Monday, August 31, 2020

 

சிலப்பதிகாரம் கற்பனையே

வித்துவான் - வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் P. O. L.,

 

ஆனந்தபோதினி ஆனிமாத இதழில், யான் வெளியிட்டிருந்த கண்டு மருண்டு, வித்துவான் S. P. கம்பீர நைனார் அவர்களும், சு. அ. இராமசாமிப்புலவர் அவர்களும் முறையே ஆனந்தபோதினி. ஆடிமாத இதழில் “சிலப்பதிகாரமும் சிலம்பும்” என்றும் ஆவணிமாத இதழில் “மருட்சியும் ஊழும்” என்றும் வெளியிட்டுள்ள இரண்டு கட்டுரைகளையும் கண்டனம். அக் கட்டுரைகள் யான் கூறியிருக்கும் செய்திகளைப் பற்றி யொன்றும் ஆராய்ந்து முடிவு கட்டாமல் தம்முடைய தலைப்புக் கேற்றவாறு கூறிச் செல்கின்றன.

 

சிலப்பதிகாரத்தே வருகின்ற பாத்திரங்கள் அனைவருடைய ஊழையும் கூறவேண்டும் என்பது என்னுடைய கட்சியன்று. கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய இவர்களுடைய ஊழ் கதைக்கு மிகவும் இன்றியமை யாதவை. ஆதலால் அவற்றைக் கூறியாகவேண்டும் என்பதே என்னுடைய கட்சி.

 

மணிமேகலையின் தோழியாக வந்த சுதமதி என்பாள் விஞ்சையன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுச் சிறிது நாள் அவனைக் கூடி இருந்து பின்னர் விடப்பட்டமைக்கே “பழைவினைப் பயத்தால் பிழைமணம் எய்தினேன்" என்று அவள் கூற்றாகப் பழையவினை யொன்று கூறப்பட்டிருக்கின்றது. சோழன் கொடுத்த பொன்னரிமாலையால் கோவலனைப் பிணித்துத் தன்வயப்படுத்தி, அவன் கொண்ட மனைவியையும் மறந்து தன்னிடத்தேயே நெடிது நாளிருக்கச் செய்து, பின்னர் யாழின்மேல் வைத்து ஊழ்வினை உறுத்ததாகலின் அவன் பிரிந்து சென்று கொண்ட மனைவியுடன் மதுரையடைந்து கொலை யுண்டான். இங்கு இவர்கள் அதாவது மாதவியையும் கோவலனையும் நெடிதுநாள் கூட்டிப் பிரித்த ஊழ் யாது? சுதமதிசிறிதுகாலம் விஞ்சையனோடு பிழை மணம் எய்தியதற்கே காரணம் பழையவினை என்று கூறிமிருக்க, மாதவி கோவலன் இருவரும் நல் மணம் பூண்டவர்கள் போன்று நெடுங்காலக் கூடியிருந்து மகப் பேற்றையும் அடைந்தார்கள். என்று கூறியிருப்பதற்கு ஊழ் கூற வேண்டிய தில்லை என்று கூறுவது பொருந்துமா? மேலும் கோவலன் கொலைக்கு முக்கிய காரணம் மாதவியே! மாதவி இல்லையானால் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிவதேது? — மதுரைக்குச் செல்வதேது? கொலையுண்ணுவது எது? ஆதலால் அவள் கோவலன் கதைக்கு மிக மிக இன்றியமையாதவள் என்பது யான் கூற வேண்டுவதில்லை. இன்றியமையாத இவளுடைய ஊழ் கூறவேண்டிய அவசியமில்லை என்பது சுவையுடை யுணவுக்கு உப்பு அத்துணை அவசியமில்லை என்பது போன்றதாகும்.

 

'மேருமந்தரம்' போன்ற நூற்களில் ஓருயிர் மற்றோருயிரைச் சிறிது உற்று நோக்கியதற்கும் ஊழ் கூறியிருக்க, ஊழ்வினை உருத்து வந் தூட்டுவதை வற்புறுத்த வந்த சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஊழ் கூற வேண்டியதில்லை என்பது பொருத்தமில்லை.

 

இனிச் சிலப்பதிகாரம் இலக்கியச் சுவையையுடையது என்பதில் எனக்குக் கருத்து வேற்றுமையில்லை. சிலப்பதிகாரம் ஐம்பெருக் காப்பியங்களுள் ஒன்று என்னும் விஷயத்தில் தான் எனக்கு அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை சர்வகலாசாலை சரித்திரப் பேராசிரியராயிருந்த டாக்டர் S. கிருஷ்ணசாமி ஐயங்கார், M.A., PH.D. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘Manimekalai in its historical settings' என்ற நூலில் மணிமேகலையைப் பெருங்காவியம் என்று கூறுதல் பொருந்தாதென்று இலக்கணச் சான்று கொண்டு நிரூபித்துள்ளார்கள். சிலப்பதிகாரத்தின் தலைவிதியும் அப்படியே; ஆதலால் யான் சிலப்பதிகாரத்தைப் பெருங் காவியமல்ல வென்றது புதிதல்ல.

 

கோவலன் கதை என வழங்கி வரும் குசிலிகடைப் புத்தகத்தில், “கண்ணகி மதுரையைக் கொளுத்திவிட்டு நேரே சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூருக்கு வந்து கோயில் கொண்டு நரபலி வாங்கி வருகின்றாள் என்று எழுதியுள்ளதே. அது உண்மையா? சில அரசகுமாரர்களை நல்வழிப்படுத்த விஷ்ணு சர்மன் என்ற வடமொழிப்புலவன் ஒருவன் கற்பித்த பஞ்ச தந்திரம் என்ற நூலில் கூறியிருக்கும் பார்ப்பாத்தியும் கீரிப்பிள்ளையும் என்ற கதையைக் கோவலன் மீது ஏற்றிக் கோவலனும் பொருள் கொடுத்துப் பார்ப்பனத்தியைக் காப்பாற்றினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றதே! அது உண்மையா? இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தே கோவலன் என்ற ஒருவன் இருந்தான். அவனுடைய ஒன்பதாவது தலைமுறையில் வந்தவன் சிலம்பு-கோவலன் என்றும், அவனே சேரன் செங்குட்டுவன் காலத்தவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. இமயவரம்பன் செங்குட்டுவனுடைய தந்தை என்று எல்லோரும் கூறுகின்றார்கள். எனவே தந்தைக்கும் தனையனுக்கும் இடையே ஒன்பது தலைமுறை வந்துள்ளது உண்மையா? அல்லது கண்ணகி தெய்வம் தன்னை வழிபட வந்த மணிமேகலையை நோக்கித்தான் சினந்து மதுரையைக் கொளுத்தியதால் உண்டான பாவத்தைப் போக்கிக்கொள்ள மகத தேசத்தே பிறந்து புத்தபகவானுடைய தருமங்களைக் கேட்டுப் போக்கிக்கொள்ளப் போவதாகக்கூறித் தான் சமணமதத்திற் பிறந்தாற் பயனில்லை என்று கூறாமற் கூறியதை உண்மைக்கதை என்பதா?

 

பெருங்காப்பியத்திற்குக் கூறி யிருக்கும் இலக்கணங்களை நன் குணர்ந்தோர் எவரும் மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் தனித்தனிப் பெருங்காப்பியம் என்று கூற மாட்டார்கள். இரண்டும் சேர்ந்து பெருங்காப்பிய மாகும். அதுபற்றியே ''மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்' என்ற தொடரும் எழுந்தது. அங்ஙனம் கூறுவதிலும் குற்றமுள்ளது. எந்தக் கதாநாயகன் அறம் பொருள் இன்பங்களையனுபவித்த தாகக் கூறுகின்றதோ அவனே வீட்டுப் பேற்றினையும் அடைதல் வேண்டும் அறம் பொருளின்பங்களை அனுபவித்த சீவகனே வீட்டையும் அடைய முயன்றான் அடைந்தான் என்றும், மேருமந்தரர்களும் அங்கனமே அறம் பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனையும் அடைந்தார்கள் என்றும் கூறியிருக்கும் நூல்களை யன்றோ பெருங்காப்பியம் என்று கூறுதல் வேண்டும்.

 

எனவே, மேற்கூறிய இரண்டு நூற்களில் கூறப் பெற்றிருப்பது போன்று பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாத இலக்கணமாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கனையும் ஒருங்கே சிலப்பதிகாரத்தும் மணிமேகலையிலும் கூறப் பெற்றிருக்கின்றதென்று புலவர் அவர்கள் கூற முன் வர வியலுமா? சிலப்பதிகாரத்தே அறம் பொருள் இன்பம் என்ற மூன்றைத் தவிர அந்தமி லின்பத் தழிவில் வீட்டைக் கோவலனோ கண்ணஇயோ அடைந்ததாகப் புலவர் கூறுவாரா? மணிமேகலை வீட்டுப் பேற்றை அடைய முயன்றமை தவிர, அறம் பொருளின்பங்களை அனுபவித்ததாகக் கூற முடியுமா? எனவே, அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனையும் அடிப்படையாகக் கொண்டு மற்றைய வருணனைகளையும் கொண்டு வருவதல்லவோ பெருங்காப்பியத்தின் இலக்கணம்?  கோவலன் நன்மனை புணந்து மக்களைப் பெறுவதை விடுத்து தீ மனை புகுந்து அவள் மாட்டு மகப்பேறு அடைந்த செய்தி கூறப் பெற்றுள்ளதால் அக் காவியத்தைப் பெருங்காவியம் என்னலாமா?

 

இனி, சிலப்பதிகாரத்தின் நோக்கத்தை எடுத்துக் காட்டியவர்களுள் தலைசிறந்த வைணவப் புலவராகிய அடியார்க்கு நல்லாரைக் காட்டிலும் வேறு யார் அதன் சுவையை இலக்கண வரம் போடு எடுத்துக்காட்ட இருக்கின்றார்கள்? அவர் காட்டாவிடில் சிலப்பதிகாரம், சிலம்புவதேது? பாஸ்வல் என்ற ஆங்கிலப் புலவனால் ஜான்ஸன் என்ற புலவன் வெளிப்பட்டது போல அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகாரம் மிளிருகின்றது.

 

யான் சிலப்பதிகாரத்தை ஆராய்வதற்கு முக்கிய காரணம்- இந்நூல் பொற் கொல்லர்களுக்குப் பெரிய இகழ்ச்சியைத் தந்து விட்டது என்று கருதி இதனைப் பொய்க்கதை என்று கூறுவதாகக் கூறுகின்றார் புலவரவர்கள். மதப்பற்று, குலப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவை அனைவருக்கும் உண்டு. முற்றுந் துறந்த முனிவர்களும் இவற்றை விட்டார்களில்லை.


"புலையற மாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்றமாந்தர் காண்பரோ கேட்ப ரோதான்
தலையறுப் புண்டுஞ் சாவேன் சத்தியம் காண்மினையா!
சிலையினால் இலங்கை செற்ற தேவனே அதிகதேவன்.''


என்று தன் மதத்துக்காகத் தான் தலையறுப்புண்டுஞ் சாவதாகப் பெரியார் ஒருவரும் சூளுரை கூறியிருக்கின்றார். இளங்கோவடிகளைப் பல பேராசிரியர்கள் நூலை நன்காராய்ந்து சைவர் என்று முடிவு கட்டியதைக் கண்டு சிலர் அவரைச் சைனர் என்று நிலைநாட்டப் பெரிதும் முயன்று வருகின்றார்கள். நாலடியார் இயற்றியவரைச் சைவர் என்று நாட்டச் சிலர் பன்று வருகின்றார்கள். அதுபோல் யானும் குலவெறி கொண்டு, அல்லது புலவர் கூறியவாறு கொண்டு, சிலப்பதிகாரத்தை ஆராய எடுத்துக் கொண்டேனில்லை என்பதை உறுயோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். சிலப்பதிகாரம் சுமார் நான்காயிரம் வரிகளால் ஆகிய நூலாகும். சுமார் நாற்பதினாயிரம் வரிகளால் ஒன்பது சுவையும் ததும்பப் பாடிய பாடல்களால் குறித்திருக்கும் கதையே (இராமாயணம்) பொய்க்கதை எனப்படுகிறது: அங்கனம் கூறுகின்றவர்களுடைய குலம் ஏதேனும் அந்நூலில் பழிக்கப்பட்டிருக்கின்றதா என்று புலவர் கூறமுடியுமா | அவரவர்கள் ஆராய்ச்சியில் தோன்றிய ஒன்றைக் கூறுகின்றார்களே யொழிய வேறில்லை. அதை மறுக்கின்றவர்கள் நேரிய முறையில் தக்க காரணங் காட்டி மறுப்பதோ உடன் படுவதோ முறையாகும். அதனை விடுத்து, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" போன்று வீணான காரணங் கற்பித்தல் அழகன்று.

மேருமந்தர புராணத்தில் அடைக்கலப் பொருளை அபகரித்ததனால் தன்னை அடைந்து நிந்திக்கப்பட்ட பார்ப்பனன் ஒருவனுடைய செய்தி கூறப்பெற்றிருக்கின்றது. அவன் அபகரித்ததனால் அவமதிக்கப் பட்டான்; இகழப்பட்டான். அதனால் அவன் குலத்துக்கு வந்த இழிவென்ன? ஒன்றுமில்லை. எவனோ ஒருவன் செய்த செயலுக்கும் குலத்துக்கும் சம்பந்தம் யாது? குற்றம் செய்த பொற்கொல்லன் தண்டிக்கப்பட்டான் என்றால் குலத்துக்கு வந்த இழிவென்னை? என்பது எனக்குப் புலனாகவில்லை. ஒருவன் தான் செய்த குற்றத்துக்காகத் தண்டிக்கப் பட்டான் என்றால் அத் தண்டனையைக் குலத்தின் மீது ஏற்றிக் கூறுவது தவறன்றோ? வேண்டுமானால் அவன் குடும்பத்தின் மீது ஏற்றிக் கூறட்டும்.

 

சிலப்பதிகாரத்தே; பொன் செய் கொல்லன், பொற் கொல்லன், பொற்றொழில் கொல்லர் என்றே களவாடியவனைக் கூறுகின்றது. பொன்னால் பணி செய்து வயிறு வளர்க்கும் ஒருவனைக் குறித்ததே யொழியக் கம்மிய குலத்தைக் குறிக்க வில்லை. நூல்களெல்லாம் “வித்தகர் கைவினை", "தண்டமிழ்க் கம்மியர்" “சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று", “வித்தகரியற்றிய விளங்கிய கோலத்து” என்ற தொடர்களால் கம்மியர்களைச் சிறப்பித்தே கூறியிருக்கின்றன. இங்கு 'வித்தகர்'' என்ற ஒரு சொல்லே கம்மியர்களுக் குரிய சிறப்பினை விளக்கும். "வித்தகன்'' என்ற சொல் ஞானி என்ற பொருளிலும் ஒழுக்கமுடையவன் என்ற பொருளிலும் வந்திருப்பதைப் புலவர் அறிவர் என்று நம்புகின்றேன். இதனோடு “வித்தகர்க்கல்லா லரிது'' என்ற தொடருக்குப் பரிமேலழகர் கூறும் பொருளையும் காண்க.  சிலப்பதிகாரத்தே வருகின்ற பொற் கொல்லன், தண்டமிழ் நாட்டுப் பொற் கொல்லன் அல்லன் என்பது அவனுடைய உடை, நடை பாவனைகளை ஆசிரியர் கூறி யிருப்பதிலிருந்து அறியலாகும். இன்னோரன்ன காரணங்களால் சிலப்பதிகார ஆசிரியர் விஸ்வகருமர்களாகிய கம்மிய குலத்தினரை எங்கும் பழிக்கவில்லை. வித்தகர் என்றே கூறியிருக்கின்றார் என்பதைப் புலவர் அவர்கள் இனியாகிலும் அறிந்து கொள்வார்களாக,

 

நிற்க, சிலப்பதிகாரத்தைக் கட்டுக்கதை என்று கூறினவர்களும் கூறுகின்றவர்களும் பலராவார். சென்னை சர்வகலாசாலை ஆராய்ச்சியாளராயிருந்த திரு. K. N. சிவராஜப் பிள்ளை B. A. அவர்கள் தம்முடைய 'The Chroology of Early Tamils' என்று ஆங்கில மொழியில் எழுதிய நூலில் “சிலப்பதிகாரம் கூறும் செங்குட்டுவன் சரித்திர சம்பந்த முடையவன் அல்லன். பரணர் கூறும் குட்டுவனுக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. என்று கூறியிருக்கின்றார். இப்போது சென்னை சர்வகலாசாலை தமிழ் ரீடராக விருக்கும் தமிழ்ப் பேரறிஞர் திருவாளர் S. வையாபுரிப் பிள்ளை B. A. B.L அவர்களும் “சிலப்பதிகாரத்திற் கண்ட இலக்கண வழக்கு" என்ற தலைப்போடு எழுதியுள்ள ஒரு கட்டுரையில்- "இச் சொல் வழக்கினால் சிலப்பதிகாரம் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூலென்பது ஐயப்பாட்டிற்கு இடமின்றித் துணியத் தகுவதாயுள்ளது" என்று கூறியுள்ளார். (கதை நிகழ்ந்த காலத்திருந்த புலவரால் எழுதப்பட்டது சிலப்பதிகாரமும் மணிமேகலையும் என்று கூறுவதற்கு முரணாக வல்லவோ இருக்கின்றது: ஆதலால் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட காலத்தே கற்பித்த கதையாகும் என்பதில் என்ன ஐயம் உளது? திருவாளர். P. R. மீனாக்ஷிசுந்தர முதலியார் B. A. B. L. அவர்கள் தாம் தமிழில் எழுதி வெளியிட்டுள்ள “தமிழ்நூல் விளக்கு' என்ற நூலில், ''சிலப்பதிகாரக் கதையில் முன்னுக்குப் பின்னுள்ள முரண்' என்ற செய்தியாலும் இது உண்மைக் கதை யன்று என்று புலப்படுகின்றது. திருவாளர். K. V. சுப்பிரமணியஐயர் B.A. என்பவர் தாம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள “Historical sketohes of Ancient Dekhan" என்ற புத்தகத்தின் ஓரிடத்தில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் சங்க நூற்களோடு சேர்த்துக் கூறுவதிலும், அவை கூறும் அரசர்கள் சமகாலத்தியவர்கள் என்பதிலும் பெரிய சந்தேகங்கள் உண்டாகின்றன என்றும், மற்றுமோரிடத்தில், Silappadikaram is useless for purposes of history” என்றும், “Silappadikaram and other similar works appear before us as mere story tellers and that their componturies are full of improbabilities impossibilities and inconsistencies" என்று எழுதியுள்ளார்கள் என்பதை புலவர் அவர்கள் அறிவார்களாக.

 

மற்றொரு வித்துவான் ஆவணிமாதத்திய இதழில் எழுதியுள்ள ''ஊழும் இலட்சியமும்'' என்ற கட்டுரையில் கூறுவது போன்று ஊழ் என்ற ஒன்றே ஊழாகிய தனக்கும் பிறருக்கும் ஊழாக இருக்கின்றது. ஊழ்தான் உயிர்களை ஊக்குவது; ஏன்? உலகத்தையே ஊக்குகின்றது எனில் குற்றமின்று உலகத்தே மழை பெய்வதும் வெயில் காய்வதும் அந்தந்த நிலப்பகுதியின் ஊழ்வலியே யாகும். என்பது வான் சிறப்பின் உரையில் பரிமேலழகர் கூறும் செய்தியால் வலியுறுத்தப் பெறும். தானே செய்து கொண்ட கருமத்தை (ஊழ்) ஊட்ட வருங்காலத்து அதனை ஒதுக்க வல்லார் ஒருவருமில்லை. “நான்முகத் தொருவர் சூழினும், ஊழ்வினையொருவரா லொழிக்கற்பாலதோ''? என்றார் பெரியார் ஒருவரும். 'ஊழையுமுப்பக்கம் காண்பர்'' என்ற தொடர்பிலுள்ள ''ஊழையும்'' என்பதிலுள்ள உம்மைக்குப் பரிமேலழகர் ஒழிக்க முடியாத ஊழையும் என்று பொருள் கூறியிருப்பதும் இக்கருத்துப் பற்றியே தான் என்பது நோக்குவார்களாக. மனத்துக் கெட்டாத ஊழை எட்டுமாறு நூற்கள் எடுத்துக் கூறி மக்களைப் பயமுறுத்தாமலிருக்திருக்குமாயின் உலகம் தலைவிரிகோலமாக வன்றோ திரியும்.

 

எனவே, ஊழ்வினையுருத்து வந்தூட்டுமென்பதை வற்புறுத்தவந்த சிலப்பதிகாரத்தே முக்கிய உறுப்பினர்களுக்கு ஊழ் கூறாது விட்டதேன்? என்பது எமது கேள்வி. இஃது உண்மைக் கதையாக விருக்குமாயின் முக்கிய உறுப்பினளாகிய மாதவிக்கு ஊழ் கூறியேயாக வேண்டும் என்பதே எனது கொள்கை. கூற வேண்டாத இடத்தெல்லாம் கூறியும் சில இடங்களில் குறிப்பாகவும் கூறி உள்ளவர் இன்றியமையாத மாதவிக்கு ஏன் கூறவில்லை? சங்கமன் ணிகலன் விற்கச் சென்றதால் கொலையுண்டான். காட்டிக்கொடுத்த “பரதன் என்னும் தீத்தொழிலாளனா" கிய கோவலன் பணி விற்கச் சென்று கொலையுண்டான்' என்று குறிப்பாகக் கூறியுள்ளமையை வித்துவான் அவர்கள் ஆராயல் வேண்டும்.

 

ஒவ்வொருவரும் ஊழ்வழிப்பட்டே ஒவ்வொரு இலட்சியத்தை மேற்கொள்ளுகிறார்கள். ஊழ் உதவ உதவ இலட்சியத்தை அடைந்து விடுகின்நார்கள். ஊழ் முற்றும் உதவவில்லை யென்றால் இலட்சியம் அலட்சியமாகிவிடுகின்றது. மனவலியாலும் வாக்குவலியாலும் உடல்வலியாலும் (திரிகரணங்கள்) சிறந்த ஒருவன் ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுகிறான் என்றாலும் ஊழ் கூட்டிவைக்கவில்லை என்றால் கூழாகி விடுகின்றான். இராவணனுடைய இலட்சியம் சீதையை அடைய வேண்டும் என்பதே: இவன் மனமொழி மெய் என்ற மூன்றாலும் மிகுந்த வன்மையை யுடையவனன்றோ? இவன் மேற்கொண்ட இலட்சியம் முற்றுப் பெற்றதா? இல்லை: ஏன்? ஊழ்துணை செய்யவில்லை: எனவே, ஊழ் எப்படிப்பட்டவரையும் கூழாக்கி விடுகின்றமையாலேயே "ஊழிற் பெருவலி யாவுள!" என்றார் போலும்: ஊழ் என்ற ஒன்றை, பல ஒருங்கே கூடி எதிர்ப்பினும் முதுகு காண்டலில்லை என்பது அத்தொடரின் துவனிப் பொருளன்றோ?

 

ஒருவர் நெஞ்சை அள்ளும் என்று, அந்நூல் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சொன்னதனால் எல்லோரும் நெஞ்சை யள்ளும் என்று   சொல்ல வேண்டுமா? என்றுமுள தென் தமிழை நெடுநாளாக ஆரிய மொழியிலிருந்து பிறந்த மொழி என்றும் அகத்தியன் பயந்த மொழி என்றும் பலரும் பாடியும் எழுதியுமுள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். நிற்க, ஒரு தமிழர் “மூன்றெழுத் தாலாகிய பாடையுமுண்டோ?" என்றும் எழுதியுள்ளார். இக் கொள்கை நெடுங் காலம் தமிழ் நாட்டிலுலவி வந்தது.
இன்றும் சிலரிடம் இருந்து வருகிறது. இப்போது அக் கொள்கைகளைத் தமிழர் ஆதரிக்கிறார்களா? அப்படிக் கூறுவதும் நினைப்பதும் தவறு எனவும், தமிழ் ஆரியத்திலிருந்து பிறந்த மொழியன்று; ஒரு தனிமொழி எனவும் டாக்டர் கால்டுவல் என்ற துரைமகன் ஆங்கில மொழியிலும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் மொழியிலும் வெளிப்படையாகக் கூறிய பிறகே தமிழ் வீரர்கள் தமிழ் தனி மொழி என மார்பு தட்டுகிறார்கள் இதற்கு முன் மயங்கியல்லவோ கிடந்தார்கள் என்பதை வித்துவான் அறியட்டும்.

 

சிலப்பதிகாரமே பொய் என்று, அந்நூலொன்று இல்லை என்றோ, சிலம்பைக் காரணமாகக் கூறவந்த மூன்று செய்திகளை வற்புறுத்தும் கதையை உண்மைக் கதையல்ல; கற்பனைக் கதை என்பதே எம்முடைய கருத்து. கவிச் சக்கிரவர்த்தியால் பாடப்பட்டு இலக்கியச் சுவை ததும்பும் இராமாயணம் கதையால் படும் பாட்டை வித்துவான் அறியவில்லை போலும். இராம கதை, பல மொழிகளில் பலவேறு காலங்களிலிருந்த பல புலவர்களால் எழுதப்பட்டுள்ளது, சிலப்பதிகாரக் கதையையேனும் அதில் வந்திருக்கும் தலைவர்களையேனும் பற்றி வேறு எவரேனும் புலவர் பெருமக்கள் கூறியிருக்கிறார்களா? அம்மியும் குழவியும் காற்றில் பறக்கும் போது இலவம் பஞ்சு போன்ற சிலப்பதிகாரத்தைப்பற்றி வருந்துவானேன்? பிரபுலிங்கலீலை சுவை ததும்பும் நூலல்லவா? அதை உண்மைக்கதை என யாராகிலும் ஒப்புக்கொள்ளுகிறார்களா? சுவை சொட்டும் “ராசலஸ்" என்று ஜான்ஸனால் எழுதப்பெற்ற ஆங்கில நூலின் கதை உண்மை என எவரேனும் ஒப்புக்கொள்ளுகிறார்களா? சுவையுடைமையே கதை யுண்மைக்குக் காரணமாகாது. வீட்டுக்குச் சுவர்களின்றியமையாமை போன்று நூலுக்குக் கதையும் இன்றியமையாதது. அந்தக் கதை உண்மைக் கதையா யிருக்குமாயின் எச்செய்திகளும் இடையீடு இல்லாமலும் வேண்டுவன விடப்படாமலும் வந்தேயாக வேண்டும்; என்பது நூலிலக்கணம் கண்ட பெரியார்களின் கருத்து.

 

புத்திசாலிப் பட்டம் கிடைக்கும் என்று, என்னுடைய கொள்கையை வெளியிடுகின்றேனில்லை. என்னைப் போன்றவர்கள் மேலும் மேலும் என்னுடைய கட்டுரைகள் சிலப்பதிகாரத்தைப் பல முறைகளாலும் ஆராயத்தூண்டும் என்று கருதியேயாகும் என்பதைத் தமிழுலகம் கருதவில்லை. இனியாகிலும், யான் எடுத்துக் கொண்ட தலைப்புக்கும் யான் கூறும் செய்திக்கும் ஏதேனும் முரண்பாடுகள் இருக்குமாயின் அதனை எடுத்துக்காட்டினால் நலமாக விருக்கும்.

ஆனந்த போதினி – 1944 ௵ - அக்டோபர் ௴

No comments:

Post a Comment