Monday, August 31, 2020

 

குடம்பை எனும் சொற்பொருள் விளக்கம்

 

1. தமிழ்ப்புலமை சான்ற அன்பீர்!


      "குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு "

 என்பது நாயனார் குறள்.


இவ்வருமைத் திருவாக்கினுக்குப் பலர் பலவிதம் சொற்பொருள் கூறுகின்றனர். சென்ற ஆண்டு, புரட்டாசித்திங்களில் வெளியான ஆனந்தபோதினியில் மறுபிறப்பு என்ற வியாசத்தின்கண், ஓர் கிறிஸ்தவர் இக்குறளை மறுபிறப்பில்லை என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவர் அக்குறளைப் பொருட்படுத்துவதை, (Vol. 9. No. 3) 108 - ம் பக்கம் பார்த்து உணர்க. இவர்தம் பொருள் வியக்கத்தக்கதேயாம்.

 

2. இன்னும் உச்சிமேற்புலவர் கொள் நச்சினார்க்கினியர் குடம்பை என்பதற்குப் பறவைக்கூடு என்ற பொருள் கொண்டு உடலுக்கும் உயிருக்குமுள்ள சம்பந்தமானது கூட்டிற்கும் அதிலுள்ள பறவைக்கும் உள்ள சம்பந்தம் போலும் என்று கூறியுள்ளார். ஆனால் வள்ளுவர் நூலின் பரித்த உரையிலெல்லாம் தெரித்த உரையாசிரியரான பரிமேலழகரோ, உடம்பிற்கு முயிருக்குமுள்ள நட்பு முன்றனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள்ளிருந்த புள் பருவம் வந்துழி பறந்து போம் தன்மைத்து என்றனர். அதற்காகக் " கூட்டிலிருந்து காலையில் வெளிப்படும் பறவை அன்று மாலைக்குள் அதே கூட்டில் வந்தடைவது போல ஒரு உடலை விட்டு நீங்கிய உயிரானது மறுபடி எக்காலத்தாயினும் அதே உடலை வந்தடைவதுண்டோ? இல்லை. இதன்றியும் தாய் வயிற்றினின்றும் பிறக்கும் பொழுதே யிருக்கிற உடலுயிர் சம்பந்தத்திற்கு இடையிலே பக்ஷிக்கும் கூட்டிற்கும் உண்டாகும் சம்பந்தத்தை ஒப்பிடல் பொருத்தமின்று'' என்று காரணங் காட்டுகின்றனர். இது நிற்க.

 

''காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே "

 

என்பது நாலடி.

ஆதலால் யாமும் அவ்விதமே யாராயப்புகின் பல்வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதையாராய்வான் புக்கது இவவுரையாசிரியரிடம் குற்றங் காண்பான் போந்தல்ல.


 ''எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
 'மெய்ப்பொருள் காண்ப தறிவு''

 

என்ற நம் புலவர் திருமகனின் வாக்கினை ஒப்ப குடம்பை என்ற சொல்லின் மெய்ப்பொருள் அறியவேயாகும். ஆதலின் நண்பீர்! குற்றங்காணின் மன்னிக்க.

 

3. நாம் ஒரு விஷயத்தை யாராயுமுன்னரே, அவ்விஷயகர்த்தரின் பெருமையையும், சிறுமையையும் நோக்குதல் கூடாது. யான் பரிமேலழகர் கூறிய பொருளை முதன் முதல் அறிந்தகாலத்து அது சரியன்று எனத் தோன்றிற்று. ஆனால் இவ்விடயத்தைக் குறித்து, ஆங்கிலத்திலும், தமிழிலும் பெரும்புலமை வாய்ந்தவரும், திருக்குறளை மிகவும் ஆராய்ச்சி செய்தவருமான எனது நண்பர் ஒருவரிடம் பேச நேர்ந்த பொழுது, அவர் கூறியதாவது, "திருவள்ளுவர் இவ்விடத்தில் புள் என்றது சாதாரணப் பறவை என்ற பொருளியல்ல வென்றும், மற்றும் புள் என்றே பறவையிலோரின மிருப்பதாகவும் அப்பறவையின் குஞ்சு முட்டையினின்றும் வெளிப்பட்டவுடனே பறக்கும் தன்மைத்து என்றும் கூறினார். யான் அதைக் கேட்ட பொழுதிருந்து அப்பக்ஷியைப்பற்றி யறிய அவாவுற்றேன். சின்னாள் செல்லவும், ஓர்நாள், ஸ்ரீமத் இராமகிருஷ்ண பாமஹம்சரின் உபதேச ரத்னமாலையைப் படித்துக்கொண்டிருந்த காலத்து, அவர், இப்பக்ஷியின் செயலை ஓரிடத்து மேற்கோளாக எடுத்தாளுகின்றனர். அங்கு அவர் அப்புக்கு "சிம்புள்" என்று பெயரெனவும் அப்பு ஆகாயத்தில் பறக்கும்பொழுதே முட்டையிட்டு, அம்முட்டையும் உடனே வெடித்துக் குஞ்சும் பொரித்து அக்குஞ்சும் உடனே பறக்கும் தன்மையடையும் எனவும் கூறியுள்ளார். இப்புயைத்தான் செந்நாப்போதார் எடுத்தாண்டார் என்றும், அவர்தம் உவமை கூறும் திறம் இதனின்றும் நனகு விளங்குகின்றதெனவும், எனது நண்பர் அவரியற்றிய புத்தகத்தில் கூறியுள்ளார் போலும். நமது செந்நாப்போதாரின் பக்ஷிசாஸ்திர ஞானம் வியக்கத்தக்கதே.

 

4. இனி நாயனாருக்கு முற்பட்ட காலத்தில் குடம்பை என்ற சொல்லின் பொருள் எவ்விதம் வழங்கி வந்தது, பின்னர் எவ்விதம் வழங்கப்பட்டது என்பதை யாராய்வது முதற்கடமையாகும். பொய்யில் புலவருக்குப் பன்னூறு யாண்டுகளுக்கு முன்பே தோன்றிய சேந்தனியற்றிய திவாகரத்தில்,

"குடம்பை பஞ்சரம் பட்சி கூடாகும்'',

''அண்டமுஞ் சினையும் அவற்றின் முட்டை'' என வழங்கப்படுகின்றது. ஆதலின் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டையென்ற பெயரே இல்லை என்பது பெறப்படுகின்றது. பின்னும் நாயனாருக்குப் பிற்பட்ட காலத்திலும் இச்சொல்லுக்குக் கூடென்ற பொருளே இருந்ததாகக் காணப்படுகின்றது.

நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில்,


 '' புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும்'' - என்றும்,


 பெருங்குறிஞ்சி உரையில்,


 ''பறவைகள் குடம்பைக்கண்ணே நின்று ஆரவாரிக்கையினாலே " என்றும் காணப்படுதலால் அச்சொல்லினுக்கு கூடு என்ற பொருளே பொருத்தமாகின்றது.

 

5. ஆயினும் அசசொல் ஒரோ விடங்களில் முட்டையென்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கலாம் எனினும் அவை ஆராய்ச்சிக்குப் போதுமான சான்றாகவில்லை. மற்றும் பிங்கலந்தையார்,

 
 ''அண்டஞ்சினை கோச மரிட்ட முட்டை'என்ற விடத்துக் குடம்பை விடுத்தும், பின்னர் "குடம்பை முட்டையுங் கூடுமாகும்'' என்று கூறியதன் காரணம் யாதோ அறியேன். இவர் பரிமேலழகர் காலத்திற்குப் பிற்பட்டவரானதாலே அவர் கூறியதை யறிந்தபின்பு இவர் மயங்க உணர்ந்தமையே காரணமாகும் ஆதலின் பரிமேலழகர் காலத்திற்கு முந்திய திவாகரத்தை விடுத்து, பிந்திய பிங்கலந்தையினின்றும் இச்சொல்லின் பொருளுக்கு விதிகாட்டுவது பொருந்தாததாகும். ஆகவே நாயனார் குடம்பை என்ற சொல்லைக் கூடென்ற பொருளிலேயே யமைத்தார் என்பதும், ஆனால் ஆசிரியர் பரிமேலழகர் தம் கருத்திற் கியைய அச் சொல்லிற்கு முட்டை யென்ற பொருளைக் கற்பித்தார் என்பதும் பெறப்படுகின்றன.

6. இன்னும் நம் பண்டை நூலாசிரியரெல்லாம் உடலுக்கும் உயிருக்குமுள்ள தொடர்பை எவ்விதம் விளக்கியுள்ளார்கள் என்பதைப் பார்ப்பாம். கங்கைகுலதிலகராம் காராளர் மரபிலுதித்த பட்டினத்தடிகள் கோயிற்றிரு அகவலில்,


 ''உயிரெனுங் குருகுவிட் டோடும் குரம்பையை
 எலும்பொடு நரம்பு கொண் டிடையிற் பிணித்தும்
 கொழுந்த்சை மேய்ந்தும் ஒழுக்கு விழும் குடிலை''

என்றும்
திருழலர் திருமந்திரத்தில்,


 ''தோற்பையுணின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன்
 புறப்பட்டுப் போனவிக் கூட்டையே''

என்றும்,
மற்றும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளியற்றிய அருட்பாவின் ஆறாவது திருமுறை உறுதி கூறலில்,

 
 "கூடுவிட்டிங்காவிதான் போயினபின் ஏது புரிவீர் எங்கே குடியிருப்பீர்'

என்றும், பின்னும் நல்வழியில்,
 "கூடு விட்டிங்காவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்''

என்றும்
 இன்னும் சர்வசாதரணமான உலக வழக்கில்,

 
 ''கூட்டைவிட்டுப் பக்ஷி பறந்து போய்விட்டது'' என்றும் கூறப்படுத்தலால் கூட்டை விட்டோடும் புள்ளையே உயிருக்கு உவமித்துள்ளார்கள் என்பது பெறப்படுகின்றது. ஆனால் பரிமேலழகர்மாத்திரம் முட்டையையும் குஞ்சினையும் உவமை கூறுதல் இப்பெரியார்களின் அருள்வாக்கை யெல்லாம் மருள்வாக்கெனக் கூறுவதற்குச் சமானமா யிருக்கிறதேயொழிய
 வேறில்லை.

 

7. ஆனால் பரிமேலழகர் இவ்விதம் கூறுவதற்குக் காரணம் இரண்டேயாம். முதலாவதாக உடம்பில் உயிர் மீண்டும் புகாமற் போதற்கு கூட்டினுள் மீண்டும் புகுதலையுடைய புள்ளை உவமை கூறுவது பொருந்தா தென்கிறார். இங்கு கூட்டைவிட்டேகிய இளம்புள் மீண்டும் புகுதலுடைமையைக் கண்டவர் யாவர் ஒருவருமிலர். மானுடராகிய நம்மைப்போலவே பறவைகளும் வாழ்கின்றன என்று நாம் அனுமானித்துக்கொள்வதா?
யாமோ தினந்தோறும் நூற்றுக்கணக்கான காக்கைகள் இரவில் ஒரே மரத்தில் தங்கி மறுநாட்காலையில் வெளிச் செல்வதைக் காண்கின்றோம். ஆனால் மரத்திலோ கூடு ஒன்றுகூடக் காணமுடியவில்லை. ஆனால் கூடும் புள்ளு மென்ற தெங்ஙனம்? என வினவுவீராயின், பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து குஞ்சுக்கு இறைதேடப்போய் பின்னர் திரும்பிக் கூட்டில் புகும். இதைக்கண்டே பலர் பலவிதம் மயங்குகின்றனர்.
''குஞ்சுறை, கட்சி, கூண்டு, குடம்பையே கூட்டின் பெயராம்'' என்பதினின்றும், குடம்பை யென்பது இளம்புள்ளின் கூடேயாம் என்பது தெள்ளிதிற் புலனாம். இங்கு நாயனாரால் உவமை கொள்ளப்பட்டதும் இளம்புள்ளையேயன்றிப் பெரும்புள்ளையன்று. அவ்விளம்புள் பருவம் வந்துழிப் பறந்து போம் தன்மைத்தாதலின், நம் காலமுடிந்ததும் உயிராகிய புள் உடம்பாகிய கூட்டைவிட்டுப் பறந்து போய்விடும் என்பது யாவரும் மறுத்தற்கரிய உண்மையேயாகும்.

 

8. மற்றும் பரிமேலழகரோ, உடலும் உயிரும் உடன் தோன்றுதல் போலக் கூடும் புள்ளும் உடன் தோன்றவில்லை என்கின்றனர். ஆனால் உடல் உயிரோடு கூடியும் தனித்தும் நிற்குமாறு போல் கூடும் புள்ளோடு கூடியும் தனித்தும் இயங்கும். முட்டையோ கருவோடு கூடி யல்லது தனித்தியங்குவதின்று. இன்னும் புள்ளென்னுஞ் சொல், பிறகு முதிர்ந்து பறக்குந் தன்மையையுடைய பறவைக்கேயுரியது.

 

''பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை'' ஆதலின் கருவிற்காவது அன்றிப் புதிதாய்ப் பிறந்த குஞ்சிற்காவது புள்ளென்ற பெயர் வழங்கப் படுதலில்லை என்பது பெற்றாம். ஆகலின் பறக்குந் தன்மையையுடைய பறவையே புள் ஆகும். அது கூட்டைவிட்டுப் பறந்து செல்வதொப்பவே நம்முயிரும் உடலைவிட்டுப் பிரிந்து செல்கின்றது என்ற உவமை நம் செந்நாப்போதாரால் எடுத்தாளப்பட்டது என்பதே சாலச் சிறந்ததாம்.

 

9. இதுவரை நான் கூறி வந்தது, நச்சினார்க்கினியரை உச்சிமேற்கொள்ளவும், பரிமேலழகரைப் பரிபவம்பண்ணவும் எண்ணியல்ல. திருக்குறளுரையாசிரியர் களிலெல்லாம் பரிமேலழகரே சிறந்தவர் என்று உறுதி கூறலாம். அதற்கு,


 ''பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாலுள்ள
 நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற்
 பரித்த உரை யெல்லாம் பரிமே லழகன்
 தெரித்த உரை யாமோ தெளி''

 
என்ற பாவினை விட வேறு சான்று வேண்டுவதில. ஆயினும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதொப்ப பரிமேலழகர் இவ்விதம் மாறுபடக் காரணம் அவர் இச்சொல்லின் பொருளை ஓர் சிறிது மயங்க உணர்ந்தமையேயாகும். இவ்விதம் அவரிடம் குற்றமுள்ள தாதல் அவர்தம் புகழுக்கு ஓர் இழுக்கு உண்டென்று கொள்வது பேதைமைத்தே. மாசறுமதியம் காண்பது அரிதேயன்றே!


எனக்குச் சிறிது காலத்திற்கு முன்பு உடற்கூறு விளக்கும் ஆசிரியராயிருந்து காலஞ்சென்ற திருவாளர் B. S. இரத்தின வேல் முதலியாரவர்கள் இத்தகையதோர் ஆராய்ச்சியினைச் செய்துள்ளார்கள். அவர்களது ஆராய்ச்சியின் பால் கண்டதோர் உவகை இவ்வியாசம் வரைய என்னைத் தூண்டிற்று. ஆதலின் எனதன்பார்ந்த வந்தனம் அவர்களுக்கு உரித்தாகுக.

 

சுபம்.

 தொ. மு. பாஸ்கரன்,

 “சித்திராலையம்" திருநெல்வேலி.

 

குறிப்பு: - இத்தகைய விஷயங்களில் திருட்டாந்தம் தாஷ்டாந்தத்தோடு எல்லா அம்சங்களும் பொருத்தமாகவிருக்குமென்று எதிர்பார்க்கலாகாது. எடுத்துக்கொண்ட விஷயத்தில் எந்த அம்சம் அல்லது அம்சங்களுக்காகத் திருட்டாந்தம் கூறுகிறோமோ அந்த அம்சம் அல்லது அம்சங்களில் மட்டிலுமே திருட்டாந்தம் தாட்டாந்தத்தோடு பொருந்தியிருக்கிறதா வென்பதைக் கவனிக்க வேண்டும்.


 ''குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
 உடம்போ டுயிரிடை நட்பு'


என்ற குறட்பா "நிலையாமை" என்ற அதிகாரத்தின்கண் கூறப்பட்டுள்ளது. ஈண்டு ஆக்கை நிலையாமை யென்பதைப்பற்றி இப்பா கூறுகிறது.

 

உயிருக்கும் தேகத்திற்குமுள்ள சம்பந்தம் எப்போதுமிருக்கக் கூடிய சம்பந்தமல்லவென்பதையும் ஒருகாலத்தில் சீவன் தேகத்தை அறுதியாய்த் தனியே கிடக்கவிட்டுத் தான் வெளிப்பட்டுப் போய்விடும் என்பதையும் விளக்க, "தேகத்திற்கும் உயிருக்குமுள்ள சம்பந்தம், முட்டை தனியே கிடக்க விட்டு அதனுள்ளிருந்த பட்சி பருவம் வந்தகாலத்தில் பறந்து போன தன் மையை யொத்தது'' என்றார் பரிமேலழகர்.

 

இதிலுள்ள அம்சங்கள் எவையெனின், பார்வைக்கு என்றும் ஒன்றை விட்டொன்று பிறிபடாதவை போல் தோன்றினும் ஒரு காலத்தில் ஒன்று மற்றொன்றை அறவே விட்டுப் போய்விடுந் தன்மையையுடையது. அதாவது விட்டுப் பிரிந்தது மறுபடி போய் ஒன்று சேர்வதில்லை.

 

திருட்டாந்தத்தில் முட்டையும் அதற்குள்ளிருக்கும் குஞ்சும் பிறிபடாதவை போலவே தோன்றினும் குஞ்சு பக்குவமடைந்ததே முட்டையைத் தரையில் கிடக்கவிட்டுத் தான் வெளிப்பட்டுப் போய்விடுகிறது.  

 

இது போன்றே தாட்டாந்தத்தில், உடலும் உயிரும் பிறிபடாத ஒன்று போலவே தோன்றினும், உயிர் வினை யொழிந்ததும் தேகத்தைத் தனியே தரையில் கிடக்கவிட்டுத் தான் வெளிப்பட்டுப் போய்விடும். மறுபடி அத்தேகத்தில் நுழைவதில்லை.
 

இரண்டு விஷயங்களும் வேண்டிய அம்சங்களில் பொருத்தமுடையனவாகவே யிருக்கின்றன. இங்கு முக்கிய விஷயம் " என்றைக்கேனும் ஒரு நாளைக்கு தேகம் சவமாய்விழ ஆன்மா அதைவிட்டு நீங்கிவிடும் ஆகையால் தேகம் சதமாய் இருக்குமென்று நம்பாமல் அதுள்ள போதே நீ செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்துக்கொள்'' என்பதே.

 

இவ்வளவே போதுமானதாயிருக்க, குடம்பை என்பதற்குக் கூடு முதலிய வேறு பொருள்கள் உளதாலும், புள் என்ற ஒரு பட்சி யிருப்பதாலுமே நாம் அவற்றைப் பொருளாக உத்தேசித்து ஆராய்ச்சி செய்து கொண்டு போவது அநாவசியமென்றே நமக்குப் புலப்படுகிறது. காகம் முட்டையிடும் பருவத்தில் தான் கூடுகட்டி குஞ்சு பொரித்துக் குஞ்சு நன்றாகப் பறக்குந்தனிலும் அக்கூண்டில் வசித்திருந்து பிறகு பிரிந்து போம். மற்ற காலங்களில் இரவை மரக்கிளைகளில் தங்கியிருந்தே கழிக்கும்.

 

பட்டினத்தடிகள் முதலியவர்கள் தேகத்தைக் கூடெனக் கூறியது, பட்சிக்குக் கூடு வாசஸ்தலமா யிருப்பதுபோல், சீவனுக்கு இந்தத் தேகம் ஒரு கூடு போலிருக்கிறது; பட்சி நினைத்தபோது கூட்டைவிட்டுப் போய் விடுவது போல் சீவனும் காலம் வந்தபோது தேகமாகிய கூட்டைவிட்டுப் போய்விடும் என்ற மட்டில் அறிவிக்கவேயன்றி வேறில்லை. அவர்கள் அபிப்பிராயப்படி அவ்வாறு கூறியதாலேயே, பரிமேலழகர் முட்டையும் குஞ்சும் என்று பொருள் கூறியதால், அவர்கள் கூறியதை அவர் மறுத்துக் கூறியதாக நாம் கருத ஒரு காரணமுமில்லை. நாயனார் கூறியதற்கு அவர் பொருள் கூறினர். கூறியது அவசியமான அம்சங்களில் பொருத்தமாகவே யிருக்கிறது. பட்டினத்தடிகள் முதலிய பெரியோர் தத்தம் அபிப்பிராயப்படி சீவனுக்குத் தேகம், பட்சிக்குக் கூடு போன்றது என்று உபமானம் கூறினார்கள். இவற்றில் ஒருவர் கூறியது மற்றவர் கூறியதைக் குற்றப்படுத்தியதாய்க் கருத ஒருகாரணமுமில்லை. அதோடு இப்போது நமக்குப் புலப்படும் இந்த ஆராய்ச்சி யோசனைகளனைத்தும் பரிமேலழகற்குப் புலப்படாமலிருந்திருக்குமோ என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.


 பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵- நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment