Monday, August 31, 2020

 

குறித்த காலம் தவறாமை

 

ஒரு மனிதன் இம்மை மறுமையில் அடையக்கூடிய சகல சுகதுக்கங்களும் அவன் காலத்தை உபயோகப்படுத்துவதில் தான் அடங்கியிருக்கின்றன. இது பற்றி என்றோ,

 

"ஞாலங் கருதினும் கைகூடும் காலங்

கருதி யிடத்தாற் செயின்.''

 

என்றார் நாயனாரும். நிற்க காலத்தின் அருமை பெருமைகளை யுத்தேசித்தே நாயனார் தமிழ் வேதமாகிய திருக்குறள் என்னும் தம் நூலில் காலம் அறிதல் என ஓர் தனி அதிகாரமே கூறியுளார்.

 

நம் ஆயுட் காலத்தில் அறியாமையுள்ள குழந்தைப் பருவத்தையும் யாதும் செய்ய இயலாத முதுமைப் பருவத்தையும் நீக்கிவிட்டால் மீந்த நாள் 40 அல்லது 50 வருட காலமாகும். இதிலும் நித்திரைக்கும் பிணிக்கும் இதர இடுக்கண்களுக்கும் செலவான நாட்கள் போக எஞ்சி நிற்குங் காலம் மிகச் சொற்பமானதே. இச் சொற்ப காலத்திற்குள் தான் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்து பெற வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

 

நம் வாழ் நாட்களே காலத்தினாலாகியிருக்கிற படியால் அதை வீணாகக் கழித்தல் நம்மை நாமே கொலை செய்து கொள்ளலை யொக்கும். ஆக்ஸ்போர்டு கலாசாலையிலுள்ள ஒரு கடிகார யந்திரத்தின் மேல் அடியில் வருமாறு வரையப்பட்டிருக்கிறதாம்.


 "காலமானது தன் பாட்டில் கழிந்து அதன் கொலைக் குற்றத்
 தை உங்கள் தலைமேல் சுமத்துகிறது.''


மேற்கண்ட வாக்கியத்தைப் பற்றிச் சிந்திக்குங்கால் வீண் பொழுது போக்கும் மனிதர்கள் எவ்வளவு திடுக்கிடத் தக்கவர்களா யிருக்கின்றனர். இதுபற்றியே,


 "நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்
 வாள் துணர்வார்ப் பெறின்.''

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

நாம் எண்ணிய கருமங்களை இனிது முடிக்க ஓர் காலம் வந்து வாய்க்கும். நாம் அக்காலத்தை அறிந்து அதை இழந்து விடாது அக்கணமே முயற்சி செய்து செய்தற்குரிய அரும்பெருங் காரியங்களைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும். " காலமும் கடலலையும் மனிதனுக்காகக் காத்திரா " என்பதோர் ஆங்கிலப் பழமொழி. " ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா'' என்ற நமது பழமொழியின் கருத்தும் இதுவே யாகும்.

 

நாம் ஒரு வேலையைக் குறிப்பிட்ட காலத்தில் செய்வதாக ஒப்புக் கொண்டால் தவறாமல் அதை அவ்வேளையிலேயே செய்து முடிக்க வேண்டும். ஒரு மனிதன் அனுசரித்து வரவேண்டிய நல்ல வழக்கங்களில் இதைக் காட்டிலும் சிறந்ததும் மேலானதும் முக்கியமானதும் வேறொன்றில்லை என்று திட்டமாய்ச் சொல்லலாம். இதனால் அடையும் பயன்களோ அனந்தம். இவ்வழக்கம் ஒரு மனிதனுக்கு இருக்குமாகில் அவனுக்குத் தன்னைத்தானே அடக்கியாளும் திறனும், வாய்மை தவறா திருத்தலும், கடமையைச் செய்து முடிப்பதில் அவாவும் ஏற்படும். என்ன இடையூறுகள் நேரினும் அவன் அவற்றைப் பொருட்படுத்த மாட்டான். குறித்த காலத்தில் அக்கருமத்தைச் செய்தே தீருவான். சோம்ப லென்பது அவன் இருக்குமிடத்திலும் இருக்குமோ? இராது. அவன் எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவனாகவே இருப்பான்.

 

இரண்டொரு நாழிகை பிந்திப்போனா லென்ன என்று நம்மில் அநேகர் எண்ணுகின்றனர். ஒரு வினாடி பொறுத்துப் போனால் ரயில் வண்டி நிற்குமா? இன்னும், தூரமான இடங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசரமான தபாலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நிமிஷத்திற்குப் பின் தபால் பெட்டியில் போட்டால் அது மறுநாள் தபாலில் தானே சேரும். ஒரு நிமிஷம் பிந்தியதால் ஒரு நாள் வீணாகிறதன்றோ? அடியில் வரும் கதையே இதற்குத் தக்கதிருஷ்டாந்த மாகும்.

 

புருஷ சந்ததியில்லாத கனவான் ஒருவர் தம் சகோதரியின் மைந்தன் ஒருவனைத் தத்தாக எடுத்து வளர்த்து வந்தார். அப்பையனிடம் எக்காரியத்தையும் குறித்த காலத்தில் செய்து முடிக்கும் வழக்கமே மருந்துக்குங் கிடையாது. மேற்கூறிய கனவான் ஒரு சமயம் நோயால் பீடிக்கப்பட்டு வருந்தினார். அவ்வமயம் அவர் மரண சாஸனம் ஒன்று பிறப்பிக்க நிச்சயித்து அயலூருக்குச் சென்றிருந்த தன் மருமகனை மறுநாள் காலை 10 மணிக்குத் தம்மிடம் வந்து சேரும்படி ஒரு ஆள் மூலம் சொல்லி யனுப்பினார். அந்தப்பையன் சிறிது நேரம் பொறுத்துப் போனாலென்ன? சொத்து நமமைத் தப்பி எங்கே செல்லும் என நினைத்து 10 1/4 மணிக்குப் போய்ச் சேர்ந்தான். பையன் குறித்த காலத்தில் வராமையால் சொந்த விஷயத்திலேயே கவலையற்ற இச் சோம்பேறிக்குச் சொத்தைக் கொடுப்பதை விட வேறு யாருக்கேனும் கொடுத்தால் பிரயோஜன மாகுமென எண்ணி அப்பிரபு வேறு சிலசுற்றத்தார்களுக்குத் தம் ஆஸ்தி முழுவதையும் எழுதி வைத்து விட்டுச் சிறிது நேரத்திற்குள் இறந்து போனார். பையன் கொஞ்ச நேரம் பொறுத்துப் போய் நடந்த சங்கதிகளைக் கேட்டு ஆற்றொணாத் துயரை யடைந்தான். இவ்வாறே, எத்துணையோ வர்த்தகர்கள் குறித்த காலம் தவறியதால் அதிக திரவிய நஷ்டத்தை அடைந்திருக்கிறார்கள். பகல் காலமானால் பல கூகைகளை ஒரு காக்கை வென்று விடும்; இராக்கால மெனிலோ பல காக்கைகளை வெல்ல ஒரு கூகையே போதும் என்றாற் போல காலமே வலியாரை மெலியாராகவும் மெலியாரை வலியாராகவும் ஆக்கும் ஆற்றல் வாய்ந்தது.

 

காலத்தை வீணே கழிக்காமல் ஒவ்வொரு நிமிஷத்தையும் பயனுள்ளதாகச் செய்ய வேண்டும் காலத்தைக் காட்டிலும் விலையுயர்ந்த பொருள் உலகத்தில் வேறொன்று மில்லை. ஆகையால் நாமனைவரும் இவ் வருமையான காலத்தை வெகு ஜாக்கிரதையாகச் செலவழித்து நம் தாய்நாடு, தாய்பாஷை முதலியவற்றிற்குப் பாடுபட்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவோமாக.

 

A. சுருளியாண்டி கௌட ஆசிரியன்; கோம்பை.

 

ஆனந்த போத்னினி – 1928 ௵ - மே ௴

 

 

 

 

No comments:

Post a Comment