Monday, August 31, 2020

 

சமத்துவ உரிமை

 

இந்தியா விழித்துக் கொண்டது. தேசமெங்கும் சுதந்தர முழக்கம்! சீர்திருத்தப் பேச்சு | சுயமரியாதைக் கிளர்ச்சி இத்தகைய உணர்ச்சி ஆங்கிலக் கல்வியின் பலனாக எழுந்தது எனக் கூசாது கூறலாம். தற்கால உலகில் மேனாட்டுப் புதிய கொள்கைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. மேனாட்டாருடைய சமூக ஒழுக்க வழக்கங்களுள் சில நமக்குப் பொருந்தாமல் இருக்கலாம். மக்கட்குச் சம உரிமை வழங்க வேண்டும், சுதந்தரமாக வாழ வேண்டும், ராஜீய அமைப்பும் நிர்வாகமும் குடிகள் கையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கடைப்பிடித்துள்ள உண்மைகள் மிகுதியும் போற்றத்தக்கன. சமூக ராஜீய அபிவிருத்தி விஷபத்தில் மற்றைத் தேசங்களோடு இந்தியாவை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. நமது நாட்டை எல்லோரும் ஒரு சந்தைக்கடையாகவே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நாமும் தினசரி வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றிற் கெல்லாம் அந்நிய நாடுகளையே எதிர் பார்க்க வேண்டிய நிலைமையிலிருந்து வருகிறோம். உலக வர்த்தகமோ பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களோ சாஸ்திரியமான விவசாய முறைகளோ நம் நாட்டிற்கு இன்னும் அந்நியமாகவே இருக்கின்றன. இவற்றை ஸ்திரமாக ஏற்பாடு செய்யத்தக்க கூட்டுறவுத்தத்துவம் மக்கள் தெரிந்து கொள்ளவில்லை. இவற்றை வளர்க்குங் கல்வி முறை நமது நாட்டில் இல்லை. இப்போது அநுஷ்டானத்திலிருந்து வரும் படிப்புமுறை சர்க்கார் உத்தியோகங்களுக்குத்தான் பயன்படுகிறது. நாட்டின் அறிவைப் பெருக்கி வறுமையைப் போக்குவதற்கானதிட்டங்கள் சட்டசபைகளில் வரும்போது பணமுட்டு குறுக்கே வந்து விடுகிறது. அங்கத்தினர்கள் மூச்சு விடாமல் அடங்கிக் கொள்ள வேண்டியவர்களாகவே யிருக்கிறார்கள். இந்திய அரசியல் நிர்வாகம் வருவாய்க்கு மீறிய செலவில் நடைபெறுகிற தென்றே சொல்ல வேண்டும். 'தீவிர தேசீய' வாதிகள் அன்னிய ஆதிக்கத்தைத் தொலைப்பதே இவற்றிற்கெல்லாம் மருந்து என்கிறார்கள். நமக்குள்ளேயே சமத்துவ உரிமையின்றி எவ்வாறு அன்னிய ஆதிக்கத்தை ஒழிப்பது? என்பதுதான் எமது கேள்வி.
 

நமது புகழ்படைத்த பாரத அன்னையின் திருமேனியில் சாதி சமய சம்பிரதாயங்கள் வேற்றுமை என்னும் பெருங்கழலையைத் தோன்றச் செய்து நீண்ட நாட்களாகத் துன்பம் செய்து வருகின்றன. இந்த நோயை எவ்வளவு மூடி வைத்தாலும் பெருந்துன்பத்துக்கே காரணமாகும். ஆதலால் அதைக் கீறி விட்டு ஆற்ற வேண்டியது தான் பாரத மக்களுடைய முதற்கடமை யாகும். வேதங்களிலும் உபநிடதங்களிலும் ஜாதி சமய வேற்றுமை கிடையாதென சாஸ்திர விற்பன்னர் முடிவுகட்டியிருக்கின்றனர். ஆரியருள்ளும் வருணப்பாகுபாடு பிற்காலத்தில் அவசியங் கருதி ஏற்பட்டதாகும். நாளாவட்டத்தில் அதில் சுயநலம் புகுந்து சமரசத்தைக் கெடுத்து விட்டது. கோக்கலே, திலகர், காந்தியடிகள் சதாசிவஐயர் போன்ற உத்தமர்கள் இவ்வுண்மையை அப்படியே ஒப்புக் கொள்ளுகின்றனர். தமிழ் நாட்டிற்கு இவ்வருணாசிரமக் கொள்கை மிக மிகப் புதிய விஷயமாகும். பண்டைய சங்க இலக்கிய இலக்கணங்களை ஆராய்வோர் இவ்விஷயத்தை நன்கு உணர்வர். ஆனால் இப்போதுள்ள பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்திலேயே ஆரியக் கோட்பாடு சிறிது நுழைந்திருக்கிறது. இதனால் தமிழகத்திற்குள் ஆரிய நாகரிகம் எப்போது வந்தது என்ற விஷயத்தைத் தீர்மானிப்பது சரித்திர வல்லார்க்குக் கஷ்டமான காரியமாகவே இருக்கின்றது. பொருளிலக்கணம் தமிழ் மொழிக்கே சிறப்புரிமை வாய்ந்தது. மற்றெம்மொழியிலும் இது கிடையாது. இந்தப் பொருளிலக்கணம் தமிழ்நாட்டு மக்களுடைய பழைய சமத்துவ வாழ்க்கை முறையின் பிரதிபிம்பம் என்றே சொல்லலாம். சாதி சமய பேத நாற்றம் கொஞ்சமேனும் அதிற் காணமுடியாது.

 

தமிழ் மக்கள் வகுத்துக் கொண்டு வாழ்ந்த முறைப்படி ஐந்து வகை நிலங்களிலும் வாழ்ந்த மக்களை அடியிற் குறிப்பிடுகின்றோம். நேயர்கள் உண்மை உணர்வாராக.

 

குறிஞ்சிநில மக்கள்: - கானவர், வேட்டுவர், குன்றுவர் - குறத்தியர், வேட்டுவித்தியர். தலைமக்கள்: - வெற்பன், சிலம்பன், பொருப்பன், கொடிச்சி.

முல்லை நில மக்கள்: - கோவலர், இடையர், ஆயர், பொதுவர் - இடைச்சியர், கோவித்தியர், ஆய்ச்சியர், பொதுவியர் - தலைமக்கள். அண்ணல், தோன்றல்

மருதநில மக்கள்: - களமர், உழவர், கடையர் - உழத்தியர், கடைசியர். தலைமக்கள் மகிழ்நன், ஊரன், மனையோள்.

நெய்தல் நில மக்கள்: - நுளையர், திமிலர், பரதவர் - நுளைத்தியர், பரத்தியர். தலைமக்கள். சேர்ப்பன், துறைவன்.

பாலை நில மக்கள்: - எயினர், மறவர் - எயிற்றியர், மறத்தியர். தலைமக்கள். மீளி, விடலை, காளை.

 

மேற் குறிப்பிடப் பெற்ற எந்நில மக்களுள்ளும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஒருவருமில்லை என்பது தெளிவாக விளங்கும். மிகப் பிற்பட்ட காலத்திய நம்பி அகப்பொருள் முதலிய அகப்பொருளிலக் கணங்களுள் இந்நான்கு வருணத்தவரும் இடைச்செருகி வைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்விஷயத்தை விரிக்கிற் பெருகும். மற்றொன்று விரித்தலாகவும் முடியும். மேற் கூறியவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஜாதி மத பேத மானது தேவகட்டளை வேதகட்டளை அல்லவென்பதே யாகும். கால தேச வர்த்தமானங்களுக் கேற்ப ஏற்படும் மாறுதல்களுக்கு இடங்கொடுக்க மக்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். பழைய வழக்கங்கள் சமத்துவத்தால் சித்திக்கும் புதிய முன்னேற்றங்கட்குத் தடை செய்யாமலிருக்க வேண்டும். தற்காலம் எந்த வகையான அபிவிருத்திக்கும் இவை முட்டுக் கட்டையாக முன்னிற்கின்றன. தேசத்தில் எங்கு பார்த்தாலும் அடிமைப்பு த்தியே மிஞ்சி நிற்கின்றது. சமத்துவ உரிமையின்றியே பல நூறாண்டுகள் வாழ்ந்து பழகி விட்ட படியால் சமூக ராஜீய சுதந்தர இன்பத்தைப் பற்றி எவ்வளவு உபதேசம் செய்தாலும் ஜனங்களுக்கு ஏறுவதில்லை. சாதாரணமாக ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். தாழ்த்தப்பட்டோர் தாங்கள் மற்றவர்கட்கு அடிமை செய்யவே உலகத்தில் ஜனனம் எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.'' பரவா இல்லை! நீங்கள் தெருவில் வரலாம்; எங்களைத் தொடலாம்; கொஞ்சம் சுத்தமாயிருங்கள்; உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்கட்கு அனுப்புங்கள்; சேர்த்துக் கொள்ளுவார்கள்; சர்க்கார் உத்தரவே வந்திருக்கிறது "என்றால்'' ஐயோ! இதென்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்! உங்கள் தெருவில் நடந்தால் உங்களைத் தொட்டால் சாமி சும்மா இருக்குமா? குடியைக் கெடுத்துப் போடாதா? அழுக்காக இருப்பது எங்கள் ஜாதியாசாரம். எங்களுக்குப் படிப்பு என்ன செய்ய? பள்ளிக்கூடங்கட்குப் பிள்ளைகளை அனுப்பினால் குடியானவர்களும், கிராமாதிகார எஜமானரும் வெளுத்து வாங்கிவிட மாட்டார்களா? " என்றுஅவர்கள் சொல்லுகின்றனர். இந்தக் குடியானவர்கள் முதலியோர் பிழைப்பும் அவர்களுக்கு மேலானவர்கள் என்று சொல்லப்படுவோரிடம் இப்படித்தானிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

 

அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேசினால் ''காந்திக்குப் பிடித்த பைத்தியம் யாருக்குப் பிடித்திருக்கிறது? இவரால் என்ன முடியும்? வெள்ளைக்காரன் குண்டு போட்டுச் சுட்டு விட மாட்டானா?'' என இன்றைக்கும் பெரிய மிராஸ்தார்களுங்கூட இப்படியே சொல்லுவதைக் காணலாம். ஜன நாயகதத்துவம் மக்கட்கு விளங்கி விட்டது. இனி வெள்ளைக்காரன் மூட்டை கட்டவேண்டுவது தான் பாக்கி என்று வாய்ப்பறை சாற்றும் "தலைவர்கள்'' ஓட்டுவாங்கும் தினுசு வெகு விநோதமாயிருக்கும். சில ஒட்டர்கள் போலிங்கு ஸ்டேஷனில் போலீஸ் சேவகன் நிற்பதைக் கண்டு பயந்து ஓட்டம் பிடித்து விடுவார்கள். தேர்தலுக்கு மூன்று மாதங்கட்கு முன்னிருந்தே பாடம் ஓதி வைத்துக் குறிப்பிட்ட தேதியில் காபி உப்புமாவைப் போட்டுத் திணித்து மோட்டாரில் வைத்துக் கூட்டிக் கொண்டு வந்து " என்ன ஐயா ஞாபகம்! செட்டியார், முதலியார், ஐயர்; எங்கே திருப்பிச் சொல் பார்ப்போம் என்று கேட்டு அவர்களிடம் அரைகுறையான பதில் வாங்கிக் கொண்டு ஏஜண்டுகள் உள்ளே ஓட்ட, போலிங்கு ஆபீஸர் முன்னிலையில் திக்பிரமை கொள்ளுகிற ஓட்டர்களும் உண்டு. அநேக இடங்களில் கள், சாராயம் ஊற்றி ஓட்டுச் சேகரம் செய்ததையும் யாமறிவோம். முனிசிபல் தேர்தலில் ஓட்டுக்கு ஒரு பவுன் வீதம் அநேகருக்குக் கொடுத்த இடமும் சென்னை மாகாணத்தில்தானிருக்கிறது. காமன் கொண்டாட்டத்தில் எரிந்த கட்சி எரியாக் கட்சிச் சண்டை எலெக்ஷன் சண்டைக்கு எவ்விதத்திலும் ஈடாகாது. முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு, ஜில்லா போர்டு தேர்தல்களுக்கே பல ஆயிரம் ரூபா மூட்டை கட்டிக் கொள்ள வேண்டும். சட்ட சபைகளைப்பற்றிக் கேட்பானேன்? இவ்விதம் ஒன்றுமறியா மக்களை ஏமாற்றுவதா சமரசம் ததும்பும் ஜனப்பிரதி நிதித்துவம்? என்று கேட்கின்றோம்.

 

தேசமானது அந்நிய ஆதிக்கத்தால் பொருளாதார விஷயத்தில் திண்டாடிக் கொண் டிருக்கிறது என்பதுண்மையே. ஆனால் இதை எதிர்த்து நின்று நலம்பெறும் சக்தி சமூக சமத்துவ உரிமையில் தான் தங்கியிருக்கிறது.

 

நம்மை ஆள்வோர் சுயராஜ்யம் கட்டாயம் கொடுத்து விடுவதாகவும் அதற்கான முறையில் தேசத்தைப் படிப்படியாகப் பழக்கி வருவதாகவும் சொல்லுகின்றனர். அது எப்படியோ இருக்கட்டும் நமது சக்திக் குறைவை ஒரு உதாரணத்தால் விளக்கிக் காட்டுகிறோம். இரட்டை ஆட்சி இதுவரை இந்தியாவில் எத்தகைய பலனைக் கொடுத்திருக்கிறது என்பதைக் கவனித்து இன்னும் அதிகப்படியான சீர்திருத்தங்களை வழங்க சைமன் கமிஷன் சமீபத்தில் வந்து போயிற்று. அதை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று ஒரு சில " தலைவர்கள்'' சொன்னார்கள், சொல்லுகிறார்கள். இந்தியா சட்டசபையும் சில மாகாண சட்டசபைகளும் பகிஷ்காரத் தீர்மானத்தை நிறை வேற்றின. ஆனால் சைமன் கோஷ்டிக்கு நடந்த விருந்துகளைக் கண்டு எல்லா பகிஷ்காரத் " தலைவா " களுக்கும் வாயில் நீர் ஊறிற்று. இந்தியா முழுவதிலுமுள்ள சகல வகுப்பினரும் கமிஷனை ஆடம்பரமாக வரவேற்றதைக் கண்டு ஏமாந்து அவர்கள் மனமொடிந்து போனார்கள். அந்தக் கமிஷன் சமீபததில் வரப்போகிறது. பகிஷ்காரஞ் செய்த சட்டசபைகள் முதல் எல்லாச் சட்ட சபைகளும் அதனோடு ஒத்துழைப்பதற்கு கமிட்டிகளை நியமித்துக்கொண்டு வரிந்து கட்டி நிற்கின்றன. பார்ப்பனா, பார்ப்பனரல்லாதார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய எல்லா வகுப்பினரும் அதன் முன் சாட்சியங் கூறத் தயாராயிருக்கின்றனர். இதில் இன்னொரு வேடிக்கை! அதைப் பகிஷ்கரித்துச் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் எனற'' தலைவர்கள் எல்லோரும் மறைமுகமாக வேறு சாக்குவைத்து அவசரமாக தேசீயத்திட்டம் தயாரித்து எல்லாருக்கும் முன்னரே சயர்ப்பணம் செய்து விட்டனர்! நேயர்கள் இவ்விஷயததைச் சற்றே ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இந்நிகழ்ச்சிகள் தேசத்தின் பலக்குறைவையும் ஐக்கிய மின்மையையும் வெளிப்படுத்த வில்லையா? இம்மாதிரி நமது தேசத்தில் அரசியல் விஷயத்தில் மற்றவர்கள்நகையாடத்தக்க சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன. இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் என்ன? அரசியல் விடுதலையை விட சமூக சமத்துவ உரிமையே அவசியமான அவசர விஷயம் என்பதே யாகும். தற்காலத்தில் சரியான பிரதிநிதித்துவமாவது பலரும் நம்பத்தக்க ஜனத்தலைவர்களாவது இல்லை என்று சொல்லுதல் குற்றமாகாது. இப்போது காணப்படுகிற பிரதிநிதித்துவமும், தலைமையும், பண முறுக்கின் பயனாக ஏற்பட்டவையே யொழிய ஜன ஊழியத்தின் பயனாக உள்ளவையல்ல. இவை சமூகசமத்துவ உரிமையினாலேயே ஏற்படும்.

 

சமூக வாழ்வுக்குக் கேவலமாக மதிக்கப்படுவோருடைய தொழின் முயற்சியும் ஊழியமும் இன்றியமையாத சாதனங்களா யிருக்கின்றன. ஆதலால் ஒவ்வொருவரும் தொழிலுக்குமரியாதை செய்தே தீர வேண்டும். ஜாதியில் உயர்வு தாழ்வு கறபித்துக் கொண்டு மக்களை இழிவுபடுத்துவோர் தங்கள் இன்பவாழ்வுக் காதாரமான தொழின் முறைகளையே இழிவு செய்கின்றவர்களாகிறார்கள். இவ்வித அறியாமையே நமது தேசத்தைப் பன்னெடு நாட்களாக அடிமைக் குழியில் ஆழ்த்தி வருகின்றது. ஏதோ ஒரு வகையில் எந்த நாட்டிலும் உயர்வு தாழ்வு இருந்து கெண்டுதானிருக்கும். அது அவரவர் அறிவு ஆற்றலைப் பொறுத்த விஷயம். இல்லாத ஒன்றைக் கற்பித்துக் கொண்டு கொடுமை செய்வது கூடாதென்றே நாம் வற்புறுத்துகிறோம். ஒரு வகுப்பினர் தான் கற்க வேண்டும். இன்னொரு வகையார் போர் செய்ய வேண்டும். வேறொரு ஜாதியார் வியாபாரம் செய்ய வேண்டும். மற்றவர் ஊழியஞ் செய்ய வேண்டும் என்ற விதி சிருஷ்டியின் நோக்கத்தையே பாழ்படுத்துவதாயிருக்கிறது. இவ்விதி எல்லாருக்கும் பொதுவான தெய்விக சன்மார்க்கத்தை யுணர்த்த வந்த மதங்களின் பேரால் வழங்குவது மிகவும் விந்தையாக இருக்கிறது. நம் நாட்டுப் பெரியோர் ஜடப் பொருள்களிலும் தெய்வத்தன்மை காணும் தத்துவங்களைப் போதித்திருக்கின்றனர். இக்காலத்தில் அத்தத்துவங்களை உயர்ந்தவராகக் கருதப்படுவோர் அறவே ஒழித்து விட்டு லௌகிக ஆடம்பர போகங்களைத் தேவைக்கு மீறிக்கையாண்டு வருகின்றனர். இதே சமயத்தில் தாங்கள் உதறித் தள்ளி விட்ட போலிச் சம்பிரதாயங்களால் பாமர மக்களைத் தலைதூக்கமுடியாமற் செய்தும் வருகின்றனர்.

 

மக்கள் நிலையை ஆராயுமிடத்து நமது முன்னேற்றத்துக்கு எவ்வளவு தூரம் அரசினரோடு ஒத்துப்போகக் கூடுமோ அவ்வளவு தூரம் கொஞ்சக் காலமாவது ஒத்துழைத்துத்தானாக வேண்டும். உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களும் அரசினரும் பிற்போக்கான மக்கட்குக் கல்வி புகட்டத்தக்க சௌகரியமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சீர்திருத்த விஷயத்துக்காக உழைக்கும் பத்திரிகைகளுக்கு எல்லாரும் ஊக்கமளிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பேரறிஞராக இருப்பவர் மற்றவர்களையும் தங்களைப் போலாக்க தியாக உணர்வுடன் பாடுபட வேண்டும். பொருட் செல்வம் வாய்ந்தவர் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தாராளமான திரவிய உதவி புரிந்து ஒவ்வொருவரையும் தனவந்தராக்க முயற்சிக்க வேண்டும். சமய சாஸ்திர வல்லார் எல்லா மக்களையும் ஒன்று படுத்தும் திருத்தொண்டே தங்கள் பிறவிப்பயனாகக் கருதி உழைக்க வேண்டும். கடவுள் தந்தை; மக்களெல்லாரும் உடன் பிறப்பாளர் என்ற சகோதரத்துவ உணர்ச்சியைப் பல விதத்திலும் வளர்க்க வேண்டும். இதனால் தேசீயம் மிகவிரைவில் வளரத் தொடங்கும். இதன் உச்ச நிலை தான் சமத்துவம் எனப்படும். நமது கோரிக்கைகளை எல்லாம் திருவருள் கூட்டிமுடிப்பதாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment