Monday, August 31, 2020

 

சந்நியாசம்

 

துறவு (தொடர்ச்சி)

 

 உலகப் பொருள்களில் சற்றும் பற்றின்றி யொழித்துவிட்டு அடையப்படுதலால் இது சந்நியாசம் என்று வடமொழியிலும், துறவு என்று தமிழிலும் புகழ்ந்து கூறப்படும். வேறொரு இச்சையுமின்றி மோட்சம் ஒன்றையே கருதி யடையப்படு மார்க்கமாதலால் மோட்ச மார்க்கமென்றும், பிரமமார்க்கமென்றும் நூல்கள் புகழ்ந்து கூறும் இந்திரிய ஜயம் பெறாதவன் துறவையடையக்கூடாது. ஆதலால் பிரமசரியாதி ஆச்சிரமானுஷ்டானங்களை முறை தவறாமல் செய்து முடித்து யோகாப்பியாசத்தால் இந்திரியங்களை ஜயித்து அடக்கி நிஷ்களங்கமான சிந்தையோடு சந்நியாசத்தை அடைய வேண்டும். இம்முறை தப்பிச் சந்நியாசம் பெறுபவன் அதோகதியை அடைவானென்று நூல்கள் கூறுகின்றன. தேவரிஷி பிதிர்க்கடன்களைத் தீர்க்காதவன் சந்நியாசத்தையடையக் கூடாது. தவத்தில் சித்திபெறும்பட்சத்தில் இந்திரியங்களடங்காவாதலால் மூன்றாச் சிரமங்களையு முறைப்படி யனுஷ்டித்தே சந்நியாசம் பெறவேண்டும்.

 

பிரமசரியத்திலிருந்தே சந்நியாசம் பெறலாமென்பது சிலர் கருத்து. சராசரப் பொருள்களில் பற்றில்லாதவனும், நல்ல ஞானத்தையுடையவனும், வைராக்கியமுள்ளவனும் சந்நியாசத்தை விரும்பினால் அவன் பிரமசரியத்திலிருந்தே சந்நியாசத்தைப் பெறலாமென்று யமமுனிவர் கூறினார்: - ஏனெனில் இயற்கையாலேயே அவனுக்கு இந்திரியங்கள் வசப்பட்டிருப்பதினாலே தான். இவைகளால் இந்திரிய விவகாரமற்றிருப்பதே சந்நியாசத்திற்கு மூலமென்று நன்கு புலப்படும்.

 

குருவினிடத்தில் நன்றாய்ப் படித்துத் தட்சிணை கொடுத்து நல்லறிவு பெற்றிருப்பவன் கிரகஸ்தாச்சிரமத்தை விரும்பினால் அடையலாம். பிரியமில்லாவிடில் தன்னாயுள் முழுமையும் பிரமசரியத்திலிருந்தே கழிக்கலாம் என்று விஷ்ணு ஸ்மிருதி கூறுகின்றது. பிரமசாரி கிரகஸ்தன் வானப்பிரஸ்தன் இவர்களில் எவனாவது சந்நியாசத்தை விரும்பினால் அடையலாமென்று மஹாபாரதங் கூறுகின்றது. பிரமசாரி கிருகஸ்தன் வானப்பிரஸ்தன் இவர்களிலெவனாவது சந்நியாசத்தை விரும்பினால் அக்கினியை ஆத்மாரோபணம் செய்து சந்நியாசம் பெறலாம் என்று உபநிஷத்துக் கூறுகின்றது. பிரமசரியத்திலிருந்தே சந்நியாசம் பெறுவது கூடுமென்று ஜாபாலோபநிஷத்து கூறுகின்றது. நாக்கு, உபஸ்தம், வயிறு, கை இவற்றையடக்கிக் கொண்டிருப்பவன் பிரமசரியத்திலிருந்தே சந்நியாசம் பெறலாமென்று வியாச ஸ்மிருதி கூறுகின்றது. வைராக்கியம் பெறாதவனுக்கு நான்கு ஆச்சிரம முறை விதிக்கப்பட்டன. வைராக்கியம் பெற்றவன் அப்போதே பிரமசரியத்திலிருந்து சந்நியாசம் பெறலாமென்றும், இது ஜாபால சுருதியின் சம்மதமென்றும் வேறு ஸ்மிருதிகள் கூறுகின்றன. எச்சமையம் உலகப்பொருள்களில் வெறுப்புண்டாகின்றதோ அதுவே சந்நியாசத்துக்குக் காலமென்று அங்கிரஸ் ஸ்மிருதி கூறுகின்றது. எப்போதும் சந்தோஷம், அபகாரம் செய்தவனுக்குப் பிரதி யபகாரம் செய்யாமல் பொறுமையுடனிருத்தல், மனதைக் கவரத்தக்க பொருள்கள் எதிரிலிருந்தாலும் அவைகளில் விருப்பமில்லாமலிருத்தல், பிறர் பொருளை அபகரியாமை, சரீரசுத்தி, பெண்களிடத்திலாசையற்றிருத்தல், சாஸ்திர உணர்ச்சி, ஆத்மஞானம், சத்தியம், பிறர் தான் கோபம் கொள்ளும் படியான துர்க்கிருத்தியத்தைத் தனக்குச் செய்தாலும் அவர்களிடம் கோபங்கொள்ளாமல் இருத்தல். இந்தப் பத்துத் தருமங்களும் எவனிடமிருக்கின்றனவோ அவனே சந்நியாசத்துக் கருகனாவான் என்று மனு கூறினார். உலகப்பற்றுள்ளவன் விஷயசுகங்களில் ஆழ்ந்து முழுகி யிருப்பனாதலால் அவன் சந்நியாசம் செய்து கொள்ளக் கூடாது. அவன் சந்நியாசம் செய்து கொண்டால் மீளா நரகத்தையடைவான். சந்நியாசிகளைக் கெடுத்துப் பாபமார்க்கத்தில் நடக்கச் செய்கிறவனும், பாபிகளுக்குச் சந்நியாசம் செய்விப்பவனும், சந்நியாசம் செய்துகொள்கிறவனுக்கு இடையூறிழைப்பவனும் பாபிகளாய் நரகத்தை யடைவார்கள். மஹா பாதகங்களைச் செய்தவன், விராத்தியன் (ஜாதி தருமத்தை விட்டவன் அல்லது இருகுலதாய் தந்தையர்க்குப் பிறந்தவன்), விலக்கப்பட்டவன், விரதம் யக்ஞாதி சுதர்மங்களை விட்டவன், சத்தியம் சுத்தியில்லாதவன் இவர்களுக்கும் சந்நியாசம் செய்விப்பது கூடாது. இனி சந்நியாசத்தினாலாகும் பலன் பின்வருமாறு.

 

சந்தானத்தினாலும் கருமங்களினாலுமுண்டான தோஷங்களைப் புடத்திலிட்ட பொன்னின் அழுக்கை நெருப்பு எரித்துவிடுவது போலச் சந்தியாசாக்கினி தகித்துவிடும். எவனால் பிராணிகள் பயத்தை அடைகிறதில்லையோ, அவன் மரணத்திற்குப் பிறகு பயமின்றிச் சுகித்து வருவான்: கெட்ட செய்கைகளைச் செய்தவன் தானத்தினாலும், நதி ஓட்டத்தினாலும், மலினப்பட்ட பாத்திரம் கழுவுவதாலும், மனிதர் சந்நியாசத்தினாலும் சுத்தி அடைவர்.'' யோகசித்திபெற்ற சந்நியாசியும், படைமுகத்தில் முகந்திரும்பாமல் யுத்தம் செய்து மடிந்த வீரனும், சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு மேலுலகத்தை யடைவார்கள்'' என்று பராசரஸ்மிருதி கூறுகின்றது. உலகப் பொருள்களிற் சிறிதும் பற்றற்றுச் சந்நியாசம் பெற்ற துவிஜனைக் கண்ட சூரியன் பயந்து இவன் என் மண்டலத்தைப் பிளந்து கொண்டு போய்க் குறைவற்ற ஸ்தானத்தை அடைவான் என்று சிந்தித்துத் தன் இடம் விட்டு நகர்ந்து அவனுக்கு வழிவிடுவான் என்றுங் கூறுகின்றது. தேவனுக்கு இருவகைச் சொரூபங்களுண்டு. அவை அசரம் சரமென்பன. மந்திர பூர்வமாக ஆவாகனாதிகளினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலாசொரூபம் அசரம். மற்றது மெய்ஞ்ஞானம் பெற்ற சந்நியாசியின் வடிவம். ஆதலால் சந்நியாசி தேவனுக்குச் சமமாகிறான். விதிமுறை தவறாத சந்நியாசிக்குத் தனக்கு முந்தின அறுபது குலங்களையும் பின்வரும் அறுபது குலங்களையும் நரகத்தினின்றும் கரையேற்றும் சக்தியுண்டு. சந்நியாசம் பெற்று ஒழுக்கம் தவறாமலிருக்கிறவன் சூரிய மண்டலத்தைப் பிளந்து கொண்டு சென்று மிகுந்த ஒளியையுடையவனாய் மேலான கதியிலிருப்பான் என்று வியாசர் சொன்னார். அக்கினிஹோத்திரத்தாலும், சந்தானத்தாலும், ஏராளமான ஐசுவரியத்தாலும் மோட்சம் கிடைப்பதில்லை. உலகப்பற்றுதலை முற்றும் ஒழிப்பதே மோட்சத்துக்கு மார்க்கமாமென்று தைத்தரீய சுருதி கூறியது. வேதவேதாங்கங்களை முழுவதுங் கற்று அவற்றிற்கூறிய கர்மங்களை முறைதவறாமல் நடத்திச் சித்தசுத்தியைப் பெற்றுப் பஞ்சேந்திரியங்களையும் ஜயித்தவன் எல்லாவற்றையும் விட்டொழித்து, வேதாந்தவாக்கியசிரவணத்தினால் பிரமத்திற்குந் தனக்குமுள்ள ஐக்கியஞானத்தை யடைந்து மோட்சானந்தத்தைப் பெறுபவர் சிலர். சிலர் பிறக்கும்போதே பிரபஞ்ச வாசனையற்றுச் சன்மார்க்க நெறி யொழுகி மனத்துறவடைந்து மோட்சத்தையடைவர். கடைசியாக ஆராயுமிடத்துச் சந்நியாசத்துக்கு இந்திரிய நிக்கிரகமும் மனத்துறவுமே பிரதானமென்பது புலப்படுகின்றது. ஆன்றோர் கொள்கையும் அதுவே. இந்திரியங்களை ஜயித்தாலன்றி மனத்துறவு கிட்டாது. ஆதலால் அவ்விரண்டினுள்ளும் இந்திரியநிக்கிரகமே முக்கியமானது. இந்திரியஜயம் பெற்று அதனால் மனத் துறவடைந்தவன் எந்தக் குலத்தில், எந்த வருணத்தில் எந்த ஆச்சிரமத்திலிருந்தாலும் அவன் சந்நியாசியே. காஷாய தண்டங்களைத் தரிப்பதனால் மட்டும் ஒருவன் சந்நியாசி யாகமாட்டான். கிரகஸ்தாதி ஆச்சிரமங்களை விட்டுச் சந்நியாசத்தை யடைந்து மனத்துறவு பெறாமல் விஷயசுகங்களை விரும்பித் திரிபவன் எந்நாளும் மீளாநரகத்தில் வீழ்வான் ஆதலால் சந்நியாசம் பெற்றவன் உலகப் பொருள்களினிடத்தில் சிறிதும் பற்றில்லாதவனா யிருக்கவேண்டும். இந்நெறியில் நிற்கும் சந்நியாசிக்கும் பரபிரமத்திற்கும் வேற்றுமை காண்பதரிது. அதனாலேயே பலபேர் சந்தியாசிகளை யாசிரயித்து ஆராதித்துச் சகல ஐசுவரியங்களையும் பெற்றுப் பெருவாழ்வடைந்து வாழ்ந்தார்களென்று இதிகாசபுராணங்கள் கூறுகின்றன. வேதத்தில் துவிஜராகிய அந்தணர்க்கே நான்காச்சிரமங்களும் விதிக்கப்பட்டன. பிராமணர்களுக்கு நான்காச்சிரமங்களும் உரியனவென்றும், க்ஷத்திரியர்களுக்குச் சந்நியாசம் ஒழிந்த ஏனைய மூன்று ஆச்சிரமங்களு முரியனவென்றும், வைசியர்களுக்குப் பிரமசரியம் கிருகஸ்தம் ஆகிய இரண்டு முரியனவென்றும், நாலாம் வருணத்தவர்க்குக் கிரகஸ்தாச்சிரமம் ஒன்றே சிறந்ததென்றும் வியாசஸ்மிருதி கூறுகின்றது. இவ்வாறே வைதிக நூல்களெல்லாம் கூறுகின்றன ஆனால் ஆகமங்களில் நான்கு வருணத்தவர்க்கும் சந்நியாசம் கூறப்படுகின்றது. ஆதலால் இச்சந்நியாசம் குருவின் அனுக்கிரகத்தினாலும், பரம்பரா சம்பிரதாயத்தாலும் அடையத்தக்கதென்று காணப்படுகின்றது. எந்த வருணத்தவன் சந்நியாசத்தைப் பெற்றானாயினும் அவன் இந்திரிய நிக்கிரகம் பெற்றிருத்தல் வேண்டும். தான் கொண்ட ஆச்சிரமத்திற்குரியனவாகக் குருவினாலுபதேசிக்கப்பட்ட நெறிகளில் தவறாமல் ஒழுக வேண்டும். எப்போதும் பரப்பிரமதியானத்திலேயே யிருக்க வேண்டும். பிறருடன் கூடாமல் தனித்தேயிருக்க வேண்டும். நகர கிராமங்களில் தங்கியிருக்கக்கூடாது. உலகத்தாருண்ணும் உணவுப்பொருள்களை விரும்பி யுண்ணக்கூடாது. வேடிக்கை விநோதங்களில் மனதைச் செலுத்தக்கூடாது. பிரமஞானத்தைத் தரும் நூல்களை யோதவேண்டும். இந்நெறிதவறாமல் ஒழுகுபவன் அக்ஷயமான பிரமபதத்தை யடைந்து என்றும் அழியாததும், நிறைவும் குறைவு மற்றதும், போக்குவரவில்லாததும், நினைப்பு மறப்புமற்றதுமான பிரமபதத்தையடைந்து நித்தியானந்தத்தை யனுபவிப்பான். இனி சந்நியாசிகளின் பேதமும் ஜீவனோபாயமும் சிறிது வரும்.

 

சந்நியாசிபேதம்

 

சந்நியாசிகள் குடீசகன், பகூதகன், ஹம்ஸன், பரமஹம்ஸன் என்று நான்குவிதமாகக் கூறப்படுவார்கள். இந்தப் பேதம் அவர்களுடைய சத்தினி பாத விசேஷத்தாலும் கர்மானுஷ்டான ஒழுக்கங்களாலும் பகுக்கப்பட்டது. இந்நால்வர்களுள் இறுதியிற் கூறப்பட்ட பரமஹம்ஸன் உத்தமன். ஏனைய மூவரும் முறையே ஒருவருக்கொருவர் தாழ்ந்தவராவார். குடீசகன் பரிபாக முதிர்ச்சியால் பகூதக, ஹம்ஸ, பரமஹம்ஸ ஆச்சிரமங்களைப் பெறலாம். இவர்களுள் குடீசகன் சந்நியாசிகளின் முறையை நடத்தச் சக்தியற்றவனாகையால் தன் பந்துக்கள் கிருகத்தில் பிக்ஷை யெடுத்து ஜேஷ்டன் புத்திரன் வைத்துண்ணலாம். ஆயினும் குடும்ப வியாபாரத்தை முற்றிலும் ஒழித்துவிடவேண்டும். பிறருடைய கிருகங்களிலும் பிக்ஷையெடுக்கலாம். சிகை யக்ஞோபவீதம், திரிதண்டம், கமண்டலம் இவைகளைத் தரிக்கவேண்டும். சாவித்திரி மஹா மந்திரத்தை நூறு அல்லது ஆயிரம் அல்லது கணக்கில்லாமல் ஜபித்துவரவேண்டும். பசுவின் கரியரோமத்தால் காலங்குலம் கட்டப்பட்டதும் சமனான கணுக்களையுடையதுமான மூன்று வேணு தண்டங்களையும் தரிக்கவேண்டும். பாத்திரம் வைப்பதற்கோர் உறி, கமண்டலம் ஆசனம் இவைகளை மரத்தினாற் செய்துவைத்திருக்கவேண்டும். ஸ்நானம் தவறாமல் செய்யவேண்டும். தேவாராதனை, தேவதர்ப்பணம், சூரிய நமஸ்காரம் செய்து வரவேண்டும். கீழ்த்திசையை நோக்கி உட்கார்ந்து பிராணாயாமஞ் செய்து வரவேண்டும். தன் சக்திக்குத் தக்கபடி காயத்இரி ஜபம் செய்துவரவேண்டும். மோக்ஷ சிந்தனை யுடையவனா யிருக்கவேண்டும். தன் சரீர தாரணத்துக்கேற்ற பிக்ஷையை எடுத்து வரவேண்டும். ஜபம், இதிகாச புராண ஆராய்ச்சிகளால் பகல் பொழுதைக் கழிக்வேண்டும். சந்தியோபாசனையைக் கிரமமாய்ச் செய்யவேண்டும். தேவாலய முதலிய பரிசுத்த ஸ்தலங்களில் இராப்பொழுதைக் கழிக்கவேண்டும். சாந்தி, பொறுமை, தனித்திருப்பது, பவித்திரதாரணம், இவைகளை விடாதவனாயிருக்கவேண்டும். ஒருவன் வீட்டில் எப்பொழுதும் புசிப்பது கூடாது. காமக்குரோதங்களை விட்டொழித்து ஸ்ரீ பரமேசுவரனைச் சதா தியானிக்கவேண்டும். திரிதண்டம் கிடையாவிடில் ஒரு வேணுதன் டத்தைத் தரிக்க வேண்டும். வேணுதண்டம் தவறிப்போனால் புரசு, அல் லது வில்வ தண்டம் இவற்றில் ஒன்றைத் திரிதண்டம் கிடைக்கும் வரை யில் தரிக்கவேண்டும். சிலர் சிகையுடையவர்களாயும் சிலர் முண்டகர்க ளாயும் இருந்து வருவார்கள்.

