Monday, August 31, 2020

 

குளிக்கப் போயும் சேற்றைப் பூசல்

 

ஆன்மார்த்த விஷயத்தில் நமது பரதகண்டமே உலகத்துக் கெல்லாம் ஆச்சாரிய ஸ்தானம் வகிக்கிறது என்ற உண்மையை மறுப்பவர் அநேகமாய் ஒருவரும் இல்லை என்றே சொல்லலாம். உலக போகமே வாழ்க்கையின் நோக்கம் என்று பெரும்பாலும் கருதிக் கொண்டிருக்கும் மேனாட்டாரிடையே ஸ்வாமி விவேகானந்தர் முதலிய மகான்கள் சென்று நமது மததத்துவங்களின் மகிமையை விளக்கி நிலைநாட்டி விட்டு வந்தமை ஒன்றே நமது ஆன்மார்த்தத்தின் பெருமைக்குத் தக்க சான்றாகும். நாட்டு நாகரிகம் ஆன்மார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேனாட்டு நாகரிகம் உலகியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது நாட்டை மஹரிஷிகள் நாடு என்றே சொல்லலாம். இங்குள்ள வேதங்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள், கதைகள், எல்லாவற்றிலும் முன்னோர்கள் அநுபவித்து அறிந்து லோகோபகாரமாக வெளிப்படுத்திய தத்துங்களின் விளக்கமே நிறைந்திருக்கும். மத சம்பந்தமற்ற எந்தக் காரியத்தையும் காண்பது அரிது. சுருங்கக் கூறுமிடத்து மேற் சொன்ன தத்துவப் பயிற்சியின் காரணமாக அஹிம்சாதருமமே நமது நாட்டுமக்களின் உன்னத லட்சியமாயிருந்தது. எனவே பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் முதலிய உயர் குணங்கள் நமது நாட்டில் நிறைந்திருந்தன என்று தனியாக விவரிப்பது அநாவசியம்.

 

வேற்றாசர் படையெடுப்பாலும் பிறகாரணங்களாலும் நமது வாழ்க்கையிலும் மததத்துவங்களிலும் நாளாவட்டத்தில் மாசுபடியத் தொடங்கி விட்டது. மூட நம்பிக்கைகளும், சாதி சமய வேற்று மைகளும், துராசாரங்களும் நாட்டில் வளர்ந்து கொண்டே வந்து விட்டன. மததத்துவங்களின் உண்மைகள் எல்லாம் சாதாரண ஜனங்களுக்குத் தெரியாமலே போய் விட்டன. இதனால் முஸ்லிம் அரசர்கள் செல்வாக்கோடு ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் பாமரர்களாயிருந்த அநேக இந்துக்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்தனர். இப்போது ஆங்கில ஆட்சி ஆதிக்கத்தில் இருக்கிறது. இக்காலத்தில் மேனாட்டு பாதிரிகளின் பெருமுயற்சியால் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் கிறிஸ்தவ சமயத்தில் சேர்க்கப்படுகின்றனர். சமய சம்பிரதாயங்களில் தலை சிறந்து விளங்கிய நமது புண்ணிய பூமியில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து வருதல் தகுமா என்ற விஷயத்தை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இதற்கெல்லாம் உண்மைக் காரணம் என்ன என்பதையும் ஒவ்வொரு வரும் ஆராயக் கடமைப்பட் டிருக்கின்றனர்.

 

தற்காலம் நமது நாட்டில் சாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும் மிகுந்து வலிமை பெற்று வருகின்றன. பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற மனோபாவமும், இந்த மதம் உயர்ந்தது, அந்த மதம் தாழ்ந்தது என்ற பிடிவாத எண்ணமும் உரம் பெற்று நிற்கின்றன. தாய்மொழிப் பயிற்சியோ, உண்மையான சாஸ்திர அறிவோ ஜனங்களுக்குக் கிடையாது. மதப்பிரசாரத்துக்கு என்று ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் எல்லாம் ஆண்டு தோறும் அவற்றிற்கு வரும் பல லட்சக்கணக்கான பொருள்களைத் துர்விநியோகம் செய்து கொண்டிருக்கின்றன. மக்கள் சமூகத்தில் பொருளற்ற போலிச் சம்பிரதாயங்கள் நிறைந்து முன்னேற்றத்துக்குத் தடையாகப் பலவிதத் தொல்லைகளை விளைத்து வருகின்றன. ஆங்கிவப் பயிற்சியின் பயனாக மேனாட்டு நாகரிகமே மக்கள் மனதை வெகு சகஜமாகக் கவர்ந்து வருகிறது. இந்த நாகரிகம் நமது பழைய வழக்க வொழுக்கங்களின் மீது ஒருவித வெறுப்பை உண்டாக்கிக் கொண்டு வருகின்றது. இந்த நாகரிகம் நமது மதத்தின் பேரால் அனுஷ்டானத்திலுள்ள - சமூக முன்னேற்றத்துக்குப் பெரிதும் தீமையை விளைத்துக் கொண்டிருக்கிற வழக்கங்களின் மீது வெறுப்பை உண்டாக்குவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவைகள் எப்படியும் ஒழிந்தே தீர வேண்டும். ஆனால்ல் அது நமது முன்னோர்கள் அருமையாகத் தேடிவைத்த ஞானக்களஞ்சியங்களையே அலட்சியம் செய்து விடும்படியான புத்தியையும் உண்டாக்கி வருவது தான் நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

 

மனிதனுக்கு மதம் மிகவும் இன்றியமையாதது. மனிதனுக்குரிய இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்ல நல்லொழுக்க முறைகளே மதம் என்று கொள்ளலாம். மதம் மனிதனுக்குச் சாந்தியைக் கொடுக்கின்றது. மத உணர்ச்சி இல்லாத மனிதனுக்கும் விலங்குக்கும் எத்தகைய வேற்றுமையும் இல்லை. உண்பதிலும், உறங்குவதிலும், விஷய சுகத்திலும் விலங்கும் மனிதனும் ஒன்றே. ஆனால் மனிதனுக்கு இயற்கையாக அமைந்துள்ள பகுத்தறிவின் பயனாக ஏற்பட்ட மதமே அவனைத் தெய்வத்தன்மை உள்ளவனாகச் செய்கிறது.

 

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றுள், அம்மதங்களைத் தழுவும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டு பெரிய மதங்களாக இக்காலத்தில் வழங்கப்படுவன ஒரு சிலவே. இந்து மதம், பௌத்தமதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் முதலானவைகளே இக்காலத்தில் பெருந் தொகையான மக்களால் தழு வப்படுகின்றன. ஒவ்வொரு மதத்திலும் சிறந்த - மக்கள் முன்னேற்றத்துக்குரிய - இன்ப வாழ்க்கைக்கு வேண்டிய உண்மைகள் நிறைந்திருக்கின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எல்லா மதங்களின் உண்மைகளும் அடிப்படையில் ஒன்றாயிருந்தாலும் தேச வர்த்தமானங்களுக் கேற்ப ஆசார அநுஷ்டானங்கள் மாறுபட்டு அம்மதங்களினின்றும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றாகி விளங்குகின்றன. ஒரு மதத்தார் அநுஷ்டிக்கும் ஒழுக்கவழக்கங்கள் இன்னொரு மதத்தாருக்குப் பொருந்துவது கஷ்டம். அறிவையும் குணத்தையும் விகாசப் படுத்தக்கூடிய நீதி போதனைகள் எம்மதத்திலிருந்தாலும் அவைகளை யாரும் கைக்கொள்ளுவதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை. யாம் கூடாது என்று வற்புறுத்துவதெல்லாம், இன்னொரு தேசத்துக்குரிய ஒழுக்க வழக்கங்களை மதத்தின் பேரால் இவைதான் உண்மையானவை மற்றவை எல்லாம்போலி என்று இன்னொ தேசத்தாருக்கு வற்புறுத்தக் கூடாதென்பதே.

 

அநேக வழக்க ஒழுக்கங்கள் - முற்காலத்தில் என்ன உத்தேசத்தோடு ஏற்படுத்தப்பட்டனவோ - அவை இக்காலத்தில் பொருளற்றவையாகி நிலவுகின்றன. நமது இந்து மதத்தின் பேரால் வழங்கப்படும் மூடப் பழக்கங்களைப் போலவே மற்ற இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் முதலான பெரிய மதங்களிலும் மூடப்பழக்க வழக்கங்கள் செறிந் திருக்கின்றன. விஞ்ஞான அறிவு தலை சிறந்து விளங்கும் இந்நாளில் மதத்தின் பேரால் வழங்கப்படும் அநேக வழக்க ஒழுக்கங்கள் விபரீதமாகவே தோன்றுகின்றன. ஆனால் இக்கால இயல்புணர்ந்த - அந்த அந்த மதத்தைச் சேர்ந்த அறிஞர் பலர் ஆசார சீர்திருத்த விஷயத்தில் தீவிர சிரத்தை செலுத்தி உழைத்து வருகின்றனர்.

நமது நாட்டில் இப்போது அரசியல் கிளர்ச்சியானது பொது ஜனங்களின் உள்ளங்களைக் கவர்ந்து வருகிறது; அதிலும் இளைஞர்களின் உள்ளங்களை வெகு தீவிரமாகக் கவர்ந்து கொண்டு வருகிறதென்று கூறலாம். உலகில் ஜனநாயகத்துவம் தான் இக்கால ராஜீய தருமமாயிருக்கிறது. இதைப் பெற்று விட ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இந்த அரசியல் முன்னேற்றத்துக்குச் சமயமும் கடவுளும் தடையாயிருப்பதாகச் சாதாரணமாக அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், இதனால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ அவர்கள் அவ்வளவு கவலையும் சிரத்தையும் செலுத்துவதில்லை. கடவுளைப் பற்றியும் மதத்தைப்பற்றியும் இத்தகைய எண்ணம் இந்த கோஷ்டியினருக்குத் தோன்றி விட்டமைக்குக் காரணம் மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் வழங்கப்படும் சில மூடப்பழக்க வழக்கங்களேதான் என்று நாம் நினைக்கின்றோம். இதற்கு உதாரணம் ரஷ்ஷியநாடே போதுமானது. அங்கு கடவுள் மறுப்புச் சங்கங்களும் கண் காட்சிகளும் வெகு தீவிரமாக நடைபெறுகின்றனவாம். மதத்திற்கே ஒரு சிறிதும் மரியாதை இல்லையாம். அதை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கமே கங்கணங் கட்டிக்க் கொண்டிருக்கின்றதாம். நமக்கு இந்த துரதிர்ஷ்டமான வாழ்வு ஒரு நாளும் வேண்டாம்.

 

தமிழ் நாட்டில் சமூக முன்னேற்ற விஷயத்தில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்தப் பிரசாரம் பாமரமக்களைத் தப்பு வழியில் இழுத்துக் கொண்டு போய் விடுவதாயிருப்பது விரும்பத்தக்கதாயில்லை.

 

நாட்டு விடுதலைக்கு முதலில் சமூக விடுதலை ஏற்பட வேண்டும் என்ற அவர்களுடைய வாதத்தில் உண்மையிருக்கிறது. அதையாரும் அநேகமாய் மறுப்பதற்கில்லை. ஆனால் சமூக விடுதலைக்கு உழைப்பது எப்படி? கடவுள் தேவை இல்லை, மதம் தேவை இல்லை, கோவில்கள் தேவை இல்லை, எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும் என்று பாமா ஜனங்களிடையே ஓயாமல் மேடைப் பிரசாரம் செய்வதன் மூலமா என்று கேட்கின்றோம்? இதனால் நாட்டில் இயற்கையாகவே நிலைபெற்றுள்ள வேற்றுமைகளோடு புதிய பிளவுகளையும் சண்டைகளையும் கொண்டு வந்து புகுத்துவதாகாதா தக்க கல்வி அறிவின் மூலமாகவன்றோ மக்கள் உள்ளங்களில் சீர்திருத்த உணர்ச்சி ஏற்படவேண்டும்? இதற்கு இந்தச் சமூக சீர்திருத்தக்காரர் ஏதேனும் கடுகளவு முயற்சியாவது செய்கின்றனரா? என்று கேட்க விரும்புகின்றோம். நிற்க,

 

கடவுளிடமும் மதத்தினிடமும் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஒன்றும் அறியாத பாமர மக்களை வேறு மதத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளும்படி பிரசாரம் செய்து தூண்டுவது வேடிக்கையாயிருக்கிறது. இது முன்னுக்குப் பின் முரண் என்பது அவர்களுக்கு ஏன் தெரியவில்லையோ? இந்து சமூகத்தில் தற்காலம்? தாழ்த்தப்பட்டோர் நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இந்து மதத்தில் தீண்டாமைக்கு அணுவளவும் இடமில்லை என்பது அறிஞர்கள் கண்டறிந்த உண்மை. பஞ்சமர்களுக்கு ஸ்ரீராமா நுஜர் கோபுரத்தின் மீதிருந்து ரகஸியார்த்தத்தை உபதேசித்திருக்கிறார். ஸ்ரீசங்கரர் பஞ்சமனை வணங்கிகினார். சைவமதத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனையோ பேர் நாயன்மாராக வணங்கப்படுகின்றனர். பிற்காலத்தில் எப்படியோ இந்தக் கொடுமை இடைச் செருகலாக நுழைக்கப்பட்டு விட்டது. இதை ஒழுங்கான முறையில் ஒழிக்க முயற்சிப்பது தான் சீர்திருத்தக்காரர் செய்ய வேண்டிய வேலையாகும். இதை விட்டு வேறு மதத்தைத் தழுவுமாறு தூண்டுதல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்று எச்சரிக்கின்றோம்.

 

யாம் முன்னர்க் குறிப்பிட்டபடி ஒவ்வொரு மதத்திலும் மூடநம்பிக்கையின் பயனாக உள்ள அநேக கொடுமைகள் வேரூன்றியிருப்பது பிரத்தியட்சம். சீர்திருத்தக்காரர் இந்த மூட வழக்கங்களை ஒழிக்க முயற்சிக்கும் போது அந்த அந்த மதத்தைச் சார்ந்த வைதிகர் எதிர்த்துக் கொண்டிருப்பதும் சகஜமாகப் பார்த்து வருகிறோம். இதே நிலைமையில் தான் நமது இந்து சமூகமும் இருந்து கொண்டு வருகிறது. இப்போது மக்களை வேறு மதத்தில் சேரும்படி தூண்டும் சீர்திருத்த வாதிகள், தாங்கள் எந்த மதத்தில் என்ன விசேஷத்தைக் கண்டு கொண்டிருக்கிறார்களோ, அந்த விசேஷம் நமது இந்து மதத்தில் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? என்று கேட்கின்றோம். இனிமேலாகிலும் இத்தகைய மோசமான - தீமை விளைக்கக்கூடிய பிரசாரம் புரியாமல் ஜனங்களுக்கு உணர்ச்சி பிறக்கும் படியான துறையில் தங்கள் ஊக்கத்தையும் உழைப்பையும் செலுத்துமாறு ஷை தீவிர சமூக சீர்திருத்த வாதிகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

சகோதரர்களே! இந்து தரும தத்துவங்கள் மிகப்புராதன காலந் தொட்டு பெருமை பொருந்தியவை என்பன மேனாட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நமது மதம் அன்பு, அருள், அறம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவற்றை அஸ்திவாரமாகக் கொண்டது. இடைக்காலத்தில் வந்து புகுந்து விட்ட களங்கத்தைக் கிரமமான வழியில் நீக்க முயலுவதே அறிவுடமை. நமது இந் நன் முயற்சிக்குக் காலம் அநுகூலமா யிருக்கிறது. ஆதலால் நம்முடைய குறைகளை நமக்குள்ளேயே நாம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமே யொழிய அந்நிய மதத்தில் சரண்புகுதல் அடாது. இங்ஙனம் செய்வது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்ளுவதை ஒக்கும் என்று எடுத்துக் காட்டுகின்றோம். நம்முடைய நன்முயற்சிகளுக்குத் திருவருள் துணை செய்வதாக.


ஓம் தத் சத்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment