Monday, August 31, 2020

 சிவபெருமானின் திருமேனி நிலை

பிறப்பற்ற நமது பரம பதியாகிய சிவபெருமானுக்கு உரியதான ஒரு உருவமில்லை; அத்தயாநிதி எவ்வெவர் எவ்வெவ்வுருவமாக உபாசனை செய்கின்றார்களோ, அவரவர்க்கு அவ்வத் திருமேனியாகவிருக்தருள் வழங்குவர். அவரை வழிபடுவோரின் அன்பின் அளவுக்குத் தக்கவாறு அவ்வம் மூர்த்திகளில் வெளிப்பட்டு அருள் சுரத்தலால், அவரை வணங்கும் மெய்யடியார்களின் அன்பே அவரது உருவமும், அவ்வடியார்களின் மனமே ஆலயமுமாகும். இதுபற்றியே, காரைக்காலம்மையாராலியற்றப் பெற்ற "அற்புதத் திருவந்தாதி" என்னும் பிரபந்தத்தில்,


"வானத்தா னென்பாரு மென்க மற்றும்பர் கோன்
றானத்தா னென்பாருந் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மெய் யொளிசேர் கண்டத்தான்
என் நெஞ்சத் தானென்பன் யான்.'' 

 

என்று கூறியருளினார்.


இன்னும் அன்பே சிவம் என்பதற்கு மெய்ஞ்ஞானமாகிய திருமூல நாயனார் தாமியற்றிய திரு மந்திரத்தில்,


"அன்புஞ் சிவமுமிரண்டென் பரறிவிலார்
அன்பே சிவமாவதாரு மறிந்திலர்
அன்பே சிவமாவதாரு மறிந்த பின்
அன்பே சிவமாயமர்ந் திருப்பாரே."


என்று திருவாய் மலர்ந்தருளினார். எமது பசுபதியானவர் "இறப்பெதிர் நிகழ்வு " என்னும், முக்காலங்களிலும், என்றும் ஒரே படித்தாய் நிலை பெற்றிருத்தலினாலும், மனவாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாலும் சுத்தியுடைய மெய்யடியார்க்கு, "கன்றுக் கிரங்குந் தலையீற்றுப் பசுப்போல்'' அருள் சுரத்தலாலும், உண்மையே அவர் உருவம் எனவும், தமக்கு ஒருவரும் அறிவிப்பாரின்றி அறிவுக்கறிவாய் எல்லாவுயிர்கட்கும் உணர்த்தும் பேரறிவாயிருத்தலினால் ஞானமே அவர் உருவம் எனவும், எஞ்ஞான்றும் வரம்பிலின்பமுடையாராம் தம்மை வந்தித்த ஆன்மாக்கட்கு நித்தியானந்த முதவுதலினால் ஆனந்தமே அவர் உருவமென்றும், சொல்லப்படும்; அது பற்றியே அவரைச் "சச்சிதானந்த உருவன்" என ஆன்றோர் கூறுவர். கடவுள் எங்கும் நீக்கம்மற நிறைந்து சர்வ வியாபியாயிருத்தலினால், எல்லாப் பொருள்களும் அவரது திருமேனியாகும். நிலம், நீர், வளி, நீ, விசும்பு, நிலா, பகலோன், ஆன்மா ஆகிய இவ்வெட்டும் அவர் திருமேனியாயிருத்தலினால் அவரை அட்டமூர்த்தி என்பர். இதனாலன்றோ பிருதிவி ரூபமான சொரூப வணக்கத்தையும், யாகாதி முதலிய அக்கினி வணக்கத்தையும், கங்கை முதலிய அப்பு வணக்கத்தையும், சூரிய பூசை, சந்திர பூசை யென்னு மிரு வணக்கங்களையும், அடியார்களைக் கடவுளாகப் பாவித்து வழிபடும் ஆன்ம வணக்கத்தினையும் மெய்யன்பர்கள் சந்ததமும் கைக்கொண்டொழுகி வருகின்றார்கள். இங்ஙனம் கடவுள் அட்டமூர்த்தமாக நீக்கமற நிறைந்திருப்பினும், அவையே தாமாகாமல் அவற்றின் வேறான முழுமுதற் பொருளாயுமிருக்கின்றார். அங்ஙனம் கடவுள் தமக்கென ஒரு உருவமுமில்லாதவராகவும், நமது உணர்வுக் கெட்டாதவராகவுமிருத்தலால், அவரை நாம் எப்படி வழிபடுவது என ஒரு ஆட்சேபம் நிகழுமாயின், அவர் தமக்கென ஒரு நாமமும், ஒரு உருவமும் இல்லாதவராயும், ஆன்மாக்களைப் பிறவிச் சாகரத்தில் நின்றுங் கரையேற்றவேண்டுமென்று திருவள்ளத்தில் முகிழ்த்த பெருங்கருணையினால், பற்பல அருள் வடிவங்களைத் தாங்கிப் பஞ்சகிருத்தியங்களையும் நடாத்துகின்றார். கருணையே திருமேனியாகக் கொண்ட அப்பரம்பொருள் தம்மின் வேறாகாது அக்கினியிற் சூடு போன்ற அபின்னா சக்தி அல்லது வல்லமை என்னும் தேவியையுடையவராய்,
ஆன்மாக்களுக்கெல்லாம் தந்தையும் தாயுமாயெழுந்தருளியிருந்து வேண்டிய வேண்டி யாங்கு அருள் புரிகின்றார். அப்பரமேட்டி ஆன்ம கோடிகளுக்குத் தந்தையுந் தாயுமாகுந் திருமேனி கொள்ளாவிடில், அவருக்குப் படைப்பு முதலிய தொழில்களிரா. இவ்வுண்மையினை யறியாத அஞ்ஞானிகள் கடவுளைத் தந்தையுந் தாயுமாக வழிபடும் மெய்ஞானிகளைப் பார்த்து, உங்கள் கடவுளுக்கு மனைவி மக்களும் உளரோ! என எள்ளி நகையாடுகின்றார்கள். இவர்கள் கடவுளைத் தந்தையாக மாத்திரம் எண்ணி வழிபடுவர். அந்தோ! இவர்கள் மதி இருந்தவாறு என்னை? தாயின்றித் தந்தையில்லை ஆதலாலும், தந்தையைக் காட்டிலுந் தாய்க்கே மக்களிடத்தில் அன்பு அதிகமாதலினாலும், தாயிலும் மிக்க தயாநிதியாகிய சிவபெருமானைத் தாயாயுந் தந்தையாயும் வழிபடுதலே சாலச் சிறப்புடைத்தாம். அப்பெருமான் எமக்கு அன்னை தந்தை மாத்திரமாகவா இருக்கின்றார். எமக்கு இருவினையொப்பும் மலபரிபாகமும் வரும்போது ஆட்கொள்ளும் ஞானாசாரியராயுமிருக்கின்றார். நாம் தீவினைகளைச் செய்யப் பிரயத்தனப்படும் போது, மனச் சாட்சியாயிருந்து அவற்றைச் செய்ய வேண்டா மெனத்தடுக்கும் தோழனாகவுமிருக்கின்றார்.

அவ்விறைவனுக்குச் சோம சூரியாக்னி கண்களாகவும், வாயு மூச்சாகவும், சகல உலகங்களும் சரீரமாகவும், உயிர்களெல்லாம் உறுப்புகளாகவும், திக்குகள் ஆடையாகவும் அமைந்திருக்கின்றன.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அறவாழி யந்தணராகிய சிவபிரான் தமதடியாரை யாட்கொள்ளக் கொண்ட அருள் வடிவங்கள் அளப்பிலவாயினும், சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடையராகிய நம்போலியர், வழிபட்டுய்யும் வண்ணம் கொண்ட திருமேனிகள் குருலிங்க சங்கமம் என்னும் மூன்றுமாம். பாலானது பசுவின் சரீரம் முழுதும் வியாபித்திருப்பினும், அதன் முலை வழியாகவே சுரப்பது போல, கடவுளுக்கும் குருலிங்க சங்கமமென்னும் மூன்றிடங்களுமே அடியார்கள் எளிதில் வழிபட்டு அவர் அருளைப் பெறுதற்குரிய முக்கிய இடங்களாயிருக்கின்றன. ஆதலால் அவ்விடங்களிலே நாம் அநவரதமும் பக்தி செலுத்தி பழிபட்டு உய்யக்கடவோமாக.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

 

 

 

   

No comments:

Post a Comment