Monday, August 31, 2020

 

சிலப்பதிகாரம் பெருங் காப்பியமே

வித்துவான் - எம். சாம்பசிவம்

 

"நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்!"


என்பதை ஆச்சாரியாரின் “ஓநாயும், ஆட்டுக் குட்டியும்" என்னும் உவமை, நன்றாக விளக்கிக் காட்டுகிறது. தவிரவும், அவருடைய ஒவ்வொரு கேள்வியும், அதை மேலும் உறுதிப் படுத்துவதோடு, மேலும், அவர் முறையின்றித் தாறுமாறாகப் பயின்று, குழம்பி யிருக்கிறார் என்பதையும் வலியுறுத்துகின்றன: ஊழ்வினை, அவரைத் தெளிவிப்பதாக!

 

"ஊழிற் பெரு வலி யாவுள" என்பதின் துவனிப் பொருள், 'ஊழ், முதுகு காண்டலில்லை' யாயின், “ஊழையு முப்பக்கங் காண்பர்" என்பதன் துவனிப் பொருள், இன்னது என்று அறிவாரா, ஆச்சாரியார்? 'உப்பக்கம்' என்பது, புற முதுகு'தான் என்பதை ஆச்சாரியாருக்கு நினைவூட்டுகிறேன்; அறிக.

 

தமிழ் வீரர்கள், 'தமிழ், தனிமொழி' என்பதில் யாதொரு மயக்கமும், எக்காலத்துக் கொண்டார்க ளில்லை; தமிழர்கள் எக்காலத்தும் அநாவசியமாக 'மார்தட்டி' 'வீண்கர்வம் அடைவதில்லை. இப்படித் தவறாக ஆச்சாரியார் நினைத்து விட்டதற்குக் காரணம், தமிழரின் மரபை ஓரளவும் அறிந்து கொள்ளாமைதான்; இனியாகிலும் ஆழ்ந்து ஆராய்ந்து அறிவாராக.

 

ஊழ்', 'வீடு' என்பன போன்ற பதங்களின் நுணுக்கத்தை அந்தரங்கத்தை எள்ளளவும் கருதாமல், பரிமேலழகர் உரையை உருப்போட்டுக் கொட்டினால் பயனேயில்லை என்பதும், குப்பைக் கருத்துக்களைக் 'கடாமுடா' கடையில் சொற்பந்தல் போடுவது நகைப்பைத் தரும் என்பதும் குசிலிக் கடைப் புத்தகக் கேள்விகள் கரிமலவாயு வாகிவிடும்' என்பதும், தேவைக்கு மிஞ்சி எடுத்துக் காட்டுகளை உபயோகித்தால், கழற் பெய் குட' மாக அவை, செய்துவிடும் என்பதும் ஆச்சாரியார், அறியாதவை போலும்!

 

''உலகத்தே மழை பெய்வதும், வெயில் காய்வதும் அந்தந்த நிலப் பகு.
தியின் ஊழ்வலியே யாகும் என்று, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு 'கர்காடகம்', சொன்னதனால், ஊழே வெயிலுக்கும், மழைக்கும் காரணம் என்று, யாவரும் சேர்ந்து கத்தமாட்டார்கள் என்பதை ஆச்சாரியார், அறிபட்டும்,

 

காய்தல் உவத்தலகற்றி, ஊழ் என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களையும் பரீட்சைக்கும், விதண்டாவாதங்களுக்கு மன்றி, வாழ்க்கைக்காக- சமூக சேவைக்காக, சிறந்த தத்துவ விசாரணையோடு, ஆச்சாரியார், ஆழ்ந்து சிந்தனை செய்யட்டும். பரிமேலழகர் உரையைப் பன்முறை கெட்டுருப் போடுவதில் பயனே இல்லை யென்பதை அப்பொழுதுதான் உணரமுடியும். ஊழைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளாத தால்தான் ஆச்சாரியார், பல நூல்களிலேயும், உரைகளிலேயும் விழுந்து புரண்டு, ஆதாரம் காட்ட முயன்று, முடிவில், 'குன்று முட்டிய குரீஇப் போல்' கின்ஞர் போலும். ஊழைப் பற்றியே சிந்திக்காமல், சிறந்த ஒருவன், மன வலியாலும், வாக்கு வலியாலும், உடல் வலியாலும் ஒரு இலட்சியத்தை மேற்கொண்டால், அவன், அதில் வெற்றியே பெறுவான்! ஊழைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டு அழுபவன், கூழாகிவிடுகிறான். இலட்சியம் உண்மையானால், அலட்சியம் பறந்து விடும்; இலட்சியமே இல்லாத பேர்வழிகளுக்கு எதைப் பற்றித்தான் கவலை? ஊழைப் பற்றித்தான்!


இராவணன் இலட்சியம் முற்றுப்பெற்றதா? என்பது ஆச்சாரியாரின் கேள்வி.

 

அதில் ஏன், சந்தேகம்? முற்றுப் பெறாமல் என்ன? வண்ணான் சொன்ன கதையை ஆச்சாரியார் இன்னும் அறியவில்லையா? ஆகவே, ஊழ், எல்லோரையும் கூழாக்காது! ஊழின் அடிமைகளைத்தான், கூழாக்கும்!

 

சிலம்பில், முக்கிய உறுப்பினர்களுக்கு ஊழ் கூறாது விட்டதேன்? என்பது ஆச்சாரியாரின் மற்றொரு கேள்வி. இதற்குப் புரட்டாசி மாத இதழில் பதில் இறுத்திருக்கிறேன்; தவிரவும், பானைச் சோற்றில் ஒரு சோறு, பதம் பார்க்கப் படுமே தவிர, ஆச்சாரியார் விரும்புவதுபோல், பானை சோறும் பதம் பார்க்கப்படா; பார்க்கப்படலாம்; பயன்?...... சொல்லவேண்டுமா?

 

'மனத்துக் கெட்டாத -ஊழ்' என்பது, ஆச்சாரியாரின் முடிவு! பிறகு, எட்டுமாறு நூற்கள் எப்படி எடுத்துக் கூறுகின்றன? நூற்கள், வானத்திலிருந்து விழுந்தவை என்று நினைக்கிறாரா, ஆச்சாரியார்? அப்படிப் பலபேர் --நினைப்பதால் தான் உலகம், தலைவிரி கோலமாகத் திரிகின்றது.

 

இராமாயணம், கதையால் - பாடுபடவில்லை! அது, இராமனைக் கடவுளே' என்றும், தமிழர்களை 'இராட்சசர்களே; குரங்குகளே' என்றும் கயிறு திரித்திருப்பதால் படுகின்றது, பாடு! அப்பாட்டை ஆச்சாரியார், அறிந்திலரோ? " இலவம் பஞ்சு போன்ற" சிலப்பதிகாரத்தைக் காற்று, தூக்கிக் கொண்டு பறக்கும்போது, எருக்கம் பஞ்சு போன்றவர்கள், துருவித் துருவி அதை ஆராய்ந்து கொண்டே, தொங்கி வருந்த ஏன் அதைப்பின் தொடர்ந்து ஓடவேண்டும்? பிரபு லிங்க லீலையையே 'உண்மைக்கதை' என்று சொல்லிக்கொண்டு இருக்கட்டுமே.

 

அவர் - கேள்வி: மாதவி இல்லையானால், கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிவதேது? மதுரைக்குச் செல்வதேது? கொலை யுண்ணுவது எது? ஆதலால், மாதவிக்கு ஊழ் கூற வேண்டும்; இல்லையேல் உப்பில்லாத உணவு போலும்!

 

என்-பதில்: சிலம்பு இல்லையானால், மாதவியை விட்டுப் பிரிவதேது?
மதுரைக்குச் செல்வதேது? கொலையை 'தின்னு' வது எப்படி? ஆதலால், சிலம்புக்கும் ஊழ்' கூற வேண்டாமா? இல்லையேல், “மிளகாய் இல்லாத (1) மைசூர் பாகு” போன்ற தாகுமே! மாதவி, உணவா? ஊழ், உப்பா? பொதுத்தன்மை?....... இது, ரசமா, விரசமா?

 

ஆகவே, சிலப்பதிகாரத்தின் தலைவிதி' பெருங்காப்பியமென்றே இருக்கிறது; அதைச் சுவைப்பவர்களின் தலைவிதி தான் நன்றாயமைய நாம் விரும்ப வேண்டும்; மற்றபடி எந்த A, B, C, D பட்டதாரியாவது, ஆங்கிலத்தில் நூல்கள் வெளியிட்டு விட்டால், அதற்காக நம் அறிவை நாம் இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால், திருவள்ளுவர் எதை அறம் என்கிறாரோ, பொருள், இன்பம், வீடு என்கிறாரோ அவற்றை எல்லாம் கோவலன், கண்ணகியாகிய இருவரும் அடைந்திருப்பதாலும் மற்றைய வருணனைகள் யாவும் பொருந்தி யிருப்பதாலும் 'சிலப்பதிகாரம், பெருங்காப்பியமே.'

 

கோவலன் நன்மனை புணர்ந்து, மக்களைப் பெற்று, தீ மனை புகாமல், மணிமேகலையைப் பெறாமல் இருந்திருந்தால், பிறகு, சிலப்பதிகாரம்தான் வந்திருக்குமா? மணிமேகலை தான் தோன்றி இருக்குமா? அவைகளைப்பற்றிக் கூசாமல் தான் கற்பனை' என இயலுமா? கற்பனையைக் கற்பனை யென்பதே வேலையற்ற வேலையாயிற்றே; வீண்பிடிவாதம், மாறான பலனைத் திருமே!

 

ஆகவே, இளங்கோவடிகள், இல்லாத - நடவாத ஒன்றைச் சரித்திரம் என்று கற்பிக்கவில்லை. தம் காலத்தில் நடந்த ஒன்றையே - அதாவது, சாத்தனார், மதுரையில் நேரில் கண்டுவந்து தம்மிடம் கூறியதையே சிலப்பதிகார மாக்கினார். அதில் கற்பனையாக இருப்பவை, அணிவகைகள்; அலங்காரங்கள். மத்தியபாகம், சிலம்பு-சம்பவம், கோவலன்- கண்ணகி வரலாறு, அதாவது பாவிகம், உண்மையே; மையப் பொருள், நிஜமே.
அவற்றை, ஆச்சாரியார் பொய்யென்றால் பொய் பராகலாம்; கற்பனை யென்றால், முதலில் அவரே கற்பனைதான்.

 

இராமாயணம், மொழி பெயர்ப்பு நூல்; வழி நூல்; சிலப்பதிகாரம், அப்படிப் பட்டதல்ல; மூல நூல்; முதல் நூல்; நம் நூல்; நம் மொழி நூல்! அதனால் அது, நம் சிம்மாசனத்தி லிருக்கத் தகுதி வாய்ந்ததே; இராமாயணம் அம்மிக் குழவியும் ஆகலாம்; காற்றிலும் பறக்கலாம்; அது, நூலாகவே இருக்தால், சுவைப்பதே தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆகவே, அவ்விரண்டு நூற்களையும் ஒப்பு நோக்குவது, ஆபத்து பெருந் தவறு.

 

அன்றியும், எந்த நூல்களுமே, காப்பியங்களுமே மனிதனை-அவன் அறிவைக் குறிப்பிட்ட ஓர் எல்லை வரையிலுமே வளர்க்கின்றன. அந்த எல்லையை அறிவு, தாண்டி விடுமானால், பிறகுதான் உண்மையாகத் தன்னை அறிகிறான்; உண்மையான உலகத்தை பறிகிறான், மனிதன்; பிறகு வீடுபேற்றுக்குத் தகுதியுடையவனாகி விடுகிறான்.

 

இதனால், எந்த நூற்களுக்கும், காப்பியங்களுக்கும் பெயர்ச்சியற்ற வரம்பு கோலுவது, பெருந்தவறு என்று ஆகிறதல்லவா? வரம்பு (நூல் இலக்கணம்) இருக்க வேண்டியதே; ஆனாலும், அது, இயற்கையை பொட்டிய தாக இருக்கவேண்டும்; இன்றேல், வரம்பிற்கே திண்டாட்ட மேற்பட்டு விடுமல்லவா?

 

உலகில் கோடிக்கணக்கான மக்களிருந்தும், ஒருவரைப்போ லொருவரில்லை; இருப்பினும், துட்ப வேறுபாடுகள் பல இருக்கின்றன. ஒருவனைக் குறிப்பிட்டு, அவனை யொத்தவர்கள் மனிதர்கள் ஒவ்வாதோர் மனிதர் ஆகார் என்றால், அதில் எவ்வளவு நியாயமிருக்குமோ, அவ்வளவு நியாயந்தான் பெருங்காப்பிய இலக்கணத்தைக் கையில் வைத்துக் கொண்டு காப்பியங்களை பெல்லாம் அணு அணுவாக அளந்து பார்ப்பதிலும் இருக்கிறது.


"மொழிப் பொருள் காரணம், விழிப்பத் தோன்றா"


எனினும், ஊழ்' என்ற சொல்லின் வேகத்தை நாம் உணராமலில்லை; ஆனால் அதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, அதுவே உயிர்களை ஊக்குகிறது; உலகத்தையும் ஊக்குகிறது என்று பெருமையாகச் சொல்லி, அதைக் கட்டிக்கொண்டு அழுவதுதான், நாம் புறக்கணிக்கவேண்டிய செயல். மேலும், இந்தச் சொல்லுக்குச் சமமான நம் ஊக்கத்தைக் குறைக்கும் வட சொல் ஒன்று இருக்குமானால், அது, அதிர்ஷ்டம் தான்! இந்த அதிர்ஷ்டமும், ஊழும் எவற்றை நோக்கிக் கற்பிக்கப் பட்டனவோ, அவற்றிற்கே அவை பயன் படலாமே தவிர, எடுத்ததற்கெல்லாம் அவற்றைப் பூசை பண்ண வேண்டியதில்லை; ஏனென்றால், நம் தீச்செயலும், சோர்வுந்தாம் பிற்பாடு 'போ கூழ்' என்றும், 'துரதிர்ஷ்டம்' என்றும் பரிணமிக்கின்றன. நம் நற்செயலும், விடா முயற்சியுந்தாம் பிற்பாடு 'ஆகூழ்' என்றும், அதிர்ஷ்ட' மென்றும் சொல்லப் படுகின்றன. ஆகவே, 'ஊழூழ்' என்று வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றால், 'போ கூழ்' அன்றோ, ஜனிக்கின்றது? அதற்காகத்தான் ஊழ் என்பதையே புறக்கணித்து, அதாவது இலட்சியத்தைக் கவனிப்போமானால், தானே-ஆகூழ், தாயைத் தொடரும் கன்றுபோல் இலட்சியத்தைத் தொடர்கிறது.

 

எனவே, ஊழ் என்பது இன்னது என்று நிலையாக ஆச்சாரியார் தெரிந்திருப்பாரானால், ஊழ் உதவுகிறது.' என்று கூறிய தவறை நன்கு உணர்வார்.

 

ஊழைப் பற்றி இதுகாறும் திருவள்ளுவர் கருத்தையே கூறினேன்; பரிமேலழகர் கருத்தையல்ல; அவர், தவறுகிறார். தவறலாம்! நமக்குத் திருவள்ளுவர் கூறிய மற்றொரு யோசனையையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.


“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு!'


என்பதே அது. இக்குறள், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது! என்பதை ஆச்சாரியார் அறிவாரா? அறிவாரானால், 'குப்பை மேற்கோள்' களை ஏன், வாரி வாரி வழங்க ஆரம்பிக்கிறார்; சொந்தச் சரக்கையே வழங்கட்டும். நெட்டுருவற்ற சொந்தச் சரக்கு அவரிடம் இருக்குமானால், சிலப்பதிகாரம் பெருங் காப்பியமென்பதில், மறுமுயற்சியின்போது, ஐயத்தின் நீங்கித் தெளிவாராக. ஐயமிருப்பினும், அறிஞர்களைக் கொண்டு தேறுவாராக; ஆனந்தபோதினியிலும் வரைவாராக.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment