Monday, August 31, 2020

 

குற்றாலப் பவனி

(துறைவன்.)

கண்படைத்தவர் பார்த்து அனுபவிக்க வேண்டிய காட்சிகளில் அரசன் பவனி வரும் காட்சியும் ஒன்று. மேளதாளங்கள் என்ன, கொடிகள், குடைகள் என்ன! முகபடாம் தரித்த யானைகள் என்ன! கோலாகலமா யிருக்குமல்லவா? இப்பேர்ப்பட்ட காட்சிகளைக் காவியங்களில் கவிகள் காட்டும் பொழுது நமக்கு ஆனந்தம் பொங்குகிறது. ஊர்வலத்தைப் பார்க்க வரும் மக்களிடையே முக்கியமாகப் பெண்களிடையே தான் என்ன பரபரப்பு? தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்வதில் தான் எத்தனை உற்சாகம்! ...... இவற்றை யெல்லாம் நன்கு அனுபவித்த கவி திரிகூட ராசப்பர் தன் “குறவஞ்சி” நாடகத்திலே குற்றாலநாதன் பவனிவரும் கோலமார் காட்சியை நம் கண் முன்னால் காட்டுகிறார்.

நன்னகரின் ராஜவீதியிலே, திரிகூடாசல நாதன் பரிவாரங்கள் புடை சூழப் பவனி வருகிறான். இளங்காளை மேலேறி வரும் இறைவனது தோற்றத்திலே மக்கள் பரவசமாகிறார்கள். எல்லோருக்கும் முன்னால் கட்டியக்காரன் "நேர் கொண்ட புரி நூலும் நெடிய கைப்பிரம்புமாக “கட்டியங் கூறி வருகிறான். கம்பீரமாக மேற்கெழுந்த சந்திரனைச் சூடிக்கொண்டு கிழக்கெழுந்த சூரியனைப்போல வரும் குற்றாலநாதனை வாழ்த்துகிறான். பின்னாலே தேவரும் முனிவரும் வருகிறார்கள். பக்கத்திலே கணபதி ராயனும் “செவ்வேள் குறவனும்" வருகிறார்கள். யானைகளின் முதுகில் வைத்து அடிக்கிற முரசொலி காதைப் பிளக்கிறது, உடுக்கைகள் வேறு கொட்டுகிறார்கள். இச் சப்தத்தைச் சகிக்காமல் யானைகள் துதிக்கைகளால் தங்கள் படர்ந்த செவிகளைப் பொத்தப் பார்க்கின்றனவாம். அடியார்கள் திருப்பல்லாண்டும், தேவார திருவாசகங்களும் பாடுகிறார்கள். எல்லாமாய்ச் சேர்ந்து ஒரே ஆரவாரமா யிருக்கிறதாம்.

இடியின் முழக்கொடு படரு முகிலென

யானை மேற்கன பேரி முழக்கமும்

துடியின் முழக்கமும் பார்து திசைக்கரி

துதிக்கையாற் செவிபுதைக்கவே

அடியர் முழக்கிய திருப்பலாண்டிசை

யடைத்த செவிகளுந் திறக்கவே

வடிசெய் தமிழ்த்திரு முறைகளொரு புறம்

மறைக ளொருபுறம் முழங்கவே.

 

இவ்வாறு ''சேனைப் பெருக்கமும் தானைப் பெருக்கமும்" பின்வரப் பவனி வருகிற ஈசனைக் காண்பதற்குப் பெண்கள் சமையற்கட்டை விட்டு ஓடோடியும் வருகிறார்கள் முன் வாசலுக்கு. கை வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு வருகிறார்கள். ஓடி வரும்பொழுது கால்களிலுள்ள சிலம்புகள் அவர்கள் வருகையைத் தெரிவிக்கும்! முரசைப்போல் ஒலிக்கின்றனவாம். மானினம்போல் மருண்டு வருகிறார்கள், கையிலே மானைப் பிடித்தவனாகிய ஈசனைப் பார்க்க என்று நயமொழுகக் கூறுகிறார் கவி.

"ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்

ஒருகோடி மான்கள் போல் வருகோடி மடவார்.''

 

பிரம்மாண்டமான ஊர்வலத்தின் மத்தியில் ரிடப வாகனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஈசனைக் கண்டு உள்ளத்தைத் திறை கொடுக்கிறார்கள். “மார்பில் பூணூல் அணிந்திருக்கிறானே, இவன் பிரமதேவன் தானோ?" என்று கேட்கிறாள் புத்தி மயங்கிய ஒருத்தி. மற்றொருத்தி நகைக்கிறாள், "அட, அசடே, பிரமன் என்றால், கையிலும் கழுத்திலும் பாம்பு சுற்றிக் கிடப்பானேன்” என்கிறாள். இன்னும் சில பெண்கள்,

“விரிகருணை மாலென்பார் மாலாகில் விழிபின்மேல்

விழியுண்டோ முடியின் மேல் முடியுண்டோ வென்பார்.''

 

(விழிமேல் விழி-நெற்றிக்கண். முடிமேன் முடி-சடாமகுடம்.)

பிறகு 'நெற்றிக்கண்ணும் சடாமகுடமும் உடைய இவன், பிரமணும் பரந்தாமனும் சூழ வருதலால், திரிகூடாசல நாதனே" என்று தெளிந்து விடுகிறார்களாம்.

பவனியைக் காணவரும் அவசரத்தில், பெண்கள் நிலைமறந்து போகிறார்கள். ஒரு கையில் வளையலைப் போட்டுக் கொண்டிருந்த பெண்ணொருத்தி இன்னொரு கையி லணிவதற்கு மறந்து ஓடி வருகிறாளாம். மற்றவர்கள் பார்த்து நகைக்கும் பொழுதுதான் அவளுக்கு தன் தவறு தெரிகிறது; வெட்கம் மேலிட்டுத் தலை கவிழ்கிறாள்.

“ஒரு கைவளை பூண்டபெண்கள் ஒரு கைவளை பூணமறக்

தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்."

 

ஆடை, அலங்கோலமாக ஓடி வருகிறார்களாம் சில பெண்கள். இன்னு மொருத்தி ஒரு கண்க்கு மை தீட்டிவிட்டு, இன்னொரு கண்ணுக்குத் தீட்ட, விரல் நுனியில் மையை எடுக்கிறான். அதற்குள் பவனியின் பேரிகை முழக்கம் கேட்டு விடுகிறது. உடனே,

"கருதுமனம் புறம்போக வொரு கண்ணுக்கு மையெடுத்த

கையுமாய் (ஒ)ருகண் (இ)ட்டமையுமாய்."

 

வருகிறாளாம். எத்தகைய ஆச்சரியமான, மயிர் சிலிர்க்கும்படியான காட்சிகள்!

ஈசனது அழகைப் பருகும் பெண்கள் கண் கொட்டாமல் அப்படியே விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறார்கள். அவர்களைப்போல் ஊர்வலமும் நகராமல் நிற்கவா செய்யும்? “இந்தத் தெருவைவிட்டு இவ்வளவு சீக்கிரம் மறைந்து போய் விட்டானே" என்று ஆற்றாமைப் படுகிறார்கள். “இன்னும் கொஞ்சநேரம் நின்று, மன்மதனை வெல்லானோ" என்று ஏங்குகிறார்கள்.

"நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்

நில்லானோ மதனை யின்னம் வெல்லானோ வென்பார்,''

 

இந்தச் சமயத்தில் தென்றல் வீசுகிறது. பெண்களது விரகத்தி தென்றல் உதவியால் கொழுந்து விடுகிறதாம். 'இந்தக் கொடுந் தென்றலை யடக்குவாரில்லையா'' என்று கேட்கும் பெண்களது கண்ணில் ஈசனது தோள்களை ஆர்வத்தோடு தழுவும் பாம்புகள் விழுந்து விடுகின்றன. "அந்தப் பாம்புக்ளுக்குத்தான் பசி யென்பது கிடையாதா? இந்தத் தென்றலைக் குடிப்பதற்கென்ன?" என்று கோபமாய்க் கேட்கிறார்கள். காற்று பாம்புக்கு உணவல்லவா?

"பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்

பசியாதோ தென் றலைத்தான் புசியாதோ."                என்பார்.

 

விரக தாபத்தால் மெலிந்து விடுகிறார்கள் பெண்கள். கருமேகம் போன்ற கூந்தல் அவிழ்ந்து விடுகிறது. கையில் வளையல்கள் கழன்று விடுகின்றன. ''இப்படிக் குழலையும் வளையையும் அபகரித்துக் கொண்டானே இவன்! சடாமகுடம் வேறு தரித்துக் கொண்டிருக்கிறான் இந்த லட்சனதில், என்ன அநியாயம்!" என்று ஏக்கத்தோடு கூடிய எக்களிப்பிலே மூக்கின்மேல் விரலை வைக்கிறார்களாம்,

இந்தக் காட்சிகளையும் வர்ணனைகளையும் படிக்கும்போது உள்ளங் கனிகிற தல்லவா? இந்த அழகான சம்பாஷணைகளிலே தான் எவ்வளவு நயம்! விஷயங்களெல்லாம் என்ன அற்புதமான எளிய தமிழிலே சித்திரிக்கப்படுகின்றன! பெண்கள் பேசும் பேச்சும் பேரரவமும் நிறைந்த இந்த அழகிய பவனிக்காட்சி நம் மனக்கண் முன் என்றும் நிற்கின்றன அல்லவா?

ஆனந்த போதினி – 1942 ௵ - டிசம்பர் ௴

 



No comments:

Post a Comment