Monday, August 31, 2020

 

சூதினால் வரும் தீமைகள்

 

சகோதர சகோதரிகாள்!


பூர்வத்தில் நாம் செய்த புண்ணியத்தால், நமது அஞ்ஞானத்தையோட்டி, மெய்ஞ்ஞானத்தைப் போதிக்கவரும் ஆனந்தபோதினியின்கண், மேற்கண்ட தலைப்பை ஒட்டிச் சில விஷயங்களை எழுதத் துணிந்தேன். என்னிடத்தில் உள்ள பிழைகள் பெருமலைபோலத் தோன்றும் எனினும்,'' நல்லார் பிறர்குற்றம் நாடார் " என்னும் எண்ணம் தூண்டுதலினால், நான் இதை எழுதத் துணிந்தேன்.

 

இக்காலத்தில் நடக்கும் சில சீர்கேடான விஷயங்களைக் காணும் போது, நமது தாய்நாட்டின் க்ஷேமத்தைக் கோரும் ஒவ்வொரு தேசாபி மானியும் மனம் நொந்து உளங்குன்றுவாள் என்பதற்கோர் ஐயமும் இல்லை. சில செல்வவந்தர்களோ, நமது தாய்நாடு கூடிய சீக்கிரத்தில் கெடும் பொருட்டு, குலதர்மத்தையும் கைவிட்டு, மற்றும் பாவச் செய்கைகளைச் செய்கிறார்கள். முயற்சி யில்லாமல், பழிபாவங்களை விளைவிக்கும் வழியில் பணம் சம்பாதித்து ஜீவிப்பதைவிட, நல்ல முயற்சியினால் கிடைக்கும் பொருளை வைத்து, தரித்திரத்தை அனுபவிப்பதே நலம்.

 

பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும்
      கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
      பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை
      நீரு மமிழ்தாய் விடும். - -
            என்று சொல்லியிருக்கிறார் (நாலடியார்.)

 

தாய் நாட்டிலுள்ள மானிடர்கள் செய்யும் பாபச் செய்கைகளில், சூது விளையாடல் ஒன்றாகும். இன்னும் அனேகர்கள் இதையே முதற்றொழிலாக வைத்துக்கொண்டு, ஜீவித்து வருகிறார்கள். இவர்களைக் காணும்போ தெல்லாம் என் மனம் எரிகின்றது. ஈசனே! ஈசனே!! இத்தகைய மதி கேடும் நம்மவர்க்கு வருமோ? இது வெறும் பொய்யனுக் கருந்துணை; மெய்யனுக்குறும் பகை என்று இவர் உணர்கின்றாரில்லை. இவ்வாறு விளையாடுவானேன்? போலீஸார் வசம் கைச்சிறையாலானேன்? பின்னும் உதைகள் படுவானேன்? மான மழிவானேன்? இவைகளெல்லாம் இச் சூதினாலன்றோ?

 

இவ்வாறாக ஒருவன் விளையாடுவதற்கு முன், 'நாம் சூது விளையாடலாமா? இது கேவலமன்றோ, பணத்தை யெல்லாம் இழந்து ஆண்டியாக வேண்டிய திருக்குமே, பின்னும் உறவினர்களும், சினேகிதர்களும், நம்மைஇகழ்வார்களன்றோ' என்று முதலிலே கருதுகின்றானா? இல்லவே இல்லை. இதைக் கருதியே வள்ளுவர்


     "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
     எண்ணுவ மென்ப திழுக்கு''

 

என்று சொல்லி யிருக்கிறார். சூதாடுவோர்கள் இதனைக் கிஞ்சித்தேனும் கவனிக்கிறார்களா? அய்யோ! பாவம். உதாரணமாக நிடத நாட்டரசனான நளன், புட்கரனோடு சூதாடுகையில், முதலில் பொன்னைப் பந்தயமாக வைத்து ஆடினான். பின்பு, ஆடையாபரணங்களையும், ரதகஜ துரக பதாதிகளையும் வைத்து ஆடுகையில், நளனே தோற்றனன். அப்பொழுது மந்திரிமார்கள் வந்து,

 
      "உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
      திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் - மருவும்
      ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது

பொருவரோ தக்கோர் புரிந்து''


எனப் பலவாறு சொல்லியும், நளன் கேட்கவில்லை. கடைசியாக'' உன் மனைவி, தமயந்தியைப் பந்தயம் வைத்து ஓர் ஆட்டம் ஆடு" என்று புட்கான் சொல்லவும், புண்ணில் தீக்கோல் நுழைந்தது போலிருந்தது. நளன் மனம். இதைக் கேட்கவும், அவன் ஒற்றை வஸ்திரத்துடன், தன் மனைவி யோடு, கானகத்திற்குச் சென்றான். இவைக ளெல்லாம் சூதினாலன்றோ?

 

ஆகையால், சூதுவிளையாடுவதினால் பொன்னையும், ஆடையாபரணங்களையும், பின்னும் மனைவியையுங் கூட இழக்கவேண்டியதா'யிருக்கும். பின்னும் நம்முடைய மானமும் போய்விடும்.'' மான மழிந்த பின் வாழாமை முன்னினிதே'' என்றபடி மானமழிந்தபின் வாழவும் வேண்டுமா? ஆதலால் ஆண்டவன் அளித்த அற்பாயுளில் வாழ்நாட்களை வீணாக்காமல், சூது, களவு, பொய், முதலியவற்றை விட்டுவிட்டு, மறுமைக்கு வேண்டியதான தருமங்களைச் செய்து, எல்லாம்வல்ல பரம்பொருளை அனுதினமும் ஆராதிப்போமாக:

 

சுபம். சுபம்.


K. கிருஷ்ணன், எட்டியாபுரம்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச் ௴

 

 

   

 

No comments:

Post a Comment