Sunday, August 30, 2020

 

காளத்தி வேடனும், கங்கை வேடனும்

 

தமிழ்மணங் கமமும் தென்னாட்டில், கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்து கானத்திமலை விளங்குவ தாகும். அம்மலையில் கல்லதிரச் சென்று கருமந்தி விளையாடும். இளமானும், பைங்கிளியும் இனியதினை கொள்ளும். குளிர் சந்தின் தளிர் தின்று வேழமும் பிடியும் விரும்பித்திரியும். குன்றக் குறவரைக்கண்டு அரியினமும் கரியின் மும் அஞ்சியோடும். குறிஞ்சிக் குறவர் எழுப்பும் இரும்புகை மஞ்சினைச் சேர்ந்துகொஞ்சிக் குலாவும். இத்தகைய காளத்திமலையில் திண்ணன் என்னும் இயற்பெயர் வாய்ந்த வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

 

வடநாட்டில் களியன்னமும் மட அன்னமும் களித்து விளையாடும் அழகு வாய்ந்தது கங்கைக்கரை யாகும். அக்கரையில் மோதும் தெள்ளிய அலைகள் தென்றல் வீசும். அவ்வாற்றி லமைந்த கஞ்சங்களில் கார்வண்டுகள் துஞ்சும். மாகந்தமும் மகரந்தமும் எங்கும் நிரம்பி நிற்கும். குவளை மலர்கள் கண்போல் மலர்ர்து போகும். அத்தகைய அழகு வாய்ந்த கங்கைக் கரையில் ஆயிரம் நாவாய்க்கு நாயகனாய்க் குகன் என்னும் வேடன் வாழ்ந்து வந்தான்.

 

கலைமலிந்த கண்ணப்பன் என்று கற்றறிந்தோர் போற்றும் திண்ணன் காளத்தி நாதன்பால் இடையறாப் பேரன்பு வாய்ந்து விளங்கினான். அப்பெருமானது கண்ணோய் கண்டு, கரைந்து, தன் கண்ணையும் இடந்தளித்துக் கண்ணப்பன் என்று பெயர் பெற்றான். இவ்வாறே கங்கைக் கரையின் காவலனாய குகன், அஞ்சன மேனி வாய்ந்த இராமன் பால் இறவாத இன்ப அமைந்து விளங்கினான். அப்பெருமான் அன்னையின் ஆணையை மேற்கொண்டு சடைமுடியும் மரவுரியும் புனைந்து கானகத்தில் அலைந்த நிலையை நினைந்து நெஞ்சம் குழைந்தாள். பிறர்க்கென வாழும் பெற்றி வாய்ந்த அப்பெருந் தகையைக் காக்குமாறு தன்னுயிரையும் இழக்க இசைந்தான்.

 

இவ்வாறு கனிந்த அன்பு வாய்க் காளத்தி வேடனையும், கங்கை வேடனையும் குறிக்கோளாகக் கொண்டு, இறைவனை நினைந்துருகிய அன்பர் நிலை ஆராய்ந்தறியத் தக்கதாகும். அன்பைப் பெருக்கி இன்பப் பேறடையக்கருதிய ஆன்றோர் இவ்விரு அடியாரது எல்லையற்ற அன் பின் பெருக்கை நினைந்து, அகம் உருகிக் கண்ணீர் உகுத்தார்கள்.

 

முற்றத் துறந்த பட்டினத்தடிகள் என்று தமிழகம் போற்றிப் புகழும் பெரியார், கண்ணப்பனது அருஞ்செயலை நினைந்து கரையும் தன்மை, கற்போர் மனத்தைக் கவர்வதாகும். காளத்தி மலையிலமர்ந்த காளகண்டனுக்கு ஆளாகக் கருதிய அடிகள்

 

“வாளால் மகவரிந்து ஊட்ட ல்லேன் அல்லேன் மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடர்து அப்பவல்லே னல்லேன் நான் இனிச்சென்று

ஆளாவ தெப்படியோ, திருக்காளத்தி அப்பருக்கே”

 

என்று மனம் குழைந்தார். மழலை தேறா இளம் பாலனை வாளாலரிந்து இறைவனுக்கு இன்னமுதூட்ட வல்லே லேன். திருநீலகண்டன்மேல் வைத்து ஆணை கடவாது, இளமையிலேயே ஐம்பொறிகளை வென்று, இன்பம் துறக்க வல்லே னல்லேன். ஆறுநாள் பழகிய பான்மை மையில் ஆராத அன்பு வாய்ந்து கண்ணைப் பறித்து, இறைவனது கண்களில் அப்பவல்லேனல்லேன்; இத்தகைய ஏழையாய யானும், மெய்யடியார் போல் நடித்து, வீடகத்தே புகுந்திட விழைகின்றேன்'' என்று உள்ளத் துறவமைந்த உயரிய அடிகள் உருகுவா ராயினார். கடந்தோர்க்கும் கடத்தலரிதாய மக்கட்பாசம் நீத்த ஒரு தொண்டர் பெரிய சிறுத்தொண்டராய்ப் பேறு பெற்றார். மனையாள் மீது வைத்த பாசம் துறந்த மற்றொரு தொண்டர், இறைவனது அன்பிற்குரிய ராயினார். கண்ணிற் சிறந்த உப்பில்லை யென்றறிந்தும், ஈசன்பால் வைத்த நேசத்தால், இருகண்களையும் ஈர்த்தளிக்க இசைந்த ஒரு தொண்டர், மாறிலா இன்பத்தில் மகிழ்ந்தார். இவ்வாறு அகம்புறமென்னும் இருவகைப் பற்றையும் அறவே களைந்து, இறைவன் பால் அன்பை வளர்த்த அடியாரது நிலையை நினைந்து, பட்டினத் தடிகள் வருந்தும்பான்மை அறிந்து போற்றத் தக்கதாகும்.

 

காளத்தி வேடனைக் குறிக்கோளாகக் கொண்டு அடிகள் கரைந்துருகியதன்மை போல், கங்கை வேடனை இலக்காகக் கொண்டு, வானர வேந்தனாய சுக்கிரீவன் வாடி வருந்தினான். இருமையம் தரும் பெருமானாய இராமனிடம் எப்பயனையும் கருதாது, விழுமிய அன்பு பூண்ட வேடனது பெருமையையும் தனது சிறுமையையும் நினைந்து சுக்கிரீவன், சிந்தை தளர்ந்தான். வானரசேனை இலங்கைமா நகர்ப்புறம் எய்திய போது, மாற்றாரது படைவலியையறியுமாறு, தன்னசலில் நின்று நோக்கிய இலங்கை வேந்தனைக் கண்ட போது வானர மன்னனது உள்ளத்தில் சீற்றம் பொங்கி யெழுந்தது. பஞ்சின் மெல்லடிப் பாவையை வஞ்சனையாற் கவர்ந்து, சிறை வைத்த, அரக்கர்கோனைக் கண்ட பொழுது, பிறந்த பெருங்கோபத்தால், வானர மன்னன் அவன் மீது பாய்ந்தான். வீரராய இருவரும் நெடும் பொழுது கடும் போர் விளைத்தார்கள். இலங்கை நாதனது அளவிறந்த வலிமையை அறிந்தவானாத் தலைவன், மாற்றாசனை வெல்ல இயலாது, அவன் தலை மீதிருந்த மணி முடிகவர்ந்து, மீண்டும் இராமனது பாசிறையில் வந்தடைந்தான். காலனுக்கும் காலனா யமைந்த காவலனது கையினின்றும், தப்பிவர்தவானர வீரகக் கண்டு, இராமன் களிகூர்ந்தான். அந் நிலையில் அன்பினால் அகங் குழைந்த வானர மன்னன், ஐயனை நோக்கி,


 "காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்டமாட்டேன்
 நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்
 கேட்டிலேன் இன்று கண்டும், கிளிமொழி மாதராளை
 மீட்டிலேன் தனகள் பத்தும் கொணர்ந்த வேன் வெறுங்கை வந்தேன்"


என்று மனம் வருந்தி மொழிந்தான். "அந்தோ! காட்டில் வாழ்ந்த கழுகின் வேந்தனும், நாட்டில் வாழ்ந்த நல் வேடனும், செலுத்திய அன்பை, நான் செலுத்த இயலாதவனாபினேன். இலங்கைமா நகரில் சிறையிருந்த சோகத் தாளாய நங்கையைக் கண்டும், அன்னையை இங்கு கொண்டு வர வவியற்று வாளா கண்டு வந்தேன்! நல்லோர்க்கு இடர் விளைக்கும் அரக்கனை எதிர்த்தும், அவன் சிரங்களைக் கொய்து கொணராது வெறுங்கையாய் வந்தேன்'' என்று வானர மன்னன் வருந்தினான்.

 

காட்டிலே கழுகின் வேந்தன் ஆற்றிய கடமையையும், நாட்டிலே கங்கை வேடன் ஆற்றிய நன்மையையும், அறிவோமாயின் வானர வீரனது சொல் லின் பொருள் இனிது விளங்குவதாகும். கானகத்தில் கனியளாயிருந்த தையலை, இலங்கை வேந்தன் வஞ்சனையாற் கவர்ந்து, வாயுவேகமாய்ச் செல்லும் பொழுது, ஆதரவற்று அரற்றிய மங்கையின் அழுகுரல் கேட்டு, கழுகின் காவலன் காற்றினும் கடுகிப் போந்தான். அறநெறி யறியாத அரக்கர் கோனுடன் நெடும் பொழுது  கடும்போர் புரிந்து ஆவி துறந்தான். இவ்வாறு சரன் புகுந்த சீதைக்காக, அறப்போர் புரிந்து வி நீத்த கழுகின் வேந்தன் 'தெய்வமரணம்' எய்தினான் என்று இராமன் போற்றிப் புகழ்ந்தான் னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு'வென்று சொல்லின் செல்வனாயபுகழ்ந்துரைத்தான். அரன் வாளுடையானை, அலகுடையான் வெல்லுதல்இயலா தென்றறிந்தும், அதறிதிறம்பிய அரக்கனொடு பொருது, ஆவிதுறத்தலே, தன் கடமை யென்றுணர்ந்து கழுகின் வேர் தன் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான் இவ்வாறு இராமனது சேவையில், அமர் புரிந்து, இறக்கவும் இயலாத தனது முறையை நிளைந்து வானர வீரன் வருந்தினான்.

 

இனிக் கங்கைக் கரையின் காவலனாய குகன் பரதனது பரந்த சேனையைக் கண்ட போது, அவன் தமையனை வெல்லக் கருதி வந்தான் என்று தவறாக எண்ணி, தன்னுயிரையும் ஒரு பொருளாகக் கருதாது போர்க் கோலம் புனைந்து,


 “ஆழ நெடுந்திரை யாறுகடந்திவர் போவாரோ,
 வேழ நெடும்படை கண்டு விலங்கிலும் வில்லாளோ
 தோழமை யென்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ
 ஏழமைவேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ''


என்று வீரமொழி பகர்ந்து, நண்பனுக்காக உயிரையும் கொடுக்க இசைந்தான் என் காவலில் அமைந்த கங்கை யாரறைக் கடந்து இவர் போவாரோ? தோழமை யென்று நாயகன் உரைத்த சொல் ஒரு சொல்லன்றோ? நன்றி மறவாத நாய் போல், நண்பனது ஆணைக்கடங்கி, கங்கைக் கரையைக் காவல் புரியும் ஏழை அமர்க்களத்தில் இறர்த பின்னல்லவோ, பரதன் இராமனைப் பார்க்க வேண்டும் என்று குகன் கூறிய மொழிகளில் தலையாய அன்பு தழைத்திலங்கக் காணலாம். இவ்வாறு நாட்டிலே குகனார் செய்த மன்மையையும் செய்ய வியலாத தனது சிறுமையை நினைந்து சுக்கிரீவன் வருந்தினான்.

 

ஆகவே காளத்தி வேடனும் கங்கை வேடனும் அன்பு நெறியில் ஒப்பாரின்றி உயர்வுற்று ஏனைய அன்பர்க்கு ஓர் கலங்கரை விளக்கமாக அமைந்திலங்கும் தன்மை இனிது விளங்கும்.

 

  (ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.)

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

 

No comments:

Post a Comment