Monday, August 31, 2020

 

கோவில்கள் - மடங்கள்

 

புண்ணிய பூமி நமது நாடு கரும பூமி நமது நாடு பொன்னுலகம் நமது நாடு. நீர் நில வளங்களிற் சிறந்தது நமது நாடு. மூர்த்தி தலம் தீர்த்தங்களிற் சிறந்தது நமது நாடு. வேதம் பிறந்தது நமது நாடு. ரிஷிகள் பிறந்தது நமது நாடு'' என்று நாம் இக்காலத்திலும் பெருமை பாராட்டிக்கொள்ளுவதில் ஒரு சிறிதும் சலிப்படைகிறோம் இல்லை. ஆம் உண்மைதான்! அவ்வாறு பெருமை பாராட்டிக் கொள்ளும் உரிமை நமக்கில்லாமற் போய் விடவில்லை; உண்டு என்றே நாமும் உறுதியாகக் கூறுகிறோம். ஆனால் அத்தகைய பெருமை பொருந்திய நாடு இப்பொழுது எந்நிலையில் இருக்கிறது? நமது நாட்டின் பெருமைக்கு நாம் எவற்றைக்காரணமாக எடுத்துக் காட்டுகின்றோமோ அவற்றின் நிலை எவ்வாறிருக்கிறது? என்பனபோன்ற உண்மைகளை மறந்துவிட்டு, வெறும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதில் பயன் என்ன என்பதே எமது கேள்வி. புண்ணிய பூமியென்று போற்றுகிறோம் - ஆனால் இப்பொழுது பாவ பூமியாக பரிதவிக்கிறது. கரும் பூமி என்று கழறுகிறோம் ஆனால் தீக்கரும பூமியாகத் திண்டாடுகிறது. பொன்னாடென்றுபுகழுகிறோம். ஆனால் புன்னாட பாகிப் பொலிவிழந்து நிற்கிறது. மூர்த்திதலம் - தீர்த்தம் என்கின்றோம் - அவைகளின் பேரால் நடைபெறும் ஊழல்கள் அளவிலடங்குமா? வேதங்களின் பேரால் நடைபெறும் கொடுமைகள் எத்தனை? ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்றுபெருமை பேசிக்கொள்ளுவோர் அந்த ரிஷிகளின் கோட்பாடுகளைப்பின்பற்றுகின்றனரா? இக்காலத்தில் பழம் பெருமையெல்லாம் கனவாகி விட்டதென்றே கூறவேண்டும். நமது பண்டைய நாகரிக உண்மைகள் பறந்தோடி மறைந்தன. இப்பொழுது எஞ்சி நிற்பன மூடப்பழக்க வழக்கங்களேயாகும்.

 

உதாரணமாகக் கோவில்களையும் மடங்களையும் எடுத்துக் கொள்ளுவோம். நமது நாடோ கோவில் கட்கும் மடங்கட்கும் பேர் போனது. இமயம் முதல் குமரி வரை - இந்தியா முழுதும் கோவில் மயமாகவும் மடங்களின் மயமாகவும் விளங்குகிறது என்றே கூறிவிடலாம். இவற்றிற்கென முன்னோர்கள் விடுத்துச் சென்ற மானியப் பொருள்கட்கு எல்லை இல்லை - வருவாய்க்கும் குறைவில்லை. ஆனால் இப்பொருள்களெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல் வீணிற் கழிகின்றன என்பது பகிரங்க ரகசியம்.

 

கோவில்கள் வேண்டாம், குளங்கள் வேண்டாம், மடங்கள்வேண்டாம், சமயம் வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம், சாமி வேண்டாம் என்ற கூச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய கூச்சலுக்காதரவாகப் பல பத்திரிகைகளும், சங்கங்களும், மகாநாடுகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. ஒன்றுமறியாத பாமா மக்கள் அப்பிரசாரகர்களின் பேச்சிலும் எழுத்திலும் மயங்கிவிடுகின்றனர். சமயத்தின் மீதும், சமயாச்சாரியர்மீதும், தெய்வத்தின் மீதும் அலக்ஷியபாவம் காட்டத் தொடங்குகின்றனர். இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர்போல் நம் நாட்டு மடாதிபதிகளும், கோவில் அதிகாரிகளும் வாளா உறங்கிக் கிடக்கின்றனர். தாய்மொழிப் பற்றும் சமயப்பற்றுமுள்ள ஏனைய அறிஞர்களேனும் போதிய முயற்சி எடுத்துக் கொள்ளுவதாகத் தெரியவில்லை. இந்நிலைமை இனிமேலும் நீடித்துக் கொண்டே போகுமாயின் நமது இந்து சமூகத்தின் கதி என்னாகும் நேயர்கள் சிந்திப்பார்களாக. கோவில்களையும் மடங்களையும் நம் முன்னோர்கள் என்ஏற்படுத்தினர்? அவற்றிற்கு எந் நோக்கத்துடன் மானியம் முதலிய வருவாய் வகைகளை ஏற்படுத்தினர்? அவை முன்னோரின் நன்னோக்கப்படி நடைபெறுகின்றனவா? என்பவைகளை ஒவ்வொருவரும் சிந்தித்துத் தகுந்தவை செய்யக் கடமைப் பட்டிருக்கின்றனர்.

 

நமது நாட்டுச் சைவ - வைணவ தேவாலயங்களில் நடைபெறும் அக்கிரம அநியாயங்கட்குக் கணக்கு வழக்கில்லை. அன்பும் அருளும் நிறைந்திருந்த ஆலயங்களில் இப்பொழுது வன்பும் துன்பும் குடிகொண்டிருக்கின்றன. ஒழுக்கக் கேடான - தூய்மைக்குப் புறம்பான காரியங்கள் சகஜமாகி விட்டன. சாமி வரங் கிடைத்தாலும் பூசாரி வரங் கிடைப்பதில்லை. பக்தியுள்ள ஏழைகளால் பகவானைக் காண முடியாது. பணம் படைத்தோர்க்கே பகவான் தரிசனம் கிடைக்கிறது. கோவிலதிகாரிகளின் கொள்ளையும் ஒழுக்க விழுப்பமும் குவலயமறிந்த விஷயம். இவைகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருத்தல் வீண் வேலையாகும். இப்பொழுது கோவில்களில் நிகழும் திருவிழாக்கள் முதலிய காரியங்களெல்லாம் குழந்தைகள் விளையாட்டாகவும் கேலிக் கூத்தாகவும் இருக்கின்றன. பக்திபூண்டு இறைவனை வழிபடும் எண்ணம் இவைகளைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்து விடுகிறது. மிகுந்த பொருட் செலவு செய்து கொண்டு புண்ணிய க்ஷேத்திரங் கட்கு யாத்திரை செல்லும் ஏழை மக்களும் ஏனையோரும் அவ்விடங்களில் காண்பது என்னை? வெட்கம்! வெட்கம்!! வாணவேடிக்கை! -- தாசிகள் நடனம்! - மேள தாளம்! - இவை எவ்வாறு மக்கள் மனங்க ளில் பக்தி அரும்பச் செய்யும் என்று கேட்கின்றோம்? ஆண்டு தோறும் லக்ஷக்கணக்காகத் தேர் திருவிழாக்கள் சம்பந்தமாய் நமது நாட்டில் செலவிடப்பட்டு வருகிறது. இவற்றால் “கோவில் பெருச்சாளிகள்'' கொழுப்பதைத் தவிர மக்கள் காணும் பயன் ஒன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம். இவ்வாறு செலவிடப்படும் பொருளில் நூற்றில் ஒரு பகுதியேனும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு என்று செலவிடப் பட்டிருந்தால் நமது நாட்டின் நிலைமை வேறு விதமாயிருந்திருக்கும் என்பதில் ஐயமும் உண்டோ?

 

கோவில்களில் “தேவதாசிகள் இருக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறோம்? ஆதியில் எந்நோக்கத்துடன் “தேவதாசிகள்" கோவில்களில் அனுமதிக்கப்பட்டனர் என்பது வேறு விஷயம். அதைப் பற்றி இப்பொழுது சாஸ்திர ஆதாரங் காட்டித் தருக்கம் செய்து கொண் டிருக்கவேண்டியது அநாவசியம். “தேவதாசிகள்'' ஆதியில் கன்னியராய் - ஒழுக்கமுடையவராய் - விரத மேற்கொண்டவராய் - கோயில் திருப்பணியிலேயே கருத்துடையவராய்ச் காலக்ஷேபம் செய்திருக்கலாம். இப்பொழுது அவர்களின் நிலைமை என்ன? மக்கள் சமூகத்திற்கே பெருங்கேடு சூழும் நஞ்சாகவன்றோ அவர்கள் கருதப் பெறுகின்றனர்? அநியாயமாய் ஒரு பெண்சமூகத்தையும் கெடுத்து, ஏனையோரையும் கேட்டுக்குள்ளாக்கும் “தேவதாசி முறை" யைத் தூய்மைக்கும் பக்திக்கும் காரணமாய் விளங்குங் கோவில்களில் ஏனோ அநுமதிக்க வேண்டும் மேல் விடங்களில் இம்முறை சட்ட பூர்வமாய் ஒழிக்கப்பட்டது என்பதையும், இதனால் இதுகாறும் அவ்விடங்களிலுள்ள கோவில் கட்கோ, மக்கட்கோ,சட்டஞ் செய்தவர் கட்கோ எத்தகைய விபரீதமும் விளைந்து விடவில்லை என்பதையும், ஆதலால் நமது நாட்டிலும் அம்முறையை அடியோடு ஒழிக்கத்தக்க ஏற்பாடுகளைத் தீவிரமாய்க் கைக்கொள்ளலாம் என்பதையும் வாசகர்கட்கு வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க,

நமது நாட்டுக் கோவில்கள் சம்பந்தமாய்ச் செய்ய வேண்டிய திருத்தங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு. கூடிய வரையில் கோயில்களில் ஆடம்பரங்களை யொழிக்க எல்லாரும் ஆதரவு நல்க வேண்டும். தேர் - திருவிழாக்களெல்லாம் மக்களின் சமய ஞானத்தைப் பெருக்கும் அறிவுத் திருவிழாக்களாக விளங்குமாறு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் தக்க சமயப் பேரறிஞர்களின் விரிவுரைகள் எல்லா மக்கட்கும் பயன்படத்தக்க முறையில் நிகழுமாறு செய்தல் வேண்டும். எல்லாருக்கும் தாய் மொழிமாட்டு ஆர்வமும் அன்பும் உதிக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

 

நமது நாட்டுக் கோவில்களின் சிற்ப வேலைத்திறமை உலகப் பிரசித்தம். நம் பண்டைக் கலைப் பெருமைகளை விளக்கக் கோவில்களும் அவற்றிலுள்ள சிற்பத் திறமைகளும் இன்றும் சான்று பகர்ந்து நிற்கின்றன. புதிய கோவில்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவை ஆகம சாஸ்திர ரீதியாய் நிர்மாணிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. கோவில்களின் கோபுர வேலைப்பாடு மக்கள் மனங்களைக் கவர்ந்து நின்றாலும் அவற்றிலுள்ள ஆபாசங்களைக் கண்டு அருவருக்காமலிருக்க யாராலும் முடி யாது என்று நம்புகின்றோம். புராணக் கதைகளைக் காட்டும் சித்திரங்களோடு கொக்கோக லீலைகளைக் காட்டும் சித்திரங்களும் பச்சை பச்சையாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளையும் ஆகமங்கள் அநுமதித்து விட்டனவே என் யாம் அடிக்கடி ஆச்சரியம் அடைவதுண்டு. கண்ணேறு அல்லது திருஷ்டி தோஷம் பட்டுக் கோபுரமோ கோவிலோ நாசமாகிவிடும் என்ற அச்சத்தின் மீது இவ்வாபாச அழகுச் சித்திரங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று யாம் கருதுகின்றோம். அழகிய புது வீடுகளிலும் விளை நிலங்களிலும் திருஷ்டி பரிகாரத்திற்கென்று கோமாளி உருவங்கள் வைக்கப்படுவதையும் காண்கின்றோம். அஃது எவ்வாறாயினும் ஆகுக. இத்தகைய அருவருப்புச் சித்திரங்கள் நமது பண்டைய நாகரிகத்திற்கும் கலைகட்கும் களங்கங்களாக விளங்குகின்றன என்பதை யாரும் மறுக்கத் துணியார் என்று எண்ணுகிறோம். அந்தச் சித்திரங்களைக் கண்ணுறும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வெட்கித் தலை குனிந்து செல்லுவதை நாம் இன்றுங் காணலாம். புண்ணியப் புனிதக் கோவில்களில் இவ்வூழற் பொம்மைகள் இருக்கலாமா என்று வினவுகின்றோம். பழைய கோவில்களில் இந்தச் சித்திரங்கள் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும் - லக்ஷக்கணக்காகப் பொருள் செலவு செய்து புதுக் கோவில் நிருமாணம் செய்கின்ற புண்ணிய சீலர்களேனும் அவற்றை அகற்றிவிடக்கூடாதா? இவர்களோ பற்பல வருணங்களில் விளக்கமாக லீலைச் சித்திரங்களை அமைக்கச் செய்து விடுகின்றனர். எதிரிகள் கோவில் வேண்டாம் குளம் வேண்டாம் என்று பறையடிப்பதற்கு இத்தகைய சித்திரங்கள் ஆக்கந்தேடிக் கொடுக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொண்டு உடனே அவற்றை அகற்ற முற்பட வேண்டும். அந்தச் சித்திரங்கள் இருக்கும் இடத்தில் வேறு நல்ல சித்திரங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்தச் சித்திரங்களை நீக்கும் விஷயத்தில் எந்தச் சாஸ்திரமும் பார்க்கக் கூடாது என்பதே எமது உறுதியான எண்ணம். சிற்ப வேலைப்பாடுகளிற் சிறந்த சிம்மாசலக் கோவில் கோபுரத்திலிருந்த ஆபாசச் சித்திரங்கள் அழிக்கப்பட்டிருக்கும் செய்தியையும் இச் சந்தர்ப்பத்தில் ஞாபக மூட்டிக் கொள்ளுகின்றோம்.

 

வடஇந்தியாவில் பூரி என்னும் புண்ணிய ஸ்தலத்தில் ஜகந்நாத ஆலயத்திலுள்ள ஆபாசச் சித்திரங்களை அகற்ற வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் அவைகளை நீக்காவிடில் அதற்காகச் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஸ்ரீஜத் ஜமன்லால் பஜாஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னாட்டிலுள்ள பிரபல கோவில்கள் எல்லாவற்லும் ஆபாசச் சித்திரங்கள் அடைந்து கிடக்கின்றன. இவற்றை நீக்கவேண்டியது யாருடைய கடன் என்பதை வாசகர்கள் சிந்திப்பார்களாக. அவசியமான இச் சிறு சீர்திருத்த மேனும் முதலிற் செய்ய முற்பட வேண்டியது கோவிலதிகாரிகளின் கடமை என்பதை வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

 

இனி, மடங்களின் தற்கால நிலைமையையும் கடமையையும் ஒரு சிறிது கூறி இக்கட்டுரையை முடிக்கின்றோம். மடங்களெல்லாம் சமயத்தையும் மொழியையும் வளர்க்க ஏற்பட்டவை. முற்கால அரசர்களும், செல்வர்களும், பொது ஜனங்களும் அவைகட்கு மிகுந்த பொருள் வருவாயுள்ள மானியங்களை விட்டிருக்கின்றனர். பல லக்ஷக் கணக்கான வருவாயுள்ள மடங்கள் நமது நாட்டில் நிலவுகின்றன. இவற்றைப் பரிபாலிப்போர் மண் பெண் பொன் என்னும் மூவாசைகளையும் முற்றத் துறந்தவர்களாயும், ஒழுக்க சீலர்களாயும், கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாயும், ஞானாச்சாரியர்களாயும் இருத்தல் வேண்டும் என்பது பண்டையோர் நன்னோக்கம். இன்றும் பாம்பரைக் கிரமமாய் அத்தகையோரே இருப்பதாகத்தான் சொல்லப்படுகின்றது. ஆனால் அநுபவத்தில் அவ்வாறில்லை என்பதை எல்லாரும் அறிவர். முற்றத் துறந்தவர் என்பவர் முடிவேந்த தேராக விளங்ககிறார். விண்ணாசை விழைபவர் பெண்ணாசையில் மயங்குகிறார்.  மண்ணாசையில்லார் கண் சையில் கலங்குகிறார். சந்நியாசியராவோர் பொன்யாசியராய்ப் போகிறார். சமய வளர்ச்சியோ மொழிவளர்ச்சியோ - எதையும் இவர்கள் கவனிப்பதில்லை. இவர்கள் கவனமெல்லாம் மோட்டார் சவாரியிலும், ஊட்டி வாசத்திலும், கோர்ட்டு வழக்குகளிலுமே சென்று கொண்டிருக்கிறது. சமயத்தையும் மொழியையும் வளர்க்க வேண்டிய பொருள்கள் மேலதிகாரிகளின் விருந்துபசரிப்புகட்கும், வக்கீல்கட்குமே கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. இவ்வுண்மைகளைப்பற்றி யாம் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கின்றோம் என்பதும் வாசகர்கட்குத் தெரியும். சிவில் வழக்குகளிலும் கிரிமினல் வழக்குகளிலும் மடங்களின் பேர் அடிபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாக சம்பந்தமாய் சமீபத்தில் சென்னை சட்டசபையில் ஒரு மசோதாக் கொண்டு வரப்பட்டுத் தனிக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இம் மசோதா விவாதத்தின் போது அந்தத் தேவஸ்தான நிர்வாக ஊழல்கள் பல வெளியாயிருக்கின்றன. ஆண்டு ஒன்றுக்குப் பதினாறு லக்ஷ ரூபாய் வருவாயுள்ள அந்த தேவஸ்தானப் பொருள்கள் பல வழிகளிலும் துர்விநியோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே இம் மசோதாக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன் முடிவை யாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

நமது. நாட்டுப் பொது மக்கள் மடங்களைப் பற்றியும் அவற்றின் தலைவர்களைப் பற்றியும் போதிய கவனம் செலுத்தாமையே அவை இந்நிலை அடையக் காரணமாகும். சமயம் வேண்டாம் சாமி வேண்டாம் என்னும் கூட்டத்தின் கூச்சலும் ஆர்ப்பாட்டமும் நமது மடாதிபதிகளின் செவிகளில் ஏன் நுழையவில்லை என்று கேட்கின்றோம். அக் கூட்டத்தாருக்குத் தகுந்த விடையிறுத்து உண்மையை நிலைநாட்ட வேண்டியது யாருடைய பொறுப்பு - கடமை என்று கேட்கின்றோம். சமயங்களின் தாயகமாகிய நம் பாரதநாட்டில் கிறிஸ்தவ சமயத்தினர் தங்கள் மதத்தைப் பரப்ப என்ன செய்கின்றனர் என்பதை நம் மடாதிபதிகள் அறியார்களா? அறிந்தும் ஒன்றும் அறியாதவர் போல் அடங்கிக் கிடக்கும் நோக்கம் என்னை? மடங்களின் வருவாய்களைக் கொண்டு ஆங்காங்கு எத்துணையோ சமய அறிவுக் கழகங்களையும் தமிழ்க் கழகங்களையும் நிறுவலாமே. இவர்கள் ஏன் இம் முயற்சியில் ஈடுபடக்கூடாது? சமய உண்மைகளைத் தற்கால ரீதியில் சிறுசிறு புத்தகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் வெளிவரச் செய்தால் எவ்வளவோ பயன் விளையும். சமய நூல்களையெல்லாம் அச்சிட்டு எளிய விலைக்கு எல்லோருக்கும் கொடுக்கலாம். சமய அறிஞர்கட்கும், தமிழரிஞர்கட்கும் ஊக்கம் ஊட்டிப் புதுப்புது நூல்கள் வெளிவருமாறு செய்யலாம். இத்தகைய சத்காரியங்களில் நம்மடாதிபதிகளின் திருவுளங்கள் இறங்குவதில்லையே - என் செய்வோம்?

 

கோவில் நிர்வாகிகளும் மடாதிபதிகளும் மனம் வைத்தால், நமது சமூகத்தை விரைவில் கல்வி கேள்விகளில் முன்னேற்றமடையச் செய்யலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கோவில்களிலும் மக்கட்குப் பயன்படத்தக்க முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யலாம். அநாவசியமான ஆடம்பரங்களையும் ஒழித்து விடலாம். தேவதாசி முறையையும் நீக்கிவிடலாம். ஆபாச பொம்மைகளையும் அகற்றிவிடலாம். இவர்கள் திருவுளம் இரங்கும் வகையில் ஆண்டவன் அருள்புரிவானாக.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment