Monday, August 31, 2020

 கூட்டுறவு

 

நம் இந்திய தேசத்தில் முன்னோர்கள் பண்டைய கால முதற்கொண்டு சமூக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை மறுக்க யாவராலும் இயலாது. கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் ஜனங்கள் ஒருவரோடொருவர் ஒத்து வாழ்ந்து கஷ்ட நிஷ்டூரங்களையும் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் காலம் மாறிக்கொண்டு வருவதால் தெய்வபக்தி குறைந்து கொண்டும் பண ஆசை விருத்தியாகியும் பட்டணங்களிலும் நகரங்களிலும் பணம் சம்பாதிக்க அநேக சுலபமான வழிகள் ஏற்படுத்தியும், புது மாதிரியான இயந்திரங்கள் ஏற்பட்டும் இருத்தலின் ஜனங்கள் கிராமங்களிலிருந்து கும்பல் கும்பலாகப் பட்டணங்களுக்கு வந்து குடியேறினார்கள். மேலும் கிராமத்தில் குடியானவர்கள் மழை இல்லாமையாலும் பஞ்சத்தினாலும் அநேகவிதமான கஷ்டங்களுக்கு ஈடுபட்டு கடன்காரர்களாய் விட்டார்கள். இச்சமயத்தில் " கூட்டுறவு'' என்ற தெய்வ இயக்கம் நம் தேசத்தில் அரசாங்கத்தாரால் வெளி தேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்டது.


''இக்கூட்டுறவு'' இயக்கத்துக்குத் தலைவர் யாவர்?

 

இந்திய தேசம் தற்காலம் கஷ்ட நிலைமையிலிருப்பது போல சுமார் எண்பது வருஷங்களுக்கு முன்பு ஜெர்மெனி தேசத்து குடியானவர்கள் எல்லாரும் கடன்காரர்களாய் சௌகாரிகளிடம் அதிக வட்டிக்குப் பணம் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கடவுளருளால் ஷட்ஸ் டெலிஷ் (Shewtz Delisab) என்றும் ரேபிஸன் (Raiffeisen) என்றும் சொல்லப்பட்ட இரண்டு பெரிய மனிதர்கள் இப் பூமியின் கண் தோன்றினர். அவர்களில் ரேபிஸன் துரை தம் தேசத்திலிருக்கும் கிராமவாசிகளுக்கு நன்மை செய்ய விரும்பி, தமது சேனை உத்யோகத்தையும் வெறுத்து பொது ஜன ஊழியம் செய்ய வந்து சேர்ந்தார். அவர் "கூட்டுறவு' 'என்னும் மந்திரோபதேசத்தினால் ஜனங்களின் கஷ்ட நிவாரணம் செய்ய ஆரம்பித்து முதல் முதலாக ஜனங்களுக்கு கடன் சுலப வட்டிக்குக் கொடுத்து திருப்பி செலுத்துவதற்கு சுலபமான வசதிகளையும் ஏற்படுத்த முயற்சி செய்தார்.


கூட்டுறவு என்றால் என்ன?

 

நம் தேசத்தில் வெகு நாளாக ஐக்கியமே பலம் என்னும் பழமொழி வழங்கி வருகிறது. இதைக் குறிப்பிட கதை ஒன்றுண்டு. இது அனைவரும் அறிந்துள்ளதாயினும் அதை ஞாபகப்படுத்துகிறேன். ஒரு கிழவன் தான் இறந்து போகும் தறுவாயில் ஒற்றுமையில்லாத தன் நான்கு குமாரர்களையும் அழைத்து தன்னிடத்தி விருந்த சுள்ளிகள் அடங்கிய கட்டொன்றைக் கொடுத்து அதை அப்படியே ஒடிக்கச் சொன்னான். ஒவ்வொருவனும் தனியாகவும் சேர்ந்தும் அந்தச் சுள்ளிக்கட்டை உடைக்க முயன்றும் முடியவில்லை. பிறகு அவர்களுடைய தகப்பனான கிழவன் கட்டை யவிழ்த்துத் தனித்தனி யாக்கி துண்டுகளாக்கும்படி சொல்லவே அந்தக் குமாரர்கள் அதைச் சுலபமாகச் செய்து முடித்து விட்டனர். பிறகு கிழவன் அவர்களுக்கு ஒற்றுமையின் நன்மையை உபதேசித்து இறந்து போனான். ஆகவே ஐக்கியத்தில் அனுகூலம் இருக்கிறது என்பதை யறிந்த பெரியோர்கள் கூட்டுறவு சங்கங்களை ஆங்காங்கு ஏற்படுத்தினர்.


கூட்டுறவின் முக்கிய தத்துவங்கள் என்ன?

முதலாவது ஒரே தொழிலைச் செய்யும் மனிதர்களின் சங்கத்தைத்தான்
''கூட்டுறவு'' என்பர். இரண்டாவது அதில் அங்கத்தினராக சேரவிரும்புவோர் தங்களுடைய சௌகரியங்களுக்காகவே பாடுபட வேண்டும். அங்கத்தினர்க்குள் உயர்வு தாழ்வு என்ற வித்தியாசம் கூடாது. 'கூட்டுறவு" இயக்கம் கட்டாயத்தால் ஏற்படுவதல்ல. அவரவர்கள் தாங்களாகவே அதில் அங்கத்தினர்களாகச் சேரவேண்டும். இந்த அங்கத்தினர்கள் லாபம் என்ற ஆவலைக் கொண்டாவது அல்லது லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றாவது அங்கத்தினராகச் சேரக்கூடாது. ஒவ்வொரு "கூட்டுறவு'' சங்கமும் அதனதன் அங்கத்தார்களாலேயே நடத்தப்பட்டு வரவேண்டும். நற்குணங்களை யுடைய சங்கத்தையே பெரியோர்கள் "கூட்டுறவு'' என்று வழங்கினார்கள். இக்கூட்டுறவின் கொள்கையை எல்லா விதமான துறைகளிலும் அல்லது தொழில்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆனால் நம் தேசத்தில் இவ்வியக்கம் ஏற்பட்டு சுமார் 25 வருஷகாலமாகியும் சரியான நிலைமைக்கு வந்து குடியானவர்களுக்கு தகுதியான உதவி புரியாததற்கு அநேக காரணங்கள் உண்டு. கூட்டுறவு இயக்கத்திற்கு பிதாவாகிய உல்ப் (T. W. Wolfe) என்ற மேல் நாட்டார் சொல்லியபடி இந்தியாவில் இவ்வியக்கம் விருத்தியடைவதற்கு அநேக இடையூறுகள் உள்ளன. அவைகளில் ஜனங்களுக்கு கடன் அதிகரித்திருப்பது ஒரு காரணமாகும். அதைக் காட்டிலும் முக்கியமானது ஜனங்களுடைய அறியாமையாம்.

 

மேலும் ("Co-operation is the Child of Necessity'') "கூட்டுறவு'' அநேக நாளைய கஷ்டத்தின் பலன் ஆனதால் அது ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு பலனை யளிக்கிறது. ஜெர்மன் தேசத்தில் நாணய சங்கமாகவும் பிரான்சு தேசத்தில் கைத்கொழில் அபிவிருத்தி சங்கமாகவும் இங்கிலாந்தில் உணவுப் பொருள்களை அளிக்கும் சங்கமாகவும் டென்மார்க்கு தேசத்தில் விவசாய நாணய சங்கமாகவும் அமெரிக்காவில் கட்டிடங்கள் கட்டும் சங்கமாகவும் கூட்டுறவு சங்கம் வழங்கி வருகின்றது. இந்தியாவிலும் டென்மார்க்கைப் போல விவசாய நாணய சங்கங்கள் அநேகமாக ஏற்படுவது அவசியமாக இருக்கிறது.

 

இத்தகைய "கூட்டுறவு” சங்கங்களில் குடியானவர்களும் கிராமவாசிகளும் அங்கத்தினர்களாகச் சேர்ந்து தங்களுக்கும் நன்மை புரிந்து கொண்டு இவ்வியக்கத்தையும் விருத்தி செய்ய வேண்டியது. ஆகையால் நம் தேசத்தின் முன்னேற்றத்தில் ஈடுபடும் பெரியோர்கள் இவ்வியக்கத்தை விருத்தி செய்ய பிரசங்கங்கள் வாயிலாகவும் "ஆனந்த போதினி'' போன்ற ஸாது நலப் பத்திரிகை வாயிலாகவும் இவ்வியக்கத்தின் நோக்கத்தையும் பலனையும் நம் தேச ஜனங்களுக்குத் தெரிவித்து அவர்கள் தற்காலத்தில் இருக்கும் பரிதாபகரமான நிலையிலிருந்து கரையேறப் பார்க்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

ஆனந்த போதினி – 1929 ௵ - மே ௴

No comments:

Post a Comment