Monday, August 31, 2020

 

சர். பிரோஜ்ஷா மர்வான்ஜீ மேதா

(ஶ்ரீ லக்ஷிமி காந்த எழுதியது)

 முன்னுரை.

இளமைப் பருவம்.

 

அரும் பெருங் கிழவர் தாதாபாய் நௌரோஜிக்கு அடுத்தவராக சர் பிரோஜ்ஷா மர்வான்ஜி மேதாவைக் கூறலாம். இவர் பம்பாயில் 1845 - ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4 - ம் தேதி பிறந்தவர். தாய்மொழியில் தக்க பாண்டித்யமும் வணிகத் திறனுமுடைய இவரது தந்தையார் பம்பாயில் காமா கம்பெனியின் பாத்யஸ்தரான ஓர் வியாபாரி. 1861 - ல் மேதா'மெட்ரிகுலேஷன்' பரீக்ஷையில் தேர்ந்தார். 1864 - ல் " எலிபின்ஸ்டன்' கலாசாலையில் பி. ஏ. பரீக்ஷையிற்றேறி மெத்தப் படிப்பாளியானார்; அடுத்த ஆறாவது மாதத்தில் எம். ஏ. பரீக்ஷையிலும் தேறினார். பம்பாய் மாகாணத்தில் தெம்பாய் வெளிப் போந்த தேசாபிமானிக ளனைவரும் இதே "எலிபின்ஸ்டன்' கலாசாலையிலேயே படித்து முன்னுக்கு வந்தவர்க ளென்பதை நாம் இங்கு வாசகர்களுக்கு ஞாபக மூட்டுகிறோம். மேதாவின் மேலான அறிவைக் கண்டு அக்கலாசாலையிலிருந்த மேதாவிகளான வித்வான்களெல்லோரும் 'இவர் தாதாவைப் போலாகிவிடுவார்' என்று ஓதா நின்றனர். அவரிடம் அக் கல்லூரியின் தலைமைப் போதகாசிரியர் - பிரசித்தர் சர் அலக்சாந்தர் கிரான்ட் என்பாருக்கு விசேஷ அபிமானமும் பிரியமும் ஏற்பட்டிருந்தன. கிரான்ட் துரையவர்கள் தமக்கு மேதாவின் பாலிருந்த உள்ளன்பை வெளியிட அவரைச் சர்வ கலாசாலை அங்கத்தினராக்கி, ஜீஜீபாய் என்ற பாரசீக தனிகருடைய பாண்டித்ய சம்மானத்தை நல்கி சீமைக்குச் சென்று சட்டப் பரீக்ஷையில் தேர்ந்து வரும்படி அனுப்பினார். ஆனால், கண்காணாத் தேசத்திற்குத் தன் கண்மணியை அனுப்ப அவருடைய தந்தை கொஞ்சத்தில் இசையவில்லை.


சீமை வாசம்.

 

மேதா இங்கிலாந்துக் கேகி லின்கன்ஸ் இன்'னிற் சேர்ந்து, புத்தகமுங்கையுமாக மூன்றாண்டுகள் முயன்று வாசித்து 1868 - ம் வருடத்தில் சட்டசன்னதரானார். இவர் இங்கிலாந்திலிருக்கும் போதே அப்பொழுது இங்கிலாந்திற்குச் சென்றிருந்த தாதா (தாதாபாய்) அவர்களிடமிருந்து தேசாபிமான தீக்ஷையேற்றுச் சீடரானார். அது போழ்து சீமையில் அவரைப் போன்றே சட்டக் கலாசாலையில் மாணவர்களாயிருந்த டப்ளியூ. வி. பனர்ஜி, மனமோகனகோஷ் ஆகிய இருவருடைய கூட்டுறவும் மேதாவுக்கு இங்கிலாந்திலேயே ஏற்பட்டது. தாதாவின் ஆதரவைத் துணை கொண்ட இம்மூவரின் உழைப்பால் லண்டனில் ஓர் இலக்கிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே பின்னர் 'கிழக்கு இந்தியர் சங்கம்' (East Indian Association) என்று பிரசித்தியடைந்து இன்னும் விளங்குகிறது. இச்சங்கத்தின் சார்பில் மேதா, தாதாவின் அக்கிராசனத்தின் கீழ் "இந்தியரின் போதனாமுறை" என்றொரு அழகியபிரசங்கமும் செய்தார்.


இந்தியஜன சேவை.

 

இந்தியாவுக்குத் திரும்பியது முதல் மேதாவுக்கு அதிக கீர்த்தி யுண்டாயிற்று. 1872 - ம் வருடத்திய மோன கோபுரக் கலக வியாஜ்யத்தில் (Towerof Silance Riot Case) மேதா எடுத்த பணியை முடித்து விளங்கினார். சூரத்கலவர வழக்கில் இவருடைய வாதிக்கும் வன்மை பிரசித்த மடைந்தது. நியாயவாதத் தொழிலிலேயே நெறிதவறாது இவர் ஏராளமான பொருள் சேர்க்க வியன்றது ஆச்சரியமாகும். பம்பாய் மாகாண சுதேச மன்னர்கள் இவரையே அழைத்துத் தமது வழக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். இவர் இங்கிலாந்திலிருந்து திரும்பியது முதல் பொதுஜன சேவையில் இறங்கி விட்டார், 1869 - ம் ஆண்டில் தாதாபாய் நௌரோஜியின் தேச சேவையைப்பாராட்டுதற்கறிகுறியாக அப்பெரியாருக்குப் பணமுடிப்பு அளிக்கப்பட்ட போழ்தே இவர் முதல் முதலாகத் தேசீயத்துறையின் முன்னணியில் நின்றுழைக்க முற்பட்டார். அப்பால், இரண்டோ ராண்டுகள் கழிந்தபின், நகர பரிபாலனத்திலுள்ள ஊழல்களைப் போக்கி, 1871 - ல் சீர்திருத்தப் பிரேரேபணைகளைக் கொண்டுவந்து நிறை வேற்றினார். இவருடைய தீர்மானங்கள் நிறைவேறுவதில் பலத்த மறுப்புக்களும் குறுக்கு வாதங்களும் ஏற்பட்ட போதிலும், அவை அனுஷ்டானத்திற்கு வந்தபின் இவருடைய அறிவு நுட்பத்தைச் சிறப்பித்தன. சூரத் தலாசய அவதூறு வழக்கில் மேதாவின் அபாரசாதுரிய வாதமும், விகடாலங்கார வித்வத்துவமும் மலைமேலிட்ட விளக்கெனவிளங்கலாயின. நகர பரிபாலன அங்கத்தினர்களுள் முடிசூடா மன்னரென்ற கியாதியையும் மேதா அடைந்தார். ஆகவே 1884 - ல் இவர் பம்பாய் நகரபரிபாலன (Corporation) அக்ராசனாதிபதியாக்கப் பெற்றார். எவ்விதப் பொருட் செலவுமின்றி இவர் மும்முறை விசேஷ வாக்குறுதியுடன் பம்பாய் 'கார்பொரேஷன் பிரசிடெண்ட்' டாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். இவர், மூன்றாம் முறை நகரபரிபாலன சபையின் தலைவராக அங்கீகரிக்கப்பெற்ற அன்று மேன்மை தங்கிய வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும் சீமையிலிருந்து வந்து பம்பாய் துறைமுகத்திலிறங்கி விஜயம் செய்தார்கள்.

 

மற்றைய உழைப்புகள்.

 

மேதாவின் தேசாபிமானம் பிறைபோல நாளும் வரிசை வரிசையாகவளர்ந்து வந்தது. தேசீய விஷயங்களிலும், ராஜீய நன்மைத் துறைகளிலும்மேதா புகுந்து பாடுபட்டுவந்தார். ஸ்ரீ திலங், புட்ருஷன், தியாப்ஜி ஆகியசிலர்களின் ஆதரவால் பம்பாய் மாகாண சங்க மொன்றை ஸ்தாபித்தார்.1886 - ல் பம்பாய் மாகாண கவர்னர் லார்ட் ரியே அவர்கள், மேதாவைச் சட்டசபையில் அங்கத்தவ ராக்கினார். 1885 - ல் மேதா காங்கிரஸ் இயக்கத்திற் கலந்து கொண்டார். 1889 - ம் ஆண்டைய காங்கிரஸ் மகாசபை இரண்டாம் முறையாகப் பம்பாயிற்கூடிய பொழுது, மேதா வரவேற்புக் கமிட்டியின் தலைவராய் வாசித்த உபசாரப் பத்திரத்தில் அவருடைய தேசீய ஈடுபாட்டின் பெருமை தெற்றென விளங்கும். 1890 - ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை வகிக்க மேதா ஏகோபிதமாக அழைக்கப் பெற்றார். அதை அவர் விமரிசையாக, மிதவாதக் கொள்கைகள் மிளிர நடத்தி வைத்தார். மறுமுறை 1904 - ம் ஆண்டில் காங்கிரஸ் மகாசபை மீண்டும் கல்கத்தாவிற்கு விஜயம் செய்த பொழுதும் இவரே அதன் வரவேற்புக் கமிட்டித் தலைவராக விளங்கினார்.


சட்டசபை ஊழியம்.

 

மாகாண சட்டசபைகள் 1892 - ம் வருடத்தில் திருத்தியமைக்கப் பெற்று பொதுஜன வாக்குரிமையில் தேர்ந்தனுப்பும் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறத் தொடங்கிய போது மேதா அவர்கள் ஒரே மனதாகப் பொது ஜனங்களின் வாக்குரிமை பெற்றார். அது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் எவ்விதத் தடையுமின்றி வெற்றியடைந்து அவர் சட்டசபையின் சாஸ்வத அங்கத்தினரா யிலங்கினார். அஞ்சாமையும், வீரமும், கௌரவமும், மிதவாதமும், சாதுரியமும் அவரிடம் ஒன்று கூடிப் பிரகாசிக்க, அவர் சட்டசபையின் மூலமாகப் பொதுஜனங்களின் தேவைகளனைத்தையும் கூர்ந்து நோக்கிக் கூட்டுவித்தார். நிலவரிச் சட்டத் திருத்த மசோதா' மக்களின் பிரதிநிதிகளான சட்டசபை உறுப்பினர்களின் அபிப்பிராயத்திற்கு மாறாக துரைத்தனத்தாரால் நிறைவேற்றப்பட்ட பொழுது "நாம் அச்செய்கைக்குப் பொறுப்பாளிகளில்லை'' என்று வெளியே நடந்தவர்களுள் மேதா முதல்வராவார். அன்று முதல் அவருள்ளத்தில் சுயமரியாதை ஆவல் ததும்பிகின்றது.1894 -ம் ஆண்டில் அவர் சக்ரவர்த்தி சம்பந்தமான சட்டசபையின் உறுப்பினராகத் தேர்தலடைந்து தமது சேவையின் திறமையைத் தேசமகா ஜனங்களின் சீரிய மனதில் சிலாசாஸனம் செய்து விட்டார். சண்டைக்குச் சண்டையும், வாதத்திற்கு வாதமும், சமாதானத்திற்குச் சமாதானமும், தந்திரத்திற்குத் தந்திரமும், வீம்புக்கு வீம்புமாக அரசாங்கத்தாருடன் தேசநலத்தைக் கருதிய அளவில் எதிர்த்து நின்று எதற்கும் அஞ்சாது பம்பாய் வங்காள மாகாணவாசிகளின் ஆசிக்கும் போற்றுதலுக்கும் பாத்திரரானார். அவ்விரு மாகாணவாசிகள் மேதாவின் பொதுநல ஊழியத்தை மெச்சி, விசேஷ மகாசபை யொன்று கூட்டி அவருக்குப் பாராட்டுதல் உபசாரப் பத்திர மொன்றை யளித்தனர். இங்ஙனம் முப்பதாண்டுகள் உழைத்த பின் தம்மை விட பால்யர்களான தேசாபிமானிகள் முன்வந்தமையால் மேதா அச்சபைகளினின்றும் விலகிக்கொண்டார்.

 

கல்வி முன்னேற்றம்.

 

அந்நாட்களில் ஸ்ரீமான் மாதவ கோவிந்த ரானடே அவர்கள் கட்டாயப் படிப்பும், சுதேசபாஷைப் பயிற்சியும் மக்களுக்கு அத்யாவஸ்ய மென்று அகோராத்ரம் பாடுபட்டுப் பெரிய கர்மயோகியாய் உழைத்துவந்தார். மேதாவும், அவரோடு சேர்ந்து வித்யா சேவை செய்து வருவாராயினர். பம்பாய் சர்வகலாசாலை பரிபாலன சங்கத்தின் அங்கத்தினராகவும், பம்பாய் வித்யாபிவிருத்தி ஆலோசனைச்சபையின் உறுப்பினராகவுமிருந்து அவரியற்றிய அரும்பெருஞ் செயல்கள் பல. தவிர, பம்பாய் மாகாண இலக்கிய சங்கம், கலாகுமாரப் பட்டதாரிகள் சபை, முதலியவற்றின் கூட்டங்களுக்கு மேதா பன்முறை தலைமை வகித்தும், பொருளுதவி புரிந்தும் ஊக்கம் அளித்து வந்தார்.1892 - ல் புனாவில் நிகழ்ந்த மாகாண தேசநலசபைக்கு மேதா தலைவராயிலங்கினார். பம்பாய் மில் சங்கத்தாரின் சார்பில் மேதாவியற்றிய ஊழியமும் புகழ்தற் குரியது.


பின்னுரை.

 

மேதாவின் தேச சேவையைப் பற்றிய மக்களின் புகழ்ச்சியை இங்கு நாம் எடுத்தெழுதத் தேவையில்லை. அரசாங்கத்தார் அவருக்கு 1894 – ல் ஸி. ஐ. இ, பட்டமும், 1904 - ல் கெ. வி. இ. சன்னதமும் வழங்கிப் பாராட்டினர். விக்டோரியா மகாராணியார் பம்பாய்க்கு விஜயம் செய்த பொழுது, மேதாவின் திறமைகளை மெச்சித் தமது சுவஸ்த லிகித புத்தகத்தில் அவரது ஞாபகச் சின்னமாக, அவரைக் கையெழுத்திடச் சொல்லிப் பெருமைப் படுத்தினார். முடிவாகக் கூறுமிடத்து ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் இடை விடாமல் தாய் நாட்டிற்கு ஊழியஞ் செய்தவரும், மேடையில் சொல் நயம் பொருள் நயங்கள் பொலிவுற நிமிடத்திற்கு நூற்றைம்பது வார்த்தைகளுக்கு மேல் துரிதமாகவும் அழுத்தமாகவும் விளக்கமுறப் பேசியவரும், வங்காளி, பார்லி, முஸ்லிம்கள், தமிழர், தெலுங்கர் என்ற எவ்வித பேதமுமின்றி அனைவருக்கும் எல்லாவித நன்மைகளும் உண்டாகப் பாடுபட்டவரும், எதிலும் மிதமிஞ்சிப் பிரவேசித்துத் துன்பத்திற்காளாகாதவரும், ஆரோக திடகாத்ரரும், ஜார துருட்டிர (பார்) மதத்திலே தீவிர அனுஷ்டான முடையவரும், பரிபாலன வல்லமைகள் முற்றிலும் அமையப் பெற்றவரும், தேசவிடுதலைக்காகப் பாடுபடும் பல்துறையினரும் போற்றுமாறு நடந்து கொண்டவரும், 'மனிதன்' என்னும் பௌருஷத் தன்மைக்கேற்ற இலக்கணங்கள்யாவும் மாணப் பெற்றவரும் மேதாவே ஆவார்.

 

(ஸ்ரீ லக்ஷ்மீ காந்தன் எழுதியது.)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment