Monday, August 31, 2020

 

குமரி நாடு

(டி. எம். அப்பாவு.)

நேற்று வரை முடி மன்னர்களாய் இருந்தவர்களிற் பலர் இன்று சாதாரண மனிதர்களாகி விட்டனர். உலகிலேயே சீருஞ் சிறப்பும் பெற்றிருந்த நாடுகளிற் பல இன்று மாற்றரசனுக்கு அடிமையாகி விட்டன. வானோக்கி வளர்ந்திருந்த கட்டிடங்களிற் பல இன்று தரை மட்ட மாக்கப்பட்டு விட்டன. இதுதான் சரித்திரம் கூறும் உண்மை. மாறுதல் உலகின் இயற்கை.

உலக சரித்திரங் கூறும் மாற்றங்களிலே அரசியல் மாற்றங்களும், வாழ்க்கை மாற்றங்களும் மட்டும் அடங்கினவன்று. உலகின் நில அமைப்பும் காலத்திற்குக் காலம் மாறுபடு மென்பது அராய்ச்சியிற்கண்ட தெளிவு. இப்போது உலகிலேயே தனக்கு நிகரில்லை என நிற்கும் இமயமலை ஒரு காலை கடலின் கீழ் அமிழ்ந்திருந்தது. இப்போது கடற் போர்களுக்கு இடமாக இலங்கும் மத்திய தரைக்கடல் ஒரு காலை நாற்புறத்தும் நிலத்தாற் சூழப்பட்ட ஏரியாக இருந்தது.

இப்போது நம் தமிழ் நாடு இந்தியா என்ற ஓர் நாட்டுடன் இணைக்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். ஆயினும் வடவரின் மொழி, கலை, நாகரீகம் முதலியன நம்முடையவற்றுடன் மாறுபட் டிருப்பதுடன் தமிழ்நாடு தனி நாடாகவே எண்ணப்பட்டு வருகிறது. இதற்குக் காரண மென்ன?

பல்லாயிர மாண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் நாடு ஆசியாக் கண்டத்துடன் தொடர் பற்ற ஓர் தனி நாடாக இருந்ததென்பதை யறிய நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் உண்மை இதுதான். மேனாட் டறிஞரின் ஆராய்ச்சி முடிவுகளும் பழந்தமிழ் நூல்களும் இதற்குச் சான்றாக உள்ளன.

பல்லாயிர மாண்டுகளுக்கு முன்பு, இப்போது இந்து திரைக் கடல் அலை கொழிக்கு மிடத்திலே ஓர் பெரும் நிலப் பரப்பு விளங்கி யிருந்தது. அது ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் தொடங்கி தற்காலத் தமிழகம், ஜாவா, போர்னியோ முதலிய கிழக் கிந்தியத் தீவுகள் ஆகியவற்றை தன்னுள்ளடக்கியதாய் ஆஸ்ட்ரேலியா வரையிலும் வியாபித்திருந்தது. மேனாட்டறிஞர் ஒருவர் கூறுவதைக் கவனியுங்கள். "முதலாம் காலக் கூறின்கடைப் பகுதியிலே ஓர் பெரிய நிலப்பரப்பு கிழக் காப்பிரிக்காவி லிருந்து தென் சீனா வரையில் நீண்டிருந்தது.” (H. F. Blanford.)

இப் பெரிய நிலப் பகுதியின் அமைப்பை நில நூலார் படம் வரைந்து காட்டுகின்றனர். இப் பெரிய நிலப் பகுதிக்கு அவர்கள் இட்ட பெயர் 'லெமூரியா' என்பது. நம் தமிழ் மூதாதையர் இந் நிலப் பகுதியினை அறிந்திருந்தனர். 'குமரிக் கண்டமென்று அவர்கள் வழங்கினர். குமரிக் கண்டத்தின் வட எல்லை விந்தியமலை. இக்காலை வட இந்தியா என்று வழங்கப்படும் நிலப் பகுதி அக்காலை கடலின் கீழ் இருந்தது.

இப்பெரிய நிலப்பரப்பானது சில காலத்திற்குப் பின் ஓர் பெருங்கடற் பெருக்கினால் துண்டாடப்பட்டது. இதுவரை இம் மாதிரி கடற் பெருக்குகள் ஒன்பது ஏற்பட்டன என்று ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர். குமரிக் கண்டத்தை யழித்த கடற்பெருக்கு கி. மு. 9564-இல் உண்டாயிற்றென்று ஸ்காட் எலியட் (Scott Elliot) என்னும் ஆராய்ச்சியாளர் குறிக்கிறார். இக் கடற் பெருக்கினால் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா, சீனா, பர்மா முதலியன தனித்துப் போயின. எஞ்சியது இப்போதுள்ள தமிழகமும், இலங்கை, ஜாவா, போர்னியோ முதலிய தீவுகளும் அடங்கிய ஓர் பெருந்தீவே.

இப்பெரிய தீவிற்கு 'குமரி நாடென்றும் பெயர்; 'குமரித் தீவு' என்றும் கூறுவர். இத் தீவில் நாவல் மரங்கள் மிகுதியாக வளர்ந்திருந்தமையால் 'நாவலந் தீவு' என்றும் வழங்கினர். இத் தீவைப் பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் கூறுவதால் மட்டும் நாம் தெரிந்து கொள்ள வில்லை. பழைய தமிழ் நூல்களில் பல விடத்தும் இப் பெயர் காணப்படுகின்றது. இங்குப் பல புலவரும் புரவலரும் வாழ்ந்துள்ள செய்தி நமக்குக் கிடைக்கின்றது. கீழ் நாடுகளைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்து வந்த ஆல்பிரட் ரஸல் வாலஸ் (Alfred Russel Wallace) என்பார் கீழ்க்கண்டவாறு குறிக்கின்றார்: ''மூன்றாம் காலக் கூறின் பெரும் பகுதியில் தென்னிந்தியாவும் இலங்கையும் அடங்கிய நிலப் பகுதி வடக்கே கடலை எல்லையாகப் பெற்றிருந்தது." இக் குமரி நாட்டைக் கடல் கொண்ட போது தான் உயரிய தமிழ் நூல்க ளிருந்த எண்ணரிய புத்தக சாலைகள் அழிந்து போயின. அந்தோ! கடலரசே! எம் மினிய தமிழ் மீது உனக்கேன் இத்தனைக் கோபம்?

குமரி நாட்டிற்குக் குமரி யாறும் பஃறுளி (பல+துளி) யாறும் முக்கிய நதிகள். இப்போதுள்ள கன்னியாகுமரி முனைக்கும் இலங்கைத் தீவுக்கும் இடையிலுள்ள கடற் பகுதிதான் அக்காலை குமரிப் போறாக விளங்கி யிருக்கும். குமரி யாற்றை யடுத்து 'குமரிக்கோடு' என்ற ஓர் மலை இருந்தது. அதனைப் பிற் காலத்தார் 'மகேந்திரம்' என்று அழைத்தனர். பஃறுளியாறு நாட்டின் தெற்புறத்தில் இருந்தது.

இவ்விரண்டு நதிகளுக்கும் இடையே இருந்த நிலப்பரப்பு சுமார் எழுநூறு காவதம். (காவதம் எண்ணாயிர முழங்கொண்ட தூரம். இவ்வளவு விஸ்தீரண முள்ள இந் நாடு ஏழு உட் பகுப்புக்கொண்ட ஏழு பெரும் பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அருங்கதை சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட அடியார்க்கு நல்லார் அந் நாடுகளின் பெயர்களைக் குறித்திருக்கிறார். ''ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு எழ் முன் பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குறும்பணை காடு' என்பன, அவை

குமரி நாட்டில் வழங்கிய மொழி தமிழ். ஆரியம் முதலிய மொழிகள் தோன்றுதற்கு முன்னமேயே தமிழ் வழங்கி வந்த தென்பதற்குச் சான்றுகள் பல உள. ''பாலிமொழியும் கீர்வாணமும்... தோன்றுதற்கு முன்னமேயே...... பாரரசு புரிந்த பைந்தமிழ்த்தேவி” என்கிறார் ஓர் புலவர். பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடையே யிருந்த பெருவள நாட்டின் அரசனாகிய தனியூர்ச் சேர்ந்தன் பாடியதாகக் கொள்ளப்படும் செங்கோன் தரைச் செலவு" என்னும் நூலின் செய்யுட்கள் பல கிடைத்திருக்கின்றன. இறையனார் அகப்பொருளுரை, அடியார்க்கு நல்லாருரையாய இவற்றில் இந்நூலின் செய்யுட்கள் காணப்படுகின்றன. இங்குக் கூறிய காரணங்களினாலே குமரி நாட்டில் வழங்கிய மொழி தமிழ் என்பது வெள்ளிடைமலை.

குமரி நாட்டில் தமிழ்மொழியில் தேர்ந்த புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களிற் சிலரின் பெயர் இப்போது கிடைக்கின்றது. பெருவள நாட்டின் அரசனாகிய தனியூர்ச் சேர்ந்தன் பாடிய 'செங்கோன் தரைச் செலவு' என்னும் நூலில் ஏழ் தெங்காட்டு முத்தாகத்தியன், பேராற்று நெடுந்துறையன் முதலிய பல பெயர்கள் காணப்படுகின்றன.

மேற் கூறிய 'செங்கோன் தரைச் செலவு' என்னும் நூல் சில காலத்திற்கு முன் அச்சேறியது. இஃது முதலூழியில் தலைச் சங்கத்தார் காலத்தில் எழுதப்பட்டதாகத் தோற்றுகின்றது. இந் நூலை பஃறுளி யாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டின் அரசனை முதலூழித் தனியூர்ச் சேர்ந்தன் பாடின தாகக் கூறுவாருமுளர்.

குமரி நாட்டைக் கடல் கொள்ளப் படுமுன் பாடப்பட்ட ஓர் தமிழ்ச் செய்யுள் புறநானூற்றில் காணப்படுகின்றது. அப் பாட்டையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் கவனியுங்கள்.

'எங்கோ வாழிய குடுமி தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வபிரியர்க் கீத்த

முந்நீர் விழவி னெடியோ

நந்நீர்ப் பஃறுளி மணலினு பலவே.' (புறம் 9.)

 

(இதன்பொருள்) எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக! தம்முடைய சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தற்கு வழங்கிய முந்நீர் கடற்றெய்வத்திற் கடுத்த விழாவினையுடைய நெடியோனா லுளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளியாற்றின் மணலினும் பல காலம். (நச்சினார்க்கினியர்)

குமரியாற்றிற்குத் தெற்கே பனை நாடு முதலிய நாடுகளும் மணிமலை குமரிக்கோடு முதலிய மலைகளும் முத்தூர் கபாடபுரம் முதலிய ஊர்களும் பஃறுளியாறு குமரியாறு முதலிய நதிகளும் இருந்ததென வேற்றோர் தமிழ் நூல் கூறும்.

தொல்காப்பிய நூலும் குமரிநாடு அழியா முன்னரே ஆக்கப்பெற்ற தென அறிஞர் கூறுவர். இஃது உண்மையாயின் அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தா ரென்பதே அடிபட்டுப் போகும். ஏனெனின் காலை வட இந்திய நிலப்பகுதி நீரின் கீழ் இருந்தமையான் ஆரியர் மத்திய ஆசியாவிலேயே இருந்தனர். அக்காலை அவர்களுடைய வேதங்கள் ஆக்கப் பெறவில்லை. இப்போது தொல்காப்பியப் பழமையை நோக்குவோம்.

      பனம்பாரனார் தொல்காப்பியத்திற்கு பாயிரம் உரைப்பான் தொடங்கற்கண்

                'வட வேங்கடம் தென்குமரி – யாயிடை

      தமிழ்கூறு நல்லுலகத்து.'                    என்றார்.

 

அதாவது 'வடக்கே திருவேங்கட மலையும் தெற்கே குமரியாறும் எல்லையாக உடைய தமிழ்கூறும் நல்லுலகம்' என்றவாறு. இப்பொருள் படவே இளம்பூரணர் ‘குமரியாறு கெடுவதற்கு முன்னையது' என உரை யெழுதிப் போந்தார். இன்னும் அந்நூலின் நடையை நோக்குவார்க்கு அதன் தொன்மை விளங்கும்.

 

      தமிழ் தழைத்தோங்கிய குமரிநாட்டைக் கடல் சிதைவு படுத்தியது. குமரிநாட்டைக் கடல் கொண்டமையைக் கூறப்புகுந்த இளங்கோவடிகள் 'பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்குக் குமரிக்கோடுங் கொள்ள’ என்று கூறுவதோ டமையாது, வடிவேலறிந்த வான்பகை' என்றும் அதற்குக் காரணம் கூறிப் போந்தனர்.

      இப்போது குமரிநாடு இல்லை. அதன் பெயரும் வெகு சிலராலேயே நினைக்கப் படுகின்றது. மற்றையோர் அதனை அறியாராய் உள்ளனர். தமிழை வளர்த்த அதன் பெருமையினையும் சிறந்து விளங்கிய அதன் உயர் வினையும் எண்ணிப் பார்த்தல் நம் கடமை யன்றே! குமரியழிவினால் தமிழுக்கேற்ற நன்மை தீமையினை நோக்குவோம்.

      மிக அகண்ட பரப்பிற் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இப்போது குறுகிய இடத்து உறைவதாகி, பல்மொழிகளாப் பிரிந்து போனதுடன் அன்னிய மொழிகளாலும் இடர்ப்படுகின்றது. ஆகையினால் தமிழ்மொழி தாழ்ந்த நிலையடைந்து அருகிக்கொண்டு வருகின்றது. ஆரியம் முதலிய இறந்து பட்ட மொழிகளுள் ஒன்றாய் தமிழ் எண்ணப்படும் நிலைக்கு வருதலை நீக்க முயற்சிப்பது தமிழராகிய நம் கடமையன்றோ?

      ‘அரைகடல் வரைப்பிற் பாடை யனைத்து(ம்) வென்று

      உழல்தரு தமிழ்த் தெய்வத்தை உள்ளினைந்தேத்துவோம்.'

 

என்று மிரண்டடிகளும் உங்களுக்கு என்றும் நினைவிருக்கட்டும்.

      தமிழைப் புறத்தே தள்ளி வேற்றுப்பாடையை விரும்பும் மக்களைக் கேளுங்கள்,

“தொன்டர்நாதனை தூதிடை விடுத்ததும் – முதலை

யுண்ட பாலகனை யழைத்ததும் எறும்பு பெண்னுருவாக்

கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததும் கண்ணித்

தண்டமிழ் சொலோ மறுபுலச் சொற்களே சாற்றீர்!”

 

ஆனந்த போதினி – 1942 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment