Sunday, August 30, 2020

 

காலையில் – மாலை?

தி. சி. குழந்தைவேலன்

 

மின்னற் கொடி தான் விண்ணிலிருந்து நழுவி மண்ணில் விழுந்து விட்டதா? மேனகை தான் இந்திர சபையை வெறுத்து இறங்கி இங்கு வந்து விட்டாளா?

 

இப்படி அறிவைக் கலக்கி வியப்பில் வீழ்த்திவிடுகிறாள், அழகுக் குவியலாய் அமர்ந்திருக்கும் அம் மடமங்கை. உப்பங்கழிக்கரையில் உட்கார்ந்திருப்பதால், கடல் தெய்வந்தான் கன்னியுருக்கொண்டு கண்கொள்ளா வனப்புடன் காட்சியளிக்கிறதோ என்றும் திகைக்க வைத்து விடுகிறாள். ஆனால், சோகமெல்லாம் திரண்டெழுந்த வடிவமாய்த் தோன்றுகிறாள், அசோக மரத்தினடியில் அமர்ந்திருந்த சீதையைப்போல.

 

எழிலரசியாய் இலங்கும் அவளுக்கு அப்படி என்ன நேர்ந்து விட்டது? பட்டப் பகலில் இங்கு வந்து உட்கார்ந்திருப்பதன் நோக்கந்தான் என்ன?

 

வேறொன்றுமில்லை; காதலனைப் பிரிந்த கலக்கந்தான் அவளுக்கு. காதலன் வேற்றூர் சென்று விட்டான். தன் பிரிவால் காதலி துயரடைவாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும் கடமை பெரிதல்லவா? போர்புரியப் போய்விட்டான் காதலி தனித்திருக்கிறாள். அவளைத் துன்புறுத்துகிறது, காதல் நோய்.

 

இது, காலையிலே அரும்பும்; பகலிலே போது ஆகும்; மாலையிலே மலரும். இந்நோய் கொண்ட அவளுக்கு இரவில் கண்ணுறக்கம் ஏது? ஊராரெல்லாம் தூங்குவார்கள்; விலங்கு, பறவைகளெல்லாம் கண்ணுறங்கும். ஆனால், காதலியின் கண்ணிமைகள் ஒன்றோடொன்று ஒட்டமாட்டா. இதைவிட வேறு என்ன துன்பம் வேண்டும் அவளுக்கு? ஆகையால், மாலைக் காலத்தை எண்ணினாலே போதும். அவள் நெஞ்சு பகீரென்று பற்றும். ஏன்? மாலைக்குப் பிறகு தானே அக்கொடிய இரவு வருகிறது? இந்த நிலையில் ஒரு நாள் கழிவது ஒரு யுகமாகவே தோன்றுகிறது அவளுக்கு!

 

பகல் வேளையில் தலைவனையே நினைந்து புலம்பும் அவள், மாலையில் மன ஆறுதலின் பொருட்டுச் சுனைக்கரையிலும் உப்பங்கழிக்கரையிலும் சென்றிருப்பது வழக்கம். ஆனால், இன்று தனிமைத் துன்பம் மிகவும் வருத்தியதால், வழக்கத்திற்கு முன்பாகவே - பகலிலேயே-வந்து இயற்கைக் காட்சிகளைக் காணலானாள்.

 

நீலத்திரைக் கடலின் கோலத்தில் மனத்தைப் பறிகொடுத்து மணிக் கணக்காய்த் தன்னை மறந்து நிற்கும் இயல்புடையவள் அவள். ஓயாது வந்து கரையில் மோதும் அலைகளை நோக்கிய வண்ணம் சிந்தனையுலகிற் சென்று ஆழ்ந்து நின்று விடுவது முண்டு. உப்பங்கழியிலுள்ள நெய்தல் மலர்களைக் கண்டு அவள் முகமும் மலரும்; நாரைகளைக் கண்டு களிப்பாள்; பிடிப்பதற்காக அவற்றின் அருகிற் போய் அவை அஞ்சியோடுவதைப் பார்த்து கெக்கலி கொட்டி நகைப்பாள். ஆனால், இன்று ஒன்றிலும் அவள் பார்வை பதியவில்லை. உப்பங்கழிக்கரையில் வந்து உட்கார்ந்து விட்டாள் . ஊனக்கண் ஒன்றையும் நோக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் மனக்கண் விழிப்பாக வேலை செய்கிறது!

 

காதலன் தன்னிடம் முன்பு ஒழுகிய இன்ப நிகழ்ச்சிக ளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் அவள் உள்ளத்தில் உருப்பெற்று மாறி மாறித் தோன்றி இன்பம் செய்கின்றன, படக்காட்சி போல. ஒரு நொடியில் இவை மறைகின்றன. பிரிந்த காதலன் மீண்டும் வருகிறான். எதிர் சென்று அவனைக் கண்டு களிகூர்கிறாள், காதலி. பிறகு, காதலர்கள் கூடி மகிழ்கிறார்கள். இது அடுத்த காட்சி. இப்படி அடுத்தடுத்து எத்தனையோ இன்பக்காட்சிகள்.
இடையிடையே துன்பக் காட்சிகளும் தோன்றும். என் செய்வாள்? பிரிந்த காதலனின் பின்னால் தன் மனத்தையும் போக்கி விட்டாள் அப்பேதை!

 

அவள் வந்து உட்கார்ந்து நெடுநேரமாய் விட்டது. அதை அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அசையாமல் ஒரே நிலையில் இருக்கிறாள். உடம்பு அசையவில்லை; உள்ளம் தான் அசைகிறதே! நேரம் போவது எப்படித் தெரியும்?

 

பறந்து செல்லும் நாரையொன்று கத்தியது. அச் சத்தம், அவளை விழித்து வெளியுலகத்தைப் பார்க்கச் செய்தது. நாற்புறமும் சுற்றிப் பார்க்கிறாள். அவள் முகத்தில் வியப்பின் குறிபடர்கிறது; அச்சத்தின் அறிகுறியும் அத்துடன் கலக்கிறது.

 

''நான் பகற்பொழுதில் அல்லவா இங்குவந்தேன்! அதற்குள் மாலை நேரம் வந்துவிட்டதே! இஃதென்ன விந்தை! நான் வந்து கொஞ்சநேரம் தானே ஆயிற்று!'' என்று முணுமுணுக்கிறாள். உப்பங்கழியிலுள்ள நெய்தல் மலர்கள் இதழ் குவிந்திருப்பதைக் காண்கிறாள். காலையில் மலரும் நெய்தல் மலர் மாலையில் கூம்பும் என்பதை அவள் அறிவாள். அவளுக்கு ஐயமின்றித் தெரிந்து விட்டது, மாலைக் காலந்தான் வந்துவிட்டது என்று. 'இரவு என்னும் எமன் இதோ வந்து விட்டான் என்பதை முன்னமேயே அறிவிக்கும் தூதன் அல்லவா இது!' என்று எண்ணியதும் அவள் இதயம் சோர்ந்துவிட்டது; உடல் தளர்ந்து விட்டது. கோபம் பீறிக்கொண்டு எழுகிறது மாலைப் பொழுதின் மீது. நிந்தையர்கப் பேசுகிறாள்.

 

“மாலைப்பொழுதே! உனக்கு இரக்கமே கிடையர்தோ? என் காதலர்- குளிர்ந்த கடற்கரையிலுள்ள நாட்டின் தலைவர் - என்னைப் பிரிந்து சென் றிருக்கிறார். இப்பொழுது பிரிந்தாரை வருத்தும் நீ, இது தான் சமயமென்று உன் விருப்பம்போ லெல்லாம் வந்து துன்புறுத்தலாமென்று எண்ணியிருக்கிறாயா? கேள்வி முறையே கிடையர் துபேர் லிருக்கிறதே! வழக்கம்போலவே வருகிறாயென்று எல்லோரும் நினைக்கும்படி கடும்பகலிலேயே வருகிறாயே! இந்த ஏமாற்று வித்தையை எங்கே கற்றாய்? உன் முறை கேட்டைக் கேட்பார் ஒருவருமில்லையா? இதோ வளைந்து செல்லும் உப்பங்கழியிலுள்ள நெய்தல் மலர்கள் குவிந்து விடும்படி இனி, நீ காலையிலேயும் கூட வருவாய் போலிருக்கிறதே! அப்படி வந்தாலும் உன்னைத் தடுப்பார் யார்? ஒருவருமில்லை!"


“தண்கடல் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையில்
கடும்பகல் வருதி, கையறு மாலை!
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே!"


[சேர்ப்பன்- நெய்தல் நிலத் தலைவன்; பண்டையில் – முன் வருங்காலத்தில் வந்தாற்போல; வருதி- வருகிறாய்; கையறு மாலை - செயலறுதற்குக் காரணமாகிய மாலைக்
காலமே! கொடுங்கழி-வளைந்து செல்லும் உப்பங்கழி; கூம்ப-குவிய; களைஞர்- விலக்குவோர்.]

 

மாலையை நிந்திக்கிறாளா, தன் மன வேதனையை வெளியில் கொட்டுகிறாளா? ஒரு குற்றமும் புரியாத மா பாலைக் காலம் அவளுக்குப் பெருங் குற்றவாளியாகவும் கொடுங்கோல் அரசன் போலவும் தோன்றுவது ஏன்? காதல் செய்யும் விளையாட்டா இது? பிரிந்த காதலரின் உள்ளத்தில் என்னென்னவோ விந்தைகள் நிகழ்கின்றன! சந்திரன் நெருப்பாய்க் காய்கிறான்! தென்றல் சுடுகிறது சந்தனம் செந்தீயாய்க் காந்துகிறது! இப்படிப் பொருள்களின் நிலையே திரிந்துவிடுகின்றனவே, பொழுதின் நிலை தானா மாறியதாகத் தோன்றாது? மங்கையின் உள்ளத்தில் மாலைப் பொழுது பக்லில் வந்துவிட்டது போல் தோன்றியதில் வியப்பில்லை. “காலையிலும் வருவாயோ" என்று வினவுகிறாளே. அதில், அவள் உள்ளத்தின் உணர்ச்சி பொங்கிய வியப்புடன் குளிர்கிறதல்லவா? காதலியின் பிரிவாற்றாமையை எவ்வளவு நன்றாய் எடுத்துக் காட்டுகிறது, இச் செய்யுள்!

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

No comments:

Post a Comment