Monday, August 31, 2020

 

சில மகான்களின் நீதி மொழிகள்

 

1. குயவன் வீட்டில் சட்டி, பானை, தட்டு முதலிய வெவ்வேறு ரூபங்களையுடைய அநேக பாத்திரங்கள் இருந்தபோதிலும் எல்லாம் களி மண்ணாலேயே செய்யப்பட்டவையாகும். அதுபோலவே ஒருவராகிய ஈசுவரன் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாமங்களுடனும் வெவ்வேறு ரூபங்களுடனும் பூஜிக்கப்படுகிறார்.

(இராமகிருஷ்ண பரமஹம்சர்.)

 

2. வியாதியால் பீடிக்கப்பட்ட குழந்தைசுளைப் பராமரிக்கும் தாயார் அக்குழந்தைகளின் பிணிக்குத் தக்கவாறு ஒன்றுக்குச் சோறும் குழம்பும், மற்றொன்றுக்குச் சவ்வரிசி கஞ்சியும், இன்னொன்றுக்கு ரொட்டியும் கொடுப்பது போல, ஈசுவரன் வெவ்வேறு ஜனங்களுக்கு வெவ்வேறு வழிகளை அவரவர்களுடைய இயற்கைக்குத் தக்க பிரகாரம் செப்பனிட் டிருக்கிறார்.                                                 (இராமகிருஷ்ண பரமஹம்சர்.)

 

3. எவனொருவன் உலகத் தூண்டுதல்களுக்குள் ளிருந்து கொண்டே பரிபூரணத்துவம் அடைகிறானோ அவனே தீரன்.                          (இராமகிருஷ்ண பரமஹம்சர்.)

 

4. சர்க்கஸ் வித்தையிலே சிறு பையன்கள் உயரச் சென்று ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டு சிறிதும் பயமின்றிச் சுற்றி வருவது போல, நீ ஈசுவரனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு உலக கடமைகளைச் செய்வாயானால் உனக்கு சிறிதும் பயமேயில்லை.

(இராமகிருஷ்ண பரமஹம்சர்.)

 

5. கோபத்தை சாந்தத்தால் வெல்லு, தீமையை நன்மையால் வெல்லு, உலோபத்தை தயாளத்தால் வெல்லு, பொய்யை மெய்யால் வெல்லு.                  (கௌதம புத்தர்)

 

6. நீ கொலை புரியாதே; விபசாரஞ் செய்யாதே; திருடாதே; பொய்சாக்ஷி சொல்லாதே. நீ உன்னை எவ்வாறு நேசிக்கிறாயோ அவ்வாறே பிறரையும் நேசி.           (கிறிஸ்து.)

 

7. பதினாயிர வருடங்கள் ஜீவித்திருக்கப் போவதாய்க் கருதி உன் வாணாளை யெல்லாம் வீணாளாய்க் கழிக்காதே. மரணம் உன் தலைமேலிருக்கிறது. நீ உயிருடனிருக்கும் போதே பிறருக்கு நன்மை செய். இது உன்னால் முடியும்.          (மார்க்க ஸ் அருலியஸ்.)

 

8. பெருமையில்லாமல் தாழ்மையாகவே இருக்கும்படி எனக்கு ஆண்டவன் கட்டளையிடுகிறார். மேலும் ஒருவர் மற்றொருவரை ஹிம்சிக்கக் கூடாதென்றும் அவர் எனக்கு அறிவிக்கிறார்.                                           (நபிநாயகம்.)

 

9. அடிமையாயிராதே, தைரியவானாய்ப் பிரகாசி, உண்மையுரைக்க அஞ்சாதே, நியாயத்தைச் செய்ய பயப்படாதே, உன் கடமையைச் செய் வதில் மரணத்திற்குக் கூட பயப்பட வேண்டாம்.                                        (தயாநந்த சரஸ்வதி.)

ஆற்காடு - இராஜரத்தின முதலியார், பி. ஏ.

ஆனந்த போதினி – 1923 ௵ - அக்டோபர் ௴

No comments:

Post a Comment