Monday, August 31, 2020

 

சிறுவர்க்குரிய சிறந்த உபதேசம்

 

1. உலகத்தில் மானிடராய்ப் பிறந்தவர்க்கு முக்கியமான துணை இரண்டுண்டு: -

 

அவை, கல்வி, செல்வம் என்பனவாம். கல்வியைப் பெற வேண்டியது மானிடர் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத முதற் காரிய மாகும். ஏனெனில், கல்வியில்லாதவன் உலகத்தில் குருடனுக்குச் சமானமாவன். குருடனுக்கு நல்லவழி, கெட்டவழி தெரிந்து நடப்பது கூடாமைபோலக் கல்வி யில்லாத கயவனுக்கு நன்மை, தீமை யுணர்ந்து நடப்பது கூடாமையாகும். நன்மை, தீமை உணராதவன் வாழ்வு பழிப்புக்கிடமாகும். பழிப்பிற்கு இடமாய் வாழ்வதிலும் உயிர் விடுவது நல்லதாம். கல்வி, நன்மை தீமைகளையும், நன்னெறி, தீநெறிகளையும் விளக்கித் துன்ப மொழிக்குந் தோழன். தர்மா தர்ம சொரூபங்களையும், அவற்றின் பயனையும், மனம், வாக்குகளுக் கெட்டாத பரம்பொருளின் இலக்கணத்தையும், சொர்க்க நரகாதி பதவிகளின் சுகதுக்கங்களையும் எடுத்துக் காட்டி நல்வழிப் படுத்துமொரு நல்ல குரு. 'பொருளிலார்க்கிவ்வுலகமில்லை'- என்பது முன்னோர் மொழி. ஆதலின், பொருள் இல்லையாயின் இவ்வுலக வாழ்வில்லை யென்றாயிற்று. இது ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் உணரக்கூடியது. இதனாலே தான் ஒளவைப் பிராட்டியார், திரைகட லோடியும் திரவியந் தேடு என்று கட்டளையிட்டனர். பொருள் உலக வாழ்விற்கு இன்றியமையாததென்று உணராமல் சோம்பித் திரிபவர் இடர்ப்படுவர் என்பது திண்ணம். சோம்பரென்பவர் தேம்பித்திரிவர் என்று படித்திருக்கிறீர்களல்லவா? ஆகலின் பொருளை எப்பாடுபட்டேனும் தேடக்கடவீர்கள். எப்பாடுபட்டேனு மென்றது நல்ல வழியில் எப்பாடுபட்டேனுமென்று கொள்ளல் வேண்டும். தீவினைவிட் டீட்டல் பொருள் என்பது ஒளவைப் பிராட்டியாரின் கட்டளையல்லவா? பணம் பல செய்யும்; பணமில்லாதவன் பிணம். பணமிருந்தால் பத்துப்பேர் வாவென்பார்கள்.'' கல்லானேயானாலும் கைப்பொருளொன்று ண்டாயின் எல்லோருஞ் சென்று எதிர்கொள்வர் -'' என்றார் ஆன்றோர். இவை போல் வழங்கும் முதுமொழிகள் செல்வத்தைப்பற்றிப் பலவுண்டு. அன்றியும் பணம் நினைத்ததை முடிக்கத் தக்க நேசனுக்கு நேராகும். சகல வின்பங்களையும் தடையற வூட்டும் தாயாகும். பணம் இத்துணை நன்மை பயப்பதெனினும் இது கல்வி என்னும் இன்னுமொரு துணைவனொடு சேர்ந்திருக்குமாயின் இகபர சுகமிரண்டும் தடையறக் கிட்டும். ஆகையினால், உலகத்தில் தேடத்தக்கவைகளுள் இவையிரண்டுமே சிறந்தனவாம்.

 

2. சத்தியம் தவறுமல் நடக்க முயலுங்கள்: -

 

சத்தியத்தைக் காக்க அரிச்சந்திரன் என்னும் வேந்தன் பட்ட பாட்டைச் சிந்தியுங்கள். சத்தியமுடையவனிடம் இலக்ஷமிதேவி வாசம் பண்ணுவள். இலக்ஷ்மிதேவியின் கருணையுண்டானபோது சகல பாக்கிங் முந்தானே யுண்டாகும். தயை, சாந்தம் முதலிய நல்ல குணங்களும் ஓங்கும். இந்த நல்ல குணமுடையவனுக்கு எங்கும் தடையற்ற மரியாதையும் புகழும் உண்டாகும். அவனுக்குப் பகைவர் இருக்கமாட்டார்கள். இம்மை மறுமை யிரண்டிலும் அவனுக்கின்பமே கிடைக்கும். ஆதலால் சத்தியத்தைப் போற்றுங்கள்.

 

 

3. மருந்து வேண்டாம்: -

 

கல், மயிர், தவிடு, உமி இவற்றுடன் கூடிய அன்னத்தைப் புசியாதே. அமிதபோஜனத்தை விலக்கு. மனதுக்குப் பெருங்கவலை கொடாதே. நெடுந்தூரம் நடவாதே. மல ஜலத்தை அடக்காதே. நன்றாய்ப்பழுக்காத பழங்களையும், அழுகிய பழங்களையும், பழைய கறிகளையும் உண்ணாதே. புசித்த பின்பு முழுகாதே. தூக்கத்தைக் கெடுத்துக்கொளளாதே. அசுத்த நீரை உபயோகிக்காதே. அதிக வெப்பத்திலும் பனியிலும் அலையாதே. பெருங்காற்றில் உலவாதே. சருகு இலை இவை யூறிய நீரில் முழுகாதே. அதிகமான பாரஞ் சுமக்காதே. நன்றாய் உழைப்பெடுத்துக்கொள். காலை இளவெயிலிற் காயாதே. இரவில் தயிர், கீரை முதலியவற்றை உபயோகியாதே. இவையன்றி விதிவிலக் கறிந்து நட. இவை கவனிக்கப்படின் வியாதி வரவொட்டாமல் காத்துக்கொள்ளலாம். மருந்து வேண்டாம்.

 

4. குருவை நம்பு: -

 

குருவே உன் முன் உருவங்கொண்டு வந்திருக்குங் கடவுள். குருவைச சிந்தித்து எந்தக்காரியத்தையுந் தொடங்கு. அப்படித் தொடங்கிய காரிய மெதுவும் தடையின்றிக் கைகூடும். குருமொழி மறவாதே! ''குரு மொழியே மலையிலக்கு'- என்பது போதனை– குருவை யல்லாமல் தெய்வம் பிறிதில்லை.

 

5. நல்ல சிநேகன்: -

 

சந்திரனிடத்துக் களங்கமிருக்கிறதல்லவா? அது சந்திரன் வளரும்போது வளர்வதும், அது தேயும் போது மறைவதும் பிரத்யக்ஷம். குளத்திலுள்ள அல்லி, கொட்டி முதலியன குளத்தில் நீர் நிறையும் போது உயர்ந்து நீர் குறையும்போது குன்றுகின்றன. தாமரை சூரியோதயமாகும் போது மலர்ந்து அது மறையும் போது வாடுகின்றது. "இவை போல், நண்பன் என்பவன் தன் நண்பனுக்குத் துன்பம் வந்த காலத்தில் தானும் அத்துன்பத்தை அனுபவித்து வந்து, இன்ப காலத்தில்தானுமுடனிருந்து அவ்வின்பத்தை அனுபவித்தல் வேண்டும். இப்படி நடப்பவனே உண்மை நண்பனாவானென்றறிக.

 
                     வரகவி - தி. அ. சுப்ரமண்ய பாரதி.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - டிசம்பர் ௴

 

   

 

No comments:

Post a Comment