Sunday, August 30, 2020

 

கனவு காண்போம்

கமலையா

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
      வீசுந் தென்றற் காற்றுண்டு;
கையிற் கம்பன் கவியுண்டு;
      கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
      தெரிந்து பாட நீயுமுண்டு;
வையந் தருமிவ் வளமின்றி
      வாழும் சொர்க்கம் வேறுண்டோ?"


என்பது தேசிக விநாயகம் பிள்ளை தமிழிலாக்கிய உமர்கய்யாம் பாடல்களில் ஒன்று.

 

பிட்ஜ் ஜெரால்டால் மொழிபெயர்க்கப்பட்ட உமர் கய்யாமின் “ருபய” த்தை முதன் முதல் நான் படித்தபொழுது ஒரு புது உலகில் சஞ்சரிப்பதாகவே எண்ணினேன். என் மனம் ஆகாயத்தில் தன் வரம்புக்குட்படாத ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. சலனமற்றிருக்கும் தண்ணீர்த் தேக்கத்தில் ஒரு சிறுகூழாங்கல் கணக்கற்ற அலைகளைத் தோற்றுவிக்கிறது; கரையின்றிப் கிடக்கும் அலைகடல் அகில உலகத்தையும் விழுங்கி, ஏப்பமிட்டு எதேச்சாதிகாரம் செலுத்தும் சக்தி வாய்ந்தது. சிறு தண்ணீர்த் தேக்கமாகிய என் மனம் விரிநீர்ப் பெருக்காம் ருபயத்துடன் ஒன்றுபடச் செய்த முயற்சி ஏளனத்திற்குரிய தாயினும் மன்னிக்கற் பாலது.

 

பெற்றெடுத்த இரு முதுகுரவர், மனைவி யெனும் கண் கண்ட தெய்வம், கோடி செம்பொன்னும் தரமுடியா இன்பம் தரும் பாப்பா" வின் மோகனச் சிரிப்பு, நீலவானத்தை முத்தமிடும் பச்சைமலைச் சிகரம், பொதிகையில் தமிழுடன் பிறந்த தென்றல், பச்சை மேனியில் வெண்கம்பளமாகிய மேகப்படலத்தைப் போர்த்து நிற்கும் மரக்கூட்டம், நடனமாதின் சதங்கை யொலி போன்று கலகலவெனச் சிரிக்கும் சிற்றோடை, கருங்குயில், பச்சைக்கிளி, வெண்டாமரை, “கறைபட்டுள்ள வெண்கலைத் திங்கள், “கன்னலெனுங் கருங்குருவி மின்னலெனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்," அந்தி மாலைப்பொழுது, இவைகளை யெல்லாம் துறக்க யாருக்குத் தான் மனம் வரும்?


வாழ்க்கை வாழ்வதற்காகவே இருக்கிறது.


"தேரா வாழ்வின் பறவை இன்னும்
செல்லும் தூரம் சிறிதேயாம்."


என்று உமர் கய்யாம் சொல்லியும், வாழ்க்கையின் இனிமையை நுகரத் தயக்கம் ஏன்? மலர்ந்த ரோஜாவின் ஆயுள் அற்பம் தான். ஆனாலும், அதன் அருமையும் பெருமையும், எழிலும் ஏற்றமும், மங்கிய சிவந்த இதழ்களும் மனதைக் கவரும் மணமும், இரும்புத் தூள்களைக் காந்தம் இழுப்பது போல், நம்மை ஈர்த்துச் செல்கின்றன. சில நாழிகைகள் சென்றால் வாடி வதங்கிப் போய் விடுமே யென்று நம்மில் யாரும் அதன் மதிப்பைக் குறைப்பதில்லை. சகா
ராப் பாலைவனத்தைப் பிளந்து கொண்டு பிரயாணம் செய்த பிரெஞ்சுக்காரர் சிலர், நூற்றுக்கணக்கான மைல்களுக்குத் தண்ணீர் கிடைக்காத மணற்பரப்பில் புயலில் அகப்பட்டு அடித்துக் கொண்டு வரப்பட்ட பறவை யொன்று, அப்பொழுது பெய்த மழைத்துளிகளால் இன்புற்று இனிய கீதத்தைப் பரப்பியதைக் கேட்டனர். மறுநாள், கதிரவன் தனது அக்கினிக் குழம்பைக் கக்கும்பொழுது, மரத்திலிருந்து உதிரும் உலர்ந்த சருகைப் போல், தானும் ஆவது உறுதி என்பதை அச்சிறு பறவை அறியாது மானிட வாழ்க்கை கூடக், கொல்லன் பட்டரையில் பழுக்கக் காய்ச்சின இரும்பில் பட்ட துளிநீர் போன்றது.

 

போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்ற "தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்" புத்தன், சிலுவையில் அறைபட்டு இறந்த இயேசுவெல்லாம், மின்னலினும் விரைவில் மறையும் வாழ்க்கை சோம்பிக் கிடந்திருந்தால், மனித வர்க்கம் இன்று டுபோ யிருக்கும். ரூஸ்ஸோவின் பேனா பிரெஞ்சு மக்களைத் தட்டி யெழுப்பி வீறு கொடுத்தது. 'இன்று தோன்றி நாளை மறையும்; எனக்கென்ன?'' என்று கார்ல் மார்க்ஸ் இருந்திருந்தால், “உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுமின்; அடிமைத்தளைகள் தவிர நாம் இழகி ஒன்றுமில்லை,'' என்ற அவர் பொன் மொழிகள் இன்று உலகின் நானா பக்கங்களிலும் ஒலித்துக்கொண்டிரா.

 

“பெண் வாடை கூடாது; உலகமே மாயை,” என்று பொறுப்பைக் கழற்றிக் கொள்வதோ, அமைதியான வாழ்க்கை தேவையென்று சோம்பிக் கிடப்பதோ, ஆண் மகனுக்கு அழகில்லை.

 

"உய்யும் வழியுண்டா?" என்ற கேள்வி எழக்கூடாது. மனமுண்டானால் இடமுண்டு. “கோழைகள் சாவதற்கு முன்பு பலதடவைகள் சாகிறார்கள்'' என்று ஷேக்ஸ்பியர் சொன்னது முக்காலும் உண்மை. இன்றைய மனிதனைப்பற்றியோ, இவ்வுலக வாழ்வைக் குறித்தோ கவலைப்படாத மனிதன், இனி வரும் மனிதனைப் பற்றியோ, பரலோக வாழ்வைப் பற்றியோ பேச அருகதை யற்றவன். சூறாவளிக் காற்றானாலும், நெல்மணிகளை அடித்துக்கொண்டு போக முடியாது. உருவத்தில் சிறிய மனிதன், யானை முதல் எறும்பு ஈறாகவுள்ள எல்லாச் சீவராசிகளையும் கட்டுப்படுத்துகிறான். மனத்திட்பமும் நுட்பமும் அவனைப் பெரியவனாக்குகிறது. அவன் கற்பனைக் களஞ்சியம், காவியமும் ஓவியமும் அவன் கையாட்கள்; பூதங்கள், பொறிகள், புலன்கள் அவன் சேனைப் பெருக்கம்.


“நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்."


என்று வீர முழக்கம் செய்தவர் பலர் உளர். நெஞ்சில் உரம் உள்ளவனுக்கு ஆக்கவும் தெரியும். அழிக்கவும் தெரியும். கனவு காணத்தெரியாதவன் கட்டிக்கிடக்கும் தண்ணீர்; அத்தண்ணீர் தொத்து நோய்க்கு இருப்பிடம்; அதை ஏற்றம் வைத்து இல்புறத்துக் கொட்டாவிட்டால் பேராபத்து விளையும். கற்கால மனிதன் தெரடங்கி பிளேட்டோ அரிஸ்டாட்டில், சாக்ரடிஸ், வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், ஷ்கின், காளிதாசன், தாகூர், பெர்னார்டுஷா, ரொமெய்ன் ரோலண்டு வரை, மனி தன் கைக்ட்டி யிருக்க வில்லை. உள்ளமும் உடலும் வேலை செய்தன. நேற்று வாழ்ந்த சுப்பிரமணிய பாரதி காணி நிலம் வேண்டிக் கண்ட கனவு, நம்மையும் கனவு காணத் தூண்டுகிறது. இன்பம் விழைந்து, சுகம் வேண்டிக் கனவு காண்பது, பண்பட்ட உள்ளத்தின் சின்னம். உமர்கய்யாம் அத்தகைய கனவி லாழ்ந்தார்.


நம் போன்றார் பிழைத்துய்யவே “ருபயத்" எழுதப்பட்டது போலும்!

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

No comments:

Post a Comment