Monday, August 31, 2020

 சக்தி வணக்கத்தின் சிறப்பு

 

தெய்வத்தை வழிபடும் முறைகள் பலவாகக் கிடப்பினும், அவை எல்லாவற்றுள்ளும் மிகச் சிறந்ததாய் ஆன்றோரான் வியந்தோதப் பெற்றது அம்மை வணக்கம். என்னெனில் ஒருவர்க்குத் தன் தாயிடம் உண்டாகும் அத்துணை உயர்ந்த தூய அன்பு வேறொருவரிடத்து உண்டாவதரிது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் வாயினின்றும் அது அறியாமல் கிளம்பும் சொல் 'அம்மா' என்பது தான். அச்சிறு குழவிக்கு முதல் முதல் அன்பு தோன்று வது அதன் அம்மையிடத்தே தான். தந்தை பாற் கொள்ளும் உறவு அதற்குப் பிற்பட்டதே. தந்தையிடம் கொண்டுள்ள வணக்கம், பணிவு, அச்சம் முதலிய குணங்களால் முழு அன்பின் வலிமை சிறிது மறைப்படவுங்கூடும். ஆனால் தாயிடமோ அவ்வாறாய தடைகள் ஒன்றும் அன்பிற்கு நேருவதில்லை. தனது குற்றங்களையும் கூடத் தன் தாயிடம் சிறுவன் ஒளிக்க முயலுவதில்லை. பொதுவாகத் தாயிடத்து ஒருவருக்குத் தோன்றும் அன்பின் முழுவேகமும் வேறிடத்துத் தோன்றுதல் அரிது.

 

மக்களன்பு இவ்வாறாகத் தாயினுடைய போன்போ இதனினும் உயர்ந்ததாய் அளவற்றதாய்த் திகழ்கின்றது. நமக்கு எத்துணை நெருங்கியவராயிருப்பினும், நமக்கு வாழ்க்கைத் துணை தான் என்று கூறி கொள்ளும் மனைவியே யாயினும், அவர்களிடத்து ஒப்புயர்வற்ற தாயின் தலைமைத் தனி அன்பைக் காணுதல் இயலுமோ, ஏழேழு கோடிப் பிறவிகளெடுத்து அவ்வெல்லாப் பிறவிகளையும் அவள் பணி செய்வதிலேயே கழிப்பினும், அவள் ஒரு நாள் வலிமையற்று நாம் குழவிப் பருவத்திருக்குங் காலையில் நமக்குப் பேரன்போடு செய்த உதவிக்கு ஈடு நிற்குமா? அருளும் அன்பும் இரண்டும் சேர்த்து உருக்கி வார்க்கப்பட்ட வீட்டுத் தெய்வமன்றோ அவள்? எல்லாம் துறந்த துறவியாரான பட்டினத்தடிகளையும் சிறிது நேரம் துறவு மார்க்கத்தினின்றும் அவர் நினைவை ஈர்த்துக் கொண்டது அவர் தம் தாயின் தலையன் பென்றால் அதன் தன்மையை யாம் என்னென்று கூறுவது? மக்களன் பேனும் வளர்ச்சி முகத்தான் மாறுபாடுற்றுப் பிறழ்ந்து போகலாம். ஆனால் நம்மைப் பெற்று வளர்த்த அருட்பெருந் தெய்வத் திருமகளின் அன்பு எவ்வாற்றானும் மாறுபாடுறாத அருள் ஊற்றன்றோ? இந்நில உலகத்து இறக்கும் வரை ஒரேபடித்தாய் நிலை பேறுற்ற பேரன் பொன்றுளதாயின், அது தாயின் அன்பன்றி வேறில்லை.

 

அழியாத பேரன்பே கடவுளாகலானும், அதை அன்பன்றி வேறு எதனாலும் அடைய முடியாதாகையானும் அன்பிற்குப் பேரிலக்கணமாய் நிற்கும் 'அம்மை' என்ற முறையில் வைத்து அதை வணங்குதலே மிக்க உயர்ந்த தெய்வ வழிபாடாய் ஆன்றோர் கொண்டனர். மற்றும் இதனுள் கவனிக்கற்பாலதொன்றுண்டு. தெய்வ வழிபாட்டிற்கு இன்றியமையாது வேண்டப்படுவது கள்ளங் கபடற்ற உள்ளம். அது சிறு குழந்தைகளிடத் தன்றி வயது வந்தவர்களிடம் காண்டல் அரிது. தாய்க்கும் பிள்ளைக்கு முள்ள தொடர்பின் தூய்மை வேறு தொடர்புகளிலில்லை. ஆகலான் அம்மை வழிபாட்டால் இரண்டு பெரும் நறுங் குணங்கள் நம்மால் நிலையுறுகின்றன. அவைதான் அன்பும் தூய்மையுமாம். இக் குணங்கள் கைவரப் பெற்றால் நமக்கு வீட்டின்பம் தானே எளிதிற் கிடைக்கும். இவற்றைச் சிறிது விளங்கக் கூறுவாம்.

 

கடவுள் அன்பு மயமானவர். சிவம் என்ற சொற்கு அன்பு என்றே பொருள்.'அன்பே சிவம்' என்றார் நம் திருமூலர். 'ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை யன்பே' என்றார் மணிவாசகரும். இவ்வன்புதான் சிவம், மால், பரை, வேலன், என்று பல்லாற்றான் பல்லோரால் வணங்கப்படுகிறது. இவ்வண்டங்களை யெல்லாம் தோற்றுவித்து காக்கும் அன்பன்னை' என இறைவனை வணங்குதலே பெருநெறி. கடவுளை ஆண் முறையில் வைத்து வழுத்தும் பெரியாரும் இந்நெறியினின்றும் நீங்கினாரில்லை. சிவ பரம்பொருளை நோக்கி என் புருக்கி 'மணிவாசகர்.

 

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுதே'

 

 

என முதற் கண் அம்மையே என்று விளிக்கின்றார். சிவனுடைய கூடல் விளையாடல் அறுபத்து நான்கினையும் கூறப்புகுந்த பரஞ்சோதி மாமுனிவர்

 

 

'சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பா முத்தியான

முதலைத் துதி செய்”

 

என்று காப்புக் கூறுகின்றார். தாயின் அன்பின் மூலந்தான் குழந்தைகள் அப்பனது அருளைத் தேடுகின்றன. தாயருள் பெற்ற பின் தந்தையின் கூட்டுறவு கிடைக்க வேண்டும்; இஃதே பட்டினத்தார் ஞான வழியால் 'தாயுடன் சென்று தாதையைக் கூடி' என்று விளக்குவது. பிற்காலத்துப் புலவர்களும் இந் நெறியினையே கையாண்டனர். இரண்டொரு சான்றுகள் காட்டுதும். ஐந்தக்கரப்படியில் ஐம்பொற் காசு பெற்ற அருட் புலவராகிய படிக்காசுத் தம்பிரான், எம்பெருமான் அருள் பெற வேண்டி எம்பெருமாட்டி விடம் 'தாயே! அரியணை மீது நின் கேள்வன் நின்னோடு கொஞ்சிக் குலாவி மகிழுங்காலத்து என் குறைகளை யெல்லாம் மெள்ளச் சொன்னால் உன் வாய் முத்தம் உதிர்ந்திடுமோ' எனப் பொருள் கொண்ட


 ஆய் முத்துப் பந்தரின் மெல்லணை மீதுன் னருகிருந்து
 நீ முத்தம் தாவென் றவர் கொஞ்சும் வேளையில் நித்தநித்தம்
 வேய்முத்த ரோடென் குறைகளெல் லாமெல்ல மெல்லச் சொன்னால்
 வாய் முத்தம் சிந்தி விடுமோநெல் வேலி வடிவம்மையே'

 

என்று குறையிரக்கின்றார். இது போன்றே சிவப்பிரகாசப் பெருந்தகையாரும் தாம் எழுதிய பெரியநாயகி யம்மை விருத்தத்துள் என் மனக் காட்டகத்துள் விளங்கும் காமத் தீக்கும், கடுஞ்சினப் புலிக்கும், களிப்பு யானைக்கும் அம்மையே! நீ யஞ்சினையேல் நெருப்பில் நடமிட்டு யானை புலி முதலியவற்றின் தோலுடுத்த நின் கேள்வனையும் உடன் கூட்டி வருவாயாக' என்று பொருள் படும்,

 

காமமென் கின்ற கதுவு வெந்தீயும் கடுஞ்சின மெனப்படு புலியும்
களிப்பெனுஞ் சிறுகட் புகர்முகப் புழைக்கைக் கறையடிக் களிநல்யானையுமே
தாமிகு மெனது மனமெனும் வனத்தில் தனிவரல் வெருவினை யாயின்
தழலினின் றாடி கரிபுலியுரி போர்த் தடுத்த ஆண் துணையொடும் வருவாய்.

 

என்று கூறிப்போந்தார். இது குறித்தன்றோ விவேகானந்த ஸ்வாமிகளின் தவப் புதல்வியாராகிய நிவேதிதா தேவியார் " உலகத்திற் குறுதிபயக்கும் பேறுறவான கொள்கை யாதெனில் அம்மை யுணர்ச்சியே. அவள் போன்று நாமும் அன்பு வேண்டுவார்க்கு அன்பு கொடுப்போம். 'அம்மா' என்ற சொல்தான் உலகக் கடலுள் துயருறும் இந்திய உயிர்கள் வந்து அடையும் துறைமுகம். துன்பமுண்டாங் காலை அவர்கள் கூவுவது 'ஆ! கடவுளே!' என்றல்ல. ஆனால் ஆ! அம்மா!' என்பதுதான்'' என்று நன்கெடுத்து விளக்கியுள்ளார். நம் நாட்டுப் பழம் பெரு மக்கள் பலரும் இக்காலத்தில் பகவான்ஸ்ரீ இராமகிருஷ்ணர், அரவிந்த கோசர், பாவலர் பெருமான் பாரதி, வங்கதேசத்து ராமப்பிரசாதர் முதலியோர்களின் நூல்களைப் படித்தோர்க்கு இவ்வுண்மை நன்கு விளங்காமற் போகாது. எவ்வுருவில் ஈசனைப் பணிவாராயினும் எவ்வுருவில் ஈசன் அவர்கட்கு அருள் செய்வானாயினும் அவ்வுருவமெல்லாம் அம்மை உருவமென்றே கொள்ளல் வேண்டும். ஈசற்கு பருவுரு எவற்றுள்ளும் திகழும் அருளுரு தாயின் தலையன்பே யாமென்க. அன்பு மிக மிக நுண்ணிய தாய்' சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து தேய்ந்தொன்றாய்' பானுடன் கூடுங்காலத்து அவனது வெளியுருமாறி உள்ளுருவாம் அம்மையின் வெகு நுண்மையாகிய அன்புருவே எங்கும் விளங்குமாதலால் அம்மையே உண்மையில் உள்ளாள் என்பது வெள்ளிடை மலை. இதுபற்றி யன்றோ திருவாதவூரர் அன்புடையாற்கு இறைவன் தாயாகத்தான் விளங்குகின்றார் என்பதை,


'சாயாஅன் பினைநாடொறும் தழைப்பவர்
தாயே யாகி வளர்ந் தனை போற்றி'


என்று விதந்தோதுகின்றார். அன்பை அன்பாற்றான் பெறமுடியும். அன்புறை விடமும் அன்பு பெறுமிடமும் அம்மையே. ஆகவே அம்மை வணக்கம் எவ்வணக்கத்தினும் உயர்ந்தது என்பது பெற்றாம். அவ்வணக்கத் தைப்பற்றி இனிப் பேசுவாம்,

 

            'ஆதிப் பழம் பொருளின் ஊக்கம் - அதை

அன்னையெனப் பணிதல் ஆக்கம்

சூதில்லை காணுமிந்த நாட்டீர் - பல

தொல்லை மதங்கள் செய்யுந் தூக்கம்.’ - பாரதி

 

ஆனந்த போதினி – 1929 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment