Monday, August 31, 2020

 

கோபம்

(ஏ. எம். ரஷீத்.)

ஒரு காயம் பட்டு விட்டால், அதற்கு பதில் பழி வாங்க வேண்டுமென்ற அமரிக்கை இழந்த நிலை - சுபாவம் இழந்து தவிக்கும் தன்மை - அது தான் கோபம்; மற்றவர்கள் செய்த தப்புக்காக, நம்மை நாமே பழி வாங்கிக் கொள்ளுவது தான் கோபங் கொள்ளுதல்; கோபம் ஒரு குட்டிப் பைத்தியம்; அதனுடன் பொறாமை என்ற சைத்தானும் சேர்த்து வாழ்க்கையைக் குறுக்கி விடுகின்றது.

அது கொந்தளிக்கும் கடல் அலைகளைப் போன்றது. அதை மிருதுவாக அடக்கித் திருத்தினால் பயங்கரமான கொடுமைகளைச் செய்யாது:
சாந்தமாக வந்து கரையில் மோதி உள்ள சிப்பிகளையும் கிழிசல்களையும் தான் மோதி விட்டுப் போகும்.

இது மனிதனுடைய மனதோடு கூடவே தொடர்ந்து செல்லும் நபும் சக ஆத்திரம்; வெறி. அது தேடிப்போகும் எந்தக் காரியத்தையும் அதனால் சாதித்து விட முடியாது. யார் மீது கோபம் உபயோகிக்கப் படுகின்றதோ அவனை விட, அந்தச் கோபத்தை ஏவினவனைத் தான் அது அதிகமாகப் பாதிக்கின்றது. அளவு, அடக்கம் இல்லாமல் கட்டுக்கு மீறின கோபத்தைப் போல மனிதனை இவ்வளவு மிருகத்தனமாகவும், குறையுள்ளவனாவும் செய்வது இயற்கையில் ஒன்றுமே இல்லை.

அடிக்கடி கோபம் வந்து கொண்டிருந்தால் கடைசியில் அது ஆத்மாவிலேயே ஒரு நிரந்தர கெட்ட பழக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மூர்க்க குணம், ரௌத்திரம் இரண்டும் அவனை அலைகழிக்க வைக்கும். அதன் பலன் கசப்பு, வெடு வெடுப்பு, வெறுப்பு, ஒரு உன்மத்த நிலை – எல்லாம் சேர்ந்து விடும். மனம் அற்பத்தனமாகி விடுகின்றது.
சச்சரவு, மனப்பான்மை எல்லாம் அளவு மீறி கூத்தாட ஆரம்பிக்கின்றன.
அவை யெல்லாம் ஆழப் பதிந்து அவனையே ஒரு உருவில்லாமல் செய்து விடுகின்றன.

நம் கோப முகத்தை யார் கண்ணாடியில் காட்டுகின்றார்களோ அவர்கள் தான் நம் உண்மைச் சிநேகிதர்கள். தங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளும் பொழுது அநேகர் எதிரில் கண்ணாடி இருக்க விரும்புகின்றாகள். அதனால் என்ன பிரயோஜனமோ தெரியவில்லை. ஆனால் கோப நிலையில், இயற்கைத் தோற்றம் உருக்குலைந்து தாறுமாறாக இருக்கும் அவலக்ஷண தோற்றத்தைப் பார்த்துக் கொண்டால் கோபத்தின் மீது எல்லையற்ற கசப்பு உண்டாவதற்கு அது எவ்வளவோ உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அடக்கி ஆளப்பட்ட கோபம் புத்திசாலித் தனந்தானே!

கோபிஷ்டனை அறிவற்ற சட்டம் அறிந்து விடுகின்றது; ஆனால் கோபிஷ்டன் கேவலம் சட்டத்தைக் கூட தெரிந்து கொள்ளுவதில்லை. ஒருவன் ஒரு தப்பு செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் பொழுது தானே கோபங் கொள்ளுகின்றான். கோபம் எப்பொழுதும் தன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுவதே இல்லை. ஆனால் அதன் பலாபலன்கள்?......அப்பா! கோபம் உண்டாகும் பொழுது ஒருவன் கொஞ்சபேரம் அதன் பலாபலன்களை நினைத்துப் பார்ப்பானானால்? இவ்வளவு மூர்க்கங் கொண்ட கோரம் கடைசியில் எப்படி மடிகின்றது – வெறிபிடித்த நிலையிலிருக்கும் ஒரு குதிரையை அதன் போக்குப்படி விட்டு விட்டால் கடைசியில் அது தானே அயர்ந்து போய் விழுந்து விடுகின்றதல்லவா, அது போலத் தானே!

மனிதனே! நீ விரும்புகின்றபடி மற்றவர்களை ஆக்க முடியவில்லையே என்று கோபப்படாதே. நீ இஷ்டப்படுகின்றபடி உன்னையே ஆக்கிக் கொள்ள உன்னால் முடியவில்லையே!

ஆனந்த போதினி – 1942 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment