Sunday, August 30, 2020

 

காரி கிழாரின் கவித்திறம்

(K. V. சிவசுப்பிரமணியன். B.A.,)

கதிரவன் கால் கொண்டெழுந்து குணதிசைச் சிகரம் வந்தடைந்தான். காசினி முழுவதும் கவினுறு ஒளி பரவியது. ஞாலமெங்கும் விளங்கிய நீலவிருள் ஒழிந்தது. பொருள் வயிற் பிரிந்த தலைவன் வரவைக் கண்டு உவகை பூக்கும் தையலார் முகம் போல பொய்கைகளிலே புதிய தாமரை மலர்கள் பூத்தன. மாந்த ரனைவரும் தத்தம் தொழின் முறைக்கு ஆவன புரிவாராயினர்.

 

வையை என்ற பொய்யாக் குலக் கொடியால் வளம் பெற்ற மதுரைமா நகரில் கோலோச்சிக் குடி புறங்காத்து வந்த பாண்டியன் பல்யாகசாலை முது குடுமி பெருவழுதியின் அரண்மனையில் அறிவரும் அமைச்சரும், முனிவரும் புலவரும் கூடி நூலாராய்ச்சியிற் புகுந்தனர். பாண்டிய மன்னனும் உரிய காலத்தில் வேத்தவையை அடைந்தனன். அஞ்ஞான்று அவன் குழுமியிருந்த அருஞ் சொற்கலைஞர் பலரும் சொற் போரிட்டனர். செழியர் பெருமானும் செந்தமிழ்ப் புலவரின் செஞ்சொ லமுதுக்குச் செவி சாய்ப்பானாயினன். வெற்றி பெற்றாற்கு வேண வெலாம் தருவானாயினான்.

 

இங்ஙனம் இம் மன்னன் புலவர்க்குப் புரவலனாக இருப்பதைக் கேள்வி யுற்ற காரி கிழார் என்னும் புலவர் அவனைக் காணச் சென்றார்; அப் புலவர் பெரியார் தாளாண்மைபின் மிக்க வேளாண் குலத்தினர்; அல்லன நீக்கி நல்லன நவிலும் நாவன்மை படைத்தவர்; செந்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உளத்தினர்; நாடெங்கும் சென்று நல்லோர் பலரின் நட்பினைப் பெற்று நற்குணங்கட் கெல்லாம் உறைவிடமாய்த் திகழ்ந்தவர்; தமிழணங்கின் தளையை நீக்கத் தாழா துஞற்று பவர்.

     

புலவர் பெருந் தகையாகிய காரி கிழாரது வருகையைச் செவி யுற்ற செழியர் கோமகன், அவரை உரிய முறையி லழைத்து வரச் செய்து வணங்கி இருக்கை கல்கினான். பிற புலவர்களும் அவரை அக' மகிழ்ச்சியோடு வரவேற்றனர். பாண்டியன் அவரை நோக்கி, "பெரும! எம் போன்றரை இடித் துரைக்கும் பெற்றி வாய்ந்த நும் போன்ற புலவர் குழாத்தினர் வரவு நல்லவரவாகுக. தாங்கள் எளியேனது அவைக்கு எழுந்தருளியதன் நோக்க மென்ன? முன்னிய காரியத்தை முட்டின்றி முடிக்கக் காத்திருக்கிறேன்
என்றான். காரி கிழார் எழுந்து நின்று "பொதியப் பொருப்பின் புகழொடு பொருந்திய புண்ணியர் குடியிற் பூத்த புரவல்! இரவலராகிய எம் போன்றார்க்குப் புரவலன் எனவும், தமிழணங்கின் சங்கத்தை யமைத்தோர் வழித்தோன்றல் எனவும் கேள்வி யுற்று நேரிற் கண்டு களிக்கலா மென வந்தனன். தமிழ்ப் பெருங் குடியில் பிறந்த பெருமை எம தாகும்; அத் தகையினர் பலரை ஆதரித்தவர் வழியிற் றோன்றிய பெருமை நினதாம். நாட்டின் நலத்தின் பொருட்டு நின் செங்கோல் செழிப்பதாக” எனக் கூறி" வடாஅது பனிபடும்
நெடுவரை' என்ற வாழ்த்துரைச் செய்யுளைக் கூறுவாராயினார்.

 

அது போழ்து அங்கிருந்த புலவர் பெருமக்கள் அச் செய்யுள் நடையினைக் கூர்ந்து நோக்குவாராயினர். அதைச் செவி மடுத்த அரசன் எழுந்து ''புலவர் பெருந் தகையே! சிறிய இனிய சொற்களில் அருங் கருத்துக்கள் பல வற்றை அமைக்கும் ஆற்றல் வாய்ந்த புலவீர்! எம்முடைய சிற்றறிவில் நமது செய்யுள் நயம் தெள்ளிதின் விளங்காமையின் உமது செய்யுளுக்கு உமது வாயினின்றே பொருளை எதிர் பார்க்கிறேன்'' எனக் கூறி அமர்ந்தான்.
கற்பகக் கவிஞராம் காரி கிழார், காவலன் கழறிய மொழிகளைச் சிரமேற்றாங்கி
எழுந்து நின்று பின் வருமாறு சொன் மாரி பொழிந்தார்: -

 

"வய வேந்தே! யான் இச் செய்யுளில் நினது குடிப் பெருமையையும் நினது புகழையும் தெள்ளிதின் விளக்கியுள்ளேன். நினது அளவிலாப் புகழும் துகளிலாக் கீர்த்தியும் வடதிசையின் பனிமலைக் கப்பாலும் தெற்கில் குமரிக் கப்பாலும் மேற்கில் மேலாழிக்கப்பாலும் கிழக்கில் சகரர் தொட்ட சாகரத்திற் கப்பாலும், பாதாள லோகத்தின் கீழும், மேலே கோ லோகத்தின்மேலும் பரந்துளது என முதல் எட்டடிகளில் கூறினேன். அது மெனில் விளக்குதும். ஒரு மொழி வைத்துலகாளும் உத்தமப் பெரு வழுதியாகலின் உனது புகழ் நம் நாட்டினுள் அடங்காது அயல் நாடுகளிலும் பரவுதல் முறையே. வேள்விகள் செய்து விண்ணவரை மகிழ்வித்ததால் விண்ணுலகங்களிற் பரவியுள தெனவும், ஆழிக்கு அப்பால் அமைந்துள்ள அயல் நாடுகளுக்கு தமிழ் நாட்டு மரக் கலங்கள் சென்று வாணிபம் புரிதலின் கடற்கப்பாற் பரவிய தெனவும், வட வெல்லையாம் பனிமலையில் கயற் பொறி பொறித்து வடதிசை மன்னரை நடுங்கச் செய்தாயாகலின் இமயமலைக்கு வட பாலும் நினது புகழ் பரவியுள்ள தெனக் கூறினேன். இனி, நீ கோடற் குரியநன்னெறி இன்ன தென பின்வரும் அடிகளில் கூறினேன். விவகாரங்களில்
நியாயங் கூறுங்கால் துலைக் கோலின் முள்ளைப் போலும் கூற்றுவனைப் போலும் நிற்பது நினது கடமையாம். ஒழுகு வாயாயின் படை குடிகூழ் அமைச்சு நட்பு அரண் என்ற ஆறும் வளரும் அரிய அரண்கள் அகழிகள் பலவற்றை அடக்கிக் கொண்டு அவற்றிலுள்ள அளவிறந்த பொருள்களை வறியோர்க்கு வழங்குக. நினது வெண்குடை வேறெங்கும் வணங்குதலில் தாய் ஓங்கிப் புகழ் பெறுமாயினும் முக்காலமு முணர்ந்த முனி புங்கவரை
யும், நுதல் விழி காட்டத் திறையோன் கோவிலையும் வலம் வருங்கால் பணிக. ஒருவருக்கும் வணங்காத நினது முடி ஒன்று புரி கொள்கை முத்திப்பேணும் இரு பிறப்பாளராம் அந்தணர் ஆசி கூறுங்கால் வணங்குக. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும், செல்வர்க்கே செல்வம் தகைத்து பொய்யா மொழியன்றோ? நினது மாலை வாடாத் தன்மைத் தாகிலும் எதிரியின் நாடுகளை எரித்த புகையில் வாடுக. வேற்றரசன் முன் அங்காத வெகுளி யுடையா யாயினும் நினது சினம் பெண்டிரின் புலவிமுன் மாறுக. இங்ஙனம் அகம் புறம் எனும் இரு துறைகளிலும் வெற்றி பெறுக. பல திறப்பட்ட
வெற்றியை யுடைய வள்ளன்மையிற் சிறந்த பாண்டிய மன்ன! உலகம் உள்ள நாள்ளவும் உதிக்கும் ஆதித்தன் போலவும், தாரகை கடுவண் மேவும் தனி முழு மதியம் போலவும் வாழ்வாயாக என்று வாழ்த்துக் கூறினேம். கெடு முடிச் செழிய! இங்ஙனம் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருள்களையும் விளக்கும் இச் செய்யுளையும் நின் புகழோடு பொருத்தி மார்பி லணைந்து எமை ஆதரிக்க வேண்டுகின்றேன்.

     

காரி கிழாரது சொற் பொழிவைச் செவிவாயாக நெஞ்சுகளனாக பருகிய புரவலனும் புலவர்களும் ஆனந்த மேலீட்டால் அக மகிழ்ந்து மெணனமாயிருந்தனர். பின்னர் அரசன் எழுந்து “புலவீர்! இன்றே தமிழ்ச் தெய்வத்தின் தனிப் பெருந்திருநாள். நும் செய்யுளுக்கு யானியற்றும் கைம்மாறு யாதுனாது? நமது அருளுரையை அறவுரையாகக் கொண்டு யான் வாழக் கருதியுள்ளேன்” எனக் கூறி ஆயிரம் பொற் காசுகளையும் அழகிய தோர் பூந்தகிலையும் பரிசிலாக அளித்தான். பின்பு அரசன் புலவர் கூட்டத்தை நீத்து அரசியல் மண்டபத்தை யடைந்தான். அன்று முதல் காரி கிழார் பாண்டி நாட்டுப் புலவராக வாழ்ந்து வந்தார்.

 

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜுன் ௴

 

 



No comments:

Post a Comment