 

இனி திரிதண்டமென்பது வாக்தண்டம், மனோதண்டம், கர்மதண்டம் என்பனவா மென்று மனு கூறினார். இம்மூன்று தண்டங்களையும் விடாமல் தரித்து வருபவன் திரிதண்டியாவான் என்பது மநுவின் கருத்து. வாக்தண்டமென்பது மௌனமாம். கர்மதண்டமென்பது ஒன் றிலும் பற்றுதலில்லாம லிருப்பதாம். மனோ தண்டமென்பது பிராணா யாமமாம் என்று தக்ஷர் அவற்றின் பொருளை விரித்துக் கூறினார். வேறு தண்டம் முதலியவைகள் ஆச்சிரமத்துக்கு அடையாளமாக இருப்பனவே யன்றி மோட்சத்தை யளிக்கமாட்டா. மனோதண்டம், கர்மதண்டம், வாக்தண்டம் முதலியவைகளே மோட்சகாரணமாயிருப்பனவாம். ஆதலால் சன்னியாசியானவன் இந்த மூன்று தண்டங்களை அவசியமாய்த் தரிக்க வேண்டும். பஞ்சேந்திரியங்களையும் மடக்கிக் கோபம் முதலிய துர்க்குணங்களை யொழித்துத் தத்துவ ஞானத்தை யுணர்ந்த பெரியோர்கள் வாக்தண்டமாதி திரிதண்டத்தையே தரித்து வருவார்கள். குடீசகன் பகூதகன் இருவரும் பரிபாக முதிர்ந்தால் ஹம்ஸ பரம ஹம்ஸ முறைமையைக் கைக்கொள்ளலாம். அப்போது கமண்டலம் சிகை ஜலபாத்திரம் தண்டம் யக்ஞோபவீதம் இவைகளை யெல்லாம்'' பூஸ்வாஹா” என்ற மந்திரத்தை யோதி நீரில் எறிந்துவிட்டு ஆன்மதியானத்தி லிருப்பார்கள். ஸர்வஸங்கப் பரித்தியாகம் செய்து பிரமதியானத்தி லிருக்கவேண்டும்.

பகூதகன்.

சகல சங்கங்களையு மொழித்துப் பந்துக்கள் வீட்டில் பிக்ஷை யெடாமலும் ஒருவனுடைய சோற்றைப் புஜியாமலு மிருக்கவேண்டும். தன் பூமியில் படுக்கக்கூடாது, சற்றும் மனதிற் களங்கமின்றி யிருக்கவேண்டும். கண்ட விடங்களுக்கெல்லாம் போய் அலைந்து திரிவதாகாது. மோட்சமார்க்கத்தை விட்டு விலகக்கூடாது. ஆடை உணவு படுக்கை ஆசனம் முதலியவைகளில் ஆசை வைக்கக்கூடாது. ஏழு கிரகங்களில் பிக்ஷையெடுக்க வேண்டும். பசுவின்வால் மயிரினால் திரித்த கயிறு, திரிதண்டம், உறி, ஜலபாத்திரம், பவித்திரம், மண்வெட்டி, கத்தி, சிகை, யக்ஞோப வீதம் இவைகளையுடையவனா யிருக்கவேண்டும். தேவதாராதனம் செய்து வரவேண்டும். இதுவே பகூதக சன்னியாசியின் இலட்சணமாம்.

 

ஹம்ஸன்.

 

இவன் மோட்ச தருமத்தில் மிகச்சிரத்தையுள்ளவனா யிருக்கவேண்டும். ஆதலால் திரிகாலமும் ஸ்நானம் செய்யவேண்டும். ஈரமான வஸ்திரந்தரித்தல், சாந்திராயணாதி விரதங்கள் இவைகளை அனுஷ்டித்து வரவேண்டும். மரத்தினடி, குகை, நதிக்கரை இவைகளி லெதிலாவது வசித்து வரவேண்டும். ஒருவருடைய கிருகத்தில் வாசம் செய்யலாகாது. கமண்டலம், உறி, பிக்ஷாபாத்திரம், கந்தை, கௌபீனம், அரைக்குடுத்தும் வஸ்திரம் இவைகளைத் தரித்திருக்கவேண்டும். ஒரு மூங்கில் தண்டத்தைத் தினந்தோறுந் தவறாமல் தரித்திருக்கவேண்டும். கிராமம் தீர்த்தம் இவ்விடங்களில் ஒருநாள் வசிக்கலாம். பெரிய நகரங்களில் ஐந்து நாள் வசிக்கலாம். மாஸோபவாசம் பட்சோபவாசம் முதலிய உபவாசங்களால் சரீரத்தை ஒடுக்கிவர வேண்டும். ஆஸனம், பாதரக்ஷை, கொடை, ஜலபாத்திரம், ஒளஷதம், தண்டம், கமண்டலம் இவைகளையும் தரிக்கலாம்.

பரம ஹம்சன்.

பரமஹம்ஸனுக்கு இரண்டு கௌபீனம், கந்தை, ஒரு தண்டம் இவைகளே விதிக்கப்பட்டன. இதற்குமீறி நடப்பானானால் அவன் மஹாகொடிய நரகத்தை யடைந்து அநந்தரம் திரியக்யோனியில் ஜனிப்பான். கிழிந்ததும் அழுக்கில்லாததுமான கௌபீனந்தரித்து, ஒரு கந்தையை வஸ்திரமாயுடுக்கவேண்டும். அந்தத் துணிகளைக் காவியில் தோய்க்க வேண்டும். ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை யடக்கிச் சத்துவ குணத்தை யுடையவனாய்ப் பிரணவத்தை அப்பியசித்துவரவேண்டும். சாஸ்திர சிரவணத்தில் விருப்பம் வைக்கவேண்டும். மிகச் சுத்தனாய் உலகமெல்லாம் பிரமமென்கிற பாவனை செய்துவரவேண்டும். ஆத்மதிருப்தியுடையவனா யிருக்கவேண்டும். கல்லையும் பொன்னையும் சமனாய்ப் பாவிக்கவேண்டும். தத்பதார்த்தத்துவம்பதார்த்த ஐக்கியத்தை அறிந்திருக்கவேண்டும். விசேஷமாய் ஜனங்களிடத்தில் வசித்து வரவேண்டும். சிரோமுண்டனம் செய்துகொள்ளவேண்டும். எப்பொழுது அழியாத பிரமஞான முதிக்கின்றதோ அந்த க்ஷணமே பரமஹம்ஸாச்சிரமத்தை யடைவதற்குரிய காலமாம். இவர்களுக்கு யக்ஞோபவீதம் அவசியமன்று. சிகையும் அவசியமன்று. ஞானமே சிகையும் யக்ஞோபவீதமுமாம். எல்லாவற்றையும் காண்பதே நிஷ்டையாம். ஏனென்றால் எக்காலத்தும் கெடுதியற்ற பிரமமே உத்தமமான சூத்திரமென்றும் எல்லாம் ஸச்சின்மயமென்றும் வேதமுணர்ந்த வித்தர் கூறி வருவதாலும், நூலில் மணிகளைப்போல இப்பிரமத்இனிடத்தில் எல்லாம் கோக்கப்பட்டிருப்பதாலும், இந்தப் பிரமத்தையே யோகஞான முணர்ந்தவனான பரமஹம்ஸன் சூத்திரமாகக் கொள்வான் என்று நூல்கள் கூறின. உத்தமமான யோகத்தை யுணர்ந்தவர்களுக்கு மார்பில் தரிக்கும் பூணூலால் பயனில்லை. கிரியைகளுக்கெல்லாம் சாதனமான பிரமத்தையே சூத்திரமாகத் தரிப்பது தான் அவர்களுக்குச் சிறந்தது என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. எவன் ஞானத்தையே சிகையாகவும், பூணூலாகவும் கொண்டிருக்கிறானோ அவனிடத்தில் பிராமணியம் நிறைந்திருக்குமென்று பிரமவித்துக்கள் கூறுகின்றார்கள்.

 

ஆருணி என்பவர் பிரமலோகத்துக்குப்போய்ப் பிரமாவை நோக்கி, எந்த ஆச்சிரமத்தால் நான் கன்மங்களை யெல்லாம் விட்டொழித்து இருக்கக்கூடுமென்று கேட்டார். பிரமதேவர் ஆருணீ! நீ சன்னியாசாச்சிரமத்தில் புகுந்து புத்திரன், சகோதரன், பந்துக்கள் இவர்களைவிட்டு நீங்கிச் சிகை, யக்ஞோபவீதம், யாகம், பூணூல், வேதமோதல், மேலேழு கீழேழு உலகங்களையும, பிரமதண்டத்தையும் விட்டுத் தண்டம் கௌபீனங்களைத் தரித்துக்கொள். மற்ற எல்லாவற்றையும் விட்டொழித்துவிடு என்றார். தன்னைச் சேர்ந்தவர்கள், புத்திரர், மித்திரர், சகோதரர் யக்ஞோபவீதம், சிகை, மற்றுமுள்ள கர்மங்களிவைகளை யொழித்து, உலகத்தார் வெட்கப்படாமலிருப்பதற்காகக் கௌபீனந்தரித்துச் சன்யாஸம் பெறவேண்டு மென்று பரமஹம்ஸோ பரிஷத் கூறியது. ஞானத்தையே தண்டமாகக் கொண்டிருப்பவன் ஏகதண்டி யென்னப்படுவான். ஞானத்தைப் பெறா மல் இஷ்டமானதைப் புசித்துத் தண்டம் தரித்து வருகிறவன் மஹா கோரமான ரௌரவ நரகத்தில் விழுவான் என்று சாஸ்திரங் கூறுவதால், வீணில் கருமத்தை யொழித்துவிட்டுத் தண்டந்தரித்துக்கொண்டு ஞானத்தைப் பெறாமல், கிருகஸ்தர்களைத் தொந்திரவு செய்துகொண்டு காலங்கழிப்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். எந்த ஆச்சிரமத்திலாவது இருந்துகொண்டு அவ்வாச்சிரமத்திற்குரிய தர்மங்களை நடத்தாவிட்டாலும், எல்லாப் பூதங்களிடத்திலும் பரப்பிரம பாவனை செய்து வருவது நல்லதே யொழியத் தண்டம் கமண்டலம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு திரிவது தருமமாகாது. தேற்றான் விதை கலங்கின தண்ணீரைத் தெளியச் செய்யும் சக்தியுடையதாயினும், அதையுரைத்துத் தண்ணீரில் போட்டால் தான் அத்தண்ணீர் தெளியும். அன்றித் தேற்றான் விதையென்று அதன் பேரைச் சொன்ன மாத்திரத்தில் கலங்கின தண்ணீர் தெளிவதில்லை. அதுபோல ஆச்சிரமத்துக்குரிய தர்மத்தை விட்டு ஒழித்து அடையாளங்களை மாத்திரம் தரித்துக்கொள்வதனாலேயே அவ்வாச்சிரமம் நிறைவேறுவதில்லை. தேற்றான்வித்தின் பேரைச் சொன்னமாத்திரத்தில் கலங்கின நீர் தெளியாதது போல ஆத்துமஞானாப்பியாச மில்லாதவர்கள் பிரம ஞானத்தை யடையமாட்டார்கள்.

சந்நியாசிபேதம்

 

அடியும் நுனியும் சமனாயிருப்பதும், சமமான கணுக்களுள்ளதும், குற் றமற்ற பட்டைகளையுடையதும், சித்திரவர்ணம் (பலவர்ணம்) உள்ளதா யிருந்தாலும் காயங்களில்லாமலிருப்பதும், வண்டு முதலியவற்றால் துளை செய்யப்படாததும், கணுக்கள் கெட்டியாயிருப்பதும், தானாக முளைத்துப் பயிரானதும், தளர்ச்சியில்லாததும், கோணலில்லாததும், நல்லதுமான ஒரு மூங்கில் தடியைத் தண்டமாகக் கொள்ள வேண்டும். மூக்களவுள்ளதும், அல்லது தலை மூக்கு இவற்றுக்கு மத்தியான புருவத்தள வுயர முள்ளதாயிருக்க வேண்டும். இதுயதிகளுக்குரிய தண்டமென்று புராணங் கூறுகின்றது. சிரத்தையுடையவர்களாற் கொடுக்கப்படுகிற தண்டத்தை யாதிகள் பெறவேண்டுமென்பது ஸ்மிருதி. யாதிகளுக்கு வீதிகள் தோறும் வஸ்திரம். (என்றால் கிருகஸ்தர்களால் எறியப்பட்ட கந்தை) பூமி முழுதும் படுக்குமிடமாயிருக்கின்றது. (என்றால் படுக்க வீடு கூடாதென்பது) ஆதலால் யதிகளுக்குத் துக்கம் நேரிடக் காரணமே யில்லையென்று தேவர் கூறினார்.

 

கித்தான், சணல் அல்லது தர்ப்பையினால் செய்த வஸ்திர முடுக்க வேண்டும். இவற்றை நற்குண நற்செய்கையுடைய நல்லவர்களிடத்தி லிருந்து பெறவேண்டும். பெறும்போது கொடுப்பவர்க்குச் சிறிது கூடத் தொந்தரவு கொடுக்கக்கூடாது. ஆயினும் உடுத்துக்கொள்வதும் வஸ்திர மில்லாமலிருப்பதும் அவரவருடைய இஷ்டத்தைப் பொறுத்தது. சுகதுக் கங்களால் சரீரத்துக்குத் துன்பஞ் செய்துகொள்ளாம லிருக்க வேண்டும் என்றால் சுகதுக்கங்களைப் பாராட்டக்கூடாது. பிறர் செய்யும் ஸ்தோத்திரங்களால் மகிழ்ந்து அவர்களை வாழ்த்துவதும், நிந்தைகளால் வருந்தி அவர்களைச் சபிப்பதும் கூடாது. வேதாந்த புஸ்தகங்களை வேதவேதார் தங்களை யுணர்பவர்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். காசுவாங்கி புஸ்தகமெழுதுவது கூடாது; அதனால் பெருந்தோஷம் நேரிடும்.

 

ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருநாளும், பெரிய நகரங்களில் ஐந்துநாளும் தங்கலாம். இவ்வாறு தங்கியிருப்பதை ஆஸநமென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. சந்நியாசிகளுக்கு உரியனவென்று கூறப்பட்ட பாத்திர முதலியவற்றில் ஒன்றையாவது விலக்கியிருப்பது கூடாது. இல்லா திருந்தால் அது பாத்திர லோபம் என்னும் தோஷத்தைத் தரும். தண்டம் முதலியவைகள் கையிலிருக்கும் போது வருங்காலத்தை உத்தேசித்துச் சேகரித்துக் கொள்வது ஸஞ்சயம் என்னப்படும். ஜனங்களிடத்தில் கருணையில்லாமல் தனக்கு ஊழியம் செய்வதையும், போஜனாதிகள் கொடுத்து உபசரிப்பதை உத்தேசித்தும் சிஷ்யர்களைச் சேர்த்துக்கொள்ளுதல் சங்கிரகமென்னப்படும். சகலவிஷயங்களையும் விளக்கிக் காட்டுவதால் வித்தையைப் பகலென்றும், எல்லாவற்றையும் மறைப்பதால் அவித்தையை இரவு என்றும் அறிஞர் கூறுகின்றார்கள். வித்தியாப்பியாசத்துக்கு இடையூறு நேரிட்டால் அது " திவாஸ்வாப'எனப்படும். ஸர்வாந்திரியாமியான பரபிரமத்தின் சொரூபத்தை விளக்கும் வியவகாரங்களையே பேச வேண்டும். அதைவிட்டு நல்லபோஜனமளித்தான், நல்ல பிக்ஷை செய்வித் தான் என்று ஒருவனைப் புகழ்வதும், அந்தப்போஜனத்தை விரும்பி அவ னுக்கு அனுக்கிரகம் செய்வதுங்கூடாது. அது "விருதாஜல்பம்' என்னப்படும். யதிகள் அடிக்கடி படிப்பதும், சிரவணம் செய்வதும் அவசியமன்று. அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை விடாமல் அனுஷ்டிப்பதி னாலேமாத்திரம் யதியாவான். மேலும் மேலும் படிப்பதினால் யதியாவ தில்லை. ஆனால் உபநிஷத்துக்களை மாத்திரம் படித்தும் ஆவர்த்தி செய்தும் வரவேண்டும். தீர்த்தசேவை, உபவாசம், அத்தியயனம் செய்தல், வியாக்கியானங்களைப் படித்தல் இவற்றில் பற்றுதல் வைப்பது கூடாது. உண்மை கூறுதல், நியாயமில்லாததை விலக்கிவிடுவது, பிரமசர்யானுஷ்டானம், நல் லெண்ணம், சிவபக்தி, விஷ்ணுபக்தி, மனச்சந்தோஷம், சௌசம், ஆஸ்திகம் பிரமவிசாரம், எல்லாவற்றையும் சமனாய்ப் பார்ப்பது, படபடப்பில்லா மலிருத்தல், மனச்சமாதானம், மனத்தைரியம், பற்றற்றிருத்தல், குருபணி விடை, சாந்தி, பிறவிந்திரிய அடக்கம், மனவடக்கம், எல்லாவற்றிலும் உபேக்ஷை, நிர்ணயம், அழகானவசனம், பொறுமை, தயை, லஜ்ஜை, அறிவு, சாஸ் திரஞானம், யோகப்பயிற்சி, பிக்ஷாடனம், ஜபம், சந்தியாகால அனுஷ்டானம், கருமபலனை விட்டொழிப்பது ஆகிய இவை நியமத்துடன் கூடின யதிதர்மமாம். பரமஹம்ஸனாயிருப்பவர் தொந்தங்களை யொழித்து, ஸத்துவத்திலிருந்து எல்லாவற்றையும் சமமாய்ப் பாவிப்பதே தர்மமாகக் கொள்வர். இவர் ஸ்ரீமந்நாராயணருக்குச் சமானமாவார். பிரபஞ்சங்களை வெறுத்து ஞானாக்கினியால் எல்லாவற்றையும் தகித்து அக்கினியைத் தனக்குள் ஒடுக்கிக்கொள்கிறவனே அக்கினிஹோத்திரி என்னப்படுவான். மற்றவன் அக்கினிஹோத்திரியாவதில்லை. முந்தின மூன்று ஆச்சிரமங்களை விட்டுச் சந்நியாசத்தை யடைந்தவன் ஒருவருஷம் குருபணி விடை செய்துகொண்டிருக்க வேண்டும். பின்பு அவருடைய உத்தரவு கிடைத்தால் தனியாகப் பிரிந்து வரலாம். மழைகாலமாகிய நான்கு மாதங்கள் ஒரு இடத்தில் தங்கியிருப்பது சந்நியாசிக்குக் குற்றமாகாது.

 

உஷக்காலத்திலெழுந்து முறைப்படி சௌசம் செய்து பல்விளக்கி விதிப்படி ஸ்நானம் செய்து, சந்தியோபாசனை முடித்துப் பிரணவஜபம் செய்யவேண்டும். மரத்தடி அல்லது நதிக்கரை இவ்விடங்களில் வசிக்க வேண்டும். பிக்ஷாகாலத்தில் ஏதேனுமோர் கிராமஞ் சென்று பிக்ஷையெடுக்க வேண்டும். ஒரு பொருளையும் சம்பாதித்து வைத்துக்கொள்ளக்கூடாது. எல்லாவற்றிலும் உபேட்சையாயிருக்க வேண்டும். பொய் பேசாமை, ஜீவஹிம்சை செய்யாமை, திருடாமை, ஸ்திரீசங்கமமற்றிருப் பது, வைராக்கியம் ஆகிய இவ்வைந்தும் அவர்களுக்கு உப விரதங்களாம். கோபமின்மை, குருபணிவிடை, ஜாக்கிரதையாயிருப்பது, சௌசம், ஆகாரசுத்தி இவ்வைந்துங்கூட உபவிரதங்களெனக் கூறப்பட்டுள்ளன. காமக் குரோதங்கள் கிரகஸ்ததர்மமாம். லோபமோகங்களை யொழித்திருப்பது சந்நியாச தருமமாம். இஷ்டமானதைப் புஜித்து விடுவதால், நெய்யினால் நெருப்பு விருத்தியாவது போல ஆசை விருத்தியாகுமே யன்றிக் குறைவ தில்லை. விஷயங்களைப் புஜிப்பவன், அவைகளை விட்டொழித்தவன் இவ் விருவரில் விஷயத்தை விட்டவன் பரமசுகத்தைப் பெறுவான். வஸ்துக் களின் குற்றங்களையும் சரீர தோஷத்தையுந் தெரிந்து கொண்டவன் ஆசையை எளிதில் ஒழிப்பான். வாக்கு மனங்களை அடக்கினவன் வேதாந் தத்தாலுண்டாகும் பூர்ண பலனைப் பெறுவான். சன்மானம் பெறுவதில் வெறுப்படையவேண்டும். அவமானத்தை அமிர்தம் போல மகிழ்ந்தேற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவமானம் பெறுவதால் நல்ல நடக்கை கெட்ட நடக்கைகளைத் தெரிந்து வழிப்படலாம். அவமானஞ் செய்தவன் அழிந்துவிடுவான். தர்மம், அர்த்தம், காமம், தர்மார்த்தம், அர்த்தகாமம், தர்மகாமம், தர்மார்த்தகாமம் ஆகிய இவ்வேழையும் அடுத்த ஏழுலகங்களின் காரியங்கள் எல்லாம் அநித்தியம். ஆகையால் அவ்வநித்தியங்களைப் பற்றிய விஷயங்களைப்பற்றிப் பேசக்கூடாது. இந்திரியங்களை யடக்கல், இராகத்துவேஷங்களை விடுதல், ஜீவாத்மாக்களுக்குத் துன்பஞ் செய்யாமையாகிய இவற்றால் ஒருவன் மோட்சத்தை யடைகிறான். துர்க்கர்மம் நரகத்தில் அமிழ்த்துகின்றது. வேண்டியவர்களைத் தள்ளி வேண் டாதவர்களுடன் கூட்டிவைக்கின்றது; மூப்பினால் மெலிவிக்கின்றது; வியாதிகளால் வருத்துகின்றது; நல்ல குலத்திற் பிறந்த ஜீவாத்மாவை நாய் நரி முதலிய இழிந்த பிறவிகளில் தள்ளிவிடுகின்றது. சரீரம் படைத்தவர் தர்மத்தினால் மோட்சத்தையும், அதர்மத்தால் நரகத்தையும் அடை கிறார்களென்பதை ஸந்நியாசி நினைக்க வேண்டும். யோக முயற்சியால் நேரிடும் கதிகளையறிந்து எவ்வகையிலும் தன் தொழிலில் தவறுதல் வராமல் நடந்துகொள்ள வேண்டும். பிரமோபாஸகர்கள் தங்கள் தேகத்தை விட்டு மோட்சத்தையடைகிறார்கள். இச்சரீரத்தை யெடுக்கும் படி செய்வித்த கன்மம் அனுபவித்தாலன்றி நீங்குவதில்லை. நதியின் கரையோரத்திலிருக்கிற மரம் தன் வசம் கெட்டு நதிவேகத்தால் கரையை விட்டுவிடுவது போல கர்மத்தினால் இச்சரீரத்தை விட்டு மறு சரீரத்தை யடைகிறான்.

 

எலும்புகளாகிய கம்பத்தில் நரம்புகளாகிய புரியைச் சுற்றி மாம்ஸ சோணிதங்களால் நிரப்பினதும், அதனால் தோலினால் மூடினதும், பல துர்க்கந்தங்களுக்கு இருப்பிடமானதும், நரைதிரை மூப்புகளால் மெலி வடைவதும், ரோகங்களால் வருந்துவதும், அநித்தியமானதும், பசிதாக நித்திரைகளால் பீடிக்கப்படுவதுமான இந்தச் சரீரத்தில் பற்றுதல் வையா மல் மோட்சத்திலேயே சித்தத்தைச் செலுத்த வேண்டும். ஒரு வீட்டில் வசிப்பவன் அந்த வீட்டுக்கு வேறானவனா யிருப்பது போல இந்தச் சரீரத் தில் வசிக்கிற ஆன்மா சரீரமாக மாட்டான். சரீரத்துக்கு வேறானவனே. ஆயினும் இசசரீரத்துக்குக் காரணமாயிருந்த கர்மம் அனுபவித்தாலன்றித் தொலைவதில்லை. ஆதலாலிது கர்மசரீரமென்னப்படும். நதிக்கரை யோரத் திலிருக்கிற ஒரு மரமானது தன் வசங்கெட்டு நதியின் வேகத்தினால் கரையை விட்டு விலகி நதியில் விழுந்து செல்வது போல கர்ம வசத்தினால் இச் சரீரமும் தன் வசமற்றுப் பிரிந்து போகின்றது. பின்னும் கர்மசேஷத்தினால் வேறு சரீரம் வருகின்றது. உண்மையறிந்தவர்கள், பீஷ்மர் முதலியவர்களைப் போல், கர்மம் ஞானம் இவற்றின் வலிமையினால் தமக்கு வசமான சரீரத்தை அடைகிறார்கள். ஒரு பறவை தான் வசிக்கின்ற மரத்தைத் தனக்கு இஷ்டமுள்ள காலத்தில் விட்டொழிப்பது போல ஞானத்தின் வலிமையால் சுயமாகவே யிந்த சரீரத்தை விட்டு மேலான கதியை அடைகிறார்கள்.

 

இவ்விதிகளை விடாமற் கைக்கொண்டு நடந்து வருவானானால் ஸங் கங்களை யெல்லாம் மெல்லமெல்லத் தொலைத்து இவ்வுலக பேதங்களி னின்றும் விடுபட்டுப் பரப்பிரமத்தை யடைவான். எல்லாவற்றையும் பிரம மாகப் பாவித்து வருவானானால் கருமத்தினால் உண்டாகும் தோஷங்கள் அவனை யணுகா. எல்லாவற்றையும் பிரமமாகக் காணும் முறைமையை யுணர்த்தும் சாஸ்திரங்களை நன்றாயறிந்து, ஒருவனாகவே தனித்து இருந்து யோகத்தில் சித்திபெற்று மோட்சத்தை யடையும் முயற்சிலிருக்க வேண்டும். ஒருவனாகவே வசித்து வரும் சந்நியாசி பிக்ஷ வெனப்படுவான். இருவராகக் கூடியிருப்பவன் மிதுனம் எனப்படுவான். மூன்று பெயர்களுடன் கூடியிருப்பது கிராமமாகும். அதற்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்தால் அந்தக் கூட்டம் நகரமாகும். இரண்டு மூன்று பேர்களு டன் கூடியிருந்தால் இராஜாங்க விஷயமான பேச்சுகளும், தங்களுக்குப் பிக்ஷை நடந்ததைப்பற்றிய பேச்சுகளும், கோட் சொல்லுவதும், ஒருவரை யொருவர் தழுவுவதும், பொறாமையுமாகிய இவைகளுண்டாகும். தனி யாயிருப்பது, பிக்ஷை யெடுப்பது, தியானம், சௌசம் இந்த நான்கையுந் தவிரச் சந்நியாசிகளுக்கு வேறு செய்கைகள் சாஸ்திரங்களில் காணப்பட வில்லை.

 

"ஸந்நியாசம் பெற்ற ஸ்திரீகளாலும்" என்ற ஒரு வாக்கியம் சாஸ்திரங்களில் காணப்படுகிறது. அதனால் ஸ்திரீகளுக்கும் சந்நியாசம் உண்டென்றும் அவர்களுக்கும் சந்நியாசத்தில் அதிகாரமுண்டென்றும் போதாயன மஹரிஷி கூறுகின்றார். விக்ஞானேசுரரும் போதாயனரை அனுசரித்து ஸ்திரீகளுக்குச் சந்நியாசத்தில் அதிகாரமுண்டென்று ஒப்பியிருக்கிறார். ஆடவ சந்நியாசிகளுக் கேற்பட்ட விதிகளையே அவர்களும் அநுசரிக்கவேண்டும். அவர்களுக்கென்று வேறு விதிகள் காணப்படவில்லை. ஜனங்களில்லாத விடத்தில் தனியாக வசிப்பது, அவிவேகிகள் கூட்டத் தில் வெறுப்புறுதல், ஆத்தும தத்துவ ஞானத்தில் எப்பொழுதும் நிலை பெற்றிருத்தல், ஞானத்திற்குப் பலன் மோட்சமென் றுணர்தல், ஆகிய இவைகளே ஞானமெனப்படும். இவற்றை விட்டிருப்பது அஞ்ஞானமாகும்.

 

சாதுர்மாசியம் - ஒரு ஜந்துவுக்கும் துன்பத்தை யுண்டாக்காமலிருப் பது சந்நியாசிகளுக்கு முக்கிய தர்மங்களில் ஒன்றாதலால், ஆஷாடமாதம் (ஆடி) முதல் கார்த்திகை மாதம் வரையுமுள்ள நான்கு மாதங்களும் யதி ஒரே கிராமத்தில் வசிக்கலாம். அந்தக் கிராமம் தர்மானுஷ்டானங்கள் செய்பவர்களால் நிறைந்திருக்க வேண்டும். ஜலம் சம்பூர்ணமாயிருக்க வேண்டும். காசியை அடைந்தவர்கள் அவ்வூரை விட்டுப் போக வேண்டாம். அவ்விடத்தில் மரித்தவர்களுக்கு மறுபிறப்பில்லை யென்று புராதன நூல்கள் கூறுகின்றனவென்று வியாசர் கூறினார். வருஷா காலமாகிய நான்கு மாதங்களுக்குள் அதிக மழையாயின் இரண்டு மாதங்களே சந்நியாசிகள் ஒரு கிராமத்தில் தங்கலாம். அதற்கு மேல் பத்து நாட்கள் கூடத் தங்கக்கூடாது. தேகம் சக்தியற்றிருந்தால் நான்கு மாதங்களிருக்கலா மென்று சங்கரர் கூறினார். வருஷாகாலமென்பது ஆடி முதல் கார்த் திகை வரையுமாமென்று விக்ஞானேசுரர் கூறினார். வருஷா காலத்தில் ஒரே இடத்தில் தங்குவதும், அதிக வயோதிகரும், கொடிய ரோகங் கொண்டவரும், ஸங்கங்களை விட்டொழிந்தவருமான யதிகள் கிராமத்திலாவது நகரத்திலாவது தங்கியிருப்பது குற்றமாகாதென்று விஷ்ணு கூறினார். அவ்விடங்கள் புண்ணிய நதிக்கரையிலிருக்க வேண்டும். அல்லது புண்ணிய க்ஷேத்திரங்களா யிருக்க வேண்டும்.

 

வருஷா காலத்தில் பூமியிலும் ஆகாயத்திலும் ஜீவஜந்துக்கள் நிறைந்திருக்கு மாதலால் அக்காலம் முழுமையு மோரிடத்திலேயே வசிப்பது தான் உசிதம். ஒரு வஸ்திரம் அல்லது இரண்டைத் தரித்து ஆசையற்ற வனாய் ஓரிடத்தில் வசிக்கலாமென்று யம முனிவர் கூறினார். நடக்கும் போது பூமியை நன்றாகக் கவனித்துக்கொண்டே நடக்க வேண்டும். இரவிலும் மத்தியானத்திலும் இரு சந்தியா காலங்களிலும் நடப்பது கூடாது. சூனியமான விடத்தும் துர்க்க மிருக்குமிடத்தும் பிராணாபாயம் நேரிடும்படியான இடத்திலும் வசிப்பது கூடாது. எந்த விடத்தில் ஈசுவரன் வசிக்கின்றாரோ அந்த விடத்தில் வசிப்பது நன்று. தன்னுடைய குலம் கோத்திரம் ஒழுக்கம் பேர் எல்லாவற்றையும் பிறர் அறியும்படி செய்யவேண்டும். நெல் முதலிய தானியங்களை உரலிலிட்டுக் குத்துவதும், பிறரைக் குத்தும்படி செய்வதும் கூடாது. தான் பிறனொருவனை யண்டாமலும், பிறர் தன்னை யண்டாமலும் மிருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும். பிரணவம் உபநிஷதம் இவைகளில் தன் வாக்கைச் செலுத்த வேண்டும். வேறொன்றிலும் உபயோகிக்கக் கூடாது. இகலோக பர லோக காரியங்களைச் சற்றுங் கவனிப்பது கூடாது. நல்லறிவு பெற்றுச் சிரவண மனன நிதித்தியாஸனங்களால் ஆத்மசாட்சாத்காரத்தை விடாமற் கைக்கொண்டு, ஆச்சிரமத்துக்குரிய தர்மங்களை விடாமல் நடத்தி, நிஷித்த காரியங்களை யொழித்துவர வேண்டுமென்று ஹரதத்தர் கூறினார். இகபர சாதனமான காரியங்க ளெல்லாம் குரு உபதேச மில்லாவிட்டால் சித்தி தருவதில்லை. ஆதலால் குருவை மிகச் சிரத்தையுடன் ஆராதிக்க வேண்டும். குருவின் அனுமதியின்றி ஒருகாரியத்தையும் ஆரம்பித்தல் கூடாது. குருவைச் சற்றேனும் விட்டுப் பிரியாமலிருந்து, தண்டம் போல அவரை வணங்கி வர வேண்டும். மனு முதலியோரால் விதிக்கப்பட்ட பிரமசரிய விரதமெல்லாம் சந்நியாகளுக்கு முரியதென்று வியாசர் கூறினார். சொர்ணம் முதலியவற்றைப் பிறரிடமிருந்து பெறுவது கூடாது. பொன் வெள்ளி முதலியவற்றை ஆசையுடன் பார்ப்பானானால் பிரமஹத்தி தோஷத்தை யடைவான். ஆசையுடன் தொட்டால் பௌல்கனன் என்ற இழிந்த பாபியாவான். ஆசையுடன் அவற்றைப் பெறுவானானால் ஆத்தும ஹத்தி செய்தவனாவான். ஆதலால் அவற்றைப் பார்ப்பதும் தொடுவதும் கூடாதென்று பரமஹம்ஸோப நிஷத்து கூறியது. அதுவே, புலன்களை யடக்கி நான் பரிபூர்ணானந்த சொரூபியான பிரமமென்று பாவித்துக் கிருதகிருத்தியனா யிருக்க வேண்டு மென்றது. மனமானது சுத்தமென்றும் அசுத்தமென்றும் இருவகைப் படும். காமமுதலியவற்றில் பற்றற் றிருப்பது சுத்தமனம், பற்றுதலுடையது அசுத்தமனமாம். இம்மனமே விஷயப் பற்றுதலால் பந்தத்துக்கும், பற்றற்றிருத்தலால் மோட்சத்துக்கும் காரணமாகின்றது. ஆதலால் விஷயப் பற்றுதலை யொழித்துவிட வேண்டுமென்று அமிருத பிந்துபநிஷத்து கூறியது.


 திகம்பர சந்நியாசம்.

 

திகம்பரம் என்றால் வஸ்திரமில்லாம லிருப்பது. திகம்பரன் நல்ல ஞானமுடையவனானால் அவனுக்கு யாதொரு கர்மானுஷ்டானமுமில்லை. அடையாளமுமில்லை. ஆதலால் அவன் மமதை யற்றவனும், பயமில்லா தவனும், சாந்தி யுடையவனும், சீதோஷ்ணங்களைக் கவனியாதவனும், உதிர்ந்த சருகு முதலியவற்றைப் பட்சிப்பவனுமா யிருக்க வேண்டும். அரைநாண் கொளபீனம் இவ்விரண்டையுந் தரித்துக் கொண்டாவது தரிக்காமல் விட்டுவிட்டாவ திருக்கலாம். இவன் நல்ல ஞானத்தைப் பெற்று யோகியா யிருந்தால் எங்கும் பிரமமாகக் காண்பான். ஞானமொன்றே மோட்சகாரண மாவதன்றிக் காஷாய முதலிய அடையாளங்களால் யாதொரு பயனுமில்லை. ஆகையால் திகம்பரர்களுக்கு அடையாளம் வேண்டுவதில்லை. ஞானமொன்றே பிரதானம். ஆசிரமத்துக்குரிய குறிகளை யிழந்தவனானாலும் அதற்குரிய கருமங்களை யுணர்ந்து பிரமவிரத மொன்றையே அனுஷ்டிப்பான். அந்தத் தர்மங்களை மனதில் வைத்துக் கொண்டு, பிறருக்குத் தம்மைப் புலப்படுத்தாமல் வசிப்பார். எல்லாவற்றையும் ஒழித்து ஊமையைப்போலவும், குருடனைப்போலவும், செவிடனைப் போலவும் பூமிமுழுவதும் சஞ்சரிப்பார். இவனைத் தேவர்களும் கண்டு ஆசைப்படுவார்கள். பைத்தியங் கொண்டவர்களைப் போலாவது அஃதில்லாதவர்களைப் போலாவது சஞ்சரிப்பார். சொற்ப ஆகாரத்தைப் புசிப்பார். நித்திரையிலும் நித்திரையில்லாதபோதும் யோகத்தில் நிலைத்திருப்பார். இவ்வாறிருப்பவனைத் தேவர் பிராமணன் என்று கூறுவார். சாஸ்திராப்பியாசத் தாலும் நல்ல சகவாசத்தாலும் ஞானத்தைப் பெறுவது யோகத்தின் முதற்படியாம். இரண்டாவது வஸ்து விசாரணை. சங்கத்தை யொழித்தல் மூன்றாவது. வாசனை யொழித்தல் நாலாவது. சுத்தச்சிதாநந்த சொரூபமே ஐந்தாவது. இவ்வைந்தாம்படியில் அரைத் தூக்கமும் அரைவிழிப்புமா யிருப்பானாயின் ஜீவன் முக்தனாம். ஆறாவது ஏதுமறியாநிலை. அதில் சுழுத்தியி லிருப்பது போலவே யிருந்தால் உப சாந்தி யுண்டாம். அதுவே முக்திநிலை. எல்லாவற்றையும் சமமாகப் பாவித்து நிர்மலமாக இருப்பது ஏழாம்படியாம். இவ்வேழாம்படி துரியா தீதாவஸ்தையும் நிர்வாணமுமாம். அதற்கு நிகரில் ஏழாம்படி யென்பர்.



 

மோட்ச நிலை

 

உன் இந்திரியங்களை நிக்கிரகம் செய்யும் பிரத்தியாகாரம் என்னும் யோகத்தால் கேவல சின்மாத்திரமாக இருப்பதுவே எங்கும் பொங்கிய ஏக ரஸ பிரம சமாதி யென்னும் மோட்சமாம். சுக துக்கங்களற்ற பரிபூரண சமாதியிலிருப்பவனே முக்தன் என்னப்படுவான். எல்லாப் பூதங்களிலும் பாவனையை விட்டு வெளிப்பட்டவன் சந்திரனைப்போல நிர்மலன். அவன் சூரியனைப்போலப் பிரகாசிப்பான். செய்ததும், செய்கிறதும், செய்யப் படுவதுமான கர்மங்கள் குலத்தாலும், செல்வத்தாலும், தேகவியலாலும், தொழிலாலும் வரும் கன்மங்களை ஞானாக்கினியால் தகித்து வெளிக்கிளம் பினவனே முக்தன். மற்ற வித்தைகள் எல்லாம் அப்பியாசம் பண்ணாம லிருந்தால் அழியும். ஞான கலை மாத்திரம் உள்ளே விருத்தியாகும். விஷய போகங்களில் ஆசையுள்ள வரைக்கும் ஆன்மா ஜீவன் என்னப்படுவான். அந்த ஆசை அவிவேகத்தினாலுண்டானதேயன்றி ஆன்மாவிற்கு இயற்கை யானதல்ல. விவேகத்தால் ஆசை ஒழிந்தால் ஜீவாவஸ்தை ஒழிந்து போகும். அப்போது அவன் பிரமம் ஆய்விடுவான். நிராமயனாய் மிருத்தியுவைக் கடந்து நிற்கும் அவனுடைய பரிபூரணாநந்தத்துக்கு ஒப்புயர்வில்லை. உலக வாசனையைக் கடந்து சம்பூர்ண சைதன்ய மயமாய் நிற்கும் அந்த யோகியின் பரமானந்தத்துக்கு எதையும் உபமானமாகச் சொல்ல முடி யாது. சாஸ்திரார்த்தங்களி லுள்ள வாசை யொழிந்து பற்பல ரசங்களு டன் கூடின பற்பல காரியங்களில் சந்தோஷமற்றுச் சங்கற்ப விகற்பங் களை விட்டவன் சாசுவதமான சுக சொரூபமாக நிற்பான். அவன் வர்ணா சிரம சாஸ்திரக் கட்டுகளை யறுத்துக்கொண்டு கூட்டைவிட்டு வெளிப்பட்ட சிங்கத்தைப் போல விளங்குவான். விஷய வாசனை யென்கிற வியாதியை ஞான ஒளஷதத்தினால் தொலைத்து விளங்குகிற அந்த யோகி சரத்கால ஆகாயம் போல நிர்மலமான பிரகாசத்தைப் பெறுவான். ஆழமானதும் நிர்மலமாயுள்ள துமான மடுவில் காணப்படும் மலையின் நுனியைப் போல விளங்குவான். எல்லாக் கன்மங்களுமற்று நித்தியத் திருப்தியுள்ளவனான அவன் புண்ணியத்தாலாவது பாவத்தாலாவது மற்றெதனாலாவது கட்டுப் படமாட்டான். எந்தக் கன்மத்தாலும் யோகியின் மனம் விகாரம் அடையாது. ஜனக்கூட்டத்தில் சஞ்சரித்தும், குதித்தும், ஆடியும், விளையாடியும், பாடியும் திரிவான். அவற்றால் அவன் யாதொரு கெடுதியையும் அடை யான். இதுவே மோட்ச நிலையாகும். இதை யடைந்தவன் ஜீவன் முக்த னென்று சாஸ்திரங்கள் வியந்து கூறும். அறிவிற் சிறந்த பெரியோரும் புகழ்ந்து மகிழ்வார்கள்.

ஞானம்.

''தத்வமசி'' என்னும் வாக்கியார்த்தமாகிய ஜீவாத்ம பரமாத்ம ஐக்கிய ஞானமே முத்திபெறுவதற்குக் காரணமாம். தைத்திரீய சுருதி ஞான மொன்றினாலே தான் முத்தி கிடைக்குமென்று கூறுகிறது. பிரமத்தை யறிந்தவன் எல்லாவற்றுக்கு மேலான அப் பிரமத்தை யடைவான். அந்தப் பிரமத்தின் சொரூபமாவது எக்காலத்துங் குறைவுறாத ஞானவடிவமாம். அது எங்கும் நிறைந்திருப்பதால் முடிவற்றதாயுள்ளது. இந்தப் பரம் பொருள் எல்லாவற்றினும் நிறைந்து நின்று அவையுணரும்படி செய்கி றது. அஃதின்றேல் பத்தாத்மா (பந்தத்தில் சிக்கிய ஆன்மா) ஒன்றை யும் உணராது என அறிகிறவன், அந்த ஞான சொரூபத்துடன் ஒன்றிக் கலந்து சகல கர்ம பலன்களையுமடைவான்." சரீரங்களெல்லாவற்றிலும் சரீரமின்றியும் சரீரமில்லாத பொருள்களில் சரீரமுள்ள துமாய் நிற்பதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், எங்கும் நிறைந்ததுமான இந்தப் பிரமத்தை யறிபவன் சோகத்தை யொழிப்பான். நல்லொழுக்கமுள்ளவன் அஃதில்லாதவன், பொறுமையுள்ளவன் அஃதில்லாதவன், மனத்தை யடக்கினவன் அடக்காதவன், இவர்கள் இந்தப் பிரமத்தை யடையமாட்டார்கள். பிரமஞானமொன்றேயதைப் பெறுவதற்குக் காரணமாகும்.

 

ஆதலால் அந்தப் பரமஞான மொன்றையே தேடிக்கொள்ள வேண்டும். ஆத்மா ஒருவனே எல்லாவற்றிலுமிருந்து நன்மையை யளிக்கின்றது என்று அறிகிறவன் குறைவற்ற சாந்தியைப் பெறுவான். இதைத்தவிர வேறில்லை " என்று கடவல்லி சுருதி கூறுகின்றது. முண்டகோபநிட தம் " கண்டமில்லாததும், ஞானவடிவானதும், முத்தியை யளிப்பதுமான பரமான்மா ஒன்றே சாத்தியப் பொருளாதால் அறிஞர் அதனையே அறிவார்கள். அதனை விளக்கும் உபநிஷத்துக்களையே பயில வேண்டும். இதையன்றி வேறு விவகாரங்களை விட்டொழிக்கவேண்டும். உலகத்தில் ஓடுகிற ஆறுகளெல்லாம் சமுத்திரத்தில் பாய்ந்து தத்தம் பெயர்களை ஒழித்துச் சமுத்திரமாகவே நிற்பது போலப் பிரமத்தையடைந்த ஆன் மாவும் நாமரூபங்களொழிந்து பிரமமாகவே நிற்கும், பரமான பிரமத்தின் அபரோட்ச ஞானத்தை யறிகிறவன் பிரமமாகவே ஆய்விடுவான். இதில் சந்தேகமில்லை'' என்று கூறியது.

 

அமிர்தபிந்தூபநிஷத் "மாயா சம்பந்தமற்றதும், கண்டமின்றி எங்கும் நிறைந்ததுமாயுள்ளதும், அசைவு முதலிய கிரியைகளில்லாததுமான பிரமம் நானே யென்று அறிகிறவன் அந்தப் பிரமமே யாய்விடுவான் என்பதில் சந்தேகமில்லை'' என்று கூறியது. கைவல்லிய சுருதி'' உமாகாந்தனும், எல்லாவற்றிற்கும் ஈசனும், எல்லாவற்றிற்கும் பிரபுவும், திரிநேத்திரனும், காளகண்டனும், மிகச் சாந்தனுமான இப்பொருளை விடாது தியானித்துச் சிந்திக்கிறவன் சர்வபூதங்களுக்கும் சாட்சியைப் போல உதாசீனனாயிருந்து வரும் சிவமாகிய அந்தப் பிரமத்தையே அடைவான். ஆத்மா சர்வ பூதங்களிலுமுள்ளதாகவும், பூதங்களெல்லாம் ஆன்மாவினிடத்தில் ஆரோபிக்கப்பட்டதாகவும் நன்றாயுணர்ந்தவன் அந்தப் பொருளை யடைவானேயன்றி மற்றவன் அடையமாட்டான்'' என்று கூறியது. ஜாபாலோபநிடதம் - " கண் காது முதலிய புற இந்திரியங்களை அடக்கினவனும், மனமுதலிய வுட்புலன்களை யடக்கினவனும், விஷயங்களில் உபேக்ஷையுள்ளவனும், சீதோஷ்ணங்களைச் சகித்திருப்பவனும், பேதபுத்தியில்லாதவனும், மிகச் சிரத்தையுள்ளவனுமான ஞானி அகண்டமாகிய பரமான்மா நானேயென்று அறிந்து கொள்வான். ஒன்றாகவுள்ள ஆன்மா எல்லாவற்றிலும் வியாபகமாக இருப்பதால் அவன் அந்தப் பிரமமே யாவான்'' என்று கூறியது. "நானே பரமான்மா" வென்று அறிகிறவன் உலகப் பொருள்களில் சிறிதும் ஆசைவைக்கமாட்டான். ஆதலால் ஒன்றைப் புசிப்பதற்காவது அதை விரும்பியாவது சரீரத்துக்குத் தொந்திரவைக் கொடுக்கமாட்டான். "பிரமமென்பது சப்த ஸ்பரிசம் ரூபம் ஒன்றுமில்லாதது. ஆயினும் அது எக்காலத்துங் குறைவை யடையாது. ரஸம் கந்தம் இவைகளில்லாததாயினும் நித்தியமாகவும் ஆதியந்த மற்ற துமா யிருக்கின்றது. இந்தப் பிரமத்தைச் சிரவண முதலியவற்றால் அறிகிறவன் ஜனனமரண ரூபமான மிருத்தியுவென்ற சமுசாரத்தினின்றும் விடுபடுவான். ஞானமென்ற நெருப்பானது சுபம் அசுபம் என்ற கட்டைகளை எரித்து ஒழித்துவிடுகின்றது'' என்று வேறு சுருதிகள் கூறின. '' சாஸ்திரங்களில் தேர்ந்த நல்லறிவுடையவன் கருமங்களினால் கட்டுப்படான். மெய்யறிவு பெறாதவனைத் துக்கங்கள் சூழ்ந்து கொண்டு பிரமத்தை யடையவிடாவாம். அவன் துக்க ரூபமான சம்சாரத்தில் புகுந்து நெருப்பினால் தகிக்கப்படும் வத்துக்களைப் போலச் சிறப்படையமாட்டான்'' என்று மனு கூறினார். "நெருப்பு நாற்புறமுஞ் சூழ்ந்து கொண்டு கட்டைகளைத் தகிப்பது போல ஞானமாகிய நெருப்பு கர்மங்களை யெல்லா மெரித்து விடும்'' என்று பகவத்கீதையில் கண்ணன் கூறினார்.

 

சுருதிகள் கூறினவென்று யாமெடுத்துக்காட்டிய ஞானத்தைப் பக்தி சிரத்தையுடன் குருமுகத்தாலுணர்ந்துகொள்ள வேண்டும். ஞானோபதேசம் செய்கிற குருவைப் பரபிரம சொரூபமாகவே கருதி வழிபடவேண்டும். அந்தக் குரு பிரமஞானத்தை யடைந்தவரா யிருக்க வேண்டும். அங்ஙனம் தகுந்த குருவைத் தேடியடைந்து சோம்பலும் வெட்கமுமில்லாமல் பணிவிடைகள் செய்து, அவரை மனமுவப்பக்கண்டு அவரிடம் ஞானோபதேசம் பெறவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து செய்வதாலன்றிச் சாஸ்திர வாராய்ச்சியான் மட்டும் மெய்ஞ்ஞான முதிக்கமாட்டாது. இந்தப் பிரமஞானத்தைப் பெரும் பொருட்டே ஆன்மாவுக்கு மனித சரீரமுண்டாயிற்றென்று கருத வேண்டும்.

 

முற்றிற்று.

 

                                                         சிவானந்த சாகர யோகீஸ்வரர்.

 

ஆனந்த போதினி – 1923 ௵

ஜுலை, ஆகஸ்ட்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ௴

 

No comments:

Post a Comment