Monday, August 31, 2020

 

சமரஸ ஞானச் சொற்பொழிவு

 

(இராணிப்பேட்டை சமரஸ சன்மார்க்க சங்கம், 6 - வது ஆண்டு விழாவில் 5 May 1928 ல், சுவாமி சுத்தானந்த பாரதியார் தலைமை யுரையாகக் கூறியது.)

 

அன்பர்காள்! உலகில் ஒரு ஸமரஸப் பசி தோன்றியிருக்கின்றது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை என்னும் சொற்கள் நமது பாரதமக்களின் ஆவியினின்று ஒலிப்பதை நாடோறும் பார்க்கிறோம், படிக்கிறோம், கேட்கிறோம். உலகில் ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே கடவுளை அடைய வழிகாட்டும் பல மதங்கள் ஒன்றோடொன்று பொருது நிற்கின்றன. பெயராலும் வடிவாலும் கடவுளை வேறுபடுத்தி, இந்து மதம் அல்லற்படுகிறது. சைவ வைணவச் சண்டைகளும், தென்கலை வடகலைச் சண்டைகளும், வேதாந்த சித்தாந்த வாக்கு வாதங்களும், துவித அத்துவித வாதங்களும், சங்கர ராமாநுஜ மத்துவ மனஸ்தாபங்களும், நாமம், விபூதி, கோபி, பூணூல், முத்திரை, அக்கம் முதலியவற்றின் தாக்கங்களும் ஒன்றையொன்று கொன்று கொண்டு நம் நாட்டின் சமரஸத்தைக் கெடுத்து வருகின்றன. மொட்டைக்கும் குடுமிக்கும், தாடிக்கும் கிராப்பிற்கும், கொரானுக்கும் கீதைக்கும், பைபிளுக்கும் திருவாய் மொழிக்கும் சண்டையும், பூசலும், வாதமும், குரோதமும்! வாதமிடுஞ் சமயநெறிக் கரிதாகிய ஒரு பொருளின் பெயரை மனித சமூகம் சூதாடுகின்றது. பெயர் வடிவான பேதங் கடந்த தொரு பொருளைப் பற்பல விதமாகப் பாவித்து உலகோர் அல்லற்பட்டு அழியும் கொடுமை பொறுக்க முடியவில்லை. உலக நன்மைக்காகவும், மனித சமூகத்தின் ஒற்றுமைக்காகவும், பெரியோர்களால் உபதேசிக்கப்பட்ட அறக் கோட்பாடுகளை அறியாது, உலகம் சமயச் சண்டையில்சாகிறது. ஒவ்வொரு சமயத்துள்ளும் எத்தனை கிளைச்சமயம், எத்தனைகுட்டிச் சண்டை, அடிதடி! இத்தனை சமயங்களும் சேர்ந்து உலகை யுத்தகள்மாக்கி விட்டன; மனிததர்மத்தைப் பாழ்ப்படுத்தி விட்டன; அகங்காரத்தைஆள விடுத்தன; சகோதரனைச் சகோதரன் கொல்லும்படி விடுத்தன; சமணரைச் சைவர் கழுவேற்றினர்; சைவத் திருநாவுக்கரசரை சமண மஹேந்திரவர்மன் பாடு படுத்தினான். சாதிக் கொடுமைகளைப் போக்க வந்த புத்த
 மதமும் சமண மதமும் பட்ட பாட்டிற்குக் கணக்குண்டோ? இரு மதங்களின்மூலக் கொள்கைகளையும் சங்கரர் தழுவித் தம் அத்வைத மதத்தைப்போதித்தார். சர்கம் பிரம்ம மயம், தத்வமஸி, சிவோஹம் என்ற உயர்ந்தஸமரஸ் மந்திரங்களை அத்வைத மதம் போதித்தது. அம்மந்திரங்களை அறிபவன் எல்லா வுயிர்களையும் பார்பான் சந்நிதியென்று வணங்குவான். அத்வைதத்தை மாயாவாதமென்று சித்தாந்திகள் தங்கள் பசுபதி பாசக் கொள்கையால் தாக்குவர். அவர்களை வைணவர் தங்கள் அனந்தகுண கல்யாண ஸ்ரீயப்பதியான வைகுண்டநாதனின் பெயரால் கண்டிப்பார். அவர்களையும் ஆத்திரத்துடன் தாக்குவர் மத்துவர். இந்த அக்கப் போரால் சிந்தியரத்தம் கணக்கு வழக்கில்லை. முகம்மதியர்களுக்குள்ளும் சுனீக்கும் ஷயாவகுப்பாருக்கும், முகம்மதிய அகம்மதிய வகுப்பாருக்கும் உட்புகைச்சல் ஓயவில்லை. சகோதர ஒற்றுமையை மதக் கோட்பாடாக்கிய இஸ்லாம் இந்நிலையிலிருக்கிறது. கிருஸ்தவ மதமோ சில்லறை மாற்றிச் செல்வழிந்து வருகிறது. விவில் மட்டும் கிறிஸ்தவர்கள் கையிலிருக்கிறது. விவிலின் உபதேசங்கள் அவர்கள் நெஞ்சிலும் செய்கைகளிலு மில்லை. கிறிஸ்தவ உலகில் பலாத்காரச் செய்கை யில்லையா? சாந்த வுருவான இயேசு நாதரின் சீடர்கள் ஒருவரை ஒருவர் பகைத்து வெட்டிக் கொள்ளுகின்றனர். பிற ஜாதியாரை நசுக்குகின்றனர். தற்போது இயேசு நாதர் அவர்களிடையிருந்தால் அவரையும் கறுப்பு மனிதர் என்று தள்ளுவர்.

 

அந்தோ! உலகம் கடவுள் பெயரால் சண்டையிட் டிறக்கும் மடமை என்று ஒழியுமோ? உலகம் மடமையால் இப்படிக் கொந்தளித்துச் சமாஸத்திற்காகப் பெரும் பசி எடுத்திருக்கிறது. இது சமயம் மனித சமூகம் முழுதும் இணைந்து ஒரு குலமாகக்கூடிய - ஒரு தர்மமாகக்கூடிய ஒரு தர்மம் பிறக்க வேண்டியிருக்கிறது.

 

வினாக்கள்

 

உலகில் தற்போது நடக்கும் சமயக் கூத்துகளை நோக்குவோன் சந்தேகக் கடலுள் ஆழ்வான். மதமென்றால் என்ன? யார் படைத்தது? ஏன் படைத்தான்? படைத்தவன் ஒருவனா, பலரா? ஒருவனாயின் பல மதங்கள் ஏற்படுத்தி மக்களுள் சண்டை யெழுப்பச் செய்வானேன்? அதுவோ அவன் தொழில்? இச்சண்டை மதங்களோ மனிதனுடைய மதம்? சண்டை மதங்களால் மனித சமூகத்துக்கு ஏதேனும் முன்னேற்ற முண்டா? அது உலக சமரஸத்தைத் தருமா? பின்னே மனிதன் மதமெது? அதன் கொள்கைகள் என்ன? எத்தகைய தர்மத்தால் மனிதன் ஓர் குலம் போல் வாழலாம்? எதனால் உலகிற் சண்டை ஒழிந்து அன்பு நிலவும்? அத்தகைய அறத்தின் கோட்பாடுகள்என்ன? அது புது மதமா? எப்போதும் உள்ளதா? அதனால் மனித சமூகம் எத்தகைய பலனை யடையும்? என்ற கேள்விகள் நமது மனத்தில் உதிக்கின்றன. இவற்றிற்கு முடிந்த மட்டும் விடையளிப்போம்.

 

மக்களுக்குள் ஏற்கெனவேயுள்ள தெய்வ சக்தியை விளக்குவதே மதமெனப்படும். மனிதன் தன்னுள் இலகும் தெய்வ சக்தியைக் கிட்டியவளவே அவனுடைய களிப்பும் மிகும்.

கடவுளோடிருத்தல் களிப்புமின்பமும், கடவுளைப் பிரிதல் கவலையுந்
 துன்பமும்.

 

தெய்வத் தன்மை யடைவதே மனித வாழ்வின் நோக்கம். உலகிற்பிறந்த ஒவ்வொரு உயிரும் இந்த உயர்ந்த படியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. எல்லா உயிருள்ளும் ஈசனைக் காண்பதே மனிதனுக்குக் கண்ணழகு. ஈசன் திருமொழியை எவர் சொன்னாலும் மகிழ்ந்து கேட்பதே மனிதனுக்குக் காதழகு. நம்பி நினைத்து, முயன்று ஞானத்தை யடைவதே மனிதனுக்கு அறி வழகு. ஈசனுக்கு ஏற்றதாக, அவன் படைப்பிற் குரியதாசஞ் செய்வதே மெய்த்தவம். இதயம் பூவாகவும், இன் சொல்லே மந்திரமாகவும், தொண்டே துதியாகவும் வழிபடுதலே மனிதன் வழிபாடு அன்பு, அறம், நன்றி இவையே மனிதன் செய்கைகளுக் கழகு. தர்மமொன்றே மதக் கொள்கை. அதைத் தாண்டிடின் வாழ்வு தழைப்பது மில்லை.


கடவுள் ஒருவர்

 

ஒரே கடவுளே எல்லாப் பூதங்களிலும் மறைந்தவன்; எல்லாவற்றிலும் வியாபித்தவன். எல்லாப் பூதங்களுக்கும் அந்தராத்மாவாக வுள்ளவன். கன்மங்களுக் கதிபதி. சர்வ பூதங்களுக்கும் இருப்பிடம், சாட்சி, சேதனன், கேவலன், நிர்க்குணன். பூதாத்மா ஒருவனே. அவன் எல்லாருக்குள்ளும் மன்னியிருக்கிறான் என்று உபநிடதங்கள் கதறுகின்றன. அதை அவன் படைத்து அதனுட் புகுந்தான் என்று தைத்திரியம் முழங்குகின்றது. தானே ஜீவகோடிகளாகப் பிரிந்தான். அந்த ஜீவகோடிகளுள் கடவுளே விளங்கி நிற்கிறான் என்று உபநிடதம் பறையறைகிறது.


 "என்னினும் உயர்பொருள் எள்ளளவில்லை மாலைக் கயிறுபோல் மன்
 னுயிர்க் குள்ளேன்''
                 என்று பகவத்கீதை முறையிடுகின்றது.


எல்லா அறிவுள்ளும் ஆண்டவன் நிலவுகின்றான்; அவன் விற்கிற்றீயினன். பாலிற்படும் நெய்போல் மறைய நிற்பவன். மாமணிச் சோதியான்; அவனே அனைவருக்குந் தோன்றாத் துணையாயிருப்பவன். அத்தகைய உலகத் தந்தைக்கு இஸ்லாம், கிறிஸ்து, இந்து, புத்த வர்ணங்கள் இல்லை. அவற்றைப் பூசினோன் மனிதன். மனிதன் தனது மாயையால் அப் பரம்பொருளைப் பற்பல விதமாக எண்ணுகிறான். ஒன்றென்றும் அதனுள்ளேயே தோற்றமும் ஒடுக்கமுமென்றுங் கண்டோனே அதனைக் காணமுடியும். அத்தகைய கடவுள் சுத்தமே வடிவானவன். அவன் ஜீவனை சுத்தப்படுத்திப் பிறப்பு இறப்பென்னும் உலையிலுருக்கித் தன்னுடன் முடிவிற் சேர்த்துக் கொள்ளும் தட்டான். சுத்தமான மனத்துள்ளேயே அவன் காணப்படுவான். சுத்தமே கடவுள்.

 

''எப்பூதங்களிலும் உள்ளவன் ஆன்மா வென்றும், ஆன்மாவினிடமே எல்லாப் பூதங்களுமுளவெனவும் தியானித்து பரப்பிரமத்தை யடைவான். வேறு வழியில் அதனைப் பெறமாட்டான்.'' என்று கைவல்யோபநிடதம் சொல்லுகிறது.

 

"எல்லாப் பூதங்களுக்குள்ளும் நான் இருக்கிறேன் என்று எண்ணிப்பணியும் யோகி என்னை அடைகிறான் " என்று கீதை முறையிடுகிறது. ஆதலின், உலகிற் சிறந்த வழிபாடு, ஆருயிர் வழிபாடே யாகும். அனைத்துள்ளும் கடவுளைக் கண்டு அருட் பணி புரிதலே மனிதனுடைய விடுதலை வழியாகும்.


ஏன் படைத்தான்?

 

உலகம் பராசக்தியின் கோயில்; அவள் திருலீலைக்கூடமே பூமி; பூமியின் காரியங்கள் நடப்பதற்காகப் பல வினைகளுக்கு ஆளாகப் பல வுயிர்களும் படைக்கப்பட்டன. உலகிற் பணி செய்ய ஒவ்வொரு வினைக்கும் அணியாய் உயிர் படைக்கப்பட்டது. கடவுளுக்கும் நமக்கும் நடுவிலிருப்பது கருமவேலியே; அக்கரும வேலியைத் தாண்டியே கடவுளை யடைய முடியும்.


அவனை அடைவ தெப்படி?

 

மனிதன் கடவுளை அடையும் வழி ஒன்றே; அதுவே வினையறிந்தாற்றி விடுதலை யடைதல். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார் அப்பர். 'சீரிய பணி செய்து நூறாண்டிரு. அதுலே உய்யும் அற வழியாகும்' என்று உபநிடதம் கூறுகிறது. கர்மத்திற்கே நீ அதிகாரி. பலனை எனக்கு அர்ப்பணித்து அருட்பணி புரிவாயாக என்று கீதை முழங்குகிறது. ஆதலின், ஒவ்வொருவரும் தம் வாழ்வின் நோக்கத்தை எண்ணி யறிந்து திண்ணியராய் அருட்பணி புரிந்தே அவனை நண்ணுவர். அவ்வினையளவே உலகில் நமதுதோற்றமாகும்.

 

அறம்

 

ஒவ்வொருவனுக்கும் தன் கர்மமே சுதர்மமாக அமைக்கப்பட்டுள்ளது அந்த சுதர்மத்தை ஆற்ற ஒரு சிறந்த பொது தர்மத்தை அவன் அனுட்டித்தே தீரவேண்டும். தன்னலம் விடுத்து அருட்பணி புரிய மனிதன் சன்மார்க்க நெறியில் ஒழுக வேண்டும். சன்மார்க்கத்தை யடைய மனிதன் சுத்த மடைய வேண்டும்.

 

சுத்த மடைந்தவனே சன்மார்க்க நெறியில் நின்று தன்னயம் விடுத்து அருட்பணி புரியும் வெற்றி வீரனாவான். கடவுளை அடைவதற்குச் சுருக்குவழி அவனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிதலே. அவனுடைய சட்டம் தர்மமே. தர்மம் வேதத்திற்கு முன்னேயே உள்ளது; தர்மமே கடவுளின் சக்தி. அறம் ஆதியந்த மற்றது. எல்லா வேதங்களும் அறம் என்னும் பெருநூலின் சிற்றிதழ்களே; அறத்தின் துளியே அருமறை யெல்லாம்; பல நூற்றாண்டுகளுக் கொரு முறை வானினும் விரிந்த அற நூலிலிருந்து ஒரு உண்மை மனித சமூகத்தைக் காக்க ஒரு தெய்வீக புருஷனால் கொண்டு வந்து பரப்பப்படுகிறது. அந்த அறவழியே மனிதன் கடவுளை யடையும் பாதை. அந்த அறவழியில் மனிதனுக்கு ஒளியாய் வழி காட்டுவது சுத்தமே. சுத்தப்படப்பட மனிதன் கடவுளாகிறான். ஆதலின், சுத்த மடைவதே மனித வாழ்வின் முதல் நோக்கம்.


சுத்தம்

 

மனோவாக்குக் காய சுத்தமடைய வேண்டும். கடவுளைக் காணும் வழியும் அதுவே. அதனால் மனிதன் இம்மை மறுமை யின்பங்களையும் அடைந்து, இறைவனையும் அடைகிறான். சுத்தமே இயம நியம சாதனம். சுத்தமே பூரணத்துவம், சுத்தமே கடவுட் டன்மை.
 

அன்பு, உறுதி, மெய்யறிவு, ஆண்மை, ஸமரஸம், இன்பம் இவையே நம்மைக் கடவுளுடன் கலக்கச் செய்யும் மனச்சுத்தம், சிறுமை, பொறாமை, வஞ்சகம் இவைகளை விடுத்து, உண்மையுள்ள இனிய வீரவுரை பேசுவதே வாக்குச் சுத்தம். பசிக்கு ஒரு பாபமற்ற தொழிலும், உண்மையான அருட்பணியும், நாண், எளிமை, நேர்மை முதலியனவும் காய சுத்தம். இப்படி முத்தூய்மை யடைவதே சுத்த நிலை. இதுவே இறைவ னொன்றிய நிலை.

 

சத்தியம், நலம், உறுதி, அருள், தொண்டு, அடக்கம் இவையே சுத்தனையடையும் வழி; சுத்த மதமே எல்லா மதங்களின் சம்மத மாகும். இதுவே மனிதனுக்கு மதம் (தர்மம்) ஆகும். முதலில் இத்தகைய சுத்த மடைந்து, பந்தங்களினின்று சுதந்திரப்பட்டு ஸமரஸப்படுவதே மனிதவாழ்வின் இன்பம். சுத்தம், சுதந்திரம், ஸமத்துவம் இம்மூன்று மொழிகளில் மனிதனின் இன்பம் அடங்கியுள்ளது. இவையின்றி ஒன்றிற்கும் சக்தியில்லை. மனித சமூகம் சாந்தமும் சமரசமும் அடைந்து கடவுளையடைய வேண்டுமானால் இதனினும் சிறந்த வழி வேறில்லை.

 

முதலில் நாம் மனிதன்; பிறகே இந்தியன், ஐரோப்பியன், கிறிஸ்தவன், முகம்மதியன் என்பது. முதலில் நாம் மனித தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். பிறகே நாம் இந்த மதம் அந்த மதமென்ற விவகாரம் பிறக்கும். முன்னே நாம் மனித சமுதாயத்தின் ஒரு அங்கத்தினரான பிறகே நாம் இந்தியன். ஆங்கிலன் என்னும் விவகாரம் பிறக்கிறது. ஜாதி, நிறம், ஏழை, பணக்காரன், பெயர், வடிவு, விபூதி, நாமம், குடுமி, சட்டை, மொட்டை, தாடி, ருத்திராக்கம், துளசிமாலை, தென்கலை, வடகலை முதலிய பேதங்களெல்லாம் அன்னமய கோச விகாரம். இவற்றிற்கும் உண்மையான மனித தர்மத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இந்த வெளித்தோல் விவகாரங்க ளெல்லாம் அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தனவாகும். இவற்றைக் கொண்டு சண்டை தொடுத்து அறத்தை விடுத்து அல்லற்படுகிறான் மனிதன். இந்த வெளிவேஷங்களை மறந்து உள் மனிதனுடன் உறவு பேணிச் சுத்தமடைந்தால் உலகின் சண்டைகள் ஒழியும். அந்தச் சண்டை ஒழிந்த நிலையே சமரச நிலை.

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தல் வேண்டும். அன்பர் பணியற்ற வேண்டும். அன்பே சிவமாயறிதல் வேண்டும். உலகம் கோயில்; உலகோர் நடமாடும் கோயில்கள்; நாம் உலகில் ஒரு அருட்பணி செய்ய வந்தோம். உலகன்னையான பராசத்தியை நெஞ்சில் ஊன்றி அவள் மைந்தரான நமது சகோதரருக்கு அருட் பணி புரிவதே மனித வாழ்வின் நோக்கம். அதற்கேற்பட்ட காலமே ஆயுள்; குறித்த ஆயுளில் வினையை முடிப்பதே ஜீவன் முக்தி. எஞ்சிய வினையை இயற்ற வருவதே பிறப்பு; வினைக்குரிய ஆயுளின் முடிவே இறப்பு; எல்லோரும் பராசக்தியின் அன்புக் குடைக்கீழ் அவள் அருளில் வளருங் குழந்தைகளாக எண்ணி அன்பு புரிவதே ஸமரஸம். 'அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்றதே சமரஸ நிலை; கடவுளாகிய பொன்னைக் கொண்டு மனதில் அனைவரும் உரைத்து மிளிருவதே சமரச அன்பு நிலை.


 "யானும் நீ அதன்றி யெம்பிரானும் நீ யிராமனே.''


என்று உருகி உறுதிப்படுவோனிடமே ஆத்மராமன் நிலவிச் சமரஸ் விழியைத்தருவான். 'சமத்வம் யோக உச்சதே' என்று கீதை மொழிந்தது.

 

இத்தகைய சமரச உணர்ச்சியே உலகை ஒற்றுமைப் படுத்தும்; அதுவே ஜாதிக் கொடுமையையும் சமயச் சண்டையையும் தீர்க்கும். அன்பர்காள்! சத்ய யுகம் பூக்கப் போகிறது. அது சமரஸ மணத்துடன் சாந்தப் பொலிவுடன் பூக்கும். அந்த யுகத்தில் அனைவரும் அத்தன்மையடைவர். தீண்டாதார் என்ற பேச்சே ஒழியும்; ஏழு கோடி நாராயணரைத் தீண்டாதார் என்று சொல்லும் தெய்வ நிந்தனை ஒழியும் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்ச்சி பிறக்கும். அந்த சத்யுக தூதராய் நாம் விளங்குவோமாக.


 சுத்தம் சுதந்திரமும் தோற்றும் சமத்துவமே, இத்தலத்தோர்க் கின்ப நெறி.
 நல்லவரோங்க, நலமோங்கிப் பூவெங்கும் எல்லோரும் வாழ இசை!

அறமும், அறவோர், அறச் செயலும் பூவில், உறவுற்று வாழ்க உவந்து!

எல்லா உலகிற் கிறைவன் ஒருவன், எல்லா வுடலும் இறைவ னாலயமே.


சுவாமி சுத்தானந்த பாரதியார்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுன் ௴

 

 

 

 

No comments:

Post a Comment