Sunday, August 30, 2020

காளிதாசன்

 

வடமொழி யன்னையின் செல்வப் புதல்வனாம் மஹாகவி காளிதாசனைப் பற்றி ஓர் கதையுண்டு. அது வருமாறு: - ஓர் மன்னன் மகள் பற்பல கலைகளையும் பருவத்திலேயே கற்றுக் கன்னிமாட மெய்தியிருந்தாள். தனக்கு வந்த நாயகனாகக் கல்வி கேள்விகளில் வல்லுநனையே மணப்பதென்றும் அவனும் தன்னாலேயே பரீக்ஷிக்கப்பட வேண்டுமென்றும் உறுதி கொண்டாள். அப்படியே அவள் தனது பிதாவின் சமஸ்தானத்கிலுள்ள சகல பண்டிதர்களையும் மந்திரிகள் மூலமாய் வரவழைத்துப் பரீக்ஷித்தாள். அவர்கள், அவளிடம் தோல்வியுற்றமையால் மற்றைய மன்னரது புலவர்களையும் வரவழைத்தாள். அவர்களும் அவளிடம் தோல்வியுற, மந்திரிகள் மனம் நொந்தனர். "அம்மையே! இனி உலகில் வேறு பண்டிதரும் உண்டோ?
இருந்தாரனைவரும் வருந்திச் சென்றனர். ஆதலி னிவருளொருவனே யுன்னால் மணக்கத் தக்கவன்' என வணக்கமாகக் கூறினர். இந்நன் மொழிக்குச் செவிசாய்க்காத நங்கை மற்றுமுள்ள கற்றவரைக் கொணர்கவெனக், கட்டளையிட்டாள். தாங்கள் கூறியதைக் கேட்காமல் தங்களுக்குக் கட்டளை
யிட்டதைக் கேட்ட மந்திரிகள், சினத் தீயிற்பட்டு, இவளது கருவத்திற் கேற்ற கணவன் கயவனே என முடிவு செய்து மருகன் தேடப் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும், ஓர் இடையன் பல ஆடுகளை மேயவிட்டு, அவைகட்குத் தழை கொய்வான் வேண்டி மரமேறி, நுனிமரத்தே தங்கி, அடிமரத்தை வெட்டுவதைக் கண்டனர். கண்டதும் களிப்பெய்தி, இவனே யந்தங்கைக் குரியவன் என முடிவு செய்து. அவனுக்கு நறுமணச் சாந்தொடு நன்னீராட்டிப் புத்துடை யணிவித்து, நீ இப்பொழு தரசதங்கையை அடையப் போகிறாய், ஆங்கவளுன்னைப் பலவாறு வினவவாள், ஒன்றுக்கும் விடையளிக்காதே. ஏதாவது பேசினுன்னைக் கொன்றுவிடுவோம் எனக் கூறி சிவிகையி லேற்றுவித்துத் தாமே யதைத் தாங்கிச் சென்றனர். அரசிளங்குமரியையடைந்ததும், ''அம்மையே! இவர், சாதாரண மனிதர்களுக்குப் பதில் கூறுவதே கிடையாது'' என்றனர். மந்திரிமார் சிவிகை தூக்எக்கிவந்த ந்ததையும், அவரது வாய்பேசாமையையும் திடகாத்திரத்தையும், உற்று நோக்கிப் பெரிய புலவரென மதித்து மாலையிட்டாள், இடையனோ, தன்னைப் பலிகொடுக்கவே மாலை சூட்டுகிறாளென மதித்துள்ளம் புழுங்கினான். அன்று பகல் சிவிகையில் வந்த களைப்பால் ஓர் புறமடைந்து நன்றாக வுறங்கினான். இரவு மன்னவன் மகள் படுக்கையுள்ளடைந்து அவனுக்குத் தாம்பூலம் தூங்கும் பொழுதே யருத்தினாள். அதுவரை தூங்கிய மணமகன், அதுபோது விழிப்புற்று, ''அட, ஆடே! புழுக்கையிடுதற்குப் புற்றரை யிருக்க வாயிலா இடுவது? செல்லெனக் கடிந்தான். அதுகேட்டு நங்கை பெரிதும் சந்தேகித்து நீயாருண்மை கூறு! அன்றேல் மீளப்பெறாய்" என உறைவாளையுருவி மருட்டிக் கேட்டனள். இடை
யனும் தனது வரலாற்றை யொன்று விடாமற் புகன்றான். அதுகேட்டு வெட்கமும் பரிதாபமுமுற்ற நங்கை, ஐய! நீ இப்பொழுதே இவ்விடம் விட்டகன்று, இவ்வூரின் புறத்தேயுள்ள காளிகோயிலடைய வேண்டும். இது
நேரமவள் வெளியே சென்றிருப்பாள். நீ உள்ளே சென்று கதவை மூடித் தாழிட்இக்கொள்ள வேண்டும். அவள் திரும்பி வந்து கதவைத்திறவென்று பயமுறுத்துவாள், கொல்வேனென்பாள், தின்பேனென்பாள் என்ன கூறிய போதிலும் சிறிதுகூட மனம் தளரக்கூடாது. இச்சிறு கதவின் கண் வழியே உன் சூலத்தால் என்னாக்கில் பீஜாக்ஷரத்தை யெழுதிக் கொல்வதில்லையென யுறுதிமொழி கூறு என்று கேள். பிறகு உன்னாவில் பீஜாக்ஷரத்தை யெழுதிக்கொண்டு இங்குவா, உனக்கு மங்கள முண்டாகட்டுமெனக் கூறி யவனை யனுப்பினாள். இடையனும் அவள் சொற்படியே செய்து, பீஜமந்திரம் எழுதிக்கொண்டு கதவைத் திறந்ததும், ''மாணிக்ய வீணாம் என வாரம்பித்து, ''சயாமலா தண்டகம்'' என்னும் துதியை யியற்றினான். அது முதலே யவன் 'காளிதாச'' னெனக் காரணப் பெயர் பூண்டான். பிறகு அவன் அரண்மனை யடைந்து தனது மனையாளைக் குருவாக மதித்து நமஸ்கரித்தான். அது கண்டவளவனை வாரியெடுத்து, ''நாவன்மை யேதாவதுண்டா'' என்னும் பொருளுள்ள ''அஸ்தி'' "கச்சித் ' “வாகர்த்த:" என்பதை வினவினாள். அதைக் கேட்டதும் வேதவாக்காக மதித்து அம்மூன்று மொழிகளுள் ''அஸ்தி' யென்பதை முதலில் வைத்து குமார சம்பவமும், "கச்சித்" என்பதை முதலாக்கி மேகசந்தேசமும், ''வாகர்த்த" என்பதை முதலாக்கி ரகுவம்சமுமாகிய இம்மூன்று காப்பியங்களையு மியற்றினான். பிறகு, அவள் என்னுடன் கூடி இல்லறம் நடாத்தென்று கூறிய போது நீ எனக்குக் குருவானாய். இனியுன்னைச் சேரமாட்டேன். அதோடன்றி இனி யான் மணம் புரிவதே யில்லை யென வாணையிட்டுப், போஜராஜனை யடைந்து அவனது சபையை யலங்கரித்தனன் என்பதாம்.

 

இனி இக்கதை ண்மையா வென்பதை யுற்று நோக்குவாம். வடமொழியுலகில் காளிதாஸன் என்பார் இருவருளர். ஒருவன், கி. பி. 5-ம் நூற்றாண்டில் உள்ளவன். மற்றவனோ கி. பி. 12-வது நூற்றாண்டோன். முற்கூறிய காளிதாஸனே ரகுவம்சம், குமார சம்பவம், மேக சந்தேசம், என்னும் காப்பியங்களையும், மாளவிகாக்நிமித்ரம், விக்ரமோர்வசியம், சாகுந்தலம் என்னும் நாடகங்களையும் இயற்றியுள்ளான். மற்ற காளிதாசன் தான் சுருதபோதம், ருதுசம்ஹாரம் முதலியவைகளை யியற்றியவன்.

 

முக்காப்பிய மியற்றியமையின், முற்கூறிய காளிதாஸனை இக்கதைசாருமோவெனில், அவன் காப்பிய மியற்றினானே யொழிய போஜனைச் சாரவில்லை. அன்றியும் இக்கதையின் மூலமாக நோக்கின், முதலில் குமார சம்பவமும், பிறகு மேக சந்தேச ரகுவம் சங்களும், இயற்றப்பட்டிருக்க வேண்டும்.
காளிதாசனோ முதலில் ரகுவம்சத்தையும், பின்பு குமார சம்பவ மேகசந்தேசங்களையு மியற்றியுள்ளான். இதற்குச் சான்றோ, ஒருவன் கடவுள் வணக்கம், அவை யடக்கம், முன்னுரை, கூறுவதெல்லாம் காரியத்தினாரம்பத்திலேயே யாகும். நமஸ்கார ரூபமான மங்களமும், அவையடக்க முன்னுரைகளும், ரகுவம்சத்திலேயே காணப்படுகின்றன. குமார சம்பவ, மேகசந்தேசங்களோ, வஸ்து நிர்த்தேசத்தையே உடையன, ஆதலினிக்கதை முற்கூறிய காளிதாசனியற்றியதல்ல வென்பது முக்காலு முண்மையே.

 

பிற்கூறியவனை ''ச்யாமலா தண்டகம்" இயற்றினமையின் சாருமோவெனின், அவன் அப்புத்தகம் இயற்றின போதிலும் "அஸ்திகச்சித்வாகர்த்த:'' என்பது குமார சம்பவம் தலியவைகளைப் பற்றியது. குமார சம்பவமும், முற்கூறிய காளிதாசனால், இயற்றப்பட்டதாகையாற், பிற்கூறியவனையு மிக்கதை சாராது.

அன்றி “குமாரசம்பவம்" முதலிய நூல்களை பிற்பட்ட காளிதாசனியற்றியதாகக் கூறியவனைச் சாருமோவெளின், ஆதிசங்கரர் தமது பாஷ்யத்தில், காளிதாசனது குமாரசம்பவ வார்த்தையை யெடுத்துக் காட்டாகத் தந்துள்ளார்.
அவரது காலமும் கி.பி. 7-வது நூற்றாண்டாம். 5-ம் தூற்ராண்டு மனிதர் வார்த்தையை எடுத்துக் காட்டாகக் கூறமுடியாதாதலின் 5-ம் நூற்றாண்டு காளிதாசனே இவைகளை யியற்றியுள்ளான். இதனாலும் பிற்பட்டவனைச் சாராதென்பது வெள்ளிடை மலையாம்.

 

இப்படி வடமொழியில் அலங்கார நூலார், "கவிகளும் இரண்டு மூன்றே" "காப்பியங்களும் இரண்டு மூன்றே,'' என்று கூறும், சீரிய சித்தாந்தத்தில் சேர்க்கப்படும் காளிதாசனை இடையனாக்கி, 5-ம் நூற்றாண்டு காளிதாசனையும் 12-ம் நூற்றாண்டு காளிதாசனையும் ஒன்றாகப் பண்ணியதற்கேற்ப கதை கட்டல் நமக்கே இழிவன்றோ?


இரு காளிதாசரும் உயர்குலத்தவரே.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - காளிதாசன் ௴

 

No comments:

Post a Comment