Monday, August 31, 2020

 

சாதன சதுஷ்டயம்

       நித்திய வநித்தி யங்க ணிண்ணயந் தெரிவி வேகம்

      மத்திய விகபரங்கள் வருபோகங் களினி ராசை

      சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென்றாறு கூட்டம்

      முத்தியை விரும்பு மிச்சை மொழிவர்சா தனமிந் நான்கே.

                                                            - (கைவல்லியம்)

 

      வேதாந்த விசாரம் செய்யப் புகுவதற்கு சாதன சதுஷ்டய சம்பன்னனே யதிகாரியாவன். பக்குவமில்லார்க்கருளலும், பாவிக்கறமோதலும், கண்ணிலார்க்குப் பொன்னாரம் பூட்டுதல் போலாம் என்று ஆன்றோர் அருளியிருப்பதினால் பக்குவதசையை அடையாத சீடனுக்கு ஆசான் உபதேசித்தருளமாட்டார். அந்தப் பக்குவம் யாதெனின் (1) நித்தியாநித்திய வஸ்து விவேகம். (2) இகமுத்திரார்த்த பலபோகவிராகம். (3) சமாதிஷட்க சம்பத்தி. (4) முமூக்ஷுத்வம் என்னும் இந்நான்கு சாதனங்களையும் பெற்றிருத்தலே. சாதனமின்றி ஞானம் கிட்டாது. கைவல்லியத்தில்,

 

      சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை

      ஆதலா லிந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும்

      நூதன விவேகி யுள்ள நுழையாது நுழையு மாகில்

      பூதசன் மங்கள் கோடி புனிதனாம் புருடனாமே.

 

என்று அருளியிருப்பது காண்க.

 

      1. நித்தியாநித்திய வஸ்து விவேகம்.

 

      இவ்வுலகத்தின்கண்ணுள்ள எல்லா வஸ்துக்களையும் விசாரித்து எது நித்தியமாயுள்ளது எது அநித்தியமாய் அழிந்து போகக் கூடியது என்று ஆராய்ந்தறிந்து அநித்தியமாயுள்ள வஸ்துக்களின் மேல் புத்தி செல்ல வொட்டாமற் றடுத்து, நித்தியமாயுள்ள வஸ்துவின் மேல் மனம் பற்றியிருப்பதே நித்தியாநித்திய வஸ்து விவேகம் எனப்படும். உற்று நோக்குங்கால் இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொரு வஸ்துவும் சதாகாலமும் மாறுதலடைந்து கொண்டேயிருக்கிறது. மனிதர்களிறப்பதும் மிருகங்கள் சாவதும் செடி கொடி மரங்களழிவதும் மேடு பள்ளமாவதும் பள்ளம் மேடாவதும் நாம் பிரதிதினமும் காண்கிறோம். சக்கிரம் சுழலுவதைப்போல ஒவ்வொரு வஸ்துவுங் காலஞ் செல்லச்செல்ல மாறுதலடைந்து கொண்டே யிருக்கிறது. இப்படி நாம் பார்க்கும் ஒவ்வொரு வஸ்துவும் மாறுதலடைந்து கொண்டிருப்பதினாலே மாறுதலில்லாத வஸ்து ஒன்று இருக்க வேண்டுமென்று பெறப்படுகிறதல்லவா? ஏனெனில் மாறுதலில்லாத வஸ்து வில்லாவிட்டால் மாறுதலடைய வஸ்துக்கள் எங்ஙனமிருப்பது கூடும்? பள்ளமில்லாமல் மேடு எப்படியுண்டாகும்? அப்படி மாறுதலில்லாமல், நித்தியமாய், நிஷ்களங்கமாய், நிர்மலமாய் இருக்கும் வஸ்துதான் யாது? அது தான் ஆத்மா. அது தான் கடவுள். அது தான் பிரம்மம். நாம ரூப விகாரமுள்ள அசத்தாகிய உலகம் சத்துப்போல் தோன்றிக் கொண்டிருப்பினும் அதின் கண் மனம் செல்லவொட்டாமற் றடுத்து, சுயம்புவாய், நித்தியமாயுள்ள பிரம்மத்திலேயே புத்தியை வைப்பது தான் நித்தியா நித்திய வஸ்து விவேகம்.

 

      2. இகமுத்திரார்த்த பல போகவிராகம்.

     

      இகத்திலும் பரத்திலும் கன்மத்தினால் வரப்பட்ட விஷயபோகமனைத்தும் கண்ணிமைப் பொழுதிலழியக்கூடிய தென்றுணர்ந்து வாந்தி செய்த அசன [சோறு] மனமூத்திராதிகள் போல அவைகளை வெறுத்துத் தள்ளி இவ்வுலகத்திற்குக் காரண கர்த்தாவாயுள்ள கடவுளைன் மேல் பக்தி வைப்பதே இகமுத்திரார்த்த பலபோக விராகம். உலகத்தில் சுகமென்பது ஏது? சுகமெங்கிருக்கிறதோ அங்கு துக்கமுந்தானிருக்கும். நித்தியா நித்திய வஸ்து விவேகத்தினால், நித்தியம் போல் தோன்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வஸ்துவும் உண்மையில் அழியக் கூடியதே என்றுணர்ந்த பின் அப்படி அநித்தியமான வஸ்துக்களினின்றும், நித்தியமான சுகம் எப்படிக் கிடைக்கும்? ஆகையால் ஆசை காட்டி மோசஞ் செய்யும் இவ்விஷய போகங்களிடத்துப் புத்தியைச் செலுத்தாமல் வைராக்கியத்துடன் சுக சொரூபியாயுள்ள பகவானிடத்து மனம் லயித்திருக்கும்படி வைத்தலே இகமுத்திரார்த்த பல போக விராகம்.

 

      3. சமாதிஷட்கசம்பத்தி: - 1. சமம்; 2. தமம்; 3. உபாதி; 4. திதீக்ஷை; 5. சமாதி; 6. சிரத்தை என்றாறு வகை.

 

      மனதை விஷயாந்திரங்களில் செல்லவொட்டாமல் திருப்புவது சமம் என்றும் இந்திரிய நிக்கிரகம் செய்வது தமம் என்றும் பெயர். மனதையும் இந்திரியங்களையும் கண்ட விஷயங்களிலெல்லாம் அலைந்து திரிந்து உழலாமல் அவைகளை அகமுகமாய்த் திருப்பி ஆத்மாவைப் பற்றியிருக்கச் செய்தலே சமதமாதிகள்.

 

      பாபகிருத்தியங்களை அறவேயொழித்துப் புண்ணிய கருமங்களைப் பலாபேக்ஷையின்றிப் பகவத் பிரீதியாகச் செய்தலே உபாதி யெனப்படும். கர்மம் செய்யாமல் ஒருவருமில்லை. ஒவ்வொரு மனிதனும் பாபமோ புண்ணியமோ ஏதோ ஒரு கர்மத்தை செய்து கொண்டு தானிருக்கிறான். பாபமே செய்யாமல் புண்ணியமே செய்த போதிலும், கர்மங்களில் பலா பேக்ஷை யிருக்கும் பக்ஷத்தில் அப்பலனை யனுபவிக்க ஜன்மங்களெடுத்தானாக வேண்டும். கர்மமும் செய்ய வேண்டும். ஆனால் ஜங்மங்களெடுக்கக் கூடாது. இதற்கேதேனு முபாய முண்டோவெனில் ஒன்றுண்டு. பாப கருமங்களை யொழித்து நற்கருமங்களைப் பலாபேக்ஷையின்றிச் செய்து ஈசுவரார்பணமாக விடுதலே நல்ல யுக்தி. அது தான் உபாது.

 

      சுகதுக்க சீதோஷ்ணங்களைச் சமமாகப் பாவித்தலே திதீக்ஷை. பிராரப்த கர்மத்தினால் துக்கம் வந்த காலத்து வருத்தப்படாமலும், சுகம் வந்த காலத்து மகிழ்ச்சி கொள்ளாமலும் தான் அவைகளோடு சம்பந்தப்படாமல் தனியே சாக்ஷிபோல் நின்று அவைகளைச் சமமாய்ப் பார்த்தலே திதீக்ஷை.

 

      பூர்வம் விஷயானுபவங்களில் வைத்த பிரியத்தையெல்லாம் குருவினிடத்து வைத்து அவர் வார்த்தையை வேதவாக்கியமாகக் கொண்டு நம்பி அவரிடத்தே பயபக்தி விசுவாசம் வைப்பது தான் சிரத்தை.

 

      சற்குரு உபதேசித்ததை “மார்க்கடநியாயம்” போலப் பற்றி, சந்ததமு மனுசரித்து, திருப்பிய மனமு மிந்திரியங்களும் விஷயங்களிற் செல்லாமல் தடுத்துச் சிரவணத்தில் வைப்பது சமாதியெனப்படும்.

 

      4. முமூக்ஷுத்வம்.

 

      ஜனனமரண சம்சார சாகரத்திலகப்பட்டுத் தத்தளிக்காமல் அதினின்றும் ஈடேற்றி யருளவல்ல ஆசான் எங்குளன் என்று கன்றைப்பிரிந்து பசுவைப் போலத் தேடித்திரிந்து கண்டுபிடித்து அவரடி பணிந்து அவர் திருவாக்கை வேதவாக்கியமாகக் கொண்டொழுகி மோக்ஷ விச்சை கொண்டு அதைப்பெற ஆசான் காட்டிய மார்க்கத்தில் கண்ணோக்காயிருத்தலே முமூக்ஷுத்வம்.

     

      மேற்கூறிய நான்கு சாதனங்களும் கைகூடினவர்களே வேதாந்த சிரவணத்திற் கதிகாரிகள்.

 

      ஆதலால் ஆரிய நேயர்களே! நாமெல்லோரும் நம்மாலியன்ற மட்டும் முயற்சி செய்து இந்நான்கு சாதனங்களையும் பெற்று வேதாந்த விசாரம் செய்து நற்கதியடைவோமாக. எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவானாக.

 

கி. சந்தானராமன்,

குளத்தங்கரைத் தெரு, நீடாமங்கலம்.

     

No comments:

Post a Comment