Sunday, August 30, 2020

 

காதற் கவிதை

(துறைவன்.)

பண்டைத் தமிழன் பெருமை வாழ்வு காதல், வீரமாகிய அடிப்படைகளின் மீது கம்பீரமாக நிமிர்ந்து விளங்கும் பளிங்குக் கோபுரமாகும். காதலின் சக்தி வீரனுக்கு வெறி யூட்டியது; தமிழன் வீரம் தெவ்வர்க்கு வெம்மையும் அல்லார்க்கு அன்பும் பயக்கும் அறநெறி யிணையுடையது. கடமையைக் கருத்தொடு செய்யத் தூண்டியது காதல், அஃது
சாதலுக்கு மார்பைக் காட்டிற்று வீரத்திற்கு இன் முகம் காட்டியழைத்தது.

காதல் மிக்க தலைவியொடு இல்லறம் இனிதுற நடாத்தும் தலைமகன், நாடு காவல், கல்வி பயில்தல், பொருளீட்டல் யாதானுமொரு காரணம் பற்றித் தலைவியைப் பிரிந்து சென்று விடுகிறான். தான் வரும் காலமும் நாளும் சொல்லிச் செல்கிறான் செஞ்சொல் தவறாத தலைவன். அவன் போன நாள் தொட்டு, தலைவி துயர்க்கடலில் தோன்றிய செந்தாமரை போல் உள்ளத்திற் கவலையும் ஏக்கமும் கொண்டு வாடுகிறாள். “சந்திரனது வேகமும் சூரியனது கதியும் ஏனிப்படி மந்தமடைந்து விட்டன" என்று வருந்துகிறாள். ''பருவ காலங்கள் யுகத்துக்கொரு முறைதான் மாறுவனவோ” என ஐயுறுகின்றாள். தலைவனையே நினைந்து நினைந்து வாசலிலேயே அவன் வரவை எதிர்பார்த்து நிறகிறாள். கற்பின் செவ்வொளி முகத்திலே பொலிய, குழையொடு பொறாது நீண்ட குமுதக் கண்கள் தலைவனது வேல் துளியைப் போலச் சிவந்திருக்க, 'பாட்டை மேல் வைத்த நாட்டமாக’
வாட்டமுறுகிறாள் வனிதை. பயனற்றுக் கழியும் ஒவ்வொரு விநாடியும் அவளுக்கு நரகத் தீயிலே கல்ப கோடி வருஷங்கள் போன்றிருக்கிறது .... சற்று கூர்மையாகப் பார்க்கிறான். தலைவனது மணி நெடுந்தேரின் உச்சியல்லவா அது! உச்சியின் தரிசனம் அவனை உம்பர் லோகத்து உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. தேரின் பின்னாலே ஒரு தூசு மண்டலம்! அந்தத் தூளிகள் மீது அவளுக்கு என்னவோ பொறாமை? தனக்கு முன்னால் தன் கொழுகனைக் கண்டு விட்டன வல்லவா?......

தலைவனைப்பார்ப்போம்...... அடடா, ஊர் நீங்கியபோது வாலிபத்தின் முறுக்கிலே கட்டமைத்த உடலினனய் கம்பீரமாய்ச் சென்ற களிரு இவன்! காதலியை நினைந்து வேதனை செய்யும் மனம் அவனுடைய தேரின் குதிரைகளை ...........(?)ப் பார்த்துச் சிரிக்கின்றது சோகத்தோடு. காதலியின் அன்பு நிறைந்த வேற்
கண்களும் அருள் நிறைந்து தகிக்கும் பார்வையும் அவன் முகக் கண் முன் தோன்றுகின்றன. ''இந்தத் தேர் ஏன் இவ்வளவு மெதுவாக அசைகிறது" என்று
வருந்துகிறான். பாகனையும் அடிக்கடி அதட்டி விடுகிறான் “குதிரைகளுக்குத் தீனி போட்டு எத்தனை மாதமிருக்கும்?" என்று சோகம் நிறைந்த ஹாஸ்யத்தோடு பேசுகிறான். பாகன்.... பாவம்...... “இன்று குதிரை தலை கால் தெரியாமல் கடிவாளம்
இற்று விடுமோ வெனப் பாகன் பயப்பட, குடல் தெறிக்க ஓடுகிறது! “இப்படிச் சொல்கிறானே" என்று அவன் நினைக்கவில்லை. அவனுக்குத் தான் விஷயம் தெரியுமே! மெல்லச் சிரித்துக் கொள்கிறான். அவ்வளவு தான். ஒன்றுந் தோன்றாது தலைவன் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கிறான் ஒரு நீல மேகம் இன்னொரு பொன் மேகத்தைத் துரத்தி விளையாடி கொண்டிருந்தது நட்சத்திர மலர்களைச் சிதறிக் கொண்டே, இன்னொரு
மேகம்......... மிகவும் கவலையுடன், ........... தன்னூர்ப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டான். காதலின் நீர் விட்டுக் குழைத்திருந்த அவன் மனச்சேற்றில் கவிதைக் கற்பனைகள் முளைத்து எழுகின்றன. அந்த மேகத்தின் வேகத்தைக் கண்டு ஒருகணம் திகைத்து விட்டான்! (காதலனும் பைத்தியக்காரனும், கவிஞனும் ஒன்றென்று யாரோ சொன்னது நினைவு வருகிறதா!) அந்த மேகம்...... தன் தேர் ஊரை யடைவதற்குள் அங்கே
போய்ச் சேர்ந்து விடும். ஆகவே சொல்லுகிறான் அதைப் பார்த்து,

"ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில், வெறுங்

கூடுவருகு தென்று கூறுங்கோ!"

 

“நத்தைகள் பூட்டிய வொரு தேரிலே, உன் தலைவன் - உன்னைப் பிரிந்ததனால் நெஞ்சுக் கூடெல்லாம் பழுப்பழுவாக, இளைத்துக் கவலையுடன் வருகிறான்'' என்று.... நீங்கள் போகும் பொழுது ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்” என்கிறான் தலைமகன், “தலைமகன் என்னை மறந்து விட்டானே! இன்னும் வரவில்லையே" என்று ஏங்கி நிற்கும் தலைவிக்கு அச் சொற்கள் சிறிது "ஆறுதல் தராதா' என்று தான். காதல் ஆத்திரத்திலே தன் குதிரைகள் உயர்ந்த அரபிக் குதிரைகள் என்பதையும் மறந்து விடுகிறான் தலைவன், சாதாரணச் சொற்களைக் கொண்டு இரண்டே வரிகளில் எவ்வளவோ அதீதமான உணர்ச்சிப் பெருக்கைக் கொட்டி விட்டாரல்லவா, புலவர்!............. தலைவனது ஓயாத தொந்தரவிலே சலித்துப்போய் விடுகிறான் பாகன். "ஏன் இத்தனை அவசரம்? ஊரில் போய் என்ன தான் பிரமாத காரியம் ஆகப் போகிறதோ! ஊர் தான் வந்து விட்டதே!" என்று கள்ளத் தனமாக ஒரு கேள்வியைப் போடுகிறான் பாகன். தலைவன் பரிகாசமும் கவலையும் கலந்து தோன்றச் சிரிக்கிறான். “தம்பி | உனக்கு......மணமா விட்டதா?" என்று பாகனைக் கேட்கிறான். 'இல்லை'' என்று பதில் வருகிறது. ''பின் எப்படி உனக்குத் தெரியப் போகிறது............ உம்... உன்னைப் பெரிய அறிவாளி என்று சொல்கிறார்களே!... அட, பிரகஸ்பதியே ........குதிரையை அடித்து விரட்டு ...... ஏனா?........ இது தெரியாதா கற்பாகிய ஒற்றைக்காலில் நின்று கொண்டு, கன்னத்தில் ஊன்றிய கையும் சாளரத்திலே தங்கும் தேகமுமாக... வாயிலிலே எனக்காக எதிர்பார்த்திருக்கும் அந்த அழகைப் பார்க்க வேண்டாமா!" என்று தன்னை மறந்து கற்பனா
லோகத்திலே சஞ்சரிக்கிறான் தலைவன். இதோ இருக்கிறது பாட்டு.

நூல்நவின்ற பாக! தேர்நொவ்விதாச் சென்றீக

தேன்நவின்ற கானத்தெழில் நோக்கி – தானவின்ற

கற்புத்தாள் வீழ்த்துக் கவுள்மிசைக் கையூன்றி

நிற்பாள் நிலையுணர்கம் யாம்.               (முத்தொள்)

(கொவ்விதா - விரைவாக, கவுள்- கன்னம்.)

தன்னைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலையை தலைவனுள்ளம் கற்பனை செய்கிறது தெரிகிறதா! தான் பிரிவேனென்று கூறியபோழுதே அவளது சூழ்குழவின்றும் மலர்கள் கீழே விழுந்து விட்டனவே! அவள் உயிர் வைத்துக் கொண்டிருந்ததே மிகக் கடினம். அவள் உடம்பு அசைந்த தெல்லாம் அவன் சற்பின் பலத்தினாலேயே யன்றி உடற் பலத்தினாலல்ல. காதலின் வயப்பட்ட தலை மகளின் உள்ளக்கிடக்கையை உள்ளபடியே வெளியிடும் இக் கவிதைத் துணுக்கில் ஓசை நயமும் ஊடுருவி நிற்கிறதல்லவா!

ஆனந்த போதினி – 1942 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment