Monday, August 31, 2020

 

சுக்கிரீவ ஆக்ஞை

சுக்கிரீவ ஆக்ஞை என்பது நமது நாட்டில் வழங்கப்பெற்று வரும் பழமொழிகளுள் ஒன்று. ஒரு காரியத்தைச் செய்யும்படி ஒருவர் மற்றொருவருக்கு உத்தரவிட்டாலோ அல்லது அவரைக் கேட்டுக் கொண்டாலோ அவ்வாறு உத்தரவிடப்பட்ட அல்லது கேட்டுக் கொள்ளப்பட்ட வர், அக்காரியத்தை உடனே செய்யத்தவறின், அன்னவரை நோக்கி '' ஏன் நமது உத்தரவை அல்லது வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்கிற கேள்வி நிகழும்போது " இதென்ன சுக்கிரீவ ஆக்ஞை'போலிருக்கிறதே " என்னும் மறுமொழி சில சந்தர்ப்பங்களில் பிறப்பது உண்டு. இதனைச் சிறிது பரியாலோசித்து, இதனால் நமது தாய் நாட்டை எவ்விதம் முன்னேற்றத்திற்குக் கொண்டு வரக்கூடுமோ அந்த உபாயத்தை யறிவோமாக.

 

சுக்கிரீவன் வானரேந்திரனாகிய வாலியின் தம்பி. வாலியோ அறிவு, ஆற்றல், தெய்வ நம்பகம் முதலிய சிறந்த குணங்கள் பொருந்தப் பெற்றவன். ஆகிலும் அகங்காரத்திற்கு இடங்கொடுத்தான். அக்காரணத்தால் அவ்வுயர்ந்த குணங்கள் அவனுக்கு வேண்டுஞ் சமயத்திற் பயன்படா தொழிந்தன. அவ்வாலி, சுக்கிரீவன் விஷயத்தில்'' ஐயோ! இவன் இளையவன்றானே; பெருந்தவறொன்றுஞ் செய்துவிட வில்லையே! நமது நாட்டாரின் வேண்டுகோளுக்கு இசைந்தன்றோ அரசுபுரிய உட்பட்டான்; இப்போது அச்செய்கையையும் தப்பிதமென்றே ஒத்துக்கொண்டு நம்மையே சரணாகதியடைந்தனனே; அவனுக்கு நம்மினும் உத்திருஷ்டமான உதவி வேறெவர்? " என்பவையாதிய நியாய நெறிகளை யொரு சிறிதும் கவனியாது, அவன் மனைவியையுங் கைப்பற்றிக்கொண்டு, 'இடங் கொடுத்தால் மடம் பிடுங்குவான்' என்றெண்ணிச், சிட்டுக் குருவியின் மீது இராமபாணந் தொடுத்தது' போல அவனைத் தொந்தரைக்குட்படுத்தினான். இது தனது பராக்கிரமத்துக்கே இழிவு என்பதையும் புறக்கணித்தான்.

 

இவ்வண்ணந் தன் உயிர்க்கு இறுதி தேடப்புகுந்த அண்ணனை '' உடன் பிறந்தே கொல்லும் வியாதி " க்கு நிகரெனக் கருதி, சுக்கிரீவன் தனக்குத் தக்க துணை சிக்கு மட்டும் பக்குவமாகப் பதுங்கி யிருந்தான். சுக்கிரீவனும் சாமானியன் அன்று. உத்தம குணங்களும், உயர்ந்த நடை யும் உள்ளவன். அரச தருமம் அனைத்தும் உணர்ந்தவன் "............ அரசும், இல் வாழ்வா ரில்வழியில்'' ஆதலின், அதற்குப் பழுது நேராதபடி குடி களைப் பெருக்கி அவர்களுக்குத் தன்னிடம் பூரண நம்பிக்கை யுண்டா கத்தக்க வழிகளை மேற்கொண்டு வந்தான். பால் தொட்டுப் பால் கறப்பது போலத் தன் பிரஜைகளிடம் அன்பு காட்டி அன்பு பெற்று வந்தான். இதனால் அவனிடமிருந்த சேனைகள் எழுபத்திரண்டு வெள்ளமும் அவன் மேற் பிரியங்கொண்டு அவன் சொற்படி நடக்க நேர்ந்தது. நிற்க,

 

கவலைக்கடலைக் கடக்கும் பொருட்டு, கண்ணியமானதோர் புணையா கிற துணையை நாடித்திரியும் சுக்கிரீவன் முன், இணையேற்றமிலாக் குணநிதி யாகிய ஸ்ரீராமபிரான் தோன்றினன். மெய்யன்பர்க்கு இடர் நேர்ந்த போது, உடுக்கை யிழந்தவன் கைபோன்று உதவ எங்கும் நிறைந்த ஐயன் எதிர்ப்படாமல் இருப்பனோ? "உடுத்த பெருந்திசை யனைத்தும் ஒலி கொள்ள உறு துயரால், அடுத்த பெருந்தனி மூலத்தரும் பரமே! பரமே!! என்றெடுத்து", கரிராஜனொருவன் அழைத்தபோது, அபயாஸ்தத்தை அவன் மீது வைத்து "என் அப்பா! இப்படிக் கூவுகின்றாய்? நான் தூரத்தில் இருப்பதாக நினைத்துவிட்டாயோ? தற்போதமற்ற அன்பர்களிடமே சதா குடிகொண்டிருப்பவன் யான் என்பதை மறந்தனை போலும்; மார்ச் சால நியாயத்தால் வழிபடுவோரையும், பெற்ற தாயினும் பற்று மேற் கொண்டு, இருப்பவனன்றோ?'' என்றருளிய பரமபுருஷன், நமது சுக்கிரீவன் சஞ்சலத்தைத் தீயிலிட்ட பஞ்சுபோலாக்க ஸ்ரீராமபிரானாகத் தோன்றினான்.

 

பண்டிதோத்தமரான மாருதியால் சுக்கிரீவன் ஸ்ரீராமபிரானுடைய குணாதிசயங்களை நன்கறிந்து, பிரியா நட்பைப் பிரியமாய்ப் பெற்று, பகைவனை வென்று சுகக்கடலி லாழ்ந்தான். பிறகு,

 

சுக்கிரீவன் தனக்கு மந்திரியாக மாருதியையும், பகைவரைத் தடுக்க வல்லதும், நட்பினரை ஆதரிக்க வல்லதுமாய், வற்றாத நீரையும், வெளிப் பிரதேசத்தையும், செழுமை வாய்ந்த பெருத்த மலைகளையும், அடர்ந்த வனங்களையும் கொண்ட கிஷ்கிந்தையை நாடாகவும் கொண்டு, ஊக்கமும் உற்சாகமும் உள்ள சேனா வீரர்களையும், ஐக்யமும் அன்புந் தழைத்த குடி மக்களையும் துணையாகப் பெற்று, செய்தொழிலில் அசட்டையாயிருத்தல் அளவறியாது செய்தல், பொருந்தாதவற்றை மேற்கொள்ளல் முதலிய விலக்குகளையனுசரித்து, காருண்யத்துடன் நடந்து வந்தபடியால் அவனுடைய கட்டளையை அவனது குடி ஜனங்கள் 'இராணுவக்கட்டளை' போல் தழுவி, சிறிதும் வழாது கீழ்ப்படிந்து வந்தனர். அக்கட்டளை உலகுள்ளளவும் நின்று நிலவ 'சுக்கிரீவ ஆக்ஞை' என்று வழங்கி வருகிறது. இத்தகைய கட்டளை, ஒற்றுமையோடு கூடிய கட்டுப்பாட்டைப் பலப்படுத்துகின்றது. இதற்குத் தலைவனுக்கும் பிறர்க்கும் இருக்க வேண்டிய பரஸ்பரோக்தமான அன்புதான் காரணம். உயிர் நிலையே அன்பின் வழியதாதலின், அந்த அன்பு எங்கு வளர்ந்து வருகிறதோ அங்கு சித்திக்காத விவகாரம் ஒன்றுமே யில்லை.

 

ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய அன்பானது தோஷ ராகிதமாகப் பரவி, பெரியோர் கட்டளைக்குச் சிறியோர் கீழ்ப்படிந்து நடந்துவரின், ஒற்றுமை பலத்து, சுதந்தரத்வம் தானேஉண்டாகி விடும். குடும்பத்திலுள்ள பெரியோர், இந்த நோக்கத்தை யுட்கொண்டு, தம்மைப் பின்பற்றியுள்ளவர்களை வேண்டிய உபாங்கங்களுடன் சீர்திருத்தி வந்தால் எல்லா நன்மையும் தன்னிடையே கைகூடும்.


 ம. இராஜகோபால பிள்ளை,

 கோமளே சுவரன் பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment