Sunday, August 30, 2020

 காபி தேவதையின் பூஜாவைபவம்

காலை வேளை. பார்க்கும் இடமெங்கும் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்துள்ள பலவகைச் செடி கொடிகளும் மரங்களும் விளக்கும் மனோகரமானதொரு பூஞ்சோலை. மரகதக் கம்பளம் பரப்பப்பட்டதே போன்ற பசும்புல்லின் மீது, ஆங்காங்கு படிந்திருந்த பனித்துளிகள் முத்துகளை யொத்து விளக்கின. காலை இளங்கதிரவனது பொன்னிறம் கிரணங்கள் பூங்கொடிகளின் மேல் பாய்ந்து பச்சைக் கொடிகளை பசும்பொற்கொடிகளாக மாற்ற முயல்வது போல் தோன்றியது. அச்சோலையின் நடுவிலே அமைந் திருந்த அழகியதொரு சலவைகக்கல் மேடையின்மீது ஒரு தேவதையின் சிலை விளங்கியது. எட்டு கைகளுடன் கூடிய தாய், ஓர் அரக்கனை இடது காலால் மிதித்துக்கொண்டிருப்பதுபோன்ற அச்சிலையைக் கண்டதும் காளி தேவியின் விக்கிரகமோ என்று எண்ணி, சற்று அஞ்சிப் பின்னடைந்தேன். உற்று நோக்கிய போது எனது எண்ணம் தவறு என்பதை உணர்ந்து இச்சிலையை அணுகிக் கவனித்துப் பார்த்தேன்.

 

அச்சிலைக்கு எட்டுக் கைகள் இருப்பினும், அக் கைகளிலிருந்த பொருள்களைக் கண்டதும் பொங்கி எழுந்த சிரிப்பை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லையாதலின், விழுந்து விழுந்து சிரித்தேன். சூலம் இருக்க கவேண்டிய கையிலே, சிறிய தொரு கரண்டி யிருந்தது. படை யிருக்க வேண்டிய கையில், இரும்புச் சட்டி யிருந்தது. வில் இருக்க வேண்டிய கையிலே, சர்க்கரைப் புட்டி இருந்தது. அம்பு இருக்கவேண்டிய கரத்திலே, சிறு செம்பு இருந்தது. வாள் விளங்கவேண்டிய கையிலே காப்பிக்கொட்டைப் புட்டி இருந்தது.
ந்தது. மணி இலங்கவேண்டிய கரத்திலே கோப்பையும் சிறு தேக்கரண்டியும் விளங்கின.
அச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த துணி, மஞ்சள் நிறப்புடவையாக இல்லாமல் 'காபி கலர் சேலை'யாக விளங்கியது. அதன் மேனி களாப்பழத்தின் நிறமாக இல்லாமல், காப்பிக்கொட்டையின் நிறமாக இலங்கி அதன் முகம் சிவந்த நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு கண்டோரைக் கலங்கச் செய்யும் கடூரத் தோற்றம் உடைய முகமாக இராமல், எவரையும் எளிதில் வசீகரிக்கக்கூடிய புன்னகை தவழும் சுந்தர மோகன முகமாக விளங்கியது. நெற்றியில் சென்னிறக் குங்குமமோ வேறு எக்குறியோ இன்றி சூன்யமாக இருந்தது. ஆதலின் யான் கண்டது காளியம்மன் சிலை அன்று என்றும் ' காபியம்மன்' சிலையே என்றும் உறுதியாக உணர்ந்துகொண்டு விட்டேன். அடடா! 'காளியம்ம னுக்கும் காபியம்மனுக்கும் திருப்பெயர்ப் பொருத்தம் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது பார்த்தீர்களா! காளியம்மனின் பக்தர்களை விட காப்பியம்மனின் பக்தர்கள் உலகமெங்கும் கோடிக் கணக்காக இருந்து வருவதன் இரகசியம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு விட்டேன். ஆனால் அத் தேவதையின் இடது காலின் கீழ் உள்ள அரக்கன் எவனாக இருக்கக் கூடுமென்று நன்கு சிந்தித்துப் பார்த்தேன். சிந்திக்க சிர்திக்க என் மூளை குழம்பிற்றேயொழிய உண்மை விளங்கவில்லை. யாரேனும்
ஒரு புலவர் காபிப் புராணம்' பாடி வைத்துப் போயிருந்தா லல்லவா, அவ்வரக்கனது செருக்கு காபியம்மனால் அடக்கப்பட்ட வைபவத்தை நான் தெரிந்து கொண்டிருக்கக் கூடும்! செந்தமிழ்ப் புலவர்களால் பாடப்பெறாதது, காப்பியம்மனுக்கு ஒரு பெருங் குறையே யல்லவா?

 

அச்சிலையின் காலடியின் கீழ் சிதறிக்கிடந்த பலவகைப்பட்ட வாடிய மலர்களைக் கண்டதும், அது கேவலம் அழகுக்காக மட்டும் அங்கு வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் விளங்கின! ஆதலால், அவ்விடத்திற்கு விரைவில் எவரேனும் வரக்கூடுமென்று சுற்றும் உற்றுப் பார்த்தேன். யான் நினைத்தவாறே பட்டைத் திருநீறு விளங்கும் நெற்றியுடனும் ருத்திராட்சமாலை ஒளிரும் கழுத்துடனும் கூடிய 'சைவப்பழ'மான ஒரு பெரியார், தூரத்திலேயே இரு கரங்களையும் தலையின் மேல் கூப்பிக்கொண்டு தமது இனிய குரலில் பூபாள ராகத்தில் பின்வருமாறு திருப்பள்ளி எழுச்சி பாடிக்கொண்டே சிலையை நெருங்கி வந்தார்:


'கீழ்த்திசை வெளுத்தது; உதித்தனன் கதிரோன்;
      கீசு கீசெனக் சத்தித் திரிவன பறவை;
தாழ்த்திடலின்றியே காலையில் பசுக்கள்
      தம்மைத் தெருத்தொறும் கொணர்ந்தனர் இடையர்;
வாழ்த்தி வணங்குவோர்க் (கு) அருள் செயுங் 'காப்பி
       மாதாவே
! எங்களை ஆனந்தக் கடலுள்
ஆழ்த்திடுவாய்! எங்கள் அயர்வகற்றிடுவாய்!
      அன்னையே! பள்ளி எழுந் தருளாயே!'';
"கலைப்பகை மத - சாதிப் பகைகளை மறந்தோம்;
      காலையில் எழுந்ததும் உன்னையே நினைந்தோம்;
அலைமயிரினரொடுங் 'கிராப்' தலையினரும்
      அன்பொடு கலந்திங்கு குலவியே மகிழ்ந்தோம்;
சொலும் உனைக் காலையும் மாலையும் தொழுதோம்;
      சோர்வை ஒழித்திடும் காபியாம் அம்மே!
தலைவலி அரக்கனைத் தாளினால் அடக்கும்
      தாயே இனிப் பள்ளி எழுந்தருளாயே!"

 

இரண்டாங் கவியின் கடைசி அடி எனது செவிகளில் விழுந்தவுடனே, அரக்கன் இன்னான் என்பதை அறிந்து கொண்டுவிட்டேன்.

 

பின்னர் அந்த சைவப் பெரியார், அருகில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தும் பாராதவரே போன்று, அச்சிலையை (இல்லை; மன்னிக்கவும்)- அத்தேவதையைச் சுற்றி ஏழு பிரதட்சணங்கள் வந்தபின் தரையில் வீழ்ந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அதன் பின் அவ்விடத்திற்கு ஒருவர் பின் ஒருவராய் இருபது இருபத்தைந்து பேர் வந்து சேர்ந்தனர். அந்த பக்தர்கள் எல்லோரையும் பார்க்கப் பார்க்க யான் அடைந்த ஆச்சரியம் எத்தகையது என்பதை எழுதிக்காட்ட முடியாது. சிவாலயத்தில் நீங்கள் காணும் பக்தர்களில் நூற்றுக்கு எண்பது நபர்கள் விபூதி தரித்தவர்களாகவும், பெருமாள் கோயிலில் காணப்படும் அன்பர்களில் நூற்றுக்கு எண்பது நபர்கள் திருநாமமிட்டவர்களாகவும் இருப்பது இயல்பேயன்றோ! ஆனால் காபியம்மன் சந்நிதானத்தில் கூடிய அன்பர்களில், நெற்றியில் மதக்குறி அணிந்தோர் ஐந்தாறு நபர்களே இருந்தனர். மற்றவர்களெல்லாரும், செயற்கைச் சின்னங்களால் தங்களது முகத்தின் இயற்கை யழகு குறைந்துவிடும்' என்னும் எண்ணம்
கொண்டவர்கள் போலும்! 'அமெரிக்கன் கிராப்' 'ஸம்மர் கிராப்' முதலிய பல வகைப்பட்ட 'கிராப்கள்' செய்து கொண்ட சிரத்தினர் முதல், முன் குடுமித் தீட்சிதர் உச்சிக்குடுமி கனபாடிகள் முதலிய பரம வைதிகர்கள் வரையில் பலவகைப்பட்ட அன்பர்களும் ஒருங்கே கூடியிருக்கும் காட்சி, பெருவியப்பைப் பெருக்குவது இயல்பேயல்லவா? அவர்கள் மட்டுமா? மகமதிய சகோதரர்களும் கிறிஸ்தவ சகோதரர்களுங்கூட அக்கோஷ்டியில் கலந்து கொண்டிருந்தனர்? அக்காட்சியை நோக்க நோக்க, 'பற்பல ஆண்டுகளாக பேரார்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 'பூரண சுயராஜ்யம் பெற்றுக்கொண்டு விட்ட சுதந்திர இந்தியாவிலேயே இருக்கிறோம்' என்று என் மனத்திற்குள் எண்ணிக்கொண்டு விட்டேன்.

 

அக் காப்பித் தொண்டர்களுள் குங்குமப் பொட்டோடு கூடிய பட்டை விபூதி ருத்ராட்ச மாலைகள், 'பஞ்சகச்சம்' வைத்துக் கட்டிய மடிப்பட்டு முதலிய வைதிக அலங்காரங்களோடு கூடிய சாஸ்திரிகள் ஒருவர், தமது வேலைக்காரனை அழைத்து,
அழைத்து, "சூர்யோதயமாகி சூர்யோதயமாகி இவ்வளவு நேரமாகியும், இன்னும் பணத்திமிர் மிகுந்த பாற்காரர்கள் வாக்காணோம். உடனே அவர்களிடம் போய், அவரவர்களது பசுக்களை ஒட்டிக்கொண்டு சீக்கிரம் இங்கு வந்து சேரும்படி நான் சொன்னதாக ஒவ்வொருவன் வீட்டிலும் போய்ச் சொல். வாடிக்கைக்காரருடைய பசுக்களெல்லாம் இங்கு வந்து கறந்தால் கூட, இரண்டு மூன்று குடங்கள் பால் கிடைப்பது கூட கஷ்டம். ஆதலால், ஊரில் எந்த எந்த வீட்டில் பசுமாடு கறக்கிறதோ, அந்தந்த வீட்டில் கிடைக்கும் பால் முழுவதையும் வாங்கிச் சேர்த்து, நாலைந்து குடங்களுக்குக் குறையாமலாவது கொண்டு வந்து சேர். ஜல்தி! ஜல்தி!! போனேன், வந்தேன் என்று சுருக்காக வந்து சேரவேண்டும்" - என்று கட்டளை யிட்டார். அவ்வேலையாளும் 'அப்படியே, சாமி!' என்று சொல்லிப் போனான்.

 

அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின், ஏழெட்டு மனிதர்கள் தத்தம் பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்து ந்து சேர்ந்தனர். அவர்களுள் பொற்காப்புக்கள் பூண்ட கைகளும் கலர் 'சில்க்' சுற்றப்பெற்ற தலையும் உடையவர்களாய் மெல்லிய 'மல்' ஷர்ட்டுகள் அணிந்திருந்தவர்களது பசுக்கள் மட்டும் நல்ல சதைப்பற்றுடன் கூடியனவாக இருந்தன. சற்று ஏழைகளாகத் தோன்றிய மற்றவர்களது பசுக்கள் இளைத்து எலும்புக் கூடுகளைப்போல் தோன்றின. 'எப்பொழுது தத்தம் தாய் மடியில் வாய் வைப்போமோ' என்ற பேராவல் மிகுந்தவைகளாய்த் தோன்றிய கன்றுக்குட்டிகள் அப்பசுக்களைச் சுற்றிச் சுற்றி வந்த காட்சி மிக்க பரிதாபகரமான காட்சியாக இருந்தது. அந்தோ! ஈன்றெடுத்த தமது கன்றுகள், தமது பாலைப் பரு தவதற்கின்றி கயிறுகளால் பின்னப்பட்ட வாய் மூடியால் கட்டப்பட்டு, தங்களெதிரிலேயே ஏங்கித் தவித்து நிற்பதைக் கண்ட பசுக்கள், அவற்றை நோக்கிய நோக்கம், அன்புடை யோர் உள்ளத்தைப் பெரிதும் உருக்குவதாக இருந்தது. வைக்கோல் திணிக்கப்பெற்று தோலால் மூடப் பட்டிருந்த உயிரற்ற உருவங்களும், கன்றுகளாகக் கொண்டுவரப் பட்டிருந்ததைக் கண்டதும் எனது கண்களில் நீர் பெருகி வழிந்தது. காப்பித்தொண்டர்களுள் ஐந்தாறு பேர் பசுக்களருகில் வந்து நின்று கொண்டு, விரைவில் பால் கறக்குமாறு பாற்காரர்களுக்குக் கட்டளையிட்டனர். அப் பசுக்களின் மடிக்காம்புகள் நான்கிலும் கடைசிச் சொட்டு வரும் வரையில் பால் முழுவதையும் கறந்து கொண்டு விட்ட பாற்காரர்கள், தாங்கள் கறந்த பாலை எடுத்துக்கொண்டு காப்பி தேவதை யருகில் சென்றனர். அவர்கள் எழுந்த மறுகணமே தத்தம் தாய் மடிக்காம்புகளை பேரார்வத்தோடு சுவைக்கத் தொடங்கிய எளிய கன்றுகள், மிகுந்த ஏமாற்றமடைந்து பெரிதும் தவித்தன. அத்தவிப்பைக் கண்டு அகம் இரங்குவதற்கு அங்கு யார் உளர்?

 

சாஸ்திரிகள் அனுப்பிய வேலைக்காரனும் மற்றொருவனும் ஒவ்வொரு பாற்குடம் எடுத்துக்கொண்டு வந்து தோன்றினர். குடத்தைக் கீழே இறக்கி வைத்த வேளையாள், சாஸ்திரிகளை நோக்கி, ''ஊருலே ஊடு ஊடா அலஞ்சேன் சாமி! செத்த மீசுரமான கைகாரங்களெல்லாம் அவுங்க அவுங்க ஊட்டுலே காப்பி வைக்காத்துக்கே பால் போதலே, வெலக்கி குடுக்க முடியாது இன்னூட்டாங்க. ஊட்டுச் செலவக்கு கய்... மா இருக்கு தூன்னு அஞ்சாறு ஊட்டுக்காரங்கதான் இந்த பாலை குடுத்தாங்கே அவங்க ஊட்டுலே பச்செப் பாலவன்வோ, வீறு வீறு இன்னு கத்திக்கினு இருந்ததெக் கேக்க
கேக்க எங்களுக்ரொம்ப பரிதாவமா இருந்தது. அவுங்க படர கய்டம் பொறுக்க முடியாமே, பாலவன்னுளுக்குக் கூட வச்சிக்காதே எல்லாப் பாலையும் குடுத்துட்டாங்க போலிருக்குது. நாங்க வாணாம்னு வந்துட்டுருப்போம். எசமான் கோச்சிக்கிவாங்களே என்னு வாங்கிக்கினு வந்துட்டோம்"- என்றான்.

 

''போதும் நிறுத்து உன் பேச்சை! வரவர என்னிடம் உனக்கு பயமே இல்லாமல் போய்விட்டது! உன்னைச் சொல்லக் குற்றமில்லை; காலம் கெட்டுக் கிடக்கிறது. வேலைக்காரப் பயல்களுக்கு இவ்வளவு அதிகப் பிரசங்கமா? உன்னை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன்”- என்றார் சாஸ் திரிகள். பாவம்! அதற்குமேல் அவரெதிரில் நிற்கப் பெரிதும் அஞ்சிய அவ்வெளியவன், அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான். அக்குடங்கள் இரண்டும் தேவதைக்கு அருகில் வைக்கப்பட்டன.

காப்பி தேவதையின் அர்ச்சக சுவாமிகள், அக்குடங்களிலிருந்த பாலைமொண்டு எடுத்துப் பரீட்சித்துப் பார்த்தார். அப்பால், 'நீர் கலந்த பாலாக' இல்லாமல் 'பால் கலந்த நீராக' இருந்ததைப் பார்த்துச் சிரித்தார். உடனே அவர்,


"மேலில் திரிந்தாய் மேகப் பெயர் பெற்றாய்;
ஞாலத்(து) இழிந்தாய் நன்னீர்ப் பெயர் கொண்டாய்;
மாலொத்த மாயம் வல் ஆயர் கைப்பட்டு
பாலென்ற பேரும் படைத்தாய் வெண் தண்ணீரே! "-


என்ற ஒரு கவியை எடுத்துச் சொல்லி, காப்பி தேவதையின் விஷயத்தில் கொஞ்சமும் அஞ்சாமல் இடையர்கள் செய்து வரும் படுமோசங்களை கூடிய விரைவில் ஒழிக்கப் பாடுபட வேண்டியது, காபி யன்பர்களது மதக் கடமைகளுள் தலைசிறந்ததாகும் என்று வலியுறுத்திப் பேசினார். 'இவ்விரண்டு குடப்பாலும் தேவிக்கு உகப்பாக இராது - என்றுரைத்து, அவற்றைத் திருமஞ்சனத்திற்கு உபயோகிக்க ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். எதிர்பார்த்தபடி கிடைக்காமையால், தேவியின் திருமஞ்சனத்திற் தப் போதுமளவு பால் கிடைக்கவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த காபியடியார்களுக்கு, அவ்விரண்டு குடங்களையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது மிக்க வருத்தத்தைத் தந்தது. அவர்களில் நாகரிகத் தோற்றமுடைய ஒருவர், அர்ச்சக ஸ்வாமிகளை நோக்கிப் பின்வருமாறு கூறலானார்: -

 

"காபிதேவி நமது பக்தியை விரும்புபவளேயன்றி, கேவலம் பாலின் தன்
ஆராய்ந்து பார்க்க விருமபுபவள் அல்லள். அவளது சாந்நித்யம் நிறைந்துள்ள இடங்களாகிய கிளப்புகளிலே, காலை முதல் அடுப்பிலேயே காய்ந்து கொண்டிருக்க வேண்டிய பாலிலே, அவ்வப்போது தண்ணீர் விடாமலிருந்தால், நமது அன்பர்களை நள்ளிரவு பத்து மணி வரையில் எப்படி திருப்தி செய்ய முடியும்? நாம் காபியைக் கவனிக்க வேண்டுமே யன்றி; எப்படிப்பட்ட பாலாக இருந்தாலும் அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
பக்தியோடு ஸமர்ப்பிக்கும் எதுவும் தேவிக்கு உவப்பாகவே இருக்குமென்பது
உறுதியாதலால், தாங்கள் மனங்கோணாமல் இங்குள்ள எல்லாக் குடங்களின்
பாலையும் தேவிக்குத் திருமஞ்சனம் செய்யுங்கள் -" என்றார். என்றார். அவ்வாறே செய்யுமாறு ஏனையோரும் அர்ச்சகரை வேண்டிக்கொண்டனர்.

 

பின்னர், அர்ச்சகஸ்வாமிகள் கம்பீரமான உச்சஸ்வரத்தில் ஸம்ஸ்க்ருத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே காபியம்மன் சிரசில் பாலைக் கொட்டத் தொடங்கினார். அட்டாவோ அடடா! என்ன அற்புதம்! என்ன அற்புதம்!! காபியம்மனின் சிரசில் விழுந்த பால், அத்தேவியின் கரங்களிலுள்ள காப்பிக்கொட்டை சர்க்கரை முதலிய பொருள்களின் மேல்பட்டு, காப்பியாகவேமாறி-அடிகளின் கீழ் அருவிபோல ஓடத் தொடங்கியது. ஒரு சேர் காபியைப் பருகிவிட்டு இன்னொரு சேர் கொண்டுவரச் சொன்னால் அருகிலுள்ளவர்கள் தம்மை அநாகரிகர்கள் என்று பரிகசிப்பார்கள் என்னும் எண்ணத்தால் ஒரு சேரோடு எழுந்திருந்துவிட நேர்வதைப்பற்றி பெரிதும் வருந்திக்கொண்டிருந்தவர்களும், வீட்டில் வைக்கப்படும் காபி குடும்பத்திலுள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் பங்கிடப்பட்டு விடுவதால் ஒரு டம்ளருக்குமேல் பருகுவதற்கின்றி வருந்தியவர்களும் மற்றும் பற்பலரும், அருவியாக ஓடும் காபியைக்கண்டு மட்டற்ற ஆர்வமுடையவர்களாய் வாரி வாரிப் பருகலாயினர். எப்படி ஹோட்டல்களில் எச்சிலைக் கவனியாமல் சின்னஞ்சிறு தட்டுகளில் காபியை ஊ) ற்றி உறிஞ்சிச் சுவைத்தார்களோ, அவ்வாறே 'எச்சில்' என்ற நினைவே இன்றிப் பெருகியோடும் காபியை எல்லோரும் அள்ளி அள்ளிக் குடிக்கலாயினர். 'கலத் தண்ணீருக்கு தோஷ வில்லை' என்பது பழமொழி யல்லவா? சிறியதாயினும் பெரியதாயினும் ஓடிக்கொண்டிருக்கும் அருவி அருவிதானே! ஓடிக்கொண்டிருக்கும் அருவியில் எச்சில் பாராட்டுபவர்கள், பைத்தியக்காரர்களாக பரிகசிக்கப்படுவார்க ளல்லவா? சாதி-மத-பேதம் கடந்தவர்கள், உண்ணும் உணவிலும் பருகும் நீரிலுங்கூட ஒற்றுமையாக நடந்துகொள்ள வேண்டாமா? காபியன்பர்க ளெல்லோரும் கடல் கடையாமலே கிடைத்த அமிர்தமாகிய காபியை, வயிறு நிரம்புமளவும்-ஏன்? - கழுத்துக்குமேல் வெளிவந்து விடாமல் நிற்குமளவுங் கூட-ஆசை தீரப்பருகி ஆனந்தம் அடைந்தார்கள்.

 

பின், காபியம்மனுக்கு திவ்யாலங்காரங்கள் செய்யப்பட்ட பின் வருமாறு அர்ச்சனை செய்யலானார்: --

ஓம் ஸர்வஜன மனோஹராயை நம:
ஓம் க்ஷராம்ருத ஸம்பவாயை நம:
ஓம் பூலோக ப்ரத்யக்ஷாம்ருதாயை நம:
ஓம் அஷ்ட புஜாயை நம:
ஓம் த்விகால பூஜிதாயை நம:
ஓம் வர்ண மதபேத த்வும்ஸின்யை நம:
ஓம் மஹா நகராதி க்ராமாந்த ஸர்வஸ்தல நிவாஸின்யை நம:
ஓம் மஹா மதுராயை நம:
ஓம் மஹா ஸுகந்ந்தாயை நம:
ஓம் மஹோத்ஸாக வரப்ரதாயை நம:
ஓம் சிரோரோக நிவாரணாயை நம:
ஓம் காபி தேவ்யை நம:

 

பின்னர், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. காபி மதத்தினராகிய அடியார்கள் எல்லோரும் பின் வருமாறு (மாங்காய்ப் பாலுண்டுமலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பாலே துக்கடி" - என்னும் குதம்பைச் சித்தர் பாட்டின் மெட்டில்) காப்பிச் சித்தர் ஒருவரால் பாடப்பெற்ற கீதத்தை ‘காபிராகத்’ திலே பாடலாயினர்: -

 

(1)    காப்பி யமிர் துண்டு காலையும் மாலையுங் கை
கூப்பியே தொழுகின்றோம் - எந்தாயே!
குளிர்ந்தருள் புரிவாயே!                                 (காப்பி)

(2)    காலையில் எழுந்ததும் கருத்தில் உனைப் பதித்து
மாலையுந் துதித்திடுவோம் - எந்தாயே!
மகிழ்ந்தருள் புரிவாயே!                                 (காப்பி)

 

(3)    சாதிமதக் கலைகள் தம்மாற் பிணங்காமல்
நீதி ஒற்றுமை பெற்றோம் - எந்தாயே!
நீங்கிற்று பகைப்பேயே!                                  (காப்பி)

(4)    நாகரிகர்களோடு நாட்டு வைதிகர்களும்
ஏகமாய்க் குலவிடவே-எந் தாயே!
இன்னருள் பொழிவாயே!                                (காப்பி)

 

அவ்வாறு அவர்கள் காபி தேவதையைத் தோத்திரம் செய்து கொண்டிருந்த இடத்திலே, கிழிந்த உடையும் குழி விழுந்த கண்களும் கொண்டு எலும்புக்கூடு போன்று மெலிந்த தேகம் உடையவர்களாய் ஏழெட்டுப் பேர் சேர்ந்தனர். காப்பிதேவதையைக் கவனித்துப் பார்த்தவுடனே அவ்வெளியவர்களுக்கு எத்தகைய உணர்ச்சி தோன்றியதோ, அவர்களது விழிகளிலிருந்து நீர் பெருகி வழியலாயிற்று. அவர்களுள் கன்னெஞ்சையும் கரைக்கக்கூடிய பரிதாபகரமான தோற்றமுடைய ஒரு மாது, பின்வருமாறு காப்பித் தொண்டர்களை நோக்கிப் பேசலானாள்: -

 

“இங்கே நீங்கள் எல்லோரும் காப்பியைத் தெய்வமாகக்கொண்டு பூசை பண்ணுகறீர்கள்! ஐயோ! பாழுங் காப்பிக்கொட்டையைப் பயிர் செய்கிற தோட்டங்களில், நாங்கள் படுகிறபாடு தெரியுமோ? கவலை தெரியாத காப்பிக் குடியர்களே! நீங்கள் காப்பியையா குடிக்கிறீர்கள்? தோட்டக்காரர்கள் எங்களைப் படுத்தும்பாடு சகிக்க முடியாமல், நாங்கள் விட்ட கண்ணீர் பட்டுபிலே இந்திய ரத்தம் ஓடவில்லையா? தங்கை தமக்கைகளிடம் உங்களுக்கு இரக்கம் இல்லையா? பாழும் வயிற்றின் கொடுமை பொறுக்க முடியாமல் தானே, நாங்கள் காப்பித் தோட்டங்களில் வாடித் தவிக்கிறோம்! உங்ளுடைய காப்பிப் பைத்தியம் ஒழிந்து போய்விட்டால், பாழுங் காப்பித்தோட்டங்களில் எங்களை மானங்கெட்ட வாழ்வு நடத்தும்படி செய்கிற கொடுமையும் நீங்கி விடுமல்லவா? ஏழைகள் படுகிற பாடுகளில் இரக்கம் காட்டாமல், பணக்காரர்களாக கூடிக்கொண்டு காப்பி குடித்து சந்தோஷப் படுவதாலேயே 'சாதி-மத-வேற்றுமை பார்க்கவில்லை' என்று சொல்லிக் கொள்வதில் உங்களுக்கே வெட்கமில்லையா? ஒருவேளை காப்பி தவறிவிட்டால் தலை வலிக்கிறது' என்னும் நீங்கள், எங்களுக்கு ஒருவேளை கூழுக்காவது வழி காட்டக் கூடாதா? நாங்களும் உங்களைப்போல, தமிழ்நாட்டில் பிறந்தவர்களல்லவா? எங்கள் மேல் சிறிதும் மனம் இரங்காதபடி, பாழுங் காப்பிப் பேய் உங்களது மனத்திலிருந்து கருணையையே ஒட்டி விட்டதா? இனியாவது, நாங்கள் மானங்கெடாதபடி வாழவேண்டாமா?''

 

அப்பேச்சைக் கேட்ட காப்பித் தொண்டர்கள் அனைவரும், பதில் கூறவழியின்றி பதுமைகளைப்போல அசைவற்று நின் ஏறனர். அச்சமயத்தில், திடீரென ஒப்பற்றதொரு அற்புதப் பேரொளி தோன்றியது. பின், அச்சுடரொளியிலே ஒப்புயர்வற்ற பேரழ கடைய ஒரு தேவியின் உருவம் விளங்கியது. மின்னலைப் போன்று தோன்றிய அவ்வொளி மறைந்தவுடனே, அதில் காட்சியளித்த தேவி காப்பித் தொண்டர்களிடம் வந்து நின்றாள். காலை இளங் கதிரொளியால் மலர்ந்து இலங்கும் செந் தாமரையையும், அக் கமல மலரில் அமர்ந்து செந்தேன் பருகும் இந்திர நீல நிற வண்டுகளையும், தண்ணொளி வாய்ந்த இன்னமுத கிரணங்களைப் பொழிந்து வான வீதியில் புன்னகை புரிந்து உலவுங் குளிர் மதியையும் இன்னமுதம் கொண்டு ஒருங்கு திரட்டி அமைக்கப் பெற்றது போன்ற திருமுகமுமுடைய அத்தேவி, காபி யம்மனின் சிலையையும் காபி யடியார்களையும் கூர்ந்து நோக்கினாள். பின், அத்தொண்டர் களைப் பார்த்து பின்வருமாறு பேசலானாள்: -

 

“பேதைகாள்! நீங்கள் போற்றுவது ஒரு தெய்வமல்ல; அது உங்களை விரைவில் மடிவிக்கக்கூடிய கொடிய பேயே என்பதை உணருங்கள். ஆங்கில காட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிவிட்ட அப்பேய், உங்களது அறிவை மயக்கி பலத்தை தளர்த்தி உங்களைத் தனக்கு அடிமைப் படுத்திக்கொண்டு விட்டதை நினைக்க நினைக்க, தமிழ்த் தாயாகிய என் மனம் குமுறுகின்றது. உஷ்ணப் பிரதேசமாகிய இத்தென்னாட்டில் உள்ளவர்கள் காலையில் குளிர்ந்த மோரைப் பருகுவது ஏற்றதாகுமேயன்றி, சுடச் சுடக் காப்பியைக் குடிப்பது எவ்விதமும் பொருந்தாது. உதர நாராயணனைக் காலையில் குளிரச் செய்ய வேண்டியதே உங்கள் கடமையா யிருக்க, அதற்குப் பதிலாக காலை வேளையில் காப்பியைக் கொண்டு சுடுவிப்பது பெரும் பாவ மாகும். இதோ எலும்புக் கூடுகளைப்போல நிற்கும் எளியவர்கள் சொரிந்த கண்ணீர், உங்களைச் சும்மா விட்டுவிடப் போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனது சிந்தைக்கினிய மோகனதாஸ் காந்தி என்ன அறிவுறுத்தியுள்ளார் தெரியுமோ?

 

''காபியானது இரத்தம் முரிந்து தண்ணீர் போல் இலேசாகி விடும்படி செய்து விடுகிறது. காபியில் என்ன குணம் இருந்தபோதிலும், துர்க்குணம் அதிகமாக இருப்பதால், அற்பகுணம் நிரம்ப துர்க்குணத்திற்கு ஈடாக மாட் பிராணாதாரமான இரத்தத்தை முரித்துவிடும் ஒரு வஸ்துவை விட்டு விட யோசனையும் வேண்டுமோ?''

 

இப்பொன் மொழிகள், உங்களது ஹிருதயத்திலே ஊடுருவிப் பாயட்டும். காப்பியை விட்டு விடுவதால், தலைவலியோ மயக்கமோ வந்து விடுமென்று நீங்கள் அஞ்சவேண்டுவதில்லை. அவ்வாறு நீங்கள் நினைப்பது வீண்பிரமையேயன்றி வேறன்று. நீங்கள் மட்டும் மன உறுதி கொண்டு விட்டால், உங்+ளை அப் பேய்க்கு அடிமைப்படுத்திக் கொண்டு விட்டிருப்பதிலிருந்து சொற்ப தினங்களிலேயே விடுதலை அடைந்து விடலாம். காபி பானத்தால் ஜாதி - மத பேதங்களைப் பாராட்டாமலிருந்து வருவதாக நீங்கள் பெருமையடித்துக் கொள்வதை நினைக்க நினைக்க, எனக்குச் சிரிப்பு மிகுகின்றது. கேவலம் கலந்து உண்ணும் முறை ஒன்றனாலேயே உண்மை ஒற்றுமை உண்டாகிவிடாது. காப்பி ஓட்டலின் வாயிலைத் தாண்டியவுடனே உங்கள் ஒற்றுமை எங்கே ஓடி ஒளிந்து கொண்டு விடுகிறது? தாய்நாட்டுத் திருத்தொண்டில் காட்டும் ஒற்றுமையே உங்களையும் உய்விக்கும்; என்னையும் மகிழ்விக்கும். இனியேனும், நீங்கள் எல்லோரும் காபிப் பேய்க்கு அடிமைப்பட்டிருக்கும் கோழைத் தன்மைரை! உதறித் தள்ளிவிட்டு, எனது சிந்தையைக் குளிர்விக்கக்கூடிய தாய்நாட்டில் அன்புரை ய வீரப் புதல்வா களாக முயல்வதாக எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களாக."

 

அன்னையின் அருள் மொழிகளாலும் கரையப் பெறாத கல்லினுங் கொடிய வன்னெஞ்சுடைய காப்பித் தொண்டர்கள் யாவரும் தலையைக் குனிந்து கொண்டு நின்றனரேயன்றி, ஒருவரும் உறுதிமொழி கூறத் துணிந்து முன்வரவில்லை. அதைக்கண்டு என் மனம் பெரிதும் பதைத்தது; கண்கள் சிவந்தன; ஏதோ ஒரு அற்புத சக்தி, என்னையும் அறியாமல் எனது இருதயத்தில் ஒருவித புத்துணர்ச்சியை எழுப்பியது; எனது தமிழ்த்தாயின் திருவடிகளில் சாஷ்டாங்கமாகப் பணிந்து எழுந்து நின்று கூறலானேன்: -

 

"அன்னையே! உனது அருள் மொழிகளைக் கேட்டும், இக்கோழைகளின் காப்பிப்பித்து நீங்கியபாடில்லை. உனது அருள் மொழிகளால் யான் கொண்டிருந்த காப்பிப்பற்று என் மனத்தை விட்டுப் பறந்து போய் விட்டது. தாயே! இதோ கேள்! வீரர்கள் விளங்கிய பாரத நாட்டின் மேல் ஆணை! நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின்மேல் ஆணை! கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் பெருமான் மேல் ஆணை! சாந்தம் மிகுந்த காந்தியடிகள்மேல் ஆணை! எண்ணிறந்த மன்னர் மன்னர்களும் இன்கவிப் புலவர்களும் ஏத்திப் போற்றிய உனது திருவடிகள் மேல் ஆணை! இனி எக்காலத்திலும் -எவ்விடத்திலும் - எவ்வித காரணங்களை முன்னிட்டும் பாழுங் காப்பியைப் பருகவே மாட்டேன். அதைக் கண்களால் காண நேர்ந்தாலுங்கூட, எனது இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு விடுவேன். கள்ளுக்கடை எதிரில் தேசீயத் தொண்டர்கள் சாத்வீக மறியல் செய்தது போல், நானும் சில தொண்டர்களைச் சேர்த்துக்கொண்டு காப்பிக் கடையின் வாயிலில் நின்றுகொண்டு சாத்வீக மறியல் செய்ய உறுதி கொண்டு விட்டேன். 'கள்ளுக்கடை மறியலைக் காட்டிலும், காபிக் கிளப் மறியல் நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது' என்பதை காந்தியடிகளுக்கும் இராஜகோபாலாசாரியாருக்கும் தெரிவிக்கப் போகிறேன். கலியுக மாய சூர்ப்பணகையாகிய காப்பி யாக்கியின் மேல் தமிழ்நாட்டினர் கொண்டுள்ள பெருமோகத்தை விரைவில் ஒழிக்க முயலும் திருப்பணியிலே, என் உடம்பில் கடைசிச் சொட்டு இரத்தம் தங்கியிருக்கும் வரையில் உற்சாகத்துடன் உழைக்க உறுதி கொண்டேன். செந்தமிழ்த்தாயே! எனது நோக்கம் இனிது நிறைவேறத் திருவருள் புரிவாய்! இனி, உனது சிந்தை குளிர்ந்து என்னை ஆசீர்வதித்தருள்வாய்!" – என்றுரைத்து மீண்டும் சாஷ்டங்கமாக தமிழ்த்தாயை நமஸ்கரித்தேன். அந்தோ! மறுகணத்தில் யான் கண்ட காட்சிகள் யாவும் மறைந்தன.

 

"நன்னாருக்கு; இப்படியும் தூங்குவாளோ? காலை வெய்யில் மேலே படரதுகூடத் தெரியாமே துக்கம் வேண்டியிருக்கா?" என்று புன்முறுவல் தவழும் முகத்தினளாய் எதிரில் நின்ற என் மனைவி கூறினாள். அம்மொழிகள் தனது செவிகளில் விழுந்த பின்பே நான் கண்டவை யனைத்தும் கனவென உணர்ந்தேன். ''வயிறு பசிக்கிறது; காபி போட்டிருக்கிறாயோ இல்லையோ?”- என்று கேட்டுக் கொண்டே எழுந்தேன். ''நன்னாருக்கு, இன்னக்கி உங்கள் அப்பா சிரார்த்த மாச்சே, அதைக்கூட மறந்துட்டேள் போலிருக்கு"
என்று கூறிக் கல கலவென்று சிரித்தாள் என் சுந்தரி. ''போடீ போ! என் வயிற்றுப் பசி எனக்குத் தெரியும்! சிரார்த்தம் ஆ
னால்தான் என்ன? இந்த அறையில் நாம் இருவருந்தானே இருக்கிறோம்! நான் இரகசியமாக ஒரு டம்ளர் காபியைக் குடித்து விடுவதைக் கண்டுபிடிப்பதற்காக, அப்பா பிதுர்லோகத்திலிருந்து குதித்து வந்து விடப் போகிறாரா என்ன? அல்லது, சாத்தியிருக்கும் கதவைத் திறந்து கொண்டு, சாஸ்திரிகள் தான் இங்குவரத் துணிந்து விடுவாரா என்ன?"- என்றேன் நான்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment