Monday, August 31, 2020

 கும்பிடுக்கும்  கூலியா?  ஆச்சார்ய லக்ஷணம்

 

 

இந்துக்களனைவரும் பொதுவாக இந்தியர்களே - தங்கள் சமயத்தினிடத்து மிக்க நம்பிக்கை யுடையவர்கள். சமயத்தின் பேரை- கடவுள் பெயரை - சொல்லாமல் அவர்கள் எக்காரியத்திற்கும் சம்மதப்படுவதில்லை. சமயமே அவர்களுக்கு உயிர் நாடியாகும். சமயத்திற்கு நம்பிக்கை அத்தியாவசியமாய் வேண்டற்பாலதே. நம்பிக்கையாகிய கடைகாலின் பேரில் தான் மதமாகிய மாளிகை மாண்புடன் மிளிரும். இது சர்வ சமயசம்மதமான விஷயம். இந்த நம்பிக்கை விஷயத்தில் இந்துக்கள் மிகப் பிரசித்தி பெற்றவர்கள். ஏன்? அளவு கடந்தும் சென்றவர்கள். எவ்வளவு பெரிய படிப்பாளியாயினும் - எல்லா நூல்களையும் - மேல்நாட்டு விஞ்ஞான சாஸ்திரங்களையும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தோராயினும் மத நம்பிக்கையில் அவர்கள் இளங் குழவிகளாகவே இருப்பது கண்கூடு. புராணங்களோ வேறெந்நூல்களோ என்ன சொன்னாலும் சரி. இது இப்படியு மிருக்குமாவெனச் சந்தேகங் கொள்வதே இல்லை. அனைத்தையும் நம்பிவிடுவார்கள்.

 

நம்பிக்கை சிறந்தது தான். நம்பிக் கெட்டவரில்லை' யென்று ஆன்றோர் அறைந்திருக்கின்றனர். ஆனால் இதற்கும் ஓரளவு வேண்டும். ஒருவன் பெரிய வண்டியில் புளிமூட்டைகளை நிறைய ஏற்றிக்கொண்டு மாடுகளுக்குப் பதிலாகப் பூனைகளைப் பூட்டி யோட்டிச் சென்றானென்றால் அதை நம்பிவிடுவதா? இத்தகைய நம்பிக்கையை மூடநம்பிக்கை யென்பர். மூடநம்பிக்கை மத விஷயத்திலும் முழுவதும் நன்மை பயப்பதில்லை. பல சமயங்களில் ஆபத்தை விளைக்கும். ஒரு வகுப்பார் கோவிலுக்குட் பிரவேசிக்கலாகாது, அவர்கள் தீண்டத்தகாதவர்கள், சண்டாளர்கள்' என்றிப்படிச் சில நூல்கள் செப்புமாயின், அதனை அப்படியே நம்பிவிடலாமா?' ஏன் அவர்கள் ஆலயப் பிரவேசஞ் செய்யலாகாது? அத்தகைய குற்றம் அவர்கள் மாட்டு என்ன விருக்கிறது? நம்மிடத்து அக்குற்றமிலதோ? அவர்களைத் தீண்டுவதால் பாவமெப்படிச் சம்பவிக்கும்? பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டாகுமோ?' என்று ஆலோசிக்க வேண்டாமா?' ஓரரசன் மேகங்களைப் பிடித்து விலங்கு பூட்டிச் சிறையிலடைத்து வைத்தான்' எனப் புராணங் கூறுகின்ற றது. 'மேகத்தைப் பிடிப்பதெப்படி? விலங்கிடுவது எவ்வாறு சாத்தியமாகும்?' என யோசிக்க வேண்டாமா? ஆராய்ச்சியறிவை மதம் இழந்து விட வேண்டுமென்றா இயம்புகின்றது? மதம் ஆராய்ச்சிக் குரியதே யன்றோ?' மதவாராய்ச்சி' எனவும் பெரியோர் வழங்குகின்றனரே.

 

ஆனால், நம்பிக்கையின்றேல் மதமில்லை யென முன்னே மொழிந்ததன் கருத்து யாது? ஏனெனின், கடவுள் நிச்சயத்திற்குத்தான் அவ்வாறு நம்பிக்கை வேண்டுமென்று கூறப்படுகின்றது. உலக காரணராகிய கடவுள் பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்களா லறியப்படாதவராகலின் ஆகமப் பிரமாணத்தால் மாத்திரம் அறிதல் வேண்டும். இங்குத்தான் ஆகமப் பிரமாணத்தினிடத்து நம்பிக்கை வேண்டியதாகின்றது. பேரறிவும் பேராற்றலுமுடைய அப் பரம்பொருளின் செயல்கள் நமது சிற்றறிவிற் கெட்டக்கூடியவை யன்றாகலின், அவற்றினிடத்துச் சந்தேகங் கொள்ளாமல் நம்புதல் வேண்டும். உதாரணமாகச சர்வேசுவரர் தம் சங்கற்ப மாத்திரத்தினாலே சகத்தைப் படைத்தார். சிவபெருமான் சிரித்துப் புரங்களை யெரித்தார்' என்பன போன்றவை ஈசுவரச் செயல்களாகலின், 'அது எப்படிப் படைக்க முடியும்? எவ்வாறெரிக்கமுடியும்?' என வினவி இடர்ப்படலாகாது. இங்கு நம்பிக்கை வேண்டும். இவ்வித விஷயங்களுக்கே நம்பிககை அவசியமாகும். நம்பத்தகாத விடங்கள் பலவுண்டு. இத்தகைய விஷயங்களில் சுருதி யுக்தி அனுபவங்களுக்குப் பொருந்தியவையா யிருக்கின் றனவாவென யாராய்த லத்தியாவசியமாகும். பொருந்தாவிடங்களில் ஐயம் நிகழுங்கால், மறைபொருள்கள் புதைபொருள்கள் போல் பொதிந்து கிடக்குமாகலின், அவற்றைத் தக்க கல்விமான்களைக் கேட்டு சந்தேக நிவர்த்தி செய்து கொள்ளுதல் வேண்டும். முழுவதும் தள்ளத் தக்க விடங்களும் பலவுள வென்பதையும ஒருவரும் மறுக்க முடியாது. சந்தேகாஸ்பதமான விஷயங்களெல்லாம் புராணங்கள் இதிகாசங்கள் ஸ்மிருதிகள் முதலியவற்றில் தான் காணப்படும். அவற்றின் லக்ஷணம் அம்மட்டேயாகலின் அவற்றைக் குறை கூறலாகாது. நீரொழியப் பாலுண் குருகுபோல்தெரிந்து, தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடையவைகளைக் கற்பது' கல்வியாளர் கடமையாம்.

 

மூட நம்பிக்கையின் காரணமாக இந்து மதத்தில் நேர்ந்துள்ள அனர்த்தங்களனந்தம். அவ்வனர்த்தம் அவர்களோடு போகவில்லை. மதத்தின் மேன்மைக்கே மாசுண்டாக்குகின்றது. ஏன்? உண்டாக்கியும் விட்டது. அம்மாசைத் துடைத்து அதன் இயல்பான மேன்மையிலிருத்துவது மதாபிமானிகளின் கடமையல்லவா? மதத்திற்கு மாசளிக்கும் குறைகளு ளொன்றினை ஈண்டெடுத்துக் காட்டுகின்றோம்.

 

கடவுளிடம் பக்திபூண்டொழுகுவது போலவே உலகப் பற்றனைத்தையும் துறந்து கடவுளை யடையுநெறி கண்ட பெரியார்களிடத்தும், அத்தகைய உயர்நிலை யெய்த முடியாது உலக வாழ்க்கையி லுழன்று உய்யுநெறி காணாது தவிக்கும் மாந்தர் பக்திபூண்டொழுக வேண்டியது அவசியமாமன்றோ? இது எம்மதத்தினர்க்கும் உடன்பாடான விஷயமே யாகும். எண்டிசையும் துதிக்கும் மண்டலாதிபரும் அவர்களைக் கொண்டாடி வணங்குவர். அப்பெரியோர் ஒன்றும் வேண்டாதவராயினும் அவர்மாட்டு அன்புடைய மாந்தர் பலர் அன்புமேலீட்டால் தாமாகவே அப்பெரியோர்க்கு இடவசதி போசனவசதிகளை வற்புறுத்தி அமைத்துத்தருவர். மோக்ஷாபேஷை யுடையோர் பலர் அவர்களுக்குத் தொண்டு பூண்டு அவர்தம் கிருபையை எதிர்பார்த்து ஆவலாயுடனுறைவர். இயல்பாகவே அமைந்துள்ள அருட்பெருக்கால் அப்பெரியோர்கள் தம்மை நாடிவந்த நன்மாணாக்கர் பக்குவர்கள் தாமாவென்பதைப் பலமுறையும் பரிசோதித்துப் பக்குவ நிலையிலுள்ளோர்க்குச் செம்பொருள் காணும் செந்நெறியைப் போதிப்பர். அவ்வாறு போதிப்பதோடு நில்லாது அவர்களுடனிருந்து அப்போதைக்கப் போது அவர்களுக்குண்டாகும் சங்கைகளை யெல்லாம் பரிகரித்து அவர்களைச் சுவானுபூதிச் செல்வர்களாக்குவர்.' எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாது வேறொன்றறி யாத மகான்களன்றோ அவர்கள்?' உலகுபகாரம் ஞானிகள் விவகாரம்' என்றபடி உலகோபகாரமான அவர்கள் காரியங்கள் என்றும் இடையூறின்றி இனிது நடைபெறும் பொருட்டு, அரசர்களும் செல்வரும் முமூட்சுக்களுக்குப் போசனம் முதலிய சௌகரியங்களுக்காக நிலபலங்களைத் தந்துதவினர்.' இல்வாழ்வானென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றினின்ற துணை' என்னும் திருமொழியைக் கடைபிடித் தொழுகல் அவர்தம் கடமையன்றோ? நாளாவர்த்தியில் தருமச் சொத்துக்கள் பல பலவிடங்களினின்றும் வந்து சேரும். கூட்டவும் பெருக்கவும் ஆள்கள் சேருவர். சுவாமிகளுக்குப் பாலுக்காகப் பசுக்களும், போக்குவரவு சாதனமாகிய வண்டி வாகனங்களும், அவற்றிற்கு ஆட்களும், இவையனைத்தையும் மேல் பார்த்து ஒழுங்குப்படுத்தக் காரியஸ்தர்களும், காரிய நிர்வாகிகளும், வரவு செலவு கணக்குகளும் பெருகிவிடும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கடைசியில் எல்லாம் தர்பார் தான். சமஸ்தானமும் இதற்கு நிகராகா தென்னும் நிலை சொல்லாமலே நேர்ந்துவிடும்.' எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே' என்றபடி, அப்பொயார் எதிலும் பற்றற்றே இருந்து காலங்கழித்து விடுவர். அவருக்குப் பின் அவற்றின் கதியென்ன? அவரைப் போலவே இருந்து சாஸ்திர ஆராய்ச்சி செய்தல் சற்சீடருக்கு உபதேசஞ் செய்தல் தம்மிடத்து வருவார்க்குச் சன்மார்க்க போதஞ் செய்தல் முதலிய மதாபிவிருத்தி பாஷாபிவிருத்தி தேசாபிவிருத்திகளுக் கேற்ற காரியங்களைத் தொடர்ந்து நடத்தும் பொருட்டு, அவர்தம் சீடர்களுள் கல்வியறிவொழுக்க முடையவரை வேண்டிக் கொள்வதோடு அப்படியே பரம்பரையாக நடத்தி வரவேண்டுமென்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்வர். இவ்வாறு பல்வேறிடங்களிலும் நிகழும், அவைகளே இக்காலத் தெங்கும் காணப்படும் மடங்களின் சரித்திரம்.

 

காலக்கிரமத்தில் (தற்காலத்தில்) அம்மடங்கள் எந்நிலையிலிருக்கின்றன? எவரும் எள்ளி நகையாடத்தக்க நிலையிலிருக்கின்றன வென்பதை எவரும் மறுக்கத் துணிவு கொள்வார். இரண்டொன்று தம் பண்டைப் பெருமையைப் பெருக்கி வருகின்றன வென்பது முண்மையே. எனினும், பெரும்பான்மையான பாழ்நிலை யடைந்து நாறிக் கிடக்கின்றன. மடமும் அதைச் சேர்ந்த சொத்துக்களும் மடத்தலைவராகிய சுவாமிகளின் ஆதீனத்தில் வந்து விடவே அவர்கள் பிரியம் போல் செலவிட ஏதுவாயிற்று. அனைவரும் பிரபஞ்ச மாயையோ டெதிர்த்துப் போராடி அதனை வெல்லும் வல்லமை பெற்றவராய் விடுவரென்பது எதிர்பார்க்கக்கூடிய காரியமாமோ! அவர்கள் துறவிகளே, சன்னியாசிகளே எனினும், உலக (சம்சார) வியவகாரங்களோடு பழகும் போது அவை அவர்களைப் பற்றாதொழியுமோ? தீயானது தன்னை யடுத்துள்ள வைக்கோலை அது எவ்வளவு ஈரமுடையதாயினும் அவ்வீரத்தைச் சிறி தேனும் வற்றச் செய்யாது விடுமோ? பணம் கையில் நடமாட நடமாட, யாவரும் பெருமையாய்க் கருதி வணங்க வணங்க, அதிகாரம் வளர வளர, அவற்றின் வழியாகவே உலக மாயை அவர்கள் மனத்தைக் கலக்கத் தொடங்குகின்றது; அவர்களும் அதன் வயப்பட்டு அகங்காரம், பெருமை, டம்பம் முதலியவற்றைப் படைத்து, தம் கடமையை அறவே மறந்து விடுகின்றனர். இஷ்டப் பிரகாரம் உண்பதும் உடுப்பதும் - காவியுடையும் பட்டாலும் பீதாம்பரத்தாலுமானது - உறங்குவதுமே அவர்கள் தொழிலாய்க் கொண்டு விட்டனர். சிலர் சாஸ்திரங்களை நன்கு கற்றவர்களாயிருக்கலாம். ஆனால் கல்வி வேறு ஒழுக்கம் வேறு. அவர் தம் வேடம் கல்விக் குரியதன்று. துறவிற்கு - தியாகத்திற்கு உரியது, “ஒரு பெண் வேண்டாமென்று கொள்வார் சன்யாசம் ஊரிலுள்ள பெண்கள் மீதெல்லாம் நேசம்'' என்ற பாட்டிற்கிலக்காவது கஷ்டமான காரிமாகாது. இது சகஜந்தானே. இதுபற்றியன்றோ ஒருநாளைக்கு மேல் ஓரிடத்திலிருக்கலாகாது; இருந்தால் பந்தம் உடனே பற்றிக்கொள்ளும் எனப் பெரியோர் விதிகளை வகுத்தனர்.

 

அவர்களிடம் வயிற்றுப்பாட்டை எதிர்நோக்கி நிற்கும் சீடர்கள் - இத்தகைய கூடாவொழுக்க முடையோரிடத்து வேறெதைத்தான் எதிர் பார்க்க முடியும்? - வேறொன்றை (மோக்ஷத்தை) எதிர்பார்ப்பவர்களுக்கு அங்கென்ன வேலை? - சிஷ்யகோடிகள் யாவரும் அவருக்கு அடங்கி நடக்க வேண்டியவர்களாதலினாலும், அவருக்குப் பின் அந்த ஸ்தானத்திற்கு வரவேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாதலாலும், அவருக்குப் பிரியமானபடி நடந்துகொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றனர். எல்லாம் இரகசியம் - கரவடம் - கள்ளம். அவ்வளவுதான் சொல்ல முடியும். சிலவிடங்களில் கொலை பாதகங்களும் நடைபெற்றிருக்கின்றன வென்பதை மறைக்க முடியாது. உலகமறிந்த விஷயத்தை மறைத்துப் பயனென்ன? இப்படிச் சில மடங்கள். மடாதிபதி -மகா சன்னிதானம் - ஜீயர் - ஆச்சாரியார் என்பன போன்ற பட்டங்கள் பெற்று விட்ட இவர்கள்' தனமேற மதமேறும்' என்னும் வாக்கியத்திற் கிசைய, பெரிய சமஸ்தானாதிபதிகளாகத் தம்மைப் பாவித்துக் கொள்கின்றனர் போலும்! பல்லக்கின்றி வெளிப்படுவதில்லை. சத்திரங்களும் சாமரங்களும் கொடிகளும் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் மேளங்களும் தாளங்ளும் பரிவாரங்களும் அட்டகாசம் பண்ணுகின்றன. சம்சாரம் பலத்துவிட்டது துறவு - சன்யாசம் - எவ்வளவு அழகாயிருக்கின்றது பார்த்தீர்களா!

 

“வனத்தில் ஓர் பர்ணசாலையில் ஓர் சன்னியாசி வசித்து வந்தார். இரண்டு கௌபீனமே அவருடைய சொத்து. ஒன்றைத் தரித்துக்கொள்வார். சம்ரக்ஷ மற்றொன்றை ஓரிடத்தில் வைத்திருப்பார். அதை எலிகடித்து விடும். எலி யின் உபத்திரவத்திற்காகப் பூனையொன்று வேண்டியதாயிருந்தது. தேடிக் கொணர்ந்து பன்னசாலையில் விட்டார். அதற்குப்பால் வேண்டுமே. அதற் கென்ன செய்வது? கஷ்டப்பட்டு ஒரு பசு வாங்கினார். பசுவை மேய்க்க ஓர் சிறுவன் வேண்டாமா? சிறுவனொருவனைத் தேடிப்பிடித்து வந்தார். அவனுக்குச் சோற்றுக் கென்ன வழி? ஒரு சமையற்காரியைச் சம்பாதித்தார். பிறகு சொல்ல வேண்டியதில்லை. கௌபீன கணையினிமித்தம் சன்னியாசி சமுசாரியாய் விட்டார் " என்றோர் கதை வழங்குவதுண்டு. இக்கதை இவர்களுக்குப் பொருத்தமானதா இல்லையாவென்று யோசித்துப் பாருங்கள். இவைகளுக்கு உணவிற்குத் தினப்படி குறைந்த பக்ஷம் நூறு ரூபாயாவது வேண்டாமா? மாதம் பிறந்தால் சம்பளக்காரர்களுக்குச் சம்பளம் ஆயிரம் ரூபாயாவது வேண்டுமே. (இது மிகைப்படக் கூறல் எனச் சிலர் நினைக்கலாம். குறைபடக்கூறலேயன்றி மிகைப்படக்கூறலாகாது. ஒரு மடாதிபதியின் மேளக்காரர்களுக்கு மாதம் நானூறு ரூபா யென்பதை நேரிற்கண்ட -றிந்தோம். மேளத்திற்கு மாத்திரம் இவ்வளவானால் மற்றவைகளுக்கு எவ்வளவாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.) இவற்றிற்கென்ன செய்வது? பண வருவாய்க்கு ஏதேனும் ஒருவழி செய்ய வேண்டுமே! அதற்காக வியாபாரம் செய்யத்தொடங்கி விடுகிறார்கள். என்ன வியாபாரம்! வேஷத்திற்குத் தகுந்த வியாபாரம் செய்ய வேண்டும். அதுதான் உபதேச வியாபாரம். வியாபாரிகளுக்குச் சரக்கு வாங்கும் ஆசாமிகளைச் சேர்க்கத் தரகர்களிருப்பதுண்டு. அப்படியே இவர்களிடத்திலும் சிலர் இருப்பர். அவர்கள் மூலம் ஏமாந்த சோணகிரிகள் பலர் உபதேசம் பெறுவதற்குச் சுவாமிகளிடம் போவார்கள். யாருக்கு உபதேசம்? பணக்காரர்களுக்கு, பணம் கொடுப்பவர்களுக்கு. யார் யார் பணங்கொடுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உபதேசம். அதற்குமேல், உபதேசம் பெற்றவர்களாயினும் பெறாதவர்களாயினும் - யாவராயினும் ஏதோ சுவாமிகளென்கின்றார்களே, போய்ச் சேவிப்போம் என்று சென்றால் பாதபூசைக்கு நூறு ரூபாய் கட்டளை. நூறு ரூபாய் கொடுக்க முடியாதவன் பாதத்தைப் பூசிக்க விரும்பினால் அவன் கதியென்ன? கும்பிடுக்கும் கூலி கொடுக்க வேண்டுமா? இது ஆச்சாரியனிலக்கண மல்லவே.


 "கரவிலாத பேரன்பினுக் கெளிவருங்கருணைக் குரவனார்''

 

எனத் திருவிளையாடற்புராணம் ஆச்சாரியனிலக்கணத்தை எவ்வளவு அழகாக
 எடுத்துரைக்கின்றது! 'எளியவரும் கருணை' யல்லவாசற் குருமாண்பு!


 "தாராத வருளெலாந் தந்தருள மௌனியாய்த்
 தாயனையகருணை காட்டி''


என்று தாயுமான சுவாமிகள் சாற்றியவாறு தாயனைய கருணைகாட்டுவ தன்றோ சதாச்சாரிய னிலக்கணம்!


 "அருளுமறிவும் இருள் தீர் பொறையும்
 வாய்மையுந் தவமும் தானமாட்சியும்
 மன்னுயிர்க் கின்பந் தன்மீக் கூர்தலும்
 ஒழுக்கமும் விழுப்பமு மழுக்கா றின்மையும்
 கண்கால் முதலிய பொறியும் பண்பார்

பூணுந்துகிலும் பாண்விரி பிணையலும்

புண்ணியம் படைத்து மண்மிசை வந்த

தோற்றத்தன்ன வாற்றவெங் குரிசில்

குணப்பொற் குன்றம் வணக்க வாரா

ஐம்புல வேழத்தின் வெந்தொழில் வீயக்

கருணை வீணை காமுறத் தழீஇச்

சாந்தக் கூர்முள் ளேந்தின னுறீ இத்

தன்வழிக் கொண்ட சைவசிகாமணி

பரமானந்தத் திருமா முனிவன்''

இதன் பொருள்: - சர்வப் பிராணிகளுடைய சுகதுக்கங்கள் தனக்கு வந்தாற்போலப் பாவிக்கும் கிருபையும், கல்வியினாலாய பொருள் நீதிகளை யறியுஞானமும், சகித்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்த விடத்துங் குற்ற மற்ற பொறுமை மேற்கொள்ளலும், பிறர்க்குத் தீங்குண்டாகாவாறு சொல்லும் மெய்வசனமும், இராகத்துவேஷங்களால் பிராணிகளுக்கு வருத்தம் செய்யாமலிருத்தலாகிய தவமும், பக்குவான்மாக்களுக்கு உபகரிக்கும் ஞான தானமும், நித்தியமாகிய ஆன்மாக்களுக்கு யோக மோக்ஷங்கள் தன்னினு மதிமாக உண்டாக வேண்டுமென்னும் திருவுளமும், சமயாசாரத்தி லொழுகலும் ,சீர்மையும், பொறாமை யின்மையும், பாசவைராக்கியமும், குருபக்தியும், ஞானசமாதியும் உடையவரே குருவாவார் என ஞானாமிர்தம் ஞானாச்சாரியனியல்பினை நயம்பட நவில்வதுங் காண்க.

 

அன்பருக் கெளிவந்தருள் பவரன்றோ குருபரனென்னக் கூறப்படுவார்? பாத பூசைக்குப் பணமும் கும்பிடுக்குக் கூலியும் கேட்போர் ஆச்சாரியர் பட்டத்திற் கருகராவரோ? இன்னும் ஓர் வேடிக்கை. ஓர் அன்பன் ஆச்சாரியருக்கு பிகை (சாப்பாடு) தரவேண்டுமாயின் இருபத்தைந்து ரூபாய் அதற்குக் கட்டணம் தர வேண்டுமாம். இது வெகு நேர்த்தி யல்லவா? இத்தகையே ரன்றோ கருணாசாகரர்!

 

செலவிற்குப் பணம் தேடும் இவ்வாச்சாரிய வியாபாரி பணக்காரருக்குத் தான் தரிசனம் தருவது, பணக்காரர்களுக்குத் தான் மரியாதை செய்வது, அவர்களோடுதான் சம்பாஷிப்பது. மடத்தின் நிபந்தனைகள் அவ்வாறிருக்தால் அவர்களென்ன செய்வார்கள் பாவம் எனச் சிலரியம்பலாம். உண்மைஞானி - உண்மைத் துறவி - உண்மைச் சன்னியாசி - அத்தகைய பந்தத்திலகப்பட்டுக் கொள்வானா? வெனக் கேட்கின்றோம். பணம் பெற்றுக் கொண்டு உபதேசம் செய்வது எந்தச் சாஸ்திரத்திற்குச் சம்மதமானது? உபதேசமென்றாலென்ன? வியாபாரமா? ஏதோவோர் வாக்கியத்தைக் காதில் இரகசியமாக - அது எல்லார்க்கும் தெரிந்த வொரு வாக்கியமாகவே யிருக்கும் -சொல்லி விட்டதனாலும் அவன் கேட்டு விட்டதனாலும் அவன் மோக்ஷத்திற்கருகனாய் விடுவானோ? அவனுக்கு அப்பியாசம் வேண்டாமா? சந்தேக நீக்கம் செய்ய வேண்டாமா? இது வெகு லக்ஷணமான உபதேச வியாபாரம்!

 

அவர்களெங்கனமேனுந் தொலையட்டும். அவர்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்களது தன்மையைப் பிறரறிந்து கொள்ளுதற்காகவே அவர்தமியல்பிற் சிறிதளவு காட்டப்பட்டது. அன்னார் தன்மையை யுள்ளபடியோராது மூடநம்பிக்கையால் கெட்டழிவோர்க்கே நாம் கவலைப் படுகிறோம். குருபக்தி அத்யாவசிய மானதே. ஆச்சாரியனருளின்றி எவரும் பிறவிப் பெருங்கடலை நீந்தார். உடல் பொருளாவி மூன்றினையும் குருவிற்கு அர்ப்பணம் செய்தலே நியாயம் என்று நாமும் கூறுகிறோம். ஆனால் எத்தகையோர் குருவாவர்? குருவின் லட்சணமென்ன? என்பவற்றை நன்றாயாராய்ந்தறிதல் வேண்டும். அவர் பணம் வேண்டார், காசு வேண்டார், பணத்தைப் பசாசெனப் பார்ப்பார். அவர் சாதிபேதம் பாரார். சமய வேற்றுமை யுன்னார். பணக்காரனுக்கும் பரமதரித்திரனுக்கும் அவரிடம் பேதம் காணப்படுவதில்லை. உண்மையன்பே அவர் விரும்புவது. பக்குவமே அவர் வேண்டும் பொருள். தாம் துறவி யென்பதையும் ஞானியென்பதையும் ஆச்சாரிய னென்பதையும் பிறர்க்குத் தெரியும்படி வேஷம் முதலியவற்றால் காட்டார்.

 "வலங்கொளெழு முகிலுறி யுருமேறு பலவுதிர வழங்கினாலும்
 விலங்கலைவே ரோடுபறித் தொன்றினையொன் றடாவளி வீசினாலும்
 கலங்கலைப் பாரெழுகடலு நிலைபெயா வுலகநிலை கலங்கினாலும்
 நலங்கிளர்தந் நிலைபெயரா ருண்ணடுங்காரவைகண்டு நகையாநிற்பார்''


 "புகழ்ந்துநறு விரைக்கலவை பூசிடினும் புல்லியரைப்போல நோக்கி
 இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப் பென்பவ்வர்க் கென்றுமில்லை
 அகழ்ந்த மலக்கிழங்கினராய்ப் பசிவேளை கிடைத்தவற்றை யமுதாத்துய்த்துத்
 திகழ்ந்திடுவர் சிறிதேனு நாளைக்கு வேண்டுமெனச் சிந்தை செய்யார் "


 "விண்ணிடையே குதல் மீளப் பாதலத்திற் புகல் மீட்டுப் புவியின் மேவல்
 அண்ணியமல் பரகாயப் பிரவேசம் செயலுறையு மவ்விடத்தே
 எண்ணியவெலாம் வரச் செய்திடல் முதற்செய் சித்திகளை யென்றும்வேண்டார்
 புண்ணியபாதகமிலார் பெருமையிலார் சிறுமையிலார் பொய்மெய்யில் லார்''
 

என்று குசேலோபாக்கியானம் கூறுவது போல் அவர்கள் திகழ்வர். அன்னாரை, “அருளுடையோரைத் தவத்தில் குணத்தில் அருளில் அன்பில் இருளறு சொல்லினுங் காணத்தகும்" என்றபடி, செயல்களாலும் குறிப்பாலுமறிந்து வழிபட்டு உய்யும் நெறியைத் தேடல் வேண்டும். ஆச்சாரியர் எத்துணைச் சிறந்த ஞானியாயினும் அவரால் நாமடையும் பேறு சிறிது மின்று. முதலில் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். விவேகமாதி சாதனங்களை யடைய முயலல் வேண்டும், பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்ந்து ஜீவகாருணியம் ஈசவரபக்தி விராகம் முதலியவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும். அபக்குவர்களுக்கு சாஷாத் சிவபெருமானே எதிர்தோன்றி உபதேசம் செய்யினும் ஞானமுண்டாகாது. இதனை வலியுறுத்தும் கீழ்வரும் செய்யுளையும் நோக்குக.


 "மேலாஞ்ச துட்ட சாதனங்கள் மேவிநிறைந்த பேர்க்குரைக்கின்
 மேலாமது நாமெனத்திடமாய் விளங்கு மவையில்லாதவர்க்கு
 மேலாம்பரமன் மான்மழுவாய் விளங்கி யுரைத்தும் விளங்காது
 மேலாஞ் சாதனங்கள் வரமேவவேண்டும் சாதுசங்கம்"

(அத்துவித வுண்மை.)

 

ஆகவே, முதலில் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் சதாச்சாரியன்தானே பக்குவியைத் தேடி வருவான். அடியார் பக்தியி லீடுபட வேண்டுமாயின் மெய்யடியாரைக் கண்டு- அவர்களைக் காண்பது அரிதினு மரிதன்றோ? - வழிபடுதல் வேண்டும். அவரை வணங்கிப் பிரார்த்தித்து அன்னமுதலிய வளித்தல் வேண்டும் - அவர் தாமாகவே ஒன்றையும் கேளார். உணவன்றி வேறொன்றையு மேற்கார் - அதனால் நன்மை யுண்டாம். அங்ஙனமின்றிச்கும்பிடுக்கும் கூலி கேட்போர்க்கும், ஆச்சாரியத் தொழிலை ஓர் உத்தியோகமாகவும் வியாபாரமாகவும் பண மோப்பம் பிடித்துத் திரிவோர்க்கும், பணத்தையிறைப்பது பாழுக்கிறைப்பதாமன்றி வேறு பலன் சிறிது மின்று. உபதேசத்தை விலைக்கு வாங்குவது எவ்வளவு மூடத்தனம்.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்தோடு அமைக்கப்பட்டன வாயினும் சீர்கேடான நிலையில் தற்போது விளங்கும் மடங்களும் மடாதிபதிகளும் மதாசாரியர்களும் மதத்திற்கு மாசுண்டாக்குவதோடு நாட்டின் செல்வத்தையும் நஷ்டப்படுத்துவோர்களாகவுமிருக்கின்றன ரென்பதை அறிவாளிக ளங்கீகரியாமற் போகார். இருநூறு ரூபாய் கொடுத்துப் பாதபூசை செய்வது மூடத்தன்மையா அன்றா? ஆனால் எண்ணம் புனிதமானது தான். அதைத்தான் மூடநம்பிக்கையெனச் சொல்லுகிறோம். இந்த மூடநம்பிக்கை முதலில் நாம்சொன்னபடி ஆபத்கரமானதா அல்லவா? யோசித்துப் பாருங்கள்.

 

அந்த மடாதிபதிகளும் ஆச்சாரியர்களும் உண்ணும் உணவும் உடுக்குமுடையும் பல பேருடையவை. அவர்களின் கஷ்டார்ஜிதம் சிறிது மில்லை. தேசத்தாரின் சொத்தைச் சாப்பிடுமிவர்கள் தேசதன்மைக்கான காரியங்களைஎன் செய்யலாகாதெனக் கேட்கின்றோம். கிராமந்தோறும் சென்று மதப்பிரசாரம் ஏன் செய்யலாகாது? மது விலக்குப் பிரசாரமேன் செய்யலாகாது? இவைகள் தேசநன்மைக்கான செயல்களன்றோ? அமெரிக்கப் பாதிரிகளைப் பார்த்தேனும் இவர்கள் புத்தி கற்றுக் கொள்ளக் கூடாதா? அக்காலத்தில் சங்கரர் இராமானுஜர் அப்பர் சம்பந்தர் முதலிய பெரியோர்கள் செய்த காரியங்களென்ன? இவர்களாற்றும் செயல்களென்ன? என்று தான் நம்மவர் மூடக்கொள்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஒழித்து உண்மை நெறி காண்பார்களோ அன்றே நமது மதத்தின் மாசுகழியும். மேகத்தினின்று வெளிவந்த சூரியன் போலொளிரும்.


 “ஆனந்தன்" வாசகர்களேனும் மதமாசு துடைக்க முயல்வர்களா?


 ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment