Sunday, August 30, 2020

 

காலமும் அதன் கோலமும்

 

காலத்தின் கூத்தே கூத்து. காலத்தின் கோலமே கோலம். சக்கரம் சுழலுவது போல் காலமும் மாறி மாறி வருகிறது. ஒருகால அநாகரீகம் மற் றொருகால நாகரீகமாகிறது. தற்கால அநாகரீகம் முற்கால நாகரீகம். நாகரீகதேசம் அநாகரீகநாடாகிறது. அநாகரீகதேசம் நாகரீகநாடாகிறது. உதாரணமாக எல்லோராலும் போற்றப்பட்டு உலகிற் கிரண்டு கண்கள் போலிருந்த கிரீக், இத்தாலியா தேசங்கள், இக்காலத்து, சண்டை சச்சரவுகளுக் கிருப்பிடங்களாய் எல்லாராலும் எள்ளப்படுகின்றன. நாகரீகமில்லாதவர்கள் வசித்த அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய தேசங்கள் இப்பொழுது லக்ஷமியும் சரஸ்வதியும் உறையுமிடங்களா யிருக்கின்றன. என்னே காலத்தின் மாறுபாடு!

 

நாம் பிறந்த பூமியாகிய இப்பாரத நாட்டில் இக்காலத்தின் கோலத்தை ஆராய்வோம்: கைத்தொழில் கல்வி கேள்வி இவைகளிற்சிறந்ததாய்க் குபேர நாடெனப் பெயர் பெற்ற நம் இந்தியா தேசம் பல இடர்ப்பாடுகளுக்குள் அகப்பட்டிருக்கிறது. கல்விக்கும் செல்வத்திற்கும் பிறப்பிடமாயிருந்த பாரதநாடு இப்பொழுது கல்விக்கும் செல்வத்திற்கு மிரக்கும் பூமியாயது. கைத்தொழிலில் முதன்மை பெற்று உலகத்திற்கே திலகம் போன்று இத்தாலிக்குத் துணிமணிகள் அனுப்பிய இந்தியாதேசம் இப்பொழுது உடுத்திக் கொள்ளும் உடைக்கு அன்னியர் கை பார்த்து நிற்கின்றது. என்னே காலத்தின் கோலம்! இந்தியாவின் தற்கால நிலைமையும், முற்கால நிலைமை யும், கல்வி, செல்வம், கைத்தொழில், ஒழுக்கம் முதலிய துறைகளில் ஊன்றிப் பார்ப்போமாயின் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.
 

‘இல்லானை எல்லாரும் எள்ளுவர் செல்வரை, எல்லாருஞ் செய்வர் சிறப்பு' ஆதலால் 'இந்தியாவின் செல்வமே முதலாவது நாம் கவனிக்கத் தக்கது. நீர் நில வளப்பங்கள் நிறைந்து, குன்றின் மேலேற்றிய விளக்குப் போல் பிரகாசித்த இந்தியாவின் தற்காலநிலைமை பரிதபிக்கத்தக்கது. கோகினூர் வயிரமும், மயில் சிம்மாசனமுமிருந்த இந்தியா இப்பொழுது அன்னியதேசத்தவரால் அவமதிக்கக் கூடியதாயிருக்கிறது. மேலும் தேசத்தின் வறுமையினால் சுதேசிகள் கைத்தொழில், இயந்திரத்தொழில் முதலியன இயற்றத் திறனற்றவர்களாயினர். இதரநாட்டார் நூல் யந்திரம், அரிசி யந்திரம் முதலிய யந்திரங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் இங்குள்ள பணத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போகின்றனர். அயல் நாட்டுக் கனவான்கள் பலர் வந்து இங்கு இருப்புப்பாதை முதலியன அமைத்து நமக்குச் சௌகரியம் உண்டு பண்ணித் தங்களுக்கும் பணச்சௌகரியம் செய்து கொள்கின்றனர். இவ்வாறு நம் தேசத்தின் செல்வம், மேன்மேலும் வெளிச் செல்கின்றதே யொழிய இதற்கு வரவொன்றையும் காணோம். ஆதிகாலத்திலோ இந்தியா வியாபாரத்தில் மேன்மை பெற்றுக் கடல் கடந்து யவனர், உரோமர்களுடன் வியாபாரஞ் செய்து அவர்கள் பணத்தை ஏராளமாக வாரிவந்தது.

 

இந்தியாவின் செல்வவளம் குறைந்ததற்குக் காரணம் நாம் கைத்தொழிலிலும், வியாபாரத்திலும் கவனம் செலுத்தாதிருப்பதே. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்புகூட இந்தியாவிலிருந்து டெக்காமஸ்லின் முதலிய விலைமதித்தற்கரிய துணிகள், முத்துக்கள், தந்தங்கள், ஆகியவை இத்தாலி, கிரீக் முதலிய தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து அவைகளுக்குப் பதிலாக வெள்ளி, தங்கம் முதலியன இறக்குமதி செய்யப்பட்டு இவ்விந்தியநாடு செழிப்புற்றிருந்தது. தற்காலத்திலோ உடுக்கும் உடைக்கும் அன்னியர் கை பார்த்து நிற்கின்றது. நாம் இப்பொழுது கைத்தொழிலை அறவே கைவிட்டோம்.
 

இவ்வாறு கைத்தொழில் முதலியன க்ஷீணதிசை அடைவதற்குக் காரணம் நாம் கல்வியில் கவனம் செலுத்தாதிருப்பதேயன்றி வேறல்ல. முற்காலத்தில் கல்விக் களஞ்சியமாகிய நம்நாட்டில் யவனர், அராபியர், எகிப்தியர் முதலியோர் இலக்கியம், கணக்கு முதலியன கற்றுப்போயினர். தற்காலத்தில் நாம் கற்கும் கல்வி ஒன்றிற்கும் உபயோகமாகாதது. நாம் கற்கும் கல்வி தாய்ப்பாஷையுமல்ல, தேசீய பாஷையுமல்ல; நெல்லிருக்கப் வதரைக் கற்கிறோம். துரைத்தனத்தாரிடத்தில் வேலைக்கமர்ந்து அளவற்ற பொருள் திரட்டலாமென்னு மெண்ணத்தோடு அரசாங்கக் கல்வி கற்கி றோம். வீட்டிலிருக்கும் பொருளைக்கொண்டோ அல்லது கடன்பட்டோ BA, MA, முதலிய உயர்தரப்பட்டங்கள் பெற்று நாம் கனவு கண்ட அரசாங்க வேலையும் கிடைப்பதின்றிப் பிழைப்பதற்கு வீட்டில் பூஸ்திதியுமின்றி, 'வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பு மிழந்தவள்' போல் திண்டாடுகிறோம். கைத்தொழில் ஏதாவது செய்து வயிறு வளர்க்கலா மெனிலோ, நாம் கற்கும் கல்வியால், சேக்ஷ்பியர், மில்டன் முதலியோ ரியற்றிய காவியங்கள் நமக்குத் தெரியுமேயன்றி, கைத்தொழில் கற்பிக்கப்படாததால் அத்தொழிலும் செய்யத் தெரியாது. இதனால் நாம் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசினவர்களாகிறோம்.
 

நம் நாட்டின் கல்வியும் கைத்தொழிலு மிவ்வாறிருக்க, நம் நாட்டின் விவசாயத்தைப்பற்றிச் சிறிது கவனிப்போம்: முற்காலத்தில் பயிர்த் தொழிலாளர் தங்கள் தொழிலை மிகவும் கௌரவமாய் மதித்து நன்றாய்ப் பாடுபட்டு வந்தனர். அக்காலத்து வேந்தர்களும், ''சீரைத்தேடின் ஏரைத் தேடு' என்ற பழமொழிக்கிணங்க அவர்களை மிக அன்போடும், ஆதர வோடும் நடத்திவந்தனர். அத்தகைய உழவுத்தொழில் இப்பொழுது தாழ்மையாகக் கருதப்படுகின்றது. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாங், தொழுதுண்டு பின் செல்பவர்' என்ற பொய்யாமொழிப்புலவர் வாக்கும் இக்காலத்துப் பொய்த்துப்போயிற்று. வேளாண்மை கேவலமான ஓர் தொழில் என்னும் எண்ணம் ஒவ்வொருவரிடத்தும் நாளுக்கு நாள் பலமாக வேரூன்றி வருகிறது. சம்சாரிகள் வயல்களைத் தாங்களே நேரில் போய்ப் பார்ப்பது கேவலமென்று நினைத்தோ அல்லது சோம்பலினாலோ தங்கள் நிலங்களைக் கட்டுக் குத்தகைக்கு அடைத்தோ, அல்லது தாங்கள் போகாமல் வேலையாட்களை அனுப்பியோ அவர்கள் மூலம் பயிர் செய்கிறார்கள். கூலியாட்கள் நிலங்களை நன்றாய் உழாமலும், அவற்றிற்கு உரம் வைக்காமலும், புதிய விவசாயமுறைகளைக் கைக்கொள்ளாமலும் பயிரிட்டுத் தங்கள் சம்பளத்தில் மாத்திரம் கண்ணாய்க் கணக்கு விடாமல் அதைக் கொள்கிறார்கள். நிலம் காலாகாலத்தில் உரம் வைக்கப்படாததால் நிலத்தின் விளைபொருளும் கம்மியாகிச் சீக்கிரத்தில் நன்செய்யும் தரிசாகிறது. இங்ஙனம் உழவர் தரிசை, நன்செய்யாக்குவதை விட்டு நன்செயைத் தரிசாக்குகின்றனர். வேளாண்மையே நாட்டின் செழிப்புக்குக் காரணம் என்பதை மறந்த இவர்கள் தம் மதி என்னே! ''மேழிச் செல்வம் கோழை படாது'என்பதை இவர்கள் அறியாதது என்னே! அரசாங்கத்தார். நாடு செழிப்புற விவசாயம் முக்கியமென்பதைக் குடிகளுக்குக் காட்டும் பொருட்டு ஆங்காங்கே (Agricultural Farms) விவசாயப்பண்ணைகள் ஏற்படுத்திப் புதுமாதிரி உழுது பயிர்செய்யும் முறையைக் கற்பிக்கின்றனர். நம் நாட்டார் இவைகளைக் கவனித்து அந்தப்படி பயிர் செய்கின்றார்கள் ளில்லையாதலால் நம் அரசாங்கத்தார் முயற்சியெல்லாம் விழலுக்கிறைத்த நீராகின்றது. இனியாவது நம்மவர் வேளாண்மையைக் கவனித்த லவரியம்.

 

மேற்கூறியவைகளன்றி நம் நாட்டின் ஒழுக்கமும் சீர்கெட்டு இருக்கிறது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம், உயிரினு மோம்பப்படும்'' என்ற மூதுரையை நம்மவர் மறந்தனர் போலும். இந்தியர்கள் செங்கோல் செலுத்திய காலத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தாரும் தங்கள் ஜாதிமுறை வழுவாது, பிராமணர் வேத மோதியும், க்ஷத்திரியர் நாட்டைப் பரிபாலனஞ்செய்தும், வைசியர் சூத்திரர் முறையே வாணிபமும் வேளாண்மையும் செய்தும் வந்தனர். இக்காலத்தோ எல்லாம் தலைகீழாக நடக்கின்றன. அந்தணர், "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான், பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்" என்ற வள்ளுவர் வாக்கை மறந்து தங்கள் பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டுக் கள் முதலியன குடிக்கின்றனர். 'அந்தணரென்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுகலான்' என்னும் குறள் இக்காலத்திய பிராமணர்களுக்குப் பொருந்தாது. அந்தணர் வேதமோதுவதையும் மறந்தனர். ஈகையை அறவே அகற்றினர். பொய் ஏமாற்றம் தந்திரம் முதலியவைகளுக் கிருப்பிடமாகின்றனர். அநாசாரம் ஆசாரமாயது; ஆசாரம் அநாசாரமாயது.

 

இனி, நம் நாட்டினரின் தெய்வ பக்தியைப் பற்றியும் ஆராய்வாம்: ''ஆலயந்தொழுவது சாலவும் நன்று'என்ற ஒளவையார் வாக்கை இக்காலத்தவர் அவமதிக்கின்றனர்; கேவலமாக நினைக்கின்றனர். நம்மால் கோவில் கட்டச் சக்தியில்லையாயினும் நம் முன்னோர் கட்டிவைத்த கோவிலைக்கூடப் பாதுகாக்க நமக்குச் சிரத்தை இல்லை.'' கோவிலில் போய்த்தான் கடவுளைக் கண்டு பிடிக்க வேண்டுமோ " என்று சிலர் விதண்டாவாதம் பேசுகின்றனர். இம்மட்டோடு நில்லாமல் கோவில் குளம் செல்வோரையும் பரிகாசம் செய்கின்றனர். நாம் பிரதிதினமும் கோவிலுக்குச் செல்லாவிட்டாலும், திங்களும் வெள்ளியுமாவது சென்று நம் குறைகளையும் நாம் தெரியாமற் செய்த தப்பிதங்களையும் கடவுள் பால் முறையிட்டு அவர் நமக்கு நற்புத்தி புகட்டுமாறு அவரைத் தொழுவோமாயின், நாம் முன் செய்த தப்பி தங்களினின்றும் நீங்கி நம்மால் இயன்ற அறங்களைச் செய்து நம்மைப் பேரின்ப வீட்டிற்குப் பாத்திரராக்கிக்கொள்வோம்.

 

இனி நங்காலத்தவர் ஊணையும், உடையையும் பற்றிய விஷயமும் கவனிக்கத்தக்கதே. முற்காலத்துத் தென்னிந்திய மக்கள் காலையில் பழையது உண்டு புலஞ்சென்று வெயிலில் நின்று வேலை செய்து மாலை திரும்புவர். தற்காலத்தவர்களோ பங்குனி, சித்திரைமாதங்களாயினும் படுக்கை விட்டெழுமுன்னர் காப்பிப்பானம் பருகுகின்றனர்; பின்னர்க் காலைச் சிற்றுண்டி எட்டு மணிக்குக் காப்பியுடன் உட்கொள்கின்றனர். காலை முதல் மாலைவரை சுமார் 5, 6 தடவைக்குக் குறையாமல் ஆகாரம் சாப்பிடுகின்றனர். இதனால் நோயிடைப்பட்டு வருந்துகின்றனர்.'' ஒருபொழு துண்பான் யோகியே, இருபொழு துண்பான் போகியே, முப்பொழு துண்பான் ரோகியே'' என்றனர் தேரையர். மூன்று வேளை ஆகாரம் சாப்பிடுகிறவர்களையே ரோகிகள் என்று தேரையர் சொல்லியிருக்க, ஆரோக்யப்பசி, நோய்ப் பசி என்று பசியைப் பகுத்துணராமல் ஐந்தாறு வேளை சாப்பிடு மிவர்கள் பிணிவாய்ப்பட்டுத் துன்புறுவார்களென்பதில் சந்தேகமேயில்லை. "மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றியுணின்" என்னும் செய்யுள் இக்காலத்தில் சிறிதேனும், நம்மவரால் கவனிக்கப்படவில்லை. நம்மவர் அணியும் உடையோ நாட்டிற் கேற்றதல்ல. மேல்நாட்டார் தங்கள் குளிர் தேசத்திற் கேற்றவாறு தங்கள் சரீரத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை தொப்பி, கைச்சட்டை, கால்சட்டை முதலியன அணிந்து மூடிக்கொள்கின்றனர். நம்நாட்டிற்கு அவ்வாறணிவது அவசியமில்லை. ஆயினும் நாமும் மேல்நாட்டாரைப்போல அவற்றை யணிகின்றோம். இது நம் தேசத்திற்கு ஒவ்வாததாயிருந்தும் அவர்கள் அணிவதைப்பார்த்து நாமு மணிகின்றோம். இஃது என்ன நாகரீகம்!

 

இவ்வாறாக நாம், நம் நடை, உடை, பாவனை முதலியவற்றால் மிகக்ஷணதசை யடைகிறோம். ஒல்காப்புகழும் பல்கும் பெருமையுமுள்ள விவசாயத்தைக் கைவிட்டோம். "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக " என்ற வள்ளுவர் வாக்கை மறந்தோம்; குலமகளை விட்டு விலைமகளைக் கைக்கொள்வதுபோல் நம் குழந்தைகளுக்குத் தாய்மொழி கற்பித்தலை விடுத்து வேறுதேச பாஷை கற்பிக்கிறோம். உலகோர் வியப்புற்ற நம் கைத்தொழிலைக் கைவிட்டோம். நம் டெக்காமஸ்லினெங்கே? சிவாஜி முதலியோர் போர்த்திறமை எங்கே? நம் கப்பற்படையெங்கே? யாவும் துர்க்காலத்திற் கிரையாயின. தானம், தவம், தர்மம், செல்வம் பெருகி உலகத்திற்குத் திலகமாய நம் இந்தியா தேசம் இப்பொழுது உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, கேட்போர் ஏளனம் செய்யும் நிலைமையிலிருக்கிறது. இனியாவது நாம் கைத்தொழில் கல்விகற்று, வேளாண்மையைக் கைக்கொண்டு, உடுக்க உடையும் உண்ண உணவும் தேடிக்கொள்வோமாக. எல்லாம் வல்ல இறைவன் அவ்வாறே அருள் செய்வானாக.

 

ச. சிவக்கொழுந்து, சிவகாசி.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment