடாமணி.)

 

இவ்வாறு ஜீவன் முத்தர்கள் நானா பேதமான விவகாரங்களையுடைய வர்களாகத் தோற்றப் படினும், இவர்களடைந்துள்ள ஞானத்திற் றாரதம் மியமில்லை யாதலின், இவர்களடையும் முத்தி ஒரு தன்மைத்தே யாகும். ஆனால் பிரம வித்து இல்லறத் திருப்பவனாதலின் சாக்ஷி மாத்திரமா யிருப் பினும் வாகியப் பிரவிர்த்தி அடிக்கடி யுண்டாகிப் பற்றின்றி யேனும் விவ காராதிகளைச் செய்கிறான். வரன், வரியான், வரிட்டன் என்ற மூவரும் சமாதி நிலை யுற்றிருக்கிறார்கள். இதனால் பிரம்ம வித்தின் ஜீவன் முத்தத் தன்மைக்குக் குறைவுண்டாகாதோ வெனின், உண்டாகாது. ஆனால் பின்னை மூவரும், ஆக்கையுட னிருப்பதும் போவதும், தேக மிசைத்துயில் கழிவது மிருப்பதும் கூட உணராராகிச் சதா பிரம்மானந்த சுகத்தை யனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பகிர் முகப் பிரவிர்த்தி யடையச் செய் யப் போதுமான பிராரப்தப் பலனில்லை. பிரம்ம வித்துக்கு வாகியப் பிர விர்த்தி யுண்டாகி அவன் விவகாரங்களைச் செய்வதால் (சீவன் முத்தத் தசையில்) மற்றை மூவர்க்கு முள்ள பிரம்மானந்த சுகம் அவனுக்குக் குறைவுபடும். அவ்வளவே யன்றி அவனுடைய ஜீவன் முத்தத் தன்மைக்கு அது கேடு செய்யாது. விதேகமுத்தியில் மற்ற மூவாடையும் நிலையையே யிவனு மடைவான்.

 

அந்தப் பிரம்ம வித்து சாக்ஷி மாத்திரமாக விருந்து விவகாரம் செய்பவனாதலால் தாமரை யிலை நீர்போல் உலகிற் கூடி யிருப்பினும் அன்னியர் துக்கத்தைக் கண்டு தான் துக்கித்தல் முதலிய சீவகாருண்யமான செய்கைகளால் வேதனை யுறநேரலால் "பெரிதான திருஷ்ட துக்கம் பிரம்மவித் தனுபவிப்பான், வரியனும் வரனுமற்றை வரிட்டனுஞ் சுகமா வாழ்வார்'' என்று கூறப்பட்டிருக்கிறது. "வேறொன்றை யொருவர் கொல்லின் அன்னோ மையோ வென முகம் வாடி நிற்பதுவு மையநின்னருளறியுமே" எனத் தாயுமானவா கூறியதே தற்குத் திருட்டாந்தமாகும்.

 

பிரம்ம வித்துக் குண்டாகும் சுகதுக்காதி போகங்களில் யாவும் பிராரப்த பலனே யாகும். பிராரப்த பலனால் இச்சையும் எழலாகும். பிராரப்த போகத்தை யனுபவிக்கச் செய்ய என்னென்ன சாமக்கிரியைகள் அவசியமோ அவற்றை யெல்லாம் பிராரப்தமே யுண்டுபண்ணா நிற்கும். ஆதலின் அவன் ஞான நிலையை யவை கெடுக்கா; அவனுடைய முத்திக்கு அவை விரோதி யாகா. அவற்றால் அவன் ஜீவன் முத்தத் தன்மை கெடாது, சாக்ஷி மாத்திரமாக விருந்து தொழில் புரியும் போது பற்றில்லை யேனும் திரிபுடி யுண்டு. சத்துவ குண மாத்திரமாகச் சேஷித்த மனமிருந்தே தொழில் புரிய வேண்டும். மனமொழிந்த நிலையாகிய ஏகாக்கிர சித்த நிலையிலேயே ஞான சுக முண்டாகும்.

 

இதன் கருத்தாவது நால் வகையான ஜீவன் முத்தரும் முடிவில் ஒரே வித மோட்சத்தை யடைவர். சீவன் முத்தித் தசையில் அவரவர் சித்த விருத்தியின் பேதத்திற்குத் தக்கபடி அவர்கள் அனுபவிக்கும் பிரம்மானந்த சுகம் ஏற்றத் தாழ்வுடையதாகும் என்பதே.

 

சீடன்: -      மெய்ஞ்ஞான தேசிகரே! ஜீவன் முத்தர்களும் ஞானத்தையடை திருந்தும் கர்மங்களில் உழலும் அஞ்ஞானிகரோடு கலந்து அவர்களைப் போன்றே பிரபஞ்ச வினங்களை யயைகளா நச்சவித்தால் அவித்தையாகிய இச்சை, பர்மங்கள் ஒழிபிறம் முத்தி யெவ்வா ரடைவார்கள்?

 

சான்: -    ஆகாயம் தவிர மற்ற நான்கு பூதங்கள் ஒன்றோடொன்று கலந்தால் சேர்ந்து உறவாகிவிடுவது போல், அஞ்ஞானிகள் நாம் தேகத்தேடிருக்கிறோம், கர்மம் செய்கிறோம், சுகதுக்கங்களை அனுபவிக்கிறோம் என்ற அஞ்ஞான உணர்ச்சியுடையவர்களாய் விவகாரங்களை செய்வதால் ஆகாமியத்தை யுண்டாக்கிக் கொண்டு பிறப்பறப்பை யடைந்து வருந்தா நிற்பர்.

 

சீவன் முத்தன், தான் பிரத்யேகாத்மாவாகாயென்பதை யனுபவமா யறிந்து அந்த நிலையிலிருப்பவனாதலால், தனக்குத் தேகமுன்டென்றும், தான் கருமம் செய்வதென்றும், தன்னோடு சம்பத்தப்பட்ட பொருள் ஏதேனு மிருக்கிறதென்றும் எள்ளளவும் கருதாத் திட நிலையிலிருந்து கொண்டு, வலிய வரும் பிராரப்த போகத்தைத் தானென்ற உணர்ச்சியின்றி அனுபவிப்பவன். ஆகாயம் மற்ற நான்கு பூதங்களோடும் கலர்திருந்த போதிலும் எதிலும் தாக்கற்று நிற்பது போல் சீவன் முத்தனும் தொழில் செய்வது போல் வெளிக்குத் தோன்றினும் உள்ளத்தில் எவ்விதப் பலனையும் இச்சியாது எதிலும் தாக்கற்ற நிற்பவன். அவன் சாட் மாததிரமாக விருது தொழில் புரியினும் அச்செய்கை கான் போல் அவன் மனதிற் பற்றாது போம். ஏனெனில், தன் சொர்தப் புருனே டிருக்கும் போதும் ஒரு சோரஸ்திரீ எவ்வாறு தன் கள்ள நாயகன் கமலேயே சித்தத்தைச் செலுத்தி நிற்பாளோ அவ்வாறு இவனும் சாயாயிரு தாலும் இலன் உள் நாட்டம் தானற்ற ஐக்கிய நிலையையே நாடிக்கொண்டிருக்கும்.

 

காயத்தில் வேறாகத் தன்னைக் கண்டோன்

      காயமீ றினுமறியான் கன்னற் கட்டி

தீயிற்கா யினுமரிந்த போது மின்பர்

தீராத வாறுபோற் றெளிந்த ஞானி

மாயத்தின் மோகத்தாற் பேத மாகான்

மணந்தபர புருடன்மென் மனஞ்சேர் மங்கை

ரேயத்தான் மனைத்தொழில்கள் செய்யு மாபோ

            னிகழ்தொழிற்செய் யினும் பரத்தி னிலைமை நீங்கான்.

                                     (வாசிட்டம்)

மேலும், அஷ்டாவர்ககிர கீதையில்,

 

"நினைப்பெல்லாம் விட்டு நீர்த் தொந்தனாய் ஞான சீலனாய இருக்கின்றவனுக்குத் தனக்குத் தானே வந்த போகத்தில் சுக துக்கங்களில்லை'' என்றும்,

 

''பிரம்ம ஞானியைப் புண்ணிய பாவ பலன்கள் தொடர மாட்டா; நிர்மலாகாசத்தைப் புகை தொடராதது போல்'' என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

ஏனெனில், அவன் அஞ்ஞானிகளைப்போல் சீவபாவங்கொண்டு பலனை யாசித்துத் தானே எதையும் செய்வதில்லை யாதலின். அவன் செயல்கள் யாவும் பிராரப்தப் பலனைப் பொருந்தியவைகளே. அப்பலன் வறுத்த விரை போல் பொசிப்புக்கு மட்டுமே தகுதியுடைய தன்றிப் பாப புண்ணிய கர்மங்களைச் சனிப்பிக்கச் சக்தி யுடையதல்ல.

 

“வறுத்தலிதை நண்பதன்றி மாநிலத்தைக் கீன்று

செறுத்துலிதைப் பாரோ தெளி''                     (வள்ளலார் - பாசவியல்.)

(சீவன் முத்தர்களின் மகிமை.)

 
குரு பின்னும் சீடனை நோக்கி,

 

"அன்புள மகனே, சீவன் முத்தரைச் சேவித்தோர் அரன், அயன், அரி என்னும் மும்மூர்த்திகளும் மகிழ்ச்சியடையும் வண்ணம் அரிய தவங்களை யெல்லாம் செய்து சன்ம சாபல்யம் பெற்றவர்களாவார்கள் என்று வேதம் கூறுகிறது. இனி இத்தகைய சிவன் முத்தர்கள் அடையும் விதேக முத்தியாகிய கைவல்யப்பேற்றைக் கூறுகிறோம் கேட்பாயாக," என்றனர்.

 

தவம் செய்து திரிமூர்த்திகளில் ஒருவரைத் தரிசித்தால் வரங்கள் முதலிய சித்திகளையும் புண்ணியத்தையுமே பெறலாம். மேற்படி மூவர்க்கும் காரணமாய பரப்பிரம்ம சொரூபமே தானாகநிற்கும் ஞானியின் தரிசனத்தால் வரங்கள் முதலியவற்றோடு குரு உபதேச மூலமாய்ப் பேரின்ப முத்தியும் அடையலாகும். இதனாலும் அறிவாற் செய்யத்தக்க எல்லாத் தொழில்களையும் விடப் பிரம்மஞானம் பெறுதலே மிக்க கஷ்டமானதாலும் ஞானிகளின் மகிமை யளவிடற் கரியதெனப் பழமறை முழங்கா நின்நது. ஒருவன் தான் செய்த காரியத்தைப்பற்றி பிரமாதமாகக் கூறும் போது என்னடா பிரம்மவித்தை கண்டு பிடித்துவிட்டாயோ?'' என்று உலகர் கூறுவது அனுபவம். மேலும் கீதையில் கண்ணபிரான், பிரம்மஞான சாதகம் யாதினும் வருத்தமானதென அருளியிருக்கிறார். இனைய வற்றானே ஜீவன் முத்தனுக்கு இத்தகைய மகிமை கூறப்பட்டது.

 

"திரிவித வுலகத் தரிதொரு ஞானி

      தேர்விடத் தென்றுமோ ரொன்றை

யுரை செயிற் பிரம வித்தையொத் தரிதோ

வென்றுமிவ் வுலகுரைப் பதனா

லரிசொல்கீ தையினும் பிரமசா தகரி

            னார்க்குள வருத்தமென் பதனாற்

பெரியதோர் கருத்து மெனை மறை துணிந்தப்

            பிரமநா னெனவிருத் தலினே.''               (வைராக்கிய தீபம்)

 

(ஒருவன் மோக்ஷத்தை யடைய வேண்டின் ஆகாமியம், சஞ்சிதம், பிராரய்தம் என்ற மூவகைக் கருமங்களும் ஒழிய வேண்டும். ஆதலின் விதேக முத்தியைப் பற்றிக் கூறுமுன் சிவன் முத்தர்களுடைய மூவிதக்கன்மங்களும் ஒழியும் வகையை ஆசான் கூறுகிறார்.)

 

1. சஞ்சித வினைகள்: - பருத்திப் பொதியில் தீப்பற்றினால் அது எப்படி எரிந்து நீறாகி உருவின்றி யழியுமோ, அவ்வாறே ஞானியின் சஞ்சிதமனைத்தும் குரு உபதேசத்தாலுண்டான ஞானாக்கினியால் சுட்டெரிக்கப் பட்டழியும்.

 

"சஞ்சிதமுன் கட்டுவினை சற்குருநோக் காற்சரியும்

பஞ்சமலை பட்ட நெருப்பாய்.''               (வள்ளலார் - பாசவியல்)

2. ஆகாமியம்: - சீவன் முத்தன் யாவும் சிவச்செயல், தன்னாலாவதொன்று மில்லையென்று தற்செயலற்று நான் எனதென்ற பற்றின்றி நிகழ்பவனாதலால் அவனிடம் வினைபற்றுத வில்லையாகும்.

 

"கொடுப்பானு மீசனதைக் கொள்வானு பீசனெனின்

மடுக்கா வெதிர்வினைகள் வந்து''

 

"வெறுப்புவிருப் பாற்பிறப்பா மேலை கிப் போதே

வெறுப்பு விருப் பற்றால் விம்"                     (வள்ளலார் - பாசவியல்)

 

3. பிராரப்தம்: - முன் செய்த வினையாய பிராரப்த பலனை ஞானியுங் கூட அனுபவித்தே தீரவேண்டும்.

 

''உள்ளப் பொசிப்பெல்லா முண்டொழிப்ப தன்றியிதைத்

தள்ளப் படாதெவர்க்குந் தான்''                           (வள்ளலார் - பாசபியல்)

 

ஞானியும் பிராரப்தத்தை யனுபவிக்கிறான் எனின், சாதரணமாக அஞ்ஞானிகள் அனுபவிப்பது போலது நான் பூர்வம் செய்தவினை யாதலின் என் கன்மத்தை நான் அனுபவிக்கிறேன்'' என்ற உணர்ச்சியோடனுபவிப்பதில்லை உண்மையில் ஞானியின் ஆன்மாவில் தான் என்பதும் ஒன்றை அனுபவிக்கிறோம் என்பதும் ஆகிய இத்தகைய உணாச்சிகளே வில்லை. ஆகையால் அனுபவத்தில் நமக்குப் பிராரப்தமுளது அதையனும் விக்கிறோம் என்ற உணர்ச்சி சிவன் முக்கனக்கில்லை. உண்டேல் அவன் நிலை சரியான சாக்ஷி மாத்திர நிலையாகாது.

 

எப்போது தொம்பதம் தரிசனம் உண்டாகிறதோ (அதாவது தன்னையறிந்து சாக்ஷிமாத்திரமாய் நிற்கிறனோ அப்போதே ஆகாமியம் ஒழியும். பிறகு எப்போது தத்பததரிசன முண்டாமோ, (அதாவது அருள் நாட்ட முற்று சிவோகம் (அகம் பிரம்மாஸ்மி) பாவனையால் பிரம்மத்தை யன்றி நாம் வேறில்லை. அதுவே நாமென்ற நிலையில் நின்று, அகண்டாகாரவிருத்தியில் தன்னை இலயப் படுத்தத் தொடங்குகிறானோ அப்போதே ஞானாக்கினியால் சஞ்சிதம் எரிக்கப்பட்டுப்போம். பிறகு அசிபத சரிசன முண்டாயின் (அதாவது முடிவாக அகண்டாகார விருத்தியில் தன்னை படியோடிழந்து தானற்று சக சமாதி நிலை யடைகிறானே) அப்போதே பிராரப்தமும் ஒழிகிறது.

 

பின்னை நூலல் “பிராரப்தம் ஞானியும் அனுபவித்தே தீரப்பெண்டும்" என்று கூறிய தென்னையெனின்,

 

"வினைப்போகமே யொருபதாயகடாய்

வினைதானொழிந்தால் தினைப்போதளவு, நல்லாது கண்டாய்”

 

என்றது போல் பிராரப்தம் தேகத்தைப் பொருந்தியது. அஞ்ஞான தசையில் சீவபாவத்தால் தேகத்தின் செயல்களை யெல்லாம் தன் செயல் களாக மயங்கிக் கருதியவன், ஞானநிலையில் தேகத்திற்கும் தன்க்கும் சம்பந்தமில்லை யெனவிட்டுவிட்டதால், ஜீவன் முத்தனது ஆன்மானுபவத்தில் அப்பிராந்தியில்லை ஆகாரம் புசிக்கவில்லையோ எனில் அவனுடைய திருட்டியில் தான் புசிப்பதாகிய பிராந்தியில்லை. பின்னை யெவ்வாறு அனுபவமெனில், எதிர்நிற்கும் மனிதன் ஒரு குடத்தில் தானியத்தைப் பெய்வதை, அது நிரம்பிற்றோ இல்லையோ என்பதைக் கூடக் கவனியாது சாடையாய் பார்த்துக்கொண் டிருப்பவன் அனுபவமே ஜீவன் முத்தனுக்கு உள்ள அனுபவம். கருவிகரணங்களற்றுச் சிந்தனையற்று நிர்ச்சிந்தனாய் காலதேசாதிகளற்ற நிலையில், ததாகாரமாய் உள்ள நிலையில், நித்திரையிலிருந்து எழுப்பி அன்ன மூட்டின் உண்டு, காலையிலெழுந்து எனக்கு அன்னமளிக்கவே யில்லையென்று கூறும் குழவி எந்நிலையிலிருந்து அவ்வன்னத்தை யுண்டதோ அவ்வாறு (ஆனால் அஞ்ஞானம் நீங்கிய) நிலையினின்று பிராரப்தத்தைக் கழிக்கும் ஜீவன் முக்தனுக்கு பிராரப்தத்தை யனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சியே யில்லை. உண்டாமாயின் பின்னையும் பிராரப்தத்தை யனுபவிக்க நேரிடும் என்க.

 

''தொம்பதம் விளங்கின் மேல்வினை மறைந்த

                  தொல்லிரு ளகன்று போ யொளிக்கும்

தம்பதமான தற்பதம் விளங்கில்

           சஞ்சித மாயைப்போ யொளிக்கும்

அம்பத மான வகிபதம் விளங்கி

லரும்பிரா ரத்தம்போ யொளிக்கும்

செம்பர வருளே வடிவதா யான்மா

           சிவத்தினுக் கங்கமாய் நிகழும்.

        

பிராரத்த முடன்பா டென்றெந்த நெறியும்

பேசிடு மிந்நெறி யதற்குப்

பிராரத்த முடையோ ரருக்ரே யன்றாம்

           பிராரத்தம் புசித்திடு வோர்கட்

சறாதிந்த மாயா தநுகரணந்த

           ளதனினால் சிவத்துவ மதனை

உறாதுமற் றவரைச் சீவன்முத் தர்களென்

             றுரைத்திடப் படுவதெப் படியோ. “            (குமாரதேவர்)

 

மேற்கூறியவற்றால் பிராரப்தம் தேகத்தோடு சம்பந்தப்பட்ட தென்றும், இத்தேகத்தில் கட்டுப்பட்டிருப்பதே பிராரப்தம் என்றும் அறியலாகும். பிராரப்தம் எள்ளளவுமின்றி யொழிந்தால் தேகம் ஒருகணமேனும் தரியாது. ஞானம் வந்தபின், ஜீவன் முத்தருடைய ஆன்மாவின்கண் தேகசம்பந்த உணர்ச்சியில்லை யாதலின், பிராரப்த அனுபவ உணர்ச்சியும் இல்லை. ஜீவன் முத்தர்களில் மேற்கண்ட நால்வகையாகிய பேதமிருப்பதற்குப் பிராரப்தத்தின் அளவே காரணம். இப்பிராரப்தம், ஞானம் கிட்டாவண்ணம் தடுக்கவும் வல்லமையுடையது. எவ்வாறெனின் -

 

ஒருவன் ஒரு ஜன்மத்தில் செய்த கன்மம் நான்கு ஜனனங்களுக்கு வித்தாகி விடுகிறது. அதாவது, ஒருவன் செய்யும் ஒரு பெரிய பாபகன்மத்திற்கு, அவன் நான்கு ஜன்மங்களெடுத்து அதையனுபவிக்க வேண்டும் என்று தண்டனையேற்படுகிறது. அப்படியிருக்க, அடுத்த ஜன்மத்தில் அவனுக்கு ஞானமுண்டானால், உடனே பிறவி யொழிய வேண்டும். அப்படிக்கின்றி, ஞானம் வந்த பின்பும், முன்பிராரப்த வினையையனுபவிக்க அவன் ஜனிக்கிறானெனின், ஞானிக்கும் பிறவி யுண்டென்றாகிறது. இது சுருதிக்கு விரோதம், மற்றென்னெனின், எப்போது நான்கு ஜனனங்க ளெடுக்க வேண்டிய பிராரப்த மிருக்கிறதோ, அப்போது அந்த முதல் மூன்று ஜன்மங்களில் ஞான முண்டாகாது. கடைசியான நான்காவது ஜனனத்திலேதான் ஞானம் உண்டாகாநிற்கும். நான்கு ஜன்மங்களுக்குக் காரணமான அப்பிராரப்தமே, முதல் மூன்று ஜன்மங்களில் ஞானம் உதி யாவண்ணம் தடை செய்யும். இதைத்தான் வாசிட்டத்தில்,

 

''இனிப்பிறவா முடிவான ஜன்மத்தில் மெய்ஞ்ஞானம் எளிதி னுண்டாம்...........'' என்று கூறப்பட்டிருக்கிறது

 

(ஞானிகளை யிகழ்ந்து கூறலாகாதெனல்)

 

ஞானிக்கு ஞானமுதயமானது முதல் ஆகாமியகன்மம் சேர்வதில்லை யென்றோம். பிராரப்த கர்மமோ, மேற்கூறியவாறு (சுகதுக்கங்களின் சமபுத்தியோடு கனவைப்போல்) அனுபவித்துத் தீர்க்கப்படுகிறது. அச்சன் மத்தில் ஞானம் வருமட்டும் செய்திருக்கும் சஞ்சித கன்மங்கள் எவ்வாறு தொடராமல் மாண்டு போம் என்னில், அறிவுடையோர் பிரம்மவித்து பூரணஞானியே என்றுணர்ந்து, பக்தி செய்து அவன் புண்ணிய கன்மபலன்களை ஏற்றுக்கொள்வார்கள். அறிவிலாதமூடர் ''ஓ மகா ஞானியோ! அவன் சாப்பிடவில்லையோ, போகவில்லையோ வரவில்லையோ'' என்று அவனை யிகழ்ந்து கூறி, அவன் செய்துள்ள பாப கன்மப்பலன்களை யெல்லாம் ஏற்றுககொள்வார்கள். ஆதலால், ஞானியைப் யூசிப்பவனுக்குப் புண்ணிய பலனும், இகழ்பவனுக்குப் பாப்பலனும் பிராப்தமாகும் என்று அறியத்தக்கது.

 

(இவ்வாறு மூவித கன்மங்களும் ஒழிந்த ஞானி விதேகமுத்தி யடைவதைக் கூறுதல்)

 

சாதாரணமாக ஒருவர் மரிக்கும் போது, தூல தேகம் யாவரும் காணும்படி சவமாய் இங்கு வீழ்ந்து விடுகிறது. சூக்கும சரீரம் அவித்தையாகிய காரண சரீரம் என்ற பெட்டியி லொடுங்கிக் கொள்கிறது. ஆவரணம் அல்லது அஞ்ஞானம் அல்லது காரணசரீரம் ஜீவன் செய்த * மூவித கன்ம மூட்டையை ஆன்மாவோடு ஒட்டிக்கொண்டு அதன் கூடச்செல்வதற்கு ஒரு பசைபோல் உதவியாயிருக்கிறது.

 

[* மூவித கன்மங்கள்: - புண்ணிய கன்மம், பாப கன்மம், (இவை யிரண்டும் கலந்த) மிசிர கன்மம் ஆகிய மூன்றாம்.]

 

ஒருவனுக்கு ஞானம் உதயமானபோது, அவனிடமுள்ள அவித்தையாகிய காரணசரீரம் ஞானாக்கினியால் தகிக்கப்படுகிறது. பிராரப்தம் ஒழிந்த அக்கணமே தூல தேகம் சவமாய் விழும். அப்போது சூக்கும் தேகமானது, 'கொல்லன் உலையிலுள்ள இரும்புண்ட நீர்போல்'' துரிய மாகவும், விபுவாகவும் உள்ள சொரூபத்தில் விலீனமாம்.

 

[† துரியம் = சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்றவஸ்தைகளின் அபிமானிகளாகிய விசுவன், தைஜஸன், பிராஞ்ஞன் என்ற மூவர்க்கும் சாக்ஷியாக விருக்கும் சர்வசாக்ஷி, எதிலும் தரக்கற்ற நான்காவது பொருளாதலால், அது துரியம் என்னப்பட்டது.

‡ விபு = தேகசால வஸ்து பரிச்சேதமற்று, எங்கும் வியாபகமாக உள்ள பொருளாதலின் அத் துரிய பரம்பொருள் விபு என்னப்பட்டது.]

 

[யாதொன்று அனுபவத்தில் நினைப்பு மறைப்பு சலனங்களை யுண்டாக்குவதற்குக் காரணமாக விருக்கிறதோ, அதுவே காரண சரீரமென் றும், அவித்தை அல்லது அஞ்ஞானமென்றும், ஆவரண மென்றும் கூறப்படும். மனதை யொடுக்கி, மேலுள்ள அந்தகாரமான பாழைக்கடந்து, தன்னை யறிந்தஞானி ஆவரணம் என்னும் திரையை யறுத்தெறிந்தவனாகிறான். அவனுடைய அவித்தையென்ற காரணச் சரீரம் ஞானாக்கினியால் தகிக்கப்பட்டழிகிறது. இங்கு ஞானாக்கினி என்பது, "தான் தேகமல்ல, அதற்கு அன்னியமாகிய அழியாத ஆன்ம சொரூபமே" என்று அனுபவ மாகவறிந்து அந்தத்ததாகார நிலையில் நிலைத்திருக்கும் தன்மையேயாகும்.

 

காரண சரீரம் அழிந்து போனதால், தூலதேகம் சவமான பின் சூக்கும் தேகத்திற்குப் பற்ற இடமில்லை. ஆதலின் எல்லாக் காரியங்களும் தத்தம் காரணங்களில் ஒடுங்கு முறைபோல் சூக்கும தேகதத்துவங்களும் சாத்துவ இரஜோகுண தன்மாத்திரை பூதங்களாக மாறி, உதித்த முறையே ஒன்றிலொன்றொடுங்கி ஆகாயமாத்திரமாகி, பின்னர் அதுவும் விக்ஷேப சாத்தியிலொடுங்கி, விக்ஷேபம் மூலப்பிர கிருதியிலொடுங்கி, மூலப் பிரகிருதியும் முடிவில் தன் காரணமான பிரம்ம சொரூபத்தில் இலயமாய் விடுகிறது. ஆகையால் துரியமும் விபுவுமாகிய சொரூபத்தில் விலீனமாகும் என்று உரைக்கப்பட்டது.]


(மேற்கண்டவாறு மூன்று சரீரங்களும் ஒழிந்த ஜீவன் முக்தருடைய ஆன்மா அடையும் முத்திநிலை கூறப்படுகிறது)

 

கடம் என்பது உடைந்து போனால் கடாகாயம் (கடத்திற்குள்ளிருக்கும் ஆகாயமும், கடத்திற்கு இடங் கொடுத்திருக்கும் ஆகாயமும் சேர்ந்தது கடாகாயம்) மகாகாயத்தோடு கலந்து ஏகமாவதுபோல், ஜீவன முத்தர்கள் ளுடைய தேகமாகிய உபாதி நீங்கியதே, அவர்கள் ஆதி, அந்தம், மத்தியம் ஆகிய ஒன்றுமின்றி, உள்ளென்றும் புறம்பென்றும் வித்தியாசமின்றி, எங்கும் நிறைந்து ஒரே நிலையில் விளங்குவதாகிய விதேக கைவல்லிய பதத்தைப் பெற்று, அந்த நிலையில் என்றுமிருப்பர்கள்.

 

[ஜீவன் முத்தர் தேகம் நீங்கியபின், விதேகமுத்தி யடைவதைப் பற்றிக் கூறும் போது "பெரிய தூலமுங் காலத்தால் பிணமாகிவிழும்'' என்று கைவல்லியம் கூறுகிறது. இந்த விஷயத்தில் சில சந்தேக ஆக்ஷேபங்கள் இருப்பது போல் சிலர்க்குத் தோன்றலாகும். ஆகையால், அவற்றைப்பற்றி யீண்டுக் கூறுவது மிகையாகாதெனக் கருதுகிறோம்.]

     "மறுபிறவியில்லை; ஒரே தரம் ஜனித்து ஒரே தரம் மரிக்கிறோம்'' என்ற மயக்கமுடையோர், மேற்கூறப்பட்ட கடாகாய திருட்டாந்தத்தைக் – சொண்டு, "ஆன்மா தேகத்தைவிட்டு நீங்கியதே ஒன்றைப்பற்றாது தனியாயிருக்க அதனால் முடியாதாதலால், தான் உதித்த விடமாகிய பரமான்மாவிற் கலந்து விடுகிறதேயன்றி, மறுபடி பிறப்பதில்லை'' என்கிறார்கள். இது சுருதி, யுத்தி, அனுபவங்களுக்குப் பொருந்தாததேயாகும்.

 

நமக்கு முன்ஜனனம் இருந்தது என்று உணர்வதற்குப் பல அத்தாக்ஷிகளுள். இதைப்பற்றி ஆன்றோர்கள் அனேகர் பூர்வீகத்திலும், சமீப காலத்திலும் ஒருவராலும் மறுக்கமுடியாத விதமாய் நிரூபித்துத் திரப்படுத்தியிருப்பதால் நாம் மிகச்சுருக்கமாகவே கூறி முடிப்பாம்.

 

சிருட்டியில் உள்ள ஏராளமான பேதங்களே முதலாவதாக அதை நிரூபிக்கின்றன. முன் பிறப்பில்லையெனின், கடவுள் நீதியில்லாதவர், பாரபட்சமுடையவர் என்றாவது, அல்லது சிருட்டியில் தோன்றியிருக்கும் மகா அற்புதம் பொருந்திய இவற்றை யெல்லாம் ஆக்கியளித்துத் துடைக்கும் சர்வவல்லமையுள்ள ஒருகர்த்தா இல்லையென்றாவது முடியும். எப்போது முன் ஜன்மத்தில் செய்த கன்மத்தால், இந்த வர்த்தமான ஜன்மம் உண் டாயிற்றென்று விளங்கியதோ இவ்வாறே கடந்த ஜன்மத்திற்குக் காரண மாக அதற்குமுன் ஒருஜன்மம் இருந்திருக்க வேண்டு மென்றும், அவ்வாறே உத்தரோத்தரம் அனாதிகாலந்தொட்டு ஜனனம் தொடர்ந்து வருகிற தென்றும், இந்த ஜன்மத்தில் செய்யும் கன்மத்தால் மேல் ஜன்மம் உண் டாகுமென்றும் ‘அங்கை நெல்லிபோல்' விளங்கும்.

 

சடாகாய திருட்டாந்தம் போல் எல்லா ஆன்மாக்களும் பரமான்மாவில் கலந்து விடுமென்று கருதலாகாது. ஜீவன் முத்தனுடைய ஆன்மா அவன் தேகத்தைவிட்டுப் பிரியுங்கால் அதனிடம் கன்மப்பற்றில்லை. ஆதலின், அது பரமான்மாவைப் பற்றியிருப்பதால், அதில் கலந்து அந்நிலையையடைகிறது. மற்ற பேருடைய ஆன்மாக்களுக்குக் கன்மப்பற் றிருப்ப தால், அவை சாதாரணமாய் நடக்கும் ஒருவன், முதலில் ஒருகாலை முன்னுக்குத் தூக்கிவைத்து, அக்கால் பூமியிற் படிந்தபின்பே மறுகாலை எப்படித் தூக்கிவைக்கிறானோ, அதைப்போன்றே, ஆன்மா ஒரு தேகத்தைப் பற்றிய பின்பே இருக்கும் தேகத்தை விடும். ஆதலால் அவை ஜீவன் முத்த ரது ஆன்மாவைப்போல் கன்மப்பற்றின்றி தேகத்தைவிட்டு வெளிப்படுவதுமில்லை, பரமான்மாவில் கலந்து விடுவது மில்லை.

 

ஞானிக்குத் தன் தேகம் புண்ணிய ஸ்தலமாகிய பரிசுத்தத் தலத்தில் விழவேண்டும், உத்தராயணம், சிவராத்திரி, ஏகாதசி முதலிய புண்ணிய காலத்தில் தேகம் விழவேண்டும் என்ற அபேக்ஷையேயில்லை. பரிசுத்தத்தலமோ மிக்க அசுத்தத் தலமோ எந்த விடத்திலாயினும் சரி, எந்தக்காலத்தினாயினும் சரி அவனுக்கு அதைப்பற்றி அவசியமே யில்லை. குமாரதேவர் சுத்தசாதகத்தில்,


''சூக்குமந் தனது காரண மடையத் தூலமிங் ககன்றதே யென்றாற்

சூக்குமந் தனது காரணம் விடுத்துத் தூலமொன் றெடுத்ததென் றுணர்வாய்.''

 

என்றருளியிருக்கிறார்.

இதனால் தேகம் சவமாகப் பூமியில் வீழ்ந்தால் முத்தியில்லை யென்று கருதலாகாது. இது ஒரு விசேஷ மார்க்கமேயன்றி வேறில்லை.  

 

''தேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன் முத்தி

யாகுநெறி நல்லநெறி யையா பராபரமே.''

 

என்று தாயுமானவர் அருளியதாலும் இது நன்கு விளங்குதல் காண்க. அவ்வாறின்றி தேகம் விழுந்தால் முத்தியில்லை யெனின், தாயுமானவர் முதலிய எண்ணிறந்த மகான்கள் முத்தி யடையவில்லை என்றாகும். இது உலக அபிப்பிராயத்திற்கு மாறானது. மேலும் பிரபல நூல்களில் கூறியிருப்பதற்கும் இது விரோதமாகும்.

 

      "பற்று முனிவு பயஞ்சுகங்கள் பயிலா னெனினும் பயின்றிடினுஞ்

சொற்ற வெவர்க்கும் பிரமேயந் தொடரா னெனினு நன்பாலர்

பெற்ற பிரமே யத்துறினும் பெரிய மனத்தோன் காசியிற்சா

வுற்ற பொழுது நாய்க்கெரிப்போ ருழைசா வுறினு முறும்பதங்கேள்"

 

என வாசிட்டத்தும்,

 

ஞானியின் தேகத்தைக் குகை செய்திருத்திப் பூசிக்க வேண்டுமென்றும், அதைத் தீயிட்டெரித்தால் சுவரனது கோயிலை யெரித்தது போல் ஆகுமென்றும், அதனால் நாடெலாம் தீமண்டி யழியுமென்பதைப் பற்றியும்,

 

“அந்தமின் ஞானிதன் னாகந் தீயினில்

வெந்திடி னாடெலாம் வெப்புந் தீயினி

னொந்தது நாய்நரி நுகரி னுண் செரு

வந்துநாய் நரிக்குன வாகும்வை யகமே.”

 

“எண்ணிலா ஞானி யுடலெரி தாவிடி

லண்ணறங் கோயி லழலிட்ட தாங்கொக்கு

மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமா

மெண்ணரு மன்ன ரிழப்ப ரரசே.''

 

என்று திருமூலர் திருமந்திரத்திலும் கூறப்பட்டிருப்பதால், தூல தேகம் சவமாக வீழ்ந்தால் முத்தியில்லை யென்று கருதுவது தவறென்று நன்கு விளங்குவது காண்க.


(அத்தகைய கைவல்யநிலை புதிதாக உற்பத்தியானதல்ல எனல்)

 

சற்சீடனே! ஆகாயமானது எல்லா வஸ்துக்களின் உள்ளும் புறம்புமாய் எங்கும் நிறைந்திருந்த போதிலும், பூமியைத் தோண்டியபோது அப்போதுதானுண்டானது போல் தோன்றும் கூபாகாயம் (கிணற்றிலுள்ள ஆகாயம்) போல், பிரம்மஞானநிலை சிரவண மனன நிதித்தியாசனங்களால் அப்போ துண்டானது போல் தோன்றுகிறதேயன்றி, உண்மையில் நாம் எப்போதும் (முக்காலத்தும்) அகண்ட சொரூபமாகிய பிரம்மமே யென்று இருப்பாயாக.

 

கானலில் தோன்றும் சலம் போலவும், கிளிஞ்சிலில் தோன்றும் வெள்ளி போலவும், இந்திரஜாலத்தில் காணப்படும் நகரம் போலவும், ஆகாயத்தில் தோன்றும் நீல நிறம் போலவும், கயிற்றில் புலப்படும் அர வம்போலவும், மலடியின் மைந்தன், முயலின் கொம்பு என்பவை போலவும், கட்டையில் காணப்படும் மனிதன் போலவும் நாமரூபமான இப்பிரபஞ்சம் முழுமையும் அசத்தியமே. ஞான சொரூபமான பிரம்மம் ஒன்றுமே மெய். அத்தன்மையான உன் நிஜசொரூபத்தை நம்மாணையாக மறவாதே.

 

[உன்னை மறவாதே யென்பது, முன்னிலையற்ற அகண்டாகார நிலையில் தற்போதமற்று நில் என்பதாகும். அது நான் என்ற உணர்ச்சியோடு கூடிய நிலையல்ல. தற்போதமற்ற நிலையாதலின் முன்னிலைச்சுட்டறியவும், ஒன்றென்றாவது, இரண்டென்றாவது கூறவும் அங்கொன்றுமில்லை.

 

"ஊமைகண்ட சொப்பனம்போன் றுள்ளே யறிவதன்றி

நாமிதெனச் சொற்றிடவு நண்ணுமோ - தாமதம் போ

லாங்கதுவாய்ப் போவதலா லன்றிதா மென்றுரைக்க

வீங்கொருவ ருண்டோ விசை.''              என்றனர் வள்ளலார்.

 

இந்த நிலையைவிட்டு இரண்டாக விருப்பதே நிலையென்று கூறுவாறு முண்டு. அது தவறேயாகும். இரண்டிருந்தால் மூன்றாவது முண்டு. பிறகு யாவுமுண்டாம். ஆகவே முத்தியின்றாம். தானிருப்பதே உணர்ச்சியிலை யெனின், இரண்டாவ தொன்றுண்டென்பது அனுபவத்திற்கு முற்றும் விரோதமே. ''நானுமில்லை நீயுமில்லை யாருமில்லையானதே'' என்று அருணகிரிநாதர் அருளியபடி, தன்மையாகிய நானுமில்லை, முன்னிலையாகிய நீயுமில்லை, என்னைத் தானாக்கிக்கொண்டு தான் தானாக என்றும் எங்கணும் பிரகாசிக்கும் சச்சிதானந்த சொரூபம் ஒன்றேயுள்து. "நீயற்ற வன்னிலையே நிட்டையதி னீயிலையோ வாயற்றவனே மயங்காதே" என்றார் தாயுமானவர்.

 

"நானே யென்று மெவ்விடத்து நன்றா யுண்டா யிருக்குகேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றாய்த் தோன்றி விளங்குகேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றா யின்ப மாய்நிகழ்கேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றாய் விளையா டாநிற்கேன்''

 

என்று ஸ்ரீ குமாரதேவஸ்வாமிகள் கூறியருளினர்.

 

"அண்ண லிருப்பிட மாரு மறிகில

ரண்ண லிருப்பிட மாய்ந்து கொள் வார்களுக்

கண்ண லழிவின்றி யுள்ளே யமர்ந்திடும்

அண்ணலைக் காணி பவனிவ னாமே''

என்று திருமூல நாயனார் அருளினர்.

 

"அத்துவித முத்தி யளித்தருளு நாதாவென்

பொய்த்துவிதம் போமாறு போதித்த - கர்த்தனே

முத்தியிலு மும்முதலு முண்டென் றுரைப்பதுவுஞ்

சத்தியமோ மித்தையோ சாற்று "

என்றும்,
            "கையிலுறு புண்ணுக்குங் கண்ணாடி வேண்டுவமோ

மெய்யுணர்வி லுண்டோ விபரீத - மையறிவு

மோரறிவாய்ப் போனவிடத் தோகோகோ மும் முதலுஞ்

சோராம னிற்குமோ சொல்"

என்றும்,

"சைவஞ் சிவத்தோடு சம்பந்த மானமையாற்

சைவமே யத்துவிதஞ் சாதிக்குஞ் - சைவத்தை

வேறென்று கூறற்க வேறற்ற வேதாந்தக்

கூறென்று கொள்ளுதலே கொள்''

என்றும், வள்ளலார் திருவாய் மலர்ந்தருளினர்.

 
"புறனகங் கீழ்மேல் பக்கம் புணர்வதோர் பொருளு மில்லை

திறனுடை யுருவ மெல்லாந் தானாகித் தேக மின்றா

யறன் முறை யடங்கு ஞான யோகினா லறியப் பட்ட

விறன்மலி ஞானானந்த மேன்மையாய் விளங்கா நிற்கும்"

என்றும்,

            "நித்தனாம் பரமேசன் நானென்று நிச்சயிக்கின்

           முத்தனல் னெனினுமவன் முத்தனா முயிருடம்பின்

பெத்தமற ஞானத்தாற் காட்சி பெறின் சாந்தியுடைச்

சித்தனாய்ப் பொருட்பற்றுத் தீர்த்து வீடடையுமால்"

என்றும் தேவிகாலோத்தரத்தில் பரமசிவம் பார்வதி தேவியார்க்கு அருளியிருக்கிறார்.

 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது அத்துவித நிலையை நன்கு அறிவிக்கவும், தன்னையறிந்து தலைவனிற்கலந்து, தானென்ற தற்போத மொழிந்து, தான துவாய், ஏகமாயகண்டமாய்த் ததாகாரமாய், விண்போன் றெங்கு நிறைந்து நிற்பதாகிய அதீத நிலையே முடிவான நிலையென்று திடமாயுணரச் செய்யவுமேயன்றிச் சிலர் மூடமதியாற் கருதுவதுபோல் அகங்காரத்தால் நானே கடவுள், என்னையன்றி வேறு கடவுளில்லை யென்று மூடத்தனமாய்த் தவறான பொருள் கொள்வதற்கல்ல. அப்படிக்கருதுவதும், வேதாந்தம் அப்படித்தான் கூறுகிறதென்று பிதற்றிக்கொண்டு தூஷித்துத்திரிவதும் வாசாஞானத்தால் குதர்க்கம் பேசித் திரியும் அறிவிலார் செய்கையேயாகும்.

 

மேற்கூறியபடி கானல் நீர், கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றரவு முதலிய வைகளைப்போலவும், கனவைப் போலவும் உலகம் பொய் என்பதை யொப்பாமல், உலகம், அதாவது மாயை நித்தியமே என்று கருதித் தருக்கிப் போரும் உளர். அக்கொள்கை சுருதி, யுக்தி, அனுபவங்களுக்கு மாறானதே. நாம் அனுபவமாக ஒன்றை அறியாமுன்னம், சுருதிகளில் கூறி யுள்ளவற் றில் ஆன்றோர்களாகிய மஹான்கள் அனுபவசித்தமாக வறிந்து கூறியவற்றை நம்பவேண்டும்.

 

தாயுமானவர்,

"விதிக்கும் பிரபஞ்ச மெல்லாம் – சுத்த

வெயின் மஞ்ச ளென்னவே வேதாக மங்கள்

மதிக்கு மதனை மதியார் - அவர்

மார்க்கந்துன் மார்க்கஞ்சன் மார்க்கமோ மானே... சங்கர

என்றும்,


“தேன் முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவு

நான்முகத் தேவே நின்னால் நாட்டிய வகில மாயை

கான் முயற் கோடோ வென்கோ கானலம் புனலோ வென்கோ

வான்முக முளரி யென்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும்”

     

என்றும், இன்னும் வேறுபல விடங்களிலும் உலகம் கானல் நீர், கயிற்றரவு, கனவு முதலிவற்றைப் போன்ற பொய்த்தோற்ற மென்று தாயுமானவர் கூறியுளர்.

 

            "மந்த விருளிற் கயிற்றாவின் மாறுபாடாய்த் தோன்றுதல் போல்

இந்த வுலகு முயிர்களுமவ் வீசன் றானு முயிரடையும்

பந்தம் வீடு மீசன்செய் பஞ்ச கிருத்தி யங்களுமே

அந்த நமது சொரூபத்தி லாரோ பிதமாய் நின்றிலங்கும்''

என்று குமாரதேவர் கூறியுளர்.

 

            "பழுதை பாம்பல வென்றொளி யாற்கண்டும்

பாம்பு வாதனை தீரா தவனென

வெழுமுன் சிற்சுக நின்னரு ளாற்கண்டு

மிந்நிலப் பொய்மை வாதனை நீங்கிலேன்

முழுது ணர்தன் முதலாய வெண்குண

மொய்த்த பஞ்சர மேமறை யுச்சியே

தழுவு வெண்சுதை மாளிகை நீடிய

           சமர மாபுரிச் சண்முக வேலனே''

என்று திருப்போரூர் சிதம்பரச் சுவரமிகள் கூறியருளினர்.
    

ஆயினும், சிலர் இந்த ஆரோபவாதத்தைக் குதர்க்கம் செய்து கண்டித்து மாயை மெய்யென்று சாதிப்பதும், மேற்கண்ட மஹான்கள் கூறியவற்றிற்குத் தங்கள் கருத்துக்குத் தக்கபடி அர்த்தம் செய்வதும், தூஷிப்பதுமாக விருக்கின்றனர். இத்தகையோர், பிராரப்த வலியால், உண்மையை யுணராதபடி அல்லது நம்பாதபடி, மறைக்கப்பட்ட மதியுடையோ ராதலால் அது அவர்கள் குற்றமன்றாம். அவர்கள் " முயற்குக்கால் மூன்றே " என்ற பிடிவாதத்தோடு விவகரிப்பராதலின் அவர்களோடு வாதம் புரிவது வீண் காலக்ஷேபமாகும் என்பதே அனுபவிகளாகிய அறிஞர் கருத்தாம். மாயை மெய்யென்போர் என்றும் மாயையைக் கடவார் என்பதை யுணர்வார்களாக. “மாயையெனும் திரையை நீக்கி நின்னை யாரறிய வல்லார்,'' என்று நந்தாயுமானவர் அருளியதாலும் இந்த உண்மை யறியக்கிடக்கின்றது. மாயை மெய் பொய் என்பதைக் குமாரதேவரருளிய கீழ்க்கண்ட செய்யுளால் நன்குணரலாகும்: -

    

மாயை யெனுமிவ் வரைக்கருத்த மதிக்கின் யாதொன் றிலாததுவே

           மாயை யெனவிப் படியிருக்க மதிப்ப ரதனை யிருவகையாய்

மாயை மெய்யென் றுரைத்திடுவர் மயக்கப் பட்டுத் தனை மறந்தோர்

      மாயை பொய்யென் றுரைத்திடுவர் மயக்க நீங்கித் தனையறிந்தோர்.


 தத்துவ விளக்கப்படலம் முற்றிற்று.

 

 

சந்தேகந் தெளிதற் படலம்.

 

சந்தேகங்களை அகற்றித் தெளிவை யளிக்கும் பாகம் என்று இதற்குப் பொருள். குரு தத்துவ உற்பத்தி ஒடுக்கங்களையும், ஆன்ம தரிசனம் பெறும் உபாயங்களையும் சீடனுக்கு உபதேசித்த பின், சந்தேகங்களுளவேல் அனுபவ ஞானம் நிலைத்து நிற்காதாதலின், சகல அய்யங்களையும் களைவான் றொடங்கி இப்படலத்தைக் கூறலுற்றார்.

 

உலகில் மனிதர் குழிதோண்டி ஒரு கம்பத்தையதில் நாட்டின், அதைச் சுற்றிக் குழியில் கற்களைப் போட்டு குத்திக்குத்திக் கம்பத்தை உறுதியாக நிலைக்கச் செய்கிறார்கள். அதுபோலவே, குருவும் பரமான் மசொரூபத்தில் அபேதமாகக் கலந்து நின்ற சீடனுடைய அனுபவம் சலனமின்றி நிலைத்து நிற்குமாறு இச்சந்தேக நிவர்த்தியைக் கூறுகிறார்.

 

தமது நிழல் போல் தம்மை விட்டுப் பிரியாது அன்போடு பற்றியிருக்கும் சற்சீடனை நோக்கி,

 

குரு: -       "மைந்தனே! நாம் இதுகாறுங் கூறியபடி யான் எனதென்பதும், தன்மை முன்னிலை முதலியனவுமாகிய விகற்பங்களெல்லாம் ஒழிந்து கூடஸ்த சொரூபமாகிய சாக்ஷிமாத்திரமாகவே இருக்கின்றனையோ? மனதினிடத்திருந்த சந்தேகங்களனைத்து மொழிந்தனவோ? தெளிவடைந்த உள்ளத்தினிடத்தில் இரண்டற்ற அயிக்கிய நிலைசித்தித்ததோ? உன்னுடைய அனுபவம் யாது கூறுதி'' என்று கருணையோடு கேட்டனர்.

 

சீடன்: -      அடிகாள்! தங்களது கருணையோடு கூடிய உபதேசமாகிய ஞானாதித்தன் முன் அடியேனது அஞ்ஞானமாகிய இருளும், சந்தேகங்களாகிய நிழல்களும் எங்கேனும் தலைகாட்டி நிற்கக்கூடியவைகளோ? ஆயினும் ஒரு மந்திரவாதியால் ஓட்டப்பட்ட பேயானது தேகத்தைவிட்டு நீங்கிய போதினும், அது மறுபடி வந்து சேராவகை எந்திரம் எழுதிக் கட்டுவதுபோல், தங்களுடைய அரிய ஞானோபதேசத்தால் அஞ்ஞான மாகிய மயக்கம் ஒழிந்தபோதிலும், என் அனுபவம் நிலையாகத்திரப்படும் பொருட்டு அடியேன் தங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்ளத்தக்க சில ஐயங்களுள. அவற்றைச் சந்நதியில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

சுவாமிகள் முன்னர் ''மஹாவாக்கியங்களை யுபதேசித்தருளியபோது, "அஹம்பிரம்மாஸ்மி'' என்ற சுருதிப் பிரமாணத்தால் உனது நிஜசொரூபத்தை நீ அறிதி'' என்றருளிய பிறகு, "அகண்டாகார சொரூபமாகிய பிரம்மமானது சுருதி வாக்கியத்திற்கு கோசரமாகாது (எட்டாது)” என் றருளினீர்கள். அவ்வாறே "உன்மனதினால் உன்னையறிதி'' என்றருளிப் பிறகு, "பிரம்மமானது துக்கமயமாகிய இம்மனதிற்கு எட்டாச் சுயம்பிரகாசம்'' என்றருளினீர். இதனால் இரண்டு சங்கைகளுண்டாயிருக்கின்றன. அவற்றை நீக்கியருளப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

 

முதல் கூறியது. -'' பிரம்மம் வாக்குக்கு எட்டும் - வாக்குக்கு எட்டாது'' என்பதாம்.

 

இரண்டாவது கூறியது. - "பிரம்மம் மனதிற் கெட்டும் - மனதிற் கெட்டாது' என்பதாம்.

 

இவை ஒவ்வொன்றும் "எட்டும் - எட்டாது" என்று முரண்படுவது காண்க.


       (இவற்றில் முதலாவதற்கு விடை கூறப்பட்டிருக்கிறது)

 

''மைந்தனே! பரப்பிரம்ம சொரூபமானது நாமரூபம், கறுப்பு, சிவப்பு முதலிய நிறம், நெட்டை, குட்டை, பருமன், சன்னம் முதலிய எவ்வித இலட்சணங்களும் உடையதல்ல; பஞ்ச பூதங்களில் ஒன்றுமல்ல; இவை இரண்டுமல்ல; ஆகையால் கரணங்களாலாவது, இந்திரியங்களாலாவது அறியக் கூடியவஸ்துவல்ல. இதனால் அது பிரத்தியட்சப் பிரமாணம், அநுமாணப் பிரமாணம், உபமானப்பிரமாணம் ஆகிய முதல் மூன்று பிரமாணங்கட்கும் எட்டாது.

 

அஷ்டப்பிரமாணங்கள்: - உபநிடதங்களில் எட்டுவிதப் பிரமாணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.


     அந்தக் கரண விர்த்தியாலறியத் தக்கவஸ்து எதுவோ, அதற்குப் பிரமா என்று பெயர். பிரமாவையறியக் காரணமாக விருப்பது எதுவோ அதற்கே பிரமாணம் என்று பெயர்.

 

(1) பிரத்தியட்சம், (2) அநுமானம், (3) உபமானம், (4) சத்தம், (5) அருத்தாபத்தி, (6) அநுபலப்தி, (7) ஐதீகம், (8) ஆகமம் எனப்பிரமாணங்கள் எட்டாம்.

 

(1) பிரத்தியட்சப்பிரமாணம்: – இது கண்காட்சியாக நேரில் ஒரு பொருளைக் கண்டு இது தான் இப்பொருள் என்றறிவது. நாம ரூபவஸ்துக்களே இப்பிரமாணத்தால் காணத்தக்கவை. இதற்கு மனோவிர்த்தி வேண் டுவதின்றாம்.

 

(2) அநுமானப்பிரமாணம்: - இது பிரத்தியக்ஷமாய்க்காணும் ஒரு வஸ்துவைக் கொண்டு, அவ்வாறு முன் கண்டிருக்கும் அனுமானத்தால், காணப்படாத வேறொருவஸ்து இருக்கிறதென்றறிவது. இதனால் இதைப் பிரத்தியட்சப் பிரமாணத்தில் அடக்கிக் கூறுவதும் உண்டு.

இது ஓரிடத்தில் புகையிருப்பதைக்கண்டு அங்கு நெருப்பிருக்கிறது என்று உணர்வது போன்றது. நெருப்பி னிடத்துப் புகையுண்டாவதை முன்பு கண்டிருக்கும் அனுமானத்தால், இப்போது புகையைக் கண்டவிடத்தில் அக்னி இருக்க வேண்டு மென்று ஒருவன் உணர்கிறான்.

 

(3) உபமானப்பிரமாணம்: - அறியாத ஒரு பொருளை யுணர்த்தும் பொருட்டு அதுபோன்ற அறிந்த ஒரு பொருளைத் திருட்டாந்தம் காட்டுகிறோம். அப்படிக்காட்டப்படும் திருட்டாந்தமே உபமானம் எனப்படும். மானைக்காணாத ஒருவன் காட்டில் அதைக்கண்டறிந்து கொள்ளும் பொருட்டு "மரை பசுப்போலிருக்கும்'' என்கிறோம். இதுவே உபமானப் பிரமாணத்திற்குத் திருட்டாந்தம். இதில் பசு உபமானமாகும். உபமானத்தால் அறியப்படும் பொருளுக்கு உபமேயம் என்று பெயர்.

 

(4) சப்தப்பிரமாணம்: - ஆப்த வாக்கியம், அதாவது நம்பிக்கையுடைய ஒரு நண்பன் கூறுவதால் ஒன்றையுணர்வது. தன் தந்தையோடு, அன்னிய தேசம் சென்றிருந்த நண்பன் ஒருவன் திரும்பி வந்து ''உன் தந்தை யங்கு இறந்துபோனார்" என்று கூறுவது போன்றது சப்தப்பிரமாணம்.

 

(5) அருத்தாபத்திப்பிரமாணம்: - பகலுண்ணாது நான் உபவாசி என்பவன் தேகம் பருத்திருப்பதைக் கண்டு, அவன் இரகசியமாக இரவில் உண்கிறான் என்றறிவது போன்றதே அருத்தாபத்திப் பிரமாணமாம்.

 

எஃதின்றி ஒன்று சம்பவியாதோ அதற்கு அந்த இன்றியமையாத வஸ்து உபபாத்தியம் எனப்படும். பகலுண்ணானிடம் இராப்போஜனமின்றிப் பருமன் சித்தியாது. ஆதலின், அவனது பருமன் இராப்போஜனத்தின் உப்பாத்தியம் எனப்படும். (இராப்போஜனத்தின் சமபாத்தியம்.)

 

எதனபாவத்தால் எதனபாவம் உண்டாகுமோ அதற்கு அது உபபாதகமாகும். இராப்போஜனத்தின் அபாவத்தால் பகலுண்ணானுக்கு ஸ்தூலத்தன்மையின் அபாவம் நேரிடும். ஆதலின், இராப்போஜனம் ஸ்தூலத்தன்மையின் உபபாதகமாம் (சம்பாதகம்). உபபாத்தியத்தின் சம்பந்தஞானத்தால் உபபாதகத்தைக் கற்பித்தலே அருத்தாபத்திப் பிரமாணத்தாலறிவதாகும்.

 

(6) அநுபலப்திப்பிரமாணம்: - இதற்கு அபாவப்பிரமாணம் என்றும் கூறுவார்கள். அபாவத்தின் உண்மை ஞானம் எதனாலுண்டாகிறதோ அதற்கு அநுபலப்தி அல்லது அபாவப்பிரமாணம் என்று பெயர். "இங்கு புத்தகம் இல்லை'' என்றபோது புத்தகம் புலப்படாமையே அவ் வாக்கியம் உண்மை யென்பதை யறிவிக்கிறது. அதுவே அநுபலப்திப்பிரமாணம்.

 

(7) ஐதீகப் பிரமாணம்: - காலாந்தரமாக யாவரும் கூறிக்கொண்டிருப்பதைக் கொண்டு ஒன்றை யுண்மையென அறிவது. அது "இம் மரத்தில் பேயிருக்கிறது" என்பது போன்றதாம்.

 

(8) ஆகமப்பிரமாணம்: - சாத்திரங்களில் கூறியுள்ளவற்றை நம்புதல்.

 

உபமான வஸ்துவையும், உபமேய வஸ்துவையும் பிரத்தியக்ஷப் பிரமாணத்தாலேயே காண்கிறோம். அதாவது, உபமானப் பிரமாணத்திற்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமே யாதாரமாயிருப்பதால் உபமானப் பிரமாணத்தைப் பிரத்தியக்ஷப் பிரமாணத்தில் சேர்த்தும், ஆகமப் பிரமாணமும் நம்பத்தக்க ஒருவரால் கூறப்பட்டதால் அதைச் சப்தப்பிரமாணத்தில் சேர்த்தும் ஆறு பிரமாணங்களென்றே கூறுவது முண்டு.

 

பிரத்தியக்ஷம், அநுமானம், உபமானம் என்று மூன்று பிரமாணங்களுக்கும் பிரம்மம் விஷயமாகாது. எல்வாறெனின்,

 

பிரம்மம் நாமரூபமற்றது; ஆதலால் கட்புலனுக்குப் புலப்படாது. பஞ்சபூதங்கள் முதலியவற்றைச் சேர்ந்ததுமல்ல. ஆதலால் இந்திரியங்களாலும் அறிய முடியாதது. ஆகையால் பிரம்மம் பிரத்தியக்ஷப் பிரமாணத்திற்கு விஷயமன்றாம்.

 

பிரம்மத்திற்கு புகையைப் போல் பிரத்தியக்ஷமாக இந்திரியங்களின் உதவியாலறியத்தக்க குறிகுண முதலிய ஒன்றுமில்லை. அக்கினியினின்று புகையுண்டாவதுபோல் பிரம்மத்தினிடமாக ஒன்றும் உண்டாவதுமில்லை. ஆகையால் பிரம்மம் அநுமானப் பிரமாணத்திற்கும் விஷயமாகாது.

 

இனி உபமானப் பிரமாணத்தில், அறியவேண்டிய வஸ்துவைப் போன்ற வேறொருவஸ்து வேண்டும். பிரம்மத்தைப் போன்ற வேறொரு வஸ்து எதுவுமில்லை. பிரம்மம் சுஜாதி விஜாசி சுவகத பேதமற்றது என்று சுருதி கூறுகிறது. மரத்திற்கு மரம் சுஜாதி, மரத்திற்கு கல்வி விஜாதி, மரத்திற்கு பூ, பிஞ்சு, காய், கனி, சுவகதம். பிரம்மத்தினிடத்தில் இத்தகைய பேதங்களொன்றுமில்லை. ஆகையால் பிரம்மம் உபமானப் பிரமாணத்திற்கும் விஷயமாகாது.

 

பிரம்மம் ஆகமப் பிரமாணத்திற்கும் எட்டாது. ஏனெனில், அப்ப மூர்த்திகள் கூறியது போல வனை இவ்வண்ணன், இவ்வுருவன், இந்நிறத்ன்த, இத்தன்மையன், இவ்விடத்தன் என்று எழுதிக்காட்ட முடியாது.

 

இனி வாக்குக் கெட்டாது என்றுரைத்த வேதம் பிறகு வாக்குக் கெட்டும் என்று கூறியதே, இந்த இரண்டில் எது பிரமாணம் என்று கேட்பாயாயின் கூறுதும். இந்த இரண்டு வாக்கியங்களும் மெய்யே. வேதங்கள் ஒருபோதும் அசத்தியங்கூறா. சுருதிக்கும் எட்டும் என்றது எவ்வாறெனின், வேதம் கூறாமற் கூறிற்று. எவ்வாறெனின்,

 

ஒரு ஸ்திரீயானவள் அவளது கணவனல்லாத மற்றவர்களை ஒவ்வொருவராகக் காட்டி, "இவன் உன் கணவனா? இவன் உன் கணவனா?'' என்று கேட்டால் ''இவனல்ல, இவனல்ல" என்கிறாள். கடைசியில் தன் கணவனைக் காட்டும் போது நாணமடைந்து மௌனமாய்த் தலை குனிந்து கொள்கிறாள். அப்போது அவள் இவர் என் கணவர் என்று வாயாற் கூறாவிடினும், நாணத்தோடு தலை குனிந்து கொண்ட மௌனத் தால் இவன் என் கணவன் என்று கூறாமற் கூறிவிடுகிறாள். இது போன்றே வேதமும், அநுர்த சடதுக்கமாகிய தத்துவங்களை யெல்லாம் இது நீ யன்று இது நித்தியமும் சித்தும் ஆனந்தமுமானதல்ல. ஒர் காலத்திலிரு ந்து ஓர் காலத்தி லில்லாது போவதால் நித்தியமல்ல அநித்தியம்; இது உன்னாலறியப்படுகிறது, உன்னையது அறியாது ஆகையால் சித்தல்ல சடம், துக்கமுடைய தாகையால் ஆனந்த முடைய தல்ல. ஆகையால் இது நீ யன்று; இது நீ யன்று என்று யாவற்றையும் கழித்துக்கொண்டே போய், முடிவில் நீக்கப்படாததாய் எஞ்சியிருக்கும் பிரம்ம சொரூபத்தை மௌனமாகக் கூறாமற் கூறும்.

 

இதனால் பிரம்மம் வாக்குக் கெட்டும் என்று கூறப்பட்டது.

 

[இதுகாறும் கூறியவற்றால் சீடன் கேட்ட இரண்டு சங்கைகளில் ''பிரம்மம் வாக்கிற்கெட்டும், வாக்கிற்கெட்டாது'' என்ற முதற்சங்கைக்கு உத்தரம் கூறப்பட்டது. இனிப் பிரம்மம் "மனதிற் கெட்டும், மனதிற் கெட்டாது'' என்ற இரண்டாவது சங்கையைப் பற்றிக் கூறப்படுகிறது.]

 

முந்திய சங்கையை நிவர்த்தி செய்த ஆசான் சீடனைக் கிருபையோடு நோக்கி, "மைந்தனே! நாம் முதற் சங்கையைப்பற்றிக் கூறிய விஷயத்தையுணர்ந்து கொண்டாயல்லவா; இனி இரண்டாவது சங்கையாகிய " பிரம்மம் மனதிற்கெட்டும், பிரம்மம் மனதிற்கெட்டாது'' என்பதிலுள்ள சங்கையைப்பற்றிக் கூறுகிறோம் கேட்பாயாக.

 

இந்திரியங்களைத் தொழில் செய்யவைக்கும் அரசன் அந்தக்கரணமேயாகும். இந்த அந்தக்கரண விர்த்திகள் புத்திரூபமாகவும் மனோ ரூபமாகவும் வெளியிலும் உள்ளும் சஞ்சரித்தாடும், புத்திரூபமான அந்தக்கரணம் சொச்ச பதார்த்தம். அதாவது, கண்ணாடி போல் பிரதிபிம்ப யோக்கியமானது. கண்ணாடியைப் பார்த்தால் நமது முகம் போல் அதற்குள் இன்னொரு முகம் தோன்றுகிறது. அது போல் புத்திரூபமான அந்தக்கரணத்தில் சித்ரூபனான கூடஸ்தனுடைய சாயை பிரதி பலிக்கும். இதற்கு ஆபாசன் என்று பெயர். உன்மனோவிருத்தி அந்தச் சாயையின் வழியாகச் சஞ்சரிக்கும்; அதாவது விஷயங்களோடு சம்பந்திக்கும். இந்தச் சுத்தமான சத்துவ மனோவிர்த்தியே ஞானம் என்று கூறப்படுவது. (இது நுண்ணறிவால் ஊன்றி யுணரத்தக்கது.]

 

உருக்கிய வெண்கலமானது பலவித அச்சுகளில் ஊற்றப்பட்ட போது அந்தந்த அச்சின் உருவத்தை யடைகிறது. அதுபோல் ஆபாசசகித அந்தக்கரண விருத்தி இந்திரியவாயிலாக வெளிச்சென்றபோது, அந்தக்கரண விர்த்தியாகிய பாகம் வெளியிலுள்ள கடபடாதி விஷயங்களின் ஆவரணத்தைப் (மறைப்பைப்) பங்கம் செய்கிறது. அதாவது, விஷய சமானாகாரமாய்ப் பரிணமிக்கிறது. ஆபாசன் என்ற பாகம் இத கடம், இது படம் என்று விளக்கி வைக்கிறது.

 

இருட்டிலுள்ள ஒரு பொருளைக் காணத் தீபமும் கண்ணும் ஆகிய இரண்டும் வேண்டும். அதைப்போல் உலகிலுள்ள ஜடபதார்த்தங்களைக் காண மேற்கண்டபடி மனோவிர்த்தியும் சிதாபாசனாகிய பலமும் வேண்டும். ஆனால் பிரகாசித்துக்கொண் டிருக்கும் சூரியனைக்காண விளக்கு வேண்டியதில்லை; கண்மட்டுமே போதும். அதுபோல், சித்தாகிய மெய்ப்பொருளைக்காண அந்தக் கரண விருத்தியொன்றே போதும். சிதாபாசனென்னும் பலம் வேண்டுவதில்லை. இப்போது மனம் என்பதில் விருத்தி என்ற பாகமும், பலம் என்ற ஒரு பாகமும் ஆக இரண்டு பாகங்களுளவென நன்கு உணரலாகும். விருத்தி, பலம் ஆகிய இரண்டும் கூடியே மனம் என்பதாகிறது. ஜட மான உலகப் பொருள்களைக் காண மனதின் இரண்டு பாகங்களும் வேண்டும் என்றும், சித்தாகிய வஸ்துவைக்கான விர்த்திமட்டுமே போதுமென்றும் மேலே கூறினோம். அதாவது பிரம்மம் மனதின் விருத்தி என்ற பாகத்திற்கு மட்டுமே எட்டும்; பலம் என்ற பாகத்திற் கெட்டாது.

 

இதனாற்றான் 'பிரம்மம் மனத்திற்கெட்டும், பிரம்மம் மனத்திற் கெட்டாது' என்று கூறியது. இதன் அருத்தம் இவ்வாறென்றுணர்ந்து உனக்குண்டான ஐயங்களொழிந்து தெளிவடைவாயாக.'' என்று கூறினார்.


   [மேல் கூறப்பட்ட விஷயங்களிலிருந்து ஜீவன் என்பது என்ன வென்
 றறியச் சந்தர்ப்பமிருக்கிறது. அந்தக் கரணம் சத்துவகுண காரியமாதலின் சொச்சம். அதில் சாக்ஷியாகிய கூடஸ்தனுடைய சாயை பதிகிறது. அச்சாயையே சீவன். அதாவது கூடஸ்தன் + சாயை + அந்தக் கரணம், மூன்றும் சேர்ந்ததே ஜீவன் எனவேண்டும்.

 

குளத்து நீரில், ஆகாயத்தில் பிரகாசிக்கும் சந்திரனுடைய பிரதிபிம்பம் தோன்றுகிறது. பிரதிபிம்பம் என்பது தோன்ற இரண்டு வஸ்துக்கள் அவசியம் வேண்டும். முதலாவது, மூலகரணமான ஒருவஸ்து வேண்டும். அது நமது முகமே என்று வைத்துக்கொள்வோம். இதற்கு அதிட்டானம் என்று பெயர். இரண்டாவது, பிரதிபிம்ப யோக்கியமான ஒரு வஸ்து வேண்டும்; அதுவே கண்ணாடி... இவை யிரண்டும் சேர்ந்தபோது கண்ணாடியில் நமது முகத்தைப்போல் தோன்றும் சாயலே பிரதிபிம்பம் எனப்படுவது. முதல் இரண்டில் ஒன்றின்றேல் பிரதிபிம்பம் இன்றாம். இதுபோலவே குளத்து ஜலத்தில் தோன்றும் சந்திரனுடைய பிரதிபிம்பமும். அதிட்டான சந்திரனும் ஜலமும் இன்றி ஆபாச சந்திரனில்லை. இதைப் போலவே அந்தக்கரணத்தில் பிரதிபலித்த ஆன்மாவாகிய கூடஸ் தனது சாயையே ஜீவன்.

 

குளத்து ஜலம் அசைந்தால் ஆபாசசந்திரன் அசைவதுபோல் காணப்படுகிறது. அதிட்டான சந்திரனுக்கோ அசைவேயில்லை. இந்த ஆபாசசந்திரன், அதிட்டான சந்திரனே நாம் என்பதை மறந்து, தன்னை வேறாகக் கருதிக்கொண்டு, ஜலம் அசைவதைத் தான் அசைந்து அலைவது போல் கருதிக் கொண்டால் எப்படியிருக்குமோ, அப்படியேயிருக்கிறது ஜீவனுடைய தன்மை. ஜீவன் தான் அதிட்டானமாகிய கூடஸ்தன் என்பதை மறந்து தான் ஜீவனென்றும், மனம் இயங்குவது ஆபாசனாகிய தன் சக்தியால் தான் என்பதைக் கவனியாது, மனம் தன்னையன்றி வேறொரு பொருள் என்றும், அதன் தொழில்களெல்லாம் தன் தொழில்களென்றும் மயங்கியிருக்கிறது.

 

இச்சீவன் தான் அதிஷ்டானமாகிய கூடஸ்தனையன்றி வேறாக இல்லையென்பதை நினைத்துக் கூடஸ்தனாகிய சாட்சியாகவே நின்று, இதுகாறும் நம்மை யாட்டிக் கொண்டிருந்ததாய் நாம் மயங்கியிருந்த மனம் எங்கே யென்று தேடிப்பார்த்தால், அப்போது மனதின் உண்மை வெளிப்படும். அதாவது,

 

''உனக்குள் இருக்கும் நான் என்பதைக்கொண்டு மனம் எங்கேயிருக் கிறதென்று பார்த்தால் மனம் காணப்படாது. மனம் என்பதைக் கொண்டு நான் என்பதைப்பார்! அப்போதும் நான் என்பது தோன்றியதே மனம் * என்பது இல்லாமற்போம்" என்று ஆன்றோர் கூறிய அனுபவம் உண்மையென விளங்கும்.

 

ஏககாலத்தில் நான் என்பதையும், மனம் என்பதையும் காண முடியாது. இதனால் இவையிரண்டில் ஒன்றே உண்மையிலுள்ளது என்று தெரிகிறது. அதோடு இருவித சோதனையிலும் நான் என்பதே உள்ளதாகவும் மனம் என்பது இல்லாததாகவும் போகிறபடியால், நான் என்பதே மனம் தோன்றுவதற்கும் காரணமாக விருக்கிறது என்று 'அங்கை நெல்லிபோல்' விளங்கும். இது விகங்கமார்க்கமாக மனோலய மடைவதற்கு நேர் வழியாகும். ஆனால் இது கஷ்ட சாத்தியமான மார்க்கம். இச்சந்தர்ப்பத்தில் மெய்ஞ்ஞான சொரூபியாகிய தாயுமான சுவாமிகள் மனதை நோக்கி "நின்ஜன்மம் தேயத்தில் நீ செல்லல் வேண்டும்" என்று கூறியது சிந்திக்கத்தக்கது.)

 

(இனிச் சதா அலைந்து கொண்டிருக்கும் சுபாவத்தையுடைய மனதை யெவ்வாறடக்குவது என்பதைப் பற்றிக் கூறப்படுகிறது.)

 

சீடன்: -      ''சுவாமி! பிரம்மம் மனோவாக்குகளுக்கு எட்டும் எட்டாது' என்றவற்றில் அடியேனுக் குதித்த சந்தேகங்கள் நிவர்த்தியாதற்பொருட்டு, தாங்கள் அருளிய காரணங்களையெல்லாம் நன்குணர்ந்தேன். ஆயினும் அடியேன் கூறிக்கொள்ள விரும்பும் விண்ணப்பம் இன்னும் ஒன்றுளது. தயை புரிந்து அதைச் செவியேற்றருளப் பிரார்த்திக்கிறேன். மனமானது சற்றும் சலனமடையாது அலையற்ற சாகரம் போலவும் நிவாததீபம் (காற்றில் சலிக்காது நிற்கும் தீபச்சுடர்) போலவும் எங்கும் நிறைந்த பரிபூரண நிலையாகிய பிரம்மாகார மாவதல்லவா சமாதி நிலை யென்று கூறப்படுவது? இம்மனமோ ஊஞ்சலைப்போல் சதா அசைந்து கொண்டயிருக்கும் சுபாவமுடையது. ஒரு வினாடிக்குள் பல உலகங்களாகத் தோன்றும். இத்தகைய மனம் எவ்வாறு பிரம்மாகாரமாகிய சமாதி நிலையில் அசைவற்று நிற்கும்? அதை யருள் புரியப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

 

"அலையிலாத சாகரம் போல் அனிலம் சேரா விளக்கது போல்

      நிலையொன்றியநற் சமாதியுற்று நின்றாட்கமலத் தெழும்புரச

      நிறைவாரிதியிற் புகுந்தடியேன் நேசித்ததனி லிருப்பேனோ

*            *            *            *            *    

என்று சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் சந்நதிமுறையில் கூறி யருளினார்.

 

ஆசான்: -    மனம், சத்துவம், இரஜசு, தமசு என முக்குணங்களையுடையது. இவற்றில் ஒரு குணம் மேலோங்கின் மற்றை யிரண்டும் கீழடங்கி நிற்கும். ஆகவே எப்போதும் மூன்றில் ஒரு குணமே விவகாரத்திலிருக்கும். அம்மூன்று குணங்களில் சத்துவ குணம் மேலோங்கி யிருக்கும் போது ஞானம், ஈசுரபக்தி, கருணை, சாந்தம் முதலிய சன்மார்க்ககுணங்களுண்டாகும். இரஜோ குணம், மேலோங்கியிருக்கின் உலக சம்பந்தமான விஷயங்கள், தேக சம்பந்தமான விவகாரங்கள், சாத்திரவாசனை யிவைகளில் விருப்பத்தை யுண்டாக்கும் குணம், இவை உண்டாகும். தமோதணம் மேலோங்கி நிற்கும் போது அகங்காரம், கோபம், டம்பம், சோம்பல், நித்திரை, காமக்குரோதாதிகள் முதலிய குணங்களுண்டாகும்.

 

[இந்த மூன்று குணங்களில் தமோகுணம் யாவரும் நீக்க வேண்டிய குணமே யென்று நன்கு புலப்படும். இரஜோகுண சம்பந்தமாகிய உலக வாசனை, தேக்வாசனை, சாத்திரவாசனை ஆகிய இம்மூன்றுங்கூட ஞானாப்பியாசியால் விடத் தக்கவைகளேயாகும். இவற்றில்,

 

(1) உலக வாசனை என்பது உலகத்தில் யாவரும் நம்மைப் புகழும் படிக்கும், துதிக்கும்படிக்கும் நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவது. அவ்வாறு எல்லோரும் பிரியப்படும்படி நடந்து கொள்வது ஆகாத காரியம். மகா பதிவிரதா சிரோன்மணியாகிய சீதாபிராட்டியின் மேலேயே அவதூறு கூறியது இவ்வுலகம். ஆதலின் "தத்தமது மனதிற்குத் தோன்றியவாறாகவும், உண்மையை யுணராது மேல் விஷயத்தை மட்டும் நோக்கியும் நிந்தையோ, துதியோ, இகழ்ச்சியோ, புகழ்ச்சியோ செய்யும் மனிதருடைய சொல்லால் நமக்காக வேண்டிய தொன்றுமில்லை. ஆன்ம லாபத்தைப் பெறும் வழியில் நாம் நடக்க வேண்டும்" என்ற நாட்டங்கொண்டு அவ்வுலக வாசனையை யொழித்து விடவேண்டும்.

 

(2) தேகவாசனை என்பது காயகற்பாதிகளால் தேகத்தைக் நெடுங்காலம் அழியாமல் வைத்துக்கொண் டிருக்க வேண்டும், அதைச் சுத்தி செய்து ஆடையாபரணம் கந்த புஷ்பாதிகளால் அலங்கரித்து வைக்க வேண்டும் என்று இச்சித்தல். ''எத்தனை நாட்களிருந்தாலும் இத்தேகம் அழியும்; மேலே எவ்வளவு அலங்கரித்தாலும் உள்ளே மலம் நிறைந்தபாண்டமேயாகும் இத்தேகம். இதில் இருக்குமட்டும் நாம் துன்பத்தையனுபவிக்க வேண்டியதே" என்று கருதி ஞானாப்பியாசி தேகத்தை வெறுத்து அதை அன்னியமாகக் கண்டு மறக்கவே முயல வேண்டும்.

 

(3) சாத்திராபிமானம் என்பது உலகிலுள்ள எல்லாச் சாத்திரங்களையும் கற்று நாம் எல்லாவற்றிலும் பண்டிதனாக வேண்டும் என்று விரும்புதல். " இது ஒருபோதும் கை கூடாத காரியம். மேலும், தீராத அவாவையுண்டாக்குவதால் இது ஞானத்திற்கு விரோதி'' என்று உணர்ந்து, எதை யறிந்தால் எல்லாவற்றையு மறிந்ததாகுமோ அந்த சிற்சொரூபத்தை யறியவே ஞானாப்பியாசி முயல வேண்டும்.

 

மனதின் சத்துவகுணம் உத்தம குணம் - இரஜோகுணம் மத்திமகுணம் தமோகுணம் அதமகுணம் - என்று கூறப்பட்டிருக்கிறது. சத்துவம் வெள்ளை நிறமும், இரஜசு சிவந்த நிறமும், தமசு கறுப்புநிறமும் போன்றன. அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம் என்ற ஐந்தில், உள்ளம் என்பதே சத்துவம்; மனம், புத்தி, சித்தம் இவைமூன்றும் இரஜசு, அகங்காரம் தமசு. இச்சத்துவம் மனதின் அருவபாகம்; மற்றைய உருவபாகம். ஆகவே அருவமனம், உருவமனம் என மனதில் இரண்டு பாகங்களுண்டு. இவற்றைப் பற்றிப் பின்னர் நூலிலேயே விவகரிக்கப்படும். ஆண்டுக் கண்டுகொள்க.

 

(இனி மேற்கண்டவாறு மூன்று குணங்களையுடைய மனம் எவ்வாறு ஒடுங்கிச் சமாதிநிலையை யடையுமென்பதைப் பற்றிக் கூறப்படுகிறது.)

 

மேலே கூறப்பட்ட சத்துவம், இரஜசு, தமசு என்ற மூன்று குணங்களில் சத்துவகுணமே மனதின் இயற்கையான குணம். மற்ற இரஜோதமோ குணங்கள் இடையில் வந்து சேர்ந்தவை. எப்போதும் இயற்கையாயுள்ள குணமே நிலையாகவிருக்கும். இடையில் வந்து சேர்ந்த குணங்களை நீக்கினால் அவை நீங்கிவிடும். சத்துவகுணத்தை விடாது பற்றியிருந்தால் இரஜோதமோ குணங்கள் நசித்துப்போம். உள்ளமே மனதின் சத்துவ குணபாகம். இரஜோதமோ குணங்கள் நசித்ததே சத்துவகுணமாகிய உள்ளம் களங்கமற்ற ஆகாயம் போல் சலனமின்றி அதிசூக்கும் நிலையையடையும். ஆகவே அவ்வாறே சலனமற்றதும் அதிசூக்கும் மானதுமாகிய பிரம்மத்தில் கலந்து ஏகமாகி நிர்விகல்ப நிலையைத் தானே யடையும்.

 

[இரஜோகுணம் சலனத்திற்குக் காரணமாகவுள்ளது. தமோகுணம் ஸ்தூல பதார்த்தங்களை யுணர்தற்குக் காரணமாக வுள்ளது. இச்சை, கோபம், அகங்காரம், சோம்பல், நித்திரை, துக்கம், சந்தோஷம் யாவும் இந்த இரண்டு குணங்களையும் சேர்ந்தனவே. இந்தக்குணங்கள் இடையில் வந்து கலந்தனவாதலின் தாமே வந்து தாமே நீங்கிவிடும். ஒருபோதும் நிலையாய் நிற்கமாட்டா. திருட்டாந்தமாக ஒரு மனிதனை யின்னொரு மனிதன் துர்மொழிகளால் வையும்போது அம்மனிதன் அடங்காக் கோபமுடையவனாகிறான். அச்சமயம் அவனை நோக்கி "அப்பா இன்னும் அரைமணி நேரம் இக்கோபத்தை யிந்தத் தீட்சணிய நிலையிலேயே வைத்துக் கொண்டிரு" என்றால் அவனால் முடியுமோ? ஒருபோதும் முடியாது. அக்கோபம் அந்த வினாடி முதலே கொஞ்சங் கொஞ்சமாகத் தணியத் தொடங்கும். இவ்வாறே நமக்குண்டாகும் சந்தோஷம், துயரம் யாவும் எந்தச் சந் தோஷமும் வரவரக்குறைந்து போம். "அப்பா! இதைச் சகித்துக்கொண்டு இனி யெப்படி உயிர் வைத்துக்கொண்டிருக்கப்போகிறோம்" என்ற துயரமும் காலம் கழியக் கழியக் குறைந்து பிறகு மறந்தேபோம். இவற்றை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், இவை நம் சுபாவ குணமல்ல.

 

சத்துவகுணம் சலனமற்ற சாந்தகுணம். ஒருவன் விரும்பினால் அதை விடாமல் பற்றியிருக்கலாம். ஒருவனுக்கு பத்து ரூபாய் கொடுக்கிறேன். இன்று முழுமையும் யார் என்ன வையினும் கோபியாதே " என்றால் சாந்தமாகவே யிருப்பான். இலக்ஷ ரூபாய் கொடுப்பதாயினும் கோபத்தையோ துயரத்தையோ, வரும்படி செய்யவோ நிலையாக வைத்திருக்கவோ முடியாது. சாந்தமாகிய சத்துவகுணமே மனதின் சுபாவகுணமாதலின் அதனை விடாது பற்றியிருக்கக் கூடும்.

 

சூரியனுடைய கிரணங்கள் சாதாரணமாக எங்கும் சிதறிப் பரவியிருக்கின்றன. இதனால் அவை நம்மேல் படினும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம். எந்தவஸ்துக்கள் மேல் படினும் அவை எரிந்தழியாதிருக்கின்றன. கொஞ்சம் பஞ்சைத் தரையில் வைத்து அதற்குமேல் சற்று தூரத்தில் புறக்கு விவான ஒரு கண்ணாடியை, அதாவது நடுமையம் அதிக கனமாகவும், சுற்றுப்பக்கம் ஓரங்களில் போகப்போக சரிவாகப் போய் முடிவில் குறைந்த கனமாகவும் இருக்கும் கண்ணாடியை (Convex glass)ப் பிடித்தால் அதில் பிரவேசிக்கும் சூரியக் கிரணங்கள் கீழே செல்லும் போதுயாவும் கண்ணாடியின் நடுமையத்திற்கு நேர் ஒரேவிடத்தில் சேர்கின்றன. அக்கிரணங்களையவ்வாறு ஒரே விடத்தில் சேர்க்கும் சக்தி அத்தகைய கண்ணாடிக்கிருக்கிறது. பரவியிருந்த போது ஒரு கெடுதியும் செய்யமுடியாத அக்கிரணங்கள் அவ்வாறு ஒன்றாய்க் கூடியதும் அந்தவிடத்திலுள்ள பஞ்சையுடனே எரியச் செய்யும். தேகத்தின் மேல்பட்டாலும் தீயைப் போலவே சுடும்.

 

இது போன்றே மனதின் வல்லமை சாதாரணமாய்ச் சதா சலிக்கும் குணமும், விஷயங்களைப்பற்றும் குணமுமாகிய இரஜோதமோ குணங்களாகப் பரவியிருக்கிறது. நிர்ச்சலனமான சத்துவகுணத்தில் அவ்வல்லமை ஒரே இடத்தில் சேர்வதால் மனம் அபார சக்தியுடையதாகிறது. அதனால் ஏகாக்ர சித்தமுடையோர் பல அரிய அதிசயமான காரியங்க ளைச் செய்கிறார்கள். முடிவில் அவ்வல்லமை மாயையெனுந் திரையை நீக்கிப் பரம்பொருளையறியவும் செய்கிறது.

 

மூன்று குணங்களில் ஒன்று மேலெழும்போது மற்றை யிரண்டும் தாழ்ந்தடங்கும் என்பதற்கு,

 

"வாழுஞ் சத்துவ மற்றையவ் விரண்டையு மறைத்துத்

தாழு மற்றையவ் விரண்டுமத் தமோகுணந் தழைப்பின்

வீழுஞ் சாத்துவந் தமங்களவ் விரசதம் விளைவி

னூழின் மற்றிவை யிரண்டுந்தாழ்ந் தொன்றுமிக் குளவாம்" (வாசிட்டம்)

 

(சத்துவகுண மாத்திரமாகச் சேடித்த மனமாகிய உள்ளம் பிரம்மத்தோடு கலந்து ஏகமாக நிற்ப தெவ்வாறெனத் திருட்டாந்தத்தோடு கூறுகிறார்.)

 

சற்றும் மாசில்லாத ஒரு கண்ணாடியையின்னொரு மாசற்ற கண்ணாடியின் முன் காட்டும் போது, இக்கண்ணாடியும் அதே மயமாய் நிர்மலமாய் அபேதமாய் நிர்விகற்பமாய்த் தோன்றும். அதுபோல், பிரம்மத்தைப் போல் நிர்மலமாகவும், மாசற்றதாகவும், சாந்தமானதாகவும் உள்ள உனதுள்ளம், அகண்ட சொருபமாயும், சத்தாயும், சித்தாயும், ஆனந்தமாகியுமுள்ள அப்பிரம்மத்தில் ஐக்கியமடைந்து தெளிந்த நிலையில் நின்றால் உலகத்தோற்றமேது சலனமேது என்றுணர்ந்து சந்தேகந் தீர்வாய்.

 

இப்போது கூறியவற்றால் சலனமின்றிக் களங்கமற்றதாய் விளங்கும் உள்ளமே அறிவென்பதும், ஆன்மாவென்பதுமாம் என்று விளங்கும். இந்த ஆன்மா சாக்ஷிமாத்திரமா யுள்ளது.

      "சாந்தமே தற்சாட்சி தற்சாட்சி யேபிரமம்

      போந்த பிரமமே பூரணமா - மாய்ந்துணர்ந்த

     சுத்த பரி பூரணமே தோன்றாச் சுவானுபவஞ்

சித்தநிலை தானே சிவம்.''                         (சொரூபசாரம்)
  

இந்த ஆன்மாவும் பிரம்மமும் ஒரே இலட்சணமுடையவை யாதலின் இவையிரண்டும் அபேதமாய் ஏகரசமாய்க் கலந்தொன்றாகும். ஆன்ம பரமான்மாக்களில் பேதம் கற்பிப்பவன் இரெளாவாதி நரகத்தை யடைவான் என்பது பிரமாணம். இவற்றுக்குள்ள பேதம் கடாகாயம் மகாகாயம் போல் சிறிது பெரிது என்ற அளவுபேதமேயன்றிச் சொரூப பேதமில்லை.

 

"கடமடமா முபாதிகளை நேதி செய்யிற்

      கடவானு மடவானு மொன்றே போல

மடமை முத லுபாதிகளை நேதி செய்யின்

மாசற்ற வான்மாவும் பரமு மொன்றே

யிடமருவும் வேதாந்த விசாரத் தாலே

யிருமைதரு முபாதியெலா நேதி பண்ணித்

தடமருவு மான்மபர வைக்கி யத்தைத்

தடையறவே முமூட்சுவெலா முணர வேண்டும்.''    (ஈசுரகீதை)

 

[“களங்கமற்ற ஆகாயம் போல் சலனமின்றியிருக்கும் உள்ளமானது அதே விதமாகவுள்ள பிரம்மத்தில் எகரசமாய்த் தானே நிற்கும் " என்று மேலே கூறப்பட்டதில், சத்துவ குண மாத்திரமாய்த் தத்சொரூப நிலையையடைந்த உள்ளம் தற்போத விழப்பில் ஐக்கிய நிலையடைவதேயன்றி, போத வுணர்ச்சியோடு எதிரிட்டு நோக்கி யொன்றில் கலப்பதில்லை; இதனாற்றான் உள்ளம் தானே அந்நிலையில் நிற்கும் என்றார். தற்போதம் தோன்றிய விடத்து அந்நிலை உண்மை நிலையன்றாம். ஏனெனில், உண்மை நிலை உண்டென்றும் இல்லையென்றும், ஒன்றென்றும் இரண்டென்றும் உணர வொண்ணா நிலையாதலின். தற்போத வொழிவில் தான் இன்பம் என்பதற்கு: -

 

"தன்மையும் முன்னிலையும் தானாய்ப் படர்க்கையுமா

     யென்னொழிவி லின்புமா யின்புமிது - வென்னாத

வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றா

னோதாமல் வேதமுணர்ந் தோன்"                        (ஒழிவிலொடுக்கம்)


     “எம்மதத் தோரெவ் வகைநிட்டை சொல்லினுஞ்

     சம்மத மேயெமக் குந்தீ பற

     தற்போத மாய்க்குமே லுந்தீ பற"                         (திரு உந்தியார்)

 

தலைபோதம் தோன்றிய விடத்து அந்நிலை யுண்மையன்றாம் என்பதற்கு: -


      "போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்

      போதம் பதைத்தளவே பொய்யாகு - மீது

      விழித்திமைப்பர் நின்றால் வெளியசைந்தாற் காற்றாம்

பழக்கமதைச் சாட்சியைப் போற் பார்.''              (ஒழிவிலொடுக்கம்.)

 

அகண்டாகார சொரூபத்தில் தன்னை யிழத்தலே நிலையாகும். சிவம் ஆன்மாவை விழுங்கித் தான் தானாகப் பிரகாசிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இதனால் பரமேசனுக்கு உயிருண்ணி யென்றும் ஒரு நாமமுண்டு.

 
     

"ஆனா வமுதே யயில்வே லரசே

      ஞானா கரனே நவிலத் தகுமோ

      யானாகிய வென்னை விழங்கி வெறுந்

      தானாய் நிலைநின் றதுதற் பரனே''                       (கந்தரனுபூதி)


     "இல்லையில்லை யென்னினொன்று மில்லா தல்ல

            **     **     **     **     **    
     “அல்லையுண்ட பகல் போல வித்தை யெல்லா

           மடையவுண்டு தடையறவுன் னறிவைத் தானே

வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு

            வேதகமாய்ப் பேசாமை விளங்குந் தானே”     என்றும்,

 

      "ஓராம லேயொருகா லுன்னாம லுள்ளொளியைப்

பாராம லுள்ளபடி பார்த்திருந்தால் - வாராதோ

பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்த வெள்ளந்

தத்திக் கரைபுரண்டு தான்''                               என்றும்,

 

தாயுமானவர் அருளியவை இச் சந்தர்ப்பத்தில் சிந்திக்கத்தக்கன.

 

ஐக்கிய நிலையில் தான் அதுவாதலன்றி முன்னிலைச் சுட்டில்லாததால் எதிரிட்டறிய வொன்றுமில்லை. தற்போத மற்ற விடமாதலின் அது இது வென்று கூற ஏதுவில்லை.


      "ஊமைகண்ட சொப்பனம் போன் றுள்ளே யறிவதன்றி

     நாமிதெனச் சொற்றிடவு நண்ணுமோ - தாமதம் போ

     லாங்க துவாய்ப் போவதலா லன்றிதா மென்றுரைக்க

வீங்கொருவ ருண்டோ விசை


     ஒன்றென் றிரண்டென்று மொன்றிரண்டே யாமென்று

மென்றோ நீ முத்திதனி லேய்ந்திடுவா - யொன்றென்று

சொல்லு மறிவைத் துரியாதீ தம்விழுங்கிற்

சொல்லுமவ னெங்குற்றான் சொல்.''    (வள்ளலார் - சிவஞானப்பிரகாச வெண்பா.)

 

அந்த ஞான நிலையில் மனச்சலனமில்லை யாதலின் பிரபஞ்சத் தோற்றரவு கனவு போல் அனுபவமாகத் தோன்றும்; அதற்கு ஐயமில்லை என்பதாம்.]

 

(மேலே கூறப்பட்ட விஷயங்களால் சமாதி நிலையிலிருக்கும் ஜீவன் முத்தர் மன மிறந்தோர் என்று தெரிகிறது. சீவன் முத்தரும் பிராரப்த போகத்தைப் புசிக்க வேண்டுமே, மனமின்றி எப்படி போகங்கூடும் எனச் சந்தேகங்கொண்டு சீடன் வினவுகிறான்)

 

''பரமாசாரியரே! சீவன் முத்தர்களுடைய மனம் பிரம்மத்தோடிரண்டறக் கலப்பதாகிய சமாதியில் நாசமாய் விட்டால், அவர்கள் பிராரப்த போகத்தை எப்படி யனுபவிப்பார்கள்? சீவன் முத்தரும் தேகமுள்ளளவும் பிராரப்தத்தைப் புசித்தே தீரவேண்டுமென்பது விதியன்றோ? மனமில்லாமல் எப்படிப் போகத்தைப் புசிப்பார்கள். மனம் தோன்றியே புசிக்கிறார்களென்றால், அவர்கள் மனம் நசிக்கவில்லையே, அப்போது அவர்களைச் சீவன் முத்தரென்று எப்படிக் கூறுவது? இச்சந்தேகத்தை நிவர்த்திசெய்தருள வேண்டும்'' என்று சீடன் பிரார்த்தித்தான்.

 

ஆசான்: -    "மனம் சத்துவம், இரஜசு, தமசு என்ற முக்குணங்களையுடையதென முன்னம் கூறினோமல்லவா. இவற்றில் சத்துவகுண மாத்திரமாய்ச் சேஷித்திருப்பது மனதின் அருவபாகம் எனப்படும். இதற்கு அரு வமனம் என்று பெயர். இரஜோ தமோ குணங்கள் மனதின் உருவ பாகமாகும். இதற்கு உருவமனம் என்று பெயர். இந்த இருவகைகளில் சீவன் முத்தரிடம் உருவமனம் மட்டுமே நாசமடைந்திருக்கும். சத்துவ பாகமாகிய அருவ மனம் விதேக முத்தியில் தான் நாசமடையும்.

 

களங்கமற்ற சத்துவமே மனதின் உண்மைச் சொரூபமாகும். சலனமும் அஞ்ஞானமும் பொருந்திய இரசோதமோகுணங்கள் நீங்கினால், மாயையாகிய மனம் என்பது ஒழிந்ததே யாகும். ஞான மயமாகிய சத்துவமனம் மட்டுமேயுடைய சீவன் முத்தர் சாக்ஷி மாத்திரமாக விருப்போராதலின், நிகழ்காலத்தில் நேரிட்ட பிராரப்த போகத்தைப் புசிப்பார்கள். இறந்த காலத்தில் கழிந்தவற்றையும், எதிர் காலத்தில் வரக்கூடியவற்றையும் நினைத்து மகிழ்ச்சியேனும் துயரமேனும் அடையார்.'நான் இதைச் செய்கிறேன், அதைச் செய்தேன்" என்னும் அகம் பாவத்தை விட்டு அகர்த்தாவாய், அந்தக் கரணாதி செயல்களையும் அவஸ்தாத்திரியங்களையும் காணும் சாக்ஷிமாத்திரமாகி ஜீவன் முத்தராய் இருக்கலாகும்; பிராரப்த போகத்தைப் புசிக்கவுங் கூடும். இதற்கு யாதொரு தடையுமில்லை யென்றறிந்து சங்கையை யொழிப்பாய்.'' என்றார்.

 

சீடன்: -      ''தேசிகோத்தமரே! சீவன் முத்தன் விவகாரங்களைச் செய்து கொண்டே சமாதி நிலையி லிருப்பதெனின் அது கூடாத காரியமல்லவா? உலக விவகாரங்களைச் செய்யின் ஏகாக்கிரசித்தம் (மனதின் சலன மற்ற நிலைமை) கலைந்து விடுமல்லவா? அதனால் பிரம்மான்ம அனுபவமாகிய சமாதிநிலை நீங்கிவிடு மன்றோ? இக்கலக்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன்'' என்றான்.

 

ஆசான்: -    குழந்தாய்! சீவன் முத்தன் உலக விவகாரங்களைச் செய்து கொண் டிருக்கினும் ஆன்ம சொரூபமாகிய தன் சாக்ஷி நிலையை விடாமலே யிருக்கக் கூடும். எதுபோலெனின், ஒரு அன்னிய புருடன் மேல் காதல் கொண்டு அவனைச் சேர்ந்து இன்ப மனுபவித்த ஒருமாது தன் மனையில் தன் கணவனுக்குத் தேவப் பூஜாகாலத்தில் தொண்டு செய்யும் போதும் தன் சோர நாயகனிட மனு பவித்த சுகத்தை மறவாமல் மனதில் அதைச் சிந்தித்துக்கொண்டே யிருப்பாளன்றோ; அது போல் ஜீவன் முத்தனும் தன் நிலையை மறவான்.

 

"தாதி வினையாடி இருகை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்'' என்று பட்டினத்தடிக ளருளியதும் இதற்குத் திருட்டாந்தமாகும்.

 

[பிரபல நூலாகிய வாசிட்டத்திலும் மேலே கூறப்பட்ட திருட்டாந்தமே இந்த விஷயத்தில் கூறப்பட்டுள்ளது. ஜீவன் முத்தன் உலக் காரி யங்களைச் செய்து கொண்டே சமாதி நிலையிலுமிருக்கலாகும். தாயுமானவர் "கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினும்'' என்று தொடங்கி ''சந்ததமு நின்னருளை மறவா வரந்தந்து தமியேனை ரட்சை புரிவாய் - - சர்வ பரிபூரணவ கண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே" என்று முடிக்கும் பாசுரத்தில் கூறியது ஈண்டு சிந்திக்கத்தக்கது.

 

அவ்வாறு தொழில் செய்யும் ஜீவன் முத்தன், நான் செய்கிறேன் என்ற அபிமானமின்றி சாக்ஷி மாத்திரமாய் அந்நியர் தொழிலைச் செய்யவன் போன்றே செய்யலாகும். சாதாரண மனிதன் பல அவதானங்களை யேககாலத்தில் செய்யும் போது ஜீவன் முத்தன் தன் நிலையில் நின்றபடி உலக விவகாரங்களைச் செய்வது அவனுக்கு அதிக கஷ்டமாகாது. ஜீவன் முத்தனுடைய இந்த நிலை ஒரு அகன்ற ஏரியின் கரைமேல் நிற்கும் ஒருவன் நிலைமையைப் போன்றது. ஏரியின் கரைமேல் நிற்கும் மனிதன் ஏரியின் உட்பக்கம் நோக்கும் போது அகண்டாகாரமானதும், விகாரமற்றதும், ஏகமயமானதும், பிரிவற்றதுமான பிரகாசம் பொருந்திய நீர் நிலையைக் காண்கிறான். அவனே அதை விட்டு ஏரியின் வெளிப்பக்கம் நோக்கும்போது பல விகாரங்களும் பல சொரூபங்களுமாகிய பலவித வீடுகள், பலவிதமரங்கள், செடிகள், பலவித மிருகங்கள், அவற்றின் சலனங்கள் ஆகிய இவற்றைக் காண்கிறான்.

 

இதுபோன்றே, ஜீவன் முத்தன் அந்தர் முகத்தில் நோக்கும் போது களங்கமற்றதும், சலன மற்றதும், முன்னிலையற்றதும், ஏகமயமானதும், அகண்டாகார மானதுமாகிய ஆன்ம சாக்ஷாத்காரத்தை யடைகிறான். பகிர் முகத்தில் நோக்கும் போது நாமரூபமான நானா விடயங்களைக் காண்கிறான்.

 

ஒருவன் ஏககாலத்தில் இரண்டு காரியங்களைச் செய்வதாயின் அவையிரண்டையும் சரிவரச்செய்வது கஷ்டமே. உலக விவகாரங்களைச் செய்யும் ஜீவன் முத்தனுக்கு எதிலும் தாக்கற்று சாக்ஷி மாத்திரமாக விருப்பதே தன் சுபாவநிலையாகத் தோன்றி விடுகிறது. அஞ்ஞான நிலையிலுள்ள ஒருவனுக்கு எதையும் தான் செய்வதாகிய அகம்பாவம் எப்படிச் சுபாவமாகத் தோன்றுகிறதோ, அதுபோன்றே ஜீவன் முத்தனுக்கும் யாவும் தனக்கன் னியமாகக் காணும் தாக்கற்ற நிலை சுபாவமாகத் தோன்றுகிறது. ஆகவே அவன் தான் செய்யுங்காரியங்களை மனப்பற்றின்றி ஒருபலனையும் கருதாது செய்கிறான். அவ்வாறு சாக்ஷிமாத்திரமாக விருந்து செய்வதால் எதுவும் மனதிற்றாக்காமல் நழுவிப்போம். ஆதலின் அவனுடைய உலக காரியங்கள் ஒழுங்காய் நடைபெறுவது கஷ்டமேயாகும். ஆயினும் அவன் அகப்பற்றொழிந்தவனாதலின் அதனால் சலனமடையான்.]

 

[ஜீவன் முத்தன் விவகாரங்களைச் செய்து கொண்டே சமாதி நிலையில் இருக்கலாகு மென்பதைத் திருட்டாந்த பூர்வமாக விளக்கியருளிய ஆசான், சீடனுக்குத் திடஞானத்தை நன்கு விளக்கும் பொருட்டு அவ னுக்குத் தோன்றக்கூடிய ஐயத்தைத் தாமே வெளியிட்டு அதற்குச் சமாதானம் கூறுகிறார்.]

குரு: -      மைந்தனே! “ஜீவன் முக்தன் தேக சம்மந்தமான அபிமானங் களற்றவன். அதாவது, தனக்கு ஸ்தூல ஸுக்கும மாதி தேகங்களின் சம்பந்தமிருக்கிற தென்ற உணர்ச்சியும், நான் பிராம்மணன், க்ஷத்திரியன் என்பது முதலிய தேக சம்பந்தமான அபிமானம் முதலியவைகளும் அற்றவன். தொழிலற்றவன்; அதாவது, நான் இதைச் செய்கிறேன் என்ற அபிவான மற்றவன்; தான் ஜீவன் என்ற பாவமின்றி தன்னைப் பிரம்மம் என்று தெளிந்து, அந்தப் பிரம்ம சாக்ஷாத்கார நிலையில் நிற்பவன். அப்படிப்பட்ட ஜீவன் முக்தன் போகங்களைப் புசிக்கிறான் என்றால், அப்போது ஒரு தொழிலைச் செய்யும் கர்த்தாவும், போகத்தையுண்ணும் போக்தாவும் ஆகின்றானல்லவோ? பரிபூரணப் பிரம்மமே தானா யிருப்பவனும் அகர்த்தனுமாகிய ஜீவன் முத்தனுக்குப் பிராரப்தபோகம் ஏது? இச்சந்தேகத்தை நீக்கி யருளவேண்டும்'' என்று கேட்பாயாயின் கூறுகிறோம். மகிமையுடைய அச்சீவன் முக்தர்கள் மாகர்த்தன், மாபோகி, மாத்தியாகி என் மூன்று வகையான இலட்சணங்களை யுடைய வர்களாக விருப்பார்கள்.

 

(மாகர்த்தன் முதலிய மூவரின் இலக்கணங் கூறல்): - இவற்றில்,

 

மாகர்த்தன்: -      "தானே ஒன்றைச் செய்யுந் தன்மையும், செய்விக்கும் தன்மையும் தான் உடைத்தாயில்லாம லிருக்கும் ஒரு காந்தக்கல் மலையின் முன்னே ஊசிகள் முதலிய இரும்புவஸ்துக்கள் சலனமடைகின்றன. அது போல், செய்கையும், செய்விக்கையுமற்று (சாக்ஷி மாத்திரமாக) இருக்கும் (ஆத்ம சொரூபமாகிய) என் முன் சடமாகிய உலகங்களெல்லாம் வியவகாரங்களைச் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் நானோ, தன் சந்நிதான விசேடத்தால் உலகிலுள்ள பொருள்கள் (நீரிலுள்ள மொக்கு மலர்தல், தரையிலுள்ள மலர் வாடுதல், ஜலம் நீராவியாக மாறுதல், பனி அழிதல் முதலிய) நானாவித விகாரங்களை அடையினும், தான் யாவற்றிலும் தாக்கற்று சாக்ஷி மாத்திரமாகப் பிரகாசியா நிற்கும் ஆதித்தன் போன்று, தேகசம்மந்தமான இந்திரிய விவகாரங்களுக்கும், மனோ விருத்திக்கும் பிரம்ம சம்பந்தமான சமாதிக்கும் சாக்ஷியாக மாத்திரமே யிருக்கிறேன் என்ற திட அநுபவ முடையவனே அகண்டானுபவத்திதிலிருக்கும் மாகர்த்தன் எனப்படுவான்.

 

மாபோகி: -        காட்டில் தீப்பற்றினால் இது சந்தன மரம், இது எட்டி மரம், இது பச்சை மரம், இது உலர்ந்தமரம் என்று ஒரு பேதமும் பாராது எட்டியவற்றை யெல்லாம் தகிப்பது போல், உண்ணும் பொருள்களில் குணமுள்ள தென்றும், குற்றமுள்ள தென்றும், அறுசுவைகளில் இன்னின்ன சுவையுடைய தென்றும், சுத்தமான தென்றும், அசுத்தமானதென்றும் பகுத்துணராமல், பொறுமையோடு தனக்குக் கிடைத்ததைப் புசிப்பவன் மாபோகியாகும்.

மாத்தியாகி: -     சிறிது பெரிது, தன்னுடையது பிறருடையது என்ற பேதமின்றி, நன்மைவரினும் தீமைவரினும் எதிலும் தாக்கற் றிருப்பவனே மாத்தியாகி யாகும்.

 

மாகர்த்தன், மாபோகி, மாத்தியாகி என்ற இம்மூன்று வித விரதமுடையவர்களே மோக்ஷத்தை யுடையவர்களாவர்.

 

[ஞானி பிராரப்த வினைப்படி கருமங்களைச் செய்பவனாகவும், போகங்களைப் புசிப்பவனாகவும், உலக விஷயங்களில் சம்பந்தித் திருப்பவனாகவும் காணப்படினும், உண்மையில், அவன் ஒன்றைச் செய்யும் கர்த்தாவுமல்ல; போகத்தைப் புசிக்கும் போக்தாவுமல்ல; யாவற்றிலும் தாக்கற்று, சூரியன் போல் சர்வ சாக்ஷி மாத்திரமாக விருப்பவன் என்பதாம். அதாவது, ஞானி நான் என்ப தற்றிருப்பவனாதலால், அவனது ஆன்மதிருஷ்டியில் ஒன்றைச் செய்தல், செய்வித்தல், ஒன்றை யனுபவித்தல், ஒன்றில் சம்மந்தப்பட்டிருத்தல் முதலிய பாவனைகளில்லை. இதனாலே தான் அவனிடம் கர்மம் பற்றுவ தின்றாம்.]

 

(உலகத்தாரைப்போல் ஞானியும் தொழில் செய்யின், அவன் தொழிலற்றவனென்று எப்படி கூறுவது என்று சீடன் சங்கித்தல்.)

 

சீடன்: -      "ஞானாசிரியரே! வினைப்போகமாகிய தேகத்தைத் தரித்துக்கொண்டும், பிராரப்தமாகிய விதியின் அமைப்பிற்கு இணங்கிக்கொண்டும், சீவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணமுடைய கருமகாண்டிகளாகிய உலகோர்க்கு அநுகூலமாகப் பொருந்துகின்ற கருமங்களைச் செய்து கொண்டு மிருக்க, அந்த ஞானியைச் செய்யவேண்டியயாவும் செய்து முடித்த கிருத கிருத்தியன் என்று எப்படி கூறுவதோ அடியேனுக்கு விளங்கவில்லை. இச்சந்தேகத்தைத் தயை புரிந்து விலக்கியருளப் பிரார்த்திக்கிறேன்'' என்றான்.

 

ஆசான்: -   அஞ்ஞானத்தோடு பொருந்தியிருக்குங் காலையில் ஆடவர்கள் செய்யுந் தொழில் மூன்று வகையாகும்: அவை (1) உலகபோகங்களை யனுபவிப்பதற்கு அவசியமான உழவு, வாணியம், சேவகம் முதலிய இலௌகீகத் தொழில்கள். (2) பரலோக போகங்களை யனுபவிக்கக் கருதிச் செய்யும் தரும கைங்கரியங்கள், யாகாதி எக்கியங்கள் முதலியன.
(3) ஞானத்தை யடைய விரும்பிச்செய்யும் சாத்திர ஆராய்ச்சி, சிரவண மனனாதிகள் முதலியன. மண், பெண் பொன் என்ற மூவாசையும், யான் எனது என்ற அகங்கார மமகாரங்களும் உடையவர்களுக்கே இகலோகபர லோக விவகாரங்களாகிய முதல் இரண்டுவிதத் தொழில்களும் வேண்டும். நித்தியா நித்திய விவேகத்தால் இகலோக பரலோக போகங்களில் விரக்தியடைந்து, நித்தியமாகிய மோக்ஷத்தை யடைய வேண்டு மென்ற எண்ணமுடையோர்க்கே மூன்றாவதாகிய சாத்திர ஆராய்ச்சி சிரவண மனனாதிகள் முதலியவை வேண்டும். ஞானமுதித்துப் பிரம்மமே தாமானவர்களுக்கு இம்மூவகைத் தொழில்களாலும் ஒரு பயனுமில்லை.

சீடன்: -      பரமாசாரியரே! தாங்கள் கூறியது ஒப்பத்தக்கதே. இகலோக பரலோக போகங்களில் விரக்தி வந்தவர்கள் தானே மெய்ஞ்ஞானத்தில் பழக முயல்வர்கள். அவ்வாறு ஞானநெறியிற் றிரும்பியவர்கள் மறுபடி இகலோக பரலோக கிருத்தியங்களாகிய உழாவதி, எக்கியாதி முதலிய (முதல் இரண்டுவித) கிருத்தியங்களில் பிரவேசிக்க விரும்பார்கள். ஆயினும், சித்தம் அநுபவத்தில் நிலைப்பட ஞானாப்பியாசத்தில் பிரவே சித்தவனும் சிரவண மனனரிதித்தியாசனங்களைச் செய்ய வேண்டாவோ? (“ஞானி ஒரு காரியமும் செய்யாதவ னெனின், இகலோக பரலோக விவகாரங்களைச் செய்யாவிடினும் ஞானம் திடப்படச் சிரவணாதிகளேனும் செய்ய வேண்டாவோ? அப்போதவனெப்படி தொழிலற்றவனாவான்? என்றபடி).

 

ஆசான்: -   தான் பிரம்மமென உணராதவர்கள் சிரவணம் செய்ய வேண்டுவது அவசியமே. சந்தேகங்களை யுடையவர்கள் அச்சந்தேகங்களின் நிவர்த்தியின் பொருட்டு மனனம் செய்யவேண்டுவதே. விபரீதப் பேயென்னும் மலின வாசனையுடையோர் நிதித்தியாசனம் செய்ய வேண்டியதே. அஞ்ஞான மொழிந்து, அறிவு மயமாகிய பரிபூரண சொரூபமே தானாயினோர் செய்யவேண்டியது என்ன விருக்கிறது? ஒன்றுமே யில்லை.

 

[ஞான அப்பியாசம் செய்வோர் சுயானுபவம் பூரணமாகுமுன், அஞ்ஞான சந்தேகவிபரீதங்களாகிய தடைகளை யொழிக்கும் வண்ணம் சிரவணம், மனனம், 'நிதித்தியா சனங்களைச் செய்ய வேண்டியதே. ஆனால் பிரம்ம சாக்ஷாத்காரத்தை யடைந்து சகச சமாதியிலுள்ள ஆரூடர்கள் செய்யவேண்டியது ஒன்றுமே யில்லை என்பதாம்.]

 

(சீடன் பின்னுமோர் ஐயம் வினாவுதல்.)

 

சீடன்: -     பரமாசாரியரே! பிரம்ம ஞானியும், சாதாரணமான அஞ்ஞானிகள் யான் எனது என்ற அகங்கார மமகாரங்களால் கூறுவது போல் ''செய்தேன், உண்டேன், கண்டேன், சென்றேன், இருந்தேன்'' என்று (உலக விவகாரங்களை யுடையவர்கள் போல்) பேசலாமோ? இத்தகைய மித்தையாகிய விபரீத பாவனைகள் இவர்களுக் கில்லையென் றருளினீர்களே! இவர்கள் இப்படிக் கூறுவது உண்மையான பிரம்ம விசாரமல்லவே, இதை யடியேன் தெளிவாயறியும்படிக் கூற வேண்டுகிறேன்.

 

["அஞ்ஞானிகள் ஜீவபாவ முடையவர்கள். ஆகையால், தாங்கள் கருமங்களைச் செய்வதாகவும், போகங்களைப் புசிப்பதாகவும், அவற்றால் வரும் கர்மங்களை யனு பவிக்கிறவர்களாகவும் மயங்கி யிருப்போர்கள். ஞானிகள் அம்மயக்க நீங்கி சாக்ஷமாத்திரமாகிய ஆன்ம சொரூபமாகத் தம்மை யுணர்ந்தவர்கள். அவர்களது ஆன்ம திருட்டியில் கருமங்களைச் செய்வதும், போகங்களைப் புசிப்பதுமாகிய உணர்ச்சியேயில்லை. அப்படியிருக்க அவர்களும் அஞ்ஞானிகளைப்போல் நான் செய்தேன், புசித்தேன், போகிறேன், எடுத்தேன், கொடுத்தேன் " என்று சம்பாஷிக்கிறார்களே. சதா பிரம்மானுபவமாகிய நிஷ்டையிலிருக்கும் இவர்கள் அப்படிக் கூறினால், அஞ்ஞானிகளுக்குள்ள மேற்கண்ட சீவபாவம் இவர்களுக் கில்லை யென்று எப்படி கருதுவது? " என்பதே சீடன் கேட்கும் சந்தேகம்.]

 

குரு: -       சொப்பனங் கண்டு விழித்த ஒருவன் தான் கண்ட சொப்ப னம் பொய்யென உணர்ந்தானாயினும், சொப்பனத்தில் கண்ட வாசனையால் 'நான் வீதியில் சென்று கொண் டிருந்தேன். எதிரில் ஒரு யானை வரக் கண்டு அலறிக் கூவினேன்'' என்கிறான். அப்படி. யவன் கூறினும் கண்டது சொப்பனம்; அது முழுமையும் பொய் என்ற உண்மை யறிவு அவனுக்கு இல்லாமற் போகவில்லை. அது போலவே ஆன்ம சொரூபமே தானென்றறிந்த ஞானியும் பூர்வவாதனையால் அப்படி “கண்டேன், உண்டேன், சென்றேன்'' என்று கூறுவான். ஆயினும் அவனுக்குள் ஜீவபாவமே யில்லை. பரிபூரணமாகிய பிரம்ம சொரூபமே நாம் என்ற அநுபவமே அவனிட முள்ளது. விதேக கைவல்ய மட்டும் இத்தகைய விவகாரம் தொடரும்.


   [ஒரு அரசன் தான் யாசகனாகப் பிச்சையெடுப்பது போலவும், கூலிக்கு மூட்டை தூக்கியது போலவும் கனவுகண்டு, விழித்தபின் அதையப்படியே கூறு கிறான். அப்படியவன் கூட்போதே தனக்குள் தான் அரசன் என்று கருதி யிருக்கிறானே யொழிய, பிச்சைக்காரன் என்று கருதமாட்டான். பிராரப்த போகம் ஒழியுமட்டும் தேகம் இருக்கும்; அதுவரை ஞானி யப்படி கண்டேன், கேட்டேன் என்று பேசினும் அவனுக்குள் தான் பிரம்ம சொரூபமே யென்ற பாவமேயொழிய சீவபாவம் எள்ளளவுமிராது. அஞ்ஞானி யான் எனது என்ற அபிமானத்தோடு கூறுகிறான். அந்த விவகாரங்கள் அவன் மனதிற் பதிந்திருக்கின்றன. ஞானி தன்மனதில் எதுவும் தாக்காமலே பேச்சுமாத்திரமாக விவகரிப்பவன். அப்போதைக்கப்போது அவை கனவுபோல் போய்விட அவன் எதிலும் தாக்கற்று நிற்கும் ஆகாயம் போல் அகண்ட பிரமசொரூபமாகவே யிருப்பன்.]

 

(ஞானிக்கு விதேக கைவல்ய மட்டும் விவகாரம் தொடரும் என்றதனால் சீடன் பின்னுமொரு ஐயம் உண்டானதைப் பற்றி வினாதல்.)

 

சீடன்: -     சுவாமிகளே! ஞானிக்கு விதேக கைவல்ய மட்டும் விவகாரமுளதென் றருளினீர்களே, கண்ணால் காணப்படும் நாமரூபமுடைய எல்லா வஸ்துக்களும் அசத்தியம் எனினும், அவற்றைப்பற்றிய விவகாரங்களில் சம்பந்தித்தல் துன்பமல்லவோ? இரண்டற்ற அகண்டாகார அனுபவத்தா லுண்டாகும் பிரம்மானந்தம் அப்போ துள தாகுமோ? விவகாரங்க ளொழிந்தாலல்லவா ஆனந்தானுபவம் உளதாகும்? அது உண்டாதற்கு நிருவிகற்ப சமாதி கூடவேண்டு மல்லவா? அவ்வாறு ததாகாரத்தையடைவதர்காக நிஷ்டை புரிந்தால் அவன் செயலற்றவன் என்று எப்படி கூறுவதோ அறிகிலேன்.

 

[ஒருவிடத்தில் அமர்ந்து தேகச் சேட்டையை நிறுத்தி மனதையொடுக்கி நிஷ்டை பழகுவதும் ஒரு தொழில் தானே? அப்படி யிருக்கத் தொழிலற்றவ னென்று எப்படி கூறுவது? என்பதாம்.]

 

ஆசான்: -   அறிவுள்ள மைந்தனே! பிராரப்த கன்மம் ஒழியுமட்டும் விவகாரம் இருந்தே தீரும். பிரம்மானந்த மடைவதற்காகத் தியானம் சமாதி முதலிய செய்தலும், வெளி விவகாரங்களும் அந்தக்கரணத்தால் செய்யும் தொழில்களல்லவா? துரிய அனுபவமாகிய சாக்ஷாத்காரநிலையையடைந்தவர்கள் செய்ய வேண்டிய வேலை வேறே யேதேனு முண்டோ? ஒன்றுமில்லை. அப்படிச் சமாதிகளைப் பழகுவானாயின் அவன் ஆரூடனன்றாம்.

 

[சமாதி இருவகையாகும். 1, சவிகற்பசமாதி. 2, நிருவிகற்பசமாதி: -

 

1. சவிகற்ப சமாதி: - விகற்பம் என்பதற்கு - பேதம், வேறுபாடு என்று பொருள். சவிகற்பசமாதி என்றால் கொஞ்சம் வேறுபாடுள்ள சமாதி என்று பொருள்படும். ஆன்மாவை யணுவுக் கணுவாய்த் தரிசித்தல் சவிகற்ப சமாதி; இதில் ஞா துரு, ஞானம், ஞேயம் என்ற திரிபுடி பேதங்களுண்டு.

 

2. நிருவிகற்ப சமாதி: - இதற்கு பேதமற்ற சமாதி என்பது பொருள். இது திரிபுடியொழிந்து தான் அதுவாய்த் தற்போதமற்று அகண்டமான சாக்ஷாத்கார நிலையையடைவதாம்,  

 

"தானான தன்மயமே யல்லா லொன்றைத்

தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே

போனாலுங் கற்பூர தீபம் போலும்

போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம்

ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற

ஞா துருவு நழுவாம னழுவி நிற்கும்

ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா

ரதுவானா லதுவாவ ரதுவே சொல்லும் "                 (தாயுமானவர்)

 

இப்போது கூறியவற்றால் சவிகற்ப சமாதியே முதலில் அப்பியசிக்கப் படுவதென்றும், நிருவிகற்ப சமாதியே அடையும் பலன் என்றும் நன்கு விளங்கும்.

 

இவை இரண்டன்றி சகசசமாதி என்பதும் ஒன்றுண்டு; நிருவிகற்ப சமாதியின் அனுபவத்தோடு, கனவுபோல் போஜனாதி விவகாரங்களைச் செய்து கொண்டு சதா நிஷ்டையிலிருக்கும் துறவிகளின் நிலைமையே சகச சமாதி எனப்படும். அத்தகைய ஆரூடர் விவகாரங்களைச் செய்யினும் அவை கர்த்தவ்யமன்றாம் ஏனெனில், அவர்களது ஆன்ம திருஷ்டியில் விவகாரத்தோடு கூடிய சம்பந்த மின்றாம். விவகாரம் அவர்கள் ஞான அனுபவத்திற்கு விரோதியன்றாம்; ஞானமும் அவர்கள் விவகாரத்திற்கு விரோதியன்றாம்.)

 

(சீடனுக் குண்டாகக்கூடிய சந்தேகத்தைத் தாமேயெடுத்துக்காட்டி குரு பின்னும் கூறுகிறார்.)

 

குரு: -      ''ஆருட தசையடைந்து திருசிய திருஷ்டி ஒழிந்து சதா நிஷ்டையி லிருப்போரிலும் சிலர் சித்த சலனத்தை அடக்குதற்குரிய தியானாதிகளைச் செய்கிறார்களே, அஃதேன் என்று கேட்பாயாயின் கூறுதும்; இவ்வுலகில் அவரவரைப் பற்றி யிருக்கும் பிராரப்தத்தின் பலன் எப்படியோ, அவ்வாறே ஜீவன் முத்தரும் பலவிதமான விவகாரங்களையுடையவர்களாக இருப்பார்களென்று முன்னமே கூறியுள்ளோ மல்லவா'' என்றருளினார்.

 

[முந்திய படலத்தில் ஜீவன் முத்தரும் பிராரப்தத்தை யனுபவித்தே தீரவேண்டுமாதலின் அவர்களுக்கு அவரவர் பிராரப்தப்பலன்படி விவகாரங்கள் பலவிதமாக விருக்கும் என்று இந்நூலாசிரியரே கூறியுள்ள கீழ்க்கண்ட விஷயம் ஈண்டு கவனிக்கத்தக்கது: -

 :
      "பேதகர் மத்தால் வந்த பிராரப்த நாநா வாகும்

ஆதலால் விவகா ரங்களவரவர்க் கான வாகும்

மாதவம் செயினுஞ் செய்வார் வாணிபஞ் செயினுஞ் செய்வார்

பூதலம் புரப்பா ரையம் புகுந்துண்பார் ஜீவன் முத்தர்''


ஆரூடதசை யடையுழன்பு தியான நிஷ்டாதிகளில் அப்பியாசிப்பவனே கிருத கிருத்தியனன்றாம் அதாவது கிரியையற்றவ னல்லவென்பதாம்.)

 

ஆருடர் விவகாரம் உலகோபகாரம் என்று ஆசான் கூறுகிறார்.

 

"மைந்தனே! ஞானிகளின் விவகாரங்க ளனைத்து உலகோபகாரத்தைக் கருதியேயன்றி, அவற்றால் ஒரு பலனையடைய இச்சித்துச் செய்வ ஆருட தரிலும் சிலா அஃதேன்தல்ல. அவ்விவகாரங்களால் அவர்களுக் கெவ்விதத் துன்பமுமில்லை. எது போலெனில், சிருஷ்டித்திதி சங்காரம் முதலிய அனேக விவகாரங்களைச் செய்யும் ஈசுவரன் அவற்றால் எவ்விதப் பாபபுண்ணியப் பலன்களையுமடையாதது போல.

 

[ஞானி உலகோபாரமாகப் பிறர்க்கு ஞானபோதனை செய்தல், பிராரப்தத்தை யொழிக்குமட்டும் இருக்கும் தேகபோஷணையினிமித்தம் உண்டாகும் பசிப்பிணியை யொழிக்க அன்னபானாதி யருந்தல் முதலிய விவகாரங்களைச் செய்யினும், அவனுடைய அந்தர்த் திருட்டியில் தான் எத்தொழிலைச் செய்வதாகவும் பாவனையில்லை. அவன் மனம் சத்துவ குணமாத்திரமாய்ச் சேடித்து எதிலும் தாக்கற்று நிற்றலின் அந்த விவகாரங்களால் அவனுக்கு எவ்விதக் கர்மமும் உண்டாவதின்றாம்.]

 

சீடன்: -      சுவாமி! ஞானியை யீசனுக்கு ஒப்பென்று கூறினீர்களே, அவன் எப்படி யொப்பாவான்?

 

ஆசான்: -   எப்படி யெனில், ஈசனும் ஞானியும் மாயை அவித்தைகளிலும் அவைகளின் காரியங்களிலும் மமதையும், அகந்தாபிமானமும் விட்டிருப்பதால் ஒப்பாவர்கள். இந்த ஞானி ஈசனுமாவன், பல ஜீவர்களுமாவன் உலகனைத்தும் தானாகவும் ஆவன். 

 

[ஞானி பிரம்மான்ம ஐக்கியமாகிய இரண்டற்ற அகண்டாகார நிலையில் ததாகாரமாயிருப்பவனாதலால், ஈசுவரனைப் போலவே இந்த அண்டரண்ட சராசரங்கள் யாவும் அவனே ஆவன் என்றபடி]

 

சீடன்: -      "அடியேனது சந்தேகங்களனைத்தும் களைந்தொழிக்கும் பரமாசாரியரே! இந்த ஞானியே இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சீவன்களுமாக விருந்தால், இவன் மோக்ஷ மடைந்தால் மற்றச் சீவர்கள் அனைவரும் முத்தி பெறா மலிருக்கிறார்களே, அதேனோ? எல்லாச் சீவன்களும் தனித்தனி வெவ்வேறு சீவன்களாயின் இவன் எப்படி எல்லாச் சீவான்களுமாவான்? எல்லா ஐயங்களையும் ஒழித்தருளியது போல் இதையும் ஒழிக்கப் பிரார்த்திக்கிறேன்'' என்று விண்ணப்பித்துக் கொண்டான்.

 

ஆசான்: -    அறிவுள்ள மகனே! எல்லாச் சீவன்களும் தானேயாக விருக்கும் ஞானி முத்தியடையின் மற்ற சீவர்களும் ஏன் அடையவில்லை? என்று நீ வினவிய சந்தேகத்திற்குத் திருட்டாந்த பூர்வகமாக விடையளிக்கிறோம், கேட்பாயாக: -

 

உலக முழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் சந்திரன் ஒன்றே. ஆனால் பூமியில் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள், சட்டிகள் முதலி யவை அனேக மிருக்கின்றன. ஆதலின் இவற்றிலுள்ள நீர் நிலைகளில் தோன்றும் ஆபாச சந்திரர்கள் (பிரதிபிம்பச் சந்திரர்கள்) அனேகமுண்டு. இதைப்போலவே எண்ணிறந்த சரீரங்களில் எண்ணிறந்த அந்தக்கா ணங்களுள. அதனால் அதிஷ்டானமாகிய பிரம்மம் ஒன்றேயாயினும் அந்தக்கரணங்களில் பிரதிபலித்த அதன் சாயல்களாகிய சீவர்கள் எண்ணிறந்தோரா யுளர்.

 

திருட்டாந்தத்தில் ஒரு சட்டியுடைந்தால் அதிலிருந்த நீரில் தோன்றியிருந்த பிரதிபிம்பமாகிய ஆபாச சந்திரன் மட்டுமே அதிஷ்டான சந்திரனோடு கலந்துவிடு மன்னியில், மற்ற நீர் நிலைகளிலுள்ள ஆபாச சந்திரர்கள் அப்படியேதானிருப்பார்கள். அது போலவே, அந்தக்கரணத்திலுள்ள அஞ்ஞானமாகிய பந்தம் நீங்கி ஞானமடைந்த சீவன் மட்டும் அதிஷ்டானமாகிய பிரம்மத்தில் அயிக்கியமடைவான். அஞ்ஞானம் நீங்காத மற்ற ஜீவன்கள் முத்தியடைய மாட்டா.

 

[மூலப் பிரகிருதியின் இரஜோ குணத்திற்கு அவித்தை அல்லது அசத்தமாயை யென்றும், சீவகாரண சரீரமெனறும் பெயர் என்றும், அதில் பிரதிபலித்த பிரம்மச் சாயையே ஜீவன் என்றும் முன் படலத்தில் தத்துவ உற்பத்தி கூறிய விடத்தில் கூறீயிருக்கிறோம். சுழுத்தியின் கண்ணள்ள அந்த அவித்தையே சாக்கிரத்தில் மனம் என்கிற அந்தக்கரண மாகப் பரிணமிக்கிறது. ஆகையால், அனுபவத்தில் அந்தக்கரணமே அவித்தை யல்லது மாயையாகும்.

 

"மனமன மெங்குண்டு மாயையு மங்குண்டு

மனமாயை யன்றி மற்றொன்று மில்லை

பினையாய வேண்டாம் பிதற்றவும் வேண்டாம்

தனையாய்ந் திருப்பது தத்துவந் தானே.”                        (பாடு துறை.)

 

என்ற ஆன்றோர் வாக்கே இதற்குச் சான்றாம்.

 

மேலே கூறப்பட்ட திருட்டாந்தத்தில், கடம் தேகமாகும்; அதிலுள்ள ஜலம் அந்தக்கரணம்; வான ஈந்திரன் அதிஷ்டானமாகிய பரப்பிரம்மம்; ஜலத்தில் தோன்றும் ஆபாச சந்திரனே சீவன். ஜலம் அசைந்தால் பிரபலித்த ஆபாசமாகிய ஜலசந்திரன் அசைவதுபோல் அதில் தோன்றுகிறது. அதுபோலவே அவித்தையின் வயப்பட்ட ஜீவன், அந்தக்கரண சலனத்தைத் தன் சலனமாக மயங்கிக் கருதுகிறான். ஞானமாகிய அக்கினியால் அவித்தையின் காரியமாகிய அந்தக்கரணம் என்ற நீர் தீய்ந்துபோனால், ஆபாச சந்திரனாகிய சீவபாவம் ஒழிந்து கூடஸ்தனாகிறான். பிராரப்தம் முடிந்ததும் கடமாகிய தேகம் வீழ்ந்துபோம். அப்போது ஆன்மா பரமான்மாவில் அயிக்கியமடையும்.

 

நான் என்பதற்று அகண்டாகார நிலையிலிருக்கும் ஞானி எல்லாச் சீவன்களும் யாவும் தானாகவேயுள்ள அனுபவத்தி லிருக்கிறா னெனினும், எந்த அந்தக்கரணத்தில் ஞானம் உண்டாகிறதோ அந்த அந்தக்கரணத்தில் மட்டு முள்ள அவித்தையின் கூறு (அஞ்ஞானம்) நாசமாம். அதாவது ஞானம் உதிக்கும். ஆகையால் அவன் மட்டும் ஜீவன் முத்தனாவான். மற் றையருடைய அந்தக் கரணங்களி லுள்ள அஞ்ஞானம் நீங்காததால் அந்தச் சீவன்கள் முத்திபெறா. சசசிதானந்தப் பிரம்மமே ஜகஜீவ பரங்களாக விளங்குவதால் பிரம்ம சாக்ஷாத்கார மடைந்த ஞானி எல்லாம் தானாகவே விளங்குகிறான் என்றருளினார்.)

 

(சீடன் இன்னும் ஒரு ஐயம் வினவல்)

 

சீடன்: -      பரமாசாரியரே! ஞானி பிரம்ம விஷ்ணு சிவன் இவர்களோ டெப்படி யொப்பாவான்? அம்மூவரும் சிருஷ்டித் திதி சங்காரங்களைச் செய்கிறார்கள். அவர்கள் பிறர் மன திலுள்ள விஷயங்களையும் முக்காலங்களில் நடக்கும் விஷயங்களையும் உணர்வார்கள். ஆதலின் அவர்கள் யாவற்றிலும் சம்பந்தித்தவராவர். அந்த விசேஷ மகிமைகளில் ஞானியிடம் ஒரு சிறிதும் காணோமே. அப்படியிருக்க இவன் எப்படி அவர்களோ டொப்பாவான்?

 

குரு: -       மைந்தனே! ஞானிக்கும் அவர்களுக்கு முள்ளபேதம் ஒரு சிறு தீபத்திற்கும் பெரிய தீவடிக்கும், அல்லது தடாக நீருக்கும், குடசலத் திற்கும் உள்ளபேதம் போன்றதாகும். அதாவது ஒரு பெரிய தீவட்டி அனேகம் பேர் கூடிய ஒரு பெருஞ் சபைக்கு வெளிச்சமளிக்கும். சிறு தீபமோ ஒரு சிறு அறையிலுள்ள ஐந்தாறு பேருக்கு மட்டுமே வெளிச்ச மளிக்கும். ஆயினும் இரண்டும் பிரகாசத்தையளிக்கும் ஒரேவித குணமுடைய அக்னிச் சுடரே.

 

ஒரு குடஜலம் ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களின் தாகத்தை மட்டும் தணிக்கும். ஓர் தடாதத்திலுள்ள நீரோ ஓர் ஊரிலுள்ள ஜனங்களெல்லாருடைய தாகத்தையும் தீர்க்கும். ஆயினும் இரண்டும் தாகத்தைத் தணிக்கும் ஒரே குணமுடைய ஜலமே.

இவ்வாறே ஈசனும் ஞானியும் (பிரம்ம நிலையாகிய) ஞானத்தால் பேதமுடையவரல்லர். சீவர்கள் முத்தியடையா வண்ணம் தடுத்த ஆவரணமென்னும் மாயையால் மட்டுமே (சத்துவம் இரஜசு என்ற) பேதமாம். மேலும்,

 

மானிடரில், துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் அரசனைப் போலவும், சாபானுக்கிரக வல்லபமுடைய சித்தராதியரைப் போலவும், பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் மாயா வல்லபமுடையவர்கள்; அணி மாதி அஷ்டமா சித்திகள் கைவந்த மாதவமிகுத்தோர். மானிட ஜன்மமாகிய ஞானிக்கு மாயா வல்லபமும், அஷ்டமா சித்திகளும் இல்லையாதலின் அவர்களை விடத் தாழ்ச்சியுடையவனாகக் காணப்படினும், பிரம்ம பாவனையால் உயர்வு தாழ்வென்ற பேதமே யில்லை. (மேலே கூறிய குடநீர், தடாக நீர், இவற்றிலும், திரிதீவட்டியிலும், தாகத்தைத் தணிப்பதும், வெளிச்ச மளிப்பதுமாகிய தொழிலில் சற்றும் பேதமில்லை. ஆனால் அளவில் மட்டும் பேதம். அதுபோலவே ஞானியும், ஈசனும் ஞானத்தில் பேதமுடையவால்லர். மாயை யளவில் பேதப்பட்டவர்.

 

சீடன்: -      துக்க நிவர்த்தி ஆனந்தப் பிராப்தி ரூபமான மோக்ஷத்தை யளித்தருளிய பரமாசாரிய சுவாமிகளே! அஷ்டமா சித்திகள் ஈசுவரனுடைய தென்றருளினீர்களே. பல முனிவர்களும் சித்தர் முதலியோ ரும் அணிமாதி சித்திகள் கைவந்தவர்களாக இப்பூமியில் காணப்பட்டிருப்பதால் அதை யீசுவரனுடைய தென்று எப்படிக் கருதுவதோ, அடியேன் புத்திக்கு விளங்கும்படி யருள வேண்டு கிறேன்.

 

குரு: -       சீடனே! அம்முனிவர்கள் ஈசுவரனை நோக்கித் தவம் செய்ததாலும், யோகசாதனையாலும் அணிமாதி சித்திகள் ஈசுவரனா லளிக்கப்பெற்றார்கள்.
 

சீடன்: -     சுவாமிகளே! அந்த ஞானிகள் தவத்தினால் அட்டமாசித்திகள், முத்தி இரண்டையு மடைந்தார்க ளென்றீர்களே, அப்படித் தவத்தால் இரண்டையும் அடையலாமெனின், இக்காலத்திலுள்ள ஞானிகளிடம் அட்டமாசித்திகள் காணப்படவில்லையே. இவர்கள் ஞானிக ளெனில் இவர்களுக்கு ஏன் அச்சித்திகள் கிடைக்கவில்லை? இதை விளக்கி யருளப் பிரார்த்திக்கிறேன்.
 

குரு: -       புத்திரனே! தவம் இருவகைப்படும். ஒன்று காமியத்தவம், மற்றொன்று நிட்காமியத்தவம். காமியத்தவ மென்பது ஒரு பலனைப் பெற விரும்பிச் செய்யும் தவமாகும். நிட்காமியத்தவம் என்பது ஒரு பலனையும் இச்சியாமல் செய்யும் தவமாகும். இவற்றில் காமியத்தவம் அட்டமாசித்திகளைத் தரும், நிட்காமியத்தவம் மோக்ஷமொன்றை மட்டுமே தரும். இவற்றில் ஒன்றை யியற்றுவோர் ஒன்றையே பெறுவர். அக்காலத்திலிருந்த பெரியோர் இருவிதத் தவங்களையுமியற்றின படியால் சித்தி, முத்தி யிரண்டையு மடைந்தார்கள். ஜனகன், மாபலி, பாகீரதன் முதலியோர் மோக்ஷ சாதனமான தத்துவஞானத்தை மட்டுமே மடைந்தனரன்றி, சித்திகளை யடைய முயலவில்லை. சிலர் இனிமையான சித்திகளை மட்டுமே விரும்பினர். சிலர் முத்தியை மட்டுமே விரும்பினர். முனிவர்கள் அடைந்த சித்திகள் விளையாட்டை மட்டுமே தருமன்றி முத்தியை யளிக்கமாட்டா.

ஆன்ம பரமான்ம ஐக்யத்தை யளிக்கும் ஞானமே முத்தியைத் தருமெனில், சிலர் சித்திகளை யடைய விருப்பம் வைத்து அதற்காகக் கஷ்டமான முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டியதேன் எனில், பிராரப்தபலனை யாவருமே யனுபவித்துத் தீரவேண்டும். ஆகையால் அவர்கள் பிராரப்த வலியால் தூண்டப்பட்டு அட்டமாசித்திகளை யடைந்தார்களன்றி வேறில்லை.

 

[தேவிகாலோத்தரத்தில் "அட்டமா சித்திகளும் அனைத்துள்ள பேறுகளும் - கட்டமாங்கதிகள் தரும் பரகதி காணக்கொடா'' என்று பரமசிவம் அருளியிருக்கிறார்.)

 

சீடன்: -     அனேகம் சுருதிப் பிரமாணங்களாலும், யுக்தி அனுபவங்களாலும் என் மனம் ஞான நிலையினின்றும் சலியா வண்ணம் அருள் புரியும் ஞான தேசிகரே! அடியேன் அந்தக் கரணத்திலிருந்த மயக்கங்களனைத்து மொழிந்து தெளிவெய்தினேன். பிரகாசமாகிய கண்ணாடியை யடிக்கடி துடைப்பதில் குற்றமில்லை யன்றோ? அதுபோல் அடியேனுக்குத் தாங்கள் திருவாய் மலர்ந்த உபதேச மொழிகளாகிய அமிர்தம் தெவிட்டவில்லை. இன்னும் அத்தகைய மொழிகளைக் கேட்க விரும்புகின்றேன்.

 

[மயக்கங்க ளென்பன அஞ்ஞான தசையில் உள்ள ஐவகைப் பிராந்திகளாம்.

அவை: -

 

1. இது நித்தியம் இது அநித்திய மென்பதை யாராய்ந்துணராது, இவ்வுலகம் நித்தியப் பொருளே யென்று மயங்குதல்.

2. கருவி கரணங்களை வேறு பிரித்துத் தனக்கன்னியமாகக் காணாமல், சடமாகிய தேகமே தானென்றிருத்தல்.

3. "நான் சீவன்; நான் கர்மங்களைச் செய்கிறேன்; நான் போகங்களை யனுபவிக்கிறேன் " என்று கருதல்.

4. ஆன்மாவுக் கன்னியமாகக் கடவுள் வேறே இருக்கிறாரென்று கருதல்.

5. தான் சச்சிதானந்த சொரூபமே யென்பதை யுணராமல், கிஞ்சிக்ஞனாகிய நான் எப்படிச் சிவமாவேன் என்று மயங்குதல்

.
[இந்த ஐந்து பிராந்திகளும் தன்னை யறிந்தவுடன் நீங்கும்.]


(சீடன் கர்மானுபவத்தைப் பற்றிய ஓர் ஐயத்தைப்பற்றி வினாவுகிறான்).

 

சீடன்: -      சுவாமிகளே! சாத்திரங்கள் உண்மை யல்லாதனவற்றைக் கூறாவல்லவோ? ஒருவர் செய்த கர்மங்கள் அனுபவித்தாலன்றி ஒழியாதென்று கூறப்பட்டிருக்கிறது. மறுபடி பல ஜன்மங்களில் செய்த சஞ்சித கர்மங்களை யெல்லாம் பரிசுத்தமான ஞானத்தீ சுட்டெரிக்கு மென்று கூறப்பட்டிருக்கிறது. சுவாமிகளே! இவை யிரண்டில் எதையுண்மை யென்று நம்புவதோ அடியேற்கு விளக்கி யருளல் வேண்டும்.

 

குரு: -       மைந்தனே! அந்தக்கரண பேதங்கள் அளவில்லாதன வாதலால் சீவபேதங்களுக் களவில்லை. (அந்தக்கரணங்களிலுள்ள சுபம், அசுபம், சுபாசுபம் என்ற பேதங்களின்படி) சீவன்களின் செய்கைகளும் அளவில்லாதனவே. இவற்றால் சீவர்களில் அதிகாரி பேதங்கள் உண்டு. இதனால், ஒரு விருக்ஷத்தில் எப்படி முதலில் மொக்கு தோன்றி, பின் பூவாகி, காயாகிக் கடையில் பலனளிக்கிறதோ, அதுபோல் வேதமும் அதிகாரி பேதத்திற்குத் தக்கபடி கர்மகாண்டம், உபாசனை காண்டம், ஞானகாண்டம் என்ற மூன்றுவித காண்டங்களாலே, பூர்வபட்சம் சித்தாந்தம் இரண்டையும் கூறாநிற்கும். பாபகர்மங்களைச் செய்வோர் அடையும் நரகங்கள் நிச்சயமாகவுளவேனும், தானம், மந்திரம், விரதம், எக்ஞம் முதலிய பிராயச்சித்தங்களால் பாபம் ஒழிந்து போம் என்று சாத்திரங்கள் கூறுவது பொய்யாகுமோ? அதுபோலவே, அநேக ஜன்மங்களை யுண்டாக்கக்கூடிய சஞ்சித கர்மங்கள் எவ்வளவு அதிகமாயினும் (பிரம்மான்ம ஐக்ய) ஞானமாகிய அக்னி சுட்டெரிக்கும் என்ற வேதவாக்கியத்தை நம்பினால் மோக்ஷமடைவது சாத்தியம். 

 

[செய்த கர்மத்தை அனுபவித்தே தீரவேண்டு மென்பதும், பிராயச் சித்தத்தால் பாபங்களை நீக்கிக் கொள்ளலாமென்பதும் கர்ம காண்டத்திற்கூறப்பட்டவை. இவை மந்த அதிகாரிகளுக்கு. சஞ்சித கர்மங்கள் எவ்வள விருப்பினும் ஞானாக்னி சுட்டெரிக்கு மென்பது ஞான காண்டத்தில் விதித்துள்ளது. இது தீவிர அதிகாரிகளுக்கு. உபதேசமே அதிகாரி பேதமறிந்து கூறப்பட வேண்டியது. வேதத்தில் சகல அதிகாரிகளுக்கும் அவரவர்கள் அறிவின் அளவிற்குத் தக்கபடி கூறப்பட்டிருக்கிறது. ஆதலின் சில விஷயங்களில் கர்ம காண்டத்தில் கூறப்பட்டிருப்பவை ஞான காண்டத்தில் கூறப்பட்டிருப்பவை கட்கு முரணாகத் தோன்றும். இது அதிகாரி பேதத்திற்குத் தக்கபடி உணரவேண்டிய விஷயம்.

 

குரு ஆசானுடைய அதிகாரத்தையும், அறிவின் அளவையும் சோதித்தே அவரவருக்குத் தக்க உபதேசம் செய்வர்.

 

“சீடனறி வெவ்வளவோ வவ்வளவுஞ் சிந்தித்துக்

     கூறுமுப தேசங்கள் கூறுவா - னீடுபுக

      மூக்கமுடைச் சீராம னொண்ணுதற்கா யன்றெய்தான்

காக்கைக்குத் தக்க கணை''                        (வள்ளலார் - ஞானவிளக்கம்.)


மந்த அதிகாரிகளுக்கே சரியை கிரியைகளைக் கூறியிருப்பது. அதனால் ஞானத்தை யுபதேசிக்கும் ஞான காண்டத்தில் அவற்றைத் தாழ்த்தியே கூறப்பட்டிருக்கிறது.

 

"தலையெல்லாந் தெய்வமெனுந் தன்னை மற்றேனை

       யிடையெல்லாம் வேறிருக்கு மென்னுங் - கடையெல்லா

மரத்தைப்பா டாணத்தை மண்ணையிருஞ் செம்பைக்

கருத்துருகத் தெய்வமெனுங் காண்''


"உத்தமங்க ளெல்லா முணர்வையே தாம் பேணு

மத்திமங்க ளேபதுமை யைவாழ்த்துஞ் - சுத்த

வதமங்க ளெல்லாந்தன் னாகத்தைப் போற்று

நதியோடை கூபமென நாடு''

 

"தத்துவத்துக் கப்பாலே தன்னைத் தரிசித்து

நித்தபரி பூரணத்தி னில்லாமல் - சுத்த

பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு

நனிமா னிடமிருக நாடு''                    (வள்ளலார் - ஞான விளக்கம்.)

 

இவ்வாறு கூறியதனாலேயே சரியையாதி விக்கிரகாராதனை முதலியவற்றை யடியோடு பயனற்றவை யென்று கருதிவிடுவது சுத்த மடமையாகும். உச்சிப்படி யேறியவனுக்கே கீழ்ப்படி யனாவசியமன்றி ஏனையோர்க்கு அவசியமேயாகும்.)

 

சீடன்: -      ஞானதேசிகரே! பல ஜன்மங்களுக்குக் காரணமாகிய சஞ்சித கர்மங்களின் வேரையறுப்பதும், பிரம்ம சாக்ஷாத்காரமான மோக்ஷத்தை யளிப்பதுமாகிய மெய்ஞ்ஞானத்தின் மகத்துவத்தை மிகக் கற்றோரும் அறிந்து அதனைப் பெற்றுய்யாமல், கர்மமாகிய படுகுழியில் விழுந்தவாறேனோ அருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.

 

குரு: -       மைந்தனே! யாவற்றிலும் மெய்ப் பொருளையே காணும் அகமுக திருஷ்டியுடையோர் நித்தியமான பிரம்மானந்த பதவியை யடைவர். வழி நடப்போர், இரண்டு பிரகாசமுள்ள கண்களிருப்பினும், பராமுகமாயிருந்தால் எப்படிக் குழியில் வீழ்வார்களோ அதுபோல் வெளி முகங்கொண்ட சொர்க்ககாமிகளாயினோர், கருவி நூல் பயிற்சியாகிய கல்வி கற்றோராயினும், பிறவிக் கடலி லழுந்துவார்களேயன்றி முத்தியடையார்கள்.
 

சீடன்: -      தேசிகோத்தமரே! நல்வினை, தீவினையும் யாவற்றிற்கும் காரணகர்த்தாவாகிய ஈசுரன் செய்விக்கும் செயல்களன்றோ? அப்படியிருக்கச் சுதந்தர ஈனராகிய சீவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் மேல் குற்றங்கூற ஒரு காரணமுமில்லையே

 

குரு: -       மைந்தனே! அவை சாத்திரங்களின் பொருளை மறந்த அறிவிலிகள் கூறும் மயக்கமொழிகளே யாகும். உண்மையில் ஈசுவரனுடைய சிருஷ்டியும், சீவனுடைய சிருஷ்டியும் வேறு வேறாகும். உலகில் யாவர்க்கும் பொதுவான சராசரப் பொருள்களாகிய யாவும் ஈசுவர சிருஷ்டியாகும். நானென்னும் அகந்தை, மமதாபிமானங்கள், கோபம், பொறாமை, ஆசை முதலிய இவை யாவும் சீவசிருஷ்டியாகும்.

 

ஈசுவரனுடைய சிருஷ்டிகள் யாவும் மோக்ஷமடையச் சாதனங்களாகும். சீவர்களாற் கற்பிக்கப்பட்ட சிருட்டிகள் அவர்களுக்குப் பிறவியையளிக்கும் பந்தங்களாகும். ஈசுர சிருஷ்டியாகிய தாவராதிகள் அழிந்தால் ஒருவர்க்கும் ஜனனம் ஒழியாது. கோபம், அகங்காரம், ஆசை முதலிய சீவசிருட்டிகள் நாசமாயின் ஜனனம் ஒழியும்.

பிரளய காலத்தில் ஈசுர சிருஷ்டியாகிய சகலமும் அழிகின்றன. அப்படியாயினும் ஜனன நாசம் ஒருவருமடைவதில்லை. தேசம், காலம், தேகம் முதலிய ஈசுவர சிருஷ்டிகள் யாவும் இருந்தபோதிலும், சீவ சிருஷ்டியாகிய ஆசை, கோபம், அகங்காராதிகளை யொழித்தவர்கள் உயிரோடு இவ்வுலகிலேயே ஞானமுடைய ஜீவன் முக்தர்களாகிறார்கள். ஆகையால் பாசமோக அகங்காராதிகளனைத்தும் சீவசிருஷ்டியே யன்றி ஈசுவரனுடைய சிருஷ்டியல்ல வென்றறிய வேண்டும்.

 

[ஈசுரசிருஷ்டி எப்போதும் பொதுவாகவேயுள்ளது. சீவசிருஷ்டியே அவற்றில் பலவித பேதங்களைக் கற்பிப்பது. திருட்டாந்தமாக ஒரு ஸ்திரீயை எடுத்துக் கொள்வோம். தேக அமைப்பில் ஸ்திரீயென்பது ஒரே தன்மையாக விருக்கிறது. அதாவது எல்லா ஸ்திரீகளும் ஒரேவித தேகஅமைப்புடையவர்கள். ஆனால் சீவன் தனது புத்தி விருத்தியினா லுண்டான கற்பனையால் அந்த ஒரு ஸ்திரீயே தன் தந்தைக்குப் புத்திரியாகவும், பாட்டனுக்குப் பேத்தியாகவும், உடன் பிறந்தார்க்குச் சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், மாமனார் மாமியாருக்கு மருகியாகவும், புத்திரர்க்குத் தாயாகவும், பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியாகவும் இருக்கிறாள்.

 

ஆகையால் ஈசுர சிருஷ்டி எப்போதும் முத்திக்குச் சாதனமானதெனவும், ஜீவசிருட்டி முத்தியை யடைவதற்கும், முத்தியடையாது இப்பவ சாகரத்திலுழன்று கொண்டு கிடப்பதற்கும், இரண்டிற்கும் ஏதுவாக விருக்குமென்றும் உணரவேண்டும். அது சீவன் எத்தகைய வழியில் முயற்சி செய்கிறானோ அதற்குத் தக்கதாக விருக்கிறது.]

 

(குரு பின்னும் ஆசை முதலியவை சீவ சிருஷ்டியே யென்பதைப் பற்றிச் சுருதிப் பொருளை விளக்கிக்காட்டுகிறார்.)

 

குரு: -       "அச்சுவத்தம் (அரசமரம்) என்ற ஒரு விருட்சமுண்டு. அதில் இரண்டு பக்ஷிகள் சஞ்சரிக்கும். அவற்றில் ஒருபட்சி அம் மரத்திலுள்ள கனிகளை நன்றாயிருக்கிறது நன்றாயிருக்கிறது என்று விருப்பத்தோடு புசிக்கும். மற்றொருபாட்சி அக்கனிகளைப் புசியாது,'' என்ற திருட்டாந்தரப்படி முண்டகோ உபநிடதம் சீவனையும் ஈசுவரனையும் பிரித்துக் கூறியிருக்கிறது. இதை நீ யுணர்வாயாக.

 

[சரீரமாகிய இவ்விருக்ஷத்தில் சீவனென்கிற ஒருபட்சியும் சீவசாட்சி யாகிய ஈசுரனென்ற ஒரு பட்சியும் இருக்கின்றன. இவற்றில் சீவன் என்கிறது அஞ்ஞானத்தால் சுகதுக்கரூபமான இஷ்டபலன்களைப் புசிக்கிறான். சர்வஞ்ஞனும், சத்துவகுண மாயையினு பாதி யுடையவனுமான ஈசுவரன் அவற்றைப் புசிப்பதில்லை.]

 

(குரு இன்னும் சீவச்செயல்களை ஈசுரச்செயலென்று கூறுவோர் அதோகதி யடைவார்கள் என்று கூறுகிறார்.)

 

"சீடனே! இந்தச் சீவனால் நேரிடும் ஆசை கோபம் முதலிய யாவும் இந்தச் சீவன் செயலே என்று கூறாது கடவுளின் செய்கையென்று கூறுவோர் அதோகதி யடைவார்கள். இந்தச் சீவனால் நேரிடும் கிருத்தியங்களனைத்தும் இவன் செயலே யன்றி அத்தேவன் செயலல்லவென்றுணரும் விவேகிகளே பரிசுத்தமான மோட்ச வீட்டை யடைவார்கள்.

 

[காமக்குரோதாதி தீயகுணங்களைத் தன் செயல் என்று கருதாத சீவன் மேலுமேலும் அவற்றைச் செய்து பெரும்பாபத்தைத் தேடிக்கொள்வான். அந்தத் தீய குணங்கள் தன்னுடைய குணங்களே என்று உணர்ந்தவன் அதனால் நேரிடக்கூடிய தீயபலன்களுக்கு அஞ்சி அக்குணங்களை யொழி க்க முயன்று ஞானத்தைப் பெற்று முத்திவீட்டையடைவான்.]

 

(ஈசுவரனிடத்து பாரபட்சம் கூடுமோவெனச் சீடன் வினவுகிறான்)

 

சீடன்: -     “ஞானமே திருமேனியாகக் கொண்டருளிய ஆசாரியரே! நல்லவர்கள் கெட்டவர்கள் யாவர்க்கும் ஆண்டவனாகிய ஈசுவரன் பொதுவான வரன்றோ? அப்படி யிருக்கச் சிலரைச் சந்தோஷ மனுபவிக்கும்படி க்ஷேமமாக வாழ்வித்தலும், சிலரைத் துன்பமனுபவிக்கச் செய்வித்தலும் ஏன்? " என்றான்.

 

குரு: -      ஒரு தந்தையானவன் தன் புத்திரர் அனைவரிடத்தும் ஒரே அளவான அன்புடையவனாயினும், நற்குணம் நன்னடக்கை யுடைய பிள் ளையைச் சீராட்டிப் புகழ்வதும், கெட்ட நடக்கையையுடைய புத்திரனைக் கண்டித்துத் தண்டிப்பதும் செய்கிறானன்றோ? அதுபோல் ஈசனும் தன்னால் அருளிச் செய்யப்பட்ட சாத்திரங்களில் விதித்தவற்றைச் செய்து விலக்கியவற்றைச் செய்யா தொழித்தவர்களுக்கு இன்பத்தை யளிக்கிறான்; விலக்கிய தீநெறியில் செல்வோர்களைத் தண்டிக்கிறான். ஆன்மாக்கள் நல்வழிப்படும் பொருட்டுச் செய்யும் தண்டனையும் கருணையாற் செய்வதேயன்றி வேறில்லை யென்றறிவாயாக.

 

[கருணையே யுருவமாகவுடைய பரமேட்டி எல்லாச் சீவர்களிடமும் ஒரேவிதமான பட்சமேயுடையவர். குற்றம் செய்த சீவர்களைத் தண்டிப்பதும் அவர்கள் நற்கதியடைய வேண்டுமென்ற கருணையாற் செய்வதேயாகும்.]

 

அன்புள்ள புத்திரனே! ஈசன் யாவரிடத்தும் சமதிருஷ்டி யுடையவனென்பதற்கு இன்னொரு திருட்டாந்தம் கூறுகிறோம். கற்பகவிருக்ஷம் பாரபட்சமின்றித் தன்னையடைந்தவர் வறுமையை யொழிக்கின்றது. அது போலவே அக்கினி தன்னையடைந்தவர் குளிரையும், ஜலம் தன்னையடைந்தவர் தாகத்தையும் தவிர்த்து இரட்சிக்கின்றன. இவற்றைப் போலவே ஈசுவரனும் தன்னை வழிபடுவோர்க்கு அருள்புரிகிறான். தன்னை நீங்கினோர்க்கு அருள் செய்யான். இது யார் குற்றமென்று ஆராய்ந்து பார். இது சீவாகளின் குற்றமேயாகும்.

 

[இஃது நன்கு விளக்குமாறு பட்டினத்தடிகள் அருளிய கீழ்க்கண்டபா உய்த்துணரற் பாலது: -

"பொருதிடங் கொண்ட பொன்னி புரக்கு

மருதிடங் கொண்ட மருத வாண

தின்னது குற்ற முளதோ நின்னினைந்

தெண்ணருங் கோடி யிடர்ப்பகை களைந்து

கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா

இறப்பையும் பிறப்பையு மிகழ்ந்து சிறப்பொடு

தேவ ராவின் கன்றெனத் திரியாப்

பாவிக டமதே பாவம் யாதெனின்

முறியற் பெறுககன் முப்பழங் கலந்த

வறுசுவை யடிசி லட்டினி திருப்பப்

புசியா தொருவன் பசியால் வருந்துத்

லயினியின் குற்ற மன்று வெயிலின் வைத

தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப

மடா அ ஒருவன் விடாஅ வேட்கை

தெண்ணீர்க் குற்ற மன்றுகண் ணகன்று

தேன்றுளி சிதறிப் பூந்துணர் துறுமி

வாலுகங் கிடந்த சோலை கிடப்ப

வெள்ளிடை வெயிலில் புள்ளி வெயர் பொடிப்ப

வடிபெயர்த் திடுவா னொருவ

னெடிது வருந்துத னிழற்றீங் கன்றே"]

 

மகனே! நாம் ஒன்று கூறுதும் கேட்பாயாக. மனிதர்களுக்குப் பிரம்மானந்தப் பேற்றையளித்தற் கென்றே சுவரன் வேதத்தை யருளியிருக்கிறார். யார் மோக்ஷமடைய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு முயன்று மேற்கண்ட வேதத்தில் கூறப்பட்ட வழியில் நடந்து, பிரம்ம நிஷ்டர்க ளாகிய பெரியோர்களின் சகவாசத்திலிருந்து, காமக்குரோதாதி மலின *வாசனைகளை யொழித்து, சமதமாதி சாதனைகளை யடைந்து, நித்தியா நித்திய விவேகம் உடையவர்களாய், அவிவேகத்தா லுண்டான மாயையாகிய பேதபுத்தியை யொழித்து, ஓர் நிலையில் நின்று ஞானத்தை யடைகிறார்களோ, அவர்கள் பிறப்பிறப்பாகிய பவசாகரத்தைக் கடந்து முத்தியங்கரை சேர்வார்கள். இது நிச்சயம் என்றறிவாயாக.

 

சீடன்: -      சுவாமிகளே! அத்தகைய ஞானத்தை எவ்வாறடையலாகு மென்பதைத் தயை புரிந்து அருளப் பிரார்த்திக்கிறேன்.

 

குரு: -       சீடனே! இந்த ஞானம் எவ்வாறு வருமெனின் இடைவிடாமல் விசாரம் செய்வதால் வரும். விசாரமாவது என்னெனின், " இந்தத் தேகேந்திரிய கரணங்களில் நான் என்று இருப்பது எது? இவற்றில் சித்தாக உள்ளது எது? இச்சித்தும் ஜடமும் ஒன்றாகப் பொருந்தும் பந்தமாவது யாது? மோக்ஷமென்பதுதா னென்ன?'' என்று சதா ஆராய்ச்சி செய்தலே விசாரம் என்று ஆன்றோர் கூறுவர்.

 

[வாசிட்டத்தில் வசிட்டர், ஸ்ரீ இராமபிரானை நோக்கி,


            "கெடாத சிற்கண் ணானீதான் கிளர்மே லவர்களுடனேதான்

           விடாதிவ் வுலகே தியாமாரென் றுரைக்க மெல்ல விசாரிப்பாய்

           தடாதுட் பொருடேர் வித்தைக்கு விசாரந் தானே தனிஞானம்

           கடாவி யறியத் தக்கத்திற் காணும் பாலின் மதுரம் போல்''

 

என்று விசாரத்தைப்பற்றி அருளியுள்ளது கவனிக்கத்தக்கது.

 

சீடன்: -     சுவாமிகளே! கடந்த ஜன்மங்களில் செய்துள்ள புண்ணிய கர்மங்களின் பயனாக ஞானம் சித்திக்குமல்லவா? அப்படி யிருக்க இப்போது விசாரம் செய்ய வேண்டுவ தேனே அடியேற்கு விளங்கவில்லை. அதை யருள் செய்யப் பிரார்த்திக்கிறேன்.

 

குரு: -       நாம் செய்யும் புண்ணிய கர்மங்களை சுரார்ப்பணமாகச் செய்தால், அவற்றின் அசுத்தம் நீங்கிச் சுத்தமாம்; பிறகு சுத்தமான மனம் ஆன்ம அனான்ம விசாரஞ் செய்து ஞானத்தை யடையும்.

 

[நாம் செய்யும் சத்கருமகங்ளை அவற்றின் பலனை யிச்சிக்காமல் ஈசுரார்ப்
 பணமாகச் செய்தால், அவற்றின் பயனாகச் சித்த சுத்தியுண்டாகும். அதன் மேல் மனம் நித்தியம் எது அநித்தியம் எது, நாம் யார் என்பனவற்றை விசாரித்து ஞானத்தையடையும். நிஷ்காம கர்மம் சித்த சுத்தியைத் தருமேயன்றி விசாரத்தைப் போல் நேரே ஞானத்தை யளிக்கவல்ல தல்ல. ஆகையால் நிஷ்காம கர்மத்தால் சித்தசுத்தி வந்த பின் விசாரம் செய்ய வேண்டும் என்பதாம்.]

 

(சீடன் பின்னும் சங்கித்தல்)

 

சீடன்: -     தேசிகோத்தமரே! பக்தி, வைராக்கியம், சுவர்க்கபோகம், அணிமாதி சித்திகள் முதலியவற்றை யெல்லாம் தரவல்ல நிஷ்காம கர்மங்கள், தன்னைப் பிரம்மமாக அறியாத அஞ்ஞானத்தை மட்டும் நீக்கத்தகுந்த புத்தியை யளித்தல் அருமையோ? அதற்கு விசாரம் வேண்டு மென்பதென்னையோ அருளல் வேண்டும்.

 

குரு: -      சீடனே! தன் உண்மையுருவை மாற்றி மாறு வேட மணிந்துள்ள ஒருவனைக் கண்டறிய வேண்டுமாயின், மறைந்திருக்கும் அவன் குணங்கள், ஒழுக்கங்கள், அடையாளங்கள் முதலியவற்றை உற்றுணர்ந்து இவன் இன்னவன் என்று அறிய வேண்டும். அப்படிக்கின்றி வெகு தூரம் ஓடுவதாலும், குதிப்பதாலும், தலைகீழ் கால்மேலாக நிற்பதாலும், உயர்ந்த கமபத்தி னுச்சியிலேறி யாடுவதாலும், இன்னும் இத்தகைய பல கருமங்களைச் செய்வதாலும், வேடமாறியிருக்கும் அவன் உண்மையை யறிய முடியாது. அதுபோல்,

 

சச்சிதானந்த சொரூபமாகிய பரப்பிரம்மம் பஞ்சகோசாதிகளோடு கூடிச் சீவனாக மாறு வேடமணிந் திருக்கிறது. அதையறிய வேண்டின் ஞானத்தைப் பெறவேண்டும். பிரம்மத்தை அதற்குரிய இலக்கணங்களாலறிவிக்கும் வேதங்களாற் பிரதிபாதிக்கப்பட்ட அத்தகைய ஞானம், விசா ரத்தால் மட்டுமே வருமன்றிப் பல சாத்திரங்களைக் கற்பதாலும், அந்ந்தானங்கள், ஜபதபங்கள், மந்திரங்கள், யாகங்கள் ஆகிய வேறென்ன செய்வதாலும், தன்னைத்தா னறிவதாகிய அந்தஞானம் வராது.

 

"நாமார் நமக்குப் பதியா ரெனவரு ஞானங்களே

மாமாயை கன்ம மலத்திரள் மாற்றிடும்........''         என்று வள்ளலார்

 

அருளியபடி விசாரணையால் தான் ஞானம் வரும்.

 

விசாரணையால் அடைய வேண்டிய ஞானம், தன்னைத்தான் அறிவதே யாகும்.


       "தன்னை யறிவ தறிவா மஃதன்றிப்

 பின்னை யறிவது பேயறி வாமே''


 "தன்னை யறிந்து சிவனுடன் றானாக

 மன்னு மலங்குண மாளும் பிறப்பும்''


"தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை யறியாமற் றானே கெடுகின்றான்''                (திருமந்திரம்)

 

(ஞானத்தால் தான் அஞ்ஞானம் ஒழியு மென்பதைப் பற்றிச் சீடன் திருட்டாந்தத்தோடு வினவுகிறான்.)

 

சீடன்: -      "சுவாமி! கண்ணாடியில் இருக்கும் அசுத்தத்தைக் கையால் துடைத்தால் தான் ஒழிகிறதே யன்றிப் புத்தியால் ஒழித்தவர்களை காண்கிலேன். அதுபோல் களங்கமாகிய அஞ்ஞானமும் சற்கரு மத்தால் நீங்காமல், அறிவால் உணரும் ஞானத்தால் எப்படி நீங்குமோ? அதை விளக்கியருளப் பிரார்த்திக்கிறேன்'' என்றான்.

 

குரு: -       கண்ணாடியில் உள்ள அழுக்கு உண்மையானது. ஸ்படிகக்கல்லில் கருநிறம் தோன்றுவது உண்மையல்ல, ஆரோபம். ஆகையால் கண்ணாடியிலுள்ள அழுக்கை யெடுக்கக் கையால் தொழில் செய்ய வேண்டும். ஸ்படிகக்கல்லில் தோன்றும் கருநிறம் பொய்யென்றறிய மனம் மட்டுமே போதும்.

 

அதுபோல் தாஷ்டாந்தத்திலும், சச்சிதானந்த சொரூபத்தில் தோன்றியிருக்கும் அசத்து, சடம் துக்கமாகிய பிரபஞ்சாதிகளியாவும் கிளிஞ்சிலில் வெள்ளி தோன்றுவது போல் மாயையால் ஆரோபமாகத் தோன்றியதன்றி சத்தியமானவையன்று. அஞ்ஞானத்தைக் கருமங்கள் பகைத்து நாசம் செய்யாமல் தமக்கு உறவாக்கிக்கொள்ளும். பரிசுத்தமான ஞானமே கருமத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டெரிக்கவல்ல அக்னியாகும்.   

 

      ஒருவன் விட்டில் எங்கோ வோரிடத்தில் ஒரு வஸ்துவை வைத்து விட்டுப் பிறகு அந்த விடத்தை மறந்து போனான். அதற்காக அவன் நூறு வருடம் புரண்டு புரண்டு
 அழுதாலும் அப்பொருள் கிடைக்குமோ? ஒரு போதும் கிடைக்காது. நிதானமாகச் சிந்தித்து கடைசியில் மறதி நீங்கி “ஆ! கூடத்திலுள்ள மேலண்டை அறையிலிருக்கும் சிறிய மாடத்தில் வைத்தோம்'' என்று அந்த இடம் நினைவிலுதிக்கச் செய்துகொண்டால்தான் அப்பொருள் கிடைக்கும்.

     

      அதுபோலவே விசாரத்தால் அஞ்ஞானமாகிய மறதியை நீக்கி, அறிவினால் பரிசுத்த ஆன்மாவைத் தரிசிப்பதாகிய ஞானத்தைப் பெறவேண்டு மன்றி, நூறு யுகங்கள் பிரபலமாகிய பெரிய கர்மங்களைச் செய்து வரினும் அந்த ஞானம் கிடைக்க மாட்டாது.

 

["பத்திநெறி நிலைநின்று நவகண்ட பூமிப்

      பரப்பைவல மாக வந்தும்

      பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்

            பசிதாக மின்றி யெழுநா

மத்தியிடை நின்று முதிர் சருகுபுனல் வாயுவினை

            வன்பசி தனக்க டைத்தும்

மவுனத் திருந்து முயர் மலை நுழை தனிற்புக்கு

            மன்னுதச நாடி முற்றுஞ்

சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச்

            சோமவட் டத்த டைத்தும்

சொல்லரிய வமுதுண்டு மற்பவுடல் கற்பங்க

            டோறுநிலை நிற்க வீறு

சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ

            சித்தாந்த முத்தி முதலே

சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே

            சின்மயா னந்த குருவே"

 

என்று கூறியருளினர் மெய்ஞ்ஞானச் செல்வராகிய நம் தாயுமான சுவாமிகள்.

மேலே கூறியவற்றால், விசாரமே ஞானத்திற்குச் சாதனமென்பதும், கருமம் ஞானசாதன மன்றென்பதும் நன்கு விளங்குகிறது. ஆனால் நிஷ்காம கர்மம், சித்த சுத்தி யளித்து, அதன் துவாரா விசாரமுதித்து ஞானம் பெறச் செய்யும் என்பது உணரத்தக்கது. இதையே பகவான் கீதையில் கர்மயோகம் என்றருளியது.]

(சீடன் கன்மகாண்டத்தில் கூறியுள்ளவற்றைப் பற்றி சங்கித்தல்.)

சீடன்: -     தேசிகோத்தமரே! ஞானம் ஒன்றே மோக்ஷ சுகத்தை யளிப்பது என்று கூறும் வேதம், புண்ணிய கருமத்தால் தேவஜன்மமும், பாப கருமத்தால் மிருக முதல் தாவரம் வரையிலுள்ள ஜன்மமும், இரண்டும் கலந்த மிசிர கருமத்தால் மானிடப் பிறவியும் கிடைக்கு மென்றும், அவனவன் தன் தன் ஜாதியாசார ஒழுக்கங்களில் தவறாது நடத்தலே தவம் என்றும், அதனால் சுகமடைவானென்றும் கரும காண்டத்தில் கூறியிருக்கிறதே, அதன் காரணத்தை அருள் செய்யப் பிரார்த்திக்கின்றேன்'' என்று வினவினான்.

குரு: -      மைந்தனே! மண் முதலியவற்றை யுண்டு வியாதியும் றிருக்கும் தன் குழந்தையின் நோயை நீக்கக் கருகிய தாயானவள், நேரே அதற்கு மருந்தை யளித்தால் அது புசியா தாகையால் சுவையுடைப தின்பண்டங்களைக் காட்டி அவற்றில் ஒளடதத்தை மறைத்து வைத்துக் குழந்தை யுண்னும்படிச் செய்கிறாள். அக் கருணையுடைய மாதாவைப் போன்றே, இல்லற தருமங்களைச் செய், எக்ஞங்களைச் செய் என்று வேதம் கூறியதே யன்றி உண்மையில் அதன் கருத்து வேறாகும். சுவர்க்காதி போகங்களை அனுபவிக்க ஆசையுடையோர் அந்த உண்மைக் கருத்தினை யுணர மாட்டார்கள்.

போகங்களைப் புசிக்கும் சீவன்கள் அகப்பட்டதை உண்பதும் உறங்குவதும் சுபாவமேயாகும். சுருதி சுபாவமாக வுள்ளவற்றைக்கூட எங்கேனும் விதிக்குமோ? அதற்கு அவ்வளவு தெரியாதோ? "காகமே! நீ கறுத்திடு" “அக்னியே நீ சுடு,'' "வேம்பே கசப்பாயிரு" என்று ஒருவர் விதிக்க வேண்டியதில்லை யன்றோ?

சீடனே! இன்னொரு விஷயம் கவனித்தற்பாலது.    "மதுவும் மாமிசமும் உண்ண நீ யிச்சித்தால் யாகங்கள் செய்து அங்கு உண்; ஸ்திரீ போகத்தில் விருப்பங்கொண்டால் அக்னி சாட்சியாக நீ மணம்புரிந்த பெண்டோடு கலவி செய்'' என்று வேதம் விதித்திருக்கிறது. அப்படி விதிக்கின் இவன் மனம் போனபடி நேரிட்ட நேரிட்ட எல்லா போகங்களிலும் தலையிட மாட்டான் என்ற கருத்து கொண்டே அவ்வாறு கூறியது. இதனால் யாவற்றையும் விட்டொழிய வேண்டுமென்பதே வேதத்தின் அபிப்பிராயம் என்பது நன்கு விளங்குகிறதன்றோ.

மேலும் மதுமாமிசங்களை யாகம் செய்து புசி யென்ற வேதம், பின்னால் அவற்றைப் புசிக்காமல் மோந்து பார்ப்பது மாத்திரமாய் விட்டுவிடுவாயாயின் நெடுங்காலம் சுவர்க்க போகங்களை யனுபவிப்பாய் என்று கூறியிருப்பதைச் சிந்தித்துப்பார்! பிறகு ஸ்திரீ போகமும் புத்திரோற்பத்தியின் நிமித்தம் விரும்புவாயாக என்று கூறியிருப்பதைப் பார். மேலும் நேரிட்ட ஸ்திரீகளை யெல்லாம் சேர்ந்தால் இம்மையில் பழியும், மறுமையில் நரக வேதனையும் உண்டாகுமென்று கூறுயிருப்பதோடு, மனைவியைச் சேர்வதற்கு இன்னின்ன தினங்களில் தான் சேர வேண்டும் என்பது முதலிய பல விதிகளை ஏற்படுத்தியிருக்கிறது. யாக எக்ஞங்களைச் செய்யென்ற வேதம் 'உன்னால் யாகத்தில் கொல்லப்பட்ட ஆடானது சுவர்க்க லோகத்தில், எஃகினாலாகிய கூரிய கொம்புகளோடு கோபத்துடன் உன் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்து, நீ அங்கு வந்ததும் உன்னை அக் கொம்புகளால் குத்தி வயிற்றைப் பிளந்து துன்பப்படுத்திவிடும்; ஆகையால் யாவையும் விட்டொழியென்று கூறுவதைப் பார்.

இம்மட்டோ தாரபுத்திராதி யாவற்றையும் விட்டொழித்த சந்நியாசி, துறவி முதலியோர்கட்கு நிந்தை நீங்கிப் புகழ்ச்சி ஏற்பட்டிருப்பதையும் பார். குழந்தாய் இவை யாவு மறிந்து யாக எக்ஞ முதலிய சகல கருமங்களையும், மனைவி புத்திரர் தனம் முதலிய சகல ஆசைகளையும் அறவே விட்டுப் பிரம்மான்ம ஐக்கிய ஞானத்தாலுண்டாகும் நிரதி சய ஆனந்தத்தை அடைவாயாக.

"அயம கத்தினி லரசநீ படுத்தவம் மறிகள்

       செயிர்த ழைந்து கண் டீயுக வரவு பார்த் திருக்கும்

            பயில்வி சும்பு செல் காலையில் வெருவரப் பாய்ந்து

வயிறு போழும்வல் லிருப்பினொண் மருப்பினின் மாதோ

            பகுத்திடு மறிகள் வேள்வி புரிந்தவன பனிவி சும்பி

            னகுத்திடுங் கால நோக்கி யழல் விழி யொழுகப் பாய்ந்து

            வடித்த சா ரிருப்பிற் செய்த மருப்பினால் வயிறு போழ்ந்த

            தெடுத்து நா முரைத்துங் கேட்டி யிறைவவென் றுரைக்க லுற்றான்"  

                                                                   (பாகவதம்). 

(சீடன், அஞ்ஞானமும் ஞானமும் விரோதமின்றி பொருந்தியிராவே யெனச் சங்கித்தல்)

சீடன்: -     சுவாமிகாள்! உலகிலுள்ள அஞ்ஞானம் கருமத்திற்கு விரோதி யல்ல, அதோடு உறவாகி விடுமென்று அருளினீர்கள். அஞ்ஞானத்திற்கும் ஞானத்திற்கும் விரோதம் உளதெனின், சந்திரனில் களங்கமிருப்பது போல் பரிசுத்த ஞானத்தோடு அஞ்ஞானமும் ஒன்றாகப் பொருந்தி யிருந்து சகல காரியங்களையும் செய்யத் தகுமோ?

(குரு, ஞானம் இரண்டு விதமெனக் கூறுகிறார்.)

குரு: -       மைந்தனே! ஞானமானது சொரூப ஞானமென்றும் விருத்தி ஞானமென்றும் இருவகைப்படும். ஆயினும் சொரூப ஞானமே பிறகு விருத்தி ஞானமாக மாறுகிற தன்றி வேறல்ல. சொரூப ஞானம் அஞ்ஞானத்திற்குச் சத்துருவல்ல வென்பதை, நித்திரையில் கண்டாயன்றோ? அந்தச் சுழுத்தியில் சொரூப ஞானத்தோடு கலந்து அழியாதிருந்த அந்த அஞ்ஞானத்தை விருத்தி ஞானம் சுட்டெரித்து விடும்.

சீடன்: -      சுவாமி! சொரூப ஞானமே விருத்தி ஞானமாக மாறுகிறதென வருளினீர்கள். சுழுத்தியில் மருவி யிருந்த அஞ்ஞானத்தை அழிக்க முடியாத சொரூப ஞானமானது, பிறகு விருத்தி ஞானமாக மாறிய போது மட்டும் எப்படி யதைச் சுட்டெரிக்கும்?

குரு: -       சூரியன் தனது கிரணங்களால் உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் எந்த வஸ்துவையும் தகிக்காமல் யாவற்றிற்கும் சாதகமாகவே யிருக்கின்றது; ஆனால் அதே சூரிய கிரணங்கள் சூரிய காந்தக் கண்ணாடியின் மூலமாய்ப் பிரவேசிக்கும்போது எதையும் எரிக்கும் வல்லமையைப் பெறுகிறது. அது போலவே சொரூப ஞானம் விருத்தி ஞானமாக மாறிய போது அஞ்ஞானத்தை யெரித்து விடும் சக்தியுடைய தாகின்றது.

[சொரூப ஞானம் என்பதும் சாமானிய ஞானமென்பதும் ஒன்றே; அவ்வாறே விருத்திஞான மென்றாலும் விசேடஞான மென்றாலும் ஒன்றே. சாமானிய ஞானம் எல்லாரிடமும் உண்டு. சுழுத்தியின்கண் உள்ள சாமானிய ஞானம் அல்லது சொரூபஞான மென்பது ஆன்மப்பிரகாசம் மட்டுமே யாகும். அந்தக்கரண விர்த்தி சுழுத்தியிலில்லை; சொரூப ஞானத்தை யொரு கொள்ளிக் கட்டைக்குச் சமானமாகக் கூறலாம். அது தன் வரையில் பிரகாசமாக விருக்குமே யன்றி அறையிலுள்ள இருளைப் போக்கிப் பிரகாசத்தை யளிக்காது. ஆனால் அதை விசிறி அதில் சுடர் உண்டாகச் செய்தால் அப்போது அது இருளை நீக்கும். அதுபோல் சொரூப ஞானம் அஞ்ஞானத்தை யழிக்கக் கூடியதன்று. அதுவே விர்த்தி ஞானமாக மாறிய போது அச்சக்தி பெறுகிறது.

       சூரிய கிரணங்கள் சிதறியிருப்பதால் எதையும் எரிக்கச் சக்தியுடையவைகளா யில்லை. அதே கிரணங்கள் சூரிய காந்தக் கண்ணாடியில் பிரவேசித்தபோது, வெளியில் வந்து ஒருவிடத்தில் ஒன்றாய்க் கூடுகின்றன. அப்போ துண்டாகும் வல்லமையால் எதையும் எரித்து விடக் கூடியவையாகின்றன. அதுபோல் சொரூப ஞானம் அந்தக்கரண் விருத்தியோடு சம்பந்தப்பட்டு விருத்தி ஞானமாகமாறிய போது, அஞ்ஞானத்தை யெரித்துவிடும் சக்தி யுடையதாகிறது.]

      (கரணங்களால் செய்பவை யாவும் கருமமா யிருக்க, அந்தக்கரண விருத்தியும் கருமமல்லவோ? அப்படியிக்க அதற்கு ஞானம் என்ற பெயர் ஏன் என்று சீடன் வினவுகிறான்.)

சீடன்: -      "சுவாமி! மனோ வாக்கு காயம் என்ற திருவித கரணங்களால் செய்யப்படுபவை யனைத்தும் கருமமன்றோ? விருத்தி ஞானமும் அந்தக்கரண காரியமல்லவா? அப்படி யிருக்க கருமம் அஞ்ஞானத்தைப் போக்குமென்று கூறலாகாதோ? அதற்கு மகத்தான விர்த்தி ஞானம் என்று ஒரு பெயர் கூறுவானேன்? அதை யருளிச் செய்யப் பிரார்த்திக்கிறேன்" என வினவினான்.

குரு: -       மைந்தனே! விருத்தி ஞானம் அந்தக்கரண விர்த்தியா லானதென்பது உண்மையே: கருமங்களும் அந்தக்கர ணத்தா லாவனவே. ஆயினும் ஒரே தாயின் வயிற்றிற். பிறந்த சகோதரர்கள் ஒருவருக் கொருவர் பகைத்துக் கொள்வதைக் காண்கிறோமன்றோ? அது போலவே விருத்தி ஞானமும் கருமமும் அந்தக்கரணத்தின் காரியமேயாயினும், ஞானம் கருமத்திற்கு விரோதியே. கருமம் புருஷதந்திரம், ஞானம் வஸ்து தந்திரமாகும். கருமங்களையும், சாத்திரங்களில் கூறப்பட்ட மானசக் கிரியாரூபமான உபாசனை முதலியவைகளையும் செய்யவும், விட்டுவிடவும், வேறொன்றாக மாற்றவும் கூடும்; ஞானமோ அப்படிச் செய்யக் கூடியதன்று. சக்கிரியையான தியானாதிகளும், விசாரத்தால் உண்டான ஞானமும் அந்தக்கரண காரியங்களே யாயினும் இரண்டும் வேறு வேறே. உலகில் ஒன்றை யொன்றாக இவன் பாவிக்கும் தியானம் கற்பிதமே யன்றி வாஸ்தவமன்று. பிரத்தியக்ஷமாகக் கண்ட ஞானமே சத்தியமாகும். குழந்தாய்! நீ இதில் வீணாக மயக்கங் கொள்ள வேண்டாம்.

ஞானம், யோகம் அல்லது தியானம், இவை இரண்டில் பிரத்தியட்ச அனுபவமாகத் தானே கண்டறிந்தது தான் ஞானம். ஒருவர் சொல்லக் கேட்டபடி மனதினால் பாவிப்பதே தியானம். ஒருவர் சொல்லக் கேட்டது மறக்கப்படலாகும். தானே பிரத்தியட்ச அனுபவமாகக் கண்டது ஒரு போதும் மறவாது; ஆகையால் பிரத்தியட்சமாய்க் கண்டதே மெய், கேட்டபடி தியானிப்பது பொய்யே. அஞ்ஞானமாகிய அவித்தையைக் கண்ட அக்கணங் கொல்வது ஞானமேயன்றி கருமங்க ளல்லவென்று ஐயமற உணரக் கடவாய்.

[புருட தந்திரமென்பது சீவன் தனது பிரியப்படி செய்யக்கூடியது. பகிர்முக கருமங்களும் அந்தர்முக கருமங்களாகிய தியானாதிகளும் ஒருவன் பிரியப்பட்டால் செய்யலாம்; செய்யாமலு மிருக்கலாம்; இடையில் விட்டுவிடலாம்; ஒன்றை யொன்றாக மாற்றிக்கொள்ளலாம்.

வஸ்து தந்திரமென்பது பரமான்மாவின் ஆதீனத்திலுள்ளது. சீவன் பிரியப்படி செய்யவும் விட்டுவிடவும் கூடாது. ஞானம் வஸ்து தந்திரம். ஒருவன் இன்று நாம் சந்திரனைக் காணலாகாதென்று தீர்மானித்திருக்கிறான். தற்செயலாகக் கட்புலனுக்கும் சந்திரனுக்கும் சம்பந்த முண்டாய்விடின் சந்திரஞானம் பிரத்தியக்ஷமாய் விடும். அதைச் சீவன் தடுக்க முடியாது. இவ்வாற்றால் ஞானம் கருமம் இரண்டும் அந்தக்கரணத்தின் காரியங்களே யாயினும் இரண்டிற்கும் பேதம் உள்ளதால் ஒன்றுக்கொன்று விரோதமே யென்று விளக்கிக் காட்டப்பட்டது.]

சீடன்: -      தேசிகோத்தமரே! பிரம்ம சொரூபமான முத்தியை யளிக்கும் தியானம் பொய்யாயின், அதனா லுண்டாகும் முத்தியும் பொய்யாகு மன்றோ?

குரு: -       அப்படி யன்று; இன்னொருவர் சொல்லக் கேட்டவன் ஒரு உருவத்தைத் தியானிக்கும் போது, அச்சமயம் அது பொய்தான். ஆனால் அப் பாவனை திடப்பட்டு, அப்பியாச முதிர்ச்சியில் அவ் வுருவமே தானாகும்போது, அப்போது பிரத்தியட்சத்தில் கண்ட அவ்வுருவம் உண்மையேயாகும்.

[குரு உபதேசத்தால் நிர்க்குணப் பிரம்ம உபாசனை செய்யும்போது, அச்சமயம் இவன் உபாசனை பாவனையே யாதலால் அது பொய்யாகும்; பிறகு உபாசனை திடப்பட்டு அதுவே தானாகும்போது அப்பிரம்ம சொரூபம் உண்மையே யாகும். திருட்டாந்தமாக, யானையைக் காணாத ஒருவனுக்கு அதைக் கண்ட ஒருவன் யானையைப்போல் ஒரு உருவம் எழுதிக் காட்டுகிறான். அதைப்பார்த்த அம்மனிதன் அதைப்போலவே தன் மனதில் பாவனை செய்கிறான். அப்படி அவன் செய்யும் பாவனையில் தோன்றும் யானை பொய்யே யாகும், ஆனால் மறுநாள் அவன் வீதியில் வரும் ஒரு யானையைக் கண்டு தான் செய்த பாவனைப் பழக்கத்தால் இதுவே. யானை யென்றுணர்ந்து சந்தோஷமடைகிறான். அப்போது அவன் பிரத்தியக்ஷமாகக் கண்ணாற் கண்ட யானை சத்தியமானதே யாகும்.

(குரு பின்னும் ஐயமற அருள்கின்றார்)

பொய்யாகிய தியானம் உண்மையான மோக்ஷத்தைத் தரக்கூடிய திடத்தை எவ்வாறு உடைத்தா யிருக்கிறது என்று சங்கிப்பையாயின் கூறுதும். மரணகாலத்தில் அவரவர்கள் எத்தகைய உருவத்தைத் தியானம் செய்கிறார்களோ அத்தகைய ஜன்மத்தையே யடைவர். இச்சையோடு நாமரூபத்தை யுடையவற்றைத் தியானிக்கின் அந்த உருவத்தையே யடைவர். நெடுங்காலமாக தொடர்ந்துவரும் இப் பிறவி ஒழிய வேண்டுமென்று நாமரூபமற்ற சுத்த நிர்க்குணப் பொருளைத் தியானிப்பவன் அப்பிரம்ம சொரூபமே யாவன்; இது சாத்தியம்.

[ *    *     *     *     *

யாதொன்று பாவிக்க நான்

                  அதுவாத லாலுன்னை நானென்று பாவிக்கி

                  அத்துவித மார்க்க முறலாம்

                  எதுபா வித்திடினு மதுவாகி வந்தருள் செய்

                        யெந்தை நீ குறையு முண்டோ

                  இகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி

                        யெங்குநிறை கின்ற பொருளே.”  என்று தாயுமானவரும்.

                  “இந்த வுடலம் விடும் பொழுது

                        யாவன் யாதொன் றினைநினைந்தா

                  னந்த வளவே யந்தப்பா

                        வனையா லதனை யடையுமா

                  லென்ற னியல்பே யெப்பொழுது

                        மிதயத் திடைகொண் டென்பாலாஞ்

                  சிந்தை யொடும் வாளமர் தொடங்கி

                        லதனா லெனையே சேருதியால்''

என்று பகவான் கீதையிலும் அருளியது காண்க.]

      பிரமரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரம்மமாகுவார்களெனின் விசார மென்னத்திற்கு விசாரத்தாலடையும் ஞான மென்னத்திற்கு என்று நினைக்காதே.  நீ முதலில் தியானிக்கும் பிரம்மத் தியானமானது பரோக்ஷ புத்தியே யாகும். அது திடப்பட்ட பின்னர்தான் அப்பரோட்ச புத்தி அபரோட்ச யுத்தியாகி, திரமான விசாரமாய் ஞானமாகும். அதுவே மோக்ஷமுமாகும். இது வேதவாக்கியம் என்றுணர்வாம்.

      முத்தி நிலையாகிய பரிபூரண சொரூபத்தில் அந்தக்கரண சம்பந்தமுடைய விருத்தி ஞானமும் கூடியிருக்குமாயின் அகண்டாகாரமாகிய அனுபவம் எப்படி சித்திக்கும் என்று
   கேட்பாயாகில் கூறுகிறோம்: -

      நீர் நிறைந்த ஜாடியிலுள்ள மண்ணை நீரினின்றும் பிரிப்பதற்காக அதில் சேர்க்கப்பட்ட தேற்றான் கொட்டைப் பொடி அம் மண்ணைப் பிரித்துவிட்டுத் தானும் அம் மண்ணோடு சேர்ந்து எப்படிக் கெடுமோ அதுபோலவே விர்த்தி ஞானமும் அஞ்ஞானத்தோடேயே கெடும்.

      [விருத்தி ஞானம் என்பது சுத்த சத்துவமாய் சேடித்த அந்தக்கரண விருத்தியாகும். மனம் சத்துவமாத்திரமாய் நிற்கும் போது இதற்கு முன் பலவிடங்களில் சிதறி அலைந்து கொண்டிருந்த அதன் வல்லமை முழுமையும் ஒரே விடத்தில் சேர்ந்து நிலைக்கிறது. அதுவும் மாயையே யாகும். ஆனால் அது சத்துவகுண மாயை; இது ஆவரணமாகிய அவித்தையை யழிக்கும் சக்தியுடையாது. இதையே முன்பு தத்துவ விளக்கப் படலத்தில் ''நஞ்சை முறிப்பு ஒளடதமாகிய வேறொரு நஞ்சாலும், சீலையிலுள்ள அழுக்கை உவர்மண்ணாகிய அழுக்காலும், அம்பினை வேறொரு அம்பாலும் உலகோர் அழிப்பது    போல் மாயையைச் சத்துவகுண மாயையால் கெடுப்பார்கள். பின்பு அந்த அசுத்த மாயையோடு இச் சுத்த மாயையும் (சுடலையில் சவத்தைச் சுடும் கோல் தீயைக் கிளறிச் சவத்தைச் சுட்டு முடிவில் அத் தீயிலேயே தானும் வெந்து அழிவதுபோல்) அழியும்" என்று கூறியது.]

      (குரு பிறகு இந்த அனுபவம் ஜீவன் முத்தரிடம் எவ்வாறிருக்கு மென்பதைக் கூறுகிறார்.)

      "மைந்தனே! மேற்கூறப்பட்ட நிச்சய ரூபமான அகண்டாநுபவம் ஜீவன் முத்தரிடம் எவ்வாறு விளங்கு மெனின் அவர்கள் கவலையற்ற ஒரு சக்கிரவர்த்தி போலவும், தாயின் பாலை அருந்தியதும் வேறொரு கவலையு மின்றி சுகானந்த சொரூபியா யிருக்கும் சிசுவைப் போலவும் பரமானந்த அனுபவத்தில் முழுகிச் சற்றுங் கவலையின்றி யிருப்பார்கள். மோக்ஷம் நரகம் பிறப்பு என்ற நினைவே ஒழிந்துபோம். உண்டென்று யாரேனும் கூறினால், ("ஒரு கொசு ஆகாயத்தை விழுங்கிக் கக்கிவிட்டது" என்று யாரேனும் கூறக் கேட்ட ஒருவன் எப்படி நகைப்பானோ, அதுபோலவே") "ஆட! இதென்ன பிராந்தி" என்று நகைப்பார்கள்.

      [பிரம்மான்ம ஐக்கிய அனுபவத்தில் சீவத்தன்மை அடியோடு போய்விட்டிருப்பதாலும், அப்போ தடைந்திருக்கும் நிலையே சாசுவதமாகத் தன்னிலை யெனத் தோன்றலானும், மாயை முதல் யாவும் கனவாய்ப் பறந்து விட்டதாலும், பந்தம், முத்தி, காலம், இடம், வன்து முதலிய எவ்வித விகற்பத் தோற்றரவும் அங்கில்லை: உண்டென்று கூறுவோரைக் கண்டு, அவர்கள் உண்மை தெரியாமல் மாயாமயக்கால் இப்படிக் கூறுகிறார்களென்ற கருத்தால் நகைப்பார்கள் என்பதாம். இது சகச சமாதியில் காலதேச வஸ்து பரிச்சேதமற்றிருக்கும் ஜீவன் முத்தனுடைய நிலைமையைக் கூறியதாம்.

      பிரம்ம சொரூபத்தைத் தியானிப்போர் பிரம்மமாகுவ ரென்பதும், அந்த அநுபவ நிலையில் மரணம் பிறப்பாதிய விகற்பங்கள் இல்லை யென்பதும் பின்வரும் தாயுமான சுவாமிகளின் வாக்கானும் விளங்கக் காணலாம்: -

“சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது

            தான்வந்து முற்று மெனலாற்

சகமீ திருந்தாலு மரணமுண் டென்பதைச்

            சதாரிஷ்டர் நினைவ தில்லை"

      *     *     *     *     *     *     *”

இந்த நிலை சகசநிஷ்டை என்பதாம். சதாநிஷ்டர் என்பதற்குச் சகச நிஷ்டையிலிருப்போர் என்பது பொருளாம். நிஷ்டை சவிகற்பம், நிருவிகற்பம், சகசம் என மூவகைத்தாம்.

சவிகற்பநிஷ்டை: - ஆன்மாவை அணுவுக்கணுவாய்த் தரிசித்தல். இதில் ஞாதுரு ஞான ஞேயம் என்ற திரி புடிகளுண்டு.

நிருவிகற்பநிஷ்டை: -    ஆன்மாவை அகண்ட சொரூபமாகத் தரிசித்தல். இது ஏகமயமான பிரம்ம சொரூப மாத்திரமாய் விளங்கும் அநுபவம்.

இந்த இரண்டு நிஷ்டைகளும் சத்துவகுணத் தொழில்களே யாகும். இவற்றில் ஒருவன் எவ்வளவு காலமிருந்தாலும் மறுபடி பகிர்முகத்திற்கு வரவேண்டியதே. இவற்றிற்கு ஆதியந்தமுண்டு

சகசநிஷ்டை: -     காலம், தேசம், வஸ்து, தநு, கரணாதிகள், தேகம், இந்திரியம் முதலிய ஒரு தோற்றரவுமின்றி மாயை யின்றி, இரண்டற்று யாவும் ஒரே அகண்டா கார சொரூபமாய் முடிவின்றிப் பிரகாகித்து ஒரே நிலையில் நிற்பது.

“சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத்

                  தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூபமாகி

            அல்லையுண்ட பகல்போல வவித்தை யெல்லா

                  மடையவுண்டு தடையறவுன் னறிவைத் தானே

            வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு

                  வேதகமாய்ப் பேசாமை விளங்குந் தானே"

                                                             (தாயுமானவர்)

அந்த நிலை நின்றோர்க்கு உலக முதல் யாவும் அச்சொரூபமாகவே விளங்கும்.


"விளங்குஞ் சொரூப நோக்காது

                  விளங்கு முலகை நோக்கியிடின்

            விளக்குஞ் சொரூபம் தோற்றாது

                  விளங்கு முலகே தோன்றியிடும்

            விளக்குஞ் சொரூபம் தனைநோக்கி

                  விளங்கு முலக நோக்கமறின்

            விளங்குஞ் சொரூப மேதொன்றும்

                  விளங்கு மூலது மதுவாய்ப்போம்."     (அத்துவித உண்மை)


                                “சகசநன்னிட்டை யியல்புதம் முயற்சி

                  சற்றொன்று மின்றியே யருளால்

            சகமதும்போக மதுவுந்தம் முடலுந்

                  தகுகர ணமுமெவை யவையாய்

            அகமதிலுதித்த வதுமறை யாம

                  லகன்றது பின்னுதி யாமல்

            அகமுரைகாய வருத்தமே யின்றி

                  யமர்ந்துநின் றிடுநிறை படியே”        (சுத்த சாதகம்)

 

      இச் சகச நிட்டையிலுள்ள மகான் அனுபவிப்பது பரிபூரணமான ஆனந்தம் என்று விளங்குவது காண்க.]

      (மாயா சம்பந்தமான ஒன்றையும் கவனியாது பிரம்மானந்த நிலையிலிருப்பா யெனச் சீடனுக்குப் பின்னும் கூறுகிறார்.)

      மைந்தனே! சகத் காரணமாகிய மாயை யென்பது மித்தை யென்று சுருதிகள் கூறுமாயின் அம் மாயையினின்றும் உற்பதியான எல்லா வகைப் பொருள்களும் மித்தையே யாகும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மக்களுக்குத் தாயை யன்றி ஒரு ஜன்மமும் ஜாதியுமுண்டோ? இல்லை யாதலின் சுவர்க்கம் நரகம், நன்மை, தீமை முதலிய ஒன்றையுமே கவனியாமல் பரிசுத்தமான சச்சிதானந்த பரிபூரண சொரூபமா யிருப்பாயாக.

      யாவற்றையும் பொய்யெனல் பாபமன்றோ வென்று சீடன் வினாவுதல்.

சீடன்: -      எனது பிறவிப் பிணியை நீக்கிய கருணாமூர்த்தியே! பிரம்மன், விஷ்ணு முதலிய பல தேவர்கள், உலகிலுள்ல பெரியோர், கங்கை முதலிய தீர்த்தங்கள், தேசங்கள், வேதங்கள், மந்திரங்கள், விரதஙக்ள் முதலியவைகளைச் சுருதியின்படி யாவரும் நம்பி வழிப்பட்டுப் பாவமொழிந்து மோக்ஷமடையக் காரணமாய்க் கொண்டிருக்கிறார்களே! அப்படிப்பட்ட யாவற்றையும் பொய்யென்று கூறுவது குற்றமாகாதோ?

குரு: -       மைந்தனே! சொப்பனத்தில் கண்டதைப் பொய்யென்று கூறுவது குற்றமாயின், அற்பமான மாயையில் உண்டான பிரபஞ்சங்களை மித்தையெனல் குற்றமாகும். சொற்பனத்தில் கண்டவற்றை மித்தை யென்பது குற்றமல்ல வென்கிறவரையில், மாயையின் காரியமாகிய பிரபஞ்சங்களை மித்தை யெனலும் தோஷமாகாது.

மேலும் சுருதியாதிகளால் ஞானகாண்டத்தில் பொய்யென்று நிஷேதிக்கப்பட்ட சொரூபாதிகளைச் சத்தியமென்று கூறி வழிபடுவோரையே புண்ணியவான்களென்று    புராணங்கள் கூறுகின்றன வெனின், வேதங்களில் சத்திய மென்று கூறப்பட்ட உண்மையை மெய்யென்று சாதிக்கும் ஞானிக்குக் குற்றங்கள் விதிக்கும் சாத்திரங்கள் கூடவுண்டோ? இல்லை. நாமரூபங்களாகிய மாயாகாரியங்கள் யாவுமே மித்தையாம்; எங்கும் நிறைந்த சச்சிதானந்த சொரூபமே சத்தியம்.

[நித்திரை விட்டு விழிப்படைந்தவனுக்கு கனவிற் கண்டவை பொய்யென்று சுபாவமாகவே தோன்றுவது போல், அவித்தை ஒழிந்து அகண்டாகார அனுபவமடைந்த ஞானிக்கு யாவும் மித்தையாகத் தோன்றுவதால் அவன் அப்படிக் கூறுவது குற்றமாகாது என்றார்.

குறிப்பு: - அனுபவமாக அந்த பிரம்ம சொரூப நிலையை யடைந்த ஞானியைப் பற்றி இது கூறியதேயன்றி, சீவ பாவங் கெடாது, ஆன்ம தரிசனம் பெறாது, அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடப்போர் நூலில் கூறியிருப்பதை மட்டும் பார்த்துவிட்டு'' எல்லாம் பொய், கோயிலிலென்ன விருக்கிறது? எல்லாம் நமக்குள்ளே யிருக்கிறது" என்று வாயால் மட்டும் பிதற்றித் திரிந்தால், அவர்கள் தாம் கெடுவதன்றப் பிறரையும் கெடுத்து நரக வேதனைக் காளாவார்கள்.]

(மாயையின் சொரூபத்தைப் பற்றி வினவுதல்)

சீடன்: -      "மாயை யென்ற கரிய மேகங்களை ஒட்டவல்ல சண்டமாருதம் போன்ற குரு சுவாமிகளே! (1) மாயை யென்பது எப்படிப்பட்டது? (2) அதையுடையோர் யார்? (3) அதன் உற்பத்தி எப்படி? (4) அது ஏன் வந்தது? (5) மாயை யென்பது பிரம்மத்திலும் வேறாகிய ஒரு பொருளெனில், ஏகம் என்பதின்றி இரண்டு பொருள்கள் உளவென்றாமே. (6) மாயையும் பிரம்மமும் ஒன்றெனில், பிரம்மம் மாயையைப் போல் பொய்யாகுமே. இச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யப் பிரார்த்திக்கிறேன்'' என்றான்.

ஆசான்: -    (1) மரயை இப்படிப்பட்டதென்று கூறமுடியாதாதலால் அது அவாச்சிய வடிவாகும். அதாவது வரர்த்தைகளால் விளக்கிக் காட்ட முடியாது. அநிர்வசநீயம் எனினும் அதே பொருள்.

(2) யார், நான் எனது என்ற பற்றுடையோராய், தேகமே நான் என்ற அபிமானமுடையோரா யிருக்கிறார்களோ, அவர்களே மாயையையுடையோர். (3) இத் தன்மையானதென்று வாக்கால் கூறமுடியாத அம்மாயை இன்னவிதமாக உண்டாயிற்றென்று கண்டவர் ஒருவரு மிலர்.

(4) விசனகரமான அம் மாயை ஏன் வந்ததென்றால் "நாமார்? இவ்வுலகம் யாது? வந்தவாறெங்கன்?" என்ற விசாரணை யில்லாததால் வந்தது.

இந்த மாயை தோற்றப்படாதது. ஓர் இந்திரஜாலக்காரனுடைய மணிமந்திர ரூபமான சத்தி அருவமானதால் தோற்றப்படுவதில்லை. அவன் விளையாடிய பின் அச்சத்தியின் காரியமாகத் தோன்றும் நாமரூபமான நகரங்கள், ஜனங்கள், மிருகங்கள் முதலியவற்றைக் காண்பதாலேயே அவனுடைய மந்திர சக்தியை உணர்கிறோம். அவன் விளையாடுவதற்கு முன் யு அது தோற்றப்படுவதில்லை. இவ்வாறே பிரம்மத்தின் கண் எண்ணிறந்த சக்திகளுள; அவற்றை ஒருவரும் கண்டறியக் கூடாது. எங்கும் விரிந்துள்ள பிரபஞ்சத்தைக் கண்டே அநுமானத்தால் அச் சத்திகளை உணர்கிறோம்.

(5) இந்திரஜாலம் காட்டும் மாந்திரீகனைத் தவிர அவன் சத்தி வேறானதல்ல. அதுபோல் மாயை பிரம்மத்திற்கு வேறாயில்லை. மாயை பிரமத்தின் வேறெனின் வஸ்துவும் ஏகம் என்பதின்றி இரண்டாகுமே என்ற சந்தேகத்தை ஒழிப்பாயாக.

(6) இந்திரஜாலக்காடானுடைய ஜாலவித்தை பொய்யாகப் போக அதைக் காட்டும் மாந்திரீகன் மட்டும் மெய்யாக விருப்பதுபோல, மாயையும் மாயா காரியங்களும் பொய்யாய்ப் போகப் பிரம்மம் மட்டும் உண்மையாக வுள்ளதென் றறிய வேண்டும். ஆகையால் மாயை பிரம்மத்தை விட வேறல்லவென்றும், ஒன்றாயிருப்பினும் பிரம்மம்
 மாயையைப்போல் பொய்யாகாமல் மெய்யாகவே யுளதென்று மறிந்து, பிரம்மமும் மாயையும் ஒன்றெனின் மாயையைப்போல் பிரம்மமும் பொய்யாகுமே என்ற ஐயத்தை அகற்றுவாயாக.

     [மாயை, அவித்தை, ஆவரணம், விக்ஷேபம், அஞ்ஞானம், சத்தி, பிரகிருதி என்ற எல்லா வார்த்தைகளும் ஒன்றையே குறிக்கும். மாயையின் தொழிலிலுள்ள பல வகைகளால் அதற்கு அவ்வாறு பல பெயர்கள் வந்தன. இதனால் தான் எண்ணிறந்த சத்திகளென்றது. மாயை உற்பத்தி யில்லாததால் அநாதியாகும். மாயை முக்கியமாக ஆவரணம், விக்ஷேபம் (மறைப்பு, தோற்றம்) என்ற இரு பகுதியா யுள்ளது எனலாம். மாயாகாரியமாகிய இப் பிரபஞ்சம் எப்போ துண்டாயிற்றென்று கூறமுடியாதாதலின் அநாதி. இப் பிரபஞ்சமாகிய மாயையின் தோற்றம் கானல் நீர் பொய்யென் றுணர்ந்த பின்பும் தோன்றிக் கொண்டே யிருப்பது போல் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மாயையும் பிரம்மத்தைப்போல் நித்தியமே என்பர். ஒரு சாரார். ஆனால் சீவன் சம்பத்தப்பட்ட இம்மாயை அழிக்கக்கூடியதே யாகும். அனுபவமாக மாயையே வென்றாரே ஞானத்தை யடைவார்கள். ஆகையால் அச் சந்தர்ப்பத்தில் மாரயை அநித்தியமே. அதாவது என்று பிரம்மம் உண்டோ அன்றே மாயை. முண்டு. பிரம்மம் உள்ள மட்டும் மாயைக்கு அழிவில்லை. அஞ்ஞான நிலையிலுள்ளோர்க்கு மரயை நித்தியமாகவே தோன்றும். தன்னை யறிந்த ஞானி மாயை பொய்யென் றுணர்வான்.

      இன்ன விதமானதென்று அறியப்படாத இம் மாயை அனுபவத்தில் மனதை யன்றி அன்னியமாக இல்லை யெனலாம். உண்மையில் "யாதொன்றில்லாதது. அது மாயை யாகும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

''மாயை யெனுமிவ் வுரைக்கருத்த

                  மதிக்கின் யாதொன் றிலாததுவே

            மாயை யெனவிப் ப்டியிருக்க

                  மதிப்ப ரதனை யிருவகையாய்

            மாயை மெய்யென் றுரைத்திடுவர்

                  மயக்கப் பட்டுத் தனைமறந்தோர்

            மாயை பொய்யென் றுரைத்திடுவர்

                  மயக்க நீங்கித் தனையறிந்தோர்"

                                           (ஸ்ரீ குமாரதேவர் - அத்துவித உண்மை.)

 

நமது நிஜசொரூபத்தை நாம் மறந்ததே மாயையாகும். மறப்பு என்ற ஒன்று இருக்கிறவரையில் நினைப்பு என்பதும் உண்டு. இந்த மறப்பு நினைப்பு என்ற இரண்டும் மனதின் தொழிலாக விருக்கின்றன. ஆதலின் மனமே மாயையாகும்.

‘மனமன மெங்குண்டு மாயையு மங்குண்டு

மனமன மெங்கில்லை மாயையு மங்கில்லை

மனமாயை யன்றி மற்றொன்று மில்லை

பினையாய வேண்டாம் பிதற்றவும் வேண்டாம்.

தனையாய்ந் திருப்பது தத்துவந் தானே"

                                           என்றனர் ஆன்றோர். (பாடுதுறை)

"இறப்பும் பிறப்பும் பொருந்த- எனக்

      கெவ்வணம் வந்ததென் றெண்ணிநான் பார்க்கில்

      நினைப்பு மறப்புமாய் வந்த - வஞ்ச

      மாயா மனத்தால் வளர்ந்தது தோழி சங்கர"

 என்றனர் மெயஞ்ஞானச் செல்வராகிய நமது தாயுமான சுவாமிகள்.

 

இம் மனதின் உருவநாசம் சீவன் முத்தியிலும் அருவ நாசம் விதேகமுத்தியிலும் சித்திப்பதால் மாயை. அழியக் கூடியதே. இதனால் மாயை அநாதி, ஆனால் அநித்தியம் - பிரம்மம் அநாதி நித்தியம், என்பதே அனுபவம்.

இப் பிரபஞ்சம் முழுமையும் மாயா சொரூபமே. நாம ரூபத்தை யன்றிப் பிரபஞ்சத் தோற்றமில்லை. காம ரூப நாட்டம் விடின் மாயை யொழிந்ததாகும். மனமும் மாயையே யாதலானும், மனதிற்கு நாமரூபத்திலேயே பற்றாதலானும் மனமும் ஒழிந்ததாகும். அப்போது ஆன்ம சொரூபம் தோன்றும்.

பிரபஞ்சத் தோற்றமாகிய மாயையால் நமக்கு ஒரு கெடுதியுமில்லை. அதை மெய்யென்று எண்ணும் அஞ் ஞானமாகிய மாயையே நமக்கு இப் பந்தத்தை யுண்டாக்கி யிருக்கின்றது. அதிட்டானமாகிய கயிறு தோன்று மட்டுமே ஆரோபமாகிய பாம்பு மெய்யாகத் தோன்றும் கயிறு தோன்றியதே ஆரோபமாகிய பாம்பு பொய்யென்று விளங்கிவிடும். அதுபோல், தன் நிஜசொரூபத்தை யறிந்த போது, இப் பொய்ம் மாயையில்லை யென்று இயல்பாகவே தோன்றும். அப்போது பிரபஞ்சத் தோற்றமும் பொய்த் தோற்றமென்று விளங்கிவிடும். ஐக, ஜீவ, பரம் என்ற மூன்று பகுப்புகள் ஒழிந்து எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும்.]

(குரு இச்சத்தியின் இருப்பைப்பற்றி இன்னும் கூறுகிறார்.)

இத்தகைய அநிர்வசநீயப் பொருளாகிய இம் மாயை இருக்கிறதென்று எப்படிக் கூறுவது என்று கேட்பாயேல், அசேதனமாகிய புல், பூண்டு, செடி முதலியவை யனைத்தும் வளர்வதும், பூக்கும் காலத்தில் பூப்பதும், காய்க்கும். காலத்தில் காய்ப்பதும், பழுத்து உதிருங் காலத்தில் உதிர்வதும், முட்டைக்குள் இருந்து உற்பத்தியாகும் குஞ்சு பல நிறங்களை யுடையதா யிருப்பதுமாகிய பெரிய அதிசயத்தைப் பார். இவற்றிற்குள் பிரம்மத்தின் சிற்சத்தி யில்லாவிடில் சராசரப் பொருள்களின் சுபாவங்களனைத்தும் தலைகீழாக மாறிவிடும்.

(சீடன் மாயையின் நிவர்த்தியைப் பற்றி வினவுதல்.)

சீடன்: -      ஒருவராலும் அறியக்கூடததும், இன்ன விதமானதென்று சொல்ல முடியாததும் நாமரூபப் பிரபஞ்ச மாகிய இப் பயிருக்கு ஓர் வித்துப் போன்றதும் என்று தாங்கள் கூறிய இம் மாயையை நிவர்த்தி செய்யும் மார்க்கம் எது?

அது நிவர்த்திக்கக் கூடாதெனில் பிரம்மத்தை ஏக சொரூபமாகப் பாவிப்ப தெப்படி? முத்தி கூடுவதெப்படி? இவற்றைக் கிருபையோ டருள்புரியப் பிரார்த்திக்கிறேன்.

குரு: -       குழந்தாய்! மணிமந்திர ஒளஷதங்களால் வாயுத்தம் பனம், ஜலத் தம்பனம், அக்கினித் தம்பனம் செய்யும் போது வாயு, ஜலம், அக்னி இவற்றிலுள்ள சலனம், திரவத்தன்மை, உஷ்ணம் ஆகிய இச்சத்திகள் மறைந்து போகின்றனவன்றோ. அது போலவே நீ ஏகாக்கிர சித்தத்தோடு பிரம்மம் மாத்திரமாக நின்று வேறொன்றையும் நினையாதிருப்பாயேல் அம்மாயையாகிய சத்தி மறுபடி தோன்றாது ஒழிந்துபோம். இதைத் தவிர இதற்கு வேறே மந்திர மொன்றும் சுருதிகளில் கூறப்பட்டிருக்கவில்லை.

சாதாரணமான மண்ணில் குலாலன் தண்ட சக்கரத்தைக் கொண்டு ஒரு குடத்தை யுண்டாக்குகிறான். அங்கிருப்பது மண்ணே யாயினும் அதற்குண்டாயிருக்கும் உருவத்தினாலேயே அதைக் குடம் என்கிறோம். குயவன் சக்கரத்தைக் கொண்டு தன் கிரியையைச் செய்வதற்கு முன், அம் மண்ணில் மறைந்திருந்த சத்தியே, குயவன் செய்கைக்குப் பின் அந்த நாமரூபமாகிய காரியமாக வெளிப்பட்டது.       மண்ணைத் தவிரக் குடமில்லை யாதலின் மண்ணையே குடம் என்கிறோம். அக் குடம் உடைந்து போனால் (அதாவது நாமரூபம் நசித்தால்) மறுபடி மண் என்கிறோம். குடம் என்பது வாய்ச் சொல் மாத்திரமே.

குடம் உண்டாவதற்கு முன்னிருந்தது மண்ணே; உண்டானபோது குடமாகத் தோன்றுவதும் மண்ணே; குடம் அழிந்தபின் இருப்பதும் மண்ணே. இதனால் முக்காலத்தும் இருப்பது காரணமாகிய மண்ணே. காரியமாகிய குடம் என்பது நம் வாயால் கூறப்பட்டு மறுபடி மறைந்து போயிற்று. குலாலனுடைய தொழிலுக்கு முன் குடமில்லை. குடமுடைந்த பின்னும் குடமில்லை. குடம் என்பது இடையில் தோன்றி மறைந்தது. ஆகையால் காரணமாகிய மண்ணே சத்தியம். காரியமாகிய குடம் நிலையற்ற பொய்யே. இடையில் தோன்றிய காரியமாகிய குடமாக அதைப் பார்ப்பதை விட்டு முக்காலத்துமுள்ள மண்ணாகவே காண்பதுதான் சத்தியம். இவ்வாறே தாட்டாந்தத்தில்,

மாயாகாரியமாகிய நாமரூபப் பிரபஞ்சம் பொய், வாக்கு மாத்திரமேயாகும். மாயைக் காதாரமாகிய பிரம்ம சொரூபம் ஒன்றே சத்தியமாகவுள்ளது. ஆகையால் மாயா கற்பிதமாகிய நாமரூபத் தோற்றமனைத்தும் பொய்யே யென்று மறந்து, சின்மய வடிவான பிரம்ம சொரூப மாத்திரமாய் இருப்பாயாயின் மாயை ஒழிந்துபோம்.

[மேலே குமாரதேவர் கூறியதாக நாம் கூறியுள்ள "நாமரூப நாட்டம் விடின் நமது சொரூபம் தோன்றிவிடும்" என்ற வாக்கியம் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இருள் நீங்கினால் வெளிச்சம் தோன்றியதாகும்; வெளிச்சம் தோன்றிய தெனின் இருள் நீங்கியதாகும். நாமரூப நாட்டம் விடின் சொரூபம் தோன்றும்; சொரூப மாத்திரமாக நிற்பின் நாமரூபத் தோற்ற மொழியும்.

இருப்பது மண்ணும் குடமும். ஆனால் உண்மையில் இரண்டு பொருளில்லை; மண்ணே குடமாகத் தோன்றுகிறது. 'குடம்' என்பது சொல் மாத்திரமேயாகும். நாம் 'குடம் அழகாக விருக்கிறது, பெரிதாக விருக்கிறது. இலேசாக விருக்கிறது'' என்று விவகரிக்கும் போது மண் என்பதை மறந்து பேசுகிறோம். மண் என்பதைப் பற்றியே கவனிக்கும் போது'' து நல்ல மெழுகுபோன்ற சிவப்பு மண், கற்கள் கலப்பில்லாதது " என்று கூறுகிறோம். அப்போது குடம் என்ற உணர்ச்சியே வில்லை. ஒன்றே மற்றொன்றாய்த் தோன்றுவதால் எதை நோக்கு கிறோமோ அது மட்டுமே தோன்ற மற்றொன்று மறையும்.

தாஷ்டாந்தத்திலும், உள்ளது நாமரூபமும், சச்சிதானந்த ம்யமாகிய பிரம்மமுமே உண்மையில் இரண்டில்லை. பிரம்ம - சொரூபம் ஒன்றே யுள்ளது. அதுவே நாமரூபப் பிரபஞ்சமாகத் தோன்றுகிறது. பிரம்மமே மண்போல் முக்காலத்துமுள்ள சாத்தியப் பொருள்; பிரபஞ்சம் குடம் போல் பொய். பிரம்ம சொரூபமே நாமரூபமாகத் தோன்றுவதால் நாமரூப நாட்டத்தை விடின் பிரம்ம சொரூபமே தோன்றும், அல்லது பிரம்ம சொரூப நாட்டமாய் நின்றால் நாமரூபம் மறைந்துபோம். பிரபஞ்சத் தோற்றம் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் பறந்துபோம்.

மேற்கண்ட இரண்டு மார்க்கங்களில், அவரவர் அனுபவத்தின்படி எம் மார்க்கம் சுலபமாகத் தோன்றுகிறதோ அம் மார்க்கத்தைக் கைப்பற்றி அப்பியாசிக்க வேண்டும். பிபீலிகா மார்க்கம் விகங்க மார்க்கம் என்ற இரண்டில் அது விகங்க மார்க்கமாகும். ஏககாலத்தில் மாயையை நீக்கி நிற்கும் இவ்வப்பியாசம் யாவராலும் செய்யக்கூடியதல்ல. இது மனோலயம் வாய்ந்த அதிதீவிர பக்குவிக்கே உரியது. மனதை வென்றாலன்றி ஒழியாது. மனமே மாயையா யிருத்தலின்.

"பிறப்பிறப்பாம் பெயருடைய விந்தமாயைப்

            பெருமையினை முடிவுபெறப் பேசவொண்ணா

வறப்பெரிய தன்மனத்தை வென்றான்மாளு

            மல்லதொரு வகையாலு மகற்றலாகா

      *     *     *     *     *     *”                       (வாசிட்டம்)

மண்ணையன்றிக் குடமில்லை, பொன்னை யன்றிப் பணியில்லை, உள்ளது மண்ணும் பொன்னுமே. குடம் என்பதும் பணி என்பதும் வார்த்தை மட்டுமே. அதுபோலவே மனதினின்று முதிக்கு மிப்பிரபஞ்சம் சொரூபத்தை யன்றி வேறில்லை. யாவும் சொரூபமே யாகும்.

"உன்னுறு மனத்தினாலே யுலகமா மிந்திர சாலக்

      துன்னுறும் பணிக ளென்னுஞ் சொற்பொருட் பொன்னையன்றி

யன்னிய மில்லைப் பொன்னாற் பணியென வறைய வேண்டா

பன்னிய உலகாஞ் சொற்குப் பரமன்றிப் பொருள் வேறில்லை"

                                                             (வாசிட்டம்)

அதுவிது நீ கான் முதலாய்க் காண்பதெல்லா

            மணுவுமிலை யணுவுமிலை யணுவுமில்லை

யெதுவெதுதான் திரிசியமா யெங்கே யெங்கே

            யெவ்விதமாய்த் தோற்றினுமத் தோற்றமெல்லாந்

திதமருவுந் திருக்கான பிரமமயாந்

            திலமளவு மையமிலைச் சத்தியந்தா

னிதமனைய பரப்பிரம கானேயென்று

            நிகழ்பிரம நிச்சயமே தருப்பணங்காண்.             (ரிபுகீதை)

                                                                                              

(ஆசான் பின்னும் கூறுகிறார்)

மைந்தனே! காரணத்தாலுண்டாயது காரியம். யாவற்றையும் அறியும் அறிவின் சொரூபமே காரணமாம். அறியப்படும் பொருள்கள் யாவும் காரியமாம். காரியமாகிய இந்காமரூபப் பேய்கள் உண்டான விதம் எப்படி? தோன்றா மலழிவ தெப்படி? என்று அதைப்பற்றி விசாரித்தல் சற்றும் பயனில்லாக் காரியமாகும். ஆகையால் நீண்ட சொற்பனம் போன்ற இப் பிரபஞ்சம் உண்டான வழியையும், ஒழியும் வகையையும் பற்றி விசாரிப்பதைவிட்டு, உன் ஆன்ம சொரூபமாகிய பரிபூரண அனுபவத்தில் நிலைத்து நிற்பாயாக.

[மாயை வந்த வழியையும், போம் வழியையும் அறிய முயல்வது பயனற்ற வேலை. மாயையை ஒழிக்கும் வழி கூறப்பட்டிருக்கிறது. அவ் வழியில் முயன்று மாயையே ஒழித்தால், பிறகு எல்லாம் தானே விளங்கும். மாயையின் வயப்பட்டிருக்கும் வரையில் அதன் இரகசியத்தை அறிய வொண்ணாது என்பதாம்.

அறியப்படும் பொருள்களாகிய காரியத்தில் திருஷ்டியை விட்டால் மாயை ஒழியும்.

தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்

            சேர்ந்த்சுக வறிவுமிகச் சிறந்த தாகும்.

      தெரிபொருளால் வளைப்புண்டாற் பந்த மாகும்

            தெரிபொருளை விட்ட கன்றால் திடங்கொள் வீடாந்

      தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்

            சேர்ந்தவது பூதியிடர் தீர்ந்த தாகுக்

      தெரிவு றவாங் கதுபற்றி நிற்பாய் நீநின்

            றிக்நிலையாஞ் சுழுத்திதனைச் சேரு வாயே."       (வாசிட்டம்)

      (நாமரூப திருட்டி எவ்வளவு விடப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு ஆன்ம சொரூபம் தோன்றுமென்று ஆசான் கூறுகிறார்)

     மைந்தனே! அசத்தாகிய நாமரூபத்தில் உள்ள பற்று எவ்வளவுக் கெவ்வளவு விடப்படுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அந்தர்முகத் திருஷ்டி யுளதாகும். இவ்வாறு நீடித்துச் செய்யும் அப்பியாசத்தால் உன் மனம் உன் வசப்பட்டு ஆன்ம சொரூப மாத்திரமாகிய நிலைபெறும். அந்த நிலையை யடையின் துக்கமயமான இத் தூல தேகத்திலிருப்பினும் ஆனந்தக் கடல் மயமாவாய்.

[நாமரூப நாட்டம் விடின் சச்சிதானந்த சொரூபந் தோன்றும். ஜீவன் முத்த நிலை யுண்டாகும். மேலே கூறியபடி காணப்படும் அவை யணைத்தும் நாமல்லவென்று நீக்கி, யாவற்றையும் காணும் அறிவு சொரூபமாகிய நம்மையே நாம் காணவேண்டும். அந்தர்முக நாட்டத்தாலடையும் பயன் இதுவேயாம். இதுவே தன்னைத் தானறிதல் என்பதும்.

"தானறியுந் தத்துவங்க ளெல்லாந் தனக்கனியந்

தானதுவே யன்றென்று தள்ளுங்கான் – ஞானமாய்த்

      தள்ளுமவ னாயிருக்குந் தன்னாற்றா னென்றுணர்ந்து

      கொள்ளுமது வேசாந்தமாம்.''                       (சொரூபசாரம்)

 

நாமரூப நாட்டமே பகிர்முக நாட்டம் என்பது. நாட்டம் ஒழிந்தால் பிரபஞ்சத் தோற்றம் வொழிந்து அந்தர்முக நாட்டமுதிக்கும்.

"எதுபரி யந்தம் வெளிமுகப் பார்வை

            யிருக்குமவ் வளவுமே விகற்பத்

திதியுறு பிரபஞ்ச பாவனை தோன்றுஞ்

            செழுங்கட லலையசை வுளதே

      லுதைந்திடுங் கரையை யொழிந்திடி னிலைத்த

            வுதகமே போலுமெய்ப் பிரமஞ்

      சுதந்தர வடிவாய் நிறைந்திடிற் சோகந்

            தோன்றிடா தெனத்துணி மகனே''

                                                 (வாசிட்ட வமல ராமாயணம்)


       (ஆன்மா சச்சிதானந்த சொரூபமெனின், சத்தும் சித்துபோல் ஆனந்தம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏன் விளங்கவில்லை எனச் சீடன் வினாதல்: -

சீடன்: -      "குருநாதனே! தன்னையன்றி அந்நிய மொன்று மில்லாத ஆன்மா பூரண சச்சிதானந்த சுபாவமாய் உயிரோடு ஒன்றா யிருக்கிற தென்னின், அடியேனுக்கு அது விளங்கவில்லை. நான் கண்டேன், கேட்டேன் என்று விவகரிக்கும். இச் சீவன்கள் சத்தென்பது கூடும். அப்படியே விஷயங்களை வேறு பிரித்தறியும் ஞானம் இருத்தலால் சித்தென்பதும் கூடும். இவற்றைப்போல் எல்லா விஷயங்களிலும் ஆனந்தம் தோன்றவில்லையே. அது ஏனோ அறிவிக்க விரும்புகிறேன்” என்றான்.

குரு: -       குழந்தாய்! ஒரு மலரில் நிறம், இரசம், மணம் மூன்றும் ஒன்றாய்க் கூடியிருந்தாலும், ஒவ்வொரு இந்திரியத்தால் ஒவ்வொரு குணம் தோன்றுமன்றி ஒரே இந்திரியத்தால் அம் மூன்றும் தோன்றா. அவ்வாறே சத்து, சித்து ஆனந்தமாகிய குணங்கள் ஆன்மாவின் சொரூபமே யாயினும் பிரபஞ்ச மயமான விர்த்திகளின் பேதத்தால் பேதங்களாக உணரப்படும்.

சத்துவம், இராசதம், தாமதம் எனக் குணங்கள் மூன்றாகும். இம் மூவித குணங்களால் உண்டாகா நின்ற விர்த்திகளும் மூன்று வகையாகும். இவற்றில் சத்துவகுணம் சாந்த விர்த்தியும், இராசத குணம் கோர விர்த்தியும், தாமத குணம் மூட விர்த்தியுமாகும். நாம் கூறும் சத்து, சித்து, ஆனந்தமாகிய குணங்கள் ஆன்பாவின்கண் ஏகரசமாகவே யிருப்பினும், இவ்விருத்தி பேதத்தால் பேதமாகத் தோன்றும்.

சடமாகிய மரம், கல், மண் முதலியவற்றால் சத்து ஒன்று மட்டுமே வெளியாகும். சித்தும், ஆனந்தமும் வெளியாகா. காமக் குரோதாதி குணங்களாகிய கோர விர்த்தியிலும், மயக்கம், பயம் முதலிய மூட விர்த்தியிலும் சத்து, சித்து வெளியாகும். பொறுமை, கருணை முதலிய சாந்த விர்த்தியில் சத்து சித்தோடு ஆனந்தமும் சேர்ந்து மூன்று குணங்களும் வெளியாகும். ஆதலின், அஞ்ஞானத்தா லுளவாகும் காமக் குரோதம், மோகம், பயம் முதலிய கோர மூட விர்த்திகளை விட்டு நீங்கி வைராக்கியமும் சாந்தமும் பொருந்திய மனதோடு அந்தர்முக விருத்தி யுண்டாயின் ஆனந்தம் வெளிப்படும். இவ்வாற்றால் சத்தும், கித்தும் போல ஆனந்தமும் ஆன்மாவின் சொரூபமென்றே உணர்வாயாக.

சீடன் சச்சிதானந்த விலக்கணங் கேட்டல்

சீடன்: -      "பரமாசாரியரே! இந்தச் சச்சிதானந்தம் என்பதன் இலக்கணம் அடியேனுக்கு விளங்கவில்லை. ஆதலின் சத்து என்பதென்ன? சித்து என்பதென்ன? ஆனந்தம் என்பதென்ன? என்று விளக்கி வைக்கப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

ஆசான், மைந்தனே!

சத்து: -      முக்காலங்களிலும் கெடாமல் இருப்பதுவே சத்தின் இலக்கணமாம்.

சித்து: -      விடயங்களில் வேறுபாடுகளை யறிதலே சித்தின் இலக்கணமாய். (சுயம்பிரகாச முடையதாய்த் தன் பிரகாசத்தாலேயே யாவற்றையும் பிரகாசிக்கச் செய்வதே சித்தின் இலக்கணம்)

ஆனந்தம்: - நாம் இஷ்டப்பட்ட வஸ்து கிடைத்து அதை அனுபவிக்கும் போதுண்டாகும் திருப்தியே ஆனந்த இலக்கணமாம்.

[இந்திரியங்கள் கரணங்கள் முதலிய யாவற்றையும் பிரகாசிப்பது ஆன்மாவே; ஆன்மா தவிர மற்ற யாவையும் சடமாம். ஆன்மா ஞான செரரூபம். ஞானம் என்பதே பிரகாசம். ஞானம் ஆன்மாவை விட்டுப் பிரிந்திருப்பதல்ல. நித்திரையின் போது இந்திரியாதிகள் இல்லாதிருந்தும் விழித்தபின், "நான் சுகமாய் நித்திரை செய்தேன்'' என்று கூறுகிறான்," ஆன்மாவை விட்டு ஞானம் பிரிந்ததில்லை யெனின் என் யாவரும் ஞானிகளாயில்லை?" எனின், தீபம் பிரகாச முடையதாயினும் மூடுபனியில் அதன் பிரகாசம் புலப்படுவதில்லை. அதுபோல் அவித்தையின் மறைப்புண்டிருப்பதால் ஞானம் மங்கி யிருக்கிறது. அவித்தை நீங்கின் அதன் பிரகாசம் வெளிப்படுகிறது. நாம் அதை ஞானம் உதித்தது என்கிறோம். உண்மையில் இருந்த ஞானமே பிரகாசிக்கத் தொடங்கியதன்றிப் புதிதாய் ஞானம் உண்டாவதில்லை. அவ்வாறே ஆன்மா ஆனந்த சொரூபமாம். சடப் பொருள்கள் எதனிடத்திலும் ஆனந்தம் என்ற குணமில்லை. எப்படி யெனின், ஒருவனுக்கு ஒரு பொருளில் உதிக்கும் ஆனந்தம் அதே பொருளில் மற்றொருவனுக்கு உதிப்பதில்லை. அல்லது அதே பொருளில் மற்றவனுக்கு வெறுப்புண்டாகிறது. ஆனந்தம் அவ்வஸ்துவிலுள்ளது உண்மையாயின் மற்றவ னுக்கும் அதில் ஆனந்தம் ஜனிக்க வேண்டும். ஆன்மாவினிடத்தே யுள்ளதென்பது சுருதி யுக்தி அனுபவ சம்மதம்.]

(சீடன், ஆன்மாவினிடத்தில் சச்சிதானந்த லட்சணம் உண்டென்று எந்த அனுபவத்தா லுணர்வதென வினவுதல்)

சீடன்: -      "குருநாதனே! அழிந்துபோகும் இச் சரீரத்திலுள்ள சீவனை நோக்கி நான்கு வேத மகாவாக்கியங்களும். 'நீ - சச்சிதானந்தப் பிரம்மமா யிருக்கிறாய்' என்று கூறினும், நீயே அச் சச்சிதானந்தப் பிரம்மம்'' என்று ஆசிரியர் உபதேசிக்கினும், நம்மிடத்தே அச்சச்சிதானந்த லட்சணம் இருக்கிறதென்று ஆன்மா எந்த அநுபவத்தா லுணரலாகும்? அடியேற் கருள் புரியப் பிரார்த்திக்கின்றேன்'' என்றான்.

(ஆன்மாவினிடம் சச்சிதானந்த இலக்ஷணம் உண்டென்பதை ஆசான் நிரூபிக்கிறார்)

ஆன்மா சத்து எனல்

முன் ஜன்மத்தில் செய்த கர்ம பலத்தினாலேயே நீ இச்சன்மமெடுத்து பூர்வ ஜன்மத்தில் செய்த பிராரப்த பலன்களை அனுபவிக்கிறா யெனில், சென்ற காலத்தில் நீ உண்டு என்று தெரிகிறதல்லவா? அவ்வாறே இச்சன்மத்தில் செய்யும் கன்மங்களுக்காக சொர்க்க நரக போகங்களை அனுபவிக்க மேல் சன்மங்க ளெடுக்கப்போகிறா யாதலால் எதிர் காலத்திலும் நீ யுண்டல்லவா? இவ்வாறு நீ, யாதனா சரீரம் மானிட சரீரம் இவற்றை மாறிமாறி யெடுத்தாலும், அத்தேகங்க ளழிகின்றனவே யன்றி நீயாகிய ஆன்மா அழிவதில்லை யாதலால் நீ சத்தாகும்.

[இச் சன்மம் வந்ததற்குக் காரணம் முன்சன்மத்தில் செய்த கன்மங்களாகும். அவ்வாறே அச் சன்மம் வந்த தன் காரணம் அதற்கு முன் சன்மத்தில் செய்த கன்மங்களாகும். இவ்வாறே உத்தரோத்தரம் ஜன்மங்கள் அநாதி தொடங்கி யிருப்பதாலும், இனிமேலும் இச் சன்மத்தில் செய்யும் கன்மங்களால் மேலொரு சன்மமும் இவ்வாறே முடிவின்றி ஜன்மங்கள் வருமென்று தெரிவதாலும்., அப்படிக்கின்றி ஜன்மம் ஒழிவதாயின் ஆன்மா அழியாத முத்தி நிலையில் சேர்வதாலும், ஆன்மா என்று மழியாமல் இருக்கும் சத்தென்பது விளங்குகிறது.]

ஆன்மா சித்து

காடாந்தகாரமான சுழுத்தியில் யாவும் தோன்றாமல் மறைந்திருக்கும்போது மயங்காமல் அவித்தையாகிய இருளையும், ஆனந்தமாகிய பொருளையும் அறவதாலும், சூரிய சந்திரராதி பிரகாசமில்லாத இராக்காலத்தில் இருளில் சாமான்ய ஸ்பரிசத்தால் பொருள்களை அறிந்துகொள்வதாலும், சொப்பனத்திலும் ஆன்மா வேறு பிரகாசத்தை விரும்பாமல் திரிபுடிகளையும் பிரகாசிப்பிக்கின்றதாலும், ஆன்மா சித்தென்ப தனுபவமாம்.

ஆன்மா ஆனந்த சொரூபம்

யாவர்க்கும் மற்ற எல்லாப் பொருள்களைக் காட்டிலும் தன்னிடத்தில் தான் அதிகப் பிரியமாதலானும், உலகத்தில் யாவர்க்கும் சுகத்தினிடத்தில் தான் பிரிய முண்டாவதன்றித் துக்கத்தினிடத்தில் உண்டாவதில்லை யென்பது பிரசித்தமாதலானும், ஆன்மா சுகசொரூபம், அதாவது ஆனந்த சொரூபம் என்பது அநுபவம்.

"நானே யென்று மெவ்விடத்து நன்றா யுண்டா யிருக்குகேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றாய்த் தோன்றி விளங்குகேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றாயின்ப மாய் நிகழ்கேன்

நானே யென்று மெவ்விடத்து நன்றாய் விளையா டாநிற்கேன்."

                                                       (விஞ்ஞான சாரம்)

 

இவ்வாற்றால் ஆன்மா சச்சிதானந்த இலட்சண முடைய தென்பது அநுபவ சித்தம்.

அன்னபானாதிகள் சுகத்தை யளிக்கும் சாதனங்க ளாதலின் யாவர்க்கும் அவற்றில் மிக்க பிரியமுண்டாகிறது. இவ்வாறே ஆன்மா சுகத்தை யளிக்கும் சாதனமாதலின் அதன்மேல் விருப்ப முண்டாகிறதென்று கருதலாகாது. ஆன்மாவை ஈகசாதனம் அதாவது சுகத்தை பளிப்பது என்று கருதினால் சுகமாகிய ஆனந்தம் வேறும் அதை அனுபவிக்கும் ஆன்மா வேறுமாக விருக்கவேண்டும். அப்போது சுகத்தை யளிக்கும் ஆன்மா வொன்று, அதை அனுபவிப்பதாகிய ஆன்மா ஒன்று, ஆக இரண்டான்மா இருக்க வேண்டும். ஆனால் அப்படி யில்லை. ஒரு ஆன்மாவே யுள்ளது. ஆதலால் ஆன்ம சுகசாதனமல்ல. தத்தை யளிப்பதல்ல. ஆனந்தமே சொரூபமாக வுடையது.

மேலும் விஷய சுகத்தில் உண்டாவது திருப்தி மட்டுமே. ஆன்மாவிலுள்ள தோ நிரதிசயப் பிரீதி. விஷய சுகத்தில் உண்டாகும் விருப்பம் ஒரு விஷயத்தை விட்டு வேறொரு விஷயத்திற்கு மாறும். ஆன்மாவின் கண்ணுள்ள பிரீதி நிலையானது. இன்னும், விஷய சுகத்திலுள்ள பிரீதியை பிரியப்படி விடவும் கொள்ளவுங் கூடும். ஆன்மாவிலுள்ள பிரியத்தை விடவும் கொள்ளவும் யாரால் கூடும்? விடய சுகங்களை விடும் அவனாகிய ஆன்ம ஆன்மாவை அவனால் ஒருபோதும் விடமுடியாது.

("சிலர் வெறுப்பினால் ஆன்மாவை விட்டுவிடுகிறே னென்று பிராணத் தியாகம் செய்துகொள்கிறார்களே" என்று சீடன் வினவுகிறான்.)

சீடன்: -      சுவாமி! கொடிய வியாதி, அல்லது மனோசஞ்சலம் முதலியவை யுண்டாகுங்கால், சிலர் பெருங் கோபத்தால் மனம் வெந்து பிராணனை விட்டுவிடுகிறேன் என்று தம்மைத் தாமே கொலை செய்து கொள்கிறார்களே, அப்போது ஆன்மாவை முடியாதென்று எப்படிக் கூறுவது?

குரு: -       நீ கேட்பது சரியான கேள்வியல்ல; தனக்குத் துன்பத்தை உண்டாக்கும் தேகத்தின் மேல் வெறுப் படைந்து அத் தேகத்தை விட்டுவிடுகிறானே யன்றி வேறில்லை. அவனால் விடப்பட்ட தேகம் அவனல்ல தேகத்தை விட்டு அவன் நீங்கிவிடுகிறான். ஆன்மாவே தானாகி யிருக்கிறவரையில் ஆன்மாவை எவனும் விடுவதுமில்லை; கொள்வதுமில்லை; எவனும் ஆன்மாவை வெறுப்பதில்லை.

சீடன்: -     சுவாமி! ஆன்மாவே பிரியவஸ்து வெனின் தனம் புத்திரன் முதலியவற்றின் மேலும் பிரியம் இருக்கின்றதே.

குரு: -      சாதாரணமாக யாவரும் பிரியப்படுகின்ற தனத்தைக் காட்டினும் ஒருவனுக்குத் தன் புத்திரன் மேல் அதிகப் பிரியமாகும். புத்திரனைக் காட்டிலும் தன் தேகத்தின் மேல் அதிகப் பிரியமாகும். தேகத்திலும் இந்திரியங்கள் பிரியமாம். இந்திரியங்களிலும் கரணம் பிரியமாம். கரணத்தினும் பிராணன் பிரியமாம். பிராணனைக் காட்டிலும் ஆன்மாவில் வெகு பிரியமாம்.

இவ்வாறு ஒன்றை நோக்க மற்றொன்றின் மேல் அதிகப் பிரியமாயினும் முடிவில் எல்லாவற்றையும் விட ஆன்மாவினிடமே மிக்க பிரியம்; அதனினும் அதிகப் பிரியமானது வேறொன்றுமில்லை. ஏனெனில், ஆன்மா ஆனந்த சொரூபம்.

       (விஷயங்களில் உள்ள விருப்பு, வெறுப்பு, உதாசீனம் முதலியவை மாறிமாறி வருவதுபோல் ஆன்மாவின் கண்ணுள்ள விருப்பு மாறாததால் ஆன்மாவே ஆனந்த ரூபம் என்று ஆசாரியர் நிரூபிக்கிறார்)

       யாவரும் அஞ்சி வெறுக்கும் புலியேயாயினும், அதனாலநுகூலம் நேர்வதாயின் அதன்மேல் விருப்பமே. தனக்குப் பிரதிகூலமான காரியத்தைச் செய்யின் தனது புத்திரனாயினும் அவன் மேல் வெறுப்பே. உலகில் விருப்பு மின்றி வெறுப்புமின்றி உதாசீனமாகக் கருதப்படும் புல் பூண்டு முதலியவற்றில் ஒரு சமயம் விருப்பும், ஒரு சமயம் வெறுப்புமாம். புல், பூண்டு முதலியவை தீ யெரித்தல் முதலியவைகளுக்கு அநுகூலப்படும் போது அவற்றின் மேல் விருப்பும், பாதையில் நடந்து செல்கையில் அவை யிடையூறாக விருக்கும்போது அவற்றின் மேல் வெறுப்பும் உண்டாகின்றன. பரிசுத்த சின்மய சொரூபனாகிய ஆன்மா தன் ஆனந்தத்தில் ஒருபோதும் மேற்கண்டபடி மாறுதலின்றி நிலையான - விருப்ப முடையவனாகவே யிருக்கிறான். ஆதலின் மைந்தனே நீங்காத ஆனந்த சொரூபியான உன் ஆன்மாவை ஆராய்ந்து அநுபவித் தறிவாயாக.

சீடன்: -     குருநாதனே! ஆனந்தத்தின் கூறுபாடுகள் எத்தனை யென்பதைத் தயை புரிந் தருளப் பிரார்த்திக்கிறேன்.

ஆசான்: -    மைந்தனே! (1) பிரம்மானந்தம், (2) வாசனானந்தம், (3) விடயானந்தம் என்று மூன்று வகை யாகும். சிலர் எட்டுவித மென்றுங் கூறுவர். ஆனால் மற்ற ஐந்தும் இந்த மூன்றில் அடக்கமே அவை (4) ஆன்மானந்தம், (5) முக்கியானந்தம், (6) நிசானந்தம், (7) அத்துவிதானந்தம், (8) ஞானானந்தம்.

(1) பிரம்மானந்தம்: - கருவி கரணாதிகள் யாவும் ஒடுங்கிய நித்திரையில் அனுபவிக்கும் சுகம்.

(2) வாசனானந்தம்: - சுழுத்தியின் கண்ணிருந்து எழுந்த போது சொல்ப காலம் சுழுத்தியி லனுபவித்த வாசனையுளது. அப்போது நித்திரையின் சுகத்தை மறவாமலும், பாகியதில் செல்லாமலும் உதாசீனனாக விருப்பான். அது வாசனானந்தம் எனப்பட்டது.

(3) விடயானந்தம்: - உலக போகங்களில் இச்சித்த போகம் கிடைத்து அதை அனுபவிக்கும்போ துண்டாகும் சுகம்.

(4) ஆன்மானந்தம்: - எல்லாவற்றிலும் நாமே நமக்கு மிக்க பிரியமான வஸ்துவென்னும் உணர்ச்சியா லுண்டாகும் சந்தோஷம்.

(5) முக்கியானந்தம்: - யோகத்தில், அதாவது சமாதியின் கண் உண்டாகும் சுகம்.

(6) நிசானந்தம்: - உதாசீன காலத்தில் அதாவது எதையும் கவனியாது சிந்தனையற்று இருக்கும் காலத்தில் தோன்றும் சுகம்.

(7) அத்துவிதானந்தம்: - துவித பாவனை விட்டுத் தன்னை அத்துவிதமாக நோக்கும் விவேகத்தாற் றோன்றும் ஆனந்தம்.

(8) ஞானானந்தம்: - ஆன்ம பரமான்ம ஐக்கிய ஞானத் தாலுண்டாகும் ஆனந்தம்.

(நித்திரைச் சுகம் பிரம சுகமெனல்)

அநித்தியமான விஷயங்களில் போகம் ஒன்று, போகத்தைப் புசிப்பவன் ஒன்று, போகியம் (போக சுகம்) ஒன்று ஆகிய திரிபுடியுள வாதலின் அவை அவை துக்கமாம் என்றுணர்ந்து, ஆகாயத்தில் பறந்தலையும் கருடன் களைப் படைந்தபோது சுகமனுபவிக்கக் கருதி இறகுகளை ஒடுக்கிக் கொண்டு தன் கூண்டில் போய் வீழ்வதுபோல், திரிபுடியா லுண்டான சிரமம் நீங்கும்பொருட்டு மனதை ஒடுக்கி நித்திரை செய்யும் சீவன், ஒரு அவஸ்தையுமின்றித் தானே தானாக விருந்து ஆனந்தமயனாகிறான். இதுவே உயர்ந்த பிரம்மானந்தமாம்.

சுழுத்தியில் சீவன் சுகரூபமான பிரம்மானந்த நிலையை யடைகிறான் என்பது வேத சம்மதம். அங்கு ஆனந்த மிருப்பதாலேயே அந்த நித்திரைக்குப் பங்கம் வராதபடி மிருதுவான படுக்கை தலையணை முதலியவற்றைத் தேடிக் கொள்கிறான். அனுபவத்தில் அச் சுழுத்தியில் இராகத் துவேஷாதிகள், காலம், இடம் முதலிய பேதங்கள் ஒன்று மின்றி இரண்டற்ற ஆனந்தத்தையே யனுபவிக்கிறான். இதனால் நித்திரைச் சுகம், பிரம்ம சுகம் என்பது சுருதி, யுக்தி, அனுபவங்களுக்கு ஒத்ததாம்.

[இங்கு பிரம்மானந்தமெனின், ஆன்மா பிரம்மத் தோடு ஐக்கிய மடைந்தபோ துண்டாகும் ஆனந்தமென்று கந்தலாகாது. பிரம்மானந்தத்திற்குச் சமதையான ஆனந்த மெனக் கூறலாம். பிரம்மான்ம ஐக்கியம் அடைந்த ஆன்மா மறுபடி அஞ்ஞானத்தில் அழுந்தாது. பிறவியும் அதற்கில்லை. நித்திரையில் ஆன்மா கருவி கரணாதிகள் கழன்று அவித்தையில் அமிழ்ந்திருக்கிறது. அதாவது மாயையோடு சம்பந்தப்பட்டே யிருக்கிறது. அதனால் கருமபலன் தூண்டச் சாக்கிரத்திற்கு வந்தபோதும் அஞ்ஞானத்தோடு பொருந்தியே இருக்கிறது. பிரம்மான்ம ஐக்கிய அனுபவமாகிய நிட்டையிலிருந்து பகிர்முகப்பட்ட ஆன்மா அஞ்ஞான சம்பந்த முடையதாயிராமல் ஜீவன் முத்த நிலையில் இருக்கும் இரண்டினுமுள்ள வித்தியாசம், நித்திரானந்தத்தில் மாயா சம்பந்த மிருக்கிறது. பிரம்மான்ம வைக்ய ஆனந்தத்தில் மாயா சம்பந்தமில்லை.]

சீடன்: --      சுவாமி! உலக அனுபவத்தில் ஒருவனுடைய அனுபவம் மற்றொருவனுடைய மனதில் உதிப்பதில்லையே. அப்படி யிருக்க மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் முதலிய யாவும் நாசமாகின்ற சுழுத்தியிலிருக்கும் ஆனந்தமயன் அல்லவா அச் சுகத்தை அனுபவிக்கிறான். அவ்வாறிருக்க நித்திரை ஒழிந்தபின் மனம் முதலியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கும் விஞ்ஞானமயனாகிய சீவன் மனதில் அந்த அனுபவம் எப்படி உதிக்கிறதென்பது எனக்கு விளங்கவில்லை. சகல சந்தேகங்களையும் அகற்றவல்ல தாங்கள் இதையும் விளக்கி யருளவேண்டும்.

ஆசாரியர்: - மைந்தனே! வெண்ணெய், நெய் என்ற இரண்டும் பெயர் உருவில் வேறாகத் தோன்றினும் சுவையில் ஒன்றேபோல். விஞ்ஞானமயன், ஆனந்தமயன் இருவரும் அந்தக்கரண விர்த்தி அவித்தை இவற்றால் பிரிவே யன்றி சேதனத்தால் பிரிவில்லை. சாக்கிரத்தில் மனம் முதலியவற்றோடு கூடியிருக்கும் விஞ்ஞானமயனாகிய ஆன்மாவே, மன முதலிய யாவும் ஒடுங்கிய சுழுத்தியில் பிரம்மானந்தத்தை அனுபவிக்கும் ஆனந்தமயன் என்றழைக்கப்படுகிறான். பெய்யும் மழைத் துளிகளும் குளங்களில் சேர்ந்திருக்கும் நீரும் வேறாகாது ஒன்றே யாவதுபோல் விஞ்ஞான மயனும், ஆனந்தமயனும் ஒரே ஆன்மாவாகும்; வேறு வேறல்லர்.

(நித்திரையில் பிரம்மானந்தத்தை அனுபவிக்கும் சிவன், நித்திரை ஒழிந்தபின் சாக்கிரத்தில் துக்கத்தை அனுபவிக்கிறதேன் என்று சீடன் சங்கித்தல்)

சீடன்: -      "நித்திரையில் பிரம்மானந்தத்தை அனுபவிக்கும் சீவன் அதை விட்டுவிட்டு சாக்திரத்திற்கு வந்து துன்பத்தை யனுபவிக்க வேண்டியதென்ன?'' என்று வினவினான்.

குரு: -       சீவன், பூர்வம் செய்துள்ள புண்ணிய பாபகர்மங்கள் அவனைச் சுழுத்தியினின்றும் பிரித்துச் சாக்கிரத்தில் கரணாதிகளோடு சேரும்படிச் செய்கின்றன. அப்படிச் சுழுத்திவிட் டகன்றோனும் கொஞ்ச நேரம்தான் அனுபவித்து சுகத்தை சுகத்தை விடாதிருப்பான். அதுவே வாசனானந்தம் என்றது.

அந்த வாசனானந்தமுள்ள சொற்ப காலத்தில் கர்ம பலத்தால் தேகமே தான் என்ற நினைவு தோன்ற அப்பிரம்மானந்தம் அடியோடு மறக்கப்படுகிறது. புண்ணிய பாப கர்மங்களே சுக துக்கங்களுக்குக் காரணமாம். சுக துக்கம் இரண்டிற்கு மிடையிலுள்ள அவஸ்தையே உதாசீனம் என்னப்படும். "நான் ஒரு சிந்தனையுமின்றிச் சுகமாகவிருந்தேன்'' என்று சொல்லும் காலமே உதாசீன காலம். இதற்குத் தூஷ்ணீம் ஸ்திதி என்றும் பெயர். இதையே நிசானந்த மென்றது.

நித்திரையிலுள்ள பிரம்மானந்தம் (நான் இன்ன மனிதன் என்ற விவரம் ஒன்றும் தோன்றாமல்) நான் என்ற சாமான்ய அகங்காரம் தோன்றியதே மறைகின்றது. மறைந்தும் அதன் நினைவிருப்பதே வாசனானந்தம். இந்தச் சாமானிய அகங்காரமும் மறைந்து, நித்திரையுமின்றி, நாம ரூபம் யாவும் மறந்து, நித்திரையுமின்றி, தேகம் தம்பம் போல் அசையாமல் நிற்க ஆன்மா சூக்குமத் தன்மை யடைந்துள்ள பிரம்மாகார நிலையே முக்கியானந்தம் என்று கூறப்பட்டது.

முக்கியானந்தத்தின் மகிமை கூறல்

(1) மனிதரில் சிறந்தவனான ஏக சக்ராதிபதி சார்வபெளமன் எனப்படுவான்.

(2) அவனுக்கு மேலானவன் (இக் கற்பத்திலேயே மனிதனாக விருந்து புண்ணிய விசேஷத்தால் கந்தருவ பதத்தை யடைந்தவன்) மநுடகந்தர்வன்.

(3) அவனிலும் மேலானவன் (பூர்வ கற்பத்திற் செய்த புண்ணியத்தால் இக் கற்பத்திலேயே கந்தருவனானவன்) தேவகந்தருவன்.

(4) பிதிரர்.

(5) (கற்பாதியிலேயே தேவத்துவத்தை யடைந்தவர்) ஆஜானதேவர்.

(6) (வர்த்தமான கற்பத்தில் அசுவமேதாதி கருமங்கள் செய்து உயர்பத மடைந்து ஆஜான தேவர்களாலும் வணங்கப் படுவோர்) கருமதேவர்.

(7) (அஷ்டவசு, துவாதசாதித்தர், ஏகாதச ருத்திரர் ஆகிய முப்பத் தொருவரும்) முக்கிய தேவர்.

(8) இந்திரன்.

(9) பிரசுஸ்பதி.

(10) (பிரஜாபதி) விராட்.

(11) (பிரமன்) இரண்யகருப்பன்,

ஆகிய இவர்கள் ஒருவருக்கொருவர் பதவியிலுயர்ந்தோர். இவர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் ஒருவருக்கொருவர் ஆனந்தம் உத்தரோத்தரம் நூறு மடங்கு அதிகமானது. அதாவது சார்வபௌமன் ஆனந்தத்திற்கு நூறு மடங்கு கொண்டது மநுடகந்தர்வன் ஆனந்தம்; மநுடகந்தர்வன் ஆனந்தத்திற்கு நூறுமடங்கு ஆனந்தம் தேவகந்தர்வன் ஆனந்தம்; இவ்வாறே உணர்ந்து கொள்க.

இவர்கள் ஆனந்தங்கள் நீர்த்துளி போன்றவை யெனின், பிரம்மானந்தம் பிரளயகாலப் பெருங்கடல் போன்றதாம்.

    

(குரு - முக்கியானந்தத்தின் பெருமை கூறல்.)

     "இரண்டற்றதும் சுழுத்தி யல்லாததுமாகிய முக்கிய நிஜானந்தத்தி னனுபவமே துரியா தீதம் என்ற ஏழாம் பூமியாம். எவன் இந்த ஏழாம் பூமியில் இருக்கிறானோ அவன் நாரதன், சிவன், விஷ்ணு, பிரமன் முதலியோருடைய அனுபவமான ஆனந்த நிலையிலிருப்பவனாவன். அவர்களை யவனுக்கு உவமானமாகக் கூறலாம். அத்தகைய மகாபுருடனது பாத தூளிகள் என் சிரசில் தரிக்கத்தக்கனவாம்.

     இவ்வாறு ஆனந்தங்களின் வகைகளைக் கூறினோம். இன்னும் வித்தியானந்தம் என்ற ஒன்றுண்டு; அதை முடிவிற் கூறுவோம். சுகதுக்காதி தொந்தங்களைப் போக்கிய மைந்தனே! இன்னும் சந்தேகங்க ளுளவேல் கேட்பாயாக.

சீடன்: -      குருநாதனே! ஆன்மா சச்சிதானந்த சொரூப மென்று முன்னம் கூறி யருளினீர்களே. சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று பதங்களும் தனித்தனி வெவ்வேறு பொருளுடையனவாக விருக்கின்றனவே. (அஸ்தம், கரம், பாணி என்பவைபோல்) ஒரே வஸ்துவின் பரியாய நாமங்களாக விருக்கவில்லையே. அப்படி யிருக்க சஞ்சலப்படும் மனமானது ஏகசொரூபமான அநுபவத்தில் எவ்வாறு நிலைத்து நிற்கும்? ஆகையால், தேனீக்கள் பல மரங்களினின்றெடுத்த தேன் (ஏகரசமாக விருப்பது) போல், அதை அடியேனுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்.

ஆசான்: -    மைந்தனே! ஜலத்தினிடத்தில் குளிர்ச்சி, நெகிழ்ச்சி, வெண்மை என்ற மூன்று குணங்களிருக்கின்றன வென்பதனாலேயே ஜலம் மூன்று பொருள்களாயினதோ? இல்லை உஷ்ணம், பிரகாசம், சிவப்பு என்ற மூன்று குணங்களுள வென்பதனால் அக்கினியும் மூன்று பொருள்களாய் விட்டதோ? இல்லை. பிரபஞ்சம், அசத்து, சடம், துக்கம் என்று நன்கறியும் பொருட்டு பிரம்மத்தினிடத்தில் அவற்றிற்கு மாறான சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று குணங்களுண்டென்று வேதம் அறிவித்ததே யன்றி, சச்சிதானந்த சொரூபமாகிய பிரம்மம் ஒன்றேயாகும்.

பிரம்மத்திற்கு நித்தியம், பூரணம், ஏகம், பரமார்த்தம்., பரப்பிரம்மம், நிதானம், சாந்தம், சத்தியம், கேவலம், துரியம், சமம், திருக்கு, கூடஸ்தன், சாக்ஷி, போதம், சுத்தம், இலக்கியம், சநாதனம், சீவன் தத்துவம், விண், சோதி, ஆன்மா, முத்தம், விபு, சூக்குமம் என்ற அநேகம் விதி நாமங்களையும், அசலம், நிரஞ்சனம் அமிர்தம், அப்பிரமேயம், விமலம், வசனாதீதம், அசடம், அநாமயம், அசங்கம், அது லம், நிரந்தரம், அகோசரம், அகண்டம், அசம், அநந்தம், அவிநாசி, நிர்க்குணம்., நிட்களம், நிரவயவம், அநாதி, அசரீரம், அவிகாரம், அத்துவிதம் என்ற அநேக நிஷேத நாமங்களையும் வேதம் கூறா நிற்கும்.

இவ்வாறு அனேக விதி நிடேத குணங்கள் யாவும் சேர்ந்து ஒருமித்து வேதம் சொன்ன பொருள் ஒன்றே யன்றி இரண்டல்ல. அகண்டைகரசமான பிரம்மத்தைப் பிரதிபாதியா நின்ற பதங்கள் பின்னமான சத்தங்களாயினும், சத்து, சித்து, ஆனந்தமென்னும் விசேடங்களையுடைய பிரம்மம் ஏக சொரூபமே என்ற உண்மையை யுணர்ந்து அகண்ட பரிபூரண சொரூபமாக விருப்பாய், மைந்தனே,

(சீடனுக் குதிக்கக்கூடிய சங்கையைக் குரு தாமே கூறி அதற்குச் சமாதான முரைக்கிறார்)

மைந்தனே! நிர்க்குணம் என்று கூறிய பிரம்மத்திற்கு வேதம் குணங்களைக் கூறுவது ‘என் தாய் - மலடி' என்பது போல் முன்னுக்குப் பின் விரோதமான வார்த்தை ஆகாதோ சங்கிக்காதே. பிரம்மத்தினுடைய குணங்களைக் கற்பித்துக் கூறாமல் அதை அறியத்தக்க சாமர்த்தியமுடைய அறிவாளிகள் யாரிருக்கிறார்கள்? ஒரு வருமில்லை. சீவன்கள் முத்தி சுகமடையும் பொருட்டு அவர்களுக்குப் பிரம்ம ஞானம் உதிப்பதற்காகக் கற்பிக்கப்பட்ட குணங்கள் பிரம்மத்தின் குணங்களல்ல; பிரம்மமாகிய சொரூபமே யாகும்.

(சீடன் சந்தேகம் பூரணமாய் நிவர்த்தி யாவதற்காகப் பின்னும் வினாதல்)

சீடன்: -      அஞ்ஞான இருள் நீங்கக் கோடி சூரியர்கள் உதித்ததுபோல் எழுந்தருளிய ஆசாரியரே! பரிபூரணமாகிய எனது சொரூபவி நுபூதி என் உள்ளத்தில் அழுந்தும்படியாகச் சுருதிகள் கூறியவாறு என்னை அகண்டாகார சொரூபமாகக் கண்டேன். உத்தியும் எனக்குப் பொருந்தும்படியாக அருளிச்செய்தால் பசுமரத் தாணிபோல் என் நெஞ்சில் அழுந்து மல்லவோ?

ஆசான்: -   மைந்தனே! சத்தாக எப்பொருள் உளதோ அதுவே சித்தாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அப்படிக்கின்றி சத்தினின்றும் அது வேறெனில், அச் சித்தாகிய பொருள் சடமாகும். அப்படி அசத்தாயின் அது எவ்வாறு சாட்சியாக விருக்கலாகும்? ஆகையால் சத்தே சித்தென் றறிய வேண்டும்.

பிரகாசித்துக்கொண்டிருக்கிற சித்தே சத்தாக இருந்துகொண்டிருக்கிறது. அச் சித்திற்குப் பிரகாசிக்கும் தன்மை யின்றேல் அது சடமாகும். சட பதார்த்தங்களுக்கு இருப்பேயில்லை. ஆதலின், சித்தே சத்தென் றறிய வேண்டும். இவ்வாறு சத்தும், சித்தும், ஏகமாய்த் தோன்றுவ தெதுவோ அதுவே ஆனந்தமாம். அப்படிக் கின்றி சாத்தாகிய சித்துக்கு ஆனந்தமாகிய அது அன்னிய மாயின், அது அசத்தும், ஜடமுமாகும். அப்போது ஆனந்தானுபவம் உதியாது. ஆகையால் சத்தும், சித்துமே ஆனந்தமென அறியவேண்டும். இதனால் சத்து, சித்து, ஆனந்தமே சொரூபமாகிய பிரம்மம் ஏகமே என்று யூகிப்பதற்கு இவ் வுத்தியே தலைமையானதாகும்.

மேலும் சத்து தன்னாலேயே பிரகாசிக்கிறதன்றி வேறொன்றாலல்ல. வேறொன்றா லெனின், அந்த வேறொன்று சத்தா அசத்தா வென்னும் கேள்வி வரும். அசத்தென்றால், அசத்து சத்தை விளங்கச் செய்யாது. அப்படிக்கின்றி அதுவும் சத்தெனில் மறுபடி அது தன்னால் பிரகாசிக்கின்றதோ வேறொன்றாலோ வென்று கேள்வி தோன்றி வேறொன்றன்றெனில் இவ்வாறே முடிவில்லாது போய்க்கொண்டே விருக்கும். ஆதலின் சத்தே சித்து, சாத்து சித்தே ஆனந்தம். இப்படி சச்சிதானந்த சொரூபமாய் விளங்கா நின்ற பிரம்மம் ஏக வஸ்துவே.

       இவ்வாறு சச்சிதானந்தங்கள் வேறுபடாமல் ஏகமாகவிருக்கிற தன்மை சுருதி யுக்திகளுக்கு ஒத்திருப்பதுபோல், அனுபவமும் ஒத்திருப்பதைக் கூறுதும் கேட்பாயாக. உனது சுழுத்தியின் கண் அனுபவித்த ஆனந்தமானது (அங்கே அஞ்ஞானத்தைப் பிரகாசித்துக்கொண்டிருந்து) விழித்தபின் (நான் ஒன்று மறியாமல் சுகமாக நித்திரை செய்தேன் என்று) ஸ்மிருதி ரூபமாக உதித்தலால் அவ்வானந்தமே அறிவாம். (ஸ்மிருதி ரூபமாக உதித்தது எனின், அநுபவிக்கும் போது தோன்றாமல் பிறகு நினைவு வந்து அறியப்படுவது, அதாவது சித்தாம். அச் சுழுத்தியின் கண் அந்த ஆனந்தத்தைத் தவிர விளக்கிவைக்க வேறு பிரகாசமில்லை. சுழுத்தி, பிரளயம் இரண்டிலுங் சிதானந்தனாகிய நீ யிருந்தே அஞ்ஞானமாகிய இருளைக் காண்கிறாய். ஆதலின் நீ சச்சிதானந்த சொருபனே. சச்சிதானந்த சொரூபமே பிரம்மம் என்று சுருதி கூறுவதால் நீ பிரம்ம சொரூபமே. பிரம்மம் என்றால் எங்கும் வியாபகமானது என்று பொருள்.

      சுழுத்தியில் எவ்வாறு காண்கிறாயோ அவ்வாறே விழிப்பி விருக்கும் போதும், எப்போதும், உன் உள்ளத்தில் அவ்வாறே நோக்கி அகண்ட பரிபூரண அனுபவத்தி லிருப்பாயாக.

சகல ஞான நூல்களையு முணர்ந்த அனுபவியாகிய ஆசான் சச்சிதானந்தங்கள் ஒன்றாகிய பரமார்த்த நிலையை மொழிந்தபடி சீடன் தன் அனுபவத்தை விடாமல் பலகாலும் நிஷ்டை கூடிச் சமாதியிலிருந்தான். பிறகு சமாதியினின்றும் விழித்தபோது, அநேகவித ரூபங்களான சராசரங்களாகிய சித்திரங்க ளனைத்தும் தோன்றும் அகண்ட சச்சிதானந்தப் பிரம்மமாகிய ஒரு படம் போலானான்.

கடலில் அலை திவலை. நுரையாதிகள் தோன்றிக் காணப்படுவதுபோல அகண்ட பரிபூரண சச்சிதானந்தப் பிரம்மத்தின் கண் இச் சராசரப் பிரபஞ்சங்களெல்லாம். ஆரோபமாய்த் தோன்றியிருப்பதால் பிரபஞ்சங்களைச் சித்திரங்களாகவும், ஆதாரமாகிய பிரம்மத்தைப் படம் என்றும் கூறினார்; இதையே அகண்டகார அனுபவமென்பர், இதுவே சீவன் முக்தனது அனுபவ நிலை.

 சுழுத்தியில் அறிவு அவித்தையாகிய அஞ்ஞான இருளை எதிரிட் டறிகிறது. நித்திரையற்ற சாக்கிர நிலையில் மனதை ஒடுக்கி அவ்வாறு அறிவு மயமாய் விளங்குவதே சீவன் முக்தி நிலையாம்.

''கண்ட அறிவுதனைக் கொண்டுன்னைக் கண்மறைத்த

பண்டை யிருளை நீ பார்த்துக்கா ணென்றானோ.”

                                                 (தத்துவராயர் தாலாட்டு.)

 
      இதற்கே நினைவிற் சுழுத்தி என்றும் பெயர். தன் அனுபவ நிலையாகிய இந்நிலையில் நின்றால் எல்லாம் அகண்ட பிரம்ம சொரூபமாய் விளங்கும்.

"தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகி நின்றால்

     நின்மயமா யாவும் நிகழும் பராபரமே."             (தாயுமானவர்)


     "மேனியிற் புறத்தி னுள்ளின் மேலொடு கீழிற் றிக்கில்

     வானில்வை யகத்தி லெங்கும் யானன்றி மற்றொன் றில்லை

     யானிலா விடமு மில்லை யென திடத் திலாது மில்லை

     தானிகழ் பொருள்வே றில்லை சச்சிதா நந்த மென்றான்.'' (வாசிட்டம் - கசன் கதை)

உயிரசைவாலேதான் மனமசைகிறது. ஆன்மயன்றி மனம் அசைய முடியாது. மனம் ஜடம். ஆன்மா உற்று நோக்கினால் அந்த உண்மை வெளிப்படும். ஆன்மா தன்னை மறவாது தன் நிலையில் நின்று மனம் எங்கேயென்று நோக்கினால் மனதிற்குத் தன்னையன்றி வேறு இருப்பிடமில்லை யென்பதும், இதையே மாயை யென்பது உண்மை யென்றும் அநுபவமாக விளங்கும். இம் மனதின் அசைவை வளரவிடா தடக்கிச் சுழுத்தியில் அது எப்படி ஒடுங்கிச் சாட்டையற்ற பம்பரம் போலும், கயிறற்ற காற்றாடி போலும் கிடந்ததோ, அவ்வாறு நிலையில் சுழுத்தியற்ற சாக்கிரத்திலேயே அதை யிருக்கும்படி செய்யின் ஆன்மட் பிரகாசம் தோன்றும். ஞானோதயமுண்டாம்.

“உண்டாகி யெவ்விடத்து முற்ற போத

            முயிரசைவா லுணர்வுறுமப் போதந் தன்னை

மண்டாமற் றடுக்கை பெரு நன்மை யாகும்

வளர்போதங் காண்பவற்றை மருவு மாலாற்

றண்டாத காண்பவையே மனத்திற் கென்றுந்

            தவிராத துயராமத் தனிப்போ தந்தான்

மிண்டாத சுழுத்தியிற்போ தம்போ னிற்கில்

            வீடதுபே றதுவிமல பதம்வே றில்லை." (வாசிட்டம்)

 

(சீடன் சத்தபூமிகளைப் பற்றி விசாரித்தல்)

சீடன்: -     அடியேன் மனதிற் குகந்த தேசிகமூர்த்தியே! நமக்குப் பிரம்ம சிந்தனையாகிய இத் தொழிலே உரியதன்றி வேறு தொழிலில்லை யன்றோ? பிரம்மத்தைப் பற்றி உபதேசித்தும் அதையே சிந்தித்தும் இருப்பதன்றோ ஞானிகளுக்குரிய தொழில்? ஆதலின் தாங்கள் முன்னே கூறிய 'துரியாதீதமும் ஏழாம் பூமியும்   முக்கியமாம்' என்றதையும் அதைப் பற்றிய விவரங்களையும் எளிதாக அடியேன் உணரும் வண்ணம் கூறி அருளப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

ஆசான்: -   புத்திரனே! இப் பூமிகளில் ஞானபூமிகள் ஏழென்றும், அஞ்ஞான பூமிகள் ஏழென்றும் கூறப்படும். இவற்றில் முதலாவதாக அஞ்ஞான பூமிகளைப் பற்றிக் கூறுகிறோம். கேட்பாயாக.

அஞ்ஞான பூமிகள் 7.

(1) பீஜசாக்கிரம், (2) சாக்கிரம், (3) மகாசாக்கிரம், 4) சாக்கிர சொப்பனம், (5) சொப்பனம், (6) சொப்பன சாக்கிரம், (7) சுழுத்தி. இவற்றில்,

1. பீஜசாக்கிரம்: -   நித்திரையினின்று விழிப்புக்கு வருமுன் மாயையோடு சம்பந்தப்பட்டிருந்த ஆத்ம சைதன்னியத்தினின்றும் எழும் சிதாபாசத்தோடு கூடின அறிவு மாத்திரமான நிலையே பீஜசாக்கிரம் எனப்படும்.

2. சாக்கிரம்: -      மேற்கண்ட பீஜம் போன்ற அறிவினிடத்தில் முன்னில்லாத அகமமதைகள் சூட்சுமமாக உண்டாகும் நிலையே சாக்கிரம்.

3. மகாசாக்கிரம்: - பிறகு யான் எனது என்ற அகமமதைகள் திடமாகவும் விரிவாகவும் உதிப்பது மகாசாக்கிரமாம்.

4. சாக்கிர சொப்பனம்: - சாக்கிரத்தில் தான் அறிந்தவைகளையும் அறியாதவைகளையும் கொண்டு மனோராச்சியம் செய்தல் சாக்கிர சொப்பனம் எனப்படும்.

5. சொப்பனம்: - சாக்கிரத்தில் அனுபவித்தவைகளையும், அனுபவியாதவைகளையும் நித்திரையில் காண்பதாகிய கனவே சொப்பனம் என்பதாம்.

6. சொப்பன சாக்கிரம்: - முன்பு கண்டு மறந்த சொப்பனத்தை மறுபடி சாக்கிரத்தில் காண்பது சொப்பன சாக்கிரம் அல்லது சொப்பன நனவு எனப்படும்.

7. சுழுத்தி: - மேற்கண்ட ஆறு அவஸ்தைகளு மின்றிக் கருவிகாரணங்கள் யாவும் ஒடுங்கி அஞ்ஞான இருள் மூடியிருக்கும் நித்திராவஸ்தையே சுழுத்தி யென்பதாம்.

[பீஜசாக்கிரம்: - சாக்கிரமே பீஜசாக்கிரம், சாக்கிரம் மகாசாக்கிரம் என்ற மூன்று நிலைகளாகப் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

நாம் நித்திரையினின்று விழிப்படையும் போது இந்த மூன்று படிகளையும் கடந்தே வெளிவருகிறோம். திடீலென்று ஏககாலத்தில் பூரண விழிப்பிலுள்ள சகல உணர்ச்சிகளையு மடைவதில்லை. நாம் நித்திரைக்குச் செல்லும் போதும் இவ்வாறே சில படிகளைக் கடந்தே செல்கிறோமன்றி ஏககாலத்தில் நித்திரை வந்து மூடிக்கொள்வதில்லை. நாம் அவற்றைக் கவனியாமல் அத்தொழில்கள் தாமே நடை பெற விட்டிருப்பதால் அவை நமக்குப் புலப்படவில்லை.

நித்திரையில் படிப்படியாகக் கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நாம் என்பதும் மறந்து ஆன்மா அஞ்ஞானமான இருளில் இளைப்பாறுகிறது. அங்கிருந்து சாக்கிரத்திற்கு வரும்போது முதலில் நமது தேகம் என்ற நினைவுகூட வராமல் நாம் என்ற ஒரு அற்ப உணர்ச்சி மட்டுமே உண்டாகிறது. இது வித்திலிருந்து ஊசி முனை போல் கிளம்பும் முளை போன்றது. சாக்கிரத்திற்கு இது வித்துப் போன்றதாதலால் இதற்குப் பீஜசாக்கிரம் என்னப்பட்டது. இந்த நிலையில் நான் என்ற அகங்காரமாவது, எனது என்ற மமகாரமாவது ஒன்றுமில்லை; இது காலதேச வஸ்து பரிச்சேதமற்ற நிலை. இங்கு மனமுமில்லை; மனம் பிறகே கிளம்புகிறது. ஆகையால் இது பரிசுத்தமான நிலை. ஒருவன் இந்த நிலையினின்றும் சகலாவஸ்தைக்கு வராமல். மறுபடி கேவலத்திற்கு மிடங்கொடாம லிருந்தால் இதுவே ஆத்மானுபவமான நிலையாகும்.

இதன்பின் தேகத்தின் உணர்ச்சியும், இடவுணர்ச்சியும், காலவுணர்ச்சியு மட்டும் தோன்றும். இதுவே சாக்கிரம் என்பது. கடைசியில் விஷயாதிகள் எல்லாம் ஜனிக்கின்றன. அதாவது, இன்று சனிக்கிழமை, நான் துரிதமாக எழுந்து இன்னின்ன காரியத்தைச் செய்யவேண்டும் என்பது முதலான பூரண மனச் சலனம் உண்டாகிவிடுவது. இதுவே மகாசாக்கிரம் என்பதாம்.

சொப்பனத்தில் கண்ட விஷயங்களைக் கண்டது கண்டவாறே சாக்கிரத்தில் சிந்தித்தல் சொப்பன சாக்கிரம். சாக்கிரத்தி லிருக்கும்போது பிரத்தியட்ச நிகழ்கால விஷயங்களை விட்டுவிட்டு மனப்போக்கின்படி மனோ ராஜ்ஜியம் செய்தலாகிய பகற்கனாவே சாக்கிர சொப்பனம் என்பதாம்.

(இனி ஆசான் ஞானசத்த பூமிகளைக் கூறுகிறார்)

ஞானசத்த பூமிகள்

(1) சுபேச்சை, (2) விசாரணை, (3) தநுமானசி, (4) சத்துவாபத்தி, (5) அசம்சத்தி, (6) பதார்த்தபாவனை, (7) துரியம் என்று ஞானபூமிகள் ஏழாம். இவற்றுள்,

1. சுபேச்சை: - 'சுபம்' என்பது பிரம்ம ஞானத்தாலடையும் மோக்ஷம். இச்சை என்றால் அதை விரும்புவது. அதாவது, மோக்ஷ இச்சை. "அடடா! நாம் மூடத்தனமாக இந்த அநித்தியமான உலகத்தையும், இதிலுள்ள போகபாக்கியங்களையும் நம்பிப் பிறப்பிறப்பாகிய பெருந் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறோம்'' என்ற உணர்வு பிறந்து, சே இனி எல்லாக் கருமங்களையும் நிவர்த்திசெய்து எப்படி யாவது மோக்ஷமடைய வேண்டும் என்று திடவைராக்கியம் கொள்ளலே சுபேச்சையாகிய முதற் பூமியாகும்.

      2. விசாரணை: - மோக்ஷமடைய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவன் குரு, பெரியோர் இவர்களை அடைந்து சாத்திர விசாரணை செய்து ஞானத்தையடைய அப்பியாசித்தல் விசாரணையாம்.

3. தநுமானசி: - சாத்திர ஆராய்ச்சியாலும், குருவினிடம் கேள்வி கேட்டதாலும் உண்டான பலத்தால் பிரபஞ்சம் அநித்தியம் என்ற உண்மை தோன்றி, மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றிலுள்ள ஆசையை அறவே விடல் தநுமானசியாம்.

4. சத்துவாபத்தி: - மேற்கண்ட மூன்று பூமிகளின் அப்பியாச வலியால் சத்துவாசனை யுடைய மனதினிடத்தில் உண்மை யறிவுதித்தல். அதாவது, பிரபஞ்சமனைத்தும் சொப்பனம் போன்றதென உணர்ந்து சத்ரூபப் பிரம்மமே தானென வறிந்து, பிரம்ம சாக்ஷாத்காரத்தை யடைய அப்பியசித்தல் சத்துவாபத்தியாம்.

5. அசம்சத்தி: - ‘சம் சத்தி' என்றால் விஷயங்களில் சம்பந்தமுடைமை; 'அசம்சத்தி' என்பது அதற்கு ‘எதிர்மறை' விஷயசம்பந்த மின்மை. நான்காம் பூமியின் அப்பியாச வலியால் பிரபஞ்ச முதல் யாவும் அகண்ட பிரம்ம சொரூபமாய்க் காணும் அபரோக்ஷ அநுபவமடைந்து சாக்ஷத்காரமன்றி மற்ற மாயாகாரியமான எல்லா விஷயங்களின் சம்பந்தமும் உணர்வினின்று நிக்கிவிடல் அசம் சத்தியாம்.

6. பதார்த்தபாவனை: - வெளியிலும் உள்ளும் எவ்விதப் பொருள்களின் தோற்றரவு மில்லாதிருத்தல் என்பதாம். அதாவது, சமாதி அப்பியாச வலியால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமா யடைந்து திரிபுடி (காண்பான், காக்ஷி, காக்ஷிப் பொருள் என்பவை) யற்று இரண்டற்ற ஆனந்த    நிலை யடைதல் பதார்த்தபாவனையாம்.

7. துரியம்: - இது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது; திரிபுடி ஒழிந்த சாக்ஷாத்கார நிலையிலழுந்திப் பூரண மௌனமாய்த் தன்னாலும் பிறராலும் மகிர்முகப் படாமல் நிர் விகல்ப சமாதி கிலையை யடைவதே துரியம் எனப்படும்.

இந்த ஆறாம் பூமியாகிய துரிய பூமியையே முன்பு துரியாதீதம் என்றோம்; அதன் காரணத்தைக் கூறுகிறோம் கேட்பாயாக. முதல் மூன்று பூமிகளிலும் உலகத் தோற்றரவுண்டு; ஆகையால் அவை சாக்கிரமாகும். நான்காம் பூமியாகிய சத்துவாபத்தியில் பிரபஞ்சம் கனவு போற் றோன்றுமாதலால் அது சொப்பனமாகும். ஐந்தாம் பூமியின் அப்பியாசத்தில் யாவும் பிரம்ம சொரூபமாகத் தோன்ற உலகம் நழுவுமாதலால், அது சுழுத்தியாம்.   ஆனந்தானுபவம் உதிக்கும் ஆறாம் பூமி துரியமாகும். அதற்கப்பால் ஆனந்தா தீதமாய் ஒன்றும் தோன்றாத நிலையாகிய ஏழாம் பூமி துரியாதீதம் என்று கூறப்பட்டது; துரியாதீதம் எனின் துரியத்திற்கு அப்பாற் பட்டது என்பது பொருள்.

தேகத்தோடு கூடியிருக்கும் சீவன் முத்தர் அடைந்திருக்கும் துரியம் என்னும் பெயரையுடைய ஏழாம் பூமியைத் துரியாதீதமெனின் தூலதிருஷ்டி யுடையோர்க்கு மயக்க முண்டாகுமென்று கருதி, மேலோர் முதல் மூன்றையும் சாக்கிரமென்றும், நான்காவதைச் சொப்பன மென்றும், சுழுத்தியாகிய அசம்சத்தி என்னும் ஐந்தாம் பூமியோடு பதார்த்தபாவனை என்ற ஆறாவது பூமியைச் சேர்த்து அதைக் காடசுழுத்தி யென்றும் கூறி, ஏழாவதைத் துரியம் என்றனர். இந்த ஞானபூமிகளின் வேறுபாடுகளைச் சேர்ந்த விசேடம் இன்னு முண்டு, அவற்றைக் கூறக் கேட்பாய்.

(குரு ஞானபூமிகளின் விசேடணங்களைப் பின்னும் கூறுகிறார்)

      சுபேச்சை, விசாரணை, தநுமானசி என்ற முதல் மூன்று பூமிகளையு மடைந்தோர் அப்பியாசிகளாகும். அவர்கள் ஜீவன் முத்தர்களல்லர். அசம்சத்தி, பதார்த்த பாவனை, துரியம் என்ற பின் மூன்று பூமிகளில் ஏறினோர், வரன் வரியான், வரிட்டன் என்ற ஜீவன் முத்தர் பேதங்களாவர். சத்துவாபத்தி யென்னும் நடுப் பூமியிலுள்ளோர் பிரம வித்துக்களாகிய முத்தர்களாவர்.

      முதல் மூன்று. பூமிகளை மட்டும் அடைந்து நான்காவது பூமியின் அப்பியாசமின்றியே மரணமடைந்தோர், மேலான சுவர்க்க முதலிய பதவிகளை யடைந்து பிறகு நல்ல வமிசத்தில் பூமியிற் சனித்துக் கிரமமாக நான்காம் பூமி முதலியவற்றை யடைந்து மோக்ஷம் பெறுவார்கள்; அவர்கள் மயக்கத்திற்குக் காரணமான ஜன்மமடையார்கள். சுபேச்சையாகிய முதற் பூமி கைவருவதே பிரயாசை; மற்றவற்றிற்கு வழியாகிய அம் முதற் பூமி கை வந்துவிட்டால் முத்தியும் கிடைத்ததாகும்.

      இவ்வுலகில் எவரேனும் இஞ்ஞான பூமிகளில் முதற் பூமியிலாவது, இரண்டாம் பூமியிலாவது அப்பியாசமுடை யொரா யிருந்தால், அப் புருடர் மிலெச்சரா யிருந்தாலும் சரி, முத்தரே யாவர். சற்குரு பாதத்தின் மீதாணை இது சாத்தியமே. இது தவறென்று கூறுவோர் நாசமடைவார்கள். பாரபட்சமற்ற சுருதி வாக்கியங்களில் சந்தேகங் கொள்ளாதே. சுருதி உபதேசிக்கும் வாக்கியத்தில் சந்தேகங் கொள்ளாதே. சுருதி உபதேசிக்கும் வாக்கியத்தில் உறுதியுடையவனாய், அகம் பிரம்மம் (சிவோகம்) என்று அநுசந்தானித்து பிரம்மமாகவே யிருந்து சந்தேக மொழிந்திடு வாயாக.

(சீடன் வரணாச்சிரம விஷயமாக எழுந்த ஐயத்தைப் பற்றி வினவுதல்)

சீடன்: -      நெல்லிலிருந்து உமியை வேறு பிரித்து அதை அரிசி யாக்கியது போல், அவித்தையாகிய அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருந்த அடியேனை அஞ்ஞானம் நீங்கிப் பிரம்ம சொரூபமாகும்படி அருள் செய்த பரமாசாரியரே! இந்த ஞான பூமிகளில் ஒன்றிரண்டை அடைந்தோரும், மிலேச்சராயினும். முத்தராவார் என்றருளினீர்களே; மனைவியையும் குடும்பத்தையும் விட்டுச் சன்னியாசியானா லொழிய முத்தி கிடைக்கா தென்று சிலர் கூறுகிறார்களே, அச்சந்தேகத்தை அகற்றி வைக்கப் பிரார்த்திக்கிறேன்" என்றான்.

குரு: -       புத்திரனே! நீ கேட்ட சங்கை நல்லதே; சந்நியாசம் நால் வகைப்படும். 1. குடீசம், 2. பகூதகம், 3. அம்சம், 4. பரம அம்சம், என்பவையாம். குடும்பத்தை விட்டு நீங்கும் சந்நியாசத்திற்கு மனதில் உண்டாகும் விராகம் காரணமன்றிக் காஷாய வஸ்திரம் முதலான வேடம் காரணமல்ல.

(விராகம் மூன்று வகை யெனக் கூறல்)

புத்திரனே! நாம் கூறிய விராகம் மந்தம், தீவிரம் தீவிரதரம் என மூன்று வகையாகும்.

1. மந்தவிராகம்: - தாரம், புத்திரர் முதலியவர்கள் நசித்துப்போனதாலோ, குடும்பத்தில் நேர்ந்த சச்சரவு முதலியவற்றாலோ, குடும்பத்தை வெறுப்பதால் உண்டா கும் விராகம் மந்த வைராக்கியமாம்.

2. தீவிரவிராகம்: - இந்த உடல் உள்ளளவும், நமக்கு மனைவி வெறுத்துவிடுவது, தீவிர வைராக்கியம்.

3. தீவிரதா விராகம்: - இவ்வுலக போகங்களும் தேவ லோகாதி போகங்களும் அநித்தியம், துக்கம், மித்தை யாதலின் நமக்கு அவை வேண்டாமென்று வெறுத்து விடுதல் தீவிரதர வைராக்கியமாம்.

இவற்றுள் மந்த வைராக்கியத்தில் எவ்விதச் சந்நியாசமும் சித்திக்க மாட்டாது. ஏனெனில், இதில் இல்லச் சுகத்தை இவன் வெறுக்கவில்லை. குடும்பத்தி லுண்டான துயரம் தொல்லை முதலியவற்றைச் சகிக்காது குடும்பத்தை விடுகிறான்; ஆகையால் குடும்ப இச்சை இவனை டொழிய வில்லை.

தீவிர வைராக்கியத்தில் குடீசகம், பகூதகம் என்ற இரண்டு விதங்களுண்டு. எங்கும் யாத்திரை செய்யத்தேக திடமில்லாதவர்க்குக் குடீசகமும், யாத்திரை செய்யச் சக்தியுடையோர்க்குப் பகூதகமும் ஆன்றோர் விதித்திருக்கின்றனர்.

தீவிரதர வைராக்கியத்தில் ஹம்சன் என்றும், பரமஹம்சன் என்றும் இருவித சந்நியாச அதிகார முண்டு. ஹம்ச சந்நியாசிக்கு முத்தி பிரம்மலோகத்தில் கிட்டுமே யன்றி இந்த உலகில் கிட்டாது. பரமஹம்ச சந்நியாசிக்குத் தத்துவ ஞானத்தால் இவ்வுலகிலேயே மோக்ஷம் கிடைக்கும். பரமஹம்ச சந்நியாசிகளிலும் சிஞ்ஞாசு, ஞானவான் என்ற இருவித முண்டு; இவர்களில் சிஞ்ஞாசு என்பவன் ஞானபூமிகளில் சுபேச்சை, விசாரணை, துநுபமானசி என்ற முதல் மூன்று பூமிகளின் அப்பியாசமுடையோன். ஞானவான் என்போன் மேல்பூமிகளில் சென்று ஜீவன் முத்தி யடைந்துள்ள மேலோனாகும்.

சிஞ்ஞாசுவிலும் இருவிதம் உண்டு; அதாவது சிலர் மனைவி மக்கள் முதலிய எல்லாப் புறப்பற்றுக்களையும் துறந்து, அதிதிகளாக விருந்து பிரம்மஞானமடைவர். யாதாயினுமோர். காரணத்தால் புறச்சந்நியாசம் கொள்ள    முடியாத சிலர், பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணாசிரம விதிப்படி இல்லறத்திலிருந்து   கொண்டே, அகத்துறவு பூண்டு, குருவை யடைந்து அப்பியாசத்தால் ஞானமடைவர்.

இவ்வாறு சாத்திரங்களில் கூறப்பட்டிருப்பதோடு, உலகில் பிரத்தியக்ஷ அனுபவமாகவும் கண்டிருந்தும், உன் மனதின்கண் ஐயமுண்டாவதென்ன? சுருதி யுக்தி யனுபவங்களால் சந்தேகத்தை யொழித்து ஆனந்த நிலையை யடைவாயாக.

     [இதனால், மோக்ஷத்தை யடைதற்கு ஆசிரமம் காரணமல்ல; இல்லறத்திலிருப்பினும் சந்நியாசியாயினும், உலகில் எத்தொழில் செய்யினும் மனதில் தீவிர வைராக்கியமடைந்து, அகத்துறவு பூண்டு, ஞானபூமிகளின் அப்பியாசத்தால் ஞானத்தைப் பெற்றால் எவரும் மோக்ஷமடையலா! என்று விளங்குவதுணர்க.]

      கடலில் அலை நுரையாதிகள் உண்டாகி அதன்கண்ணே நிலைத்திருப்பதுபோல், பிரம்மத்தின்கண்ணே இப்பிரபஞ்சம் தோன்றி நிலைத்திருக்கிறது. இப்பிரபஞ்சம் மனத்தாற் பாவனை செய்தே யுண்டானதாகும். ஆராய்ந்து பார்க்கின், இப்பிரபஞ்ச மனைத்தும் நிலைத்து நிற்பது அறிவின் கண்ணே யாகும். அறிவே பிரம்ம சொரூபம். எங்கும் நிறைந்து நிற்கும் அறிவு சொரூபமாக விருந்து, ஆனந்தத்தை யனுபவிப்பாயாக.

சீடன்: -      எந்தையே! எவ்வாறு நிலையிலிருந்தால் அத்தகைய ஆனந்த அனுபவம் அடியேற்கும் புலப்படும் என்பதை விளக்கியகுளப் பிரார்த்திக்கிறேன்.

ஆசான்: -   சாக்கிரம், சொப்பனம், சுழுத்தியாகிய இம்மூன்று அவஸ்தைகளிலு முண்டாகும் விர்த்தியை யொழித்து, அறிவு சொரூபமாக விருப்பாயாயின்   ஆனந்தம் பெறலாம்.

சீடன்: -     சமஸ்கார வசத்தால் அந்தக்கரணத்தி னின்றெழும் விருத்திகளை யெல்லாம் அடக்குவதற்கு அடியேற்கோ ருபாயம் அருளல் வேண்டும்.

ஆசான்: -    ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை யடக்கி நீ அவற்றிற் கரசனாகி அவை யுனக்கு அடங்கி ஆட்களாக இருக்கப் பெற்றால் சகல வாசனைகளும் தானே யடங்கும்.

அதுவுமன்றி (அகந்தை, மமதை, காமக்குரோதாதிகள் முதலிய) விருத்திகளை யடக்க வேறு உபாயங்களுமுண்டு.

அவற்றில் இரேசக பூரக கும்பங்களால், துருத்தி போல் வீசிக்கொண்டிருக்கும் பிராணவாயுவை யடக்கினால் மனோவிர்த்திகள் அடங்கும். இது ஒருவித யோக மார்க்கமாகும். இப்படிச் செய்ய பிரியமில்லையேல், சரீரமாகிய அவித்தையை நாசஞ்செய்யின் மனோவிர்த்திகள் யாவும் தானே யடங்கும்.

      இக்காரண சரீரத்தை யெவ்வாறு நீக்குவதென்னில், வேதம் பொய் கூறாதாகையால் அதன் வாக்கியங்களை மனதில் தரிக்கச்செய்து,'' பரிபூரண சொரூபமாகிய என்னிடத்தில் இப் பிரபஞ்சங்கள் யாவும் ஆரோபமாகத் தோற்றிக்கொண் டிருக்கின்றன என் மற் நிச்சயம் வந்து விட்டால், அவித்தை எங்குமில்லாது ஒழிந்துபோம்.

     [விருத்திகளடங்கள் என்பது அலையுமனம் அகத் தடங்குதலேயாகும். அதாவது மனநாசமே வேண்டுவது. மனம், வாயு அம்சமானதால் அதற்கு அலையும் சுபாவமே அதிகமாக வுள்ளது. வாயுவடங்கின் மனமடங்கும் என்பது ஒரு கொள்கை. ஆனால் அது யாவர்கும் ஒவ்வாது. வாயு வடங்கி யிருக்கிற மட்டுமே மனம் அடங்கி யிருக்கும். அது ஒரு குதிரை ஓடாதபடிக் கடிவாள வாரை யிழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போலாகும். நாம் மறுபடி வாரைத் தளர்த்திவிட்டதே குதிரை ஓட ஆரம்பிக்கும். அதுபோல் மறுபடி சுவாசம் இயங்கத் தொடங்கியதே மனம் பழையபடி அலையத் தொடங்கும். வாயுவைப் பற்றிக் கவனிக்காமலே மனதை யடக்கலாகும். மனம் சூக்கும பஞ்ச பூதங்களின் சத்துவகுணத்தி லுற்பத்தியானது. பிராணவாயு இரஜோ குணத்தி லுண்டாயது. அவித்தையை அழித்து ஞானம் பெறுவதற்கு மனோலயமே அவசியம் வேண்டுவதன்றி, வாயுவடக்கம் அல்ல. மனோலயத்திற்குப் பின்பே அவித்தை யுள்ளது. அவித்தையே அஞ்ஞான மென்பதும். அவித்தை நீங்கியதே ஆன்மதரிசன முண்டாகும். அதாவது ஞானோதயமாகும்; ஆனால், மனம் சதா அலைந்து கொண்டே யிருப்பதால் அதை யுபாயத்தால் அடக்கவேண்டும்; ஈசுவர அருளின்றி அவித்தையை அழிக்க முடியாது. பக்தியால் மனமும் சீக்கிரம் ஒரு நிலையில் நிற்கும்; ஈசுவர அருளும் கிட்டில் அவித்தையை எளிதிலழிக்க அனுகூல முண்டாகும். ஆகையால் பக்தியோடு கூடிய அப்பியாசமே ஞானமடைய இன்றியமையாத சாதனமாகும்.]

(சீடன் மனம் அலைவதால் எவ்வாறு மேற்கூறியபடி தாரணை செய்தல் என வினவுதல்)

சீடன்: -      தேசிகமூர்த்தியே! ‘பரிபூரணமான என் மேல் ஆகாசாதிப் பிரபஞ்சம் யாவும் தோற்றரவு மாத்திரமே' என்ற நிச்சயத்தோடு நிற்க வேண்டுமென வருளினீர்கள். உலக விவகாரங்களால் மனம் சதா அலைந்து கொண்டே யிருக்கும் போது தாங்க ளருளியபடி எவ்வாறு நிற்க முடியும்?

ஆசான்: -   "என்னையன்றி யன்னியமாய் ஈண்டொன்றுமே யில்லை. இங்கு நாமரூபமாகத் தோற்றிக்கொண்டிருக்கும் பிரபஞ்ச மனைத்தும் உண்மையில் என் மனமே. அலை திவலை யாதிகள் நீரையன்றி வேறாக இல்லை. அதுபோல் இவை யனைத்தும் என்னையன்றி யில்லை. நானே. இத் தோற்றமனைத்தும் ககனாரவிந்தம் போலும், கானல் நீர்போலும், கனாப்போலும் கற்பிதமேயாகும்'' என்று நிச்சயித்து, நான் சித் சொரூபமே என்று திடத்தோடிருந்தால் அவித்தை யழிந்துபோம்.

"தோன்றிடும் பொருள்க ளுண்டாய்த் தோன்றியே யின்பமாகித்

தோன்றிடு மதனா லந்தச் சொரூபமே யென்று கண்டு

தோன்றிடுஞ் சொரூபந் தன்னிற் றோன்றுமீ தசத்தே யென்று

தோன்றிடுஞ் சொரூபந் தானாய்த் துளக்கமற் றிருந்தான் வேந்தன்" (குமாரதேவர்).

''உலகமே பிரப்பிரம முரைக்கு மந்தப் பிரமநாம்

அலகில் கலை யுணர்ந்தாலு மருத்த மிதே யறிகண்டாய்

*     *     *     *     *     *     *     *                 வள்ளலார்.
    

 

[ஊன்றிப் பார்க்கின் யாவும் ஆன்ம சொரூபமே. என விளங்கும். இப் பிரபஞ்சம் மனத்தால் சிந்தித் துண்டானதே. அதாவது மனதினின்றே பிரபஞ்சம் உதித்தது. மனமின்றேல் பிரபஞ்ச மின்றாகும்... உண்மையில் மனம் ஜடம். அப்படி யிருக்க அது எப்படி சலிக்கிற தெனின், அது ஆன்மாவின் சக்தியாலேயே அசைகிறது. ஏககாலத்தில் நான்'என்பதையும் பனைம் என்பதையும் காண முடி 'நான்' என்பது தன்னை மறந்தாலே, மனம் என்பது முளைக்கிறது. மனதின் சலனத்தை நிறுத்தி அதன் அங்குரமாகிய நினைப்பு என்பது எங்கிருந்து முளைக்கிற தென்று ஆழ்ந்து நோக்கின், அதன் பிறப்பிடம் நான் என்ற ஆன்மாவே யென்று விளங்கும். தாயுமானவர் மனதை நோக்கி "நின்ஜன் மதேயத்தில் நீ செல்லல் வேண்டும்" என்றார். அவரே,

"விரிந்த மனமொடுங்கும் வேளையி னானாகப்

பரந்த வருள்வாழி பதியே பராபரமே"

 

(அதாவது மனம் ஒடுங்கியவிடத்தில் ஆன்மதரிசனம் தோன்றும்) என்றும் அருளினர்.

ஆகையால் யாவும் ஆன்மாவையன்றி யில்லை. எல்லாம் ஆன்ம சொரூபமே. அலை திவலை நுரையனைத்தும் நீரேயாகும். சட்டி, குடம் என்ற மண் பாண்டங்கள் பல உருவங்களையும் பல பெயர்களையும் உடைத்தா யிருந்தாலும் யாவும் மண்ணே யாகும். இவ்வாறு யாவும் ஆன்மசொரூபமேயென அனுபவமா யறிந்தவனே ஞானியாகும்.]

எங்கும் நிறைந்த பரிபூரண சொரூபமாகிய சித்தே நான் என்று உறுதியை மறவாதிருந்தால். என்ன எண்ணினாலும் என்ன செய்தாலும் அவற்றால் ஒரு கெடுதியும் உண்டாகாது. நித்திரையினின்றும், விழித்தபின், கண்ட கனவு பொய்யென்று தானே தோன்றி விடுவதுபோல் யாவும் மித்தையாகும். "பரமானந்த பரிபூரணனே ஆன்மாவாகிய நான்" என்பதே சத்தியம்.

[ஆத்ம தரிசனத்தால், தான் ஒரு கிரியையும் செய்பவனல்ல, ஒன்றோடும் சம்பந்தப்பட்டவனல்ல, உணர்ந்து அத் திட அனுபவத்தோடு இருப்பவனுக்கு 'நான்' என்ற அகங்காரமே யில்லையாதலின், கனவுபோல் உலக விவகாரங்களைச் செய்யினும் அவற்றால் ஒரு பாதகமும் உண்டாகாது. ஆனால் வாயால் மட்டும் நான் பிரம்மம் என்று சொல்லிக்கொண்டால் போதாது. மருந்து மருந்து என்று கூறிவிட்டால் வியாதி நீங்கிவிடாது, மருந்தை யருந்தினாற்றான் நீங்கும்.

                ''சத்து மசத்துஞ் சதசத்து நீயல்ல

      சுத்த சிவ நீ யென்று சொல்லினான் - மொய்த்தெழுந்த

      கல்லாலின் கீழிருந்து கதிகாண நால்வர்க்குஞ்

      சொல்லாமற் சொன்ன துரை."                      (வள்ளலார்)

 

      சிலர் நாம் பிரம்மம் என்று தெரிந்து கொண்டால் அவ்வளவே போதும். பிறகு என்ன செய்தாலும் பாபமில்லை என்று எண்ணிக்கொள்கிறார்கள். இத்தகையோரால் தான் சிலர், வேதாந்தம் "நாமே கடவுள், நம்மையன்றி வேறு கடவுளில்லை” என்று கூறுகிறதெனத் தவறெண்ணம் கொண்டிருக்கிறார்கள். வேதாந்தம் அவ்வாறு கூறவில்லை. முதலில் ஈசுவரனிடம் பக்தி நிலைத்து அவனை அடைவதாகிய பாக்கியமே வேண்டுமென்ற அடங்கா ஆவல் கொண்டு இவ்வுலக போகங்களும், இந்திரன் பதவி முதலிய விண்ணுலக போகங்களுமாகிய யாவும் அநித்தியம், ஜடம், துக்கம் என்று வெறுத்து ஆசை ஒழிவால் மனதொடுக்கம் வந்து, ஈசுவரனை எப்படி யடைவதென்ற ஏக்கங்கொண்டிருக்கும் ஒருவனுக்கே வேதாந்தம் "கடவுள் எங்கோ தூரத்திலில்லை எங்கும் நிறைந்த அவர் உன்னுள்ளேயே யிருக்கிறார்; அவரிலேயே யிருக்கிறாய். நீ அவர் அம்சமே. நீ உன் ஆன்மாவைக் கண்டால் ஈசுவரனுடைய உண்மைச் சொரூபத்தைக் காண்பாய். ஏனெனில் இரண்டும் இனத்தில் ஒன்றே. நீ அவனில் ஒரு பாகமே; நீ அந்தச் சச்சிதானந்தப் பிரம்மமே" என்று கூறியதேயன்றி வேறில்லை. அகம் பிரம்மாஸ்மி அதாவது "ஆன்மாவே பிரம்மமா யிருக்கிறது" என்ற வேத வாக்கியப்படி ''நாம் பிரம்ம சொரூபமே'' என்ற திடம் வராமல், நாம் வேறு பிரம்மம் வேறு என்ற புத்தி யிருக்கு மட்டும் ஒருபோதும் முத்தி கூடாது.

கடலோடு சேர்ந்த குடநீர் கடலேயாவதன்றிக் குட நீராய்ப் பிரிந்து நிற்பதில்லை. பாலோடு சேர்ந்த நீர் பாலே யாகும். அதுபோல் பிரம்மத்தோடு சேர்ந்த ஆன்மா பிரம்மமே யாகும்.

“மாசறப் படித்தா னேனு மயலறத் தெளிக்தா னேனு

மாசறத் துறந்தா னேனு மஞ்செழுத் துணர்ந்தா னேனு

     மீசன்வே றியான்வே றென்னு மிருமையுங் கழலானாகித்

பாசமுங் கழல்வ தின்றாம் பதித்துவந் தானுமின்றே.”      (வள்ளலார்)

 

“பாலோடு சேர்ந்த நீர் பாலாகு மாக்கது போல்

வாலறிவ னைச்சேர்ந்த மன்னுயிர்கள் – வாலறிவன்

ரானாகி நிற்பதல்லாற் றண்டாத வைம்பாச

ஆனாகி நில்லா வுவந்து"

 

“அரசன் மகனரச னாகிநின்றாற் போலப்

பரமசிவ னிற்றோன்றும் பல்லுயிரும் -- பரம

சிவனாகி நிற்பதல்லாற் சீவனாய் நில்லா

சிவனாணை வுள்ளே தெளி.”                             (வள்ளலார்)

 

அந்த நிலைமை ஒருவன் அடைந்த பின் “நான் பிரம்மமா யிருக்கிறேன்" என்று கூறத்தக்க நிலையல்ல அப்படிக் கூறுகிறவன் கண்டிப்பாய் அந்த நிலையிலில்லை. அங்கு 'நான்' என்பதே பில்லை யெனில், ''நான் பிரம்மமா   யிருக்கின்றேன்" என்பது எங்குள்ளது. சிரச்சேதம் செய்யப்பட்டவன் தலை "என் தலையை வெட்டி விட்டார்கள்” என்று கூறுமோ. அதுபோல பிரம்மத்தோடு கலந்த நிலை ஒருவரும் இன்னவிதமானதென்று கூறொணாதது. ஒன்றோ இரண்டோ என்று கூற வழியில்லாதது. மனதிற் கெட்டாத தெனின் வாக்கால் கூறுவ தெங்ஙனம்.

குருவும் அதை அடைய வழி காட்டுகிறாரே யன்றி நேரில் அந்த நிலையைக் காட்டமுடியாது. குரு ஆன்மாவை அறியும் வழியைக் காட்டுகிறார். எவனும் தனக்குள் இருப்பதைத்தானே அறிய வேண்டும். ஆன்மாவை அறிந்தபின் பரமான்மாவை அவனவனே யறிந்துகொண்டு அந்த ஆனந்தக் கடலில் முழுகித் ‘தான்' என்ற போதம் அற்று ஐக்கிய நிலை பெறவேண்டியதே.

"நீயற்ற அந்நிலையே நிட்டை   *     *     *     *”

“நானெனவும் நீயெனவும் இருதன்மை நாடாமல் நடுவே சும்மா

தானமரும் நிலையிதுவே சத்தியம் சத்தியம்  *     *    

 

சாத்திர ஆராய்ச்சி செய்து ஞானத்தை அடைவது விசேஷமே யெனினும், சாத்திரங்களை வாசிப்பதால் மட் டுமே ஞானம் கிட்டி விடாது. சாத்திர ஆராய்ச்சி செய் தாலும் செய்யாவிடினும் தனியே உட்கார்ந்து அப்பியா சம் செய்ய வேண்டும். ஜடத்தின் மூலமாகவே சித்தை யறிய வேண்டும்; மாயையை அறிந்த பின்பே பிரம்மத்தை அல்லது ஆன்மாவை அறியலாகும். மாயை யென்பது மனதையன்றி வேறில்லை யாகையால், மனதை எதிரிட்டறிந்தால் மனம் மறைந்து விடும். ஒரு செடியின் வேரைப் பிடுங்கிவிட்டால் அச் செடி எவ்வாறு அழிந்துபோமோ அவ்வாறே, மனம் முளைக்குமிடத்தை அறிந்தால் மனதின் உருவம் நாசமடையும்; ஆன்மதரிசனம் கிடைக்கும்; அதாவது நமது உண்மைச் சொரூபம் விளங்கும். அந்தச் சிற்சொரூபமே நாம் என்ற உறுதி மறவாதிருந்தால், அங்கு நான் எனதென்ற பற்றும், நாம் ஒன்றைச் செய்
 கிறோம் என்ற உணர்ச்சியும் இல்லை யாதலால், வினை வழியே எக் கிரியை நிகழினும் அது ஆன்மாவைப் பாதிக்காதென்பதாம். அந்த நிலையில் உலகத் தோற்றரவு கனவுபோற் றோன்றும்.

"காண்பதுங் கேட்பதுங் கருத்துஞ் சொப்பனம்

பூண்பதும் புனைவதும் புசிப்புஞ் சொப்பனஞ்

     சேண்படு நாகமுஞ் செகமுஞ் சொப்பனம்

     வீண்படு மிவைக்கெலாம் விசுத்த னானரோ."        (வள்ளலார்)


(சீடன் தனது திருப்தியை வெளியிடல்)

நான் கடந்த பல ஜன்மங்களில் உடலையே கானென்று நம்பியிருந்தேன். இழிந்த பிறவிகளாக இருந்த அவை யனைத்தும் இப்போது சற்குருவி னருளால் கானலிற்றோன். என்றும் சலம்போல் மித்தையெனக் கண்டு ஆன்மாவே கானென நம்பி விசுவாசித்து ஈடேறினேன்.

[பல ஜன்மங்களில் என் நிஜசொரூபத்தை நானறியாமல் தேகமே நானென்ற அஞ்ஞானத்தில் அழுந்திக்கிடந்து பிறப்பதும் இறப்பதுமாகிய பவசாகரத்தில் அல்லற் பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது குரு வழி காட்ட, தேகாதிப் பிரபஞ்சமனைத்தும் கானல் நீர்போல் ஆரோபமாகிய மித்தை யென்றுணர்ந்து, என் நிஜசொரூபத்தை நான் அறிந்து, ஜனன மரண மற்ற பேரின்ப நிலையடைந் துய்ந்தேன் என்பதாம்.]

 

மனச் சாட்சி

மனம் என்ற வார்த்தை யாவர்க்கும் தெரிந்ததேயெனினும், அதனுடைய சொரூபத்தை யாவரும் அறிந்திருக்கிறார் களென்று கூறுவதற்கில்லை. சாதாரணமாக மனம் என்பது. வேறு நாம் என்பது வேறு என்பதை அறிவது யாவராலும் சுலபமாக ஆகிற காரியமல்ல.

       ஒன்றை நினைக்கிறதும் மறக்கிறதுமே மனதின் முக்கியமான தொழில். அந்த இரண்டு தொழில்களில் மனதின் சொரூபம் முழுமையும் அடங்கி யிருக்கின்றது. காமக் குரோதாதி குணங்கள் அனைத்தும் இடையில் வந்து சேர்ந்தனவே. இந்த மனதின் காரியங்க ளனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற சாட்சி யொன்றிருக்கிறது. அதற்கே மனச் சாட்சி யென்று பெயர். ஆகையால் மனச் சாட்சி யென்றால் மனமாகிய சாட்சி யென்று அல்வழிச் சந்திப் பண்புத்தொகையில் பொருள் கொள்ளாமல் மனதின் சாட்சி அல்லது மனதிற்குச் சாட்சி யென்று வேற்றுமைச் சந்தி   6 - ம் வேற்றுமை அல்லது 4 - ம் வேற்றுமைத் தொகையில் பொருள் கொள்ளல் வேண்டும்.

      ஒருவன் ஒரு காரியத்தைச் செய்யும்போது உள்ளுக்குள்ளே யிருந்து கொண்டு "அந்தோ இது பாபம்'' என்று ஒரு சிந்தனை கிளம்புகிறது. இதுதான் மனச் சாட்சி. தவறான ஒரு காரியத்தைச் செய்யக் கருதும்போது அல்லது செய்யும் போது "இது கெட்ட செய்கை" என்று உள்ளிருந்து ஒருவர் சொல்வதுபோல் தோன்றுகின்றது. இதுவே மனச் சாட்சி. இந்த மனச் சாட்சிக்கு நல்லது கெட்டது, பாபம் புண்னியம் இவற்றைப் பகுத்தறியும் சக்தி யுண்டு. மனதின் வேலைகளனைத்தையும் இது பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இது சாட்சி மாத்திரமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதே யன்றி ஒரு தொழிலையும் செய்வதன்று.

      இதுவே அறிவு என்பதும். இச் சாட்சியை அறியாமல் மனம் ஒன்றையும் செய்ய முடியாது. மனம் தன்னிடமுள்ள பொறாமை, வஞ்சனை, சூது, துரோகம் எதையும் இச் சாட்சியினிடமிருந்து மறைத்து வைக்க முடியாது.

      இச் சாட்சியே மனதிற்கு உயிர் என்றும் கூறலாம். அதாவது இதன் பிரகாசம் மனதில் தாக்கினால் மட்டுமே மனம் தொழில் செய்ய வல்லது. மனம் சத்துவம், இரஜசு தமசு என்ற முக்குணங்கள் பொருந்தியது. ஆனால் சத்துவமே அதன் இயற்கைக் குணம். அதாவது மனம் சத்துவ சொரூபம்; மற்ற குணங்கள் வந்து கலந்தன. அச்சத்துவ குணம் தன் வரையில் பிரிந்து நின்று விட்டால் மற்ற இரண்டு குணங்களும் நில்லா. இச்சத்துவ பாகமே சாட்சி யாகும்.

      சாட்சியைக் கண்டு மனதைத் தேடினால் மனம் இராது. சாட்சி மறைந்தால் தான் மனம் முளைக்கும். இதனால் மனதின் சத்துவ பாகமே சாட்சியென்று தெளிவாக அறியலாம். ஒருவன் தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் இச் சாட்சியின் சம்மதத்தைக் கேட்டுச் செய்வானாயின் ஒருபோதும் தவறான காரியத்தையாவது பாபத்தையாவது செய்யமாட்டான். இச் சாட்சியே அறிவின் சொரூபம். இது பரிசுத்தமானது. இதன் இண்மைச் சொரூபத்தை யறிவதே தன்னை யறிவதாகும். எப்படி யெனில் இதுவே ஆன்மாவாகிய தான்.

      சாட்சியாகிய இந்த நிலையை ஒவ்வொருவம் ஒவ்வொரு சமயத்தில் காண்பதுண்டு. ஆனால் அது மின்னல் போற் ஒரு கணம் தோன்றி மறு கணம் மறையக் காண்கிறார்கள்.
 சமயம் வரும்போது'' என் மனச் சாட்சிக்கு இந்த விவகாரம் ஒப்பவில்லை"என்றும், ''என்மனச் சாட்சியாய்க் கூறுகிறேன்" என்றும் வாயால் மொழிகிறார்களே யன்றி நிலைத்திருக்கக் காண்பதில்லை. ஆகையால் மனச் சாட்சியைக் கவனிக்காமலே மனம் போனபடி எதையும் செய்து விட்டுக் கெட்ட கர்மங்களுக் காளாகிறார்கள். அப்படி யொரு சமயம் கவனிப்பதாயினும் ஒரு காரியத்தைச் செய்துவிட்ட பின் கவனித்து மனத்தாபப்படுகிறார்கள்.

     முமூட்சு ஒருவன் மட்டும் அம் மனச்சாட்சியின் சொரூபத்தை யறிய முயன்று, அதுவே தான் என்றறிந்து அதே நிலையில் சாட்சி மாத்திரமாக நின்று விடுகிறான். அந்த நிலையில் மனதின் உருவமில்லை. சத்துவகுண மாத்திரமாய்ச் சேடித்துள்ள அருவமனமே கனவுபோல விவகாராதிகளைச் செய்யும் சாட்சி மாத்திரமா யிருப்பதால் கருமங்கள் பற்றாது. சாட்சி போல் எனில் தான் இருக்கும் தேகத்தின் செயல்கள் முதல் யாவும் தனக் கன்னியமாகவும், நடக்கும் எல்லா விவகாரங்களுக்கும் நான் சாட்சி மாத்திரமாய் இருப்பதன்றித் தனக்கு எவற்றிலும் ஒரு சம்பந்தமு மில்லையென்றும் தான் ஒரு தொழிலையும் செய்யாமல் யாவற்றையும் நோக்கிக்கொண்டு மட்டும் இருப்பதாகவும் இதே தனது இயற்கைச் சுபாவமாகிய நிலைமை யென்றும் பிரத்யக்ஷானுபவமாகப் புலப்படும்.

      இந்த நிலையில் திரிபுடியுண்டு. அதாவது காண்பான், காட்சி, காட்சிப் பொருள் (The Knower, The Known and the Knowledge) என்ற மூன்று முண்டு. இதற்கு மேலான நிலைமையே அத்துவிதானந்தத்தை யளிக்கும் இரண்டற்,) பரிபூரண சாக்ஷாத்காரமாகிய நிலையாம். நாம் இங்கு சாட்சியாகிய நிலையைப் பற்றி மட்டுமே கூற முயன்றதால் அம். மட்டோடு நிறுத்துகிறோம்.

      ஒவ்வொருவரும் நம்மால் கூடியவரையில் இம் மனச் சாட்சியின் சொரூபத்தை யறிய முயல்வதோடு நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தைம் மனச்சாட்சியின் சம்மதம் பெற்றுச் செய்யப் பழக வேண்டும். இப் பழக்கத்தால் படிப்படியாய் மனச்சாட்சி யுண்டாவதை யனுபவத்தில் காணலாம். எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரியப் பிரார்த்திக்கின்றோம்.

      [நாம் என்பது உண்மையில் பரிசுத்தமாய்ச் சலனமின்றி எதிலும் தாக்கற்று சாட்சி மாத்திரமாக விருக்கும் கூடஸ்தனாகிய ஆன்மாவாம். இந்த ஆன்மா மூலாஞ் ஞானமாகிய அவித்தையால் தன் நிஜவடிவை மறந்துவிட்டது.  "பிரமமாந் தனை மறந்த பேதைமையே யஞ்ஞானம்" என்று இந் நூலாசிரியரே முன்படலத்தில் சீவருக்குரிய அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷம், அபரோக்ஷம், துக்க நிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்ற சத்தாவஸ்தைகளை விவரிக்கு மிடத்தில் கூறியுளர். இவ்வாறு தன் உண்மையை மறந்த ஆன்மா, பிறகு தேகான்மப்பிராந்தியடை அதாவது கொஞ்சகால மிருப்பதும் பிறகு அழிவதுமாகிய சுபாவமுடைய தேகமே தானென மயங்கி விடுகிறது. நான் சீவித்திருக்கிறேன். இறந்து போகிறேன் என்ற விவகாரங்கள் தனக்குரிய சுபாவமென்று கொள்கிறது. இதனால் இப்போது இதற்குச் சீவன் என்று பெயர் வந்தது. பரிசுத்தமானாக்ஷி மாத்திரமாக விருக்கும் ஆன்மாவே கூடஸ்தன். அவித்தையோடு சம்பந்தப்பட்ட ஆன்மாவே சீவன். ஆகையால் இச் சீவனே அஞ்ஞானம் நீங்கியபோது கூடஸ்தனாகிறது. வெல்லம், கற்கண்டாவது போல்.

      அனுபவமாகவே, உலகில் பெரும்பாலார் நான் என்பது தேகம் என்றே அல்லது தேகத்தோடு சேர்ந்த ஒன்றென்றே கருதி யிருக்கக் காணலாம். இம் மந்த அதிகாரிகள் அறிவிற்கு, தேகத்திற்கு அன்னியமாய் ஒரு பொருளிருப்பதாக உணரும் ஆற்றலில்லை. இந்த அஞ்ஞானத் தடிப்பு அவரவர்கள் கர்மத்தினளவாகவிருக்கும். தேகமே நாமென்னும் அஞ்ஞானமே பிறவிப் பிணிக்குக் காரணமாதலால் உடலை நானென்று நம்பி அநேக ஜனனங்களில் உழன்றேன், என்றார்.

      குரு உபதேசத்தால் அஞ்ஞானம் நீங்கி ஆன்மதரிசனம் உண்டாகும் போது இது காறும் ஆவரண மறைப்பால் சத்தியமாகத் தோன்றிய தேகாதிப் பிரபஞ்ச மனைத்தும் கானல் நீர் போலும், கனவு போலும், பொய்யாய்ப் போய்விடும். அஞ்ஞான நீக்கம் பெற்ற ஆன்மாவிற்கு மட்டுமே மாயை யொழிவதால் உலகம் வெந்துபோன கயிறுபோல தன்னை மயக்கச் சக்தியற்றதாகவும் சித்திரப் படத்திலுள்ள உருவங்கள் போல் தோற்ற மாத்திரமாகவும், சொல் மாத்திரமாகவும், அதனிடத்திருந்த அனுபவங்களனைத்தும் கனவு போலவும் தோன்றும். மற்றையர்க்கெல்லாம் உலகம் இருந்து கொண்டேதானிருக்கும்.

“தோன்றி விளங்கும் பொருளெல்லாம் தொல்வே தாந்த விசாரணையில்

      ஊன்றி நோக்கி யனுதினமும் யூகமதனிற் பரிச வித்தால்

தோன்றி விளங்கு மறிவொன்றே சொன்மாத் திரமாய் விடுமுலகம்

ஊன்றி நோக்கா தவர்கட்கே யுளது போலத் தோன்றியிடும்.”      (குமாரதேவர்)

 

பொய்யென்றறிந்த பின்னும் தோன்றிக் கொண்டிருப்பதற்கே கானல் நீர் திருட்டாந்தம். கானல் நீராகிய பேய்த்தேரைக் கண்ட ஒருவன் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பெரிய நீர்நிலையிருக்கிறதென் றெண்ணி ஓடிப் போய்ப் பார்த்து அது பொய்த்தோற்றம் என்று கண்ட பின்னும், மறுபடி பார்த்தால் அது நீர் போன்றே தோற்றும். ஆனால் அவன் முன்போல் மறுபடி மயங்கான்.

கானல் நீரில் அனுபவமில்லை. உலகில் அனுபவ மிருக்கிறதேயெனில் அதற்கே கனவுபோல் என்ற திருட்டாந்தம் கூறப்பட்டது. கனவு பொய்யாயினும் அனுபவ மிருக்கிறதன்றோ! அது போலவே உலகு பொய்யெனினும் இதில் அனுபவமு மிருக்கின்றது. தாயுமானவர். மாயையைப்பற்றி,

"தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும்

நான்முகத் தேயே நின்னா னாட்டிய வகில மாயை

கான் முயற் கொம்பே யென்கோ கானலம் புலனே யென்கோ

வான்முக முளரி யென்கோ மற்றென்கோ வினம்பல் வேண்டும்."       (என்றார்)

 

இதன் பொருள்: - "ஓ நான்முகக் கடவுளே உம்மால் சிருட்டிக்கப்பட்ட இவ்வுலக மாயை முயற் கொம்போ? கானல் நீரோ? ஆகாயத் தாமரையோ? வேறே எதுவோ என்னென்றுதான் இதைக் கூறலாம்? இதைத் தாமே கூறி யருள வேண்டும்" என்பதாம்.

குருவருளால் தன் ஆன்ம சொரூபத்தைக் கண்டு அதுவே தானென்ற நம்பிக்கை வந்தபின்பே, நாம் பிரம்ம சொரூபமே யென்று தெரியும். அப்போதுதான் உலகத் தோற்றம் பொய்யென விளங்கும். நானென் என்னையே நம்பி ஈடேறினேன் என்பது இதுவே. முன்பு தேகத்தை நாமென நம்பிப் பிறப்பிறப்பில் அழுந்தி வருந்தினோம்; இப்போது குருவருளால் ஆன்ம சொரூபமாகிய நம்மையே கண்டு நாமென்று நம்பி ஈடேறினோம் என்பதாம்.

“நானென் றிருந்தானின் னானென் றறிந்தபின்

      றானென்று கண்டாரென் றுந்தீபற

சந்தேகந் தீர்ந்தாரென் றுந்தீப.''               (சொரூப வுந்தியார்)

 

      ''நம்மையறி வேவடிவா நாங்கண்டோ நம்மையன்றிச்

செம்மை யுலகத் திரள்காணே) – நம்மைநா

முற்றுப்பா ராதிருந்தோ மல்லா லொருகாலு

மிற்றுப்போ னோமோ வியாம்."              (சொரூப சாரம்)

 

தன் நிஜவடிவைக் கண்டபின் ஆரோபம் ஒழிதலின் உலகம் கானல் நீர்போலும் கனவுபோலும் தோன்றும். அப்போதும் உலகைத் தனக் கன்னியமாகக் காணும் வரை முத்தி கூடாது. யாவும் தானாகக் காணுவதும், தன்னையன்றி ஒன்று மில்லாததும், ஒன்றிரண்டென்று கூற வொண்ணாகதுமாகிய அகண்டாகார நிலையே முடிவான பிரம்மானந்த நிலையாம்.

''உலகினை வேற தாக வுணர்ந்திடிற் பந்த மாகும்

உலகினைத் தானே யாக வுணர்ந் திடின் முத்தி யாகும்

மிலகிடத் தோன்ற லெல்லா மென்னினை வேயென் றெண்ணி

யிலகிடக் கண்டு வேறற் றிருந்தன னிளமை வேந்தன்." (குமா)

 

(குருவருளால் தன் நிஜசொரூபத்தைக் கண்டு சோகம் நீங்கி விசிராந்தி பெற்ற சீடன் பெற்ற சீடன் சற்குருவை வியந்து துதித்தல்.)

"நான் எத்தகைய புண்ணியங்களைச் செய்தேனோ என் அதிஷ்டந்தான் என்னையோ! நன்னிலம் என்ற விடத்தில் அருளே திருமேனியாகக்கொண்டு எழுந்தருளின நாராயண தேசிகருடைய கடாட்சத்தால் மான் கிருதார்த்தனானேன் எனக்குக் கிடைத்த திருப்தியால் ஆனந்தத் தாண்டவம் புரியா நின்றேன்.”

தத்துவ ஞானம் பெற்றதா லுண்டான ஆனந்த மேலீட்டால் நாடோறும் இவ்வாறு ஆனந்தத் தாண்டவம் புரிவேன் என்பதைத் தமது திருவுளத்தின் கண்ணே முன்னமே யுணர்ந்த ஞானதிருஷ்டியா லல்லவா என்னைத் தாண்டவா என்ற நாமத்தா லழைத்தனர். அத்தகைய மகிமையை யுடைய எனது ஞான சற்குருவே எனக்குத் தாயுந் தந்தையு மாவர்.

[இந் நூலாசிரியருக்கு இவருடைய குருவால் இடப்பட்ட காரணப் பெயர் தாண்டவராயர். ஆதலின், நான் தத்துவஞானத்தா லுண்டான ஆனந்தத்தால் சதா தாண்டவம் புரிவேன் என்பதை முன்னாடி யுணர்ந்தே எனது ஆசான் எனக்குத் தாண்டவராயன் என்ற நாமத்தைச் சூட்டினார் என்று புகழ்ந்து கூறினபடி.]

இந்தப் பிரம்மானந்தத்தா லுண்டான இம் மகிழ்ச்சியை யான் யாருடன் கூறுவேன். அது என்னுள்ளத்தின் கண் உதயமாகிப் பூரித்து ஐகமெங்கும் வியாபித்துப் பரிபூரணமாகிக் கங்குகரை யற்று விளங்குகிறது. அத்தகைய ஒப்புயர்வற்ற ஆனந்தப் பேற்றை அருளவல்ல ஞானதேசிகரையும் வேதாந்த வாக்கியங்களையும் அளித்தருளிய பிரமேசுவரனுடைய மலரடிகளைப் பணிகின்றேன்.''

தத்துவ ஞானத்தால் உண்டாகா நின்ற ஆனந்தானுபவம் இத்தகையதென மொழிந்தோம். இந் நூலைப் பக்தியோடு குருமுகத்தில் ஆராய்ச்சி செய்து இதிற் கூறியபடி அப்பியசித்தோர் நித்தியமும் விசேடமும் பொருந்திய சமாதி நிலையை அனுபவமாக வுணர்ந்து அநுபவித்து சீவன் முத்தியடைந்து முனிசிரேஷ்டருக்குச் சமதை யாவர்.

வேதத்தில் கூறியுள்ளனவாகிய சாதன சதுஷ்டய முதல் தத்துவ ஞானத்தா லுண்டாகும் ஆனந்தம் வரையில் நன்கு விளங்கவேண்டியதற்காகக் கூறவேண்டிய யாவும் குறைவின்றிப் பூரணமாகும்படி நன்னிலம் என்னும் பதியிலெழுந்தருளிய நாராயண தேசிகரெனும் குருபரன் நமது யோககாலத்தில் தோன்றிக் கட்டளையிட்டருளினர்.

[நாம் தியானம் செய்யுங் காலையில் நமது ஞானாசிரியர் உள்ளுக்குள்ளே தோன்றி நமக்குக் கட்டளை யிட்ட படியே நாம் இந் நூலைக் கூறினோமன்றி நமது வல்லமையால் கூறியதல்ல என்பதாம்.]

சற்குருவின் பாத கமலங்களில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தைச் சிரசின்மேல் புரோக்ஷித்துக்கொண்டால், கங்கை முதலிய சகல புண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானஞ் செய்ததா லடையும் பலனனைத்தும் எப்படி அதுபோலவே, 'கைவல்லிய நவநீதம்' என்ற இந் நூலைக் கற்றோர்கள் சகல ஞான சாத்திரங்களையும் கற்றுணர்ந்த மெய்ஞ்ஞானிகட் கொப்பாய் ஆனந்த வாழ்வுறுவார்கள்.

ஓம் தத் சத்

கைவல்ய நவநீத வசனம் முற்றிற்று


No comments:

Post a Comment