Monday, August 31, 2020

 

கிளி விடு தூது

(ஆரியூர் - வ. பதுமநாப் பிள்ளை.)

மேற்றின்சையிலே, செஞ்சுடர்க் கதிரோன் தனது பொன்னிறக்கிரணங்களை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தான். செக்கச்சவேலென்று சிவந்த அந்தி வானத்தின் அடியிலே, செந்தீப் பந்தைப் போல் ஜொலிக்கும் அக் கதிரவன், ஒப்புயர்வற்ற அற்புதப் பேரழகுடன் விளங்கினான். பலவித உருவங்கொண்ட முகில்கள், பரந்த வான வீதியிலே லவகைப்பட்ட இந்திர ஜாலங்கள் செய்து திரிந்து கொண்டிருந்தன. கண்களுக்கும் கருத்துக்கும் ஒருங்கே பெருங்களிப்பூட்டும் அழகிய பூஞ்சோலை ஒன்றிலே -வெள்ளை வெளேலென்று விளங்கிய சலவைக்கல் மேடை யொன்றின் மேலே, சுமார் பதினெட்டு வயது மதிப்புடைய அழகிற் சிறந்த இளமங்கை ஒருத்தி அமர்ந்து கொண்டிருந்தாள். அந்தி வானத்தில் தோன்றிய பலவகைப்பட்ட ந்திரஜாலக் காட்சிகளிலேனும் - மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்த மனோகரமான மலர்களிலேனும் அவளச சிந்தை செல்லவில்லை. எதிரிலிருந்த புன்னை மரத்தின் கிளை ஒன்றிலே, ஜோடியாகக் கூடி அமர்ந்து கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்த அன்றிற் பறவைகளின் மேல் அம் மங்கையின் நாட்டம் சென்றது. அவற்றின் உல்லாள ஸல்லாபத்தைக் கண்ட அம் மங்கையின் உள்ளம், தன்னைத் தனியே யிருந்து தவிக்க விட்டுச் சென்ற தனது காதலனை எண்ணி எண்ணி அனலில் பட்ட வெண்ணெயைப் போல் உருகிக் கொண்டிருந்தது; அவளது கருவிழிகளினின்றும் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி வந்து தாரையாகப் பெருகி வந்து கொண்டிருந்தது. அவ்வன்றிற் பறவைகள் அமர்ந்து கொண்டிருந்த கிளைக்கு கிளைக்கு மேலுள்ளதொரு கிளையில் தனியே அமர்ந்து கொண்டிருந்த பச்சை மேனிப் பவளவாய் மோகனப் பசுங்கிளி ஒன்று, கிளையை விட்டெழுந்து பறந்து வந்து தன் மடியின் மேல் அமர்ந்த பசுங் கிளியை ஆராத போன்புடன்' முத்தமிட்டு மகிழ்ந்த அந்த சுந்தரி, அதைத் தனது செங்கையில் ஏந்தி, அதை நோக்கிப் பின் வருமாறு கூறலானாள்: -

“என் கண்ணே! என் செல்வமே! மரகதம் போன்ற பச்சை மேனியும் பவளத்தை யொத்த சிவந்த மூக்கும் கொண்டு, கண்டாரைக் காதற் கடலில் ஆழ்த்திவிடும் மன மோகினியே! மாரவேளைத் தாங்கி மாநிலத்தில் பவனி வரும் சிங்காரியே! என்ன உன் அன்பு என்ன உன் கருணை!! இன்னுயிர்க் காதலனைப் பிரிந்து தன்னந் தனியே யிருந்து பன்னருந் துயருழந்து பரிதவிக்கும் எளியேனிடம் பரிவு மிகுந்து வந்த பச்சிளங் கிளியே! புன்னை மலர்களைக் கொத்தித் தின்று கொண் டிருந்த நீ, முன்னை வினைப் பயனால் நெஞ்சு குமிறிக் கொண்டிருக்கும் - என்னைக் கவனித்தது எவ்வாறு? நீயும் என்னைப் போல் உனது காதலனைப் பிரிந்து சிந்தை நைந்து கொண்டிருக்கிறாயா என்ன? என் வாயினின்றும் எம் மொழியும் வெளிப்படா திருந்ததும் எனது அகத்துயரை எனது முகக் குறிப்பினாலேயே உணர்ந்து கொண்டு என்னைத் தேற்ற எண்ணிவர் தாயா என்ன? - இச் சோலையிலே, பலவகைப் பறவைகளும் எத்தகைய கவலையுமின்றி உற்சாகமாகக் கூடியும் பாடியும் கொஞ்சிக் குவியும் பறந்து திரிந்து கொண்டு மிருக்க, நீ மட்டும் என்னை நாடி வருவானேன்? நீயும் என்னைப்போல் உனது காதலனைப் பிரிந்து கொடிய
துன்பத்தை அனுபவிக்கிறாயா என்ன? அதனாலேயே, நான் அழையாமலிருந்தும், என்னைத் தேற்ற எண்ணி நீயாகவே என்னிடம் வந்து சேர்ந்தாய் போலும்! காதலனின் பிரிவால் நேரும் கொடிய துன்பத்தை நீ நன்கு உணர்வாய் போலும்! என் குறையை உணர்ந்து- எனது இன்னுயிர்க், காதலராகிய முருகப் பெருமானிடம் தூது சென்று எனது முறையீட்டைச் சொல்ல வல்லவர், உன்னையன்றி வேறு எவர்?

என் செல்வமே! முதன் முதலில், முருகப் பெருமான் தனது கைம்மாறற்ற தனிப்பெருங் கருணைப் பெருக்கினால் எனக்குக் காட்சியளித்தருளத் திருவுள்ளம் கொண்டருளிய போது, முதன் முதலில் எனது உள்ளத்லை கொள்ளை கொண்டு விட்டது எது தெரியுமா? அப் பெருமானது செங்கை யில் விளங்கிய தங்கவேல் - பளபள வென்று ஒளி வீசும் மணி வேல்- நல்லோரை அல்லற்படுத்திய வல்லாக்கரை வதைத்த வீர வேல் - போர் முனைபில் பகைவர்களை நடுங்கச் செய்து மெய்யன்பர்களை மகிழ்வித்து வாகை மாலை சூடிய வெற்றி வேல்- ஐபுல வேடர்களின் செருக்கையடக்கி நல்வழிவில் திருத்தி நடத்தக் கூடிய சாத்தி வேல் - உயிரை மயக்கி அடிமைப்படுத்திக் கொண்டுவிட முயலும் ஆணவ முனைப்பை அழித்து, உயிர்க்கு உறுதி பயக்கக்கூடிய உண்மைப் பொருளை உணர்த்தி, மெய்யறிவு ஒளி வீசச் செய்விக்கக் கூடிய சீரிய ஞான வேல் - அடியாரைக் காத்தருளும் வடிவேல் - கருணையின் வடிவான அன்னை பராசக்தி அகம் மிக மகிழ்ந்து அளித்தருளிய திருவேலே , முதன் முதலில் எனது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து, எனது ஆணவ முனைப்புகள் அனைத்தையும் அழித்து, என்னைத் தனக்கே படுத்திக் கொண்டு சென்று விட்டது. அச் சீரிய வீர வேல், களையும் மூடிக்கொண்டு விட்டால், இப்பொழுதும் எனது மனக்கண் முன்பு காட்சியளித்து நிற்கிறது. ஆனால், அகக் கண்ணால் கண்டு களித்த வேலை புறக் கண்களாலும் கண்டு களிக்கப் பேரார்வங் கொண்டு மூடிக் கொண்டிருந்த கண்களைத் திறந்து விட்டாலோ, அத் தூய வேல் மாயமாக மறைந்து போய் விடுகிறது. அச் சீரிய வேலை எனது கண்கள் இரண்டும் கண்டு குளிர்ந்து களிக்கும்படி, எனது ஆருயிர்த் தலைவராகிய வடிவேல் முருகரை இங்கு வந்து - என் உடலும் உயிரும் ஒருங்கே பரவச மடைய என்னுடன் கலந்து - கருத்தொருமித்த காதலின் பத்தில் மகிழ்ந்து--என்னுடன் கொஞ்சிக் குலவத் திருவுள்ளம் இரங்குமாறு, நீ சொல்ல வல்லாயோ?

பலவகை வளங்களும் நிறைந்து நிலவுலகக் கயிலையாக விளங்கும் தில்லை வம்பதியிலே - தேவர்களும் முனிவர்கள் நம் போற்றித் துதிக்கும் தெய்வ மணம் கமழும் திருச்சிற்றம்பலத்திலே, விரிந்து வளைந்த செஞ்சடை ஆட குளிர்ந்து சிறந்த கங்கை ஆட வளைந்து மெலிந்த இளம்பிறை ஆட- திருக்கரங்களில் திகழும் மானும் மழுவும் ஆட- ஒரு பதத்தை நிலத்தில் ஊன்றி கின்று மற்றொரு பதத்தைத் தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் அம்பலவாணரை அன்பர்கள் பலரும் வாயார வாழ்த்தி மனமாரப் போற்றி மகிழ்ந்து நிற்கிறார்க ளல்லவா?

அந்த நடன சிகாமணியின் ஆனந்தத் தாண்டவத்திலே மனத்தைச் செலுத்திய வண்ணம், அவரது செல்வத் திருமகனாகிய முருகப் பெருமான் அவரருகில் நின்று கொண்டிருப்பார். அம் முருகப் பெருமானும் அவரது தந்தையாகிய சபாநாயகரும் அருளே உருவானவர்களாதலின், நீ எத்தகைய மச்சமுமின்றி அங்கு தாராளமாகச் செல்லலாம். உன்னைத் தூதியாக அனுப்பிவைத்தவள் நானென்பதை நீ அவருக்குக் கூறியவுடனே, அவர் அம்பலவாணரது ஆனந்தத் தாண்டவத்தில் ஈடுபட்டிருந்த தனது நெஞ்சைத் தன் வசப்படுத்திக் கொண்டு உன்னைத் தனியிடத்திற்குக் கூட்டிச் செல்வார். அப்பொழுது, இரவும் பகலும் அவர் ஒருவரையே நினைந்து நினைந்து நெஞ்சு கரைந்து எங்கிப் புலம்பிய வண்ணம் இவ்விடத்தில் நான் எத்தகைய கொடுந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறே னென்பதை, ருக்கு விரிவாக விளக்கிக் கூறு அவரது வீர வேலைக் கண்டு களிக்க எனது கண்களும்-- அவரது காதல் மொழிகளைக் கேட்டு மகிழ எனது செவிகளும் - அவரது திருமார்பில் புரளும் கடம்ப மலர் மாலையின் நறு மணத்தை முகர்ந்து இன்புற எனது நாசியும் - அவரது செங்கனிவா யமிர்தத்தைப் பருகி மகிழ எனது வாயும்-அவரது திருமேனியின் ஆலிங்கனத்தைப் பெற்று ஆனந்திக்க எனது உடலும் எவ்வளவு பேரார்வங் கொண்டு ஏங்கி நிற்கின்றன அவருக்கு விரிவாக எடுத்துச் சொல்லக் கடவாய். கண்கள் இரண்டும் களிக்க இங்கு வந்து சேர்ந்து- எனது உடலும் உயிரும் ஒருங்கே பரவச மடையும்படி என்னுடன் கலந்து - கருத்தொருமித்த காதலின்பத்தை அனுபவிக்குமாறு, உனது தேனினும் தீஞ்சுவை வாய்ந்த மணிமொழிகளால் அப் பெருமானைத் தூண்டக் கடவாய்.

ஒருநாள், மேற்றிசையில் விரைந்து இறங்கிக் கொண்டிருந்த செஞ்சுடர்திரவன், நாற்றிசைகளிலும் தனது பொன்னிறக் கிரணங்களைப் பரப்பி எல்லாப் பொருள்களின் மேலும் பொன் முலாம் பூச முயன்று கொண்டிருந்தான். நீல வானத்தில் திரிந்து கொண்டிருந்த முகில்கள், பலவகைப்பட்ட இந்திர ஜால வித் தைகளைச் செய்து கொண்டிருந்தன. பகல் முழுவதும் பசும் புலங்களில் வயிறார மேய்ந்து போனவாறு திரிந்த கொண்டிருந்த பசுக்களெல்லாம், தங்களது கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் கண் கண வென்று ஒலிக்க ஊரை நோக்கித் திரும்பிச் சென்றுகொண் டிருந்தன.
தெளிந்து குளிர்ந்த நிறைந் திருந்த தொரு குளத்திலே மலர்ந்திருந்த செவ்வல்லி மலர்கள், பகற் பொழு முழுதும் தனது ஒளி பொருந்திய பொற்கிரணக் கைகளால் தங்களைத் தழுவி நின்று மகிழ்வித்த கதிரவனாகிய காதலன் மேற்றிசையில் மறையத் தொடங்கிய தன் பயனாக, விரித்திருந்த இதழ்களைக் குவித்து மூடிக்கொண்டு விட்டன. கதிரவனாகிய தமது காதலனின் பிரிவாற்றாமல் நகையிழந்து ஒளி இழந்து உருவைச் சுருக்கி ஒடுங்கிகின்ற செவ்வல்லி மலர்களைக் கண்டு பரிகசித்துச் சிரிப்பனவே போல், அந்த குளக்கரையில் வளர்ந்திருந்த முல்லைச் செடியில் நிறைந்திருந்த முல்லை மலர் வென்பதை,
எனது மனம் நீர்கள், தமது காதலனாகிய மோகன சர் திரனிடம் கொண்ட மோகச் செருக்கினாலே சின்னஞ் சிறு மெல்லிய இதழ்களை விரித்துச் சிரித்து நின்றன. தனது சகோதரிகளாகிய செவ்வல்லி மலர்களின் துயரத்தைக் கண்டு அனுதாபப்படுவதற்குப் பதிலாக, பரிகசித்துச் சிரிக்கவும் துணிந்து விட்ட முல்லை மலர்களின் மேல் எனக்கு அடக்க முடியாத கொடுஞ்சினம் தோன்றியது. அவ் வெஞ்சினத் தீயின் கொதிப்பினால் பொறுமையை இழந்த நான் அம்மலர்களை எட்டி உதைக்க முயன்றேன்; அவ் வேளையிலே எனது கால்சுளுக்கிக் கொண்டு விடவே, 'அம்மாடீ' யென்று காலைப் பிடித்துக் கொண்டு பசும்புல் தரையில் உட்கார்ந்து கொண்டு விட்டேன். அப்பொழுது, என்
னருகிலிருந்த எனது இன்னுயிர்க் காதலராகிய முருகப் பெருமான் கலகலவென்று சிரித்து, என்னை நோக்கி என்ன சொன்னார் தெரியுமா?

"அடி, பேதாய்! இந்த எளிய முல்லை மலர்களின் மேல் உனக்கேன் அவ்வளவு கோபம்? மேற்றிசையில் மறையும் தமது காதலனாகிய செங்கதிரோனைக் கண்டு அச் செவ்வல்லி மலர்கள் துயாப் படுவதாகக் கொள்வானேன்? எது எவ்வாறாயினும், நாளை காலையிலேயே மீண்டும் அவற்றிற்குக் கதிரவன் காட்சியளிப்பது உறுதியேயன்றோ? தமது காதலனைப் பிரிந்து ஓரிரவு கூட தரித்திருக்கக் கூடிய மனவுறுதி அவற்றிற் கில்லாமற் போய்விட்டதா என்ன? தவிர்க்க முடியாத கடமையினாலே காதலன் வெளியில் செல்ல வேண்டி யிருந்தால், அவன் மீண்டு வந்து சேருமளவும் அவனது வடிவை நெஞ்சுக்குள் கண்டு களித்துக்கொண்டு பிரிவின் துயரை மறந்திருக்கக் கூடிய சக்தியில்லாத காதலியின் காதலை, உண்மையான - உறுதியான-கலங்காத காதல் என்று எப்படி நம்பமுடியும்?" - என வினவினார் அவர்.

அவரது மொழிகளைக் கேட்டு பெரிதும் வெகுண்ட நான், அவரோடு பிணங்கிக் கொண்டு அப்பால் வந்து தலை குனிந்து நிலத்தை நோக்கிய வண்ணம் கண்ணீர் சொரிந்து நின்றேன். அதைக் கண்டு பெரிதும் மனம் பதைத்த அவர், எனது கோபத்திற்குக் காரணமென்ன வென்று என்னை வினவினார்.

“காதலரின் பிரிவினால் விளையும் கடுந்துயரம் எத்தகைய தென்பதை கற்பிற் சிறந்த மாதர்கள் அறிவார்களே யன்றி, உங்களால் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? அணைத்த கை நெகிழ்த்தவளவில்-அதைக் கூட முடியாத வாறு உள்ளத்தில் பொங்கித் ததும்பும் உத்தம பத்தினிகள் உரிய காதலைச் சந்தேகிக்க, உங்கள் மனம் எப்படித்தான் துணிந்ததோ? இப்பொழுது எவ்வளவோ பேரன்புடையவரைப் போல் நடந்து கொள்ளும் தாங்கள், என்னை விட்டுப் பிரிந்து சென்று பல தினங்கள் மீண்டு வராமலே நின்று விட்டால், அப் பிரிவினால் விளையக் கூடிய பெருந்துயரை எனது எளிய மனம் எவ்வாறு சகித்துக் கொள்ளக் கூடும்? இப்பொழுது உங்களுடன் கூடிக் கலந்து குலவிக் கொண்டிருந்து விட்டு பின்னால் இந்த சம்பவத்தை எண்ணி எண்ணி எங்கிக் கொண்டிருப்பதை விட, தங்களது மாயமோக மொழிகளில் மதி மயங்காமலே தப்பித்துக் கொண்டு விடுவது நலமன்றோ?" - என்றேன் நான்.

அதைக் கேட்ட அவர், தமது இடத்திருக்கரத்தை, எனது எனது தோளின் மேல் வைத்து, தமது வலத் திருக்கரத்தால் எனது வலது கையை மெதுவாகப் பற்றிக் கொண்டு, கெஞ்சிக் கொஞ்சும் குரலில் பின்வருமாறு கூறினார்: –

என் கண்மணியே! எனது இன்னுயிர்க் காதலியே! உன்னிடம் நான் கொண்டுள்ள சீரிய மெய்க்காதல் எத்தகைய தென்பதை, இன்னும் நீ உணர்ந்து கொள்ள வில்லையே! உனது மன உறுதியைச் சோதிக்கக் கருதி சிற்சில மொழிகளைக் கூறினால், அதன் பொருட்டு நீ என்னுடன் இத்தகைய ஊடல் கொண்டு விடலாமா? எப்பொழுதும் என் மனத்தில் குடிகொண்டிருப்பவள், நீ ஒருத்தியேயல்லவா? உன்னிடம் நான் கொண்ட காதல், என்றேனும் என்னால் மறந்து விட முடியுமோ? இன்னும் என்னிடத்தில் உனக்கு என்ன சந்தேகம்? எனது இன்னுயிர்க்கு இன்பூட்டக் கூடியவள், நீ ஒருத்தியேயன்றோ? சிற்சில சமயங்களில், நான் உன்னருகில் இல்லாவிடினும், என் மனம் உன்னொருத்தியையே நாடி நிற்கு மென்பது உறுதி. கருத்தொருமித்த காதலர்களுக்குப் பெருமகிழ்வூட்டும் இந்த அந்தி வேளையிலே உல்லாஸமாக ஸல்லாபித்திருந்து மகிழ்வதை விட்டு, நீ என்னுடன் பிணங்கி நிற்பது முறையோ? உனது நெஞ்சிற் கொண்ட சந்தேகங்கள் அனைத்தையும்
அகற்றி, அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்து, உனது செங்கனிவாயினால் ஒருமுத்தம் தாராயோ? உன ஸல்லாப மொழிகளைக் கேட்டு ஆனந்திக்கத் துடி துடித்துக் கொண்டிருக்கும் எனது இன்னுயிரின் பேராவலைத் தீராயோ?"

- அவ்வாறு கூறிய ஆறுமுகப் பெருமான், என்னைத் தழுவியணைத்து, எனது செவ்விதழ்களிலும் கன்னங்களிலும் மாறி மாறிப் பன்முறை மூத்தமிட்டு மகிழ்ந்தார். அப்பொழுது, எனது ஆன்மா அனுபவித்த ஆனந்தம் எத்தகைய தென்பதை எவ்வாறு கூறுவேன்? அச் சம்பவம் முழுவதையும் அன்று அவர் கூறிய காதல் மொழிகள் அனைத்தையும் - அடியோடு மறந்து விட அப் பெருமான் எப்படித் தான் கற்றுக் கொண்டு விட்டா ரென்பதைக் கேள்,

மற்றொரு நாள், வெங்கதிரோன் தனது வெப்பம் மிகுந்த கிரணங்களைச் செலுத்தி உயிர்களைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருந்த கொடிய வெய்யிலிலே, எத்தகைய நீரும் நிழலும் இல்லாத தொரு பாலைவனத்திலே, அப்பெருமான் எனது கையைப் பற்றி வேகமாக அழைத்துச் சென்றார். அப்பொழுது, வெங்க கதிரோனின் வெப்பத்தைச் சகிக்க முடியாமல் தீயில் விழுந்த புழுவைப் போல் பெரிதும் துடி துடித்த நான்,
அவரை நோக்கி “உங்களுக்கு என் மேல் உண்மையன்பு இருந்தால், இந்த நெடிய பாலை வனத்திலே - இவ்வளவு கொடிய வெய்யிலிலே. என்னை அழைத்துச் செல்ல ஒருப்படுவீர்களா?'' - என்று வினவினேன். அதைக் கேட்ட அப் பெருமான் சட்டென்று நின்று, தனது வலக்கையில் பிடித்திருந்த வீர வேலை இரு கரங்களிலும் வைத்துக்கொண்டு, என்னை நோக்கி, “இதோ, இந்த வேலின் மேல் ஆணையாகக் கூறுகிறேன்;
உன்னிடம் நான் கொண்டுள்ள காதல், எனது ஹிருதய பூர்வமானதேயாகும். உனது பஞ்சினும் மெல்லிய மலரடிகள் பெரிதும் வருந்தக் கூடுமே என்னும் பரிவு கருணையற்ற கடுங்கதிரோனுக்குச் சிறிதும் இல்லாமையால், அவன தனது சக்தி முழுவதையும் அபலையாகிய உன்னிடம் காட்டுகிறான் போலும்! இத் துன்பத்தை இன்னும் சற்றே பொறுத்துக் கொள். அதோ, எனது ஆலயத்தின் கோபுரம் தெரிகிறது பார்! இன்னும் சில கணங்களில் நாம் அங்கு சென்று சேர்ந்து விடுவோம்; இனி, நீ சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. - என்று கருணை ததும்பும் சொற்களால் எனது துயரத் தீ யை விரைவில் அணைத்து விட்டார். அப்பொழுது அவர் கூறிய அந்த விந்தை மொழிகளை இப்பொழுது இப்பொழுது நினைத்துக் கொண்டு விட்டாலும், எனது மனம் பெரிதும் ஏங்கிறது ஏங்குகிறது, அவர் அன்று கூறிய மொழிகளை மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பார்த்தருளுமாறு, நான் அவரைப் பெரிதும் வேண்டிக் கேட்டுக் கொண்டதாக அவரிடம் நீ சொல்ல வல்லாயோ?)

[இக் கட்டுரை, தேசீயக் கல்வியாசர் திரு-சி. சுப்பிரமணிய பாரதி யாரவர்கள் இயற்றிய “முருகன் மீது கிளி விடுதூது” - எனும் கவிதையின் கருத்தை ஆதாரமாகக் கண்டு எழுதப்பட்டது.]

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment